புதன், 18 செப்டம்பர், 2019

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் சூளுரை

விழிப்போடு இருப்போம் - சூளுரை எடுப்போம்!


பகுத்தறிவுப் பகலவன் என்று பார் போற்றும் தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா இன்று! (17.9.2019).
அகிலம் முழுவதும் அறிவு ஆசானின் பிறந்த நாளைக் கொண்டாடுவது, வெறும் சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல.
நோய் தீர்க்கும் மாமருந்தைப் பாது காத்து அவ்வப்போது, மானிடத்தை வாட் டும் உரிமை பறிப்புக்கள் - எங்கே எந்த உருவத்தில் ஊடுருவினாலும், அதனைத் தடுத்து நிறுத்தும் போராட்ட உணர்வை - நோய் எதிர்ப்பு ஆற்றலை அள்ளித் தருவது பெரியார் என்ற தத்துவமே - லட்சியங்களே!
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல; தத்துவங்கள் - திருப்பங்கள் - அறிவாயுதமும் கூட! சமூக விஞ்ஞானத்தின் புது பதிப்பு!
அவர் தொடங்கிய மனித உரிமைப் போர், சமத்துவத்தை நோக்கி, சரியாகவே தொடர்ந்து கொண்டுள்ளது!
அந்தச் சுயமரியாதைச் சூரியனின் ஒளி யால், அறிவுப் பயிர்கள் - அறிவியல் சார்ந்த வாழ்வு பசுமையோடு பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்து பலன் தருகிறது!
பெரியாருக்குமுன் - பெரியாருக்குப் பின்!

பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின்'' என்று நமது நாட்டு வரலாற்றைப் பகுத்துப் பார்த்து, ஆராய்ந்தால் ஆட்சிக்குப் போகாமல் ஆளுமையோடு அதிசயக்கத் தக்க சரித்திர சாதனைகளைச் செய்தவரான பெரியார் அவர்களை ஏடுகளும், எழுத்தா ளர்களும் இருட்டடித்த காலம் மாறி, ஆராய்ச்சித் தலைப்பாகவும், ஆய்வுக்கான கள நாயகராகவும் இன்று உயர்ந்து நிற்கின்றார்!
மனிதப் பற்றும், அறிவுப் பற்றும், வளர்ச்சிப் பற்றுமே தவிர எனக்கு எந்தப் பற்றும் கிடையாது'' என்று கூறியவரின் கொள்கை லட்சியங்களின் பாய்ச்சலுக்கு எல்லை - பரந்த மானிடப் பரப்பு முழு வதுமே!
மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!

அதனால்தான், அந்தத் தொண்டு செய்து பழுத்த பழத்தின் மண்டைச் சுரப்பை'' உலகு தொழுகிறது (பின்பற்று வதில் முனைப்புக் காட்டுகிறது).
பற்றுக பற்றற்றான் பற்றினை' என்று பற்றிக்கொண்டு பயன்பெறும் பற்றற்ற தொண்டர்கள், தோழர்கள், போராட்ட வீரர்கள் - பற்பல நாடுகளிலும், பகுதி களிலும், தங்களின் பிணிப் போக்கிட பெரியார்' என்ற மாமருந்தே சரியானது என்று உணரத் தொடங்கி, அவரைக் கண்டறியாத இளைய தலைமுறை ஈர்க்கப்பட்டு, தோள் தட்டி அணிவகுத்துப்  பணி முடிக்க ஆயத்தமாகி நிற்கிறது!
நெருப்பில் எப்போதும் அழுக்கு இருக்காது
அவர்தம் பொறுப்பில் பழுதும் இருக் காது.
புத்தத்தை இந்நாட்டில் எரித்த ஆரிய நெருப்பு
அம்பேத்கரை நெருங்கிப் பார்க்கிறது!
பெரியார் தத்துவத்திடம் நெருங்கவே அஞ்சுகிறது!
அம்பேத்கர் கட்டை அல்ல -
எரிந்து கருகிச் சாம்பலாக!
மாறாக, தகத்தகாய தங்கத் தகடு; மேலும் மெருகேறி மின்னுமே தவிர, பொசுங்கி விடாது!
ஆனால், பெரியார் எரிமலையாகவே இருப்பதால்தான், வெறும் அரசியல்
கோணத்தில்கூட அய்யாவை ஆரியம்
அண்ட முடிவதில்லை! இது ஒரு மாபெரும் மகத்தான உண்மையும்கூட!
பதவி, புகழ், பட்டங்கள் எல்லாம் அவருக்குத் தூசுகள்.
அவர் துறவிக்கும் மேலான தொண் டறத்தின் உருவம்.
ஆசாபாசங்கள் அவரது தத்துவங்களை - கொள்கைகளை கபளீகரம் செய்ய முடியாது.
1938 இல் தந்தை பெரியார் துவக்கிய மொழிப் போர் - ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்த போர் இன்றும் தொடரும் சூழல் -
எனவே, இன்றும் பெரியார் தேவைப்படு கிறார்!
ஜாதிக்குப் புத்துயிர் ஊட்ட நாடாளு மன்றத்தின் நடுவரே, பார்ப்பனர்களின் பெருமையைப் பேசி ஒரு புதிய சர்ச்சை யைத் துவக்குகிறார்.
சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் பட்டாங் கமாய் பூணூலை உருவி விட்டு மாநாடு போட்டு முகத்திலிருந்துப் பிறந்தவர்கள் என்று கூச்சலிடுகிறார்கள்!
சமூகநீதிக்குச் சவால்!

பிறவி பேதம் - தேவை என்று பகிரங்கப் பிரகடனங்களைச் செய்து நியாயப்படுத்து கின்றன பூணூலை உருவிக் கொண்டு வந்து நிற்கும் பார்ப்பனக் கிழங்கள்கூட!
சமூகநீதியைப் புதைக்க, குழிவெட்ட,  மண்வெட்டி எடுப்பதும், பிறகு போட்டு விட்டு மறைப்பதும், மாறி மாறி மத்திய அர சியலை ஆட்டிப் படைக்கும் அமைப்பாளர் களின் அன்றாட வித்தைகளாகவே வரும் நிலையில், பெரியார் என்ற லட்சியம்தானே போர்க் கருவி - போராட்டக் களங்களில்!
காலம் கற்றுத் தந்த பாடம்!

ஒரு நூற்றாண்டில் பெற்ற வளர்ச்சியை தலைகீழாக்கும் கடும் வேலையில் ஈடுபடும் ஆரியத்திற்குப் பதிலடி கொடுக்க நமக்குத் தேவைப்படும் ஒரே ஏவுகணை!
பெரியார்! பெரியார்! பெரியார்! இது காலம் நமக்குக் கற்றுத்தரும் பாடம் - பெற்றுத்தந்த கருணை மழை!
அருமை இளைஞர்களே, மகளிர் தோழர்களே, கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை, மானமும் அறிவுமே எங்கள் தேவை என்போம்!
பெரியார்தான் - நீங்கள் ஏந்த வேண்டிய ஒரே ஆயுதம்!
வெற்றிதான் ஒரே இலக்கு!

வெற்றிதான் நமது ஒரே இலக்கு! எனவே, பெரியார் வாழ்க! என்ற முழக்கத்தின் தனிப்பொருள் - என்றும் விழிப்போடு இருந்து, காப்போம் நம் உரிமைகளை, அதற்காக எந்த விலையும் தரத் தயார் என்ற சுயமரியாதை பொங்கும் சூளுரையைப் புரிந்துகொள்ளுங்கள்!
எனவே, பெரியார் தேவை, இன்றும்! என்றும்!!


கி. வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்,
சென்னை
17.9.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக