சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற கொடுமையை மாற்றி அமைத்து வெற்றி பெற்றவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரின் இறுதி உரை மரண சாசனமானது
இளைஞர்களே, பெரியாரை வாசிப்பதோடு, சுவாசியுங்கள்!
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை
சென்னை, செப்.19 சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வி யைக் கொடுக்காதே என்ற கொடுமையை மாற்றி அமைத்து வெற்றி பெற்றவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .
தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு, இங்கு மட்டுமல்ல, உலகத்தினுடைய பல்வேறு நாடுகளிலும் நடைபெறக்கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 141 ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா என்பதைப் பயன்படுத்தி, அவருடைய கொள்கை களை, அவர்களுடைய தேவைகளை இன்றைய சமுதாயத் திற்கு நினைவூட்டவேண்டிய ஒரு கடமைதான் இந்த சிறப்பான நிகழ்ச்சி என்ற பெருமையோடு நடைபெறக்கூடிய அவர்களு டைய 141 ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தென்சென்னை மாவட்டத் தலைவர் மானமிகு செயல்வீரர் வில்வநாதன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய பார்த்தசாரதி அவர்களே, முன்னிலை வகிக்கக்கூடிய அருமைத் தோழர்கள் எம்.பி.பாலு அவர்களே, மதியழகன் அவர்களே, செங்குட்டுவன் அவர்களே, டி.ஆர்.சேதுராமன் அவர்களே, ஏழுமலை அவர்களே, அய்யாத்துரை அவர்களே, கோ.வீ.ராகவன் அவர்களே, தாமோதரன் அவர்களே, மகேந் திரன் அவர்களே, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணித் துரை அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இங்கே சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
எந்நாளும் உரிமைக்காகக் குரல் கொடுக்கக்கூடிய பகுத்தறிவாளர் ஆ.இராசா சற்று முன்னால் சிறப்பான ஒரு உரையை ஆற்றி, வேறொரு நிகழ்ச்சி இருக்கின்ற காரணத்தினால், விடைபெற்று சென்றி ருக்கக்கூடிய மேனாள் அமைச்சர் என்று சொல்வதைவிட, எந்நாளும் உரிமைக்காகக் குரல் கொடுக்கக்கூடிய பகுத்தறி வாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருமைச் சகோதரர் மானமிகு ஆ.இராசா அவர்களே,
அதேபோல், நம்மோடு என்றைக்கும் இணைந்து இந்தக் கொள்கைகளுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், மேடை தோறுமல்ல, வாய்ப்புக் கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் முழங்கிக் கொண்டிருக்கக்கூடிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
நம்முடைய இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, வழக்குரைஞரணி தலைவர் வீரசேகரன் அவர்களே, மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்ற அருமை நண்பர்களே, மலேசிய பெரியார் தொண்டர்களில், மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவராக இருந்த திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் அருமைச் செல்வனும், சீரிய பகுத்தறிவாளருமான அன்புச் சகோதரர் மானமிகு அன்பழகன் அவர்களே, அவருடைய வாழ்விணையர் அவர்களே,
மும்பையிலிருந்து வந்திருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொறியாளர் ரவிச்சந்திரன் அவர்களே, மற்றும் அனைத்து இயக்கங்களையும் சார்ந்த பெருமக்களே, திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக, மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த அருமைப் பெரியோர்களே, நண்பர் களே, தாய்மார்களே, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மகளிரணி பொறுப்பாளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
46 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட
அந்த உணர்ச்சி அலைகளோடு...
இந்த இடத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 46 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அந்த உணர்ச்சி அலைகளோடு இந்த மேடைக்கு வந்தேன்.
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், கடைசியாக அவருடைய முழக்கம் என்பது இந்த இடத்தில்தான், தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற இந்த இடத்தில்தான் அது இறுதி முழக்கமாக அமைந்தது.
தந்தை பெரியாரின் இறுதி உரை -
‘மரண சாசனம்'
ஆனால், அந்த உரையைக் கேட்ட யாருக்குமே அது இறுதி முழக்கம் என்று தெரியாது.
தியாகராயர் நகரில் அய்யா அவர்கள் ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார்கள். அந்த உரை ‘மரண சாசனம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. அந்த நூல் பல பதிப்புகளாக வெளிவந்திருக்கிறது.
அதில், தான் எதற்காக இந்தக் கொள்கையைத் தொடங் கினோம்; எதற்காக இந்தக் கொள்கை? எந்த அளவிற்கு இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது? அடுத்து என்ன செய்யவேண்டும்? போர்க் களத்திலே, போராட்டக் களத்திலே அவர்கள் நிற்கக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மிகத் தெளிவாக அந்த உரை அமைந்தது, எதிர்பாராமல்.
தொடக்கத்தில், இயக்கத்தினுடைய கொள்கை என்ன என்று ஆரம்பித்து, எல்லா செய்திகளையும் அய்யா அவர்கள் சொல்கின்ற அந்த உரை இருக்கிறதே - தந்தை பெரியார் அவர்களுடைய இறுதிப் பேருரை - ‘மரண சாசனம்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
அவர்களுடைய சிந்தனைப் போக்கு, தொலைநோக்கு இருக்கிறது என்பது இருக்கிறது - அவருடைய கருத்து வளத்தைப்பற்றி, அவர்களுடைய தத்துவ ஞானத்தைப்பற்றி - அவர்களுடைய கொள்கையினுடைய உறுதியைப்பற்றி - எல்லாத் துறைகளிலும் துணிவைப்பற்றி, தெளிவைப்பற்றி இங்கே உரையாற்றிய நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள். சுப.வீ. அவர்களும், அருள்மொழி அவர்களும், இராசா அவர்களும், நம்முடைய கவிஞர் அவர்களும் எல்லோருமே சிறப்பாக சொன்னார்கள்.
இந்த உரையை, மிக வேடிக்கையாக சொல்லவேண்டு மானால், அய்யாவிற்கு நாங்கள் கொடுத்த வேனிலே, இங்கே அமர்ந்துகொண்டு அவர்கள் பேசிய கடைசி உரை அது.
தொடர்ச்சியான ஒரு இயக்கம் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டு
அப்பொழுது மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் வந்திருந்தார்கள். இப்பொழுது அவருடைய மகன் இருக்கிறார். இது தொடர்ச்சி யான ஒரு இயக்கம் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டு.
46 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இளைஞர்கள், இன் றைக்குப் பெரியார் வாழ்க! பெரியார் தேவை! என்று சொல்லக் கூடிய அளவிற்கு, இந்தக் கொள்கை ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
பல செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகின்ற நேரத் தில், அய்யா அவர்களுடைய உரையிலே எளிமையாக சில செய்திகளை, சாதாரணமாக சொல்லுவதுபோன்று அவர்கள் சொல்லிவிடுவார்கள்.
சமூகநீதிக்குக் குழி தோண்டப்படுகிறது?
ஆனால், இன்றைக்கு அந்த உரையைத் திரும்பத் திரும்ப படிக்கின்றநேரத்தில், அது சாதாரண உரையல்ல என்பது தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் எப்படிப்பட்ட கூத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன?
நீதிமன்றங்களில் எப்படிப்பட்ட வேடிக்கைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன?
அதேபோன்று நிர்வாகத் துறையில் எப்படி சமூகநீதிக்குக் குழி தோண்டப்படுகிறது?
இதுவரையில் தைரியமாக, துணிச்சலாக ஜாதியை ஆதரித்துப் பேசக்கூடிய துணிச்சல் எவருக்கும் வரவில்லை.
இந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், பேரறிஞர் அண்ணா, அதற்குப் பிறகு ஒப்பற்ற தலைவராக, அண்ணா அவர்களாலே உருவாக்கப்பட்டு, அய்யா அவர்களுடைய ஈரோட்டுக் குருகுலத்தில் இருந்த நம்முடைய மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் ஆட்சி- இவை அத்தனையும் இருந்த காரணத்தால், மிகப்பெரிய அளவிற்கு நடந்த எத்த னையோ செய்திகளைப்பற்றி அய்யா அவர்கள் சொல்கிறார்.
இன்றைக்கு ஜாதியை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்தத் துணிச்சல் எப்பொழுது வந்தது?
நூற்றுக்கு நூறு நம்முடைய பிள்ளைகள் படித்துவிட்டார்களா?
கல்விக் கொள்கையைப்பற்றி இங்கே சொன்னார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கே சங்கடப்படக் கூடிய சூழ்நிலையில், ஆரம்பப் பள்ளிக் கூடத்திலேயே சேர்வதற்கு ஆளில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சோறு போட்டு படிப்பைக் கொடுத்தால்தான், பட்டினியில்லாமல் பிள்ளைகள் படிக்கும் முடியும் என்று, உணவு கொடுத்து, அதற்குப் பிறகு உடை கொடுத்து, அதற்குப் பிறகு இலவசக் கல்வி கொடுத்தாலும், நூற்றுக்கு நூறு நம்முடைய பிள்ளைகள் படித்துவிட்டார்களா என்று சொன்னால், கேரளாவைப் போலவோ, மற்ற மாநிலங்கள் போலவோ இன்னமும் அந்த இலக்கை நாம் அடைய முடியவில்லை.
எம்.பி.பி.எஸ். படித்தாலும்,
நெக்ஸ்ட் தேர்வு - இதென்ன கொடுமை?
இந்தக் காலகட்டத்தில், அடிப்படையிலே, முளையிலேயே கிள்ளி எறிவதைப்போல, மிகப்பெரிய கொடுமை என்ன வென்றால், 5 ஆம் வகுப்புக்கு ஒரு நுழைவுத் தேர்வு - 8 ஆம் வகுப்புக்கு ஒரு நுழைவுத் தேர்வு - 10 ஆம் வகுப்புக்கு ஒரு பொதுத் தேர்வு - 11 ஆம் வகுப்பிற்கு ஒரு பொதுத் தேர்வு - இதையெல்லாம் தாண்டி கல்லூரிக்குப் போகவேண்டுமானால், அதற்கு ஒரு தேர்வு. சரி, கல்லூரிக்குப் போய், நீட் தேர்வை யெல்லாம் முடித்துவிட்டு, எம்.பி.பி.எஸ். படிப்பை படித்தாலும், அதற்குமேல் நெக்ஸ்ட் தேர்வு இதென்ன கொடுமை?
தமிழ்நாட்டில் எத்தனைப் பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அனிதா தொடங்கி இன்றுவரை யில் அந்தக் கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை.
இராஜகோபாலாச்சாரியாரை,
பதவியை விட்டு ஓட வைத்த இயக்கம்!
இப்படி வடிகட்டல். இந்த வரலாறு தெரியாதவர்கள் இந்த நாட்டில் பலர் இருக்கிறார்கள். இந்த இயக்கம் போராடிப் போராடி - குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பொழுது - இராஜகோபாலாச்சாரியார், ‘‘ஆள்வது நானா?'' என்று கேட்ட நேரத்தில், இட்லரும், இராமானுஜரும், மற்றவர் களும் யாரைக் கேட்டார்கள் - நீங்கள் யாரைக் கேட்டு செய்தீர்கள்? என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேட்டநேரத்தில், இராஜகோபாலாச்சாரியார் இப்படி சொன் னார். அதே இராஜகோபாலாச்சாரியாரை, பதவியை விட்டு ஓட வைத்த இயக்கம் இந்த இயக்கம் என்ற வரலாற்றை இன்றைய ஆளுங்கட்சியினர் மறந்துவிடக்கூடாது, புரிந்து கொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு மறுபடியும் பழைய கதை திரும்பி வருகிறது. பழைய கருப்பனாக இருந்தவர்களை மாற்றி, படிக்க வைத்து, நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கிய புரட்சி, தொடர்ச்சியாக பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற கல்விப் புரட்சிக்கு இன்றைக்குத் தடை போட நினைக்கிறார்கள்.
அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார்
இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூல். இதை எழுதியது தந்தை பெரியாரோ, நாங்களோ, கலைஞரோ அல்ல. இதை எழுதியது அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார். 101 வயதுவரை வாழ்ந்தார். அவர் நக்கீரன் பத்திரிகையில் வாரம் தவறாமல் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையின் தொகுப்புதான் இந்த நூல்.
கடைசி காலகட்டத்தில் உறுத்தல் உணர்வு ஏற்பட்டதால், இவ்வளவு நாள்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்திருக்கிறதே ஒரு கூட்டம் - இறக்கும்பொழுதாவது உண்மையைச் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதியதுதான் அந்த புத்தகம்.
சிறைச்சாலைக்குச் செல்வதென்றால்கூட, முன்ஜாமீன்கூட கேட்கமாட்டோம்
அதிலிருந்து ஒரு செய்தியை சொல்கிறேன். எங்கள்மீது கோபப்படுகிறவர்கள் கோபப்படுங்கள், ஆத்திரப்படுங்கள், திட்டுங்கள், அவதூறாகப் பேசுங்கள், வழக்குப் போடுங்கள் - அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் பெரியார் தொண்டர்கள், நாங்கள் வேறு எங்கும் போவதற்குக் கவலைப்படாதவர்கள். சிறைச்சாலைக்குச் செல் வதென்றால்கூட, முன்ஜாமீன்கூட கேட்கமாட்டோம்; ஜாமீனே கேட்கமாட்டோம், பிறகு என்ன முன்ஜாமீன். அதுவும் எங்களுக்கு மாற்று இடம்தானே தவிர வேறொன்றுமில்லை.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?''
‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' நூலில் அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்:
‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக் கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்’ என்கிற நிலை.
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்'' என்கிறார் இராமானுஜ தாத்தாச்சாரியார்.
பெண்களை, ஆரியப் பெண்கள் உள்பட அவர்கள் ‘‘நமோ சூத்திரர்கள்'' என்றுதான் அழைக்கிறார்கள்.
அடுத்த வரிதான் மிகவும் முக்கியம். இன்றைக்கு ஏன் இந்தப் போராட்டம்? ஏன் இந்த இயக்கம்? மீண்டும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? எப்போதும் தேவைப்பட்ட தைவிட, ஏன் பெரியார் இப்போது அதிகம் தேவைப்படுகிறார் என்பதற்கு இதுதான் அடையாளம்.
‘‘இந்து மதம் எங்கே செல்கிறது?'' என்ற நூலில் உள்ள வற்றைப் பார்ப்போம்:
ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனுஸ்மிருதியைக் கொண்டு வந்ததன் விளைவாகத்தான் என்ன நடந்தது? என்று சொல்கிறபொழுது இங்கே சொல்கிறார்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.
கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக் காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.
யானைக்கு மதம் பிடிக்கும்;
எங்களுக்கு மதம் பிடிக்காது
நாங்கள் இதைச் சொல்லவில்லை, இராமானுஜ தத் தாச்சாரியார் சொல்கிறார்.
ஏன் இந்து மதத்தை மட்டும் பேசுகிறீர்களே என்று சொன்னால், எங்கே புண் இருக்கிறதோ, அங்கேதான் மருந்து போடவேண்டும்.
புண் இல்லாத இடத்தில் சொறிந்துவிடவேண்டும்; அந்த இடத்தில் கட்டுப் போடவேண்டும் என்று சொன்னால், என்ன அர்த்தம்?
எங்களுக்கு இந்த மதம் பிடிக்கும், அந்த மதம் பிடிக்காது என்றில்லை. யானைக்கு மதம் பிடிக்கும்; எங்களுக்கு மதம் பிடிக்காது.
மனுதர்மம் என்ன சொல்கிறது?
.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.
இன்றைக்கு வரையில் வேலை செய்துகொண்டிருக்கிறது. இப்பொழுது அதி நன்றாகவே வேலை செய்யக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால், அதனுடைய விளைவு, இன்றைக்கு வேகமாகக் கொண்டு வந்து - அதையே இப்பொழுது ஆட்சியில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்., அதனு டைய அரசியல் வடிவமான பா.ஜ.க. - அதனுடைய அடிமை கள், ஆட்சிகள் இருக்கின்றன. அதற்குத் தலையாட்டவேண்டிய ஆட்சிகள் இருந்தால், இருக்கலாம்; இல்லையானால், அவர்களை ஒழித்துவிடுவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கட்டை விரலை வாங்கிய துரோணாச்சாரிகள் கதை இருக்கிறதே அதுபோல, மிகப்பெரிய வாய்ப்பு.
சூத்திரன் என்றால் கவுரவப் பட்டமா?
இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதுகிறார். அது என்ன வென்று சொன்னால்,
வருண அமைப்பு
ஜாதி முறை
பெரியார் தொடங்கிய போராட்டம் என்ன? சூத்திரன் என்றால் கவுரவப் பட்டமா?
பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன். நம்முடைய பெண்கள் அத்துணைப் பேரும் தாசிகள், வைப்பாட்டிகள்.
இந்த இடத்தில் கடைசியாக அய்யா சொன்னார், எனக்கு வயதாகி விட்டது; இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நான் போராட்டத்தை அறிவிக்கிறேன். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற போராட்டம்தான் அது.
உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே
என்ற வருத்தம்தான்!
நான் சாவதைப்பற்றி கவலைப்படவில்லை; என் றைக்கும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால், உங்களை யெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே என்ற வருத்தம்தான் என்று சொன்ன ஒரே தலைவர் பெரியா ரைப் போன்று இந்த நாட்டில் வேறு யாராவது உண்டா?
ஜீவாத்மாக்கள், மகாத்மாக்கள், பரமாத்மாக்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களே, யாராவது மனிதத் தன்மையைப்பற்றி கவலைப்பட்டார்களா?
மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொல்லக்கூடிய அந்த மனிதன், இவ்வளவுக் கொச்சைப் படுத்தப்பட்டு, ஆபாசப்படுத்தப்பட்டு, நம்முடைய தாய்மார்கள், நம்முடைய சகோதரிகள் காலங்காலமாக இந்த இழிவை சுமந்து கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், அந்த இழிவை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த இயக்கத்தைத் தவிர, தந்தை பெரியாரைத் தவிர வேறு விடை உண்டா? என்று தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
பெரியாரை நீங்கள் வாசியுங்கள் என்று சொல்வதைவிட, பெரியாரை சுவாசியுங்கள்!
எனவேதான், அருள்கூர்ந்து வயதானவர்கள் எப்படியாவது போகட்டும்; இளைஞர்களே, இப்பொழுது நீங்கள் சரியான திசைக்கு வந்திருக்கிறீர்கள். மேலும் ஆழமாக பெரியாரை நீங்கள் வாசியுங்கள் என்று சொல்வதைவிட, பெரியாரை சுவாசியுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்.
பெரியார் உங்களுக்கு மூச்சுக் காற்றாக இருக்கவேண்டும்; பெரியாருக்காக அல்ல; உங்களுக்காக - உங்களுடைய எதிர்காலத்திற்காக. வருங்கால சந்ததியினருக்காக.
மருந்து சாப்பிடுகிறோமே எதற்காக? மருந்து வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காகவா? மருந்து கடைக்காரர் வருத் தப்படுவார் என்பதற்காகவா? அல்லது டாக்டர் எழுதிக் கொடுத்துவிட்டார் என்பதற்காகவா? இல்லவே இல்லை. நம்முடைய நோயைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ப தற்காகத்தான்.
சமுதாய நோயைத் தீர்ப்பதற்கு,
பெரியார் என்ற மாமருந்து தேவை!
எனவேதான், பெரியாருக்குக் கவலையில்லை. ஆனால், பெரியார் நமக்குத் தேவை என்று நினைக்கும்பொழுது, நம்முடைய சமுதாய நோயைத் தீர்ப்பதற்கு, பெரியார் என்ற மாமருந்தைத் தவிர வேறு மருந்து கிடையாது.
இன்றைக்கு வெளிப்படையாகவே சொல்கிறார்கள், ஜாதி யைப்பற்றி பேசும்போது, நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் என்று இராசா அவர்கள் வருத்தப்பட்டார்களே - வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
ஏன் பெரியார் இன்னும் தேவைப்படுகிறார்?
ஏன் திராவிடர் கழகம் அழுத்தமாகத் தேவைப்படுகிறது?
தேர்தல் நேரத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பது வேறு செய்தி. அவர்களைப் பக்குவப்படுத்துவோம். இனிமேல் தமிழ்நாடு தனியாக அதனுடைய முத்திரையைக் காட்டுவது மட்டுமல்ல, தமிழ்நாட்டு வழியிலேயே இந்தியா எப்பொழுதும் நடந்துதான் வரும். அதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு இருக்கும் - பெரியார் மண் இருக்கும் - திராவிட மண் இருக்கும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் ‘ஞானகங்கை!'
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் எழுதிய புத்தகம் ‘ஞானகங்கை' - இதுதான் அவர்களுக்கு வேத புத்தகம் - வேத புத்தகத்தைவிட மிக முக்கியம்.
அந்த புத்தகத்தில் கோல்வால்கர் சொல்கிறார்,
‘‘ஞானகங்கையில், நம்முடைய சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பாகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர்.''
இந்த இயக்கம் எவ்வளவு பெரிய பிரச்சாரம் செய்திருக்கிறது என்பதன் தாக்கம்தான் அது.
எதிர் எதிர் இடையே இருக்கக்கூடிய கொள்கைகள். திராவிடம் - ஆரியம் என்பது இருக்கிறதே, அது ரத்தப் பரிசோதனையில் வருவதில்லை.
அனைவரும் உறவினர் என்பது திராவிடம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திராவிடம்.
இன்னாருக்கு இன்னது என்று சொல்வது ஆரியம்.
மேலும் கோல்வால்கர் சொல்கிறார்:
‘‘இந்த நால் வருண அமைப்பில் உருவாகிய சமுக அமைப்பினையே, சமுக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.''
நால்வருணத்தினால்தானே துரோணாச்சாரியார், ஏகலை வனிடம் கட்டை விரலை வாங்கவேண்டியதாயிற்று.
நால்வருணத்தினாலேதானே, இராம ராஜ்ஜியத்தில் என்ன செய்தார்கள்?
சூத்திர சம்பூகன் தவம் செய்தான் என்று அவர்கள் கதைப் படி, நாங்கள் எழுதியதல்ல. இராமாயணத்தில் உத்திர காண்டத்தில் இருக்கின்ற பகுதி.
இராமராஜ்ஜியம் என்று சொல்கிறார்களே, ஒரு பார்ப்பன சிறுவன் இறந்துவிட்டான் என்றவுடன், இராமனிடம் கொண்டு போய், ‘‘இராமா, உன்னுடைய ராஜ்ஜியத்தில் அநீதி நடைபெறுகிறது!'' என்றார்கள்.
என்ன அதர்மம்? என்று இராமன் கேட்கிறான்.
இதோ என்னுடைய பிள்ளை இறந்து விட்டான்.
எதனால் இறந்து போனான்? என்று இராமன் கேட்க,
சூத்திரன் தவம் செய்கிறான், அதனால்தான் இறந்து போனான் என்று சொல்கிறார்கள்.
சூத்திரனுக்கு பிராமணனே மேலான தெய்வமாம்
மனுதர்மப்படி,
மூடனானாலும், ஞானியானாலும் சூத்திரனுக்கு பிராம ணனே மேலான தெய்வம். அவன் நேரிடையாக கடவுளை தொழுவதற்கு உரிமை கிடையாது.
ஆகவே, சூத்திரனான சம்பூகன் தவம் செய்ததால், தர்மம் கெட்டுவிட்டது; அதனால், என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்கிறார்கள்.
அதற்கு என்ன செய்யவேண்டும்? என்று இராமன் கேட்க,
அதர்மத்தை அழிக்கவேண்டும் என்று இவர்கள் சொல் கிறார்கள்.
உடனே இராமன் வாளை எடுத்துக்கொண்டு செல்கிறான்.
ஊருக்கு வெளியே சம்பூகன் தவம் செய்கிறான். தவம் செய்கிறான் என்றால், கண்களை மூடிக்கொண்டு யோசனை செய்துகொண்டிருக்கிறான். இல்லாத கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான்; இல்லாத மோட்சத்திற்குப் போகவேண்டும் என்று விரும்புகிறான்.
அங்கே சென்ற இராமன், விசாரணை ஏதுமின்றி, வாளை எடுத்து சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறான்.
உடனே இறந்துபோன பார்ப்பனச் சிறுவன் உயிர்ப் பெற்று எழுகிறான்.
அதர்மம் அங்கே வீழ்த்தப்படுகிறது - ஜாதி தர்மம் வருகிறது.
இதை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று நினைக் கிறார்கள். இன்றைக்கு அதுதான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார்!
இந்த இடத்தில் அய்யா பேசுகிறார்,
தி.மு.க. ஆட்சி, அய்யா அன்றைக்கு உரையாற்றும்பொழுது கலைஞர் அவர்கள்தான் முதலமைச்சர்.
இங்கே திடீர் பிள்ளையாரை கொண்டு வந்து வைத்து விட்டார்கள்.
கே.எம்.சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் கவுன்சிலராக இருந்தார். திடீர் பிள்ளையாரை வைத்தார்கள்.
இந்தப் பிள்ளையார் எப்படி வந்தது? என்று ஜெயேந்திர சரசுவதி அவர்களிடம் கேட்டார்கள்.
அவர் சொன்னார், தவறாக சொல்லக்கூடாது; அது சுயம்பு, தானே கிளம்பும் என்றார்.
அங்கே கூட்டம் கூட ஆரம்பித்து, நிறைய பேர் உண்டி யலில் காசு போட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரே ஒரு டெவலப் என்னவென்றால், இதுவரையில் பார்ப்பான் ஏமாற்றினான்; இப்பொழுது சிவகங்கையில் நம்மாளே ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார், ஜீவசமாதி ஆகப் போகிறேன் என்று.
உடனே, அங்கே கூட்டம் கூடிவிட்டது - ஏன் கூட்டம் சேராது; சென்னையில் உள்ள கூவம் நதியை யாராவது பார்க்கட்டும், உடனே கூட்டம் சேர்ந்து அனைவரும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆகவே, இங்கே பிள்ளையாரை வைத்து, உண்டியல் வைத்து, மாலை நேரத்தில் உண்டியலில் இருந்த காசை எடுத்துக்கொண்டு போனார்கள்.
முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பு!
முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? இதுபற்றிய தகவல்களை அறிக்கையாக வாங்கி, ‘‘அறநிலையப் பாதுகாப்புத் துறை அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும்; அந்த உண்டியல் அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குப் போகும்'' என்று சொன்னார்.
பிறகு உண்டியல் வைப்பதை நிறுத்திவிட்டார்கள்.
அய்யா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தவுடன், அதற்கு முதல் நாளே பிள்ளையார் காணாமல் போய்விட்டார், எடுத்துவிட்டார்கள்.
பிறகு குமுதம் பத்திரிகையில் அதுபற்றி ஒரு செய்தி வந்தது.
தலைமைக் காவலராக இருந்த செல்வராஜ் என்பவர் 84 ரூபாய்க்கு பிள்ளையார் சிலையை வாங்கி வந்து வைத்தார் என்ற தகவல் வெளியானது.
வழக்குரைஞர்களுக்குமேல்
சட்ட அறிவுள்ளவர்கள் எங்கள் தோழர்கள்!
நாங்கள் ஆதாரத்தோடுதான் சொல்கிறோம். சந்தேகம் இருந்தால், கேளுங்கள். வழக்குத் தொடுப்போம் என்று சொன்னால், உங்களுடைய வழக்கை தூக்கி குப்பையில் போடுங்கள். நீதிமன்றத்தை நாங்கள் சந்திக்கக் கூடியவர்கள். நாங்கள் வழக்குரைஞர்; வழக்குரைஞரைத் தேடவேண்டிய அவசியமில்லை. எங்கள் ஆள் ஒவ்வொருவரும் ‘விடுதலை' படிக்கக்கூடியவர்கள். அவர்கள் வழக்குரைஞர்களுக்குமேல் சட்ட அறிவுள்ளவர்கள். ஆகையால், வழக்குகளைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
அன்றைக்கு திடீர் பிள்ளையார்; இன்றைக்கு அத்திவரதர் வருகிறார்.
ஒரே ஒரு டெவலப் என்னவென்றால், முன்பெல்லாம் அத்திவரதர் நின்றுகொண்டே இருந்தார்; இப்பொழுது படுத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், உட்கார வைக்க முடியாது; உட்கார வைத்துக் காட்டட்டும்.
இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிற பேச்சை
நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான்
அய்யா இந்த இடத்தில் பேசும்போது சொல்கிறார்,
‘‘எல்லாக் கட்சிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து, இன்றைக்கு இருக்கின்ற தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்கிறார்கள். ஒழித்தால், ஒழித்துவிட்டுப் போங்கள், எனக்கு ஒன்றும் கவலையில்லை.
தி.மு.க. ஆட்சிப் போய்விட்டால், கலைஞர் ஆட்சிப் போய்விட்டால், இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான்'' என்றார்.
எவ்வளவு பெரிய தீர்க்கதரிசனம், எவ்வளவு பெரிய தொலைநோக்கு. அன்றைக்கு அய்யா சொல்லியபடி இன் றைக்கு நடக்கிறதா? இல்லையா?
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனை பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்?
நீதிபதிகளாக இருக்கின்ற இரண்டு பேர், கொச்சியில் நடைபெறுகின்ற பார்ப்பன மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த அறிவுள்ள வர்கள் என்று பேசுகிறார்கள்.
சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா என்பவர், அவர்களைப் போல அறிவாளிகள் உலகத்தில் கிடையாது என்று பேசுகிறார்.
அதேபோன்று, நான்கு பேர் நீதிபதிகளாக உச்சநீதிமன் றத்திற்கு நியமிக்கவேண்டும் என்ற நிலை வரும்பொழுது, அந்த நான்கு பேரும் பார்ப்பனர்களைத் தவிர வேறு கிடையாது.
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனை பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்? யாருக்குமே தகுதி இல்லையா? தாழ்த்தப்பட்ட நீதிபதிகளே கிடையாதா? பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?
சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படுகிறது, பகிரங்கமாக - வெளிப்படையாகவே செய்கிறார்கள்.
பார்ப்பனர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் போடுவது கூட பரவாயில்லை. அவர்களுக்கு சீனியாரிட்டி இருக்கிறது என்று சொன்னாலும் பரவாயில்லை - அது சமூகநீதிக்கு விரோதமாக இருந்தாலும், சட்டப்படி செய்கிறார்கள் என்று சமாதானம் சொல்வதற்கு வாய்ப்பில்லை.
சீனியாரிட்டிப்படி
29 ஆவது இடத்தில் இருக்கிறார்!
நம்மாள் சீனியாரிட்டிப்படி 29 ஆவது இடத்தில் இருக்கிறார்; அவரை நியமிக்காமல், 45 ஆவது இடத்தில் இருப்பவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறார்கள். அவருக்கு முதுகில் பூணூல் போட்டிருக்கிறது.
தனிப்பட்ட முறையில் அவரைப்பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன். மற்ற பார்ப்பனர்களைப் பார்க்கும்பொழுது, கொஞ்சம் பரவாயில்லை இவர் என்று சொல்லலாம். அவரை நியமித்ததைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. எங்கள் ஆள் சீனியாரிட்டிப்படி முன்னாலே இருக்கிறாரே, அவருக்குக் கொடுத்துவிட்டுத்தானே, பின் வரிசையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
இதைக் கேட்பதற்கு நாதியுண்டா தோழர்களே, நினைத்துப் பாருங்கள்.
இப்படியே போனால், முழுக்க முழுக்க என்னாகும்? எல்லாமே பார்ப்பன மயம்; எல்லாமே வருணாசிரம தர்மம் - மனுதர்ம ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது என்றால், இதற்கெல்லாம் எதிர் சவால் விட்டு இதை நடத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால், அது தந்தை பெரியார் என்ற தத்துவத்தின் மூலமாகத்தான் இதற்கு விடை காண முடியும்.
நாடாளுமன்றத்திலும் ‘பெரியார் வாழ்க!'
இங்கே இராசா சொன்னாரே, நாடாளுமன்றத்தில் அவர்கள் ஜெய்ராம் என்று சொன்னால், நம்மாட்கள் ‘பெரியார் வாழ்க!' என்று சொல்வதுதானே இப்பொழுது வேலை செய்கிறது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே குடும்ப அட்டை - இதற்கு என்ன அர்த்தம்? பல கூட்டங்களிலும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன், இந்தக் கூட்டத்திலும் கேட்கிறேன்,
ஒரே ஜாதி என்று ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்?
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே குடும்ப அட்டை என்று சொல்கிறீர்களே, ஏன் ஒரே ஜாதி என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஒரே ஜாதி என்று ஏன் சட்டம் போடக்கூடாது? அப்படி சட்டம் கொண்டு வந்தால், உங்களுக்கு நாங்களே மாலை போடுவோமே!
சொல்ல முடியுமா உங்களால், சொல்ல முடியாது. ஏனென்றால், மனுதர்மம் உங்களை சுற்றிக்கொண்டிருக்கிறது.
ஆகவே, இந்த நிலையில், ஒரே மொழி என்று சொல் கிறீர்களே, இது யாருடைய விளையாட்டு. இது பண்பாட்டுப் படையெடுப்பு அல்லவா!
அண்ணா அவர்கள், இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்துவிட்டு சொன்னார். தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தபொழுது அண்ணா அவர்கள் சொன்னார்கள், அதை மட்டும் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
அண்ணாவினுன் முழக்கம் என் காதுகளில் இன்றைக்கும் ரீங்காரமிடுகிறது!
கலைவாணர் அரங்கத்திற்குப் பக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசிய அந்தப் பேச்சு இன்னமும் என்னுடைய செவிகளில் அது ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது; ஒலித்துக்கொண்டே இருக்கிறது - மறக்க முடியாத அந்த சொற்கள்.
அண்ணாவினுடைய முழக்கம்:
இங்கே இருக்கிறவர்கள், நான் முப்பெரும் சாதனைகளை இந்த ஓராண்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, என்னுடைய ஆட்சி செய்திருக்கிறது.
1. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம்
2. தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்
3. இருமொழிக் கொள்கை - தமிழ், ஆங்கிலம்
இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று இப்பொழுது துடிப்பதாக நான் கேள்விப்படுகிறேன்.
அவ்வளவு காலமும் அண்ணாத்துரைதான்
இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்
சரி, நீங்கள் எங்களைப் பதவியைவிட்டு விலக்கலாம்; அது முடியுமா? என்று நான் சவால் விட மாட்டேன்; முடியும். ஆனால், எங்களை நீக்கிவிட்டு நீங்கள் வந்து உட்கார்ந்தால், இதையெல்லாம் நாம் இல்லாதபோது, அவர்கள் அல்லவா செய்துவிட்டார்கள். ஆகவே, அதையெல்லாம் மாற்றலாம் என்று நினைத்தால், அடுத்த நிமிடம் மாற்றினால் என்னாகும் நம்முடைய நிலை, நாட்டினுடைய நிலை எப்படிப்பட்ட எதிர்ப்புக் கிளம்பும் என்று நினைக்கும்பொழுது, ஒரு அச்சம் உங்களை உலுக்கும் - அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாத் துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்'' என்று சொன்னார்.
அண்ணா அவர்கள் இறுதி மூச்சு அடங்கும்வரை பகுத்தறிவு, இனநலம், தந்தை பெரியார் கொள்கைகளில் உறுதியோடுதான் இருந்தார். அய்யா - அண்ணா கொள்கை களைக் கட்டிக் காத்து, அவர்கள்வழியில் நடப்போம் என்று உறுதியேற்போம்!
தூத்துக்குடி துறைமுகத் திட்டம் வெற்றிகரமாக முடிந்த தற்காக மத்திய அமைச்சர் வி.கே.ஆர்.வி.ராவ் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு அழைத்தபோதுகூட, நான் கோவிலுக்கு வருவதில்லை என்று சொன்னவர் முதலமைச்சர் அறிஞர் அண்ணா என்பதை மறக்கவேண்டாம்.
தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறது
இதைவிட மிகப்பெரிய அரசியல் விளக்கம் வேறு கிடை யாது. அந்தக் காலகட்டம் இன்றைக்கும் இருக்கிறது. அதனு டைய விளைவுதான் நண்பர்களே, தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
ஒருமொழிதான் அடையாளம் என்று நீங்கள் சொல்வது இருக்கிறதே, நிச்சயமாக வீண்வம்பை விலைக்கு வாங்கு கிறீர்கள்.
நீங்கள் விதையுங்கள் - அதனுடைய விளைவுகளை நீங்களே அறுவடை செய்யுங்கள்!
இன்றைக்குக்கூட செய்தியாளர்கள் கேட்டபொழுது ஒரு நல்ல உதாரணத்தை சொன்னேன்,
‘‘காற்றை விதைத்து புயலை அறுவடை செய்ய ஆயத்த மாகிறார்கள்'' என்று.
விதைக்கட்டும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்மூல மாகத்தான் ஒரு பெரிய ஆட்சியே இங்கே வந்தது. அந்தக் காலத்திலும் சரி - இயக்கமே வந்தது.
அதுபோலத்தான், மொழியை, பண்பாட்டை எதிர்த்து நீங்கள் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தால், வாருங்கள், நீங்கள் விதையுங்கள் - அதனுடைய விளைவுகளை நீங்களே அறுவடை செய்யப் போகிறீர்கள்.
உரிமைப் போருக்கு என்றைக்கும்
துணை நிற்கும்
அதனுடைய விளைவுதான், பெரியார் என்ற மாபெரும் தத்துவம். அந்த மாபெரும் எதிர்நீச்சல் தத்துவம். அந்த அறிவாயுதம், இந்த உரிமைப் போருக்கு என்றைக்கும் துணை நிற்கும்.
அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் பெரியார் தேவை!
பெரியார் அன்றைக்கும் தேவை!
இன்றைக்கும் தேவை!
நாளைக்கும் தேவை!
எப்பொழுதும் தேவை!
எங்கும் தேவை!
உலகம் உணர்ந்திருக்கிறது!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 19 .9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக