கடந்த 4.6.2022 அன்று சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப் பெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் 12 சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் மூன்றாவது தீர்மானம் வருமாறு:
செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஏன்?
"மொழியை மக்களிடம் கொண்டு செல்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட அண்மைக்காலத்திய புள்ளி விவரத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ரூபாய்.643.84 கோடியை ஒன்றிய அரசு செலவு செய்துள்ளது. இந்தத் தொகையானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு ஒன்றிய அரசு செலவு செய்த தொகையைவிட 29 மடங்கு அதிகம் ஆகும்.
அதேவேளையில் மலையாளம் மற்றும் ஒடியாவின் மேம்பாட்டிற்காக எந்தவொரு தனி நிதியையும் அரசு ஒதுக்கவில்லை. மேலும், இந்தத் தொன்மையான இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக எந்தவொரு சிறப்பு மய்யத்தையும் அரசு இதுவரை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்களவையில் சிவசேனா எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஒன்றிய அரசு இந்தத் தரவுகளைத் தெரிவித்துள்ளது.
மேலும், சமஸ்கிருதத்திற்காக 2017-18ஆம் ஆண்டில் ரூ.198.31 கோடியும், 2018-19ஆம் ஆண்டில் ரூ.214.38 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.231.15 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதே வேளையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னை யைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (சி.அய்.சி.டி.) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான மய்யத்தின் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழின் மேம்பாட்டுக்கு 2017-18ஆம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19ஆம் ஆண்டில் ரூ.4.65 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.7.7 கோடியும் செலவிடப் பட்டுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்குக்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக, 2017-18ஆம் ஆண்டில் தலா ரூ.1 கோடி, 2018-19இல் ரூ.99 லட்சம், 2019-20இல் ரூ.89 லட்சம் என இருந்துள்ளன.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து மாநிலங்க ளையும், அவற்றின் மொழிகளையும் சமக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் செத்துப் போன சமஸ்கிருதத் துக்கு - ஹிந்தியின் தாயான அம்மொழிக்குத் தனி அக்கறையும் செலுத்துவது ஒன்றிய அரசின் பார்ப்பனீய கலாச்சாரத்தின் வெளிப்பாடே என்பதை இம்மாநாடு திட்டவட்ட மாகவே தெரிவிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற ஹிந்துத்துவ கொள்கையின் முன்னெடுப்பு என்பதிலும் அய்யமில்லை.
தேசிய ஒருமைப்பாடு என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
அனைத்து மொழிகளையும் சமக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும் இம்மாநாடு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது."
இத்தீர்மானம் எதைக் காட்டுகிறது? மக்கள் தொகையில் 0.01 விழுக்காடு அள வில் பேசப்படும் - செத்துச் சுண்ணாம்பான சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.643.84 கோடியாகும். ஆனால் தென்மாநில மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியைவிட இது 29 மடங்கு அதிகம் என்றால் இந்தக் கொடுமையை, வடவர்களின், பார்ப்பனர்களின் ஆதிக்க வெறிப் புத்தியை எதைக் கொண்டு சாற்றுவது?
அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டி அழுதார். பல்கலைக் கழகங்களில் வேதக் கணிதம் என்றெல்லாம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சராகவிருந்த முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் சமஸ்கிருதத்துக்கு ஓர் ஆண்டையே அறிவித்ததுபோல, தமிழுக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை வலியுறுத்தினார்; ஆனால் அது நடக்கவில்லை.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும், அதன்பின் குப்பம் (ஆந்திர மாநிலம்) திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரும், திருவனந்தபுரத்தில் திராவிட மொழி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வந்தவருமான வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிட மொழி என்சைக்லோபீடியாவை உருவாக்கி, அன்றைய ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியிடம் ஒரு நகலைக் கொடுத்தபோது, அந்தத் 'திராவிட' என்ற சொல்லை நீக்கி விடலாமே என்று அமைச்சர் சொன்னபோது 'ஜனகனமங்கல' என்று தொடங்கும் தேசிய கீதத்தில் வரும் 'திராவிட' என்ற சொல்லை முதலில் நீக்குங்கள். நானும் அதுபற்றி யோசிக்கிறேன்' என்று சொன்னாரே பார்க்கலாம். ஒன்றிய அமைச்சருக்கு முகம் சுருங்கியதுதான் மிச்சம்!
பார்ப்பனர்கள் எந்த இடத்தில், எந்த மட்டத்தில் இருந்தாலும் அவர்களின் எண்ணமும் நோக்கமும் திராவிட எதிர்ப்பும் - பார்ப்பன மேலாதிக்கச் சிந்தனையும் தான். இந்தியை நேரிடையாகப் புகுத்தினால் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கோபப் புயலைச் சந்திக்க நேரும் என்பதால் - தந்திரத்திற்கே பெயர் போன பார்ப்பனர்கள் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.
இதனையும் திராவிடர் கழக இந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தீர்மானம் வழிப்போடு சுட்டிக்காட்டியுள்ளது.
கஜ குட்டிக் கரணம் போட்டாலும் அந்த எண்ணம் மட்டும் நிறைவேறப் போவதில்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் காலத்திலும்கூட இந்தியைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதன் எதிர் விளைவை சந்தித்து அலுத்துப் போய் கை விட்டார்கள்.
பிரதமர் நேரு அவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகப் பண்பு கொஞ்சம் கொண்டவராதலால் இதில் அவசரத்தையோ, ஆவேசத்தையோ காட்டவில்லை.
மாறாக என்ன சொன்னார்?
“மொழியினால் போர்களும் மூள்வதுண்டு!"
“இந்தி மொழி பேசாத மக்கள் மீது திணிக்க முயலக் கூடாது! வட்டார மொழி வளர்ச்சிக்குச் சிறிதும் தடையாகவிருத்தலாகாது!” இந்தியப் பிரதமரின் எச்சரிக்கை!
“இந்தி மொழியை எந்த வட்டார மக்கள் மீதும் கட்டாயப்படுத்தித் திணிக்கக் கூடாது. இம்மொழியின் மீது மக்கள் வெறுப்புக் கொள்ளத்தக்க முறையில் இதைப் புகுத்தக்கூடாது.
மொழி மக்களுக்குள் நல்லெண்ணமும், நல்லுறவும் ஏற்பட உதவியாக இருப்பதும் உண்டு. மொழி, மக்களுக்குள் வேற்றுமையும், பகைமையும், போர்களும் மூள்வதற்கும் உதவியாக இருப்பதும் உண்டு.
எனவே, இந்தி மொழியை, அம்மொழி பேசப்படாத மக்கள் மீது திணிக்காமல், அவர்கள் விரும்பிப் படிக்க முன்வருமாறு செய்ய வேண்டும். இக்கருத்துரையை வேறு யாரும் கூறவில்லை. பிரதமர் நேருவே ‘இந்தி' வெறியர்களுக்கு அறிவுறுத்தி, எச்சரித்துள்ளார்.
புதுடில்லி, ஆகஸ்ட் 29, (1953)- இந்தி மொழி பேசாத மக்கள் மீது திணிக்க முயன்றால், அதனால் பெரும் கேடுகள் விளையும் என்றும், நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் என்றும், பிரதமர் நேரு இங்கு கூறினார்.
பார்லிமெண்டின் இந்தி சங்க ஆண்டுவிழாவில் தலைமை வகித்துப் பேசுகையில் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். மேலும், அவர் பேசுகையில், மக்களுக்குள் ஒற்றுமையை வளர்ப்பதில் மொழி ஒப்பற்றதாக விளங்குகிறது என்றும், ஆனால், பலமான கருத்து வேற்றுமைகளுக்கும், ஏன் போர்களுக்கும் கூட காரணமாக விளங்குகிறதென்றும் குறிப்பிட்டார். எனவே, மொழி பற்றிய மிக அடி நுண்ணிய பொருளில் ஒன்றுகூட தவறாக எடுத்துவைக்கக் கூடாது என்று அவர் எச்சரித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
பார்லிமெண்ட் போன்ற சில இடங்களில் ஆங்கில மொழியை உபயோகிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாய்விட்டது. காரணம், எல்லா உறுப்பினர்களாலும் இந்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதனால், இந்தி மொழி வளரும் மொழியாக விளங்க வேண்டுமானால் இதர மொழிகள், சொற்கள் ஆகியவைகளுக்குத் தாராளமாக இடந்தர வேண்டும். அதாவது இதர மொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய தேவைக்கு ஏற்றவாறு அதன் கலைச்சொற்கள் பெருக வேண்டும்.
ஆனால், அதே சமயத்தில், அந்த வட்டார மொழிகள் அது எவ்வளவு சிறு பான்மையோர்களால் பேசப்பட்டுவரும் மொழியானாலும் சரி, அவை வளர்வதற்கு இந்தி தாராளமாக இடம் தர வேண்டும். இந்தியின்மீது எவருக்கும் எந்தப் பகுதி மக்களுக்கும் வெறுப்பு ஏற்பட இடம் தரலாகாது. மக்கள் தாங்களாகவே விரும்பி ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்" என்றார் பிரதமர்நேரு! ('விடுதலை' 30.8.1953)
அன்றைய பிரதமர் நேரு சொன்னதை இன்றைய பிரதமர் மோடி எற்பாரா?
பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பார்ப்பனர் அல்லாதாரராக இருக்கலாம். ஆனால் அவர்களைப் பயன் படுத்தித் தங்களின் காரியத்தைச் சாதிப்பதுதான் பார்ப்பனர்களின் தந்திரம்.
இவர்களின் இலகான் ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடம் இருக்கக் கூடிய நாக்பூரில் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.
"நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகம் குதிக்கும்" என்று தந்தை பெரியார் சொல்லுவதுண்டு, மோடி, அமித்ஷாக்கள் வேஷம் போட்ட புலிகள். அதனால்தான் இந்தக் குதி குதிக்கிறார்கள்.
தமிழர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!