வியாழன், 13 அக்டோபர், 2022

மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி! - சென்னை

 

 அனைத்துக் கட்சி- சமூக அமைப்பு தலைவர்கள் - தோழர்கள் பங்கேற்பு - தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற

மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி!

தமிழர் தலைவர் கி.வீரமணி - கே.வி.தங்கபாலு - வைகோ - தொல்.திருமாவளவன் - கே.பாலகிருஷ்ணன் - இரா.முத்தரசன் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் - ஜவாஹிருல்லா - வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்

சென்னை, அக். 12 -மதவெறி பரப்புரை செய்து சமூக அமைதியை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையை எதிர்த்து மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், நிலை நாட்டவும் நேற்று (11.10.2022) மாலை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள்,  அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் அண்ணா சாலையில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை அருகே நேற்று மாலை 4 மணியளவில் இம்மாபெரும் மனித  சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. பெரியார் சிலையிலிருந்து அண்ணா மேம்பாலம்வரை மிக நீண்ட தூரம் வரிசையாக மதச்சார்பற்ற கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், இதர ஜனநாயக அமைப்புகளின் மாநிலத் தலை வர்களும் பங்கேற்ற இந்த மனித சங்கிலி அறப்போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மதவெறி பரப்புரை செய்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக் கைகளைக் கண்டித்தும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளைப் பலவீனப்படுத்த, மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் படுவதைக் கண்டித்தும் ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தலைமையில் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங் கேற்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை யிலும், காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு அவர்கள் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் தலைமையிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் தலைமையிலும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தலைமையிலும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் இம்மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒலிமுழக்கங்கள்

இப்போராட்டத்தில், சாலையோரத்தில் அனைவரும் வரிசையாக நின்று கைகோத்தபடி ‘வீர வணக்கம், வீர வணக்கம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு, தந்தை பெரியா ருக்கு, மாமனிதர் மார்க்சுக்கு, பெருந்தலைவர் காமராசருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு வீர வணக்கம், வீர வணக்கம்' என்று தொடங்கி, ‘சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம், தமிழ் மண்ணின் மணம் காப்போம், வெறுப்பு அரசியலை விரட்டியடிப்போம்' போன்ற ஒலி முழக்கங்களை சுமார் ஒரு மணிநேரம் எழுப்பினர்.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றபடி, அண்ணா சாலையில் மனித சங்கிலியில் பங்கேற்றவர்களைப் பார்த்து ஒலி முழக்கமிட்டவாறு சென்றனர்.

நிறைவாக அண்ணா மேம்பாலம் அருகே மனித சங்கிலி அறப்போராட்டம் முடிவடைந்தது.

திராவிடர் கழகத்தினர் பங்கேற்பு

இம்மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர், பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், சோ.சுரேசு, சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால்.

தென்சென்னை சார்பாக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர்.சேது ராமன், கோவி.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.ந.மதியழகன், ச.மகேந்திரன், சண்முகப்பிரியன், பி.டி.சி. இராசேந்திரன், யுவராஜ், அப்துல்லா, செல்வராசு, அரிதாஸ், பெரியார் பிஞ்சுகள் பெரியார் ஆதவன், பெரியார் இனியன் மற்றும் பூ.இராமலிங்கம், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் ஜெனார்த்தனம்.

வடசென்னை சார்பாக மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தி.செ.கணேசன், கி.இராமலிங்கம், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், ந.இராசேந்திரன், துரை.ராவணன், கு.ஜீவா, க.கலைமணி, சி.பாசுகர், பா.கோபாலகிருட்டிணன், கண்மணி துரை, க.செல் லப்பன், மனோகரன், திராவிடச்செல்வன் மற்றும் ஆலங்குடி குமார்.

மகளிரணி சார்பாக சி.வெற்றிச்செல்வி, க.சுமதி, க.வெண்ணிலா, சாந்தகுமாரி, தொண்டறம், முத்துலட்சுமி, அன்புமணி, த.மரகதமணி, இரா.தமிழரசி, ஜெயலட்சுமி, மணிமேகலை, க.கோட்டீசுவரி, பெரியார் பிஞ்சுகள் திலீபன், அதிரா மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில்...

இம்மனித சங்கிலிப் போராட்டத்தில் அண்ணா சாலை எல்.அய்.சி. கட்டடம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் காண்டீபன், மாநில செயலாளர் அகரம் கோபி, இலக்கிய பிரிவு தலைவர் பி.எஸ்.புத்தன் மற்றும் எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இம்மனித சங்கிலி அறப்போராட்டத்தில் பேராயர் எஸ்றா.சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும் பங்கேற்றனர்.

மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் சக்கர நாற்காலி, 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் ஒரே இடத்தில் திரண்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒலி முழக்கமிட்டனர்.

செய்தியாளர்களிடம் தலைவர்கள் கருத்து

தலைவர்கள், மனித சங்கிலி அணிவகுப்பை பார்வை யிட்டபடி ஆயிரம் விளக்கு மசூதி பகுதிக்கு ஜீப்பில் சென்றனர். பின்னர் மனித சங்கிலி குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாசகார வேலைகளைச் செய்யும் சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதை மனித சங்கிலி நிரூபித்துக் காட்டியுள்ளது. 

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: தமிழ்நாட்டில் ஜாதியவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவர் களது பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா: மதச்சார்பின்மையை தமிழ்நாட்டில் மேலும் வலுப்படுத்துவோம். மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்கும் வல்லமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வேண்டுகோள் விடுத்தவுடன் தன்னெ ழுச்சியாக கலந்து கொண்டவர்கள் மூலம் பாஜகவுக்கு எதி ரான வெறுப்பு இங்கு வேரூன்றியிருப்பது தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை மண் மூடச் செய்வதற்கான எச்சரிக்கைதான் இந்த மனித சங்கிலி.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழ்நாட்டில் நவ.6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ்அணிவகுப்பு நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளிலும் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் எதிர் நடவடிக்கைகளை நாங்கள் மேற் கொள்ளும் நிலை ஏற்படும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: தமிழ்நாட்டில் மதவாத இயக்கங்களுக்கு அனுமதியில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக