ஒத்தி வைக்கப்பட்ட அந்தப் போராட்டம் மறுபடியும் இப்போது
நம்முடைய ஆசிரியர் அவர்களால் உயிர்பெற்று எழுகிறது இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
சென்னை, ஜூன் 14 இந்தி எதிர்ப்புப் போராட்டம் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட வில்லை; ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் வரும் என்று நமக்குத் தெரியும்; எனவே ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்தி வைக்கப்பட்ட அந்தப் போராட்டம் மறுபடியும் இப்போது நம்முடைய ஆசிரியர் அவர்களால் உயிர் பெற்று எழுகிறது என்பதை இந்த மாநாடு காட்டுகிறது என்றார் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.
இந்தி எதிர்ப்பு மாநாடு
கடந்த 4.6.2022 அன்று மாலை சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றி னார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
வரலாறு கூடுதலாக ஆகிவிடும்
காலம் கருதி மேடையில் இருக்கும் தலைவர்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்க இயல வில்லை. மன்னிக்கவேண்டும்.
தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
இந்தி மிக அண்மைக்காலத்தில் தோன்றிய மொழி. போகிற போக்கைப் பார்த்தால், இந்தி மொழியின் வரலாற்றைவிட, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வர லாறு கூடுதலாக ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது.
நம்முடைய ஆசிரியர் அவர்களால்
உயிர்பெற்று எழுகிறது!
இந்தி எதிர்ப்புப் போராட்டம் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்படவில்லை; ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் வரும் என்று நமக்குத் தெரியும்; எனவே ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்தி வைக்கப்பட்ட அந்தப் போராட்டம் மறுபடியும் இப்போது நம்முடைய ஆசிரியர் அவர்களால் உயிர்பெற்று எழுகிறது என்பதை இந்த மாநாடு காட்டுகிறது.
எனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்களில் ஓரிரு செய் தியை மட்டும் உங்களோடு நான் பகிர்ந்துகொள்கிறேன்.
சில நாள்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட அனுப வத்தை, இன்று காலை என் முகநூலில் பதிவு செய் திருக்கிறேன். உங்களில் சிலர் படித்திருப்பீர்கள். இல்லை யென்றாலும், அது மக்கள் எல்லோருக்கும் போயாக வேண்டும் என்பதால், அந்த அனுபவத்திலிருந்து என் உரையைத் தொடங்குகின்றேன்.
ஒரு வார காலத்திற்குள்ளாகத்தான்.
எனக்கு ஏற்பட்ட அனுபவம்!
சென்னையில் உள்ள ஒரு பெரிய ஒன்றிய அரசின் நிறுவனத்தில் நடைபெற்ற ஓர் அரசு விழாவில் உரையாற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டேன்.
அந்த விழா முடிந்து, மதிய உணவு - அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய அதிகாரியாக - முதல் அதிகாரியாக இருக்கின்றவரும், நானும் மதிய உணவை எடுத்துக் கொண்டிருந்த வேளையில், இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தோம்.
என்ன வேடிக்கை என்றால், அவருக்குத் தமிழில் ஒரு சொல்கூட தெரியவில்லை.
எனக்கு இந்தியில் ஒரு சொல்கூட தெரியாது.
போனால் போகிறது, ஆங்கிலம் தெரியுமா? என்றால், அவருக்கும் என்னைப் போலவே அரைகுறையாகவே ஆங்கிலம் தெரிந்திருந்தது.
எங்களுக்குத் தெரிந்த அந்த ஆங்கிலத்தில் நாங்கள் உரையாடினோம்.
தமிழே தெரியாது என்கிறீர்களே, இப்போதுதான் பணிக்கு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.
பத்து மாதங்கள் ஆகிவிட்டன என்றார்.
பத்து மாதங்களில் ஏன் நீங்கள் தமிழைக் கற்றுக் கொள்ளவில்லை என்று கேட்டேன்.
அவர் சொன்னார், ‘‘நான் எப்போது மாற்றல் ஆகிப் போகலாம் என்று காத்திருக்கிறேன்; நீங்கள் வேறு தமிழைக் கற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்’’ என்றார்.
அவர் உத்தரப்பிரதேசத்துக்காரர்.
நீங்கள் சொந்த ஊருக்குப் போகவேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? என்றேன்.
அதற்கு அவர் சொன்ன விடை முக்கியமானது.
இல்லை, ‘‘தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு அனுப்பினாலும் சம்மதம்’’ என்றார்.
ஏன் ‘‘தமிழ்நாட்டின்மீது உங்களுக்கு என்ன அவ்வளவு பெரிய கோபம்?’’ என்று கேட்டேன்.
‘‘கோபம் ஒன்றும் இல்லை.
இது நல்ல ஸ்டேட்தான் சார்; கிளைமேட் நன்றாக இருக்கிறது; மக்கள் எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், நான் மட்டுமல்ல, எங்களில் யாருமே தமிழ்நாட்டிற்கு வர விரும்புவதில்லை. அதற்கு இந்த மொழி ஒன்றுதான் காரணம்’’ என்றார்.
ஏன், மற்ற மாநிலங்களில் என்ன நிலை? என்றேன்.
அவர் சொன்னார், ‘‘இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திற்கு நாங்கள் அனுப்பப் பட்டாலும், இந்தியை வைத்து எங்களால் நாட்களை நகர்த்திவிட முடியும். கண்டிப்பாக, ஒரு சிலராவது இந்தியை அறிந்திருப்பார்கள்.''
நான் கேட்டேன், கேரளாவில்...
‘‘அது கொஞ்சம் கஷ்டம் - ஆனாலும், தமிழ்நாடு அளவிற்கு இல்லை.
இந்தத் தமிழ்நாட்டில்தான், கடைவீதிக்குப் போனால், யாருக்கும் இந்தி தெரியவில்லை என்கிறார்கள். இந்தித் திரைப்படம் போடும் திரையரங்கிற்குப் போனால், அங்கே வேலை பார்க்கிறவர்களுக்கும் இந்தி தெரிய வில்லை. அலுவலகத்தில் யாருமே இந்தி பேச மறுக்கிறார்கள்.
எனவே, அலுவலகத்தில், வீடுகளில், கடைத்தெரு வில், திரையரங்கில் எங்குமே இந்தி தெரியாத ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான்’’ என்று அவர் சொன்னார்.
என்னுடைய அரசியல் பின்புலம் தெரியாது
அவருக்கு நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்று மட்டுமே தெரியுமே தவிர, என்னுடைய அரசியல் பின்புலம் தெரியாது.
எனவே, அவர் மனம் விட்டுப் பேசினார்.
இங்கு யாருக்குமே இந்தி தெரியாது என்று சொன்னது ஓரளவிற்கு உண்மைதான். 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்கிற அண்ணாமலைக்கே இந்தி தெரியாது என்று அவரும் சொல்லியிருக்கிறார். அது அவரே சொன்னது.
அப்படியென்றால், அவர்களுக்குக் கோபம் வருமா? வராதா?
யாரை அவர்கள் தலைவராக நியமித்திருக்கிறார் களோ, அவருக்கே இந்தி தெரியாது.
தமிழ்நாட்டில் சில சிக்கல்கள் அவர்களுக்கு எப்படி வருகிறது என்றால்,
அண்மையில் பிரதமர் அவர்களும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் சேர்ந்து கலந்துகொண்ட கூட்டம். அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பெயரை சொன்னவுடன், அவ்வளவு பெரிய கைதட்டல் வந்தது. அவர்களுக்குக் கோபம் வந்தது.
ஆனால், அதற்கான உண்மையான காரணத்தைப் பலர் இன்னமும் அறியவில்லை.
முதலமைச்சர் பெயரை சொன்னவுடன் நம்மவர்கள் எல்லோரும் கைதட்டியதில் அவர்களுக்குக் கோபம் இல்லை. அவர்கள் அழைத்து வந்தவர்களும் சேர்ந்தே கைதட்டினார்கள் என்பதினால்தான் அவர்களுக்குக் கோபம்.
தங்களை மறந்து கைதட்டிவிட்டு, பிறகுதான் கைகட்டிக் கொண்டார்கள்
சிரமப்பட்டு அவர்கள் யாரையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்தார்களோ, அவர்களும் முதலமைச்சர் பெயரை சொன்னவுடன், தங்களை மறந்து கைதட்டி விட்டு, பிறகுதான் கைகட்டிக் கொண்டார்கள்.
அதுபோல, யாருக்கும் இந்தி தெரியாது என்றால், அண்ணாமலைக்கும் தெரியாது என்கிற வரைக்குமான இந்தத் தமிழ்நாட்டை விட்டுப் புறப்படவேண்டும் என்று சொல்கிறார்.
சரி, உங்கள் தாய்மொழி இந்தி தானே? என்று கேட்டேன்.
அவர் சொன்னார், என் தாய்மொழி பிரஜிபாஷா என்றார்.
அப்படி ஒரு மொழி இருப்பது நமக்குத் தெரியாது.
எதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால், அதற்கு முன்பு அவர் சொன்ன ஒரு வரி, மிகமிக முதன்மையானது - எனக்கே கண்ணைத் திறந்த வரி என்று சொல்லவேண்டும்.
அவர் சொன்னார், இப்படி தமிழ்நாட்டில் யாருமே இந்தி தெரியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று என்னிடத்திலே சொன்னார்.
என்ன? என்று கேட்டேன்.
ஆங்கிலம் தெரிகிற வரையில் தமிழ்நாட்டுக்குள் இந்தி வர முடியாது
‘‘வேறொன்றுமில்லை; இங்கே தமிழ்நாட்டில் பரவலாக எல்லோருக்கும் ஓரளவிற்கு ஆங்கிலம் தெரிகிறது. ஆங்கிலம் தெரிகிற வரையில் இந்த நாட்டுக்குள் இந்தி வர முடியாது’’ என்று தெரிவித்தார்.
அவர் சொன்ன காரணம் பாருங்கள்,
ஆங்கிலம் எல்லோருக்கும் தெரிந்திருப்பதால், இந்தி தேவை என்று அவர்கள் கருதவில்லை. எப்போது ஆங்கிலம் போகிறதோ, அப்போதுதான் நாங்கள் உள்ளே வர முடியும் என்று சொன்னார்.
இது உங்களுக்கு இப்போது தெரிகிறது; எங்கள் அய்யாவிற்கு எப்போதே தெரிந்துவிட்டது.
அய்யாவிற்கும், அண்ணாவிற்கும், கலைஞருக்கும் எவ்வளவு தொலைநோக்குப் பார்வை இருந்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
தாய்மொழிதான் நமக்கு வாள்;
ஆங்கிலம் நமக்குக் கேடயம்
ஆங்கிலம் என்பது நமக்கு ஒரு அரணாக இருக்கிறது; ஒரு கேடயமாக இருக்கிறது. தாய்மொழிதான் நமக்கு வாள்; ஆங்கிலம் நமக்குக் கேடயம்.
நமக்கு வாளும் வேண்டும்; கேடயமும் வேண்டும்.
ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிடக் கூடாது என் பதை அந்த அதிகாரியின் கூற்றிலிருந்து நான் தெளிவாக அறிந்துகொள்ளுகிறேன்.
சிலர் கேட்கிறார்கள், இரண்டும் அந்நிய மொழிகள் தானே?
இந்தி மொழியாவது இங்கிருந்து வந்த அந்நிய மொழி - ஆங்கிலம் எங்கிருந்தோ வந்த அந்நிய மொழி.
இரண்டு அந்நிய மொழிகளில் ஏன் இந்தியை எதிர்க் கிறீர்கள்; ஆங்கிலத்தை வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டுமே என்கிறீர்களே என்றால்,
வரலாற்றில் 300 ஆண்டுகளுக்குமுன்பே...
அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாற்றில் 300 ஆண்டுகளுக்குமுன்பே ஆங்கிலம் நம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டது.
அது ஆட்சியின்மூலமாக வந்தது.
இன்னொரு செய்தி என்னவென்றால், ஆங்கிலம் நமக்குப் பயன்படுகிறது; இந்தி நம்மை அடிமைப்படுத் துகிறது.
இரண்டிற்கும் இருக்கின்ற பெரிய வேறுபாடு - அருள் மொழி அவர்கள் சொன்னதுபோல, இந்தி என்பது கங்காருகுட்டி முன்னால் வருகிறது; கங்காரு பின்னால் இருக்கிறது. சமஸ்கிருதம்தான் அவர்களுக்கு அடிப் படையான நோக்கம்.
ஆகையினாலே, ஆங்கிலம் நமக்குப் பயன்படுகிறது; இந்தி நம்மை அடிமைப்படுத்துகிறது.
எனவே, இரண்டு அந்நிய மொழிகளில் ஆங்கிலம் நமக்குக் கேடு செய்யவில்லை என்பது அடிப்படையான செய்தி.
உங்களுடைய தாய்மொழி எது? என்று கேட்ட பொழுது, பிரஜிபாஷா என்றார்.
உத்தரப்பிரதேசத்தில்
இந்தி தாய் மொழி இல்லை
நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம், உத்தரப்பிர தேசத்தில் எல்லோருக்கும் இந்திதான் தாய்மொழி என்று.
இல்லை.
இந்தியினுடைய கிளை மொழி என்று அவர்கள் சொல்கிறார்கள்; வடமேற்குப் பகுதியில் வாழ்கின்ற மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்களுக்கு பிரஜி பாஷாதான் தாய்மொழி.
சரி, தென்மேற்கில் வாழ்கிறவர்களுக்கு, உத்தரப்பிர தேசத்தில் புத்தேல்கண்டி என்பதுதான் தாய்மொழி.
இப்படியெல்லாம் பெயர்களையே நாம் கேள்விப் பட்டு இருக்கமாட்டோம். மறைமலையடிகள் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நான் சிறுவனாக இருக்கிறபொழுது, நம்முடைய நாவலர் பேசி நான் கேட்டிருக்கிறேன்.
தென்மேற்குப் பகுதியில் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறவர்களுக்கான தாய்மொழி புத்தேல்கண்டி.
சரி, வடகிழக்கில் போஜ்பூரி.
உத்தரப்பிரதேசத்திற்குப் பக்கத்தில் வந்தால், உத்தர காண்ட் இருக்கிறது. அங்கே அவர்கள் இந்தி, சமஸ் கிருதம் இரண்டையும் ஆட்சி மொழிகளாகவே அறிவித் திருக்கிறார்கள்.
உத்தரகாண்டிலே
தாய்மொழி என்பது கட்டுவா!
ஆனால், அங்கே இந்தி தெரிந்தவன் குறைவு; சமஸ் கிருதம் தெரிந்தவன் கிடையாது. அவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு 76 சதவிகித மக் களுக்கு உத்தரகாண்டிலே தாய்மொழி என்பது கட்டுவா.
இந்த இந்தி என்ன செய்யும் என்றால், எல்லா தாய் மொழிகளையும் அழித்துவிடும்.
இன்றைக்கு கட்டுவா என்று இந்தியாவில் இருக் கிறவர்களுக்கே அப்படி ஒரு மொழி இருப்பது தெரியாது.
முத்தரசன் அவர்கள் பேசும்பொழுது சொன்னார், விகிதாசார அடிப்படையிலே சமஸ்கிருதத்திற்குப் பணம் ஒதுக்குங்கள் என்று.
5 கோடி பேர் பேசும்
இராஜஸ்தானிய மொழி!
அப்படி ஒதுக்கினால், ஒன்றுமே மிஞ்சாது.
5 கோடி பேர் இராஜஸ்தானிய மொழி பேசுகிறார்கள். இன்றைக்குவரைக்கும் இராஜஸ்தானிய மொழி, எட்டாவது அட்டவணையில்கூட இடம்பெறவில்லை. 5 கோடி பேர் பேசுகிறமொழி, ஆனால், இன்னமும் ஒரு லட்சத்தைத் தொடாத சமஸ்கிருதத்திற்குக் கொட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கிற தொகை, நம்முடைய தீர்மானத்திலே படிக்கப்பட்டது 643 கோடி ரூபாய்.
அது செம்மொழி என்று ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய அய்ந்து மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிற தொகைபோல, 29 மடங்கு அதிகம்.
இது என்ன ஜனநாயகம்? என்று நாம் கேட்கிறோம்.
இந்தி எதிர்ப்பைப் பொழுதுபோக்கிற்காக நாம் நடத்த வில்லை. இந்தி எதிர்ப்பு என்பது எதற்காக நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறோம்.
தமிழ்நாடு தன்னைப் பாதுகாத்துக் கொண்டது
உண்மையாகவே, தமிழ்நாடு மிக புத்திசாலித்தனமாக தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே, எங்களுக்குத் தாய்மொழி தமிழ். வெளியேற தொடர்புகொள்ள ஆங் கிலம் என்பதை மிகத் தெளிவாக முடிவெடுத்த காரணத் தினால்தான், இன்றைக்கு வரைக்கும் பொருளாதாரத்தில், சமூகநீதியில் முன்னேறி இருக்கிறது தமிழ்நாடு. அதைத் திராவிட மாடல் என்று சொன்னால், பலருக்கு வயிற் றெரிச்சலாக இருக்கிறது. அதுதான் திராவிட மாடல்.
வேறு என்ன? என்பதை எண்ணிப் பாருங்கள்.
இன்றைக்குப் பிற மாநிலங்களில் இதை ஏற்றுக் கொள்ளுகிற நிலை வந்திருக்கிறது.
2015, ஜூலை மாதத்தில் ஒரு மிகப்பெரிய கலவரம் குஜராத்தில் நடைபெற்றது.
எதற்காக என்றால், பட்டேல் சமூகத்தினர், தங்களைப் பொதுப்பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நடத்தினார்கள். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம்.
2015, ஜூலையில் தொடங்கிய அந்தப் போராட்டம், ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதிவரைக் கும் மிகப்பெரிய வன்முறைக் கிளர்ச்சியாக மாறியது.
குஜராத்தைச் சேர்ந்த சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர்
அப்போது, போலோபாய் பட்டேல் என்கிற சாகித்ய அகடாமி விருது பெற்ற குஜராத்தைச் சேர்ந்த எழுத் தாளர் சொன்னார்; அவரும் பட்டேல் சமூகத்தைச் சார்ந்தவர்தான்.
அவர் சொன்னார், ‘‘இந்தப் பட்டேல் சமூகத்தினர், பொருளாதாரத்தில் நாங்கள் வசதியாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், ஏன் நாங்கள் பின்தங்கிவிட்டோம்; எதற்காக எங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கச் சொல்லு கிறோம் என்று கேட்டால், ஒரு தவறு செய்துவிட்டோம் - இந்தியும், குஜராத்தியும் போதும் என்று இருந்து விட்டோம். ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளாமல் விட்ட தால், எங்கள் சமூகம் பின்தங்கிவிட்டது’’ என்பது அவர் தந்த வாக்குமூலம்.
தகவல் தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள் தமிழர்கள்தான்
இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம் - அயல்நாட்டிலே இருக்கிற கணிப்பொறித் துறை, தகவல் தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள் தமிழர்கள்தான்.
முதலில் நம்முடைய பிள்ளைகள் - அவாள் இல்லை - நம்முடைய பிள்ளைகள்தான் இன்றைக்கும் வெளி நாடுகளில் முதலில் இருக்கிறார்கள்.
அவுட்சோர்சிங் என்ற சேவைத் துறையில், தகவல் நுட்பத் துறையில் வருகிற வருமானத்தில், 54.3 சதவிகிதம் இந்த சேவை துறையில் இருந்து வருகிறது - அவுட்சோர்சிங்கிலிருந்து வருகிறது.
அவுட்சோர்சிங்கில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தால், முதலிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தென்னிந்தியாதான் இரண்டாவது இடத்திலே இருக் கிறதே தவிர, வட இந்தியா பக்கத்திலேகூட இல்லை.
அதனால்தான் நீங்கள் எண்ணிப் பாருங்கள், பீகார் மக்கள் இந்தி தெரிந்தவர்கள்தானே?
ஏன் இந்தக் கரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்றார்கள்.
இந்தியும், பீகாரியும் தெரிந்த பீகார் மக்கள் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்
அவர்களுக்காக நான் பரிவோடுதான் சொல்கிறேன், கட்டடக் கூலிகளாக இருக்கிறார்கள்; உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் இந்தியும், பீகாரியும் போதும் என்பதால், வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.
மிகச் சரியாக அய்யா பெரியார் அவர்கள் இதனை முன்னெடுத்தார்.
அவுட்சோர்சிங் என்பது நமக்குத் தெரியும். முன்பெல் லாம் நம்முடைய பெண் பிள்ளைகள் படிக்கவே கூடாது; பிறகு வேலைக்கே போகக்கூடாது. இப்பொழுது இரவு 9 மணிக்கு நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் வேலைக்குப் போகிறார்களா, இல்லையா?
ஏனென்றால், அமெரிக்காகாரன் அப்பொழுதுதான் விழித்திருப்பான். அவன் விழித்திருக்கும்பொழுதுதான், அவனுக்கான வேலையை நாம் செய்யவேண்டும். அவுட்சோர்சிங் துறையில் வேலை செய்வதற்கு ஆங் கிலம் தெரிந்தால் மட்டும் போதாது; அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறை தெரியவேண்டும்.
ஆங்கில ஒலிப்பு முறை நமக்குக் கற்றுக் கொடுத்த வர்கள் பிரிட்டிஷ்காரர்கள்; நமக்கு அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறை தெரியாது.
ஒருமுறை நான் அமெரிக்காவில் போய் இறங்கு கிறபொழுது, விமான நிலைய அதிகாரிகளின் விசார ணையின்போது, எங்கே தங்கப் போகிறீர்கள்? எத்தனை நாள் தங்கப் போகிறீர்கள்? என்றுதான் கேட்கிறார்கள் என்று நானே ஒரு யூகம் செய்துகொண்டேன். அவர்கள் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை.
அதற்குப் பிறகு, அப்படித்தான் கேட்டிருப்பார்கள் என்று நான் கருதி, ஒரு அய்ந்து நிமிடம் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விடை சொல்கிற வரைக்கும் பொறுமையாக இருந்தார்.
நான் பேசியதை இங்கிலீசாகவே மதிக்கவில்லை
அங்கே இருந்த ஒரு பெண்மணி என்னைப் பார்த்து கேட்டார்,
Could you please translate in to English என்று கேட்டார்கள்.
அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது, நான் பேசியதை இங்கிலீசாகவே மதிக்கவில்லை என்று.
நான் இங்கிலீசில் பேசியதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறை முற்றிலுமாக வேறுபட்டது, நம்மிடத்திலிருந்து.
அதையும் புரிந்துகொண்டுதான் நம்முடைய பிள்ளைகள், 54 சதவிகித வருவாயை இந்த நாட்டிற்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
அய்யா காட்டிய வழியில், அண்ணா என்ன செய்தார், 1968, ஜனவரி 23 ஆம் தேதி இதற்கென்றே தனியாக ஒரு சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி, தமிழ்நாட்டில் எந்தக் கொம்பன் வந்தாலும், இனிமேல் இருமொழிக் கொள்கை தான் என்பதை நிறைவேற்றினார்.
அய்யாவும், அண்ணாவும் தொடர்ந்ததை, கலைஞர் தொடர்ந்து எடுத்துச் சென்றார்.
திராவிடக் கொள்கையிலிருந்து ஜெயலலிதாவால்கூட விலகிட முடியாது
எங்கே நாம் வெற்றி பெற்றோம் என்றால், ஜெயலலி தாவால்கூட அதை மாற்ற முடியவில்லை என்பதில் வெற்றி பெற்றோம்.
ஆயிரம் பேசலாம், நான் யார் என்று அவர் சட்ட மன்றத்திலே சொல்லியிருக்கலாம். ஆனால், திராவிடக் கொள்கையிலிருந்து ஜெயலலிதாவால்கூட விலகிட முடியாது என்கிற இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியது எது என்றால், திராவிடர் கழகம் தொடங்கி வைத்த அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் - ஒத்தி வைத்த போராட்டம் மறுபடியும் தொடங்கியிருக்கிறது - தொடரும்.
வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக