புதன், 19 ஜூன், 2024

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கண்டன உரை


காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 இல் சேலத்தில் சங்கமிக்கும் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று வலிமை சேர்க்கவேண்டும்! 


Published June 19, 2024, விடுதலை நாளேடு

* ‘நீட்’ என்பதே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது!

* திராவிடர் கழகம் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும்!

* வீதிமன்றத்திலும் மக்களிடம் செல்லுவோம்!

அடுத்த கட்டமாக இரு சக்கர வாகனப் பிரச்சாரம்; மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் 5 முனைகளிலிருந்து புறப்படும்!

சென்னை, ஜூன் 19 ‘நீட்’ என்பதே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம் என்றும், அதனை எதிர்த்து திராவிடர் கழகம் நீதிமன்றம் செல்லும்; வீதிமன்றத்திலும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘இனியும் தேவையா நீட்?”
நேற்று (18.6.2024) மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘‘இனியும் தேவையா நீட்?” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு மிக நீண்ட நேரம் நடைபெறக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ‘‘இனியும் தேவையா நீட்?” என்பது தலைப்பு. ஓர் அற்புதமான அரசியல் வகுப்பாக அமைந்து இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான அமைப்புகள், கட்சிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் இங்கே வந்து அற்புதமான உரையை ஆற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்ட உரையை இங்கே இருக்கின்றவர்கள்தான் கேட்கிறார்கள் என்று ஊடக நண்பர்களோ, மற்றவர்களோ கருதவேண்டாம். உலகம் முழுவதும் இருக்கின்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வாய்ப்பை பெரியார் வலைக்காட்சி தொடர்ந்து எல்லா இடங்களிலும் செய்துகொண்டிருக்கின்றது.

ஆகவே, இங்கே உரையாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்தவேண்டும். அந்த வகையில், மிகச் சிறப்பாக திராவிட மாணவர் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்றுள்ள திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் செந்தூர்பாண்டியன் அவர்களே, வரவேற்புரையாற்றிய மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகத்தின் மாநில அமைப்பாளர் பெ.நீலன் அவர்களே,
முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய திராவிடர் மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள், அற்புதமான மாணவச் செல்வங்கள் தொண்டறம், தங்கமணி, ஜீவா, சிவபாரதி, இனியன், மணிமொழி, ராகுல், அறிவுச்சுடர், இளஞ்செழியன், கவிபாரதி, திராவிடச்செல்வன் ஆகிய அருமைத் தோழர்களே,
தொடக்கவுரையாற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்த அற்புதமான ஓர் அரசியல் வகுப்பு, தொகுப்புரைகள், மிக விளக்கவுரைகள், பேருரைகள் எல்லாம் இணைந்து அற்புதமாக கருத்துகளைச் சொன்னவர்களுக்கு எங்களு டைய கனிந்த நன்றியை உரித்தாக்குவது என்னுடைய கடமையாகும்.
ஊடக நண்பர்களுக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வளவு நீண்ட நேரமாக இருந்து நிகழ்வினை பதிவு செய்திருக்கிறீர்கள். எவ்வளவு வெளியே வரும் என்பது வேறு செய்தி.
ஒரு தலைவர் பேசியதை, இன்னொரு தலைவர் மீண்டும் ‘‘கூறியதை கூறல்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு எவரும் பேசவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் புதிய புதிய கருத்துகளைச் சொன்னார்கள்.
சகோதரர் முத்தரசன் அவர்கள், உத்தரவையே போட்டார்கள். அவருடைய உத்தரவுக்கு நான் கீழ்ப்படிகிறேன்.
ஏனென்றால், தோழமைக் கட்சித் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்கள் நாங்கள்.

இது தேர்தல் நேர இட ஒதுக்கீடல்ல!
இட ஒதுக்கீட்டைப்பற்றி அதிகமாகக் கவலைப்படு கின்றவர்கள் நாங்கள்தான். தேர்தல் நேரத்தில்தான் இட ஒதுக்கீட்டைப்பற்றிய பிரச்சினைகள் உங்களுக்கு வரும். ஆனால், நாங்கள் தேர்தல் இல்லாத நேரத்திலும், இட ஒதுக்கீட்டைப்பற்றி கவலைப்படுகிறவர்கள்.
உங்களுடைய தேர்தல் இட ஒதுக்கீடு உள்பட, நாட்டில் இருக்கின்ற கல்வி, உத்தியோக இட ஒதுக்கீடு உள்பட அத்தனையும்பற்றி கவலைப்படவேண்டிய பொறுப்பில் இருக்கக்கூடிய பணியாட்கள் நாங்கள். தொண்டு செய்யக்கூடியவர்கள், வேலைக்காரர்கள் நாங்கள்.
அந்த வகையில், இங்கே சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள மானமிகு அருமைச் சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
அதேபோல, நேரத்தின் நெருக்கடியிலும் இங்கே வந்து சிறப்பாக உரையாற்றிச் சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களே,
எழுச்சித் தமிழர், என்னருந் சகோதரர், எங்களால் பிரிக்கப்பட முடியாத இரட்டையர்கள் நாங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எப்பொழுதும் எங்களோடு இருக்கக்கூடிய ஒன்றுபட்ட அருமைச் சகோதரர் விடுத லைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களே,
எப்பொழுதுமே எங்களையெல்லாம் ஒரு தந்தை நிலையில் வைத்துப் பார்த்து உற்சாகப்படுத்தக் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எளிமை வாய்ந்த ஒப்பற்ற தோழர் இரா.முத்தரசன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இங்கே உரையாற்றிய மத்தியக் குழு பொறுப்பாளர் அருமைத் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணி செயலாளர் அருமைச் சகோதரர் ஆ.வந்தியத்தேவன் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,
இந்தப் பிரச்சினை தொடங்கிய காலத்திலிருந்து இந்நிகழ்விலும் மிக ஆழமாக, புள்ளி விவரத்தோடு அரசமைப்புச் சட்ட ஞானத்தோடு, மறுப்புச் சொல்ல முடி யாத வாதங்களை எப்பொழுதும் எல்லா இடங்களிலும் எடுத்து வைத்து வருகின்றன பொதுப்பள்ளிக்கான மாநில மேடையினுடைய பொதுச்செயலாளர் அருமைத் தோழர் பு.ப.பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மானமிகு இளமாறன் அவர்களே,
பல பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சியைச் சார்ந்த நண்பர்களே, அதனுடைய முக்கிய பொறுப்பாளர்களே, கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, நேரத்தின் அருமை கருதி நான் அனைவரையும் அழைத்த தாகக் கருதி, ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, மூன்று செய்திகளை நான் இங்கே எடுத்து வைக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, அற்புதமான செய்திகளை இங்கே சொன்னார்கள். எங்களுடைய கழகத் துணைத் தலைவர் உரையாற்றும்பொழுது சொன்னார். நீட் தேர்வில் ஊழல் நடந்தது என்பதற்காக மட்டும், இந்த நீட் கூடாது என்கிற வாதம் இல்லை. நீட் தேர்வை உள்ளே நுழைத்ததினுடைய நோக்கமே தவறானது, அதனை ஏற்க முடியாது.
சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் சொன்னதுபோல, சமூகநீதியைக் கொல்லவேண்டும் என்பதுதான் அவர்களு டைய நோக்கம். தமிழ்நாடுதான், இந்தியாவிற்கே வழி காட்டக்கூடியது.

தமிழ்நாட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல!
தமிழ்நாட்டில் நாம் செய்கின்ற ஒவ்வொரு பணியும், தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல – போராடுகின்றவர்கள் நாம் – அந்தப் பலன் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் என்று கிடையாது. எப்படி குறிப்பிட்ட ஓரிடத்தில் அணை கட்டி தண்ணீர் தேக்கப்பட்டாலும், அத்தண்ணீர் எல்லா வயல்களுக்கும் பாயவேண்டும் – கடைமடை வரைக்கும் செல்லவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அதே போலத்தான் நம்முடைய போராட்டத்தின் பலன் நாட்டு இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் எல்லோருக்கும் பலன் தருகின்றது.
முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள். கம்யூனல் ஜி.ஓ. – பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்று சொல்லும்பொழுது, அன்றைய சென்னை மாகாண அமைப்பிற்கு மட்டும்தான் இருந்தது. பிறகு தமிழ்நாடு. ஆனால், அதற்குப் பிறகு, சிலர் வழக்குப் போட்டதில் ஒரு மறைமுக நன்மை ஏற்பட்டது. அது கேடுதான், பொய்யான பிரமாண பத்திரம்.
செண்பகம் துரைராஜன் என்பவர் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடவில்லை. எவ்வளவு தைரியம் இருந்தால், மனுவே போடாமல், ‘‘எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகலாம்” என்று ஒரு தவறான தகவலை நீதிமன்றத்தில் அளித்தார்.

‘ரிட்’டினுடைய தத்துவம் என்னவென்றால், சட்டம் படித்தவர்களுக்குச் சொல்கிறோம் – ‘‘உரிமை இருந்தால்தான், உங்களுக்குத் தீர்வு வேண்டும் என்று கேட்க முடியும்: உரிமையே இல்லாதபோது, நீங்கள் அதற்கு உரிமை கோர முடியாது” என்பதுதான் சட்டம். அதை மறைத்துவிட்டார்கள்.
இங்கே சகோதரர் சொன்னாரே, ‘‘எதையும் செய்வார்கள் அவர்கள்” என்பதற்கு அடையாளம் – இதுவும் ஓர் உதாரணம்தான்.
நீதிமன்றத்தில் பொய்யான மனுதாக்கல் செய்தவருக்காக அரசமைப்புச் சட்டக் குழு உறுப்பினர் அல்லாடி கிருஷ்ணசாமி ஆஜரான விந்தை!
அரசமைப்புச் சட்டத்தை எழுதிய அல்லாடி கிருஷ்ண சாமி அய்யர் உயர்நீதிமன்றத்திலும் வாதாடுகிறார். பொய்யான அபிடவிட் கொடுத்த ஒரு பெண்ணுக்காக உச்சநீதி மன்றத்தி லும் வாதடுகிறார்.

நம்மாட்கள் எல்லாம் அவ்வளவு பெரிய நிலைக்குப் போன பிறகு, நீதிமன்றத்திற்கே வரமாட்டார்கள். மான, ஈனம் முக்கியமல்ல; ஆனால், அவர்களுடைய பார்ப்பன இனநலன்தான் முக்கியம்; அவர்களுடைய சுயநலம்தான் முக்கியம் என்று நினைக்கக் கூடியவர்கள்.
அதேபோன்று, இட ஒதுக்கீட்டில், சமூகநீதியைக் கொல்லவேண்டும் என்று தொடர்ந்து நினைக்கிறார்கள்.
அடுத்ததாக, டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் சொன்ன ஒரு கருத்து மிகவும் ஆழமானதாகும். இங்கே ஒவ்வொருவரும் பல கோணங்களில் ஆய்வு செய்து உரையாற்றியிருக்கிறார்கள்.
இதுபோன்ற ஓர் அரசியல் வகுப்பு – பொதுக்கூட்டம் போட்டு, ஊடகங்கள் அதைப் பரப்பச் செய்வதே, இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு.
முதன்முதலில் அதைத் தொடங்கிய பெருமை தந்தை பெரியாருக்கு உண்டு. திராவிட இயக்கங்கள்தான் செய்தன” என்று.

மக்களிடம் எதையும் கொண்டு செல்லும் யுக்தி
திராவிட இயக்கத்தைச் சார்ந்தது!
எந்தப் பிரச்சினை என்றாலும், உடனே மக்களிடம் செல்வார்கள். வடக்கே இந்த நிலை கிடையாது. கேரள மாநிலத்தில் உண்டே தவிர, வேறு மாநிலங்களில் கிடையாது.
இங்கே சொன்னார்கள், இது ஒரு ‘‘சைக்கலாஜிக்கல் வார்” என்று.
மண்டல் கமிஷனில் ஒரு வரி இருக்கிறது.
‘‘The Battle against social backwardness is to be fought in the minds of the backward people!” என்றார் பி.பி.மண்டல்.

அதாவது, மக்கள் மனதில் நிகழ்த்தப்படவேண்டிய அறிவுப் போர்!
நண்பர்களே, ஒரு மனோதத்துவ ரீதியாக பலகீனப்படுத்தும் அளவிற்கு ஒரு சூழ்ச்சியைச் செய்து, இன்றைக்கு அதை ஆக்கியிருக்கிறார்கள்.
ஆனால், வெளியில் பேசும்பொழுதும், இதற்கு நேர் விரோதமாகப் பேசுவார்கள். இன்றைக்குக்கூட ஒன்றியத்தில் மைனாரிட்டி அரசாக இருக்கிறது; எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கவனமாக சிலர் ஒன்றிய ஆட்சி யாளர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
நம்முடைய நாட்டில், எப்படி பிற்படுத்தப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்து கிறார்கள் என்பதை இங்கே சொன்னார்கள்.
இது அவர்களுக்குக் கைவந்த கவலை. இராமாயணத்தில் எப்படி இராவணனை வீழ்த்தினார்கள்? விபீடணனை வைத்துத்தான். அதேபோன்று, பிரகலாதனுடைய பங்களிப்பு என்ன? புராணங்கள் பொய்யாக இருக்கலாம்; ஆனால், தத்துவங்கள் மிகவும் முக்கியம் என்று பெரியார் அவர்கள் சொல்வார்கள்.

இராமாயண காலத்திலிருந்து விபீஷணர்கள்!
இராமாயணக் கதைப்படி, சீதையை மீட்டு வந்தவன் அனுமார், கதைப்படி எல்லோரும் அமர்ந்திருப்பார்கள். ஆனால், அனுமன் உட்கார்ந்திருக்கின்ற இடம் எங்கே என்றால், இராமன் காலடியில், கீழேதான் இருப்பார்.
ஆகவேதான், நம்முடைய சமுதாயத்தில், அனு மார்களையும், விபீடணர்களையும், சுக்ரீவன்களையும், பிரகலாதன்களையும் உருவாக்குகிறார்கள். அவர்களைக் கவனப்படுத்தவேண்டும் என்று சகோதரர் திருமா அவர்கள் சொன்னது, மிகவும் முக்கியமான பாடமாகும்.
பொய் சொல்வது என்பது அவர்களுக்குச் சாதாரண விஷயம். மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால், அந்தக் கதை முழுவதும் பொய் சொல்வதுதான் அதன் தத்துவம்.
எப்படி கர்ணனை வீழ்த்தினார்கள் என்றால், பொய் சொல்லித்தான் வீழ்த்தினார்கள் அந்தக் கதைப்படி.
அந்தத் தத்துவத்தை இப்பொழுதும் கடைப்பிடிக்கிறார்கள். வெளியில் சொல்லும்பொழுது, ஊழல் மிகவும் இன்றைக்குப் பெருகிவிட்டது; ‘‘ஊழல் இல்லாத ஒரு தத்துவத்தை உருவாக்குவதற்குத்தான் நீட் தேர்வு” என்று சொன்னார்கள்.
இன்று (18.6.2024) காலையில் வந்திருக்கின்ற டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.
Gujarat homeopath pays Rs 16 lakh for
MBBS seat, gets ‘degree’ in a month
Even as the uproar over the alleged irregularities in NEET for admissions to MBBS courses continues, a shocking case of medical education fraud has come from Mehsana in north Gujarat. A homeopath paid Rs 16.32 lakh for admission to an MBBS course from a UP university and received his degree and certificates within a month of making full payment, without attending a single class or taking any exam.
Realising it was a forged degree, he approached police in 2019. However, the FIR was registered only on June 14, after almost five years.
In July 2018, Suresh Patel (41) was surfing on the internet about higher education in medicine, when he came across a website offering an MBBS degree through a forum called All India Alternative Medical Council, and phoned the contact person, Dr. Prem Kumar Rajput.
“Rajput assured me that I would get an MBBS degree based on my class 12 marks. I was sceptical…but he assured me that everything would be legal,” Patel told..
இதன் தமிழாக்கம் வருமாறு:

குஜராத் ஹோமியோபதி மருத்துவர்
ரூ.16 லட்சம் செலுத்தி, ஒரு மாதத்தில் எம்.பி.பி.எஸ். ‘டிகிரி’ பெற்றார்!
எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், வடக்கு குஜராத்தில் உள்ள மெஹ்சானா வில் மருத்துவக் கல்வியில் மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர ரூ.16.32 லட்சம் செலுத்தி, இணைந்து, ஒரு வகுப்பிலும் கலந்துகொள்ளாமலும், ஒரு தேர்வும் எழுதாமலும், முழுப் பணம் செலுத்திய ஒரு மாதத்திற்குள் மருத்துவர் பட்டமும், சான்றிதழ்களையும் பெற்றார் ஒரு ஹோமியோபதி மருத்துவர்.
இது போலியான பட்டம் என்பதை உணர்ந்த அவர், 2019 இல் காவல்துறையை அணுகினார். இருப்பினும், கிட்டத்தட்ட அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 14 அன்றுதான் முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்யப்பட்டது.
ஜூலை 2018 இல், சுரேஷ் படேல் (வயது 41) மருத்துவத்தில் உயர்கல்வி பற்றி இணையத்தில் தேடும்போது, ​​அகில இந்திய மாற்று மருத்துவக் கவுன்சில் என்ற மன்றத்தின் மூலம் எம்பிபிஎஸ் பட்டம் வழங்கும் இணையதளத்தைப் பார்த்தார். ​​உடனே, டாக்டர் பிரேம் குமார் ராஜ்புத் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.
“எனது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்பிபிஎஸ் பட்டம் பெறுவேன் என்று ராஜ்புத் எனக்கு உறுதியளித்தார். எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்,” என்று படேல் கூறினார்.

கங்கைப் ‘புனித’ நீரா?
‘நீட்’ தேர்வு ‘புனித‘மானது என்கிறது உச்சநீதிமன்றம். கங்கைக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்றால், ‘புனித கங்கை’யாம். அதைச் சுத்தப்படுத்துவதற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். புனித கங்கையை ஏன் சுத்தப்படுத்தவேண்டும்? 30 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்தும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மற்ற மற்ற ஆறுகளில் தண்ணீர் மட்டும்தான் வரும். ஆனால், புனித கங்கையில், பிணங்களும் சேர்ந்து வரும். அதுதான் புனிதம்.
அதேபோன்று தேர்வில் என்ன புனிதம் இருக்கிறது? தேர்வில் வெற்றி பெறுவது அல்லது தோல்வி அடைவது என்பதுதானே! எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை பெரியார் கண்ணாடியை அணிந்துகொண்டு பார்த்தால்தான் தெளிவாகத் தெரியும்.
தயவு செய்து எண்ணிப் பாருங்கள் எவ்வளவு மோசடியை நம்மீது பிள்ளைகள்மீது திணித்திருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவருக்கு மருத்துவர் இருக்கிறார்; பிரதமர் மோடிக்கு மருத்துவர் இருப்பார். அந்த மருத்துவர்கள் எல்லாம் என்ன நீட் தேர்வில் தேர்வானவர்களா?
தகுதி, திறமை என்று பேசிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நீட் தேர்வில் தேர்வானவர்களைத்தான் நாங்கள் மருத்துவர்களாக வைத்திருக்கின்றோம் என்று இன்றைக்கு யாராவது சொல்ல முடியுமா?
ஆகவே, முதலில் மனோதத்துவ ரீதியாக, சமூகநீதியைக் கொல்லுவதற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், முகப்புரையிலேயே
JUSTICE, social, economic and political;
என்று அரசியலைக் கூட கடைசியாகத்தான் வைத்தி ருக்கிறார். இரண்டாவதாக பொருளாதாரம். முதலாவதாக, சமூகநீதிதான்.
அதை அழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு. அன்றைக்கு மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று சொன்னார்கள். இன்றைக்கு நீட் தேர்வு. முறைதான் மாறியிருக்கிறதே தவிர, நமக்கு வலை விரித்திருக்கிறார்கள் என்பதுதான் நாம் உணரவேண்டிய ஒன்றயாகும்.

‘நீட்’டை நோக்கி பலமுனை தாக்குதல்
நடைபெற்றாக வேண்டும்!
இங்கே நண்பர்கள் எல்லோரும் சொன்னார்கள். அரசமைப்புச் சட்ட ரீதியாக ஒரே ஒரு கருத்தைச் சொல்கிறேன்.
அடுத்தகட்டமாக பல முனை தாக்குல் செய்யவேண்டும். இதை சாதாரணமாக விடப் போவதில்லை. நீட் தேர்வு ஒழிகின்ற வரையில், இந்த அணி தொடர்ந்து தெருமுனை, சந்து பொந்துகளில் பேசிக் கொண்டிருக்கின்ற அணியாகத் திகழும்.
நல்ல வாய்ப்பாக, எட்டாண்டுகளுக்கு முன்பு இதை நாங்கள் தொடங்கினோம். அன்றைக்குத் தமிழ்நாடு மட்டும்தானே நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கிறது என்று சொன்னார்கள். தென்னாடு கேட்டது; இப்பொழுது ஆந்திரா, கருநாடகா போன்ற தென்னாடுகளில் கேட்கிறார்கள்.
தொன்னாட்டையும் தாண்டி, இப்பொழுது உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்றவர்கள் கேட்கிறார்கள்; குஜராத்தில் இருக்கின்றவர்கள் கேட்கிறார்கள்; மற்ற மற்ற மாநிலங்களிலும் கேட்கிறார்கள். எனவே, இது அகில இந்திய பிரச்சினையாக இன்று மாறியிருக்கிறது.
எல்லாவற்றையும்விட, காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி இதை நான் மிக முக்கியமாக நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லுவேன் என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எல்லா தலைவர்களும் இதுகுறித்து இன்றைக்குப் பேசக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
இங்கே சொன்னீர்கள், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இந்தப் போராட்டம் இருக்கவேண்டும் என்று.

நீதிமன்றத்தைவிட வீதிமன்றமே வலிமையானது!
நீதிமன்றங்களில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது ஒரு அடையாளம்தான். இந்த வழக்கில் இதைப்பற்றி கேள்விகள் பலவற்றை ஒன்றிய அரசைப் பார்துக் கேட்டாலும், நூற்றுக்கு நூறு அதை நம்ப முடியாது. ஆனால், நாம் இறுதியாக நம்பவேண்டியது மக்கள் மன்றத்தைத்தான்.
எனவே, நீதிமன்றம் நமக்கு வாய்ப்பாக இருந்தால் சரி. ஆனால், வாய்ப்பாக இல்லை என்றாலும், மக்கள் மன்றம்தான் இறுதியாக முடிவு செய்யக்கூடியது. ஆகவே, அந்த மக்கள் மன்றத்திற்கு நாம் செல்லவேண்டும்.
அப்படி பல செய்திகளை நாம் பிரச்சாரம் செய்யும்பொழுது, இந்த நீட் தேர்வினுடைய மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால், சமூகநீதியைக் கொல்லுவது மட்டுமல்ல – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் அம்பேத்கர் சொன்னார் பாருங்கள், social justice, economic என்று வரும்பொழுது அது எப்படி மீறப்படுகிறது என்பதை இங்கே நண்பர்கள் சொன்னார்கள், பெரும் பெரும் கார்ப்பரேட்டுகளிடம் பணம் கொடுத்து நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.

இங்கே சகோதரர்கள் சொன்னதுபோன்று, ஏழை, எளியவர்களுடைய பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.
இன்றைக்குக்கூட மிகப்பெரிய அளவிற்குப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஊழல்கள் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
மூன்று பட்டியல் உங்களுக்குத் தெரியும்.
India, that is Bharat, shall be a Union of States
இந்தியா என்பது எல்லா மாநிலங்களையும் இணைந்த ஒரு கூட்டாட்சி.
அப்படியென்றால், மாநிலங்களுக்கு இருக்கின்ற உரிமை யைப்பற்றி சொல்லும்பொழுது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் போன்றவர்கள் மூன்று பட்டியல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஏழாவது அட்டவணையில், மாநிலங்களுடைய உரிமைகள்.

மாநிலங்களுக்கு என்ன உரிமை?
ஒன்றிய அரசுக்கு என்ன உரிமை?
ஒத்திசைவு பட்டியல் என்று இருக்கிறதே, அது பொதுப் பட்டியல் இல்லை. கன்கரண்ட் லிஸ்ட். கன்கரண்ட் என்றால், ஒப்புக்கொள்ளவேண்டும். மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால்தான் அந்தப் பட்டியல் இருக்கும். அதுதான் சட்டப்பூர்வமான சரியான விளக்கமாகும்.
நெருக்கடி காலத்தில் கல்விப் பட்டியலை, மாநில அரசு பட்டியலிருந்து, விவாதமின்றி ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
ஆனால், இன்றைக்கு அந்த இடத்திற்கே போகவேண்டாம்; திராவிடர் கழகம், தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகளைக் கலந்தாலோசித்து, அரசமைப்புச் சட்ட ரீதியாகவே, ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அறிக்கையைக் கொடுத்திருக்கிறது.
அந்த அறிக்கையில் மிக முக்கியமான ஒரு வழிமுறையை சொல்லியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது.

‘நீட்’ அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது!
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது நீட் தேர்வு. அந்தக் கோணத்தில் இதுவரையில் வழக்கு தொடரப்பட வில்லை. அந்தக் கோணத்தில் புதிதாக ஒரு வழக்கை திராவிடர் கழகம் முன்னெடுத்து நீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறது. அது உயர்நீதிமன்றமாக இருந்தாலும் இருக்கலாம்; உச்சநீதிமன்றமாக இருந்தாலும் இருக்கலாம்.
ஒரே ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். செய்தியாளர்கள் நண்பர்களும் மிக முக்கியமாக இதனைக் குறித்துக் கொள்ளவேண்டும்.
நீட் தேர்வை மறுப்பதற்கு முழுக்க முழுக்க நமக்கு உரிமை இருக்கிறது. நீட் தேர்வைக் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகத்தான், எதிராகத்தான் இது நடந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாக ஒன்றைச் சொல்லுகிறேன்.

ஒன்றியப் பட்டியலில், ஒன்றிய அரசுக்கு என்னென்ன அதிகாரம்?
44 ஆவது அம்சம்
Incorporation, regulation and winding up of corporations, whether trading or not, with objects not confined to one State, but not including universities.
பல்கலைக் கழகங்களைத் தவிர மீதமுள்ள இடங்களை ஒழுங்கு செய்யலாம், சரிபடுத்தலாம் என்ற 44 ஆவது அயிட்டத்தில் இருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன்,
பல்கலைக் கழகங்களில் உரிமைகளில் கை வைக்கக்கூடிய அதிகாரம் ஒன்றிய அரசுக்குக் கிடையாது.
மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வு நடத்துகின்ற உரிமை யாருக்கு என்று சொன்னால், அந்த உரிமை பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான். பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கும் உரிமை மாநில அரசுகளுக்குத்தான் உண்டு.
தமிழ்நாட்டில், எம்.ஜி.ஆர். மெடிக்கல் யுனிவர்சிட்டி என்று சொல்லக்கூடிய பல்கலைக் கழகத்திற்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு.

மாநிலப் பட்டியலில் 32 ஆவது அம்சம்!
Incorporation, regulation and winding up of corporations, other than those specified in List I, and universities; unincorporated trading, literary, scientific, religious and other societies and associations; co-operative societies.
இதன் தமிழாக்கம் வருமாறு:
ஒன்றாம் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டவை அல்லாத கூட்டுருமங்களைக் கூட்டுருமங்களாகப் பதிவு செய்தல், ஒழுங்குறுத்துதல் மற்றும் முடிவுறுத்துதல்; மேலும் பல்கலைக் கழகங்கள்; கூட்டுருமங்களாகப் பதிவு செய்யப்படாத வணிக, இலக்கிய, அறிவியல், சமய மற்றும் பிற சங்கங்களும், கழகங்களும்; கூட்டுறவுச் சங்கங்கள்.
தேசிய தேர்வு முகமை என்று சொல்வது அரசமைப்புச் சட்டத்திற்கு நேர்விரோதமானது. இந்த அநீதியை எதிர்த்து திராவிடர் கழகம் முன்னெடுக்கும். நம்முடைய தோழமை கட்சிகள் இணைத்து செயல்படும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வெற்றி பெற்றோம். மற்றவர்கள் எல்லாம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். திராவிடர் கழகமான நாங்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.

அன்றைக்கு இருந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சொன்னார், மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள் என்று.
அதற்குப்பிறகுதான் எல்லோரும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
எனவே, சட்டப் போராட்டம் ஒரு பக்கத்தில் தொடரும். இது ஒரு நல்ல தொடக்கம். அதற்கடுத்தபடியாக நண்பர்களே, தொடர்ந்து இதுபோன்ற பிரச்சாரங்களை செய்துகொண்டிருக்க வேண்டும்.
அடுத்தகட்டமாக நாங்கள் ஓர் அறிவிப்பினை வெளியிடுகிறோம். அது என்னவென்றால், திராவிடர் கழக மாணவர்கள் மட்டுமல்ல, எல்லா மாணவர்களும் ஒன்றுபட்டு விட்டனர். அது இந்திய கம்யூனிஸ்ட்டு மாணவர்களாக இருக்கலாம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாணவர்களாக இருக்கலாம்; மார்க்சிஸ்ட் கட்சி மாணவர்களாக இருக்கலாம், தி.மு.க. மாணவர்களாக இருக்கலாம். எல்லோரும் ஒரே குடையின்கீழ் இருக்கிறார்கள். எப்படி தலைவர்கள் ஒன்றாக இருக்கிறார்களோ, அதுபோன்று இருக்கிறார்கள். இது நாளாக நாளாக விரிவாகும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். மெரினா இன்னமும் காலியாகத்தான் இருக்கிறது. கடல் ஒன்றும் கொண்டு போய்விடவில்லை. இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எப்படி இரும்பை வளைப்பதற்கு நெருப்பில் காய்ச்சி அடித்துக் கொண்டே இருப்போமோ, அதேபோன்று, எங்களுடைய போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். எங்களுக்கு வேறு வேலையே கிடையாது.
அரசியல் கட்சித் தோழர்கள் நாடாளுமன்றத்திற்குள் ஏவுகணைகளாக சென்றிருக்கிறார்கள். திருமாவைப் பார்த்தால் அவர்களுக்கு நடுக்கம். இராசாவைப் பார்த்தால், அதைவிட நடுக்கம். கனிமொழியைப் பார்த்தால் இன்னும் நடுக்கம். காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்தால், அதைவிட நடுக்கம். ஒட்டுமொத்தமாக அவர்களை ராகுல்காந்தி அவர்கள் பார்த்துக் கொள்கிறார்.
அவர்கள் என்னதான் வித்தைகள் காட்டினாலும்கூட, அந்த வித்தைகள் மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

திராவிடர் கழகத்தின் அடுத்த செயல் திட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய, ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தமிழ்நாடு தழுவிய அளவில், அய்ந்து குழுக்கள் – இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கும்.
ஒரு குழு, கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி சேலம் வரும்.
இரண்டாவது குழு இராமநாதபுரத்திலிருந்து தொடங்கி சேலம் வரும்.
மூன்றாவது குழு புதுச்சேரியிலிருந்து தொடங்கி, சேலம் வரும்.
நான்காவது குழு கோவை தாராபுரத்திலிருந்து புறப்பட்டு, சேலம் வந்தடையும்.
அய்ந்தாவது குழு சென்னையிலிருந்து சேலம் சென்றடையும்.

ஆகவே, அய்ந்து குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திப் பிரச்சாரம் செய்து சேலம் வந்தடையும்.
இந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தில், மற்ற அமைப்பினர் வந்து கலந்துகொண்டாலும் மகிழ்ச்சியாக வரவேற்போம். திராவிடர் கழகம்தான் செய்யும் என்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான். ஒரு உருவம் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்த வாய்ப்பு.
ஆகவே, கட்டுப்பாடாக, யாருக்கும் தொல்லை இல்லாமல், பொதுச்சொத்துக்கு நாசமில்லாமல், பொது ஒழுங்குக்கு, பொது அமைதிக்குக் கேடு இல்லாமல், அறவழிப்பட்ட முறையில் பிரச்சாரம் – துண்டறிக்கைகளை வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை கொடுத்துக்கொண்டே செல்வார்கள்.
ஜூலை 15 ஆம் தேதி கல்வி வள்ளல் காமராஜர் அவர்களுடைய பிறந்த நாளன்று, எல்லா அமைப்புகளும் சேர்ந்து, தலைவர்களில் யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் அனைவரும் சேர்ந்து ‘‘சேலம் செயலாற்றும் காலம்” என்று சொன்னார் அண்ணா அவர்கள், அதுபோன்று, சேலத்தில் நாம் ஒன்று கூடுவோம்.

அவரவர்களுக்கு எங்கெங்கே வாய்ப்பு இருக்கிறதோ தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்; ஆங்காங்கே அந்தப் பிரச்சாரக் குழுவிற்குப் பேராதரவு கொடுங்கள். பெற்றோருடைய பேராதரவு தேவை. ஊடகங்களுடைய பேராதரவு தேவை.
எனவே, இந்தப் பணி என்பது எங்களுக்காக அல்ல. உங்களுக்காக – மக்களுக்காக – வருங்கால சந்ததிக்காக – நிகழ்காலத்தில் சமூகநீதி இல்லையானால், சமூகநீதி இல்லாமலேயே போய்விடும்.
அழகாகச் சொன்னார் எழுச்சித் தமிழர் – மண்டல் வந்தவுடன், அதற்கு எதிராக கமண்டலைத் தூக்கினார்கள். அந்தக் கமண்டலத்தால் எதுவும் நடக்கவில்லை. இன்றைக்குக்கூட ஒன்றியத்தில் பா.ஜ.க. மைனாரிட்டி அரசாகத்தான் வந்திருக்கிறது.
அனைவரும் ஒத்துழைப்புத் தாரீர்!
முன்பு சேவகராக வந்தார் மோடி; இப்பொழுது அவதார் என்று சொல்கிறார். சமஸ்கிருதத்தில், அவதார் என்றால், மேலே இருந்து கீழே இறங்குதல் என்று அர்த்தம்.
இந்த அவதாரங்களை மேலே இருந்து கீழே இறங்க வைப்போம். அதுவரையில் போராட்டம் நடைபெறும்.
நாங்கள் உள்ளத்தால் ஒருவரே, உடலினால் பலராய் காண்பினும்.
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி1
தலைவர்களுக்கு நன்றி!
ஊடகங்களுக்கு நன்றி!
தோழர்களுக்கு நன்றி!
அனைவருக்கும் நன்றி!!
பயணங்கள் முடிவதில்லை – இலட்சியங்கள் தோற்பதில்லை!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக