செவ்வாய், 25 டிசம்பர், 2018

சைதாப்பேட்டை தேரடி தெருவில்தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 

அய்.நா. மனித உரிமையும் - தந்தை பெரியாரின் சுயமரியாதையும் பொதுவுடைமையாளர்கள் தந்தை' என்று சொன்னது பெரியாரை மட்டும்தான்!
கவிஞர் கனிமொழி எம்.பி.,

தோழர் ஆர்.என்.கே.சென்னை, டிச.25  தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி தெருவில் நேற்று (24.12.2018) மாலை திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் எழுச்சி இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மாலை 5 மணிமுதல் இரவு 7 மணிவரை கருத்து மணம் வீசும் இயக்கப் பாடல்களை மக்கள் வரவேற்புக்கிடையே பாடிக்கொண்டிருந்தார். மாநில மாணவர் கழக இணை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மையும் இடை இடையே பாடினார்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.
வண்ண வண்ண சுவரொட்டிகள் இரவைப் பகலாக்கும் ஒளிவிளக்குகளுக்கு இடையே மேடையின் எடுப்பான தோற்றம் மேலும் அழகூட்டியது.
நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மேனாள் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சைதை எம்.பி.பாலு தலைமை வகித்தார். அவர் தனது உரையில், இதே தேரடியில் பலமுறை தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பொதுக்கூட்டம் நடத்தியதையும், தந்தை பெரியாருக்கு வீர வாள் கொடுத்ததையும், இரண்டு முறை மாநாடுகள் நடத்தியதையும் பசுமையாக நினைவு கூர்ந்தார்.
டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட நிலையில், அதனைக் கண்டித்து இதே இடத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பங்கு கொண்டதையும்  பொருத்தமாக நினைவூட்டினார்.
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி தனது சில நிமிட உரையில் பெரியார் சிலையை அவமதித்தால் நாடெங்கும் பெரியார் சிலை தோன்றும் என்று குறிப்பிட்டார்.
சைதை தி.மு.க. பிரமுகர் குணசேகரன் தன் உரையில் சைதாப்பேட்டை என்றால், திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லுவார்கள். தந்தை பெரியாரை யார் யாரோ விமர்சிக்கிறார்கள். அப்படி விமர்சிப்பவர்கள்கூட ஒரு வகையில் தந்தை பெரியாரால் பயன்பெற்றவராகவே இருப்பர். ஒரு பெரியார் சிலை உடைக்கப்பட்டால், ஓராயிரம் சிலை உருவாகும் என்றும் எச்சரித்தார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச் சியை எடுத்துக் கூறினார். குறிப்பாக, ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இதன் பின் விளைவுகளை விவரித்தார்.
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தன்னுரையில், ஒரு மனிதன் அரசு நிலத்தில் ஒரு குடிசை போட்டால் 24 மணிநேரத்தில் பிய்த்து எறியப்பட்டுவிடும். ஆனால், அரசுக்குச் சொந்தமான ஓரிடத்தில் ஒரு கல்லை நடலாம்; கொஞ்ச நாள்களில் அது கோவிலாகிக் கும்பாபிஷேகம் நடக்கும். அரசு நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளாது.
இப்பொழுது மாணவர்களுக்குத் தேர்வு நடக்கும் காலம். கோவில்களில் விடியற்காலை முதலே பக்திப் பாடல்கள், அய்யப்பப் பஜனைப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதைப்பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
பொதுவாக, பொதுமக்களுக்குத் தொல்லை தரும் இத்தகைய சட்ட ஒழுங்கு மீறல்களை தட்டிக் கேட்பது திராவிடர் கழகம் மட்டும்தான் என்று குறிப்பிட்டார்.
கவிஞர் கனிமொழி எம்.பி.,

தி.மு.க. மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. குழுவின் தலைவருமான கவிஞர் கனிமொழி அவர்கள் தனது உரையில் கூறியதாவது:
தந்தை பெரியார் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்திற்குமான ஒரே தலைவர் - இரட்சகர் ஆவார்.
தந்தை பெரியார்பற்றி தவறான புரிதல்களும், பிரச்சாரங்களும் நடைபெறுவதை வேதனையுடன் குறிப்பிட்டு, அதன் உண்மை நிலையை விளக்கினார்.
பிறப்பால் பேதம் கூடாது என்றார். ஜாதி அடிப்படையில் நிலவும் சமூக அமைப்பு முறை மாற்றப்படவேண்டும் என்றார். அது எப்படி மற்றவர்களை பகைப்பதாக ஆகும்?
கடவுளை ஒப்புக்கொள்ளாத, நம்பாத தந்தை பெரியார், கலைஞர், ஆசிரியர் ஆகியோர் கோவிலுக்குச் செல்வதில்லை.
அதேநேரத்தில் அதில் நம்பிக்கையுள்ள மக்களுக்காக தந்தை பெரியார் குரல் கொடுக்கவில்லையா? திராவிடர் கழகமும், தி.மு.க.வும் குரல் கொடுக்கவில்லையா? உண்மையைச் சொல்லப்போனால், கோவிலுக்குச் செல்லக் கூடியவர்களின் உரிமைகளுக்கும்கூடக் குரல் கொடுத்தவர்தான் தந்தை பெரியார்.
இந்தியா முழுவதும் எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டைத் தாண்டி விட்டால் பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டம் தொங்கிக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் அந்த நிலை கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஜாதிப் பட்டம் போடுவதை அவமானகரமாக வெட்கமாகக் கருதும் மனநிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இந்த உணர்வை ஊட்டியவர் தந்தை பெரியார்தானே!
ஜாதிபற்றிய கவிஞர் கனிமொழியின் உரையில் ஜாதியம் துறப்பதுபற்றியது முக்கியமானதாகும்.
1929 பிப்ரவரியில் செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே பெயருக்குப் பின்னால் ஒட்டியிருக்கும் ஜாதிப் பட்டத்தைத் துறப்பது என்ற தீர்மானத்தை இணைத்துப் பார்க்கவேண்டும். ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார் அவர்கள் தனது நாடார் பட்டத்தையும், சிவகங்கை இராமச்சந்திரனார் தனது சேர்வை பட்டத்தினையும் மற்றும் பலரும் அம்மாநாட்டில் ஜாதிப் பட்டத்தைத் துறந்ததை இதில் இணைத்துப் பார்க்கவேண்டும்.


தந்தை பெரியாரோ அதற்கு ஈராண்டுகளுக்கு முன்னரே 1927 ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்னும் தனது ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்ததும் இந்த இடத்திற்குப் பொருத்தமானதே.
18.12.1927 குடிஅரசு' இதழ் வரை நாயக்கர் பட்டம் தொடர்ந்தது. 25.12.1927 குடிஅரசு' இதழில்தான் முதன்முதலாக ஈ.வெ.ராமசாமி என்று பெயர் வெளிவந்தது. ஒரு முக்கியமான தகவல் இதோ:-
ஈராண்டுக்கு முன்னர் உ.பி.யில் லக்னோவில் அகில இந்திய அளவில் டாக்டர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சி முடிந்து அவரவர்களும் திரும்ப இருந்த நேரத்தில், அந்த வளாகத்துக்கான மக்கள் நலத் தொடர்பு அதிகாரி ஒரு வினாவை எழுப்பினார். இந்தியாவின்பல மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்திருக்கும் டாக்டர்கள் தங்கள் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டத்தை வைத்துள்ளனர். தமிழ்நாட்டைத் தவிர!  இது ஏன் என்ற கேள்வியை எழுப்பியபோது, சென்னையிலிருந்து சென்றிருந்த ஒரு டாக்டர் பளிச்சென்று சொன்ன பதில், இந்த இடத்தில் முக்கியமானது.
"எங்கள் நாட்டில் ஒரு தலைவர் இருந்தார். அவர் எங்களுக்குச் சொன்னதெல்லாம் பெயருக்குப் பின்னால் படித்த படிப்பின் பட்டம் இருக்க வேண்டுமே தவிர ஜாதிப் பட்டம் இருக்கக்கூடாது'' என்று சொல்லியிருக்கிறார்'' என்று பதில் சொன்னபோது, ஓ அந்த ராமசாமி நாயக்கரா?' என்றாராம் அந்த அதிகாரி.
அப்பொழுது சென்னை டாக்டர், நாயக்கர் என்பது ஜாதிப் ட்டம். அவர் அதனை ஏற்றுக்கொள்வதில்லை'' என்றாராம் கவிஞர் கனிமொழி சொன்னது சரியானதுதானே!
அத்தகு தமிழ்நாட்டில் ஜாதி உணர்வைவூட்டும் முயற்சி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அதற்குத் தூபம் போடுகிறது என்று குறிப்பிட்ட கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள், அறிவியல் கண்டுபிடித்த ஒன்றை மிக முக்கியமாகக் குறிப்பிட்டார். டி.என்.ஏ. என்கிற மரபணு பாரம்பரியத் தன்மையை அறியக்கூடிய விஞ்ஞானம்.
அதன்மூலம் ஒரு இனம் - அதன் முந்தைய நிலை - கலப்பு - இவுற்றை எல்லாம் வெளிப்படுத்தி விடுகிறது - என்னைக் கேட்டால், ஜாதியை உயர்த்திப் பிடிக்கும்  இந்த ஜாதித் தலைவர்களின் டி.என்.ஏ.யை அறியவேண்டும். அப்பொழுது தெரியும் இவர்கள் யார்? இவர்களின் முன்னோர் யார்? எந்தக் கலப்பு என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே என்று அவர் சொன்னபொழுது பலத்த கரவொலி.
ஜாதி என்பது ஒரு மாயை. அதனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இதனை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார் என்று குறிப்பிட்ட கனிமொழி அவர்கள், தந்தை பெரியார் தன் வலியை உணர்வதுபோல, மற்றவர்களின் வலியையும் உணரவேண்டும் என்பார்.
அய்.நா. மனித உரிமைகள்பற்றி பிரகடனப்படுத்துகிறது. அதையேதான் தந்தை பெரியாரும் கேட்கிறார். மனித உரிமைக் கோட்பாட்டுக்கு ஜாதி எதிரானது அல்லவா என்று கேட்ட தந்தை பெரியார், மனிதனுக்குத் தேவை சுயமரியாதை' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டதை தி.மு.க. மகளிரணி செயலாளர் அழுத்தமாகவே பதிவு செய்தார்.
இன்று நாட்டில் நிலவும் அரசியலைக் குறிப்பிட்ட அவர், அதனை வரிசைப்படுத்தினார்.
என் மொழியை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்; என் கலாச்சாரத்தை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் உரையாடலுக்கு இடமில்லை என்று சொல்லுகிற ஒரே எதேச்சதிகாரத்தை அரங்கேற்றத் துடிப்பவர்களை அடையாளங் காட்டினார்.
எனக்கு இந்தக் கூட்டத்தில் பெரியார் சிலையை ஆசிரியர் வழங்கியபோது, தூரத்தில் கோவிலிலிருந்து நமசிவாய' என்று கூறும் ஒலி சத்தம் இங்கே கேட்கிறது.
இந்த ஜனநாயக உரிமை நல்லிணக்கம் நம்மிடையே இருக்கவேண்டும்.
இன்னொரு கொடுமை பாலின உரிமைபற்றியது. சபரிமலைக் கோவிலில் ஆண் போகலாம்; பெண் போகக்கூடாது. ஏன் போகக்கூடாது? என்ன காரணம்? ஏனிந்த வேறுபாடு?
இந்த நூற்றாண்டில் பெண்கள் குறிப்பிட்ட கோவிலுக்குள் போகக்கூடாது என்று ஓர் ஆட்சி சொல்லுவது வெட்கக்கேடு என்று உரத்த முறையில் குறிப்பிட்டார்.
பெண்களின் வாக்கு மட்டும் வேண்டும் - ஆனால், கோவிலுக்குச் செல்லும் உரிமை மட்டும் அவர்களுக்குக் கூடாதா?
பி.ஜே.பி.யின் 2014 தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது? 33 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பேசுகிறது. ஆட்சியே முடியப் போகிறது - இதுவரை அதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை.
நமது பண்பாட்டை, மொழியை, கருத்துச் சுதந்திரத்தை மாநில உரிமைகளை நசுக்கும் ஓர் ஆட்சி இந்தியாவில் இருக்கிறது.
இதிலிருந்து நாம் மீள பெரியார் வழியே நமக்குத் துணை. அவர் வழியை நாம் பின்பற்றி நடக்கவேண்டும். மனிதனை மனிதன் மதிக்கும் தன்மையும், சுயமரியாதையும், பகுத்தறிவும் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம் - தந்தை பெரியார் அவர்களின் இந்த நினைவு நாளில் அதற்கான உறுதிமொழியை எடுப்போம் என்று கூறினார்.
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுதந்தை பெரியார் நினைவு நாளில் நூல் வெளியீட்டு விழா...

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் (சி.பி.அய்.) தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் தன் உரையில், மத்தியப் பி.ஜே.பி. ஆட்சியில் சாமியார்களின் கொழுத்த ஆட்டம் தலைவிரித்தாடுகிறது என்றார்.
ராம்தேவ் என்கிற சாமியார்பற்றி நான்கு ஆண்டுகளுக்குமுன் யாருக்கும் தெரியாது. பதஞ்சலி' என்னும் பெயரில் பல பொருள்களின் விற்பனையாளராக மாறியிருக்கிறார். அவர் கொடுக்கும் அந்த மருந்தைச் சாப்பிட்டால், முதியவர்களும் துள்ளி ஓடுவார்களாம். அந்த ஆசாமிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமாம் - இந்த பி.ஜே.பி. ஆட்சியில்.
வாழும் கலை சிறீசிறீ ரவிசங்கர் என்ற சாமியார் சர்வதேச ஃபிராடு.
இன்னொரு சாமியார் ஜக்கி வாசுதேவ் என்பவர். யானை செல்லும் இடத்தையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பவர். அவர்மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார் என்றால், நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்ற வினாவை எழுப்பினார் தோழர் ஆர்.என்.கே.
மத்திய பி.ஜே.பி. அரசின் அலங்கோலத்தையும் அலசி எடுத்தார். ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்றார்களே, அது நடந்துள்ளதா? நீட்' தேர்வை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில், நீதிபதிகள் தேர்வு அகில இந்திய அளவில் நடக்குமாம். அதனை நம் தாய்மொழியில் எழுதக்கூடாதாம்! அதன் விளைவு என்ன? வெறும் இந்தி தெரிந்தவர்கள் எல்லாம் நீதிபதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார்கள்.
இந்து மதத்தின் பெயரால் ஆட்சி என்பவர்கள், பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் எப்படி ஒற்றை ஆட்சியைக் கொண்டு வர முடியும்? என்ற வினாவை வெகு சரியாகவே எழுப்பினார் தோழர் ஆர்.என்.கே.
இந்த நாட்டிலே ஜாதி இருக்கிறது, மதம் இருக்கிறது, கடவுள் நம்பிக்கை இருக்கிறது - ஆனால், மனிதன் இல்லையே என்று ஆர்.என்.கே. அவர்கள் யதார்த்தமாகக் குறிப்பிட்டபோது பலத்த வரவேற்பு!
தமிழ்நாட்டையும், கேரளாவையும் வேறு கண்ணோட்டத்தில் மத்திய அரசு பார்க்கிறது என்றார் ஆர்.என்.கே. அவர்கள்.
என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலை எடுக்க வாய்ப்பு இல்லை என்பதால், கடும் புயலால் பெரும் இழப்புக்கு ஆளான தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் வார்த்தையைக் கூறக் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு மனம் இல்லை.
அதேபோல, கேரளாவில் தாமரை மலர முடியாது என்று உறுதியாகத் தெரிந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் போகக்கூடாது என்று கூறி அங்கே அரசியல் விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார் என்று மிகச் சரியாகவே சொன்னார்.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் பெரும்பாலான தமிழ்நாட்டுக் கோவில்களை முன்பு இருந்ததுபோல, தனியாரிடம் கொண்டு போக ஒரு வேலை நடக்கிறது.
கோவில் சிலை திருட்டு என்ற பிரச்சாரம் எல்லாம் இதன் பின்னணியில்தானோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது என்று தோழர் ஆர்.என்.கே. அவர்கள் இந்துக் கோவில் நிலை  எப்படி இருக்கிறது என்பதைப் படம் பிடித்தார்.
கோவிலுக்குள் நுழையும்போதே செருப்பை வெளியில் விடவேண்டும் - அதற்கும் காசு; கோவிலில் அர்ச்சனைச் செய்வதற்கும் பணம் - இவ்வளவையும் தந்துவிட்டு, சாமி கும்பிடச் சென்றால், அங்குக் கடவுளைக் காணவில்லை - திருடுப் போய்விட்டதாம் என்று ஆர்.என்.கே. அவர்கள் சொன்னபொழுது, ஒரே கைதட்டல், சிரிப்பொலி!
இவற்றை எல்லாம் விலாவாரியாகக் குறிப்பிட்ட அவர், தந்தை பெரியாரின் தொண்டு குறித்து மிக உருக்கமாகவே பேசினார்.
பொதுவுடைமைவாதிகளான நாங்களே ஒரே ஒருவரைத்தான் தந்தை என்று சொல்லுகிறோம். அவர்தான் தந்தை பெரியார். வேறு யாரையும் நாங்கள் அப்படிச் சொல்லுவதில்லை என்று சொன்னபொழுது பலத்த கரவொலி.
தந்தை பெரியார் 45 ஆம் ஆண்டு நினைவு - ஒரு நல்ல நம்பிக்கையோடு பிறந்திருக்கிறது. திருச்சியில் கடந்த ஞாயிறு அன்று கூடிய கருஞ்சட்டை இளைஞர்களின் சங்கமம்தான் அது. நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் பெரியார் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைந்து மதவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. எங்களைப் போன்ற முதியவர்களுக்குப் பெருமையாகவும், நல்ல நம்பிக்கையைத் தருவதாகவும் இருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
(நாளை தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு 94 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவருக்கு ஆடை போர்த்தி, பெரியார் சிலையையும் வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்).
தொகுப்பு: மின்சாரம்

பேதமில்லாப் பெருவாழ்வே தந்தை பெரியார் தத்துவம்! அதனை நிறைவேற்ற உறுதிகொள்வோம்

(சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையின் ஒளிமுத்துகள்)
தந்தை பெரியார் தொண்டினால் பார்ப்பனர்கள் கூடப் பலன் பெற்றுள்ளனர். கணவன் இறந்தால், பார்ப்பனர் வீட்டுப் பெண்கள் மொட்டை அடித்து வெள்ளைச் சீலை கொடுத்து மூலையில் உட்கார வைப்பார்கள். அந்த நிலை இன்று உண்டா? இந்த மாற்றத்துக்கும் காரணம் பெரியார்தானே!
***

ஆரியர்கள் இந்தியாவுக்கு வரும்போது பெண்களை அழைத்து வரவில்லை; ஆனால், மனுதர்மத்தை மறக்காமல் கொண்டு வந்தனர். அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியாரின் இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்.
கோவிலுக்குப் போகாதே என்று சொல்லுகின்ற நாங்கள், சபரிமலையில் பெண்கள் கோவிலுக்குள் போகவேண்டும் என்கிறோம். கோவிலுக்கு வாருங்கள் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பார்ப்பனர்கள், பெண்களே கோவிலுக்குப் போகாதீர்கள் என்கிறார்கள். இதற்குள்ளிருக்கும் வேறுபாட்டைப் புரிந்துகொள்வீர்.
***

பசு பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினால், எருமை மாடுகள் பாதுகாப்பு இயக்கத்தை நடத்த வேண்டி யிருக்கும். பசுவை விட எருமைதான் அதிக பால் கொடுக்கிறது.
***

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்கிறார்கள். 1924 ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சி ஆட்சியிலே அரசு ஆணை என்ன தெரியுமா?
எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனித னாய் இருந்தாலும், நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவை களில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.
திராவிடத்தால் யாரும் வீழ்ந்தது கிடையாது - எழுந்ததுதான் வரலாறு.
***

பெண்களுக்கு வாக்குரிமை என்பது இந்தியா விலேயே சென்னை மாநிலத்தில் கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சியில்தான்.
***

முற்போக்காளர்களைக் கொலை செய்வது, மதக் கலவரங்களைத் தூண்டுவது என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸில் எட்டு அமைப்புகள் உள்ளன (Shadow Army).
***

ஆர்.எஸ்.எசை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான மூஞ்சே அந்தக் காலகட்டத்திலேயே முசோலினியைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று, அதேபோல, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டார்.
***

இராணுவப் பயிற்சி நிறுவனங்களை நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். மாலேகான் குண்டுவெடிப்பில் பயன் படுத்தப்பட்ட வெடிமருந்து என்பது இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய ஒன்று. இதனை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தியது என்றால், இராணு வத்தில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வெடிமருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்படி கிடைத்தது? இராணுவ அதிகாரியாக இருந்த பிரசாந்த் புரோகித்து தான் இராணுவப் பயிற்சி நிறுவனத்தை நடத்தக் கூடியவர் என்பதிலிருந்து இதன் இரகசியத்தைப் புரிந்துகொள்ளலாம்.
***

கருப்புச் சட்டை என்பது போராட்டத்தின் சின்னமாகி இருக்கிறது. எந்தக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தயாராக வைத்துக் கொண்டுள்ளனர். நீதி சொல்லும் இடத்தில் இருக்கும் நீதிபதியும் கருப்புச்சட்டைதான் அணிகிறார்!
***

திருச்சியில் கடந்த ஞாயிறன்று கூடிய கருஞ்சட்டைப் பேரணி - மாநாடு இந்துத்துவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை. நாட்டில் நடப்பது இனப்போராட்டமே. நாங்கள் பதவிக்குப் போகமாட்டோம் - ஆனால், அந்த இடத்திற்கு யார் போகவேண்டும் என்று நிரப்பந்திக்கும் சக்தி எங்களுடையது.
***

மதவாத பார்ப்பனிய சக்திகளை அனுமதிக்க முடி யாது - கூடாது - தந்தை பெரியார் மண்ணில் அதனைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். உதயசூரியன் இங்கே உதிக்கும்போது அந்தக் காரிருள் மறையும் என்பதில் அய்யமில்லை.
***

ரத்த தானம் கொடுக்கும்போதும், உடல் உறுப்புகள் கொடையளிக்கும்போதும் வராத ஜாதி, மற்ற விடயங்களில் மட்டும் எங்கிருந்து குதிக்கிறது.
***

மதம் மனிதனைப் பிரிக்கிறது - ஜாதி மனிதனைப் பிரிக்கிறது - கடவுள்கள் மனிதனைப் பிரிக்கின்றன. ஆனால், அனைவரையும் இணைக்கக்கூடிய தத்துவம் தான் தந்தை பெரியார்.
***

ஜாதியற்ற பேதமில்லாப் பெருவாழ்வுதான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைத் தத்துவம்! அதை சமைப்பதே நமது கடன். அந்த உறுதிமொழியை தந்தை பெரியார் நினைவு நாளில் மேற்கொள்வோம்!
***

தந்தை பெரியாரின் நினைவு நாள் பொதுக் கூட்டத்தினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கவிஞர் கனிமொழிக்கு ஆசிரியர் பாராட்டும் - விருதும்!
கவிஞர் கனிமொழி நம் குடும்பத்துச் செல்வம். சிறந்த நாடாளுமன்றவாதி என்று அவருக்குக் கிடைக்கப் பெற்ற விருது தாய்க்கழகமான திராவிடர் கழகத்துக்கும் பெருமையாகும். எங்கள் மாணவர் அவர். ஆசிரியரை மிஞ்சக்கூடிய அளவுக்கு மாணவர் வளர்ச்சி அடைவது அந்த ஆசிரியருக்குப் பெருமையே!
இந்த விருதின்மூலம் தி.மு.க.வுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பகுத்தறிவாளர் கவிஞர் கனிமொழி என்று கூறி, அய்யா - அம்மா உருவம் பொறித்த நினைவுப் பரிசினை பலத்த கரவொலிக்கிடையே கவிஞர் கனிமொழிக்கு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சால்வை போர்த்தி தந்தை பெரியார் சிலையையும் வழங்கி மகிழ்ந்தார்.
-  விடுதலை நாளேடு, 25.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக