ஞாயிறு, 25 நவம்பர், 2018

93 வயது பெரியார் பெருந்தொண்டர் இரா.கோவிந்தசாமி பேசுகிறார்

(செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் இரா.கோவிந்தசாமி இதோ பேசுகிறார்)
நான் பிறந்த ஊர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு பின்புறம் சுமார் 3 கி.மீ தூரத்திலுள்ள ரெட்டிபாளையம் என்கிற ராமநாதபுரம் கிராமம் ஆகும். எனது தந்தையார் மா.கோ. ராமசாமி, தாயார் நீலம்பாள் அம்மையார். என்னுடைய பிறந்த நாள் 26-07-1926 ஆகும். என் தந்தையார் அந்த காலத் திலேயே ஒரு தமிழ்வைத்தியர் ஆவார். இராமாயணம், மகாபாரதம், போன்ற புராணங் களை நன்கு கற்றவர். அந்த நூல்கள் எல்லாம் எங்கள் வீட்டிலேயே இருந்தன. நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த போது, கிராம மக்களை எல்லாம் கூட்டி, இரவு நேரத்தில் இராமாயண, மகாபாரத புராணங் களை என் மூலமாக கதாகாலட்சேபம் செய்யச் சொல்லுவார். ஆதலால் நானும் அந்த புராணங் களில் உள்ள கருத்துகள் உண்மையென நம்பி இருந்தேன். நான் என் ஊரில் இருந்த 4ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் படித்து விட்டு, மேல்படிப்பிற்காக தஞ்சாவூர் வந்தேன். 1942இல் ESLC 
எனப்படும் 8ஆம் வகுப்பு படிப்பு முடித் தேன். அப்போது 2ஆவது உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம், விமானத்தில் இருந்து குண்டுவீசி, பொதுமக்கள் தாக்கப்பட்டால் அவர்களை, எப்படி காப்பது என்பதற்காக அரசினால், ARP (Department of Airraid Pre causion) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் நான் சேரும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது எனக்கு மாதச்சம்பளம் ரூ.15 சுமார் 2 ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தேன். 1945ஆம் ஆண்டு, உலகப்போர் முடியும் நிலையில் இருந்தபோது, ARP-படை கலைக்கப்பட்டது. என் வேலையும் போய் விட்டது. வேலைக்கு வேலையும் போய், படிப்புக்கு படிப்பும் போய் விரக்தியுற்ற நிலையில் வேலை தேடி அலைந்து கொண்டி ருந்தேன். 1945 ஏப்ரல் மாதத்தில் காவல் துறையில் சேர்ந்தேன். கோயம்புத்தூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 6 மாதங்கள் பயிற்சி பெற்று, அக்டோபர் 1945இல் விழுப்புரம் இரயில்வே காவல்நிலையத்தில் பணியில் அமர்த்தப் பட்டேன். அப்போதெல்லாம் காவல்துறையில், விடுதலை பத்திரிகையையும், திராவிடர் நாடு பத்திரிகையையும் படிக்காத காவலர் களே இல்லை என்றால் அது மிகையாகாது. நான் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங் களில் மூழ்கி, மூட பக்தியில் இருந்தபடியினால் எனக்கு அந்த நிலை அதிர்ச்சியையும், மாற்றத் தையும் உண்டு பண் ணியது. மெல்ல, மெல்ல அவர்களை பார்த்த நானும், என்னுடைய மூடக்கொள்கைகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். என்னை ஒரு பகுத்தறிவுவாதி யாகவும், பெரியார் தொண்டனாகவும், மாற்றியதில் என்னுடன் பணிபுரிந்த தலைமைக் காவலர் திருவாரூர் மானமிகு கோவிந்தசாமி செட்டியார் அவர்களும், காவலர் எண் 279 சாமுயேல் என்பவர்களுமே காரணம் ஆவார்கள். அவர்களை நினைக்காத நாள் இல்லை .

பிறகு, 1947ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் சென்னை சென்று சிந்தாதரிப் பேட்டையில் இருந்த பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களை முதன் முதலாக சந்தித்தேன். முன்பின் அறிமுகமில்லாத சிறுவனாக இருந்த என்னை அய்யா அவர்கள் அன்போடும், பண்போடும் வரவேற்று, சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நாள் மடமையில் ஊறிக் கிடந்த என்னை மனிதனாக ஆக்கிய நாள் ஆகும். அது முதல் அய்யாவின் கொள்கைகளை முழுமையாக ஏற்று அவர்கள் பேசும் பொதுக் கூட்டங் களில் கலந்து கொள்வதும் விடுதலை திராவிட நாடு போன்ற இயக்க பத்திரிகைகளை படிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டேன்.

நான் எந்தெந்த ஊருக்கு மாற்றி சென்றாலும், அந்தந்த ஊரில் உள்ள திராவிடர் கழக தோழர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கழகக் கொள்கைகளை பரப்புவதில் ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு தஞ்சாவூரில் 1955இல் திருமணம் நடந்தது. என் மனைவியின் பெயர் புஷ்பம் அம்மையார் ஆவார்கள். எங்களுடைய திருமணம் அன்றைய தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் தஞ்சை இராச கோபால், பள்ளி அக்கிரகாரம் ஆளவந்தார் இவர் களின் தலைமையில் நடைபெற்றது. நான் புரோகிதன் அற்ற சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதால் எனது உறவினர்களில் பாதிப்பேர் திருமணத்தில் கலந்து கொள்ள வில்லை.

பிறகு நான் படிப்படியாக பதவி உயர்வு பெற்று, இறுதியாக உதவி ஆய்வாளராக ஆனேன். 1973ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு மாற்றலானேன். அம்மாவட்டத்தில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், சாலவாக்கம், கூடுவாஞ்சேரி, சிறீபெரும்புத்தூர் செங்கல் பட்டு முதலிய ஊர்களில் பணியாற்றி 30.6.1984இல் பணி ஓய்வு பெற்றேன். இந்த மாவட்டத்தில் பொறுப்பி லிருந்த சி.பி.ராஜ மாணிக்கம், டி.ஏ.கோபால், ஜானகிராமன் முதலிய கழகத்தினருடன்  தொடர்பு கொண்டு பணியாற்றினேன். பணி ஓய்வு பெற்றவுடன் செங்கல்பட்டிலேயே தங்கி விட்டேன். அப்போது செங்கல்பட்டில், செங்கல்பட்டு நகர திராவிட கழகத்தில் இரயில்வேயில் பணியாற்றிய ஆர்.கே. கோபால்சாமி, அஞ்சல் அதிகாரி கோவிந்த ராஜன், சோடாக் கடை கங்காதரன், ரயில்வே நிலையத்தில் தேநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த சி.கே.மதுரை முத்து ஆகிய நான்கு பேர் தான் இருந்தனர். தொய்வான நிலையில் இருந்த செங்கல்பட்டு நகர திராவிட கழகத்தை வளர்க்க வேண்டும் என்ற முடிவெடுத்து பாடுபட்டேன். நான் பணியி லிருந்து ஓய்வு பெற்றபின் பல பொதுக் கூட் டங்கள், நிகழ்ச்சிகளையும், நடத்தியிருக்கிறேன்.  கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று கைதாகி சிறை சென்று இருக்கிறேன். கலியப்பேட்டை கிராமத்திலும், செங்கல் பட்டு நகரிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் நிறுவுவதில் எனது பங்கும் உண்டு. எனது வாழ்நாள் இறுதிவரை கழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

எனக்கு தற்போது 92 வயது முடிந்து (26.7.2018 அன்று முதல்) 93 நடக்கிறது. நான் பணி ஓய்வு பெற்ற பிறகு கழகத்தில் இணைந்து முதன் முதலாக செங்கல்பட்டு நகரில் நடத்திய முதல் இரண்டு கூட்டங்களின் துண்டு அறிக்கை களின் நகல்கள் இத்துடன் இணைத்து இருக்கிறேன். தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

- விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக