* செத்தமொழியான சமஸ்கிருத மொழிக்காக ரூ.643.84 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்குவது ஏன்?
* மற்ற மொழிகளுக்கு அற்பத் தொகைப் பாரபட்சம் ஏன்?
* இந்தியாவின் அடையாளம் ஹிந்தி என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கதே!
திராவிடர் கழகம் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்
சென்னை, மே 5 ஹிந்தி திணிப்பு மூலம் நாட்டைப் பிளவுபடுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 8ஆம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் நேற்று நடத்திய ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
4.6.2022 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலை மையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
தீர்மானம் 1:
ஆட்சிக்கு வந்த உடனே துவங்கிய
ஹிந்தித் திணிப்பு!
திரு.நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவையும் பதவி ஏற்ற 4 நாள்களுக்குப் பிறகு மனித வளத்துறை அமைச்சகத்தின் மூலம் அத்துறையின் அமைச்சர் ஸ்மிரிதி இரானி அவர்களால் 2014ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வெளியுறவுத் துறை உள்ளிட்ட எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலைதளங்களில் அனைத்தையும் ஹிந்தியில் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அடுத்து வெளியான ஒரு சுற்றறிக்கையில் இப்படி கண்டிப்பாகப் பின்பற்றும் முன்னணியான ஊழியர்களுக்குப் பரிசுத் தொகையையும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழி களையும் சமமாகப் பாவிக்க வேண்டும்; அனைத்தையும் ஒன்றிய ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டும்; ஹிந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதன் மூலம், ஹிந்தி பேசாத இந்திய மக்களிடையே பேதங்களைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்ட வேலையை ஆட்சிக்கு வந்த உடனே துவங்கிவிட்டனர்.
ஒரு பக்கத்தில் தேசிய ஒருமைப்பாடு பேசிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் மொழியின் பெயரால் நாட்டைப் பிளவு படுத்தும் முயற்சியை - வேலையை ஒன்றிய அரசு கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
உள்துறை அமைச்சரின்
கண்டிக்கத்தக்க மொழி வெறி!
கடந்த ஏப்ரலில் டில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து கவனிக்கத்தக்கது.
"நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். ஹிந்தி மொழியின் முக் கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும். ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் - உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல.
வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.
9ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு ஹிந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஹிந்தித் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதே உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் ஹிந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். ஹிந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்!
மேலும் "ஹிந்தி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய தாய்மொழியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும். காந்தி, வல்லபாய் படேல் கண்ட ஒரே நாடு ஒரே மொழி கனவை மக்கள் நனவாக்க வேண்டும்" என்று அமித்ஷா கூறியுள்ளார்.
இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் இவ்வளவுப் பச்சையாக இந்தியாவில் இருக்கக்கூடிய வளமான பாரம்பரிய மாநில மொழிகளை அலட்சியப்படுத்திவிட்டு, ஹிந்தி என்ற ஒரு மொழியை மட்டும் அதிகாரப்படுத்துவதை - முதன்மைப்படுத்துவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து - மொழியின் பெயரால் இந்தியாவைப் பிளக்கக் கூடியதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும், சம தகுதியும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு திட்டவட்டமாக அறிவிக்கிறது - வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3:
செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு
அதிக நிதி ஒதுக்கீடு ஏன்?
மொழியை மக்களிடம் கொண்டு செல்வ தற்கான நிதி ஒதுக்கீட்டில் சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட அண்மைக்காலத்திய புள்ளி விவரத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ரூபாய்.643.84 கோடியை ஒன்றிய அரசு செலவு செய்துள் ளது. இந்தத் தொகையானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு ஒன்றிய அரசு செலவு செய்த தொகையைவிட 29 மடங்கு அதிகம் ஆகும்.
அதேவேளையில் மலையாளம் மற்றும் ஒடியாவின் மேம்பாட்டிற்காக எந்தவொரு தனி நிதியையும் அரசு ஒதுக்கவில்லை. மேலும், இந்தத் தொன்மையான இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக எந்தவொரு சிறப்பு மய்யத்தையும் அரசு இதுவரை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்களவையில் சிவசேனா எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஒன்றிய அரசு இந்தத் தரவுகளைத் தெரிவித்துள்ளது.
மேலும், சமஸ்கிருதத்திற்காக 2017-18ஆம் ஆண்டில் ரூ.198.31 கோடியும், 2018-19ஆம் ஆண்டில் ரூ.214.38 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.231.15 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (சி.அய்.சி.டி.) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான மய்யத்தின் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழின் மேம்பாட்டுக்கு 2017-18ஆம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19ஆம் ஆண்டில் ரூ.4.65 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.7.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
கன்னடம் மற்றும் தெலுங்குக்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக, 2017-18ஆம் ஆண்டில் தலா ரூ.1 கோடி, 2018-19இல் ரூ.99 லட்சம், 2019-20இல் ரூ.89 லட்சம் என இருந்துள்ளன.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும், அவற்றின் மொழிகளையும் சமக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் செத்துப் போன சமஸ்கிருதத்துக்கு - ஹிந்தியின் தாயான அம்மொழிக்குத் தனி அக்கறையும் செலுத்துவது ஒன்றிய அரசின் பார்ப்பனீய கலாச்சாரத்தின் வெளிப்பாடே என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகவே தெரிவிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற ஹிந்துத்துவ கொள்கையின் முன்னெடுப்பு என்பதிலும் அய்யமில்லை.
தேசிய ஒருமைப்பாடு என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
அனைத்து மொழிகளையும் சமக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும் இம்மாநாடு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
நேரு கொடுத்த உறுதிமொழி எங்கே?
ஹிந்தியைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று, அன்றைய பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தார். தொடர்ந்து, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம், ஹிந்தி என்பதாக இருந்தாலும், தென்னக மாநிலங்களைப் பொறுத்தவரையில், ஒன்றிய அரசு ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அலுவல் மொழி விதிகள் 1976இன்படி தெளிவாக உள்ளது.
விதிகள் இவ்வாறு தெளிவாக இருப்பினும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்மையில் ஹிந்தி மொழியை அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியது, அரசு விதிகளுக்கும், நாடாளுமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிக்கும் எதிரானது என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
தீர்மானம் 5:
அனைத்து மொழிகளிலும் ஒன்றிய அரசின் தேர்வுகளை எழுதிட உரிமை தேவை!
ஒன்றிய அரசு நடத்தும் அனைத்து நிலைத் தேர்வுகளும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு இத்தேர்வு முறை மிகுந்த பாதிப்பை உருவாக்கி வருகிறது. ஆகவே, ஒன்றிய அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பேதமின்றி ஏனைய ஹிந்தி பேசாத மாநில உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6:
இந்தி தெரிந்த அதிகாரிகளால்
வங்கிச் சேவை பாதிப்பு!
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகளின் நியமனத்தில், அகில இந்தியத் தேர்வு என்கிற போர்வையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே மிகுதியாகப் பணியாற்றி வருகிறார்கள். இதே நிலை ஏனைய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் துறைகளில் மக்கள் சென்று உரிய வகையில் சேவை பெறுவதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் அதிகாரிகள் பதவி நியமனங்களிலும், அந்தந்த மாநிலத்தில் உள்ள உரிய தகுதி பெற்றவர்களுக்கு 90 சதவிகித நியமனங்களை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அரசின் நியமனம் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
திராவிடர் கழகம் நடத்திய போராட்டம்!
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் வட மாநிலத்தவர்களாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக எழுத்தர் (கிளார்க்) பணிகளிலும், அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்கிற விதியைத் தளர்த்தி, ‘றிக்ஷீமீயீமீக்ஷீணீதீறீமீ’ என மாற்றம் செய்த காரணத்தால், எழுத்தர் நியமனங்களிலும் வெளிமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற 843 எழுத்தர் நியமனங்களில் 400 பேர் வெளி மாநிலத்தவர் என்கிற அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது. இத்தகு அபாயத்தை உணர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவரின் ஆணைக்கு இணங்க தமிழ்நாட்டின் 59 கழக மாவட்டங்களில் திராவிடர் கழக இளைஞர் அணி, மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை ஆகியோர் இணைந்து மாபெரும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். பெருமளவில் கலந்துகொண்ட போராளிகளுக்கு இம்மாநாடு பாராட்டுத் தெரிவிப்பதுடன், வங்கி எழுத்தர் பணி நியமனங்களில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழி அறிந்திருப்பது கட்டாயம் என்பதாக இருந்த அந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8:
அதிகாரிகளுக்கு இந்தி கற்பிக்க
தனி அதிகாரி ஏன்?
ஒன்றிய அரசின் அனைத்துத்துறை அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் ஹிந்தியை ஊக்குவிக்க, அலுவல் மொழி அலுவலர் (OFFICIAL LANGUAGE OFFICER) என அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஹிந்தியைப் புகுத்தக் கூடாது என்ற விதிக்கு மாறாக இந்த நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மாறாக, வட மாநிலத்தவர்கள் அதிகாரிகளாக தமிழ்நாட்டில் பணியாற்றிவரும் நிலையில், அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தமிழை அவர்களுக்கு கற்றுத் தரவும் வங்கி உள்ளிட்ட துறைரீதியான படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இடம் பெற வேண்டிய அவசியம் உள்ள சூழலில், தமிழைப் பயிற்றுவிக்க அலுவல் மொழி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பதுதான் சரியானதும் நியாயமானதும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதுமாகும். ஹிந்திக்கு மாற்றாக, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழி தெரிந்த அலுவல் மொழி அலுவலரை நியமித்திட வேண்டும் என ஒன்றிய அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
தேசிய கல்விக் கொள்கையும் ஹிந்தி திணிப்பும்!
ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறது எனப் பிரதமர் கூறுகிறார். ஆனால், தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்வியை, முடிந்தவரை (as far as possible) 5ஆம் வகுப்புவரை கற்பிக்கலாம் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது (பத்தி 4.11). இது மட்டுமல்ல, கல்விக் கொள்கை முழுவதிலுமே ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், கல்விக் கொள்கை தனியே வகுக்கப்படும் என அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டு முதலமைச்சரையும் இம்மாநாடு வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது.
தீர்மானம் 10:
தமிழ்நாட்டில் ஹிந்தி தெரிந்தவர்களின் ஆதிக்கம்!
ஒன்றிய அரசின் கடைநிலை ஊழியர்களின் தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே நடத்தி அந்தந்த மாநில மக்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதனையும் அகில இந்திய தேர்வாக மாற்றியது ஒன்றிய பிஜேபி அரசு. அஞ்சல் துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியர்கள்கூட தமிழ்நாட்டில் இடம் பிடித்தனர். தமிழ் தேர்வில் அரியானாகாரர்கள் முதல் இரண்டு இடங்களில் அதிக மதிப்பெண் பெற்றனர் என்பது எல்லாம் எத்தகைய மோசடி!
தமிழ்நாட்டில் வடநாட்டுக்காரர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது. 70 இலட்சத்திற்கு மேல் தமிழ்நாட்டு இளைஞர்கள் - வேலைவாய்ப்புக் கிட்டாதவர்கள் - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில், வடநாட்டுக்காரர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புப் பறிபோவது - எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களையும் விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் என்று, தொலைநோக்கோடு இம்மாநாடு எச்சரிக்கிறது. இப்பொழுதே கொலை, கொள்ளைச் சம்பவங்கள் வடநாட்டுக்காரர்களால் பெருகி வருவதையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் இம்மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 11:
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு எல்லாம்
வடமொழிப் பெயர்கள் ஏன்?
ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் வடமொழிப் பெயர்களாக இருப்பது சரியானதல்ல - ஹிந்தி, சமஸ்கிருதம் தெரியாத மாநில மக்களுக்கு ஒன்றிய அரசு எத்தகைய திட்டங்களை அறிவிக்கிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத பரிதாபமான அவல நிலை!
எடுத்துக்காட்டாக,
அடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)
ஆம் ஆத்மி பீமா யோஜனா
இஞ்சியோன் செயல்திட்டம்
யுவா ஷக்தி சம்யோஜனா
நமாமி கங்கே
கிராமாலயா
ஜன்தன், ஆதார் மொபைல் ஜாம்
ராஜ்ய சிசு சுரக்ஷா
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
பிரதான் மந்திரி கிரிஷி யோஜனா
பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி யோஜனா
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா
ஸ்வச் பாரத் இயக்கம்
ஜன்தன் யோஜனா
பிரதான் மந்திரி கரீப்
பிரதான் மந்திரி க்ருஷி கல்யாண் யோஜனா
கிசான் விகாஸ் பத்ரா
கிரிஷி அம்தான் பீமா யோஜனா
பிரதான் மந்திரி க்ருஷி சின்சாய் யோஜனா
பரம்பராகாத் கிருஷி விகாஸ் யோஜனா
முக்தா பாரத்
பண்டித் தீன்தயாள் உபாத்யாய் உன்னத் கிருஷி ஷிக்சா
பிராதான் மந்திரி பசல் பீமா யோஜனா
க்ருஷி விக்யான் கேந்திரா
ராஷ்டிரிய க்ருஷி விகாஸ் யோஜனா
ராஷ்டிரிய கோகுல் யோஜனா
பசுதன் சஞ்சீவனி
சுவஸ்திய ரக்ஷா யோஜனா
மிஷின் மதுமேகா
உடுதே தேஷ்கா ஆம்நாகரீக்
நிர்னாயத் பந்து யோஜனா
ஜீவன் பீமான்
சம்பூர்ணா பீமா கிராமா யோஜனா
தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா
தர்பன்
அந்தியோத்யா அன்ன யோஜனா
கிராமின் சுவாச் சர்வேக்ஷான்
ஹர் கர் ஜல் பூர்த்தி
சுவச்சதான்
கிராமின் க்ருஷி மவுசன் சேவா
சைபர் சுவச்சத்தா கேந்திரா
பிரதான் மந்திரி வய வந்ததான் யோஜனா
ஜனனி சுரக்ஷா யோஜனா
ஜனனி சிசு சுரக்ஷா கார்யாக்ராம்
ராஷ்டிரிய கிஷோர் சுவஸ்திய கார்யாகிராம்
பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோஜனா
இந்திரதனுஷ் யோஜனா
மிஷன் பரிவார் விகாஸ் யோஜனா
பிரதான் மந்திரி சுரக்சித் மந்திரித்வ அபியான்
தீன்தயாள் அந்த்தியோதயா யோஜனா
சர்வ சிக்ஷா அபியான்
பிராஹிக் ஷக்
ராஷ்டிரியா மத்யமிக் சிக்ஷா அபியான்
உச்சத்தார் அவிஷ்கார் அபியான்
ராஷ்டிரிய ஷிக்ஷா அபியான்
இதுபோல ஒன்றிய அரசின் திட்ட அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. இந்தியா முழுமைக்கான இத்திட்டங்களும் - நோக்கங்களும், செயல்களும் ஹிந்தி, சமஸ்கிருதம் தெரியாதவர்கள் அதிகம் வாழும் நாட்டு மக்களுக்கு எப்படித் தெரிய முடியும்? பிரிவினை கூடாது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டாலும், ஒன்றிய அரசின் இத்தகைய பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளாத வகையில் திட்டங்களின் பெயர்களை அறிவிப்பது வேறொரு வகையில் பிரிவினைக்கான செயலே என்று இம்மாநாடு ஒன்றிய அரசுக்கு அறிவித்துக்கொள்கிறது.
அனைவருக்கும் பொதுவான வகையில் திட்டங்களை அறிவிக்கும்போதே அந்தந்த மாநில மக்களுக்கான மொழியில் அறிவிக்க வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12:
தமிழில் பெயர் சூட்டுக!
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நம் நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்றும், தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றும், கோயில்களில் தமிழில் வழிபாடு என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், இப்பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசும், தமது உரிய பங்கைச் செலுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழகம் கடந்த 4ஆம் தேதி நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பல முக்கிய அம்சங்களை அடி நாதமாகக் கொண்டவையாகும்.
(1) இந்தியா ஒரு துணைக் கண்டம் - ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாக்கள் திரும்பத் திரும்ப சொல்லுவது போல ஒரே நாடு அல்ல.
(2) இந்தியா ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமல்ல - இந்தியா என்பது ஹிந்துக்கள் உள்பட பல்வேறு மதங்களுக்கும் - மதச் சார்பற்ற பகுத்தறிவாளர்களுக்கும் சொந்தமான நாடாகும்.
இன்னும் சொல்லப் போனால் ஹிந்து மதத்துக்குள் பல பிரிவுகள் - பிளவுகள் உண்டு; ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதோடு ஹிந்துகளுக்குள் ஒரு பிரிவினரும் இன்னொரு பிரிவினரும் மோதிக் கொள்ளும் நிலையும் உண்டு.
சில நாட்களுக்கு முன்புகூட காஞ்சிபுரத்தில் வைணவர் களுள் வடகலை- தென்கலை பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவு சென்னை உயர்நீதிமன்றம் வரைகூட சென்றது நினைவிருக்கலாம்.
காஞ்சிபுரம் கோவில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா; தென் கலை நாமம் போடுவதா என்ற வழக்கு இந்தியாவையும் தாண்டி இலண்டன் பிரிவிக் கவுன்சில்வரை (Privy Council) சென்றதெல்லாம் உண்டு.
சைவர்கள் ஹிந்துக்கள் அல்லர்; ஹிந்து மதம் வேறு, சைவ மதம் வேறு என்று தமிழ்க் கடல் மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, நாவலர் சோம. சுந்தர பாரதியார் போன்றோர் ஆணி அடித்ததுபோல கூறியுள்ளனர்.
இதற்கு மேலும் முக்கிய கருத்து ஒன்று உண்டு. ஹிந்து மதத்தில் நாத்திகத்திற்கும் இடம் உண்டு என்பதுதான். இன்னும் சொல்லப் போனால் ஹிந்து என்ற பெயரை இம்மதத்துக்குக் கொடுத்தவனே வெள்ளைக்காரன்தான் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டுள்ளார். ("தெய்வத்தின் குரல்" பாகம் 1 பக்கம் 267-268).
இந்த நிலையில் உள்ளவர்கள் ஒரே மதம் - அதுவும் ஹிந்து மதம் என்பதெல்லாம் எவ்வளவுப் பெரிய மோசடி!
இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் கூறுகிறார் ("ஞான கங்கை").
இத்தகைய அடிப்படைவாதம் கொண்ட கட்சி அதிகார பீடத்தில் இருப்பதால் தங்களுடைய கலாச்சாரமே இந்தியாவின் ஒரே கலாச்சாரம் என்று முரட்டுக்காளைபோல முட்டுகிறார்கள்.
இதன் ஆணி வேரான உண்மை என்ன தெரியுமா? சமஸ்கிருதம் என்று சொன்னாலும் சரி. அதன் குட்டியான ஹிந்தி என்று சொன்னாலும் சரி, ஒரே கலாச்சாரம் என்று சொன்னாலும் சரி, ஒரே மதம் என்று சொன்னாலும் சரி இதனுடைய நுட்பமான பொருள் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதுதான். மீண்டும் மனுதர்ம ராஜ்ஜியத்தை உண்டாக்குவதுதான்.
ஹிந்தி எதிர்ப்பு என்பது பார்ப்பனீய - சனாதன எதிர்ப்பு - பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எதிர்ப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை இப்பொழுது மட்டுமல்ல, 1931ஆம் ஆண்டிலேயே நன்னிலத்தில் நடைபெற்ற வட்டார சுயமரியாதை மாநாட்டில் தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.
"பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர, வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நமது மக்கள் படிக்கும்படிச் செய்வது, பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடைப் பரப்பவும், புத்தம் புதிய தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும் உலக மொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே (தாய்மொழிக்கு அடுத்தபடியாக) நமது இளைஞர்கள் கற்க வேண்டும்" என்று இன்றைக்கு 91 ஆண்டுகளுக்கு முன்பே சுயமரியாதை இயக்க மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்றைக்குக்கூட பார்ப்பன ஏடுகளும் - தொலைக்காட்சிகளில் விவாதம் செய்யும் பார்ப்பனர்களும் சுருதி பேதமில்லாமல் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுவதைப் பார்க்க முடிகிறதே!
தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகம் வரை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை பார்ப்பனீயப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் முனைப்பை மேற்கொள்ளும் காரணம் புரிகிறதா? கடந்த 4ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாடு என்பதை இந்த வரிசையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.