வெள்ளி, 2 நவம்பர், 2018

தாம்பரம் பெரியார் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் போர் முரசு!

ஜனநாயகம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மனுதர்மத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் போடுகிறார்கள்

இந்துத்துவாவின் முகத்திரையைக் கிழித்து  தமிழர் தலைவர் சங்க நாதம்




சென்னை, அக்.31-  ஜனநாயகம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, மனுதர் மத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் போடுகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  25.9.2018 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாக இந்தத் தாம்பரம் நகரில் நடத்தப்படுகின்ற இந்த சிறப்பு மிகுந்த எழுச்சி வாய்ந்த பெரியார்  பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாம்பரம் நகர தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் அருமையான கருத்துகளை தோழர்கள் இங்கே எடுத்து வைத்தார்கள். அவர்களுடைய கருத்துகளை யொட்டியே என்னுடைய உரையும் இருக்கும்.

பெரியார் செய்த புத்தகப் புரட்சி


வானொலியில் இந்த ஆண்டு உரையாற்றுவதற்காக என்னை அழைத்தார்கள். 12 நிமிடங்கள் உரையாற்றினேன்.  பெரியார் செய்த புத்தகப் புரட்சி என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். கடந்த 90 ஆண்டுகளாக படிக்காத ஒரு சமுதாயத்தை, அதைப் படிக்க வைத்து, மாலை நேரக் கல்லூரியாக, பேராசிரியராக, தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, அவருடைய புத்தகங்களைப் படிக்க வைத்தார்.

இங்கே மணியம்மை அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், நாங்கள் எல்லாம் படித்து வழக்குரைஞர்களாக ஆகியிருக்க முடியுமா? என்று.

உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும், நம்முடைய முத்தையன் அவர்களுடைய மகள் இங்கே வந்திருக்கிறார். சீனாவில் டாக்டர் பட்டம் பெற்று இங்கே வந்திருக்கிறார்.

ரஷ்யாவில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் படித்துவிட்டு நம் பிள்ளைகள் வருகிறார்கள். சாதாரணமாக, ஒரு பெண் பிள்ளையை படிப்பதற்குத் தனியாக அனுப்பு வார்களா?

தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்...


30 ஆண்டுகளுக்குமுன்பு பக்கத்திலிருக்கும் செங்கல்பட் டிற்குச் செல்வதற்குக்கூட பத்திரமாகப் போ, பார்த்துப் போ என்று சொல்வார்கள். இன்றைக்கு இருக்கின்ற துணிச்சல் அப்பொழுது கிடையாது. இன்றைக்கு இந்த அளவிற்கு மாறுதல் வந்திருக்கிறது என்றால், அதோ உருவமாக நிற்கிறாரே - சிலையாக நிற்கிறாரே - சீலமாகத் திகழ்கிறாரே அந்த அறிவு ஆசான் தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்கா விட்டால்,

இந்தக் கேள்வியை நீங்கள் நினைத்துப் பாருங்கள் - இது ஒரு கட்சிக்குச் சொந்தமல்ல - ஒரு இயக்கத்திற்கு மட்டும் சொந்தமல்ல. அந்த வகையில், இந்த தாம்பரத்தில் உரை யாற்றுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

காரணம் என்னவென்றால், தந்தை பெரியார் அவர் களுடைய புகழைப் பரப்புவதில், நன்றி காட்டுவதில், தமிழ் நாட்டில் முதல் நகரம் தாம்பரம்தான். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே. இந்தத் தகவல், தாம்பரத்தில் உள்ள பல பேருக்குத் தெரியாது.

பெரியார் ராமசாமி நகர்


இங்கேதான், அய்யா பெயரில் முதன்முதலாக பெரியார் ராமசாமி நகர் உருவாயிற்று.


நீதிக்கட்சி, நம்முடைய திராவிடர் இயக்கம் - அந்தத் திராவிடர் இயக்கத்தினுடைய மாவட்டக் கழகத் தலைவர் ஜில்லா போர்டு தலைவராக இருந்தவர் திருவொற்றியூர் டி.சண்முகம் அவர்கள்.


அவருடைய காலத்தில்தான், தாம்பரம் பெரியார் நகர் வந்தது. ஆக, பெரியாருடைய தொண்டை முதலில் அங்கீகரித்த ஒரு பகுதியில், இந்த மேடையில் அமர்ந்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


எனவே, அய்யா அவர்களைப் பொறுத்தவரையில், இங்கே உரையாற்றிய கழக துணைத் தலைவர் அவர்களும் சொன்னார்கள், நம்முடைய தோழமைக் கட்சித் தோழர்கள் அத்துணை பேரும் மிகச் சிறப்பாக சொன்னார்கள். அய்யாவினுடைய தொண்டு எப்படிப் பட்டது என்பதை.


பெரியாருடைய கொள்கை என்பது எப்பொழுதும் தேவைப்படும்!


அய்யாவினுடைய கொள்கை என்பது எப்பொழுதும் தேவைப்படும் ஒன்று. மருத்துவக் கல்லூரிகளை மூடிவிட முடியுமா? மருத்துவமனைகளை மூடிவிட முடியுமா? மருந்துக் கடைகளை மூடிவிட முடியுமா?

மருந்து கடைகள் இனிமேல் தேவையில்லை, மக்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்; வியாதிகள் எல்லா வற்றையும் ஒழித்தாயிற்று என்றால்,

புது வியாதி வரும். பழைய வியாதியைத் தீர்ப்பதற்கு மருந்து இருக்கும். ஆனால், புது வியாதிகள் வந்துகொண் டிருக்கின்றன. பறவைக் காய்ச்சல் என்கிறார்கள்; பன்றிக் காய்ச்சல் என்கிறார்கள்;

டெங்கு காய்ச்சல் என்கிறார்கள்

ஒவ்வொரு காய்ச்சலுக்கும் மருந்து தேவைப்படுகிறது. மேற்கண்ட காய்ச்சல்களுக்கு மருந்து கொடுத்தால், உடனே போய்விடும்.

ஆனால், மூடநம்பிக்கைக் காய்ச்சல்,

தீண்டாமைக் காய்ச்சல்,

ஜாதிக் காய்ச்சல்,

பெண்ணடிமை காய்ச்சல்

போன்றவையெல்லாம் அவ்வளவு சுலபத்தில் தீராது.

கொஞ்சம் மேலே நிமிர்ந்து பாருங்கள், நிலா இருக்கிறது. காலையில் செய்தியைக் கேட்பதற்காக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பெரியார் எப்பொழுதும் தேவைப்படுகிறார்,

திராவிடர் கழகத்திற்கு எப்பொழுதும் வேலை இருக் கிறது என்பதற்கு அடையாளம்,

ஒரு தொலைக்காட்சியில் இரண்டு பேர் உரையாடு கிறார்கள், நிலாவில் சாய்பாபா தெரிகிறார் என்று.

நிலத்தில் இருந்த மனிதன்

நிலாவிற்குப் போய்விட்டான்.

நாம் குழந்தைகளாக இருந்தபொழுது, நமக்கு என்ன பாட்டுப் பாடி காட்டுவார்கள்.

நிலா நிலா ஓடிவா!

நில்லாமல் ஓடிவா!!

என்று நீண்ட நாள்களாகப் பாட்டுப் பாடிக் கொண்டி ருந்தோம்.

நிலா ஓடிவராது; நிலாவிற்கு நாம்தான் செல்லவேண்டும் என்பதை அறிவியல் ரீதியாக எடுத்துக்காட்டி, நிலாவில் கால் வைத்தார் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்.

நம்முடைய கலைஞர் அவர்கள் திரைக்கதை எழுதிய திரைப்படம் எங்கள் தங்கம் என்பது. அந்தத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் பகுத்தறிவு காலட்சேபம் செய்வார்.

எம்.ஜி.ஆர். கட்சிக்காரர்களுக்கே இன்றைய காலகட்டத் தில் அந்தக் காலட்சேபம் தேவை. ஏனென்றால், பகுத்தறிவு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர். அவர் களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதோடு நின்றுவிடக் கூடாது. ஒருவருக்கு நூற்றாண்டு விழா எடுத்தால், அவரு டைய கொள்கைக்கு விழா என்று அர்த்தமே தவிர, அவருடைய படத்திற்கு விழா என்பதல்ல.

முன்பெல்லாம் நிலாவைப் பார்க்கும்பொழுது என்ன சொல்வார்கள்,

ஒரு பாட்டி, பாக்கு பெட்டியை இடித்துக் கொண்டிருக் கிறார் என்பார்கள்.

ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் என் பார்கள்.

யார் யார் எதை நினைத்துக் கொண்டு பார்க்கிறார்களோ, அதுமாதிரியே தெரியும், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

நிலவில் போய் அடியெடுத்து வைத்தான் ஆம்ஸ்ட்ராங் என்கிற மனிதன்.

நிலவில் இருக்கின்ற கல்லை எடுத்து வந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கன் எம்பசியின் வெளியில் வைத்து காட்டினார்கள்.

அட மடப்பயலே, இரண்டு கால்களும் நம் கால்கள்தானே!


அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், நிலவில் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இறங் கியபொழுது, இடதுகாலை வைத்துத்தான் இறங்கினார். நம்மூர் அய்யரை கேட்டால், வலது காலை எடுத்து வைத்து வா என்பார்கள். நம்மூர் ஜோசியன் சொல்வார், வலது காலை எடுத்து வைத்து வா என்று.

பெரியார்தான் கேட்பார், அட மடப்பயலே, இரண்டு கால்களும் நம் கால்கள்தானே, அதில் எந்தக் காலை வைத்தால் என்ன? என்பார்.

கால்களிலேயே வேறுபாட்டைக் காட்டியவர்கள், மனிதர் களில் பிரிக்காமல் இருப்பானா என்று கேட்டார் தந்தை பெரியார்.

ஒருவன் உயர்ந்த ஜாதி

இன்னொருவன் தாழ்ந்த ஜாதி.

ஒருவன் தொடக்கூடிய ஜாதி

இன்னொருவன் தொடக்கூடாத ஜாதி.

ஒருவன் படிக்கவேண்டிய ஜாதி

இன்னொருவன் படிக்கக்கூடாத ஜாதி.

உலகத்தில் இந்த மாதிரி ஒரு சமுதாயம், கேடு கெட்ட சமுதாயம், மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு சமுதாயம், பேதத்தையே பெருவாழ்வாகக் கொண்டு இருந்த ஒரு சமுதாயம் உலகத்தில் வேறு எங்கு தேடிப் பார்த்தாலும் இன்றைக்கும் கிடையாது.

21 ஆம் நூற்றாண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது; அடுத்து 22 ஆம் நூற்றாண்டிற்குச் செல்லவிருக்கிறோம். அறிவியல் வளர்ச்சிகள் முழுவதையும் அனுபவிக்கிறான் நம்மாள்.

இப்பொழுது வளர்ந்துவரும் விஞ்ஞானத்தை யாராலும் தடுத்துவிட முடியாது. பெரியார் என்பது சமூக விஞ்ஞானம். பெரியார் என்பது சிலை கிடையாது - பெரியாரை அவமரி யாதை செய்யலாம்; அதன்மூலம் சிலர் திருப்தி அடையலாம் என்றால், தாராளமாக திருப்தி  அடையுங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அந்த எதிர்ப்பைக் காட்டுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு பெரியாரின் கொள்கை மிக வேகமாகப் பரவும்.

இந்த இயக்கம் எப்படி வளர்ந்த இயக்கம் தெரியுமா?


அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரி அவர்கள், அந்தக் காலத்தில் மேடையில் கம்பீரமாகப் பேசுவார். பேசும்பொழுது, கற்கள் வந்து விழும். இன்றுபோல், அன்றைக்கு வசதிகள் கிடையாது. கூட்டங்களில் தோழர்கள் நாற்காலிகளில் அமருவதே அண்மைக்காலமாகத்தான். அதற்கு முன்பெல்லாம் தரையில்தான் அமர்ந்திருப்பார்கள். இவ்வளவு பெரிய மேடைகள் எல்லாம் கிடையாது.


இந்த இயக்கம் எப்படி வளர்ந்த இயக்கம் தெரியுமா? வரலாறு தெரியாத வாலறுந்த நரிகளே, நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


கழுத்தில் தமுக்கை மாட்டிக்கொண்டு, டாம் டாம் அடிப்பார்!


அழகிரி அவர்கள் அந்தக் காலத்தில் ஒரு 80 ஆண்டு களுக்குமுன்பு, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்குச் செல்லும்பொழுது, இதுபோன்று விளக்குகள் எல்லாம் எரிய விட்டு, விளம்பரம் செய்த, பதாகைகள் வைப்பது போன்றெல்லாம் கிடையாது.

தாம்பரத்தில் இன்று மாலையில் கூட்டம் என்றால், அன்று காலையில், ஒருவர் கழுத்தில் தமுக்கை மாட்டிக் கொண்டு, டாம் டாம் அடிப்பதுபோன்று, தமுக்கை அடிப்பார்கள். அந்த சத்தம் கேட்டதும், கூட்டம் கூடிவிடும். அப்பொழுது அந்த தமுக்கை அடிப்பார்,

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெ னில் என்று ஆரம்பித்து, இன்று மாலை பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி என்று ஒருவர் பேசுவார் என்று சொல்லிவிட்டு, தமுக்கை அடித்துக்கொண்டே செல்வார்.

அன்று மாலையில் மக்கள் திரள் கூடிவிடும். நோட்டீசு அடிப்பதெல்லாம் கிடையாது. ஒரு மேஜையோ, ஒரு பெஞ்சோ போடப்பட்டு இருக்கும். அதற்கு மேலேயோ அல்லது அதற்கருகிலேயோ நின்று கொண்டு பேசுவார்கள். பேசும் பொழுது கற்கள் வந்து விழும். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசுவார்கள்.

அப்படி பேசிக்கொண்டிருப்பவரை கூர்ந்து பார்த்தால், கேட்பவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். யார் இவ்வளவு வேகமாகப் பேசுகின்ற பேச்சாளர் என்று பார்த்தால், காலையில் யார் இந்தக் கூட்டத்தைப்பற்றி தமுக்கை அடித்து விளம்பரப்படுத்தினாரோ, அவர்தான் கே.வி.அழகிரிசாமி. இந்த வரலாற்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல; இதை அசைத்துவிடலாம் என்று எந்த வீணர்களும் தப்புக் கணக்குப் போடவேண்டாம்.

திராவிடத்தை ஒருக்காலமும்  அசைத்துவிட முடியாது!


இந்த இயக்கம் மிக ஆழமான அஸ்திவாரத்தைப் பெற்றது. திராவிடத்தை ஒருக்காலமும் அசைத்துவிட முடியாது. இது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதை உணர வேண்டும்.

அழகிரிசாமி அவர்கள் பேசும்பொழுது, கற்கள் விழும், அப்பொழுது அவர்,

ஒவ்வொரு கல்லையும் வேகமாக வீசு தோழா! நீ வீசுகின்ற ஒவ்வொரு கல்லும், அழகிரியே உரத்துப் பேசு, உரத்துப் பேசு என்றுதான் சொல்லும் என்று அவர் கம்பீரமாக சொல்லுவார்.

அவர் உரையாற்றும்பொழுது சொல்வார்,

ஈட்டி எட்டிய வரையில் பாயும்

பணம் பாதாளம் வரையில் பாயும்

எங்கள் பெரியார் கொள்கை இருக்கிறதே,

அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கு அப்பாலும் பாயும்.

இன்றைக்குப் பாய்ந்து கொண்டிருக்கிறதா இல்லையா! அதற்கு அடையாளம், அமெரிக்காவில் பெரியாருக்கு விழா

மலேசியாவில் பெரியாருக்கு விழா

சிங்கப்பூரில் பெரியாருக்கு விழா

கனடாவில் பெரியாருக்கு விழா

இன்னும் பற்பல நாடுகளில் பெரியாருக்குப் பிறந்த நாள் விழா. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெரியாருக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றையாவது படித்துப் பாருங்கள்...


இந்த நிலையில், இங்கே பெரியார் பூமியில், நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, இந்தப் பெரியார் மண்ணில், நீங்கள் வேகமாக வந்து நுழையலாம் என்பதற்கு, பெரியார் சிலைமீது செருப்பை வீசுகிறீர்களே - முட்டாள் களே  உங்களுக்கு வரலாறு தெரியுமா? பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றையாவது படித்துப் பாருங்கள்.

கடலூரில் ஒரு சிலை இருக்கிறது; அந்த சிலைக்கு அருகில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அந்த சிலை திறக்கப்பட்டது 1944 இல். நான் 11 வயது சிறுவனாக இருந்து, தந்தை பெரியார் பக்கத்தில் நின்றேன். கெடிலம் பாலத்தில், பெரியார் அவர்கள் ரிக்ஷா வண்டியில் செல்லும்பொழுது செருப்பு வீசப்படுகிறது. பாம்பு, பாம்பு என்று சத்தம் போட்டார்கள். அன்றைய காலகட்டத்தில் எல்லாம் கை ரிக்ஷாக்கள்தான். அடுத்த நாள் சென்னைக்கு வரவேண்டும் என்பதால், ரயில் வண்டி நிலையத்திற்கு வருவதற்காக ரிக்ஷாவில் வருகிறார்.

அப்படி வருகின்ற நேரத்தில் இருட்டு - கடுமையான மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் கார் வசதியெல்லாம் எங்களுக்குக் கிடையாது. என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள். தந்தை பெரியார் அவர்கள், திருப்பாதிரிபுலியூரில் உள்ள ஒரு சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டார், அன்னை மணியம்மையாரோடு. அண்ணா அவர்கள் வந்தார்; நாவலர், பேராசிரியர் ஆகியோர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து, சிதம்பரத்தில் இருந்தவர்கள்.

இப்படி எல்லோரும் வந்தார்கள். சேலம் மாநாடு நடை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்வு அது.

அய்யா அவர்கள் ரயில்வே நிலையத்திற்கு வந்த பிறகு, கையில் வைத்திருந்த பெட்டியைத் திறந்துகொண்டே கேட்டார்,

நான் எதற்காக ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன் என்று யாருமே கேட்கவில்லையே என்றார்.

ஏதாவது காரணம் இருக்கும் அய்யா என்றோம்.

செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!


கெடிலம் பாலத்தில் வரும்பொழுது, பெரியார்மீது செருப்பை எறிந்திருக்கிறார்கள். அவர்மீது விழுந்த செருப்பை எடுத்து வைத்துக்கொண்டு, ரிக்ஷாவைத் திருப்புங்கள் என்று சொன்னார். அப்படி அவர் செல்கையில், இன்னொரு செருப்பும் அவர்மீது வந்து விழுந்தது. அதையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

ரயில் நிலையத்திற்கு வந்ததும் எங்களிடம் அந்த செருப்புகளைக் காட்டினார்.

செருப்பு ஒன்று போட்டால்

சிலை ஒன்று முளைக்கும்

என்று  அய்யா அவர்களுடைய சிலை திறப்பு விழாவில் கவிஞர் கருணானந்தம் அவர்கள் கவிதை எழுதி, முதல மைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில், தந்தை பெரியார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வாசித்தார்.

அந்தக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய நான், செருப்புப் போட்டதினால் சிலை வைத்திருக்கிறோம்; பாம்பைப் போட்டதினால், உங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தி கொடுக்கிறோம் ஊர் மக்களாகிய நாங்கள்  என்றோம்.

தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது, இந்த மக்கள் அறிவு பெற்றிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன். மக்கள் மாறியிருக்கிறார்கள். மாறித்தான் ஆகவேண்டும். அவர்கள் மாறாமல் இருக்க முடியாது என்று தெளிவாக சொன்னார்.

எனவே, செருப்பை வீசுவதினால் சிலருக்குப் பெரிய சங்கதியாக அது இருக்கலாம். இன்னுங்கேட்டால், அவர் களுக்கு வரலாறு தெரியாது. வெறும் அம்புகள்தான் அவர்கள்.

சிவகங்கையில் 1947 ஆம் ஆண்டு....


இன்னொரு தகவல் என்னவென்றால், 1947 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் சிவ கங்கை என்ற ஊரில், காரில் அமர வைக்கப்பட்டு ஊர் வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சிவகங்கை அரண்மனைக்கு முன் பொதுக்கூட்டம் நடைபெற விருக்கிறது. அந்த ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் வழியில், ஓரிடத்தில் பழைய பிய்ந்து போன செருப்புகளைக் கொண்டு தோரணமாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த நமது தோழர்களுக்குக் கோபம் வந்து, அதனை அறுப்பதற்கு முனைந்தனர்.

உடனே பெரியார் அவர்கள், அந்தத் தோழர்களை அழைத்து, செருப்புத் தோரணங்களை அறுக்கவேண்டாம், அது அப்படியே இருக்கட்டும் என்றார்.

அதைப்பற்றி அண்ணாவும் பேசியிருக்கிறார். பெரியார் எப்படி செருப்புத் தோரணங்களையெல்லாம் சந்தித்தவர் என்பதை தெளிவான வர்ணனையாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது,

செருப்புத் தோரணத்தை அறுக்கவேண்டும் என்று தோழர்கள் கோபப்பட்டார்கள். அதை நான்தான் வேண்டாம் என்றேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான வரவேற்பாகும். மாவிலை தோரணமோ, தென்னங்கீற்றிலோ தோரணம் கட்டியிருந்தால் அது சாதாரணம். அது எங்கேயும் கிடைக்கும். ஆனால், இவ்வளவு பழைய செருப்புகளை எனக்காகத் தேடியிருக்கிறார்கள் பாருங்கள்; அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்திருக்கவேண்டும்; என்னை எவ் வளவு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். ஆகவே, இதுபோன்று அடிக்கடி செய்யுங்கள் என்று பெரியார் அவர்கள் உற்சாகமோடு சொன்னார்.

அதுமட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே இப்படி எதிர்ப்பை சந்தித்து வளர்ந்த தலைவர் தந்தை பெரியாரை தவிர வேறு யாரும் கிடையாது.

கடலூர் மஞ்சள் நகர் மைதானத்தில்...


அதே கடலூரில், 1938 இல், எங்களைப் போன்றவர்கள் சிறு பிள்ளைகளாக, குழந்தைகளாக விவரம் தெரியாத வர்களாக இருந்த காலகட்டத்தில், ரஷ்யாவிற்குச் சென்று விட்டு வந்த தந்தை பெரியார் அவர்கள், கடலூருக்கு ஒரு திருமணத்திற்கு வந்துவிட்டு, மாலை நேரத்தில், மஞ்சள் நகர் மைதானத்தில் சமதர்மத்தைப்பற்றி உரையாற்றுகிறார்.

அப்பொழுது பலத்த எதிர்ப்பு ஏற்படுகிறது. முட்டை ஓட்டிற்குள் மலத்தை நிரப்பி பெரியார்மீது வீசுகிறார்கள். அது மேலே பட்டு தெறிக்கிறது. அப்படி தெறித்தால், எவ்வளவு துர்நாற்றம் இருக்கும்; எவ்வளவு அசூசையாக இருக்கும். நம்மீது அப்படி விழுந்தால் என்ன செய்வோம், குறைந்தபட்சம் - அதை சுத்தப்படுத்திவிட்டு, பேசுவோம் என்று நினைப்போம். ஆனால், தந்தை பெரியார், பெரியார் - அதனால்தான் அவர் என்ன செய்தார் தெரியுமா? அதை சுத்தப்படுத்துவதற்குக்கூட நேரத்தை எடுத்துக்கொள்ளாமல், தொடர்ந்து இன்னும் வேகமாக உரையாற்றினார். ஒரு சால்வையை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு பேசினார். அதனால்தான் இன்றைக்கு இந்த இயக்கம் அசைக்க முடியாத இயக்கமாக இருக்கிறது.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் இங்கே காவிகளை உண்டாக்கிவிடலாம் என்று நினைக் கிறார்கள் என்று இங்கே உரையாற்றிய நண்பர்கள் சொன் னார்கள். நீங்கள்தான் அதைத் தடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். அதை தடுப்பதற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டிய அவசியமில்லை, அந்தக் காவிகளை மக்களே தடுப்பார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இது பெரியார் பூமிதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன அடையாளம் வேண்டும்?


எந்தக் காலத்திலும் அவர்களால் இங்கே வர முடியாது. அவர்களுக்கு என்னதான் வடக்கே செல்வாக்கு இருந் தாலும், பிரதமர் மோடியினுடைய வரலாற்றில், இங்கே வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு என்றவுடன், விமானத்தில்  பறக்கலாம் என்று நினைத்தால், அங்கேயும் கருப்பு தெரிந்தது. அய்.அய்.டி.யில் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே போனார். அப்படி உள்ளே போன பிரதமர், இது பெரியார் பூமிதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன அடையாளம் வேண்டும்?

அதைவிட எங்கள் தோழமைக் கட்சித் தோழர்கள் சொன்னார்கள், ஒரு சிலர் தமிழகத்தில் வெற்றிடம் வந்து விட்டது என்று சொல்கிறார்கள் என்று. விஞ்ஞானம் தெரியாதவர்கள்தான் வெற்றிடம் என்று சொல்வார்கள். எல்லா இடங்களிலும் காற்று இருக்கும். எங்கேயும் வெற்றிடம் இருக்காது. காற்று கண்ணுக்குத் தெரியுதா, இல்லையா என்பது இவனுக்குத் தெரியாது. பெரியாருடைய கொள்கையும், காற்றும் ஒன்று. அது சுவாசிக்கவேண்டிய நேரத்தில், சுவாசிக்கப் பயன்படும். அதேநேரத்தில், புயலாக அடிக்கவேண்டிய நேரத்தில், அது புயலாகவும் உருவாகும்; தென்றலாகவும் இருக்கும். இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வகையில், இரண்டு செருப்பை எடுத்து வீசி விட்டால் பயந்து போவோமா? உனக்கு செருப்பு என்பது  புனிதமான விஷயம். ஆனால், அவர்களுக்கு வரலாறுகூட சரியாக தெரியாது. இராமாயணத்தை அவர்களும் ஒழுங் காகப் படிக்கவில்லை. இராமாயணத்தை முழுவதுமாகப் படித்துப் பார்த்தால்தான், அவர்களுக்குப் புரியும். உணர்ந்த வர்கள் முழுவதும், கடைசி நேரத்தில் உண்மைகளைச் சொல்கிறார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வந்தார் என்றால், இந்து மதத்தைப்பற்றித்தானே பேசுவார் என்பார்கள். எங்கே புண் இருக்கிறதோ, அங்கே மருந்து போடுகிறோம். எங்கே காயம் இருக்கிறதோ, அதற்கு சிகிச்சை செய்கிறோம், அவ்வளவுதான்.

இந்த மதம் கூடாது; மற்ற மதம் வேண்டும் என்பது கிடை யாதே! மனிதாபிமானம்தான்.  நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்.

இதோ பாருங்கள் என்னுடைய கையில் இருப்பது இந்து மதம் எங்கே போகிறது? இந்த நூலை எழுதியவர் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள். 101 வயது வரையில் வாழ்ந்தவர்.

நக்கீரன் பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வெளி வந்ததை நூலாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

சங்கராச்சாரியாரும், தாத்தாச்சாரியாரும் நண்பர்கள். சங்கராச்சாரி என்றால், ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்தாரே அவர் கிடையாது. அவருக்கும் மேலே - பார்ப்பனர்கள் அவரை மகா பெரியவா என்பார்கள். சந்திரசேகரேந்திர சரசுவதி.

எங்களுக்கு என்ன தனிப்பட்ட முறையில் கோபம். பார்ப்பனர்களாக இருக்கட்டும் அல்லது மற்றவர்களாக இருக்கட்டும். பேதமில்லாத ஒரு சமுதாயம் தேவை. ஆனால், பேதம் இருந்தால்தானே, அவாள் வாழ முடியும். இன்றைக்கும் பேதம் அதுதானே!

மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்....


அம்பேத்கர் போன்றவர்கள் தலைமை தாங்கி எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை -

ஜனநாயகம், மதச்சார்பற்ற தன்மை, குடியரசு, சமதர்மம் இவை அத்தனையும் கொண்ட அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மறுபடியும் அடுத்த முறை மோடி கம்பெனி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஆர்.எஸ்.எஸினுடைய அந்த உத்தர வுப்படி, அரசியல் சட்டம் தூக்கி எறியப்படும். அதற்குப் பதிலாக மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக்கப்படும்.

இது ஒன்றும் ரகசியம் கிடையாது. டில்லியில் அவர்கள் தீர்மானம் போடுகிறார்கள், இந்திய அரசியல் சட்டமாக மனுதர்மத்தைக் கொண்டுவரவேண்டும் என்று.

வி.எச்.பி. - விசுவ இந்து பரிஷத் வழக்குரைஞர்கள் மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தீர்மானம் போடுகிறார்கள். மனுதர்மம்தான் இந்திய அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்று.

(தொடரும்)
- விடுதலை நாளேடு, 31.10.18


சத்துப் போனது - எனவே செத்துப் போனது என்று எளிமையாகப் புரியும்படி வைத்தவர் பெரியார்!

கீதையின் புரட்டுகளைத் தோலுரித்து தமிழர் தலைவர் ஆய்வுரை

சென்னை, நவ.1- பரமாத்மா, ஜீவாத்மா, மகாத்மா என்பதெல் லாம் புரட்டே! சத்துப் போனது - எனவே செத்துப் போனது என்று எளிமையாகப் புரியும்படி வைத்தவர் பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  25.9.2018 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்:

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

வெளிப்படையாக ஜனநாயகத்திற்கு வெடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்திய அரசியல் சட்டத்தின்மேல் பிரமாணத்தை எடுத்துக்கொண்டு, அதனைக் காப்பாற்றுவோம் என்று சொல்லிக்கொண்டு, வெளிப்படையாக ஜனநாயகத்திற்கு வெடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நடக் காத ஒரே ஒரு மண் என்றால், பெரியார் மண்ணாக இருக்கக் கூடிய இந்த திராவிட பூமி.

இங்கே உரையாற்றியோர் சொன்னார்கள் அவர்கள் இங்கே காலூன்ற முடியாது என்று. கால் இருந்தால்தானே அவர்களால் ஊன்ற முடியும். அவர்களுக்கு சொந்தக் கால்களே கிடையாதே. நாம் சொல்லவில்லை இதை, அவர் களே சொன்னார்கள், மிஸ்டு கால் கொடுங்கள் என்று. மிஸ்டு காலில் கட்சியை வளர்த்த ஒரே கட்சி இந்தியாவில் அந்த இயக்கத்தைத் தவிர வேறு கட்சி உண்டா?

எனவே, உனக்கு சொந்தக்கால் இருந்தால், ஏன் மிஸ்டு காலை நினைக்கிறீர்கள். அதை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கருத்துகளை சொல்கிறோம்.

தி.மு.க.வையோ, அ.தி.மு.க.வையோ தோற்கடித்து விடுவார்கள்; கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை. ஆகவே நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று சொன்னால், இது என்ன அட்ரஸ் இல்லாத பூமியா? பட்டா போட்டுக்கொண்டு உள்ளே நுழைந்துவிடலாம் என்று நினைக்கிறார்களா? அது அவர்களால் முடியவே முடியாது.

பா.ஜ.க.விற்கும், நோட்டாவிற்கும்தான் போட்டி!

அவர்கள் தி.முக.வோடு போட்டி போடவேண்டாம்; நோட்டாவோடு போட்டி போடுங்கள். பா.ஜ.க.விற்கும், நோட்டாவிற்கும்தான் போட்டி.

அதனால்தான் அவர்கள் பயந்துகொண்டு மாநிலங் களவைத் தேர்தலில் நோட்டாவே வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

எனவே, நோட்டால் அடித்தாலும், நோட்டாவை நீங்கள் தாண்ட முடியாது.

பெரியார் தானே நம்மை தடுக்கிறார் என்று நினைத்து, என்ன செய்யலாம் என்று நினைத்து, உடனே அவன் கால்களில் போடுவதை கைகளில் எடுக்கிறான். அவர்கள் புத்தி எவ்வளவு தடுமாறுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

பெரியார்தான் கேட்டார், அட செருப்பு என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கிறீர்கள். உன்னுடைய கதையிலேயே, புராணத்திலேயே அந்த செருப்புதாண்டா 14 ஆண்டுகள் நாட்டை ஆண்டிருக்கிறது. ராமனுடைய பாதுகை, ராமனு டைய செருப்புதானே 14 ஆண்டுகளாக நாட்டை ஆண்டிருக்கிறது.'' ஆனால், ஒன்றே ஒன்று, எந்தப் பார்ப்பானும் அந்த செருப்பைக்கூட தைப்பது கிடையாது. இன்னமும் எங்கள் தோழர்கள்தான் அதனை தைக்கிறார்கள். அவனை கீழ்ஜாதி என்கிறார்கள். இவன் பாதுகாப்பாக செருப்பை கால்களில் அணிந்து கொண்டு செல்கிறான். செருப்பு அணிவதினால்தான் தொற்று நோய் ஏற்படாமல் இருக்கிறது; செருப்பு போடுவதினால்தான் வெயில் இவனுக்குத் தெரிவது கிடையாது.

அந்த செருப்பைத் தைத்துக் கொடுத்தவனே எங்களு டைய சகோதரன். இன்னும் அதைத் தைக்க நீங்கள் வரவில் லையே! பேட்டா கம்பெனி ஆரம்பித்தால், அந்தக் கம்பெனி யின் மேனேஜராக வந்து ஒரு அய்யர் வந்து உட்காருவார்.

ஆகவேதான், சமுதாயத்தைப் பொறுத்தவரையில், ஆழ மாக சிந்திக்கவேண்டிய செய்தி, பெரியார் என்ன செய்தார்?

பெரியார் காற்று - சுவாசம் என்று சொன்னேனே, அது வேடிக்கைக்காகவோ, அலங்காரத்திற்காகவோ அல்ல.

எந்தக் கட்சியில் இருந்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள் எங்களுடைய உறவுக்காரர்கள்தான்!

இன்றைய தமிழக பா.ஜ.க. தலைவராக நம்முடைய பெண் ஒருவரான தமிழிசை சவுந்திரராஜன் இருக்கிறார். நான்  அவரை பாளையங்கோட்டையில் சந்திக்கும்பொழுது, அன்பாக மகளே என்று அழைத்தேன். எங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், ஒடுக்கப் பட்டவர்கள் எங்களுடைய உறவுக்காரர்கள்தான், அதி லொன்றும் சந்தேகமேயில்லை.

நானும், குமரி அனந்தன் அவர்களும், பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த சக தோழர்கள். அதனால், அவர் எனக்கு சகோதரர். தமிழிசை அவர்கள் சகோதரரின் மகள்.

பா.ஜ.க. அமைப்பில், தமிழ்நாட்டில் ஏன் பார்ப்பன தலைமை இங்கே வர முடியவில்லை. என்னதான் எக்கி எக்கிப் பார்த்தாலும், என்ன செய்து பார்த்தாலும், எச்.ராஜா, எச்சி ராஜாவாகத்தான் இருக்க முடிகிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. தலைவராக வரக்கூடிய சூழல் இருக்கிறதா என்றால், வராது.

அந்தப் பதவிக்கு, தமிழிசை என்கிற ஒரு பெண்ணை, ஒரு நாடார் அம்மையாரை, தேடிப் பிடித்து போடுகிறார்கள். அந்த அம்மையார், ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசத்தைக் காட்டுவது என்பது தவறில்லை. காட்டட்டும்.

ஆனால், பெண்களை தலைமை தாங்க வைக்கக்கூடாது என்பது ஆர்.எஸ்.எசினுடைய கொள்கை, மனுதர்மத்தி னுடைய கொள்கை.

உங்களை அறியாமலேயே மனுதர்மத்தை உடைக்கும் படி செய்திருக்கிறாரா, இல்லையா! அவர்தாம் பெரியார் பார்! அதுதான் மிக முக்கியம்.

ஒடுக்கப்பட்டவர்களைத்தான் தலைமைப் பதவிக்குப் போட முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்திரா காந்தி சொன்னதாக துக்ளக் சோ எழுதியி ருக்கிறார்.

நெருக்கடி காலத்தில், நான், ஸ்டாலின் உள்பட நிறைய பேர் மிசாவில் சிறைச்சாலையில் இருக்கிறோம். தி.மு.க. தலைவருக்கு யார் யார் கார் ஓட்டுகிறார்களோ, அவர்கள் எல்லாம் அடுத்த நாள் சிறைக்கு வந்துவிடுவார்கள். நாங்கள் எல்லாம் பேசிக்கொள்வோம், அடுத்த நாள் மிசா கைதியாக சிறைக்கு வரப்போவது காரோட்டி கண்ணப்பன் வருவார்; டி.ஆர்.பாலு வருவார் என்று.

தேவராசு அர்சுவிடம் இந்திரா காந்தி அம்மையார் கேட்ட கேள்வி

ஆக, அதுபோன்ற ஒரு காலகட்டத்தில், துக்ளக் சோ எழுதுகிறார்.

தேவராசு அர்சுக்கு ஒரு யோசனை சொல்லியிருப்பார். அவர்தான் சிக்மளூரில், அந்த அம்மாவிற்குப் புனர்வாழ்வு கொடுத்திருப்பார், தமிழ்நாட்டில் தோற்றுப் போனவுடன்.

ஏங்க, தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்கவேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்? என்று அந்த அம்மையார் கேட்டவுடன்,

ஆர்.வெங்கட்ராமனை தலைவராகப் போடலாமே என்று சொன்னவுடன்,

இந்திரா காந்தி அம்மையார் சிரித்துவிட்டு,

Urs, What Mr.Urs, you don’t know what is Tamil nadu - It is Periyar Land - you know.
How can I put a Brahmin there, already Congress is in the very bad shape. You want make it worse?

ஆக, எந்தக் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பார்ப்பான் தலைமை தாங்க முடியாது என்பதற்கு முதல் வெற்றி பெரியாருடைய வெற்றி!

அவ்வளவு சுலபத்தில் பார்ப்பனர் தலைமை தாங்க முடியுமா?

இதுதான் பெரியார் பூமி! இந்தப் பெரியார் பூமியில், அவ் வளவு சுலபத்தில் பார்ப்பனர் தலைமை தாங்க முடியுமா?

ஏதோ ஒரு யோசனையை சொல்லிப் பார்க்கலாம் என்று ஒரு குருமூர்த்தி அய்யர் - இவர் எல்லோரையும் கழித்து விட்டவர். அவர் எங்கேயோ போய் உட்கார்ந்துகொண்டு, அவர் தத்துவார்த்தம் சொல்கிறார்.

இரண்டு கையையும் கோர்த்துவிட்டார் - ஆனால், அதனால் இவருக்குப் பயன் ஏற்படவில்லை.

அவர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று சொன்னார். இப்பொழுது புதிதாக யோசனை செய்து ஆன்மிக அரசியல் என்கிறார்.

ஆத்மா என்பதே புரட்டு!

அதென்ன ஆன்மிகம்? ஆத்மா என்பதே புரட்டு.

பரமாத்மா, ஜீவாத்மா, மகாத்மா என்றெல்லாம் சொல்கி றார்களே, நாங்கள் வெறும் ஆத்மாவே இல்லை என்கிறோம்.

கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொன்னார், ஆத்மா என்பது கூடுவிட்டு கூடு பாயும் என்று.

பெரியார் மக்களுக்குப் புரியும்படி கேட்டார், ஆத்மா என்றால் என்ன? உயிர், உடல் இரண்டும் சேர்ந்ததுதானே மனிதன். செத்துப் போச்சு என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா? என்றார்.

மூச்சு வாங்குகிறோமே அந்த மூச்சு நின்று போய் விட்டால், ஆள் செத்துப் போய்விட்டான் என்று அர்த்தம்.

செத்துப் போய்விட்டது என்றால், சத்துப் போய்விட்டது - ஆகவே அது செத்துப் போய்விட்டது என்றார், மிகத் தெளிவாக!

ஒரு ஆத்மா தயாராக இருக்கிறது; செத்துப் போனவுடன், இந்த ஆத்மா புறப்பட்டு இன்னொரு கூட்டுக்குள் போய் புகுந்துவிடுகிறது, ஆத்மா அழியாதது என்கிறார்கள்.

பகவான் கிருஷ்ணன், அர்ஜூனனுக்கு உபதேசம் செய்தான் பகவத் கீதையில் என்று சொல்கிறார்கள்.

ஜாதியை காப்பாற்றுவதற்காகத்தான், வருணாசிரமத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காகத்தான் இவற்றையெல்லாம் கண்டு பிடித்தார்கள்.

ஆத்மா என்ன, கட்டிப் போட்டால்

குட்டி போடுமா?

பெரியார்தான் கேட்டார், கற்பனையாக இருந்தாலும், நீ சொல்வதை வாதத்திற்கு வேண்டுமானாலும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆரம்பத்தில், மக்கள் தொகை 10 கோடி இருந்தது என்றால், அதே ஆத்மா மறுபடியும் 10 கோடிதானே இருக்கவேண்டும். அது எப்படி இன்றைக்கு 125 கோடி ஆயிற்று? ஆத்மா என்ன கட்டிப் போட்டால், குட்டி போடுமா? என்று கேட்டார்.

ஒருவர் இறந்தால், அந்த ஆத்மா வெளியேறி, இன் னொரு கூட்டிற்குள் புகுந்து கொள்கிறது. அதுதானே திரும்பத் திரும்ப நடைபெறவேண்டும். அது எப்படி, காம் பவுண்ட் இன்ட்ரஸ்ட் வரும்.

இதைத்தானே பெரியார் மிகத் தெளிவாக கேட்டார்.

ஆத்மா என்பது புரட்டு. கடவுளை கண்டுபிடித்தவனை கூட நான் விட்டுவிடுவேன். ஆத்மாவை கண்டுபிடித்தவனை நான் அவ்வளவு சுலபத்தில் விட்டுவிட மாட்டேன் என்றார். பெட்ரண்ட் ரசல் அவர்களுடைய கருத்தை எடுத்துச்  சொன்னார்.

ஆத்மா வைத்து, கர்மா, தர்மா - பிறவி தர்மம், பிறவி இழிவு - போன ஜென்மத்தில் செய்த பாவம், புண்ணியம் என்று சொல்கிறார்கள்.

ஆத்மா என்பதே கற்பனை!

நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கு வந்தால்....

ஒரு உதாரணம் சொல்கிறேன். இங்கே நிறைய வழக் குரைஞர்கள் இருக்கிறார்கள்; நானும் வழக்குரைஞன்தான்.

நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கு வந்தால், அந்த வழக்கு விசாரணையின்போது, கொலை செய்தவரின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர்,

யுவர் ஆனர், என்னுடைய கட்சிக்காரர் கொலை செய்யவில்லை. பகவத் கீதையில் கண்ணன் தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆத்மா அழியாதது. உடல் மட்டும்தான் இறந்த மாதிரி கீழே விழும். ஆகவே, என் கட்சிக்காரர் கொன்றது யாருமில்லை. ஆகவே, அவரை விடுதலை செய்யவேண்டும் என்று சொன்னால்,

உடனே நீதிபதி என்ன செய்வார், உடனே விடுதலை செய்துவிடுகிறேன் என்று சொல்வாரா?

அந்த நீதிபதி பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இருந்தார் என்றால், அவர் என்ன சொல்வார் என்றால்,

நீங்கள் சொன்ன வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன். நன்றாக வாதம் செய்தீர்கள். ஆத்மாவிற்கு அழிவில்லை. ஆத்மா அழியாதது, சாகாதது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே, நானும் உங்கள் கட்சிக்காரருக்கு நான் தூக்குத் தண்டனை கொடுக்கிறேன். உங்கள் கட்சிக்காரரும் சாக மாட்டார். அவருடைய உடல் மட்டும் கீழே விழும்; ஆத்மா அழியாது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?

ஆத்மாவே புரட்டு - அதை நம் தமிழ்ப் புலவர்கள் என்ன செய்தார்கள் என்றால், வடமொழியில், சமஸ்கிருதத்தில் இருப்பதால், ஆன்மா என்று ஆக்கினார் கள். அந்த ஆன்மாவிலிருந்து ஆன்மிகம் என்று ஆக்கி னார்கள்.

இது திராவிட பூமி - பெரியார் பூமி!

தொடக்கமே புரட்டு - சரியில்லை. இதற்கும் அரசிய லுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சினிமாக்காரரைப் பிடித்துக்கொண்டு, அரசியலுக்கு வருவாரா? இல் லையா? என்று எந்தக் குதிரைமீது பந்தயம் கட்டுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள் பலர். ஓடுகிற குதிரைமீது எதிலேயும் பந்தயம் கட்ட முடியாது. சண்டிக்குதிரையா? வண்டிக்குதிரையா? நொண்டிக் குதிரையா? எதுவுமே செய்ய முடியாது. காரணம், மீண்டும் சொல்கிறேன் இது திராவிட பூமி - பெரியார் பூமி என்பதை மறந்துவிடாதீர்கள்.

கலைஞரிடமிருந்து அத்தணை பாடங்களையும் தளபதி ஸ்டாலின் கற்றுக்கொண்டிருக்கிறார்!

கலைஞர் மறைந்துவிட்டார் - ஸ்டாலின் அவர்கள் அப்படி இருப்பாரா?

ஸ்டாலின் அவர்கள், பகுத்தறிவு, சமநீதி, மதச்சார்பின்மை பற்றியெல்லாம் பேசக்கூடாது - நீங்கள் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று அவரை வேறு பக்கம் திருப்பலாமா என்று முயற்சித்தார்கள்.

முடியுமா? அவர் திடீரென்று முளைத்தவரா? ஒன்றும் தெரியாதவரா? இளைஞரணியில் இருந்து தயாரிக்கப்பட்டு, மிசா கொடுமைகளை அனுபவித்து, படிப்படியாக எல்லா பாடங்களையும் பெற்றவர். ஒழுங்கான பாடத்தை பெரியாரிடமும், அண்ணாவிடமும் கலைஞர் கற்றார், ஈரோட்டு குருகுலத்தில். கலைஞரிடமிருந்து அத்தணை பாடங்களையும் தளபதி ஸ்டாலின் கற்றுக்கொண்டிருக்கிறார்.

கலைஞர் வழியில்தான் நாங்கள் செல்வோம்: மு.க.ஸ்டாலின்

ஆகவே, தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைவர் பொறுப்பேற்றவுடன், சந்தேகத்திற்கு இடமில்லாமல், சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இதையெல்லாம் தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் வழியில்தான் நாங்கள் செல்வோம் என்றார்.

உடனே அவர்கள் இப்பொழுது என்ன நினைக்கிறார்கள் என்றால், என்னடா இது, இவர்மீது பந்தயம் கட்டி, அவரை திருப்பலாம் என்று பார்த்தால் முடியவில்லையே என்று.

கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கலாம்; சில பத்திரிகைக்காரர்கள் நினைத்து, இப்பொழுது உள்ள கூட்டணியை எப்படியாவது உடைக்கவேண்டும் என்று நினைத்து - மோடியோடு கூட்டு சேரவில்லை என்றாலும், காவியோடு கூட்டு சேரவில்லை என்றாலும்,

தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறியாக வந்தால் என்கிறார்கள், அதுவே முதலில் நமக்குக் கிடைத்த வெற்றி.

மோடி முழு பெரும்பான்மையுடன் வர முடியாது; அப்படியே வர முடிந்தாலும் இழுபறியாகத்தான் வரும்; தொங்கு நாடாளுமன்றம் என்று சொல்கிறார்கள்.

நம் நாட்டைப் பொருத்தவரையில், தொங்கு நாடாளு மன்றமே வந்ததில்லை. ஆகவே, அப்படி இழுபறியாக வருகின்ற நேரத்தில், நீங்கள் அவரோடு கூட்டு சேர்வீர்களா? என்று தளபதி ஸ்டாலின் அவர்களிடம் கேட்டார்கள்.

தேர்தலுக்குப் பின்பும், தி.மு.க. பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்காது

முன்பாவது கலைஞர் அவர்கள், யோசனை செய்யலாம், அப்படி செய்யலாம் என்று சொன்னார்கள்.

ஆனால், தளபதி ஸ்டாலின் அவர்கள் ஓங்கி அடித்தார், நேற்றைய இந்து பத்திரிகையில், தேர்தலுக்குப் பின்பும், தி.மு.க. பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்காது என்று.

இவ்வளவுக்கும் யார் காரணம் என்று அவர்கள் நினைக் கிறார்கள், இத்தனைக்கும் அந்தக் கிழவன்தான் காரணம் என்கிறார்கள்.

பெரியார் என்கிற தத்துவம் என்பது வேர்; அந்த வேரை நீங்கள் மாற்றிவிட முடியாது. இலைகள் சில நேரங்களில் உதிர்ந்துவிடும்; அதனால், மரத்தினுடைய பலம் குறையுமா? கிளைகளே சாய்ந்தாலும்கூட வேர்கள் பலமாக இருக்கும் பொழுது அந்த மரம் பலமாக நிற்கும்.

கொள்கை என்பது வேட்டி;  பதவி என்பது மேல் துண்டு!

அதனால்தான் அண்ணா சொன்னார், கொள்கை என்பது எனக்கு வேட்டி போன்றது; பதவி என்பது மேல் துண்டு போன்றது என்றார்.

இதைவிட இந்தக் கட்சியில் தெளிவான விளக்கம் வேறு என்ன இருக்க முடியும்?

ஆகவேதான் நண்பர்களே, இந்தக் கொள்கைகள் வெற்றி பெறுகின்றன.

அமெரிக்காவிலிருந்து  அண்ணா அவர்களின் கடிதம்!

அண்ணா அவர்கள் அமெரிக்காவிற்கு சிகிச்சை பெறுவதற்காக செல்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு, அறிஞர் அண்ணா அவர்கள் கடிதம் எழுதுகிறார்.

நீங்கள் என்னை விமான நிலையத்திற்கு வந்து வழி யனுப்பியபொழுது, கவலை தோய்ந்த முகத்தோடு நீங்கள் இருந்தது கண்டு என் மனம் மிகவும் வருந்தியது. நீங்கள் எப்பொழுதும் அப்படி இருந்ததில்லை; என்னுடைய உடல் நலம் கருதி நீங்கள் அப்படி கவலையோடு இருக்கிறீர்கள் என்று அதில் குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை நியூயார்க் நகருக்கு நாங்கள் அனுப்பி வைத்தோம். அந்த மலரைப் பெற்றுக்கொண்டு, படித்துவிட்டு அவர் கடிதம் எழுதுகிறார்,

நான் அறிந்த வரையில், நீங்கள் கொஞ்சம் விரக்தியோடு சலிப்போடு உங்கள் அறிக்கை இருந்தது. நீங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சலிப்புக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. நான் உலகத் தலைவர்களின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். நான் அறிந்த வரையில், எந்த உலகத் தலை வரும், அவர் வாழ்நாளிலேயே தன்னுடைய கொள்கை வெற்றியை அறுவடை செய்தவர்கள், நேரில் கண்டு மகிழ்ந் தவர்கள் உங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. என்று எழுதியிருந்தார்.

இந்த வரலாறு தெரியாதே, செருப்பைத் தூக்கியவனுக்கு. அவனுக்கு என்ன தெரியும்? அவன் வெறும் கூலி; வெறும் அம்பு. இதற்கு ஒரு ஆழமான வரலாறு உண்டு. உலக வர லாற்றில் அவருடைய சீடர்கள், அவர்கள் அரசமைத்து, அந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்றார்கள்.

அதற்கும், தாம்பரத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. இதோ ஆதிமாறன் இருக்கிறாரே, அவருடைய அப்பாதான் முனுஆதி.

பெரியாருக்குத் தியாகி மானியம் உண்டா?

முனுஆதி அவர்கள் சட்டமன்றத்தில் எழுந்து கேட் கிறார், பெரியாருக்குத் தியாகி மானியம் உண்டா? என்று.

உடனே முதலமைச்சர் அண்ணா அவர்கள் எழுந்து, பெரியாருக்கு என்ன தியாகி மானியம்; இந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற காணிக்கை என்றார். கடைசிவரையிலும் அதையே சொன்னார்.

அதற்கு என்ன பொருள்? வெறும் வார்த்தை கிடையாது.

அதுதான் சுயமரியாதைத் திருமணச் சட்டம்

அதுதான் தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்.

அதுதான் இருமொழிக் கொள்கை

இந்து மதம் எங்கே போகிறது?

இதோ பாருங்கள் என்னுடைய கையில் இருப்பது இந்து மதம் எங்கே போகிறது? இந்த நூலை எழுதியவர் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள்.

இந்து மதத்தைப்பற்றி நாம் பேசுகிறோம்  என்று சொல் கிறார்களே, அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ன சொல்லியிருக்கிறார்?

இந்து முன்னணிக்காரர், ஆர்.எஸ்.எஸ்.காரர் அவர்கள் எல்லாம் எங்களுக்கு விரோதிகள் அல்ல. புரியாமல் சிலர் அங்கே சென்றிருக்கலாம். குழம்பிப் போய் சென்றிருக்கலாம். கூலிக்குச் சென்றவர்களைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இன்னும் கொஞ்சம் அதிகமான கூலி கொடுத்தால் அவர்கள் நம்மிடம் வருவார்கள். அப்படிப்பட்ட ஆட்கள் நமக்குத் தேவையில்லை. கூலிகளும் தேவையில்லை - காலி களுக்கும் இந்த இயக்கத்தில் இடமில்லை.

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் சொல்கிறார்:

ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் குறைவு. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண் களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக் கத் தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டு விட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளை களை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மனு பிளவாக்கியது.

கூடவே, இவர்களைத் தாண்டி சூத்திரர்கள் என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக் காரர்களாகவே ஆக்கியது மனு.

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு  சூத்திர னைப்பற்றி இப்படி எழுதியது.சூத்திரனுக்கு அறிவை கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை - இப்படிப் போகிறது மனு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் நன்றாகவே வேலை செய்தது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டு ஜாதி முறையை சொல்லும்பொழுது, ஒரு அற்புதமான சொற் றொடரை ஆங்கிலத்தில் கையாண்டார். நிக்ஷீணீபீமீபீ வீஸீமீஹீணீறீவீஹ் படிக்கட்டு ஜாதி முறை.

ஒருவருக்குப் பின் ஒருவர் என்று சமதளத்தில் நிற்கவில்லை. ஏணிப்படிக்கட்டு மாதிரி மேலே ஆரியர்கள் - பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன், அதற்கும் கீழே பஞ்சமன் - அதற்கும் கீழே எல்லா ஜாதிப் பெண்களும், பார்ப்பனப் பெண்கள் உள்பட.

எல்லா ஜாதிப் பெண்களும் பார்ப்பன பெண்கள் உள்பட அடிமைகள்!

எனவே, ஆறு இடங்களில், நான்கு இடங்களில் மட்டும்தான் வருணதர்மம். அவர்ணஸ்தர்கள், இந்த வர்ணத்திற்குள் சேர்க்க முடியாத அவர்ணஸ்தர்கள் என்று பிரித்து விட்டான்.

மனுஸ்மிருதியில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள், பெண்களுக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் உரிமைகள் கொடுக்கக்கூடாது. சொத்துரிமை, படிப்புரிமை கூடாது.

ஆண்களில் எப்படி கீழ்ஜாதிக்காரன் அடிமையோ, அதேபோல, பெண்கள், எல்லா ஜாதிப் பெண்களும் பார்ப் பன பெண்கள் உள்பட அடிமைகள் என்று ஆக்கினார்கள்.

இவர்கள் அத்துணை பேருக்கும் விடுதலை கொடுத்த மாவீரர் அறிவாசான் அதோ உருவமாக நிற்கின்ற தந்தை பெரியார்.

பெரியார் என்ன செய்தார் என்று சிலர் புரியாமல் கேட் கிறார்களே, அவர்கள் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனுடைய விளைவுதான் இத்தனை போராட்டங்களையும் நடத்திவரும்பொழுது,

கடைசியாக ஜாதிப் பாம்பு ஒளிந்த இடம் கோவில் கர்ப்பக்கிரகம்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை வைக்கத்தில் 1924 ஆம் ஆண்டு தொடங்கினார். ஜாதிப் பாம்பை தன்னுடைய கைத்தடியால் அடித்துக் கொண்டே வந்தார். ஏன் பார்ப்பனர்களுக்கு பெரியாரின் கைத்தடி யின்மேல் கோபம் தெரியுமா? அந்தக் கைத்தடியால்தான் ஜாதி என்கிற பாம்பு அடிக்கப்பட்டது; அது ஓடி ஓடி நுழையக்கூடாத இடத்தில் எல்லாம் நுழைந்தது; உத்தியோக மண்டலத்திலிருந்து அதை விரட்டினார். திருமணத்தில் இருந்து அதை விரட்டினார் - சுயமரியாதைத் திருமணம் என்கிற பெயரால் - கருமாதி என்கிற இடத்தில் இருந்ததை - நீத்தார் நினைவு நாள், படத்திறப்பு, நினைவேந்தல் என்று சொல்லி அங்கி ருந்தும் அதை விரட்டினார். அந்த ஜாதிப் பாம்பு அடி வாங்கி, அடி வாங்கி, ஓடி ஓடி, கடைசியாக குத்துயிரும் கொலையுருமாக ஒரே ஒரு இடத்தில், பாதுகாப்பான இடத்தைத் தேடி ஒளிந்தது. அதுதான் கோவில் கர்ப்பக்கிரகம்.

அதற்குள்ளே நம்மாள்கள் உள்ளே நுழையக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள் பார்ப்பனர்கள். அதற்காகத் தான் கடைசிப் போராட்டத்தினை தந்தை பெரியார் அவர்கள் நடத்தினார்.

கொள்கையா? ஆட்சியா? என்று கேட்டால்....

தந்தை பெரியார் அவர்கள் இறந்ததும், முதலமைச்சர் கலைஞரிடம், தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தால் உங்கள் பதவிக்கு ஆபத்து வரும் என்றார்கள். என்னுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுப்போம் என்றார். கொள்கையா? ஆட்சியா? என்று கேட்டால், திராவிடர் இயக்கம் எப்பொழுதும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டி ருப்பதில்லை, கொள்கையையே பிடித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், அவருடைய வாழ்நாளில், நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்தது என்னவென்றால், அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. அது எதற்காக? மோட்சத்தில் முன்சீட்டு வேண்டும் என்பதற்காகவா? அல்லது இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காகவா? என்றால், இல்லை.

ஒரு மனிதனை இழிஜாதி என்று சொல்கிறீர்களே, தொடக்கூடாத ஜாதி என்கிறீர்களே, எட்டி நில் என்கிறீர்களே - எல்லோரும் கடவுள் பிறப்பு என்று சொல்கிறீர்களே - பின் ஏன் இந்த நிலை?

கீழ்ஜாதிக்காரர்களுக்கு அரிஜன் என்று பெயர் வைத்தார் காந்தியார். அரிஜன் என்றால், மகாவிஷ்ணுவின் குழந்தை என்று அர்த்தமாம். ஆனால், அவர்களை விஷ்ணு கோவில்களில்கூட உள்ளே விடவில்லை.

பெரியார் வென்றார்! கலைஞர் வென்றார்!

இதைப் பார்த்துத்தான் தந்தை பெரியார் கேட்டார்,

ஏண்டா, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்வது, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பேத ஒழிப்பு என்றார். இதற்காக சட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர் கலைஞர். உடனே பார்ப்பனர்கள் அந்த சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்குச் செல்லாமல், நேராக உச்சநீதிமன்றம் சென்றார்கள். அங்கே அடிவாங்கினார்கள். பெரியார் வென்றார்! கலைஞர் வென்றார்! அந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

அந்த சட்டத்தின்படி மதுரையில் நம்மாள் ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கலைஞர் அவர் கள் உயிரோடு இருந்தபோது இந்தச் செய்தி அவருடைய காதுக்குச் சென்றது.

இந்த இயக்கம் கொள்கையிலும் தோற்காது - ஆட்சி யிலும் தோற்காது

இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது; எதிலும் தோற் காது. கொள்கையிலும் தோற்காது - ஆட்சியிலும் தோற்காது.

தேர்தல் நேரத்தில், சில நேரங்களில் ஏமாந்துவிடுவது உண்டு. கெட்டிக்காரனிடமிருந்துகூட சில நேரத்தில் பர்சை, பிக்பாக்கெட்க்காரன் அடித்துச் செல்வதில்லையா?

என்னங்க இவ்வளவு சாமர்த்தியமான ஆள் நீங்க - உங்களிடமிருந்தே பர்சை அடித்திருக்கிறார்களே என்றால், என்ன செய்வது, நான் சாமர்த்தியம்தான், அவன் நான் அசந்த நேரத்தில் அடித்துச் சென்றுவிட்டானே என்பார்.

ஒருவர் பெட்டியை எடுத்துக்கொண்டு வரும்பொழுது, இரண்டு பேர் வந்து அவரிடம் பேச்சு கொடுத்து, அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு, ஒருவன் அவருடைய சூட்கேசை எடுத்துக்கொண்டு ஒரு திசையில் ஓடுவான். அவன் எந்தத் திசையில் ஓடினான் என்று இவனிடம் கேட்டால், அதற்கு நேர் எதிர்திசையை காட்டுவான்.

இவை அத்தனையையும்தானே இன்றைக்குப் பார்ப் பான் காட்டிக் கொண்டிருக்கிறான். திராவிடர் கழகத்துக்காரர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடாது!

பெரியாருக்கு என்ன கடவுள்களின்மீது கோபம்? பிள்ளையார் சதுர்த்தியைப் பாருங்கள் - இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது. இங்கே எத்தனை காவல் துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், கருப்புச் சட்டைக்காரர்கள் கட்டுப்பாடானவர்கள் - திராவிடர் கழகத்துக்காரர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடாது என்று. இங்கே எல்லா கடைகளும் திறந்து இருக்கிறது. எங்கேயும் பிரச்சினை கிடையாது.

மக்களின் வரிப்பணம் எவ்வளவு வீணாகிறது!

பிள்ளையார் ஊர்வலத்திற்கு ஒரு லட்சம் பேர் பாதுகாப்புக்கு வருகிறார்கள். பிள்ளையாரின் எண்ணிக்கை அவர்களது கணக்குப்படி 2,500. அதற்காக ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு என்றால், அதற்காக மக்களின் வரிப்பணம் எவ்வளவு வீணாகிறது.

பிள்ளை விளையாட்டு என்று இராமலிங்க அடிகள் சொன்னார்!

களிமண்ணால் ஒரு பிள்ளையார் பொம்மையை உருவாக்கி, அதை வைத்து வழிபாடு செய்து, மூன்றாம் நாள் அதைக் கொண்டு போய் நீர் நிலைகளில் கரைக்கிறான். உலகத்திலேயே இதுபோன்ற கடவுள் எங்கேயாவது இருக் கிறதா? கடலில் கரைக்கும்பொழுது அந்தப் பிள்ளையார் சிலையை அடி அடியென்று அடிக்கிறான், உடைக்கிறான்.

பிள்ளையார் என்ற ஒருத்தன் இருந்தால், அவன் யாரை நிந்திப்பான்?

பெரியார்கூட தன்னுடைய சொந்தக் காசில் பிள்ளை யாரை வாங்கி ஒருமுறைதான் உடைத்தார். ஆனால், இவர்கள் படுத்துகிறபாடு இருக்கிறதே, பிள்ளையார் என்ற ஒருத்தன் இருந்தால், அவன் யாரை நிந்திப்பான்? இராம. கோபாலனைத்தான் நிந்திப்பான். பெரியாருக்கு நன்றி சொல் வான். நிச்சயமாக பிள்ளையார் என்று ஒன்று கிடையாது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது உள்பட எந்தக் கொள்கையிலும் இந்த இயக்கம் தோல்வியடையாது. இந்த இயக்கம் கட்டுப்பாடான இயக்கம்.

எங்களுக்கு என்ன கலவரம் செய்யத் தெரியாதா? எங்களுக்கு எவ்வளவு நேரமாகும், எல்லா கோவில்களுக் குள்ளும் நுழைவோம் என்று சொல்வதற்கு. நாங்கள் நுழைய வேண்டிய அவசியமில்லை. கோவில்களில் இருக்கின்ற எல்லாக் கடவுள்களும்தான் வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறதே!

கோவில்களில் சி.சி.டி.வி வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்

கோவில்களில் சி.சி.டி.வி வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்புறம் என்ன கடவுள் நம்பிக்கை! பெரியார் வென்றாரா? இல்லையா?

பெரியார்தான் கேட்டார்,

தன்னை  காப்பாற்றிக் கொள்ளாதவன்

எப்படி உன்னை காப்பாற்றுவான் என்று.

ஆகவே, நண்பர்களே! இந்த இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர்!

ஜீவா பாட்டெழுதினார் என்று சொல்வார்கள்,

கோடிக்கால் பூதமடா என்பது வேறு.

எதிர்ப்புகள் பெரியார் வயலுக்கு, கொள்கை வயலுக்குப் போடக்கூடிய உரம்!

ஆனால், அதேநேரத்தில், இந்த இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்! இதை அசைக்க முடியாது.

நீங்கள் எதிர்ப்புக் காட்ட, காட்ட, அடிக்க அடிக்க எழும்பும் பந்து போல, இந்த இயக்கம், நீங்கள் எதிர்ப்பு காட்ட காட்ட,

அந்த எதிர்ப்புகள் பெரியார் வயலுக்கு, கொள்கை வயலுக்குப் போடக்கூடிய உரம்! உரம்!! உரம்!!!

அதை வென்று காட்டுவது எங்களது திறம்! திறம்!! திறம்!!

என்று கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 1.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக