வெள்ளி, 28 டிசம்பர், 2018

"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள கருஞ்சட்டையினர் ஒன்றாதல் கண்டே!"பெரியார் சிலை மீது கை வைக்கலாம் என்று கருதிய ஆரிய சக்திகளே, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே - இங்கே பார் கருஞ்சட்டைக் கடலை - ஆர்த்தெழும் கடல் அலைகளாகப் - பொங்கி எழுந்த புயல் முகத்தைக் காட்டிய கருஞ்சட்டை பேரணியை - கருஞ்சட்டை மாநாட்டை என்று வரலாற்றுக் கல்வெட்டாய், காலத்தின் குரலாய் மண்ணையும், விண்ணையும் கிழித்து கிழக்குச் சூரியனாம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் கொட்டு முரசமாக கருஞ்சட்டை பேரணியாம் - தமிழின உரிமை மீட்பு மாநாடும் திருச்சியில் பயணித்தது.
கிட்டத்தட்ட 150 அமைப்புகள் இதில் இணைந்து பணியாற்றின. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு என்ற பெயரில் பேரணியும், மாநாடும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான சுவரொட்டிகள் தந்தை பெரியாரின் உருவம் தாங்கி; திராவிடத் தமிழர்களே, தந்தை பெரியாரின் தத்துவச் செழிப்பு மாநாட்டுக்கும், பேரணிக்கும் வருக வருக என்று கட்டியம் கூறிடும் சுவர் எழுத்துகளுக்கும் பஞ்சமில்லை.
23.12.2018 ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்சி ஜே.டி. திரையரங்கம் அருகில் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் என்னும் அலைகளாகப் போர்ப்பாட்டுப் பாடி அணிவகுத்து நின்றனர்.
கருஞ்சட்டைப் பேரணியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களும், பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து அவர்களும் தொடங்கி வைத்தனர்.
பிரிவுகளுக்கு இடம் அளிக்காமல் ஒன்று திரண்டு - கருஞ்சட்டை அமைப்புகள் இணைந்து நின்று கைகோக்கும் தந்தை பெரியாரின் கொள்கைப் பேரணி இது! இது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல. கட்டுப்பாடு காத்து அணிவகுத்துக் கொள்கை முழக்க மிடுவீர் என்று கேட்டுக் கொண்டார்.
திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகளும் தத்தம் இயக்கப் பதாகைகளைத் தாங்கி, இருபால் தோழர்களும் "பார் பெருத்ததால் படை சிறுத்ததோ - படை பெருத்ததால் பார் சிறுத்ததோ" என்று வியக்கும் வண்ணம் கோடையிடி முழக்கங்களிட்டுப் புறப்பட்ட கருஞ்சட்டைச் சேனை - பெரும்பாலும் வாலிபர்களின் அணிவகுப்பு என்றாலும் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்களும்கூட, பெரியார் பிஞ்சுகளும் கூட ஓரளவு இந்தக் காணரும் கருஞ்சட்டைப் பேரணி - மாநாட்டில் திரண்டு வந்தனர்.
குமரி முதல் திருத்தணி வரை தொண்டர்கள் வாகனங்களிலும், பேருந்துகளிலும், இரயில்களிலும் வந்து குவிந்து கொண்டே இருந்தனர்.
எப்படிக் கட்டுப்படுத்தி இந்தக் கருங்கடலைக் கொண்டு சேர்ப்பது என்ற கவலை ஒருங்கிணைப்பா ளர்களுக்கு இருந்தது என்றாலும், அந்தக் கவலைக்கே இடமில்லாமல் 'இது தந்தை பெரியாரின் சேனை! கட்டுப்பாட்டுக்கும், கடமை உணர்வுக்கும் கட்டியம் கூறும் இலட்சியப் பாசறை' என்பதால் கரையை உடைக்காத கட்டுப்பாட்டுக் கடலாக அணிவகுத்துப் புறப்பட்டது. அச்சிட்டுக் கொடுக்கப்பட்ட முழக்கங்களை மட்டும் முழங்கி வந்தனர். திருச்சி நகரமே திரண்டு வந்தது போல சாலையின் இருமருங்கிலும் பொது மக்கள் திரண்டு நின்று பேரணியின் முழக்கங்களை உள்வாங்கி எதிரொலித்தனர்.
பிற்பகல் 3.45 மணிக்கு பேரணி புறப்பட்டது என்றாலும் 5.30 மணி வரை பேரணியின் கடைசிப் பகுதி வரை புறப்பட முடியாத அளவுக்கு அப்படியொரு நீண்ட படை வரிசை!
பேரணியில் ஏதாவது பிரச்சினை வராதா? கட்டுப் பாடு குலையாதா என்று கண்களில் விளக்கெண்ணெய்ப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கழுகுகளுக்குத் தீனி கிடைக்கவில்லை என்பது பேரணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
பேரணியில் தத்தம் கொடிகளோடு முழக்கமிட்டு வந்த தோழர்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தலைமையேற்று சிறப்பாக வழி நடத்தினர் என்பது சிறப்பானது. பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கழகக் கொடி தாங்கி கடைசி வரை நடந்தே வந்தார். பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் நடந்தே வந்தனர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,  திராவிட விடுதலை கழகம் தலைவர் குளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதிய மான், தமிழ்புலிகள் கட்சிகள் நாகை திருவள்ளுவர், தமிழக மக்கள் முன்னணி பொழிலன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க.குணசேகரன் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் - வாலிபர்கள் - தமிழர்களின் வீரவிளை யாட்டுகளை நடத்திக் காட்டிக் கொண்டே வந்தனர். சிலம்பாட்டம், முத்திரை பொறித்த இருபால் தோழர்கள் பங்கேற்ற பறை முழக்கம் காதுகளைக் செவிடாக்கிற்று.


வீரவணக்கம் வீரவணக்கம்
தலைவர் தந்தை பெரியாருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்.

வெல்லட்டும், வெல்லட்டும்
கருஞ்சட்டைப் பேரணி வெல்லட்டும்!

வேரறுப்போம் - வேரறுப்போம்
காவிப் பயங்கரவாதத்தை
வேரறுப்போம் - வேரறுப்போம்!

மீட்டெடுப்போம் - மீட்டெடுப்போம்
தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம்!

சாய்ப்போம் - சாய்ப்போம்
ஜாதியினை சாய்ப்போம்!
காப்போம் காப்போம்
பெண்ணுரிமை காப்போம்!
அனுமதியோம் - அனுமதியோம் ஜாதி ஆணவக் கொலைகளை அனுமதியோம்!

தமிழர் என்பது அடையாளம் ஜாதி, என்பது அவமானம்
ஜாதி பெருமை அவமானம்!
இடமில்லை இடமில்லை
மதவெறிக் காவிகளுக்கு
பெரியார் மண்ணில் இடமில்லை

மண்ணை அழிக்க மீத்தேனா,
மலையை அழிக்க நியூட்ரினோவா?
அனுமதியோம் அனுமதியோம்
தமிழா தமிழா ஒன்றுபடு
ஜாதி சழக்கை வென்றுவிடு.

எங்கள் ஆயுதம் பெரியாரே எங்கள் கேடயம் பெரியாரே!
பார்ப்பனியத்தை விரட்டியடிக்க
ஆதிக்க ஜாதியை ஒழித்துக்கட்ட
பெண்ணடிமை விலங்கொடிக்க
எங்கள் ஆயுதம் பெரியாரே! பெரியாரே!
உள்ளிட்ட முழக்கங்களை மண்ணும் விண்ணும் அதிர முழங்கி வந்தனர்.
பேரணியின் முதல் அணி உழவர் சந்தை வந்தடைய, அதற்குப் பிறகு ஒரு மணி 45 நிமிடம் கடந்துதான் கடைசி அணி உழவர் சந்தையை அடைய முடிந்தது என்றால் பேரணியின் நீட்சியை, எண்ணிக்கையினை, பலத்தை எளிதாக அறிந்து கொள்ளலாமே.
கே.டி. திரையரங்கம் அருகிலிருந்து புறப்பட்ட எழுச்சிமிகு கருஞ்சட்டை பேரணி கரூர் புறவழிச் சாலையிலிருந்து அணிவகுத்து சாலை ரோடு, மாரிஸ் ரோடு, சாஸ்திரி ரோடு ஆகிய நான்கு சாலைகளைக் கடந்து அண்ணா நகர் வழியாக உழவர் சந்தையில் சங்கமமாயிற்று.
முழுப் பேரணியையும் திராவிடர் கழகத் தலைவர் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் மாநாட்டு திடலுக்கு சிறிது தூரத்திற்கு முன்பு உயரமான இடத்தில் நின்றபடி பார்த்தனர்.
பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திருமுருகன் காந்தி, பொழிலன், கோவை கு.இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, பேரா. சுப. வீரபாண்டியன், நாகை திருவள்ளுவன், அரங்க குணசேகரன், இரா.அதியமான், பொள்ளாச்சி உமாபதி, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,  இளைஞரணி செயலாளர் இளந்திரையன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தொழிலாளர் பேரவைத் தலைவர் மோகன், அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், தென் மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன் ராஜா மற்றும் பல்வேறு மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பங்கு ஏற்றனர்.
மாநாட்டு நிகழ்ச்சிதொடர்ந்து உழவர் சந்தையில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
முன்னதாக மகஇக கோவன் கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து  விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் வர வேற்புரையாற்றினார்.  தமிழக மக்கள் முன்னணி தலை வர் பொழிலன் தலைமை தாங்கினார். தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். இலால்குடி முத்துசெழியன், அறிவரசன், க.திருநாவுக் கரசு, குறிச்சி.கபிலன், இரணியன், இரா.இளவழகன், அ.சி.சின்னப்பத்தமிழர், நா.கருணாகரன், கடவூர் ப.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் நோக்க உரையை மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  சிறப்புரையாற்றினார்.
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி தலைவர் வே.ஆனைமுத்து, குளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதியமான்,  முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், டிச.3 இயக்கம் தீபக், புதிய குரல் ஓவியா, சமூகசெயற்பாட்டாளர் சரஸ்வதி, எழுத்தாளர் பாமரன், பேராசிரியர் அ.நீலகண்டன், காவிரி பாதுகாப்பு இயக்கம் முகிலன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், தமிழ்நாடு திராவிடர் கழகம் க.சு.நாகராசன், ஆய்வறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன்,  தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர் சங்க தலைவர் வழக்குரைஞர் பானுமதி, வழக்குரைஞர் கென்னடி,தமிழ்தேச மக்கள் முன்னணி மீ.த.பாண்டியன், சொல்லாய்வு அறிஞர் ப.அருளியார்     உள்ளிட்டோர் உரையாற்றினார். இம்மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க.குணசேகரன் பேசினார்.
ஜாதி மறுப்பு திருமணம்

இம்மாநாட்டில் மணமக்கள் செ.இனியன் - ஆ.சாரதா, சா.வசந்தி - சு.முத்துகுமார்,  பா.ஆனந்தராஜ் - க.பிரீத்தி ஆகிய மூன்று ஜாதி மறுப்பு திருமணங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்.
கலந்து கொண்டோர்

இம்மாநாட்டில்   திரைப்பட இயக்குநர் கரு.பழனியப் பன், திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தி.க. பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னரெஸ் பெரியார், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் திராவிடர் கழகம், வழக்குரைஞர் கென்னடி,  உள்ளிட்ட 200 அமைப் புகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், நிர்வாகிகள் இலட்சக்கணக்கில் கலந்து கொண்டனர்.  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கே.எம்.செரீப், தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார  செயலாளர் சினீ.விடுதலைஅரசு உள்ளிட்டோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர்.
நிறைவாக தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன் நன்றி கூறினார்.

திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணி நிறைவு விழாவில், மணமக்கள் செ.இனியன் - ஆ.சாரதா, சா.வசந்தி - சு.முத்துகுமார்,  பா.ஆனந்தராஜ் - க.பிரீத்தி ஆகிய மூன்று ஜாதி மறுப்புத் திருமணங்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன் கோவை இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி, மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், அதியமான், கரு.பழனியப்பன், கோபி நயினார் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் உள்ளனர் (23.12.2018).
- விடுதலை நாளேடு, 24.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக