சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024)!
பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை!
சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024). பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை! கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று (25.6.2024) சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள்!
27 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு
ஆணை பிறப்பித்த பெருமை!
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டுக்கு மேலே உள்ள மக்களான பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்ட பிறகும்கூட, சுமார் 40 ஆண்டுகளான பின்பும்கூட – ஒன்றிய அரசின் பதவிகள் – பணிகளில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தரப்படாமல் இருந்த நிலையைப் போக்கிட – இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – மண்டல் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டு, பரிந்துரைகளை ஒன்றிய அரசு பெற்றும்கூட, சுமார் 10 ஆண்டுகாலம் கிடப்பில் போடப்பட்ட பிறகு, தமிழ்நாடு – பெரியார் மண்ணிலிருந்து கிளம்பிய ஆவேசம், வடபுலத் தலைவர்களோடு இணைந்து எடுத்த தொடர் முயற்சிகளால் (இந்தியா முழுவதும் 46 மாநாடுகள், 16 போராட்டங்கள் புதுடில்லி உள்பட) மண்டல் பரிந்துரை கிளர்ச்சி நாடு தழுவிய நிலையில், ஒன்றிய அரசின் மவுனத்தைக் கலைத்து, தனது ஆட்சிக்காலத்தில் மண்டல் பரிந்துரைகளில் வேலைவாய்ப்புக்கான 27 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கான ஆணையைப் பிறப்பித்த பெருமை அந்நாள் பிரதமர்
வி.பி.சிங் அவர்களையே சாரும்.
(அப்போது கல்வித் துறைக்கான இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்தது)
அதற்காகவே அன்று வி.பி.சிங் ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவினைப் பின்வாங்கி, அவரது ஆட்சியைக் கவிழ்த்தது பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ்.
எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்று மார்தட்டிய மாவீரன்தான் மாமனிதர் வி.பி.சிங்!
ஆட்சி இழப்புப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், ‘‘இதுபோன்ற நல்ல பொருள்களைப் (பிற்படுத்தப்பட்டோர் முதன் முறையாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தரும் 27 சதவிகித ஆணை பிறப்பித்தமை, ‘கமண்டல்’ – இராமர் கோவில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டும் இயக்கம் – ‘மண்டலுக்கு எதிரான கமண்டல்’ உண்டாக்கினர்) பெற நல்ல விலை கொடுப்பது தேவைதான். எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பிரதமர் பதவியை இழக்கத் தயார்” என்று மார்தட்டிய மாவீரன்தான் மாமனிதர் விசுவநாத் பிரதாப் சிங் அவர்கள்!
அவர் பிறந்த மண்ணான உத்தரப்பிரதேசத்தில்கூட அவருடைய சிலை எழுப்பப்படவில்லை; அவரை மிகவும் நேசித்த பெரியார் பூமியான திராவிட மண்ணில் அதன் திராவிட ஆட்சி நாயகரால் முழு உருவச் சிலை நிறுவி, திறந்து வைக்கப்பட்டது – அரிய வரலாற்றுச் சாதனை!
சமூகநீதியைக் காக்கவும், எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போமாக!
மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிப்பதற்கு அவரது கட்சிக்குள்ளேயே இருந்த பிற்போக்குவாதிகளான கூட்டாளிகளும்கூட எவ்வளவோ இடையூறுகள் செய்தும், அவர் அதில் உறுதியாக நின்றார், வென்றார்!
அவரது 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2024) சமூகநீதிச் சூரியக் கதிர்களின் ஒளி வீச்சுப் பரவிய நாளில், அவரது நினைவைப் போற்றி, இன்னமும் அதன் எதிரிகளிடமிருந்து சமூகநீதியைக் காக்கவும், எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவுமான தொடர் அறப்போரில் உறுதியேற்போமாக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.6.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக