சனி, 29 ஜூன், 2024

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாடு !

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (334)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 1-15, 2024

திருவண்ணாமலை
திராவிடர் எழுச்சி மாநாடு !

 திருவண்ணாமலையில் 16.10.2004 அன்று தந்தை பெரியாரின் 126ஆம் பிறந்த நாள் விழா மற்றும் “திராவிடர் எழுச்சி மாநாடு” மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதலாவதாக, திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் கலை நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்குத் தொடங்கி மிகச் சிறப்பாக ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இயக்கப் பாடல்களுக்கு இசையமைத்த, மறைந்த டி.ஆர். பாப்பா அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
அடுத்து மாநாடு 10.35 மணிக்குத் தொடங்கியது. வேலூர் மாவட்ட தி.க. தலைவர் குடியாத்தம் வி. சடகோபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.வெ.கி. ஆசான் மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசினார்.

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாட்டில் தீச்சட்டி ஏந்தும் ஆசிரியர்

“வருண தர்மம் (கீதை)” என்ற தலைப்பில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலத்தலைவர்- பெரியார் பேருரையாளர் அ. இறையன், “சங்பரிவார்” என்ற தலைப்பில் கழக தகவல் தொடர்பு துறை அமைப்பாளர் வழக்குரைஞர் அருள்மொழி, “இதிகாசங்கள்” என்ற தலைப்பில் ஆவடி மாவட்ட தி.க., தலைவர் ஆவடி ஆர். திருநாவுக்கரசு, பெண்ணடிமை” என்ற தலைப்பில் கவிஞர் செ.வை. ர.சிகாமணி, “மனு தர்மம்” என்ற தலைப்பில் மாநில இளைஞரணி அமைப்பாளர் க. சித்தனைச்செல்வன், “புராணங்கள்” என்ற தலைப்பில் மு. தமிழ்மொழி ஆகியோர் நண்பகல் வரை நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினர்.

ஆயிரக்கணக்கானோர் அணி வகுத்து வந்தனர். குறிப்பாக திருப்பத்தூர், மணியம்மையார் மகளிர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் முழக்கமிட்டு வந்தனர். அந்த மாவட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி. எழிலரசன் மற்றும் பொறுப்பாளர்கள் விருதினையும் தொகையையும் கழகத் தலைவர் அவர்களிடம் மேடையில் பெற்றுக்கொண்டனர்.

சு.தெ.மூர்த்தி படம் திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார் ஆசிரியர்

இரண்டாம் பரிசினை தருமபுரி மாவட்டம் பெற்றுச் சென்றது. பெரிய எண்ணிக்கையில் பங்கு கொண்டனர்.
மாவட்டக் கழகத் தலைவர் மு.மனோகரன், செயலாளர் வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் விருதினை தொகையினையும் பெற்றுக்கொண்டனர். அந்த நிதியைக் கழகப் பாதுகாப்பு நிதிக்குத் திருப்பி அளித்தனர்.

கலை வீரமணி அவர்களின் ஏற்பாட்டில் திண்டிவனம் அன்புக்கரங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் அணிவகுப்பைப் பற்றிப் பேசாதவர்கள் யாரும் இல்லை.
150 மாணவ, மாணவிகளும், 20 ஆசிரிய மாணவிகளும் இந்த அணி வகுப்பில் பல்வேறு வயதினரும் சிறப்பான சீருடையுடன் முகப்பில் அணிவகுத்து வந்தனர்.
எங்கள் திராவிடப் பொன்னாடே! என்ற பாடல் முழங்க அவர்கள் வீரநடை போட்டு கழகக் கொடிகளைக் கம்பீரமாக ஏந்தி வந்தனர்.

இரவு நடைபெற்ற நிகழ்வில் 1. மதச்சார்பின்மை, சமூகநீதியை வலியுறுத்தியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வற்புறுத்தியும், தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை உடன் நிரப்பக் கோரியும்,
2. வேலை வாய்ப்பைத் தடைசெய்யும் செயல்களில் அரசுகள் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியும்,
3. உயர்நீதிமன்ற நியமனங்களில் அனைத்து வகுப்பினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டியும்,
4. பொடா சட்டம் நீக்கத்திற்கு வரவேற்புத் தெரிவித்தும்
5. தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் இவற்றை அமல்படுத்தக் கோரியும்,
6. விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரியும்
7. சனாதனத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் ஆர்க்காடு நா. வீராசாமி, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.அய்., மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பெரிதும் பாராட்டி அவை நிறைவேற தத்தம் கட்சிகள் துணை நிற்கும் என்று மாநாட்டில் அறிவித்தனர்.
மாநாட்டின் நிறைவாக, தீர்மானங்களை விளக்கியும் வலியுறுத்தியும் மதவெறியைக் கண்டித்தும் நாம் நீண்டதொரு விளக்க உரையாற்றினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக