வெள்ளி, 28 டிசம்பர், 2018

திருச்சி கருஞ்சட்டை - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


* கோயில்களில் தமிழில் வழிபாடு


*ஊர்ப் பெயர்கள் தமிழில் மாற்றம்

* தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருக

* கையால் மலம் அள்ளும் முறைக்கு முடிவு கட்டுக!

*கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக!

* 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்க!

ஜாதி, இன, அதிகார, ஆதிக்க, நிலையை முறியடிக்க தந்தை பெரியாரின் இறுதி உரையை மனதிற் கொள்வோம்!


திருச்சி கருஞ்சட்டை - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்




திருச்சி, டிச. 24- ஒற்றைப் பண்பாடு - ஒற்றை அடையாளம் எனும் ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பனீய சக்திகளின் திணிப்பை முறியடிப்போம் என்றும், ஜாதி - இன - அதிகார - ஆதிக்க நிலைகளை வீழ்த்திட தந்தை பெரியாரின் இறுதி உரையை மனதிற்கொண்டு செயல்படுவோம் என்பது உட்பட (இரங்கல் தீர்மானத்தையும் சேர்த்து) 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்கத்தின் சார்பில் எழுச்சியுடன் நடத்தப்பட்ட கருஞ்சட்டை மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வீரவணக்கத் தீர்மானங்கள்:


1) தாய்மொழி, இன, நாட்டுரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும், 1938-1965 மொழிப் போராட்டங் களில் உயிரீந்த நடராசன், தாளமுத்து, அரங்கநாதன், சிவ கங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற மொழிப் போராளியர்களுக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக்களங்களில் இதுநாள்வரை உயிர்நீத்த கீழ்வெண்மணியின் 44 தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட் டத்தில் உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஈகியர்களுக்கும், பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராக மக்கள் நேயத்தோடுப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும் பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.

2) தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராகப் போராடி அம் மதவெறியர்களாலே படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள், அறிஞர் கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர்கள், வெகு மக்கள் என அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

3) தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தம் இன்னு யிர் ஈந்த எண்ணற்ற போராளியர்களுக்கும், ஈகம் செய்திருக் கிற தமிழீழ மக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிர்நீத்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல்ரகூப், முத்துக் குமார், செங்கொடி உள்ளிட்ட ஈகியர் அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

கொள்கைத் தீர்மானங்கள் :


4) ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறி கொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் அடக் கப்பட்டுள்ள பல்வேறு மொழித்தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக்கிறது. இந் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசிய இன அடையாள உரிமையின்கீழ்த் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

5) மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர் களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆளுநர் என்கிற அதி கார வடிவம் இன்றும் தொடர்ந்து கொண்டு மொழித் தேசங் களான மாநிலங்களை அடக்கி ஆள்கிற நடைமுறையை இக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே ஆளுநர் என்போர் மாநிலங்களுக்குத் தேவையில்லை என இம் மாநாடு தீர்மானித்து அதை எதிர்க்கிறது.

6) தமிழ்நாட்டின் பண்பாட்டையும், வரலாற்றையும் முழு மையாய் அழித்துப் பார்ப்பனியப் பண்பாட்டை வரலாற்றைத் திணிக்கிற முயற்சியில் வன்முறைகளைத் தூண்டிப் பல படுகொலைகளையும் நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் இயங்கத் தமிழக அரசு தடை செய்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

7) தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டுவதான தமிழக அரசின் அண்மை அறிவிப்பை இம்மாநாடு வரவேற்கிறது. அந்த அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்துவதோடு, எஞ்சியுள்ள எல்லா ஊர்ப் பெயர்களையும் முழுமையாகத் தமிழில் மாற்றிட வேண்டும் என்றும், தமிழ்ப் பெயரில்லாத இந்திய, தமிழக அரசுகளின் திட்டப் பெயர்கள், கோயில்கள் மற்றும் நிறுவனப் பெயர்கள் அனைத்தையும் தமிழிலேயே அமைத்திட வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

8) தமிழ்நாட்டின் கீழடி உள்ளிட்ட பழஞ்சிறப்புகளைக் காக்கும் வகையில், தமிழகத்தொல்லியல் பொருள்களை, வரலாற்று இடங்களை மிகுந்த அக்கறையோடு தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பதோடு தமிழ்நாட்டில் இயங்கும் தொல்லியல் ஆய்வுத்துறை என்பது தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அதற்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி மீட்க வேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9) தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் சாதி வெறியர்களை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அப்படியானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஆணவப் படு கொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் அதற்கென அதுகுறித்த உயர்நீதி மன்ற தீர்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் தனிச் சிறப்புத் திட்டத்தின் வழி கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்திட வேண் டும் என்றும், அவர்கள் சாதி சமயமற்றவர்கள் என்று பதிந்து கொள்கிற வகையில் அரசு ஆவன செய்ய வேண்டும் என் றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

10) தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் அனைத்திலும் தமிழில் மட்டுமே வழிபாடு இருக்க வேண்டும் என்றும், பிற மொழியினரின் வேண்டுகைக்கு வேண்டுமானால் அவர்களுக்கென அவர்கள் மொழியில் வழிபாடு செய்து கொள்ள வழி அமைக்கலாம் என்றும் வலியுறுத்துவதோடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

11) அறிவியல் பெரிய அளவில் முன்னேறியிருக்கிற இக் காலத்தில் மலக்குழிக்குள் இறங்குவதும், கையால் மலம் அள்ளுவதுமான பணிகளில் மனிதர்களே ஈடுபடும் நிலைக்கு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் கல்வி, வேலை வாய்ப்புகள் இட ஒதுக்கீட்டு அடிப் படையில் நிறைவு செய்யப்படுவதில் அரசு முழுக் கவனம் செலுத்துவதோடு, தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்து கிறது.

12) பொதுப்பட ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrence List) இருக்கிற கல்வித் துறையை மாநிலங்களின் பட்டியலுக்கு உடனே கொண்டு வரவேண்டும் என்றும், அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற கல்விக்கூடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இந்திய அரசின், பிற பன்னாட்டு நிறு வனங்களின் கல்விக் கூடங்கள், தமிழ்நாட்டில் இயங்க முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. சித்தமருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்வியும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் - என்பதோடு, கல்விக்கான எந்த வகை இந்தி யத் தேர்வுகளையும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும், தமிழ்நாட்டிலும் பிற அனைத்து மொழித் தேசங்களிலும் தடை செய்ய வேண்டும் என்றும், அவற்றோடு தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்துக் கல்விகளும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழிக்கல்வியாகவே இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை மொழிப்பாடமாக மட்டுமே பயிலலாம் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

13) தமிழ்நாட்டின் ஆற்று நீர்ப்பாசனப் பரப்புகளுக்குத் தடையாகிற வகையில் கருநாடகா, கேரளா, ஆந்திரா அரசு கள் மேகதாது அணை, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை, பாலாற்றில் புதிய அணை என அணைகள் ஏதும் கட்டக் கூடாது என்றும், தமிழகப் பாசனப் பரப்புகளுக்கு இம்மி அளவும் தொல்லை வருகிற படியான அனைத்துச் செயல்பாடுகளையும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துத் தடுக்கவேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்து கிறது. மேலும் இந்திய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்ட முன் வரைவைத் தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. .

14) தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டு மற்றும் ரிலையன்சு, டாட்டா உள்ளிட்ட இந்தியப் பெருமுதலாளிகளின் தொழிற் சாலைகளைப் படிப்படியாக நிறுத்தி, அவற்றைத் தமிழக அரசே தமிழக மக்களின் பங்கு முதலீட்டில் நடத்திட முன் வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு நிலங்களை, சுற்றுச் சூழலை நாசப்படுத்தகிற மீத்தேன், அய்ட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் மற்றும் அணுமின் நிலையங்களைத் தமிழக அரசு அமைச்சரவை ஒப்புதலோடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிச் சட்ட மியற்றிக் கொள்கிற வகையில் முழுமையான முயற்சியில் தடுத்து நிறுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

15) சென்னை உயர்நீதி மன்றத்தைத் தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என மாற்றுவதோடு, தமிழ்நாட்டிற்கான உச்ச நீதிமன் றம் தமிழ்நாட்டிலேயே அமைந்திட வேண்டுமான வகையில் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உச்ச நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழியா கிறபடியான அமைப்பு முறையைத் தமிழக அரசும், மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் முன்னின்று போராடி மாற்றவும் வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

16) தமிழ்நாட்டு வணிகர்களை நசுக்கும் வகையில் தமிழ் நாட்டிற்குள் நுழைந்திருக்கிற, நுழைய இருக்கிற வெளிநாட்டு, மற்றும் ரிலையன்சு போன்ற இந்தியப் பெரு முதலாளிகளின் வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்க வழிவிடக்கூடாது என இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது. அதேபோல் வணிகர் களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட இந்திய அரசின் அனைத்து வரிகளையும் தமிழக அளவில் மறுத்திட வேண் டும் என இம் மாநாடு தீர்மானிக்கிறது.

17) தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தைத் தனியார் வயப்படுத்தி அதன் மூலம் இந்தியப் பெருமுதலாளிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் நடத்திட திட்டமிடுகின்றன. அதன்மூலம் இதுவரை அளிக்கப்பட்டு வரும் குடிசை வாழ் எளிய மக்களுக்கான இலவச மின்சாரமும் உழவர்களுக்கான கட்டணமில்லா (மானிய) மின்சாரமும் நிறுத்தப்படும் ஏற்பாடு உள்ளது. இப் போக்கை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அண்மையில் ஏற்பட்ட கஜா புயலுக்கும், ஏற்கெனவே ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களுக்கும் அடிப்படைத் தேவைக்கான இழப்பீட்டைக்கூட இந்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்கா மல் வஞ்சித்து வருவதை இம் மாநாடு கண்டிக்கிறது. தமிழ் நாட்டரசு கேட்டுக் கொண்ட வகையில் உடனடியாக 15 ஆயி ரம் கோடி உருவாவை இந்திய அரசு அளித்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது.

19) நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வழிப்பறிக் கொள் ளையர்கள் போல இந்திய அரசு, எடுபிடிகளையும், அடி யாட்களையும் வைத்துக் கொண்டு சுங்கச்சாவடிகள் அமைத்து வெகுமக்களிடம் வரிகள் பிடுங்கிக் கொண்டிருப்பதை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கெனவே வண்டிகள் வாங்கும்போதே சாலை வரிகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் சாலை, சுங்க வரிகள் என வரிகள் பிடுங்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமாய் இம் மாநாடு வலி யுறுத்துகிறது.

20) வேளாண் தொழில் மிகவும் நசுக்கப்பட்டு வரும் சூழலில், வேளாண் இடுபொருள்களுக்கு விலைகளைக் குறைக்க வேண்டும் என்றும், விளைச்சல் பொருள்களுக்கு நியாயமான வகையில் விலை அளித்துக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துவதோடு, அரிசி, கரும்பு உள்ளிட்ட விளைச்சல் பொருள்களுக்கு இந்திய அரசு விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யாமல் மேலாண்மைக் குழுக்களே விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யும் படியாக இருக்க வேண்டும் என்றும் இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது.

21) தமிழ்நாட்டில் 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைப் பட்டுக் கிடக்கிற பேரறிவாளன், நளினி, இராபர்ட் பயாசு, சாந்தன், முருகன், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசின் ஒப்புதலோடு விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்த பின்பும், எந்த விடையும் சொல்லாமல் தமிழக ஆளுநர் அமைதியாயிருக்கும் நிலையைக் கைவிட்டுவிட்டு அவர்களை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. அவர்களைப் போலவே பல ஆண்டுகளாய்ச் சிறையில் அடைப்பட்டிருக்கிற இசுலாமிய சிறையாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.

22) இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்கு அனைத்துத் தேச அளவில் சுதந்திரமான உசாவல் (விசாரணை) தேவை என்பதை இம் மாநாடு வலி யுறுத்துவதோடு, தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

23) தமிழக வெகுமக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்துகிற வகையில் தமிழிய உணர்வு சார்ந்த சாதி, சமய மறுப்புணர்வைத் தெளிவு படுத்துகிற வகையிலான விழாக் களையும், நிகழ்வுகளையும், மூட நம்பிக்கை எதிர்ப்புப் பேரணிகளையும் தமிழகமெங்கும் பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பின் இயக்கங்கள் ஒருங்கிணைந்தோ தனித்தோ முன்னெடுக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

24) தமிழக மக்களுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியதையும், சாதி இழிவை ஒழிப்பதையும் தன் வாழ்க்கை நோக்கமாகக் கொண்ட பெரியார், சாதி ஒழிப்புக்காக ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்றிய அம்பேத்கர் மற்றும் தமிழிய மக்களிடையே அற உணர்வுகளைப் பரப்பிய அறிஞர்களும் செயற்பாட்டாளர்களுமான திருவள்ளுவர், வள்ளலார், அயோத்திதாசப்பண்டிதர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்களின் பிறந்தநாள் நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்துவதோடு ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராய்ப் பெரியார் முன்னெடுத்து நடத்திய திருக்குறள் மாநாடுகளையும், சாதி ஒழிப்பு மாநாடுகளையும் இப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து தொடர்ந்து ஆண்டு தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்திட வேண்டுமென இம் மாநாடு அனைத்து அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறது.

25. பெரியார் தம் இறுதிச் சொற்பொழிவிலே குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டபடி, நம் நாடு தமிழ்நாடு என்கிற கொள்கை முடிவில், நம் மீதான சாதி இழிவுகளையும், அரசியல் அதிகா ரத்தையும் செய்து வரும் அனைத்து அந்நிய ஆதிக்கர்களை யும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றிடும் வகையில் நம் நாடு தமிழ்நாடு என்கிற கொள்கை நோக்கோடு திட்டமிட்ட நீண்ட காலப் பணித்திட்டத்தை இக் கூட்டமைப்பு மேற் கொள்ள வேண்டுமென இம் மாநாடு பெரியாரிய உணர்வு கொண்ட அனைத்து இயக்கங்களையும் கேட்டுக் கொள்கிறது.

- விடுதலை நாளேடு, 24.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக