வெள்ளி, 28 டிசம்பர், 2018

பெரியார்தம் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரை


இனப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது

அறிவாயுதத்தை ஏந்தி களத்தில் நிற்கும் கட்டம் இது

பெரியார்தம் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரை



இனப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் நெருங்கு கிறது; பெரியார் காண விரும்பிய புதியதோர் புரட்சி உலகம் படைக்க எந்த விலையும் கொடுக்கத் தயார்  என்று   திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய  அறிக்கை  வருமாறு:
நமது அறிவு ஆசான், பகுத்தறிவுப் பகலவனின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (24.12.2018).
அய்யாவின் மறைவு அவர்தம் லட்சியத்திற்கோ, லட்சியப் பயணப் பாதைக்கோ அல்ல!

அய்யாவின் மறைவு - அவரது உடலுக்கு மட்டுமே! லட்சியத்திற்கோ, லட்சியப் பயணப் பாதைக்கோ அல்ல என்பதை நாளும் நாடு நமக்கு உணர்த்திக் கொண் டிருக்கிறது.
அந்த ஈரோட்டுப் பேராசானின் கணக்கு என்றுமே பிழையானது கிடையாது.
அவரது தொலைநோக்கு இன்றைய தலைமுறையை, இளைஞர் உலகத்தை வியப்புலகத்திற்கு அழைத்துச் செல்கிறது!
திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, அதற்கு மானமும், அறிவையும் ஏற்படுத்தும் பெரும் பணியில் பெரிய வெற்றியைப் பெற்றவர் நம் தந்தை பெரியார்!
தொண்டர்களுக்குப் பயிற்சி!

முழு வெற்றியைப் பறிப்பதற்கு அவர்தம் தொண்டர் களை - சுயமரியாதைப் பாசறையில் பயிற்றுவித்து, பக்குவப்படுத்தி, பாடங்கள் சொல்லிக் கொடுத்து பயணத்தைத் தொடர - பயமின்றி களத்தில் வெல்ல அறி வாயுதங்களையும் அளித்துவிட்டே சென்றுள்ளார்!
பெரியார் சிலைகளைத் தொட்டுப் பார்க்க முயன்ற இன எதிரிகள், பட்டுப்போன பழுதுகளாகி பரிதாபத் துடன் நிற்கின்றனர்!
இந்த பத்தாம் பசலை பழுதுகளான காவிகளை முறிய டிக்க விழுதுகள் புயலெனப் புறப்பட ஆயத்தமாகி விட்டன!
பெரியார் என்ற பகுத்தறிவு மின்சாரக் கம்பியைத் தொட்டவர்கள் அலறி ஓடி பைத்தியக்கார மருத்துவ மனை நோயாளிகள்'' என்ற சான்று வாங்கி, வெளியே வரவேண்டிய சூழ்நிலை!
பெரியார் - ஒரு சிலை அல்ல; காலத்தை வென்ற சீலம்



பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவிடத்தில், கழகத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு (சென்னை பெரியார் திடல், 24.12.2018)

காரணம், பெரியார் - ஒரு சிலை அல்ல; காலத்தை வென்ற சீலம்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரின் தத்துவக் கோட்பாட்டின் சின்னம்! சுயமரியாதைச் சூரியன்!!
புரிந்துகொண்டனர் புல்லர்கள்! இனப்போரின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது! மான மறவர் படை,  இளைய சமுதாயம் உயிரைத் துச்சமாகக் கொண்டு பெரியார் காண விரும்பிய புதியதோர் புரட்சி உலகம் படைக்க எந்த விலையும் கொடுக்கத் தயார் என்று சூளுரைக்கிறது, தனது சூடேற்றப்பட்ட ரத்த நாளங்கள் - புடைத்த தோள்களுடன் அறிவாயுதத்தை ஏந்தி களத்தில் நிற்கும் கட்டம் இது!
நமக்குள் பேதமில்லை; பிளவு இல்லை!

நமக்குள் பேதமில்லை; பிளவு இல்லை - ஒரே இலக்கு - ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிந்த சமுதாயமே!
அந்த இலக்கு நோக்கி, இப்படை தனது அயர்வில்லா பயணத்தைத் துவக்கி, ஆரியத்தை வென்றெடுக்க அறிவாயுதத்துடன் அணிவகுக்கிறது - அய்யா பணி முடிக்க!
நாளைய வரலாறு நமதே!
உலக மயமாகிவிட்ட பெரியார், உள்ளூர் களத்தையும் நமக்குக் காட்டி விட்டார். எனவே, துணிவுடன் தொடர்வோம் அவர்தம் பெரும் பயணத்தை!
வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை
24.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக