திங்கள், 17 அக்டோபர், 2022

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு (அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு) (279)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (279)

அக்டோபர் 16-31,2021

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு

கி.வீரமணி

ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக 6.6.1997 அன்று திராவிடர் கழகம், தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து மாபெரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து, அதனை கடைப்பிடிக்கச் செய்தோம். சென்னையில் பல்வேறு பகுதியில் கடைகள், போக்குவரத்துகள் இயக்கப்பட-வில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு தெரிவித்திருந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்-பட்டனர். திராவிடர் கழகத் தோழர்களும் முழு அடைப்பில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கைது ஆனார்கள். பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மக்களின்றி இயக்கப்பட்டன. சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் கழகத் தோழர்கள், “கொல்லாதே! கொல்லாதே!’’ ஈழத் தமிழரைக் கொல்லாதே! என குரல் எழுப்பிக் கொண்டு சாலை மறியல் செய்து கழகப் பொறுப்பாளர்களுடன் கைது செய்யப்-பட்டனர்.

மாலை செய்தியாளர்களின் சந்திப்பின்-போது,  தமிழர்களிடையே இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒற்றுமையை விரிவாக்கி உள்ளது. மாநில அரசால் இன்னும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்திவுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தில 15,000 பேருக்கு மேல் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தி.க., போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழத்தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, தமிழக மீனவர்கள் படுகொலையைத் தவிர்த்திட மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்திடவும், நமது தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்தும் மத்திய அரசிடம் வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியும் கடமையாற்றிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் சார்பில் செய்தியாளர்களிடம் கூறினேன்.

அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை தேரடித் தெருவில் 17.6.1997 அன்று ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும், விளக்கும் வகையில் மாபெரும் பொதுக்-கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் ஒரு பொதுக்கூட்டமாக இல்லாது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தன்மான உணர்வை, மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது. பொதுக்கூட்ட உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஈழத் தமிழர் நலனில் மேலும் அழுத்தம் தர வேண்டுமெனப் பேசினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக