வியாழன், 19 செப்டம்பர், 2019

தந்தை பெரியார் இறுதியாக உரையாற்றிய பெரியார் நினைவுத் திடலில் பெரியார் 141 ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டம்

எந்த இடத்திலும் அறிவு நாணயத்தோடு கொண்ட கொள்கையை முழங்குபவர் பெரியார்!

ஒரு கருத்துக் கோவை



சென்னை, செப்.18 நேற்று (17.9.2019) சென்னையில் நடை பெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், எந்த இடமாக இருந்தாலும் தனது கொள்கையை வெளிப் படையாக அஞ்சாமல் எடுத்துக் கூறும் அறிவு நாணயத்துக்கும், நேர்மைக்கும் சொந்தக்காரர் தந்தை பெரியார் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
தந்தை பெரியார் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா தமிழ்நாட்டையும் கடந்து, இந்தியாவையும் தாண்டி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் எழுச்சியுடன் நடைபெற் றுள்ளது.
எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் எழுச்சி அதிகமாகக் காணப்பட்டது. மாணவர்களும், இளைஞர்களும், மகளிரும் கிளர்ந்தெழுந்து விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
இந்து மதவாதம் திமிர் முறித்து, தறிகெட்டுத் தாண்டவ மாடுவதால் இந்த வெறியை விரட்டியடிக்க ஈரோட்டுச் சவுக் குத்தான் சரியானது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!
சென்னையில் எல்லாப் பகுதிகளிலும் அய்யா விழா நடைபெற்றது. சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தோழர்களுடன் திரண்டு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.
மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் இறுதியாக உரையாற்றிய (19.12.1973) பெரியார் நினைவுத் திடல் அருகில் தந்தை பெரியார் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை - தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
கூட்டத்தில் பேசிய அனைவரும், பெரியார் வாழ்ந்த காலத்தைவிட அவர் மறைந்த இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாகப் பேசப்படுகிறார்; அவரின் தேவை முன்னிலும் இப்போது தேவை என்று உணரப்படுகிறது என்பது குறித்துப் பேசினர்.
கூட்டத்தில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் - இதே இடத்தில்தான் 1973 டிசம்பர் 19 அன்று தந்தை பெரியார் தன் இறுதி உரையை நிகழ்த்தினார். அது மரண சாசனம்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்ததை எடுத்துக் கூறினார்.
'சூத்திரனாக விட்டு சாகப் போகிறேனே!'

உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப் போகிறேனே'' என்று தந்தை பெரியார் கூறியதை தமிழர் தலைவர் எடுத்துக் கூறியபோது, கூடியிருந்த மக்கள் மத்தியிலே நிசப்தம் மேலோங்கி நின்றது.
எல்லாக் கட்சிக்காரர்களும் ஒன்றாக சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒழித் தால் ஒழித்துவிட்டுப் போங்கள்; எனக்கு ஒன்றும் கவலை யில்லை. தி.மு.க. ஆட்சி போகுமானால், என்ன நடக்கும்? கலைஞர் ஆட்சி போகுமானால் என்ன நடக்கும்? இன்றைக் குத் திருட்டுத்தனமாக, மறைவாகப் பேசுகிற பேச்சை, நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான்'' என்றார் தந்தை பெரியார்- அந்தக் கடைசிக் கூட்டத்தில்.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு எத்தகையது என் பதை நேரில் இப்பொழுது பார்த்துக் கொண்டுதானே இருக்கி றோம்.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று கூறுவோர் எல்லோரும் ஒரே ஜாதி என்று சொல்லவேண்டியதுதானே - அதைக் கூறுவதில் என்ன  தயக்கம்? என்ற கேள்வியை தமிழர் தலைவர் எழுப்பியபோது, அதில் உள்ள நியாயத்தை அனைவரும் உணர்ந்தனர். தொடர்ந்து இந்த அரும்பெரும் கேள்வியை திராவிடர் கழகத் தலைவர் முன்வைத்து வருகிறார் - பதில்தான் இல்லை. தமிழர் தலைவரின் இந்தக் கேள்வி முதனிலையில் செங்குத்தாக எழுந்து நிற்கிறது.
இந்து மதத்தைப்பற்றி ஏதோ நாங்கள்தான் விமர்சிக்கிறோம் என்று கருதக் கூடாது என்று சொன்ன கழகத் தலைவர், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ் வதியின் முக்கிய ஆலோசகராக விளங்கிய அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலிலிருந்து சில முக்கிய எடுத்துக் காட்டுகளை ஆதாரத்துடன் விளக்கினார்.
ஆரியர்கள் சிந்து நதி இமயமலை என பள்ளத்தாக்கு களைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தனர். நதிக்குக் கரையில்லாத காலமது, காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. வரும் பெண்கள் வரலாம், வராதவர்கள் இங்கேயே இருக்க லாம். ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம்  கிளம்பி இந்தியாவிற்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி... ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்'' என்று அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் சொன்னதையும் எடுத்துக் காட்டினார்.
இந்த மனுதர்மத்தைத்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆ.இராசா எம்.பி.,



கூட்டத்தில் பேசிய தி.மு.க. கொள்கைப் பரப்புச் செய லாளர் ஆ.இராசா எம்.பி., அவர்கள் இந்தியாவில் தமிழ்நாடு தனித்தன்மையாக விளங்குவதற்குக் காரணம் தந்தை பெரியாரே என்று கூறினார்.
நாடாளுமன்றத்திலே நாங்கள் பெரியார் வாழ்க என்று முழக்கமிடுகிறோம். பி.ஜே.பி.யினரோ ஜெய்ராம்' என்று முழக்கமிட்டனர்.
எங்களைப் பார்த்து அவர்கள் கேட்டார்கள், Who is Peiryar? என்று கேட்டனர். நாங்கள் திருப்பிக் கேட்டோம், Who is Rama??  என்று.
பெரியார் வாழ்ந்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார் - இது நடந்த வரலாற்றுச் செய்தி. உங்கள் இராமனோ வெறும் புராண, இதிகாசக் கற்பனைப் பாத்திரம். இரண்டையும் ஒப்பிடு வது தவறு என்றோம்.
ஜாதி மாநாட்டுக்குச் சென்றாலும், தந்தை பெரியார் ஜாதி உயர்வு பேசும் போக்கினைக் கண்டித்தார். உங்களுக்குக் கீழே இருக்கும் ஜாதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால், உங் களுக்கு மேலே இருக்கும் ஜாதியைப்பற்றி என்ன நினைப்பது என்ற வினாவை அந்த ஜாதி மக்கள் மாநாட்டிலேயே அழுத்தமாக எழுப்பிய அறிவு நாணயத்துக்குச் சொந்தமான ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று மானமிகு ஆ.இராசா சொன்னபொழுது, கூட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பு.
அத்திவரதரைத் தரிசிக்க இலட்சக்கணக்கான மக்கள் கூடினார்களே - உங்கள் பகுத்தறிவுக் கொள்கை தோற்று விட்டதா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எங்களின் பதில், அப்படி அத்திவரதரைத் தரிசிக்கச் சென்றவர்கள் பி.ஜே.பி.,க்கு வாக்களிக்கவில்லையே - மாறாக, எங்களுக் குத்தானே வாக்களித்தார்கள் என்று மானமிகு ஆ.இராசா எழுப்பிய வினாவுக்கு இதுவரை எந்தப் பதிலையாவது சொல்ல முடிந்ததா? பெரியார் ஆன்மீகத்தையும் கடந்து மதிக்கப்படும் தலைவராக தமிழ்நாட்டில் ஒளிவீசுகிறார்!
அம்பேத்கர் கூறியதென்ன?

அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஒரு கருத்தையும் ஆ.இராசா அவர்கள் பதிவு செய்தார். இந்து மதத் தத்துவத்தின் பெயரால் இங்குப் பிராமணர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார்கள் என்ற அம்பேத்கரின் கருத்து மிக முக்கியமானது.
(இன்றுகூட கேரள உயர்நீதிமன்ற நீதிபதியம், மக்களவை சபாநாயகரும் பிராமணர்கள் பிறவியில் உயர்ந்தவர்கள் என்று தாங்கள் வகிக்கும் அரசியல் சாசனத்தின் சரத்தைக் கூடத் தூக்கி எறிந்து பேசுவதைப் பார்க்கும்பொழுது, ஆ.இராசா அவர்கள், அண்ணல் அம்பேத்கர் கூற்றினை எடுத்துக் கூறியது துல்லியமானதுதானே!)
பேராசிரியர் சுப.வீ.



இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், நீதிமன்ற நீதிக்கும் நீதி சொன்ன'' தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை எடுத்து விளக்கினார். கடவுளைக் கும்பிடுகிறேன்'' என்பது வேறு; கும்பிடுகிறேன் சாமி'' என்ற நிலை வேறு.
இந்த இரண்டாவது நிலையைத்தான் நாம் முக்கியமாகக் கருதுகிறோம். மாற்றவும் விரும்புகிறோம். அதுதான் தந்தை பெரியார் விரும்பிய சமூக மாற்றம் என்றார் சுப.வீ.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆர்.எஸ்.மலையப்பன். அவர் அளித்த தீர்ப்பினை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன கருத்தினைக் கடுமையாக விமர்சித்தார் தந்தை பெரியார்.
மலையப்பன் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அதேநேரத்தில், எல்லையைத் தாண்டி அவர் மாவட்ட ஆட்சியராக இருக்கத் தகுதியில்லை என்றும், அவருக்குப் பதவி உயர்வு கொடுக்கக்கூடாது என்றும் தம் மனப்போக்கில் தீர்ப்புரையில் எழுதியதைக் கண்டித்துத்தான் தந்தை பெரியார் போர்க் குரல் கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால், அந்தத் தீர்ப்பையே பகிரங்கமாக ஒரு பொதுக்கூட்டத்தில் கொளுத்தினார்.
இவ்வளவுக்கும் மாவட்ட ஆட்சியர் மலையப்பன் அவர்களை தந்தை பெரியார் சந்தித்ததுகூட கிடையாது.
தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீதிமன்றத்திலே தந்தை பெரியார் எதிர்த்து வழக்காடவில்லை; மாறாக ஓர் அறிக்கையை தந்தை பெரியார் படித்தார் (23.4.1957)
நீதிபதிகள் ஆசனத்தில் இருந்தவர்கள் இருவரும் பார்ப்பனர்களே! அத்தகைய சூழலில் பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு'' என்று சொன்னதை பேராசிரியர் சுப.வீ. எடுத்துக்காட்டியதன்மூலம், எந்த இடத்திலும், எவ்வளவு உயரமான அதிகாரம் படைத்த இடங்களிலும்கூட தன் கருத்தை ஒளிவுமறைவின்றித் தெரிவிக்கும் கொள்கைக்கு - அறிவு நாணயத்துக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார் என்று அழகாக எடுத்துக் கூறினார் பேராசிரியர் சுப.வீ.
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கடவுள்பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்தின் ஆழத்தை விளக்கினார்.
தேவையற்ற இடம் கடவுள் இல்லாத இடம் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தினை விளக்கினார்.
- விடுதலை நாளேடு, 18.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக