இந்தி மொழி என்பது ஒரு மொழியல்ல. தனித்தனி மொழிகளாகவும் துணைமொழிகளாகவும் பேச்சு வழக்கு களாகவும் இருந்த பல மொழிக் கலாச்சாரங்கள்மீது மேலிருந்து திணிக்கப்பட்ட ஒரு சர்காரி பாஷா அது. அதனூடாக அது வடக்கு, மத்திய இந்தியாவை ஓர் ஒற்றை இந்திப் பிரதேசமாக ஆக்க முயற்சி செய்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில்கூட உயிரோடு இருந்த பல மொழிகளை சுதந்திர இந்தியா இந்தி என்ற ஒற்றை அடையாளத்தில் கரைத்து ஒழித்துக் கட்ட முயற்சிசெய்துவருகிறது.
அந்த வேலை நொடிதோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருதத்தின் பிள்ளையான ஹிந்தியை கட்டாயமொழியாக ஆக்கியபோது, பல கட்டங்களில் தமிழ் நாடு எதிர்த்தது.
ஹிந்தியால் பாதிக்கப்பட்டவை வடக்கு, மத்திய இந்தி யாவில் பேசப்பட்ட சுமார் அய்ம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் ஆகும். இவற்றில் பல மொழிகள் ஹிந்தியைவிட பல நூற்றாண்டுகால இலக்கிய பாரம்பரியம் உடையவை. அவதி, போஜ்புரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி என பல மொழிகளின் இடத்தை ஹிந்தி அபகரித்துக்கொண்டது.
வட இந்தியாவில் ஹிந்தியின் ஆதிக்கத்தால் அங்குள்ள பிராந்திய மொழிகளைச்சுற்றி வலுவான அடையாளங்கள் உருவாகவில்லை. அதுவும் அங்கு பொதுவான சமூக வளர்ச்சி குன்றிய நிலைதான் அதற்குக் காரணம்.
எனினும் ஒன்றிய அரசு அல்லது ஹிந்திய தேசியம் - ஹிந்தியை திணித்து பிற மொழிகளை மேலுக்கு வர முடியாமல் தடுத்துவிட்டது
ஹிந்தி - உருது என்று நாம் இன்று அழைக்கும் மொழி முதலில் அரபி எழுத்துகளில் எழுதப்பட்ட மொழி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமிய ஆட்சி முடிந்து, ஆங்கிலேயர் ஆட்சி துவங்கியவுடன் மக்களிடையே அரபி எழுத்தைக் கைவிட்டு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
ஆனால் இதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக் கவே, தேவநாகரியில் எழுதப்படும் ஹிந்தி, அரபி எழுத்தில் எழுதப்படும் உருது என்று ஒரு மொழி இரண்டானது. ஹிந்துக்கள் ஹிந்தியுடன் தங்களது அடையாளத்தை பிணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்கள் உருதுவுடன் நின்றனர். இதன் காரணமாக வட இந்தியாவில் மொழி குழப்பம் உருவாகி விட்டது. தத்தம் தாய்மொழிகளை கைவிட்டு மக்கள் எல்லாவற்றையும் ஹிந்தி - உருது என்று கருத ஆரம்பித்தனர்.
இது தான், வடஇந்தியாவில் மொழிவாரி மாநில எல்லை சீர்திருத்தம் சரிவர நடக்காததற்கு முக்கிய காரணம். மக்களுக்கும் சரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த தலைவர் களுக்கும் சரி, தங்கள் மொழிகளுக்கு மாநிலம் அமைக்க வேண்டும், அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பதே உண்மை.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராட வந்த தலைவர்கள் நாடு என்ற கருத்தை அய்ரோப்பாவிலிருந்து கற்றிருந்தனர். அங்கு நாடு என்பது பெரும்பாலும் மொழிவாரியாக அமைந்ததே ஆகும். இதன் காரணமாக நாடு - அதாவது தேசம் என்றால் அதற்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவியது
இன்றுகூட நிறைய பேர் ஹிந்தியை தேசிய மொழி என்று கருதுவதற்கான வேர் அங்கு தான் இருக்கிறது. இதே போல் தேசிய மொழி என்ற பெயரில் அய்ரோப்பா, தென் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் நடந்த மொழி அழிப்பு இந்தியாவிலும் நிகழ்ந்து விடும் அளவிற்கு ஒன்றிய அரசு நடந்து கொண்டதுதான்.
இதைப் புரிந்து கொண்டதால்தான் தந்தை பெரியார் இந்தி திணிப்பை முழு மூச்சோடு எதிர்த்தார். அவர் விதைத்த இந்தி எதிர்ப்புத் 'தீ' இன்று நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது.
தேசம் என்ற பெயரில் மொழித்திணிப்பை உருவாக்கி நாட்டின் பழைமையான இனங்கள் கலாச்சாரங்களை அழித்து ஒற்றைக்கலாச்சாரம் என்பதில் மிகவும் வேகமாக தற்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
ஹிந்தியின் தாயான சமஸ்கிருத ஊடுருவலால் தமிழ் மொழிகூட பிளவுபட்டு தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று உருவாகவில்லையா? தமிழ்தான் தப்பியது.
மனோன்மணியம் சுந்தரனார் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில்கூட இந்தக் கருத்து தெளிவாக்கப்பட்டுள்ளது.
"கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதிரத்தேயுதித்தே ஒன்று பலவாகிடினும், ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!" என்ற பாடல் வரிகள் நோக்கத்தக்கதாகும்.
ஹிந்தி - சமஸ்கிருதத் திணிப்பு என்பது ஒரு கலாச்சாரப் படையெடுப்பு - திணிப்பு - அதனால்தான் திராவிட இயக்கம் குறிப்பாக திராவிடர் கழகம் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்க்கிறது என்பது நினைவிருக்கட்டும்.
ஜூன் 4இல் சென்னையில் சந்திப்போம் - வாரீர்! வாரீர்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக