வெள்ளி, 14 அக்டோபர், 2022

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு -24,25,26.12.96

 

அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (274)

ஆகஸ்ட் 1-15,2021

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு

கி.வீரமணி


சென்னையில் மாநில மாநாடு வேலை நடைபெற்று வருகின்ற நிலையில் கழகப் பற்றாளரும், பெரியார் பெருந்தொண்டர்கள் மூவர் அடுத்தடுத்து மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. பாரீசில் வாழ்ந்த சுயமரியாதை வீரரும், திருமதி சுசீலா எத்துவால் அவர்களது கணவரின் தம்பியான திரு.பக்தவத்சலம் அவர்கள் 16.12.1996 அன்று பாரீசில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தோம். மறைந்த ‘பக்தா’ அவர்கள் கழகத்திடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு நல்ல சுயமரியாதை வீரர். புதுவையைச் சார்ந்த அவர் பல ஆண்டுக்காலம் பாரீசில் பணியாற்றி ஓய்வு பெற்று அங்கேயே தங்கியிருந்தவர் ஆவார்.

அவரது மறைவு கேட்டு இரங்கல் தந்தியை அவர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பினேன். பாரீசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமதி சுசீலா அவர்களுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன்.

திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான டி.ஆர்.கே.டி.எஸ்.மூர்த்தி 17.12.1996 அன்று திருவண்ணாமலையில் மறைவுற்றார் என்ற செய்தியைஅறிந்து வருந்தினேன். மாணவர் பருவந்தொட்டு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர். மறைந்த அவருக்கு வயது 68. சிறிது காலமாகவே உடல்நலமற்று இருந்தார். கவுதமன், சித்தார்த்தன் என்ற இரு மகன்களும், மனைவியும் உண்டு. அவர்களது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பி ஆறுதல் கூறினேன்.

திருப்பனந்தாள் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழகத் தலைவரும் நீண்டகால இயக்க முன்னணி வீரரும், துகிலியில் அய்யா சிலை நிறுவி அயராது பாடுபட்டவருமான துகிலி நடராசன் 19.12.1996 அன்று மறைவுற்றார் என்ற  செய்தி மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பினேன். தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்கள் கழகத் தோழர்களிடையே மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

சென்னை பெரியார் திடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு டிசம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கழகத்தின் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்புடன் நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகம், புதுவை, மும்பை, ஆந்திரா, தில்லி எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர். முதல் நாள் நிகழ்வில் காலை 9:00 மணிக்கு திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலைக்கு கழகத் தோழர்கள், வெளிநாட்டுத் தமிழர்கள், பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மாநாட்டினைத் துவங்கி வைத்தேன். டாக்டர் நாவலர் அவர்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்து சிறப்பு செய்தார். உடனே அவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின், பெரியார் அறிவியல் கண்காட்சி மய்யத்தைத் துவங்கி வைத்து முழுமையாக அதனைப் பார்த்து பெரிதும் வியந்து பாராட்டினார்.

பெரியார் சமூகக் காப்பு அணி மரியாதை செய்யும் வகையில் அணிவகுத்து ஒருவர் பின் ஒருவராக வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். அதனைக் கண்ட வெளிநாட்டிலிருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநாட்டிற்கு வந்த அத்துணை தோழர்களும் ஆச்சரியத்துடன் நின்று பார்த்து மலைத்தனர். பல்வேறு கட்சி பிரமுகர்களும் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் தந்தை பெரியார் படத்தை அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் இலக்குவன் தமிழ் திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் பன்னாட்டமைப்பு _ பெரியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெரியார் பன்னாட்டமைப்புக் கருத்தரங்கம் காலை 10:30 மணியளவில் சென்னை அபுபேலஸில் துவங்கியது.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பன்னாட்டு நாத்திகர் கழகம், மனித உரிமைகள் சங்கம் ஆகியவற்றின் துணைத் தலைவர் எம்.லெவி ஃபிராகல் (நார்வே) தலைமை தாங்கி உரையாற்றுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மனிதநேயம், மானுடம் என்று சொல்லக்கூடிய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதுபோல ஒரு பெரிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் பெரியாரைப் பற்றிய சில நூல்களைப் படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் இருக்கக் கூடியவர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கேள்விப்பட்டிருந்தேன். அதனை உங்களைப் பார்க்கையில் உணர்கிறேன். இங்கர்சால் அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளர், மிகப் பெரிய நாத்திகர். ஆனால், இங்கர்சாலுக்கு நியூயார்க் நகரிலே ஒரு குறுஞ்சாலைக்காவது பெயர் வைக்க முடியுமா என்று எண்ணிப் பார்க்கிறேன். நடக்க முடியாத ஒன்று. இதை இங்கு மிகப் பெரிய நெடுஞ்சாலைக்குப் பெரியார் பெயர் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்குள் பெரும் வியப்பு ஏற்பட்டது. ஒரு பகுத்தறிவாளரின் பெயரை பெரிய சாலைக்கு வைக்கக் கூடிய வாய்ப்பு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது உலகத்திலே நடக்காத ஒரு செயலை இங்குக் கண்டேன்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மதத்தினால் நடக்கக்கூடிய கொடுமைகளை யெல்லாம், அடக்குமுறைகளையெல்லாம் குறிப்பாக இந்து மதத்திலிருக்கிற அடக்குமுறைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை விழிப்படையச் செய்வதைக் கண்டு வியக்கிறேன். இதற்காக நாம் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை இதற்காக நடத்த வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் நீங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் நானும் கலந்து கொள்ளுவேன் என்று சொல்லக்கூடிய விருப்பம் எனக்கு வருகிறது’’ எனப் பல கருத்துகளை அவர் எடுத்துக் கூற பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

கருத்தரங்கில், “21ஆம் நூற்றாண்டுக்கும் தந்தை பெரியாரின் கருத்துகள் ஏற்புடையவை _ புதிய சமுதாயத்தைப் படைப்பதில் பெரியாரின் பங்களிப்பு’’ என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். மாநாட்டில் பங்கு கொண்ட மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கப்பட, அவரின் பிரதிநிதி ஜனதாதள முன்னணித் தலைவர் ஜெகவீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவைச் சார்ந்த இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அதை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு உடல்நலக் குறைவு காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பேசிய ஒலி நாடாவை அனுப்பியிருந்தார். அது மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது. அவர் கைப்பட எழுதியிருந்த வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், “தந்தை பெரியார் அவர்கள் ஒரு புதிய சமுதாயத்தைக் குறித்த தொலைநோக்காளர் ஆவார். இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பெரியாரின் கொள்கைகளைத் தெரிவிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்தின் பொன் விழா மாநாட்டில் கலந்துகொண்டு பெரும் பேற்றைப் பெற்றேன். எனக்கு விருது அளித்துப் பாசத்தையும், நல்லெண்ணத்தையும் காட்டுகின்ற திரு.வீரமணி அவர்களுக்கும், பெரியார் அமைப்பைச் சார்ந்த டா

க்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓர் உறுதியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி மற்றும் மதச் சார்பின்மை எனும் இலக்குக்காக எங்கிருந்தாலும் என்றைக்கும் ஓயாது உழைப்பேன்’’ என தமிழில் கையொப்பமிட்ட வாழ்த்துக் கடிதம் மேடையில் வாசிக்க கழகத் தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா, சிங்கப்பூர் நாகரத்தினம், சோம.இளங்கோவன், நார்வே லெவி ஃபிராகல் ஆகியோருக்கு மேடையில் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தோம். முதல் நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக ‘பெரியார் சி.டி.ராமை’ தொடங்கி வைத்து உரையாற்றினேன். அந்த உரையில், “21ஆம் நூற்றாண்டே பெரியார் நூற்றாண்டுதான். அதனை செயல்படுத்த உலகெலாம் பெரியார்; எல்லார் உள்ளங்களிலும் பெரியார் என்று ஆகவேண்டுமானால் என்ன வழி என்று சிந்தித்தபோது அறிவியல் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அறிவியலின் உச்சகட்டம் _ கணினி. உலகம் முழுவதும் பெரியாரை நாம் அறிமுகப்படுத்தி வருகிறோம். இன்னும் சிறப்பாகச் செய்வதற்காகத்தான் ‘பெரியார் சி.டி.ராம்’ என்பதைச் செய்து இருக்கிறோம். இதிலே சிறந்த தகுதி படைத்த கிரியா உற்பத்தியாளர்கள் யார் எனத் தேடி, பாலசுப்ரமணியம் என்ற தமிழர் மூலம் இதனை உருவாக்கியுள்ளோம். பல மாதங்கள் செய்ய வேண்டிய பணியினை, சில மாதங்களுக்குள்ளாக முடித்து உலகம் முழுவதும் அதை பரப்ப இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்ததோடு, பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். நிகழ்வில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சமூகநீதி மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் முதலில் பிற்பகல் சென்னையைக் குலுக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் பேரணி நடைபெற்றது. தந்தை பெரியார் திடலுக்கு முன்பு விழுப்புரம் இராமசாமிப் படையாச்சியார் மாவட்டத் தலைவர் புலவர் ந.தங்கவேலன் அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார். 64 மோட்டார் சைக்கிள்களில் கழகக் கொடிகளுடன் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். வழியெல்லாம் இளைஞர்கள் வாணவெடிகள், அதிர்வேட்டுகள் வெடித்துக் கொண்டு உற்சாகத்துடன் குரலெழுப்பி வந்தனர். பேரணியில் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் பெரியார் வேடமிட்டு கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தி வந்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்கள் அவரவர் மாவட்ட பதாகைகளுடன் அணிவகுத்து கட்டுப்பாட்டுடன் நடந்து வந்தனர். பெரியார் சமூகக் காப்பு அணி வீராங்கனைகள் பேரணியை சிறப்பாக வழிநடத்தி வந்தனர். வழியெங்கும் தோழர்கள் சுருள் கத்தி வீச்சு, கொம்பு விளையாட்டு, குஸ்தி, வாயில் மண்ணெண்ணெய்யை -ஊற்றி நெருப்புத் தீ கொப்பளிக்கின்ற சாகச நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர். மதியம் துவங்கிய பேரணி இரவு 8:00 மணிக்கு தங்கசாலை திறந்தவெளி மாநாட்டை அடைந்தது.

அந்த சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்ட சமூகநீதி மய்யத் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்கள் உரையாற்றுகையில், “பெரியார் ஒரு தனி மனித வரலாறு. அவர் இந்திய நாட்டிற்கே உரிய தலைவர் அல்ல; உலகத்திற்கே உரிய தலைவர் என்று சொல்ல வேண்டும். புதிய உலகத்தை, சமத்துவமான, சமூகநீதியுடைய உலகத்தைப் படைக்கும் ஆற்றல் பெரியார் கொள்கைகளுக்கு இருக்கிறது. அவருடைய பாதையில் உழைத்து வருகின்ற நம்முடைய தலைவராக இருக்கின்ற வீரமணி அவர்களுக்கும் ஒரு பெருமை சேர்க்கின்ற வகையில் ‘சமூகநீதி வீரமணி விருது’ என்ற விருதினை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தின் கொள்கைகள், நடைமுறைகள் எல்லாம் இந்த நாட்டினுடைய கொள்கைகளாக நடைமுறைகளாக மலர்ந்து வருகின்றன. இதன் பெருமையெல்லாம் வீரமணியையே சாரும். நமது வீரமணி அவர்கள் தலைமை தாங்கி நடத்தியிருக்காவிட்டால் மண்டல் பரிந்துரைகள் நடைமுறைக்கே வந்திருக்காது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையிலே இந்த நாட்டை நடத்தி வைக்கின்ற பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு உண்டு. உங்கள் போராட்டங்களால் இந்தியா முழுமைக்கும் நன்மை அடையும். உங்கள் போராட்டங்களில் நாங்கள் உங்களோடு என்றும் இருப்போம் என்று உறுதி அளிக்கிறேன்’’ என பல அரிய கருத்துகளைக் கூறி உரையாற்றினார். மாநாட்டின் 2ஆம் நிகழ்வை நிறைவுரையாற்றி முடித்து வைத்தேன்.

(நினைவுகள் நீளும்…)

கட்டுரையின் ஒரு பகுதி இது...

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (275)

ஆகஸ்ட் 16-31,2021

திராவிடர் கழகம் ஒரு திறந்த புத்தகம்!

கி.வீரமணி

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கோ.அரங்கநாதனின் இளைய மகன் ஆர்.அண்ணாதுரைக்கும், நடராசனின் மகள் என்.கஜலட்சுமிக்கும் வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு விழா 15.12.1996 அன்று சென்னை இந்திரா நகர் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினேன். தாம்பரம் மாவட்டக் கழகச் சார்பில் வாழ்த்து மடல் அளிக்கப்பட்டது. விழாவில் கழகத்தின் பொறுப்பாளர்களும், அழைப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சமூகநீதி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வு டிசம்பர் 26 அன்று காலை 9:00 மணிக்கு பெண்ணுரிமை மாநாடு என்னும் கருத்தமைவில் கலை நிகழ்ச்சியும், பெண்கள் நலம் சார்ந்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர், பெண்கள் கருத்தரங்கம் பல்வேறு தலைப்புகளில் கழகப் பொறுப்பாளர்கள், உரை நிகழ்த்தினர். மாலை 4:00 மணிக்கு திராவிடர் கழக மாநில மாநாடு என்னும் பொருளின் கீழ் கழகப் பொறுப்பாளர்கள் வழிமொழிய தமிழர் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலை மாநாட்டு மேடையிலே ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. அதில், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப்பட்ட தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் ஆகியோரின் செல்வி ஈ.வெ.ரா.ம.அமலா மணி அவர்களுக்கும், தஞ்சை மாவட்டம் உம்பளப்பாடி மணமகன் ம.அண்ணாதுரை அவர்களுக்கும், பசும்பொன் மாவட்ட தி.க. செயலாளர் சாமி.திராவிடமணி _ செயலெட்சுமி ஆகியோரின் செல்வன் என்னாரெசு பிராட்லா, காரைக்குடி சொக்கலிங்கம் _சரசுவதி ஆகியோரின் செல்வி ஜான்சிராணி அவர்களுக்கும், சேலம் மாவட்டம் மின்னக்கல் வை.பழனிச்சாமி _ லெட்சுமி ஆகியோரின் செல்வன் ப.செல்வகுமார், திருச்சியைச் சேர்ந்த இரத்தினம்_பானுமதி ஆகியோருடைய செல்வி மணிமேகலை ஆகியோருக்கும், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக பிரதிநிதி மு.இரா.இளங்கோவின் தம்பியும், காஞ்சிபுரம் மு.இராமசாமி _ இரா.தனலட்சுமி ஆகியோர்களுடைய செல்வன் மு.இரா.சேகர், காஞ்சிபுரம் மணி _ நீலா ஆகியோருடைய செல்வி ம.லதா ஆகியோர்களுக்கும் ஒரே மேடையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். அய்ந்து திருமணங்களும் ஜாதி மறுப்புத் திருமணங்களாகும். இத்திருமணங்களில் தாலி அணிவிக்கப்படாதது ஒரு தனிச் சிறப்பாகும். அனைவருடைய கைத்தட்டல்களுக்கிடையே மண விழா நிறைவு பெற்றது.

அதனைத்தொடர்ந்து அய்ம்பெரும் பெரியார் தொண்டர்களை சிறப்பித்து பரிசு வழங்கினேன். மயிலாடுதுறை கோ.அரங்கசாமி, மாநில தி.க. மகளிரணிச் செயலாளர் க.பார்வதி, சேலம் அப்பாய், கண்கொடுத்த வனிதம் கண்பார்வையற்ற பிச்சையன், மறைந்த டோல்கேட் பிச்சை சார்பாக அவரது மகள் சிந்தனைச் செல்வி ஆகியோருக்கு செயராமன் _ சகுந்தலா அறக்கட்டளை சார்பாக சால்வைகளை அணிவித்து, தந்தை பெரியார் உருவம் பொறித்த மோதிரத்தை மக்கள் கடலின் ஆரவாரம் _ கைத்தட்டல்

களுக்கிடையே அணிவித்தேன். பெரியார் பெருந் தொண்டர்களைப் பாராட்டி உரையாற்றுகையில், “ஒவ்வொருவருடைய சிறப்பையும், அவர்களின் இயக்க ஈடுபாட்டையும், எப்படி குடும்பமாகத் தன்னை இணைத்துக் கொண்டு கழகத்திற்கு உழைத்த மேன்மைகளைக் குறிப்பிட்டு அவர்களை வாழ்த்தினேன். இன்று இந்த இயக்கத்தை விட்டு யாராவது ஓடுகிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கத்திலே இருந்து எதையும் எடுத்துப் பழக்கப்பட முடியவில்லையே என்பதற்காக ஓடுகிறார்களே தவிர வேறு இல்லை. இந்த இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் பல முனைகளிலே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொண்டாற்றக்கூடிய பெரியார் பெருந் தொண்டர்கள் பலரும் இன்னும் கழகத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்களைச் சிறப்பிக்க வேண்டிய நமது கடமை, அவர்களே இயக்கத்தின் ஆணி வேர்கள்! எனவேதான், இவர்களைப் பாராட்டுவதிலே, நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் எனக்கு இட்ட கட்டளையை இதன் மூலமாக நிறைவேற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என பல கருத்துகளைக் கூறி உரையாற்றினேன். அதன்பின் பெரியார் கொள்கைகளை பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியில் பயின்று பட்டயம் பெற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

மாநாட்டில் கலந்துகொண்டு தோழர்களை உற்சாகப்படுத்தி வந்த சிறப்பு அழைப்பாளர் இனமுரசு சத்யராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், “நான் இங்கே வருவதற்கு முன்னால் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பெரியார் அறிவியல் கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அங்கே விஞ்ஞான உண்மைகளை எவ்வளவு எளிமையாக _ சிறப்பாக அந்த மாணவிகள் விளக்கினார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு அய்யா வீரமணி அவர்கள் மேல் ஓர் நன்றி உணர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அந்த மாணவிகளை அவர்கள் எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்ற நினைத்து வியந்து போனேன். தந்தை பெரியார் மாதிரி தீர்க்கதரிசி உலகத்திலே வேறு எவரும் கிடையாது. நீ நன்றாக நடித்தாலும் உனக்குச் சிறந்த நடிகர் என்ற பட்டம் கிடைக்காது. அதனால்தான் உனக்கு ‘சிவாஜி கணேசன்’ என்கிற பட்டம் கொடுக்கிறேன் என்று தந்தை பெரியார் சொல்லிப் பட்டம் கொடுத்தார். எதிர்காலத்தை

முன்கூட்டியே கணிக்கக் கூடிய திறமை பெரியாருக்கு அப்பொழுது இருந்திருக்கிறது. இன்றைக்கு அவர் எழுதி வைத்த விஞ்ஞானக் கருத்துகள் எல்லாம் நடைமுறைக்கு வருவதை நாம் பார்க்கிறோம். அவர் என்னென்ன சொன்னாரோ அவையெல்லாம் நடந்துகொண்டு வருகின்றன. மக்களுக்கு உங்களைப் போல் தொண்டு செய்கிற_ தியாகம் செய்கிற தோழர்களைவிட சினிமாவில் நடிக்கிற எங்களுக்கு போராடும் குணம் குறைவு. எங்களை விட நீங்கள் பெரிய தியாகிகள் _ வீரர்கள். இந்தக் கடவுள் நம்பிக்கைதான் மூடநம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஆணிவேராக இருக்கிறது.

நாட்டில் ஜாதிக் கலவரம் உருவாவதற்குக் காரணமே மதத் தலைவர்கள்தான். இந்த மதத்துக்கெல்லாம் தலைவன் கடவுள்தான். அதனால், அந்தக் கடவுளை ஒழித்தால்தான் எல்லாப் பிரச்சினைகளும் தீரும். நாட்டில் சாமியார்களுக்கெல்லாம் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் சாமியார்கள் கஞ்சா, அபினைவிட பெரிய போதையைக் கொடுக்கிறார்கள். அது தெரிந்தும் அவர்கள் பின்னாலே மக்கள் போகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டது பெரியார் புத்தகங்களைப் படித்துத்தான். பெரியார் கொள்கைகள் மீது நான் ஈடுபாடு கொண்டதற்குப் பிறகுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யாராவது ஒருவர் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முன்வந்தால், அந்தப் படத்தில் நான் காசு வாங்காமல் நடித்துக் கொடுப்பேன். (பின்னர், பெரியார் திரைப்படத்தில் நடித்தும் சிறப்புக்குரியவரானார்.) பெரியார் வேடத்தில் என்னைப் பார்த்துவிட்டேன் என்றால் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவேன். இது நடந்தே தீரும்’’ என்பதைப் போன்ற கருத்துகளை மாநாடு மூலமாக சிறப்புரையாற்றினார்.

எனது உரையில், “இங்குக் கூடியிருக்கும் குடும்பம் எவ்வளவு நெருக்கமான குடும்பம். எவ்வளவு பகுத்தறிவுள்ள குடும்பம், கொள்கைகளுக்காக தங்களை அழித்துக் கொள்கின்ற கருப்பு மெழுகுவத்திகளாக இருக்கின்ற குடும்பம் என்பதை நிலைநாட்டக் கூடிய வகையில் கடந்த மூன்று நாள்களாக இடையறாமல் தொடர்ந்து இங்கே நாம் குழுமியிருக்கிறோம். அதற்கு முதற்கண் என்னுடைய நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அருமை நண்பர்களே! அடுத்து வரக்கூடிய இருபத்தி ஓராம் நூற்றாண்டு நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டுதான் என்பதை நாம் உலகுக்கு எடுத்துக்காட்டப் போகின்றோம். ஒரு வெளிநாட்டுக்காரர் என்னை வந்து சந்தித்தார். உங்களுடைய இயக்கத்திலே எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதை அவ்வளவு சுலபமாகச் சொல்ல முடியாது என்று எண்ணிவிட்டு, எங்களுடைய இயக்கத்திலே இரண்டு விதமான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னேன். கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் ஒரு வகை; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் மற்றொரு வகை என்று சொன்னேன். அவர் அதிர்ந்து போய் நீங்கள் ஏதாவது இரகசிய இயக்கம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை, இரகசிய இயக்கத்திலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் எந்த இரகசியமும் கிடையாது.- எங்களுடைய இயக்கம், எங்களுடைய கொள்கை ஒரு திறந்த புத்தகம். அதனால்தான் எங்களுடைய இயக்கத்தை எதிரிகளாலும், துரோகிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்கள்  பாராட்டை எதிர்பார்ப்பவர்கள் அல்ல; நன்றி எதிர்பாராமல் தொண்டாற்றுபவர்கள்’’ என்றேன்.

இந்த மாநாடு எனக்கு வயதைக் கூட்டவில்லை, வயதைக் குறைத்திருக்கிறது என்பதை மெத்த பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் தொய்வில்லாப் பணியின் மூலம் டெல்லியில் தந்தை பெரியார் கொள்கை புன்முறுவல் பூக்கிறது. இன்னும் நிறைய பணியிருக்கிறது. வருங்காலத்தில் இயக்கத்திற்கு புதிய இளைஞர்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. மகளிரின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். ஜனவரியில் கிராமப் பிரச்சாரத் திட்டத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மக்களிடையே புதிய பிரச்சார உத்திகளை ஏற்படுத்தி இயக்கத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும். எனக்கு உங்களைப் பார்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்னும் உங்களுக்காக உழைத்து, உங்களை என்னுடையே தோளிலே தூக்கிச் சுமப்பதற்கு உரிமை பெற்றவன் என்ற முறையிலே அந்த வலிமையோடு உழைக்கின்றேனே அதில்தான் எனக்கு மகிழ்ச்சி. சிலர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம், விலக்கப்பட்டவர்களை வைத்து வியாக்கியானம் செய்யலாம், வழக்கு மன்றத்திற்குப் போகலாம் என்று நினைத்தால் அதைச் சந்திப்பதற்கு இந்தப் படை எப்போதும் தயாராக இருக்கிறது.அப்படி நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது. உங்களுக்குப்பின்புலம் எது? எங்கே இருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். மிக நன்றாகவே தெரியும். எனவேதான்

தந்தை பெரியார் இட்ட -_ விட்ட பணிகளை முடிக்க எந்த நம்பிக்கை என் மீது வைத்திருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை என்னுடைய இருதயத்தின் கடைசி துடிப்பு இருக்கின்ற வரையிலே, என்னுடைய உடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை காப்பாற்றுவேன் என்பதைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்

கெல்லாம் சொல்ல இருக்கிறது. நண்பர்களே, நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. காரணம், நம்முடைய நியாயங்கள் தோற்பதில்லை. வெற்றி நமதே! வீறுகொண்டு நடைபோடுவோம்’’ என உலகளவில் பெரியாரின் தேவையும் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் பா.தெட்சிணாமூர்த்தி நன்றி உரையாற்றினார்.

திராவிடர் கழகம் டிசம்பரில் நடத்திய சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த உலக மனிதநேய அமைப்பின் உறுப்பினரான லெவி ஃபிராகல் அவர்கள் நார்வே சென்ற பின், மாநாட்டு நினைவுகளை எண்ணி பெருமகிழ்ச்சி கொண்டு,

நமது பணியினைப் பாராட்டும் வகையில் ஒரு கடிதத்தினை 9.1.1997 அன்று கழகத்திற்கு அனுப்பினார். அதில்,

அன்புள்ள திரு.வீரமணி,

திசம்பரில் 23, 26 ஆகிய நாள்களில் நான் சென்னை வந்திருந்தபோது, தாங்கள் என்னிடம் காட்டிய அளவற்ற அன்புக்காகவும், விருந்தோம்பலுக்காகவும் நான் என்னுடைய ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பகுத்தறிவாளர்கள் / மனித நேயப் பற்றாளர்களின் ஒரு நிகழ்ச்சி அமெரிக்கா அல்லது அய்ரோப்பாவில் இல்லாமல் இந்தியாவில், உலக அளவில் மிகச் சிறப்பான வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது வித்தியாசமாக இருக்கிறது.

தங்களையும், தங்கள் தமிழக மக்களையும் மீண்டும் சந்திக்கவும், தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் தங்கள் பணி குறித்து முழுமையாக அறியவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் அங்குத் தங்கியிருந்த காலத்தில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக் கொண்ட திரு.போகா அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

அன்புடன்,

லெவி ஃபிராகல் திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களது தமக்கையர் ஆயப்பாடியைச் சார்ந்த இராசேசுவரி, சிங்கப்பூர் ஓ.டி.மூர்த்தி ஆகியோரின் செல்வன் தெ.வீரமணிக்கும், விழுப்புரம் டி.சந்திரசேகரன், சுமதி ஆகியோரின் செல்வி உமாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 19.1.1997 அன்று பொறையாறு சியாமளா கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்தி வைத்தேன். கவிஞர் கலி.பூங்குன்றன் மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் பெரியார் பெருந்தொண்டர்கள் சிங்கப்பூர் தி.நாகரத்தினம், எம்.ஆர்.சந்திரன், திருமதி விஜயகுமாரி ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். விழாவில் சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தையும், தந்தை பெரியாரின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினேன். விழாவில் ஏராளமான பொதுமக்களும், கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அடுத்து மதுரையில் நடைபெறும் திருமணத்திற்குப் புறப்பட்டேன்.

சுயமரியாதைச் சுடரொளி மதுரை ஓ.வி.கே.நீர்காத்தலிங்கத்தின் பேத்தி மணவிழா 20.1.1997 அன்று மதுரை ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. மணமக்கள் ஓ.வி.கே.என். அறிவுச் செல்வம், அ.சித்ரா ஆகியோருடைய செல்வி சுஜிபிரியா அவர்களுக்கும், மதுரை ஆர்.சந்திரசேகரன், சி.மல்லிகா ஆகியோரின் செல்வன் சி.வெங்கடேஸ்ராஜ் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து சிறப்புரை யாற்றினேன். மணவிழாவில் கு.வெ.கி.ஆசான், சி.மகேந்திரன், பேராசிரியர் காளிமுத்து, அ.இறையன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், திருமகள் இறையன் மற்றும் ஏராளமான மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு அருகிலுள்ள ஒக்கநாடு மேலையூரில் அய்யா சிலை திறப்பு விழா மற்றும் கிராமப்புற பகுத்தறிவு மாநாடு 21.1.1997 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டேன். பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களது முழு உருவச் சிலையை மக்களுடைய வாழ்த்தொலி முழக்கங்களுக்கிடையே, அதிர்வேட்டு ஒலிக்க திறந்து வைத்தேன்.

காலை முதலே கிராமப்புற பகுத்தறிவு மாநாடு துவங்கி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கமும், நாடகமும் சிறப்பாக நடைபெற்றன. மாநாட்டின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் அரவிந்த் என்ற சிறுவனுக்கு பெரியார் செல்வம் என்றும், வீதி நாடக நடிகர் தெற்கு நத்தம் வேம்பையன் ஆண் மகனுக்கு தமிழ்ச் செல்வன் எனவும், சாந்தியின் பெண் மகவுக்கு மணியம்மை எனவும், முத்துலெட்சுமி, முருகேசன் ஆகியோருடைய ஆண் குழந்தைக்கு அறிவுச்செல்வம் எனவும், பெரியார் மணி _ சாந்தா ஆகியோருடைய பெண் மகவுக்கு அன்புமணி எனவும் பெயர் சூட்டினேன். மாநாட்டு நிகழ்ச்சிகளை மாநில இளைஞரணிச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் வை.குப்புசாமி ஆகியோர் சிறப்பாக அமைத்திருந்தனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழாக் குழுவிற்கு சால்வைகளை அணிவித்தேன். நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு 10 மூடை நெல்லை கிராமப்புற மக்கள் சார்பாக விழாக்குழுவினர் வழங்கினர். மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி சுந்தர் திருமண மண்டபத்தில் வழக்குரைஞர் இரெ.பழனியப்பன் _ டாக்டர் சரோஜா ஆகியோரின் மகன் வழக்குரைஞர் இரவிசங்கர், பெங்களூர் டாக்டர் லதா ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் 27.1.1997 அன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பெரியார் பெருந்தொண்டர் தி.நாகரத்தினம், இரத்தின நடராசன், வெங்கடாசலம், ‘அரிமா’ ரெங்காச்சாரி ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, பாராட்டினர்.

(நினைவுகள் நீளும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக