சென்னை, ஜூன் 5- ஒன்றிய பாஜக அரசு அமைந்த நாளிலிருந்து நாட்டையே ஹிந்துத்துவா மயப்படுத்தலில் தீவிரம் காட்டிவருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசியல் வடிவம் பூண்டதுதான் பாஜக என்பதை தொடர்ந்து நிரூ பித்து வருகிறது.
மதச்சார்பின்மைக்கு எதிராகவும், அரசமைப்புச்சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அத்துணை உரிமைகளையும் புறந் தள்ளும் போக்குடனும் ஆட்சி, அதிகார ஆணவத்தில் பாஜக அரசு ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்று அனைத்திலும் பன்முகத்தன்மையை சிதைத்து வருகிறது.
அரசு அலுவலகங்களில், பள்ளி, கல்லூரிகளில், அரசுத் திட்டங்களின் பெயர்களில் என அனைத்து துறைகளிலும் இந்தி, சமஸ்கிருதத்திணிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையிலேயே ஒன்றிய பாஜக அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நேற்று (4.6.2022) காலை முதல் நாள் முழுவதும் இந்தி எதிர்ப்பு கருத்தரங்கம், மாநாடு நடைபெற்றது.
நேற்று (4.6.2022) மாலை சென்னை சைதாப்பேட்டை தேரடித் திடலில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் உயிர்நீத்த நடராஜன் - தாளமுத்து நினைவரங்கில் இந்தி எதிர்ப்பு மாநாடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருத்தணி டாக்டர் பன்னீர் செல்வம் அவர்களின் இன உணர்வு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இம்மாநாட்டில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சென்னை மாமன்ற உறுப்பினர் க.சுப்பிரமணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஏழுமலை, சைதை பகுதி தி.மு.க. செயலாளர் மு.கிருஷ்ணமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சைதை தொகுதிச் செயலாளர் மா.ஜேக்கப், தென்சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் சைதை எம்.பி.பாலு (காப்பாளர்), அமைப்பாளர் மு.ந.மதியழகன், துணைத் தலைவர்கள் சி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீராகவன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்குரைஞர் அ.அருள்மொழி
திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மாநாட்டு விளக்கவுரையாற்றினார்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களை விளக்கி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
இம்மாநாட்டில் திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலை வர் வெ.மு.மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தை யன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இறுதியாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.
இரா.முத்தரசன்
மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மோடி அரசு அரசமைப் புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட அரசு, ஆனால் அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
என்னுடைய தாய்மொழி மீது உன்னுடைய மொழியை திணிக்காதே - உங்கள் கனவை எங்கள் மீது திணிக்காதே அது நடக்கவே நடக்காது.
இட்லரை பின்பற்றி ஆட்சியை நடத்தினால் அதில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது, ஒன்றியத்தில் தற்போது மிக மிக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஒன்றிய அரசு அனைத்து மாநில மொழிகளையும் சமமாக கருதி - நிதியையும் சமமாக தரவேண்டும்.
மோடியும், அமித்ஷாவும் அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்:
இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தக் காலத் திலும் நிறுத்தி வைக்கப்படவில்லை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தான் நமக்கு வாள், ஆங்கிலம் கேடயம். ஆங் கிலம் நமக்கு பயன்படுகிறது, இந்தி நம்மை அடிமைப்படுத் துகிறது என்பது அடிப்படையானது.
ஆங்கிலம் தெரிந்து இருப்பதால் பொருளாதாரத்திலும் சமத்துவதிலும் முன்னேறி இருக்கின்றோம் திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது. எனவே திராவிடர் கழகம் தொடங்கி வைத்துள்ள இந்தி போராட்டம் தொடரும் என்றார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிடர் இயக்கப் போர்வாள், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்கள்:
தன்மான இயக்கம், திராவிடர் கழகம் நடத்தும் இம்மாநாட் டில் பேசுவது மகிழ்ச்சி, காங்கிரசில் தந்தை பெரியார் இருந்தபோது - ஒரு மாநாட்டில் இந்தியை படிக்க வேண்டும் என காந்தியார் சொன்னபோது அந்த மேடையிலேயே அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஒன்றிய அரசு இந்தியை - சமஸ்கிருதத்தை வளர்க்க 25,000 ஆசிரியர்களை நியமித்துள்ளது. அனைத்து துறைக ளிலும் இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறார்கள்.கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தியை அறிந்த வர்களுக்கு மட்டுமே பணி வழங்கி வருகிறார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் உயிர்நீத்த நடராசன் - தாளமுத்துவின் நெருப்பு அணையாது!
தமிழர் தலைவர் ஆசிரியருடன் போராட்டக் களத்தில் பங்கேற்க நாங்கள் தொடர்ந்து வருவோம் தமிழ் வாழ்க! இந்தி ஒழிக என முழங்கி இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை எடுத்துரைத்து உரையாற்றினார்.
டி.கே.எஸ்.இளங்கோவன்
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள்:
இந்தி மொழி எந்த நன்மையையும் நமக்கு செய்யாது. இந்தி மொழி பேசாத மாநிலங்கள் எல்லாம் வளர்ந்துள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் சிறப்பு அடையாளம். நாடு முன்னேற அந்தந்த மாநில மக்களின் மொழியை காப்பாற்ற வேண்டும். நமது பண்பாடு சமத்துவ பண்பாடு.
தமிழ் பண்பாட்டை அழிக்க மனுதர்மத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள் இதை நாம் அனுமதித்தால் அடிமை யாகத்தான் இருப்போம்.
உலகத்திலேயே ஒற்றை சமத்துவ சிந்தனை கொண்ட மொழி தமிழ் மொழி தான். எனவே பண்பாட்டை காக்க இந்தியை அனுமதிக்க மாட்டோம் என்று உரையாற்றினார்.
தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசுகையில்:
உரிய நேரத்தில் போராட்டம், மாநாட்டை நடத்தி போராட்ட நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்வது திராவிடர் கழகத்தின் பணி. பெரியார் காலத்தில் இருந்து இந்த போராட்டக் களம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தி திணிப்பு என்பது பார்ப்பன கலாச்சார திணிப்பாகும். அவர்கள் நோக்கம் இந்தியை திணித்து அவர்களின் கலாச்சார பண்பாட்டை திணிப்பது ஆகும்.
இந்தியை நாம் எதிர்க்கிறோம் என்றால் ஆரிய - பார்ப்பன கலாச்சாரத் திணிப்பை எதிர்க்கிறோம் என்று பொருள்.
சமஸ்கிருதம் வளர்க்கப்பட வேண்டும் என்பது பார்ப்பன நலனுக்காத்தான் - திராவிடம் என்பது கருத்தியலின் அடை யாளம் இதை எதிர்ப்பது பார்ப்பன ஆதரவு என்று பொருள்.
பெரியாரை எதிர்ப்பது ஆரியத்திற்கு ஆதரவு என்று பொருள். திராவிடம் என்று சொன்னால் நாங்கள் இந்து மக்கள் அல்ல என்று பொருள். எனவே தமிழர் தலைவருக்கு துணையாக இருப்பது நமது கடமை என்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் இம்மாநாட்டில் வாழ்த்துரை வழங்கி பேசுகையில்:
ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் வடமொழிப் பெயர்களாக இருப்பது சரியானதல்ல. இந்தி, சமஸ்கிருதம் தெரியாத மாநில மக்களுக்கு ஒன்றிய அரசு எத்தகைய திட்டங்களை அறிவிக்கிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத பரிதாபமான நிலை அவல நிலையாக உள்ளது என இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்றும், குறிப்பாக 11ஆவது தீர்மானத்தை வரவேற்றும், ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் மாநில மொழிகளில் வரவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி பேசினார்.
தமிழர் தலைவர்மாநாட்டின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றுகையில்:
சமஸ்கிருத ஆதிக்கம் என்பது எவ்வளவு கொடுமை என்பதை இம்மாநாட்டு மேடையில் பேசியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
அது ஒரு மொழித் திணிப்பு பிரச்சினை மட்டுமல்ல? பண்பாட்டு படையெடுப்பு பிரச்சினையுமாகும்.
திராவிடர் கழகம், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இல்லை என்றால் வணக்கம் என்ற தமிழ் வார்த்தை வருமா? ஆரியம் - திராவிடம் என்பது தத்துவத்தின் அடையாளம் என உரையாற்றினார்.
(தமிழர் தலைவரின் முழு உரை பின்னர் வெளிவரும்).
படம்: 1 இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் திராவிடர் இயக்கப் போர்வாள் வைகோ, தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோருக்கு புத்தகங்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. படம் 2: நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். உடன்: தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாநில அமைப்பு செயலாளர்
வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால் ஆகியோர் உள்ளனர். (சென்னை சைதாப்பேட்டை - 4.6.2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக