அந்நிய மொழி என்பதற்காகவா இந்தியை எதிர்க்கிறோம்? அப்படியானால் ஆங்கிலம்கூடத்தான் அந்நிய மொழி, அதனை ஏன் படிக்கிறோம்? பலா பலனைப் பொறுத்தது அது!
ஏதோ பிஜேபி ஆட்சியில் இந்தியும் சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது என்பதற்காக எதிர்க்கிறோம் என்று தப்புத் தாளம் போட வேண்டாம்.
இன்றைக்கு 96 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியை எதிர்த்துப் போர்க் குரல் கொடுத்தார் புரட்சி நாயகரான தந்தை பெரியார்.
"தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்" என்ற தலைப்பில் அதனை வெளிப்படுத்தினார். ('குடிஅரசு' 7.3.1926).
"இம்மாதிரியாகவே இது சமயமும் இந்தியைப் பொது பாஷையாக்க வேண்டும் என்கிற கவலையுள் ளவர்கள் போல் தேசத்தின் பேரால் ஆங்காங்கு பல பிராமணர்கள் பேசுவதும் அதை சர்க்கார் பள்ளிக்கூடம் முதலிய இடங்களில் கட்டாயப் பாடமாக்க பிரயத்தனப்படுவதும் யார் நன்மைக்கு? இனி கொஞ்சக் காலத்திற்குள் இந்தி பிரச்சாரத்தின் பலனை அனுபவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போல் இருக்கிறது.
பொதுவாக இந்தி என்பது வெளி மாகாணங்களில் பிராமண பிரச்சாரம் செய்யக் கற்பித்துச் செய்யும் வித்தையாகிவிட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டு பாமர ஜனங்கள் அறிவதேயில்லை. இரண்டொருவருக்கு அதன் இரகசியம் தெரிந்தாலும். பிராமணர்களுக்குப் பயந்து கொண்டு தாங்களும் ஒத்துப்பாடி விடுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களை தேசத் துரோகி என்று சொல்லி விடுகிறார்கள்.
இதல்லாமல், நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக் காக எவ்வளவு லட்சம் ரூபாய் செலவாகிறது? அது அவ்வளவும் யாருடைய பணம்? சமஸ்கிருதத் திற்கென்று தனியாய் எவ்வளவோ பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதில் படிக்கின்றவர்கள் எல் லாம் யார்? இதன் உபாத்தியாயர்கள் யார்? பிராமண ரல்லாத உபாத்தியாயரையாவது. பிராமணரல்லாத பிள்ளைகளையாவது இதில் சேர்த்துக் கொள்ளு கிறார்களா? அரசாங்கத்திலாவது சமஸ்கிருதத்திற்கு இருக்கிற யோக்கியதை தமிழுக்கு இருக்கின்றதா? இச்சமஸ்கிருதம் பிராமணரல்லாதார் தாழ்ந்தவர்கள்-சூத்திரர்-பிற்பட்டவர்-அடிமைகள் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றதே தவிர, வேறு எதற்காவது நாட்டிற்காவது உபயோகப்படுகிறதா?."
என்று 96 ஆண்டுகளுக்குமுன் எழுதினாரே தந்தை பெரியார்.
இன்றைக்கும் இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டி மாநாடு கூட்ட வேண்டிய நிலைதானே?
17.7.1948 அன்று சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிலும் தந்தை பெரியார் என்ன கூறினார்?
"வேடிக்கையான ஒரு சம்பவம் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்ததாம். நண்பர் தம் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது வெளி வராந்தாவில் இருந்து மகன் ஏதோ வாந்தி எடுப்பதுபோல் சத்தம் கேட்டு, "அடி! அடி! வெளியே போய்ப் பாரடி, பையன் வாந்தி எடுக்கிறான் போல் இருக்கிறது! அஜீரணமோ என்னமோ!" என்றாராம். ஆமாம், இந்த ரேஷன் காலத்திலே அஜீரணம் வேறு வந்துடுத்தா? என்று சொல்லிக்கொண்டு எழுந்து போய் பையனைப் பார்க்க 'ஏண்டா ஒக்காளம் வருகிறது?' என்று கேட்டாளாம், பையன் ஒன்றுமில்லை அம்மா, இந்தி படிக்கிறேன் என்று சொன்னானாம் அதைக் கேட்டுவிட்டு வந்து கணவனிடம் “இந்தி எழவு பையனை அப்படிச் செய்கிறது” என்றாளாம் மனைவி. அப்படியானால் ஏதாவது கேடு வந்து விடப்போகுது. இனி இந்தி படிக்க வேண்டாமென்று சொல்லிவிடு. அவன் படிப்பு கெட்டுப் போனாலும் பரவாயில்லை. ஏதோ டியூஷனாவது சொல்லிக் கொடுத்து விடலாம் என்றாராம் கணவன். இப்படித்தானாகும் நம் குழந்தைகள் நிலை - கட்டாய இந்தியை இந்நாட்டில் நாம் அனுமதித்து விட்டால்.
இந்தி நம் நாட்டு சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது. நம் நாக்குக்கு ஏற்க முடியாதது. நமக்குத் தேவையற்றது. "இந்தி மனிதர்களை மந்திகளாக்கும்!" என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாக குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். குரங்குகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான் அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. மந்திரியார் நம்மவர் ஆயிற்றே என்று எவ்வளவு காலம் நாம் சகித்துக் கொண்டிருக்க முடியும்? அதிலும் கல்வி இலாகா முடிவுகள் வரவர மிகமிகக் கேவலமாக ஆகிக்கொண்டு போகிறது. தோழர்கள். லட்சுமணசாமி முதலியார் போன்ற அறிஞர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் கல்வி மந்திரியார் அறிஞர்களைக் கலந்து கொண்டு தம் கல்வித் திட்டத்தை அலசிப் பார்ப்பதில்லை; அறிஞர்களைக் கொண்டு எதுவும் தீர்மானம் செய்வதில்லை. சில சமயம் தன் இலாகா அதிகாரிகளுக்கும் கூடத் தெரியாமல் எதேச்சையாக ஜில்லா கல்வி அதிகாரிகளுக்கும் சில சமயம் கலாசாலை அதிகாரிகளுக்கும் மற்றும் கலாசாலை உபாத்தியாயர்களுக்கும் கூட கடிதம் எழுதிவிடுகிறாராம். இதன் பயனாய் ஊழல்கள் மிகவாக மலிந்து விட்டன வாம். ஆகவேதான் வாரத்துக்கொருமுறை பல்டி அடிக்க வேண்டியிருக்கிறதாம்" என்றாரே பெரியார்!
அதே மாநாட்டில் தந்தை பெரியார் மேலும் கூறினார்.
"போராட்டத்தைத் துவக்குவோம். மானமுள்ள மக்களாகப் போராடுவோம். மானத்தோடு போராடி மடிந்தாலும் தவறில்லை. பின் சந்ததியார் மேலும் வீரத்தோடு நாம் விட்டுச் செல்லும் பணியைப் பூர்த்திக்குக் கொண்டுவருவார்கள். திராவிடர்கள் மானத்திற்கும், வீரத் திற்கும் பேர் போனவர்கள். ஆகவே இவற்றைக் கைவிடாதீர். குண்டுபட்டு இறந்தீர்கள் என்றாலும் குண்டு மார்பில் பாய்ந்திருக்கட்டும். முதுகில் பாயும்படி நடந்து கொள்ளாதீர்கள், என்றாயினும் ஒரு நாள் சாகப்போகிறவர்கள் தான் நாம். ஆகவே நல்ல காரியத்திற்காக நம் உயிரை நல்ல முறையில் அர்ப்பணித்துச் சாவோம்.
மந்திரிகள் நம்மவராயிற்றே என்ற நினைப்பை மறந்து விடுங்கள். நம்மவர்கள் மந்திரி பதவியை இழக்க நேரிடுமே என்ற பயத்தையும் விட்டொழியுங்கள். ஒரு ஓமாந்தூராரின் இடமோ, ஒரு அவினாசிபாரின் இடமோ காலியாகுமானால் அந்த இடத்தைப் பார்ப்பனர்களைக் கொண்டு அடைக்க முடியும் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாடு - இன்றுள்ள நிலையில் அது சுலபத்தில் சாத்தியமானதல்ல. ஆகவே, இந்தியை ஒழித்துக் கட்டுவதில் நாம் யாவரும் ஒன்றுபட வேண்டும். இதில் நம் இளைஞர்களுக்கும் பெற்றோர் களுக்கும் பேத உணர்ச்சி ஏற்படக்கூடாது. இந்தி படித் தால் தம் மக்களுக்குக் கேடு என்பதை ஒவ்வொரு பெற் றோரும் உணர்ந்து அதை ஒழிக்க முன்வரவேண்டும். நம்மிடையே உள்ள பேத உணர்ச்சிகளை விட்டொழிக்க வேண்டும். சின்னஞ்சிறு குற்றங்களை மறந்து நேரடியாகப் போராட்டத்தில் வந்து ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும்.
இப்பொழுது நடக்கப்போவது தான் உண்மையான ஆரிய - திராவிடப் போராட்டம். நம் மானத்தைப் பணயம் வைத்து நடத்தும் போராட்டம். இதில் ஏமாந்து போனால் பிறகு திராவிடர்களாக இந் நாட்டில் வாழமுடியாது.
கண்டிப்பாக சூத்திரனாகத்தான் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். சர்க்காருக்கு நல்ல வீம்பு வந்திருக் கிறது. ஆகவே, எளிதில் நமக்கு விட்டுக் கொடுக்கமாட் டார்கள். ஆகவேதான் திரும்பத் திரும்பப் போராட்டத்தி னிடையே அனுபவிக்க வேண்டியிருக்கக்கூடிய கஸ்ட நஷ்டங்களைப்பற்றிக் கூறவேண்டி இருக்கிறது."
அம்மாநாட்டின் முடிவாகக் கூறினார்.
"எங்களுக்கும் வயதாகி விட்டது. நாங்களும் வெற்றிகாண ஆசைப்படுகிறோம். ஆகவே தன்மானத் திராவிடர்காள்! தமிழர்காள்! வெற்றி காணப் போராட்டத்தில் ஈடுபட முன் வாருங்கள். யார் எந்தக் கட்சியில் இருந்தாலும், தன்மானமிருந்தால் தமிழ் காக்க முன் வாருங்கள். "சாவேன் அல்லது வெற்றியோடு மீள்வேன்" என்ற உறுதியோடு முன் வாருங்கள். போராட்டத்தில் வெற்றிக்கு ஆக ஒழிந்துபடவும் தயாராக முடிவு செய்து கொண்டு முன் வாருங்கள். அப்போதுதான் வெற்றி நிச்சயம் கிடைக்கும்" என்று முத்தாய்ப்பாக முழங்கினார். தமது 69ஆம் வயதில் தந்தை பெரியார்.
(69 வயதில் தந்தை பெரியாரின் முழக்கத்தைத்தான் 89 வயதில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி முழங்கும் நிலை நீடிக்கிறது. 74 ஆண்டுகளுக்குப் பிறகும் திராவிடர் கழகம் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தும் நிலை!)
1948இல் நடைபெற்ற அந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரும் முழக்கமிட்டார்.
"இந்நாட்டில் இந்தியைப் புகுத்தி நம்மைக் கெடுக்க, நமது கலாச்சாரத்தை அழிக்க, நமது புத்துணர்ச்சியை ஒழிக்க ஆரியர் கங்கணங் கட்டிக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். எனவேதான் நியாயத்தை மறந்தும், தம் அறிவை ஆசைக்கும், பொறாமைக்கும் அடகு வைத்து விட்டும் அந்நிய அநாகரிக இந்தி மொழியை இத்தமிழ்நாட்டில் புகுத்துகின்றனர்.
இந்தி ஆரிய தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆரிய தர்மம் வர்ணாஸ்ரம தர்மத்தை, ஜாதி வேறுபாடுகளை, ஜாதி உயர்வு தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழர் கலாச்சாரமோ இதற்கு முற்றிலும் மாறுபாடானாது.
அப்படி இருக்க, ஜாதி வேற்றுமைகளையே அடிப்படையாகக் கொண்ட இந்தி மொழியைத் தமிழ்நாட்டில் புகுத்துவதென்றால், இங்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வரும் ஒற்றுமை மனப்பான்மையைக் கெடுக்க ஆரியர்களால் செய்யப்படும் சூழ்ச்சி இது என்று தானே கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் இந்தி வேண்டாமென்றால் சமஸ்கிருதம் படியுங்கள் என்று கூறுவதன் கருத்து இதுதானே! இரண்டும் மக்களுக்கு வேற்றுமை உணர்ச்சிகளை வளர்க்கும் மொழிகள் என்பதுதான் இதற்குக் காரணம். தமிழர்களிடையே தோன்றியுள்ள புத்துணர்ச்சியை பகுத்தறிவு உணர்ச்சியைக் கெடுக்க, நாசமாக்க, தம்மாலியன்ற எல்லா வகையாலும் தொல்லை கொடுக்க முற்பட்டு விட்டனர் என்பதன் அறிகுறிதான் இது" என்று கூறிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் உரைக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா?
தமிழ்க் கடல் இப்படி ஆர்ப்பரித்தது என்றால் தமிழ்த் தென்றல் திரு.வி.க. என்ன கூறியது?
"இவ்வுலகில் அடி படுவதற்கென்றே பிறப்பிக்கப் பட்டவைகள் மூன்றாகும். அவை ஒன்று பெண்கள், இரண்டு சூத்திரர்கள்; மூன்று பறை (முரசு) இவை யாகும். இப்படிப்பட்ட மிக மிக இழி தன்மையான வர்ணா சிரமத்தைக் கொண்ட ஒரு கதைக்காகவா (துளசி தாஸ்ராமாயணம்) இந்தியை இந்நாட்டில் நுழைக்க வேண்டும்" என்று அதே மாநாட்டில் மொழிந்தாரே திரு.வி.க. என்ன கருப்புச் சட்டைக்காரரா?
அறிஞர் அண்ணாவும் அம்மாநாட்டில் பேசினார்."இந்தி நுழைப்பு கலாச்சாரம் படையெடுப்புதான். எனவே இந்த நிலையில் திருக்குறளைப் பாராட்டிப் பேசுவதாலோ, அல்லது இந்தியையும் தமிழையும் ஒப்பிட்டுத் தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாலோ, பயனில்லை. பொன்னையும், பித்தளையையும் எவனா யினும் ஒப்பிட்டுப் பார்ப்பானா? இன்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர். எனவே நமது உயிரைப் பறிக்க வரும் இந்தியை ஒழிக்க முன் வருவதல்லால், இந்தியில் நீதி நூல் இல்லை, கலை இல்லை என்று கூறுவதெல்லாம் சந்தர்ப்பத்திற்கு அவசியமற்றவை" என்றாரே அறிஞர் அண்ணா.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் அம்மாநாட்டில் சிங்கமெனக் கர்ச்சித்தார்.
"இந்தி மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டுமாம். ஏனென்றால் அது இந்நாட்டின் பொது மொழியாம். இந்தி பொது மொழியென்றால் எந்த நாட்டின் பொது மொழி? நாவலன் தீவு என்று ஒரு நாடு இருப்பது உண்மைதான். ஆனால் அதில் இரண்டு நாடுகள் உண்டு. அவைதான் ஒன்று ஆரிய நாடு, திராவிட நாடு என்பனவாகும். இந்தி ஆரிய நாட்டின் பொது மொழியா? திராவிட நாட்டின் பொது மொழியா? இந்தி?" என்ற வரலாற்று ரீதியான வினாக்கணையை எய்தினார் புரட்சிக் கவிஞர்.
இவை எல்லாம் 74 ஆண்டுகளுக்கு முன்பே ஒலிக்கப்பட்ட முரசம்!
இன்றும் தொடர்கிறது. கடந்த 30.4.2022 அன்றும் - ஒரு திங்களுக்கு முன்பேகூட சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் தலைமையில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கருஞ்சட்டைத் தோழர்கள் கைதனார்கள்.
வரும் 4ஆம் தேதி சனியன்று முற்பகல் சென்னை பெரியார் திடலில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம். இந்தி எதிர்ப்புப் போர் கள நாயகர்களுள் ஒருவராக இருந்த இலக்குவனாரின் அருமை மைந்தர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமையில் நடைபெற உள்ளது.
தி.மு.க. மாணவரணி மாநில செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் தொடங்கி வைக்கிறார். பேராசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன், புலவர் பா. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவை உறுப்பினருமான ஆரூர் ஷாநவாஸ், பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முதலியோர் கருத்துரையாற்ற தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றுகிறார்.
மாலையில் சென்னை சைதாப்பேட்டை தேரடி தெருவில் மாலை நேர திறந்த வெளி இந்தி எதிர்ப்பு மாநாடு கழகத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.
மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களின் வாழ்த்துரையுடன் மாநாடு தொடங்குகிறது. திராவிட இயக்கப் போர்வாள் - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் எழுச்சி உரை ஆற்றிட உள்ளனர்.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள் மாநாட்டைப் பல்வகையிலும் சிறப்பாக நடத்திட பம்பரமாகச் சுற்றிச் செயல்பட்டு வருகின்றனர்.
இனமானப் பெரு மக்களே! இந்தியை ஒழிக்க தோள் தட்டித் திரண்டு வாரீர்!
இது ஒரு கலாச்சாரத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு - இன்னொரு வகையில் சொன்னால் ஆரிய - திராவிட எதிர்ப் போராட்டத்தின் கூர்முனை!
தமிழர் தலைவர் அழைக்கிறார் வாரீர்! வாரீர்! வாரீர்!
வடக்குத் திசைக் கலாச்சார இருளை விரட்டுவோம்!
முறியடிப்போம்!! புது முறுக்குடன் திரண்டு வாரீர்! வாரீர்!!
-----+++++--------++++++------+++++-----+++--
சென்னை, ஜூன் 3- ஒன்றிய பாஜக அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ளபடி, சென்னை யில் திராவிடர் கழகம் சார்பில் இந்தி எதிர்ப்பு கருத்தரங்கம், மாநாடு 4.6.2022 அன்று நடைபெறுகிறது. கருத்தரங்கம், மாநாட்டில் அறிஞர்கள், தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
கருத்தரங்கம்
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 4.6.2022 அன்று காலை 10 மணிக்கு இந்தி எதிர்ப்பு கருத்தரங்கம் பேராசிரி யர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமையில் நடைபெறுகிறது. வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரை யாற்றுகிறார்.
கருத்தரங்கில் திமுக மாணவரணி மாநில செயலாளர், காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுபபினர் வழக்குரைஞர் சிவி எம்பி எழிலரசன் தொடக்க உரையாற் றுகிறார்.
‘தேசியக்கல்வியும் மொழித் திணிப் பும்’ எனும் தலைப்பில் விடுதலை சிறுத் தைகள் கட்சி மாநில துணைப்பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ்,
‘1937-19-38 இந்தி எதிர்ப்புப் போராட் டம்’ எனும் தலைப்பில் புலவர் பா.வீரமணி,
‘1948--1955 இந்தி எதிர்ப்புப் போராட் டங்கள்’ எனும் தலைப்பில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுரு கேசன்,
‘ஆர்.எஸ்-எஸ்.சின் கல்வி, மொழிக் கொள்கை’ எனும் தலைப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கருத்தரங்க உரையாற்றுகின்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்தரங்கத்தின் நிறைவுரை ஆற்று கிறார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார்.
திராவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறுகிறார்.
இந்தி எதிர்ப்பு மாநாடு
சென்னை சைதாப்பேட்டை தேர டித் திடலில் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் சிறையில் உயிர்நீத்த நடராசன்-தாளமுத்து (1938) நினைவரங்கில் மாலை 6 மணிக்கு இந்தி எதிர்ப்பு மாநாடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறு கிறது.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்குகிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திராவிடர் இயக்கப்போர்வாள் வைகோ, திமுக செய்தித் தொடர்பாளர் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற மக்களவை உறுபபினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் தோழர் இரா.முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டி யன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மாநாட்டில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளா ளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வழக்கு ரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.,
அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாநில மகளிர் பாசறை செய லாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அமைப் பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ் மற்றும் மாநில, மண் டல, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டின் தொடக்கத்தில் திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் வழங்கும் இனஉணர்வு இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்சென்ன மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன் வர வேற்புரையாற்றுகிறார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி நன்றி கூறுகிறார்.
சென்னையில் நடைபெறுகின்ற இந்தி எதிர்ப்பு மாநாடு குறித்து சென்னை மண்டலம் முழுவதும் சுவரெழுத்துப் பணிகள் மூலம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறுகின்ற இந்தி எதிர்ப்பு கருத்தரங்கம், இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தென்சென்ன, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும் மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் உள் ளிட்ட சென்னை மண்டலத்திலிருந்து கழகத்தின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் கழகம், இளை ஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின் றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக