வியாழன், 8 நவம்பர், 2018

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் முடிவுகள்

* அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்


* கிரீமிலேயர் முறையை ஒழித்துக் கட்டுவோம்!

* தமிழர் தலைவர் பிறந்த டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை அளித்து மகிழ்வோம்!



சென்னை, நவ.3 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக அளிப்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று (3.11.2018) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 : இரங்கல் தீர்மானம்

மானமிகு சுயமரியாதைக்காரன்'' என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு திராவிடர் கழக இளைஞரணி ஆழ்ந்த இரங்கலையும், அவரின் அளப்பரியத் தொண்டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்  2:      பொதுக்குழு தீர்மானங்களைச் செயல்படுத்தல்

06.10.2018 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்றுச் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் விழா  (சுயமரியாதை நாள்)

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் ஓயாது உழைத்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழாவை (சுயமரியாதை நாள்) 2018 டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி மனிதநேயப்பணிகளான குருதிக்கொடை வழங்குதல், உடற்கொடை வழங்குதல், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல்,  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை நமக்கு அளித்த  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், கழகக் கொடியேற்றுதல், கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது எனத் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம்  4: உண்மை' சந்தா சேர்ப்புக்குப் பாராட்டு



2017 நவம்பரில் கடலூரில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் கழக இளைஞரணியினர் 2000 உண்மை' சந்தாக்கள் சேர்த்து அளிக்க வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மேலாக 2,220 உண்மை' சந்தாக்கள் சேர்த்து வழங்கிய கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு (குறிப்பாக சென்னை, தஞ்சாவூர், தருமபுரி, கோவை மண்டலம்) இக்கூட்டம் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இப்பணியை ஒரு தொடர் பணியாக செய்திடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  5: விடுதலை' சந்தா சேர்ப்பு


உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான, விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து 1,000 விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து 2018 டிசம்பர் 02 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  6: இளைஞரணி அமைப்பைக் கட்டமைத்தல்




திராவிடர் கழக இளைஞரணியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலுவாக கட்டமைக்கும் வகையில், கழக இளைஞரணி அமைப்பை மாவட்டம், ஒன்றியம், கிளைக் கழகம் வரை புதுப்பிப்பதற்கான சுற்றுப்பயணத்தை, கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள்  மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  7: தஞ்சையில்  கழக மாநில மாநாடு விளக்க சுவர் எழுத்துப் பணிகள்

2019 பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டை விளக்கி, தமிழகம் முழுவதும் உடனடியாக சுவர் எழுத்து விளம்பரப் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது. மேலும் மாநாட்டு நன்கொடை வசூல் பணிகள் மற்றும் விளம்பரப் பணிகளில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்  8 : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா


அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்து தன் வாழ்வை இலட்சியத் திற்காக அர்ப்பணித்து அவர் மறைவிற்குப்பின், திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்று 5 ஆண்டு காலம் வழிநடத்திய தொண்டறத்தின் தூய உருவம் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை 2019 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடிட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவித்த 8 செயல்திட்டங்களை செயல்படுத்திட திராவிடர் கழகம் மற்றும் கழக மகளிரணி பொறுப்பாளர்கள், தோழர்களோடு  இளைஞரணி தோழர்கள் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  9: கிரீமிலேயர் வருமானக் கணக்கீடு தொடர்பான ஆணையை ரத்து செய்க


கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட, அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்தியப் பணியாளர் நல அமைச்சகத்தின் 06.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாதச் சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆணையை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைக் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்துகொண்டு போராடிட  கிளர்ந்தெழ வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10: சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்வது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துக!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாமா? கூடாதா? என்பதுபற்றி உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில் சனாதனிகளும், பழைமை சம்பிரதாய விரும்பிகளும், பிரபல வழக்குரை ஞர்களையெல்லாம் வாதாட வைத்த நிலையில், 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வில் 4 நீதிபதிகள் பெரும்பான்மை கருத்துகளை தீர்ப்பாக எழுதி, எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லலாம்  என்று உரிமை வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டிய மத்திய அரசு குறுக்குசால் ஓட்டாமல், கேரள அரசுக்குத் துணை நின்று,  எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதிட வகை செய்க!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்று துணைவேந்தர் அறிவித்திருப்பது தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமானது.  மாநில அரசு குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர்,  கல்வித்துறைச் செயலாளர் உடனடிகவனம் செலுத்தி,   புதிய ஆணை ஒன்று தேவைப்படின்  நிறைவேற்றி முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள்,  தமிழில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவர்களுக்கு அந்த உரிமையை வழங்கவேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இப்பிரச்சினையில் காலம் தாழ்த்தினால்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அனுமதி  பெற்று, கிளர்ச்சியில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 3.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக