2019 பிப்ரவரியில் தஞ்சையில் மாநாடு; மார்ச்சில் அம்மா நூற்றாண்டு
* 2019 செப்டம்பரில் பெரியார் பன்னாட்டு மாநாடு சிகாகோவில்!
* நாடெங்கும் பயிற்சிப் பட்டறைகள் - நூல்கள் பரப்புதல் நடக்கட்டும்!
எனக்குப் பிறந்த நாள் விழா வேண்டாம் -
விடுதலை சந்தாக்களை வாரி வழங்குவீர்!
விஞ்ஞான பூர்வமான நமது இயக்கமே வெற்றி பெறும்!
சென்னை இளைஞரணி கலந்துரையாடலில் தமிழர் தலைவர் இலட்சிய முழக்கம்
நமது சிறப்புச் செய்தியாளர்
சென்னை, நவ.4 எனக்குப் பிறந்த நாள் விழா வேண்டாம்; அதற்குப் பதிலாக இலட்சிய போர்வாளாம் விடுதலை' சந்தாக்களை வாரி வழங்குவீர் என்று வேண்டுகோள் வைத்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டுக்கான கழக வேலைத் திட்டங்களை அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார்.
சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று முற்பகல் (3.11.2018) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய இலட்சிய முழக்க உரை வருமாறு:
இளைஞர்களின் மாநிலம் தழுவிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைக்காமலேயே இடைச்செருகலாக நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் உணர்ச்சியை நேரில் கண்டு உணர்ச்சி பெற வந்திருக்கிறேன். உங்கள் உற்சாகம் கண்டு நான் உற்சாகம் பெறுகிறேன்.
இளைஞரணி எழுச்சி பெற்றுள்ளது
இளைஞரணியினர் பணி எழுச்சி பெற்று இருப்பதைக் கண்டு இறும்பூதெய்துகிறேன்.
ஊருக்கு நான்கு பேர் இருப்பார்கள் இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் என்று பொதுவாக சொன்னதெல்லாம் ஒரு காலம்.
இளைஞரணி என்பது போன்ற அமைப்புகள் இயக்கத்தில் முன்பு இல்லை. இப்பொழுது அந்த அணி அரிமாவாக இயக்கத்தின் ஆற்றல் படைத்த பெரும் சக்தியாக உருவெடுத்து இருப்பது - புதிய திருப்பமாகும்!
பிறந்த நாள் விழா வேண்டாம் -
விடுதலை' சந்தா தாரீர்!
எனது பிறந்த நாள் என்று கூறி, அதற்காக எந்தவித விழாவும் வேண்டாம். ஆர்ப்பாட்டம் வேண்டாம்.
முக்கியமாக இதைச் சொல்லுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
அதற்குப் பதிலாக விடுதலை' சந்தாக்களை அள்ளித் தாருங்கள். விடுதலை' பரவினால்தான் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் - இலட்சிய உணர்வை இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஊட்டும்!
உலகிலேயே ஒரே நாத்திக நாளேடு
உலகிலேயே ஒரு நாத்திக ஏடு என்பது விடுதலை' மட்டும்தான். 83 ஆண்டுகளாக வீறு நடை போடுகிறது என்றால், அது நமது விடுதலை' எனும் போர்வாள்தான்.
சினிமா இல்லை, விளம்பரம் இல்லை. எல்லாம் எதிர்நீச்சல்தான். விடுதலை'யின் எதிர்நீச்சலில் விளைந்தவைதான் இந்த இனத்திற்குக் கிடைத்திருக்கும் உரிமைகளும், பலன்களும்!
இந்த இயக்கத்தில் இல்லாமல் அரசியலுக்கு நான் சென்றிருந்தால்...
பத்து வயதில் இந்த இயக்கத்தில் காலடி எடுத்து வைத்தேன். 75 ஆண்டுகால வாழ்க்கை இந்த இயக்கத்தோடு எனது வாழ்க்கை! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த இயக்கத்தில் இருப்பதற்காக யாரையும்விட அதிக மன நிறைவு உள்ளவனாக இருக்கிறேன்.
அய்யா தேடி வைத்த கொள்கை சொத்தே நமது மாபெரும் பலம்.
இந்த இயக்கத்தில் இல்லாமல் அரசியலுக்குச் சென்றிருந்தால், என்ன கிடைக்கும்? அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - அமைச்சர் பதவி கிடைத்தால், சிறைவாசமும் கிடைக்கும்.
நாமும் சிறைக்குச் சென்றவர்கள்தான் - இனியும், செல்லக்கூடியவர்கள்தான் - அது இலட்சியத்திற்காக!
- இளைஞரணி கலந்துரையாடலில் கழகத் தலைவர்
சால்வை வேண்டாம் - சந்தா வேண்டும்!
சால்வை வேண்டாம், ஆடைகள் வேண்டாம் - மக்களுக்கு விடுதலை தரும் விடுதலை' சந்தாவை வழங்குங்கள் - விடுதலை' வளர்ச்சி நிதியை அளியுங்கள். நமது இயக்க வெளியீடுகளை, நூல்களைப் பரப்புங்கள்.
இளைஞரணியினர் இலக்கையும் தாண்டி உண்மை'க்கான சந்தாக்களை அளித்துள்ளீர்கள் - பாராட்டுகிறேன். அதேபோல, விடுதலை' சந்தாக்களையும் வழங்குவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் - அந்த நம்பிக்கை எனக்குண்டு.
நமது விடுதலை' ஏட்டுக்குள்ள தனிச் சிறப்பு - ஓர் ஏட்டை குறைந்தபட்சம் பத்து பேர் படிப்பார்கள். புதுப் பாதை வகுக்கும் போர்வாள் விடுதலை' வீட்டுக்கு வீடு செல்லும் ஒரு நிலையை உருவாக்குவோம்! உறுதி எடுப்போம்!!
பிப்ரவரியில் மாநில மாநாடு
வரும் 2019 ஆம் ஆண்டு - இயக்கத்தில் புதுத் திருப்பம் தரும் ஆண்டாக அமையப் போகிறது - அமையவும் வேண்டும்.
பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - திராவிடர் கழகத்தின் பவள விழா ஆண்டில் திராவிடர் கழக மாநில மாநாடு என்பதை நினையுங்கள். இதன் முக்கியத்துவத்தை உணருங்கள் - நாளை முதல் சுவர் எழுத்துப் பணிகள் தொடங்கப்படட்டும் - அதன்மூலம் புதிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கவேண்டும்.
மாநாட்டையொட்டி அந்த இளைஞரணி பேரணி!
மாநாட்டையொட்டி நடத்தப்படவிருக்கும் பேரணி என்பது இயக்கத்தின் வளர்ச்சியை - எழுச்சியை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். இளைஞரணி பேரணியாக, எழுச்சிப் பேரணியாக சீருடையுடன் தஞ்சை மண்ணைக் குலுக்கவேண்டும். நமது இயக்கத்தையும் தாண்டிய இளைஞர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை உருவாக்கவேண்டும். காவி மண்ணாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவோரின் எண்ணங்கள் கருச்சிதைவு ஆகும் வகையில் கருப்புச் சட்டை மாக்கடலாக அந்தப் பேரணியும், மாநாடும் அமையவேண்டும்.
இது பெரியார் மண்தான் என்பதைத் தஞ்சையில் நிரூபித்துக் காட்டுவோம் - இப்பொழுது முதலே அதை நோக்கி நமது சிந்தனையும், செயல்பாடும் அமைய வேண்டும்.
குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அணிவகுத்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
குடந்தையை விஞ்சியதாக தஞ்சை அமைய வேண்டும்.
பிப்ரவரியில் மாநில மாநாடு என்றால், மார்ச் மாதம் நமது அன்னையார் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்கம்.
தந்தை பெரியார் 141 ஆம் ஆண்டு - செப்டம்பரில் அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மாநாடு
அடுத்த ஆண்டு செப்டம்பர் 17 - தந்தை பெரியார் அவர்களின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமெரிக்காவில் சிகாகோவில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் பன்னாட்டு மாநாடாக அமையும். அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
இதற்கிடையே பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். குற்றாலத்தில் 4 நாள்கள் என்றால், ஒகேனக்கல்லில் மூன்று நாள்கள் - இது எல்லா மாவட்டங்களிலும் சனி, ஞாயிறுகளில் நடத்திடத் திட்டமிடல் வேண்டும்.
நூல்கள் பரவல்
ஏராளமான நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறோம். அது இளைஞர்களின் கைகளுக்குச் சென்றடையவேண்டும். கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்து நூல்களை அறிமுகப்படுத்திட வேண்டும்.
2019 - நாடாளுமன்றத் தேர்தலில் நமது பணி
2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரு கிறது. தேர்தலில் போட்டியிடுவோரைவிட, தேர்தலில் போட்டியிடாத நமக்குத்தான் பொறுப்பு அதிகம்.
2014 இல் நடைபெற்ற தேர்தலின்போது, பி.ஜே.பி. பற்றியும், அதன் கொள்கைகள்பற்றியும், பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்ட மோடியின் சிந்தனை, நடவடிக்கைகள், போக்குகள் குறித்தும் நாம் எடுத்து வைத்ததன் அருமையை நாட்டு மக்கள் இப்பொழுது புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
எதையும் தொலைநோக்கோடு சிந்திப்பது, தெரிவிப்பது ஈரோட்டுக் கண்ணாடி அணிந்த நமக்கே உரித்தானதாகும்.
ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் நமது குறி - நமது அணுகு முறையும்கூட!
தேர்தலில் மக்கள் மத்தியில் உண்மைகள் போய்ச் சேரவேண்டும். மதவாத ஆட்சியின் தீய விளைவுகளை எடுத்துரைக்கவேண்டும் - அதில் விடுதலை'க்கு முக்கிய இடம் உண்டு.
போட்டியிருக்கட்டும் - பொறாமை வேண்டாம்!
அருமை இளைஞர்களே, இளைஞர்கள் மத்தியிலே போட்டி இருக்கவேண்டும் - போட்டி என்பது பொறாமையல்ல - ஆரோக்கியமானது. இயக்க வளர்ச்சியில், ஏடுகளைப் பரப்புவதில் அந்தப் போட்டி இருக்கவேண்டும் - தேவையானதும்கூட!
சமூக வலை தளம் - புதிய யுக்திகள் தேவை!
சமூக வலை தளம் என்பது இந்தக் காலகட்டத்தில் முக்கியமான பிரச்சார கருவியாக அமைந்துவிட்டது. அதிலும் நமது இளைஞர்கள் பங்கேற்கவேண்டும். வீண் சொல்லாடல்கள், தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. விடுதலை'யைப் படித்து அதன் அடிப்படையில் கருத்துகளை எடுத்துக் கூறவேண்டும்.
கடைசிவரை இளைஞர்கள் இயக்கத்தில் தொடர்வதுபற்றி...
பொதுவாக இளைஞர்கள் கடைசிவரை இயக்கத்தில் தொடருவது இல்லை என்ற குறைபாடு உண்டு. அரசியல் அபிலாசைகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். இலட்சியபூர்வமாக வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. அது காலத்தால் போற்றப்படக்கூடியது.
அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படும் நிலையில், நாம் அடுத்த தலை முறையைப்பற்றிக் கவலைப்படுகிறோம். தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஓடிய நிலையில், இந்தக் காலகட்டத்தில் நம் இயக்க செயல்முறைகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
தந்தை பெரியார் மறைந்தாலும் - அவர்தம் பணியை முடித்துக் காட்டியுள்ளோம்!
தந்தை பெரியார் இறுதியாகப் பேசிய சென்னை தியாகராயர் நகர் பொதுக்கூட்டத்தில் (19.12.1973) நம் இன இழிவைப்பற்றி எடுத்துரைத்தார். உங்களையெல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டு சாகப் போகிறேனே என்று சங்கநாதம் செய்தார்.
அய்யா அவர்கள் கூறிய அந்த சூத்திர இழிவு ஒழிப்புப் போராட்டத்தில், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெற்றோமா, இல்லையா?
தந்தை பெரியார் காலத்தில்கூட பிற்படுத்தப்பட்டோர் பெற்றிடாத - மத்திய அரசு துறைகளில் இட ஒதுக்கீடு என்ற உரிமையை ஈட்டியிருக்கிறோமா இல்லையா?
அன்றைக்குத் தந்தை பெரியார் கூறியபோது சீறிப் பாய்ந்த பெண்ணுரிமைக் கருத்துகளை இன்றைக்கு உச்சநீதிமன்றமே தீர்ப்பாக சொல்லும் நிலையல்லவா ஏற்பட்டுள்ளது.
நாம் பெறும் நிம்மதி!
பசி எடுத்த நிலையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது. படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கிடவேண்டும். அந்த ஆரோக்கியமும், நிம்மதியும், மனநிறைவும் இந்த இயக்கத்தின் கொள்கைகள்மூலம் நமக்குக் கிடைக்கிறது.
பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி. சிக்கனம், எளிமை, நேர்மை என்பதுதான் நமது வாழ்க்கைப் பாதை.
நம் கொள்கைகள் - விஞ்ஞானபூர்வமானவை - எனவே வெற்றி பெறும்!
விஞ்ஞானத்தின்முன் அஞ்ஞானம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. நமது கொள்கை விஞ்ஞான பார்வை கொண்டது. எனவே, வெற்றியேயன்றி நமக்குத் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை
கொள்கையும் - ஒழுக்கமும்!
கொள்கையில் எப்படி உறுதியுண்டோ, அதைப் போல ஒழுக்கத்தில் நாம் தவறக்கூடாது. நமது மாநாடுகளில்தான் பெண்களுக்குத் தனி இடம் என்று கிடையாது. குடும்பம் குடும்பமாக அமர்ந்து மாநாட்டில் பங்கேற்கக் கூடிய ஒப்பற்ற உன்னத இயக்கம் இந்த இலட்சியப் பாசறை!
மீ டூ' இங்கே கிடையாது!
மீ டூ'' என்பதெல்லாம் இங்கு கிடையாது - அதற்கு இடமும் இல்லை.
பெண்ணைப் பாலியல் பண்டமாகப் பார்க்காதே என்ற கருத்தை மக்கள் மத்தியில் சொன்னவர் தந்தை பெரியார்!
அந்தக் கருத்து எந்த அளவுக்குப் பரவுகிறதோ - மக்கள் மத்தியில் அந்த எண்ணம் எந்த அளவுக்கு உருவாகிறதோ - அப்பொழுதுதான் மீ டூ'' கள் ஒழியும்.
இளைஞரணிக்குப் பாராட்டும் - வாழ்த்தும்!
நமது அடுத்த பயணம் மாநில மாநாட்டை நோக்கி இருக்கட்டும்! மாநாட்டுக்கு ஓர் இலச்சினையை உருவாக்கும் எண்ணம் இருக்கிறது. அதுவும் விரைவில் அறிவிக்கப்படும்.
இளைஞரணி தோழர்களுக்குப் பாராட்டும், வாழ்த்துகளும் என்று உரைத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- விடுதலை நாளேடு, 4.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக