இயக்க வரலாறான தன் வரலாறு (337) – கி.வீரமணி
கோவில்பட்டியில்
திராவிடர் எழுச்சி மாநாடு!
கோவில்பட்டியில் 22.1.2005 அன்று தென்மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. கோவில்பட்டி திராவிடர் கழகக் கொள்கைப் பட்டியானது. எங்குப் பார்த்தாலும் கழகத் தோழர்கள், தோழியர்களாகவே காணப்பட்டனர்.
இளைஞர் அரங்கம் நிகழ்ச்சி தொடங்கியது. மாநில இளைஞரணி அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் அனைவரையும் வரவேற்றார். கழகச் சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் கி. மகேந்திரன் மாநாட்டிற்குத் தலைமை வகித்து உரையாற்றினார்.
“சங்கராச்சாரி யார்?“ என்னும் தலைப்பில் சி.எம். பெருமாள், ‘புட்டபர்த்தி சாயிபாபா‘ என்ற தலைப்பில் சீனி. விடுதலையரசு, ‘சதுர்வேதி, பிரேமானந்தா வகையறாக்கள்’ என்னும் தலைப்பில் மதுரை வேங்கை மாறன் ஆகியோர் உரையாற்றினர்.
பிறைநுதல் செல்வி
அடுத்து, திராவிடர் எழுச்சி மாநாட்டை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் திறந்து வைத்து உரையாற்றினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை ஆந்திர மாநில உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி அவர்கள் மாநாட்டில் கூடியிருந்த மக்களுடைய கரவொலிக்கிடையே திறந்து வைத்து உரையாற்றினார்.
கு.வெ.கி.ஆசான்
அடுத்து, பகல் 12 மணிக்கு மேல் மகளிர் அரங்கம் தொடங்கியது இலட்சுமி கண்ணையன் வரவேற்றுப் பேசினார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தலைமை தாங்கி உரையாற்றினார். ‘ஒழிக்கப்பட வேண்டியவை மனுதர்மம்’ என்னும் தலைப்பில் ரமா பிரபா, ‘வேதங்கள்‘ என்னும் தலைப்பில் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், ‘இதிகாசங்கள்‘ என்னும் தலைப்பில் வீ.கலைவாணி ஆகியோர் உரையாற்றினர். த.அன்புச் செல்வி இறுதி உரையாற்றினார்.
பி.எஸ்.ஏ.சாமி
பிறகு அறிவியல் அரங்கம் தொடங்கியது. தி.ப. பெரியாரடியான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். துணைப்பொதுச்செயலாளர் கு.வெ.கி.ஆசான் தலைமை வகித்துப் பேசினார். உயிர்கள் தோற்றம், வளர்ச்சி பற்றி பேராசிரியர் நா. வெற்றியழகன், ஆழிப்பேரலைகள் (சுனாமி) பற்றி பாமா, சோதிடம், வாஸ்து அறிவியலா? என்னும் தலைப்பில் பால். ராசேந்திரம் ஆகியோர் உரையாற்றினர். தி. ஆதவன் நன்றி கூற. முற்பகல் மாநாடு முடிவுற்றது.
இலட்சுமி கண்ணையன்
மாலை 5 மணிக்கு சியாமளா திரையரங்கம் அருகிலிருந்து பேரணி புறப்பட்டது. கோவில்பட்டி பெரியார் பெருந்தொண்டர் செல்லத்துரை பேரணிக்குத் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தென்காசி மாவட்ட தலைவர் டேவிட் செல்லத்துரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மதுரை நா. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
பெரியாரடியான்
மாவட்ட வாரியாக பதாகைகளைக் கையில் ஏந்தி கழகத் தோழர்கள், தோழியர்கள் பெரியார் பிஞ்சுகள், இளைஞரணியினர் முழக்கங்களை முழங்கி வந்தனர்.
பொது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த முழக்கங்கள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின.
சோம. இளங்கோவன்
மதுரை தங்கவேல் குழுவினரின் தப்பாட்டம் ஊரை ஒரு கலக்குக் கலக்கியது.
மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள்:
பட்டுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி கழகத் தோழர்களின் செடில் காவடி கோவில்பட்டி மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
திராவிடர் கழக மதுக்கூர் ஒன்றிய இளைஞரணித் தோழர்கள் ரஞ்சித்குமார், செல்லப்பா, கருணாகரன் ஆகியோர் முதுகில் அலகுக் குத்திக் கொண்டு சுமோ காரினை இழுத்து வந்த காட்சி பொது மக்களையும் நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு காட்சியளித்த பக்தர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
அணி வகுப்பில் வீறு நடைபோடும் கருஞ்சட்டைக்காரர்கள்…
கடவுள் இல்லை என்று சொல்லி கார் இழுக்கும் தோழர்களைப் பாருங்கள் பாருங்கள்! என்று கூறிச் சென்றனர். கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு வந்தனர். பெண்கள் வாயடைத்து நின்றனர். இளைஞர்களும் அவர்களை அறியாமலேயே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
திராவிடர் கழகப் பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்திக்கொண்டு வந்ததும் தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?’ என்று கேள்வி எழுப்பியதும் பார்வையாளர்கள் மத்தியிலே புதிய சிந்தனைகளைத் தட்டி எழுப்பியது. சிறுவன் சிவகளை ஆனந்த் தீச்சட்டியை ஏந்தி வந்து வியப்பை ஏற்படுத்தினான்.
தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?
என முழங்கிடும் மகளிர் அணியினர்…
திராவிடர் கழக கோவில்பட்டி மாவட்டத் தலைவரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவருமான தோழியர் வ. தமிழரசி கம்பீரமாகக் கழகக் கொடியை கையில் ஏந்தி வீர நடைபோட்டு வந்தார். மாவட்ட வாரியாகக் கழகத் தோழர்கள் அணிவகுத்து வந்தனர்.
பேரணி சத்தியபாமா திரையரங்கில் தொடங்கி, முதன்மைச்சாலை (மெயின் ரோடு) புதுச்சாலை, வக்கீல் தெரு, மந்தித் தோப்பு வழியாக மாநாடு நடக்கும் சர்க்கஸ் மைதானத்தை வந்தடைந்தது.
மாநாடு இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. சுனாமியில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்,
2. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரும் போராட்டத் தீர்மானம்
3. இட ஒதுக்கீட்டின் அளவை மாநில அரசுகள் தீர்மானித்துக்கொள்ள சட்ட திருத்தம் தேவை.
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை என்றும்,
4. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரியும்.
5. காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரைக் கைது செய்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைப் பாராட்டியும்,
6. கழகத்தின் பிரச்சாரத் திட்டங்கள் பற்றியும்,
7. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி தேவை குறித்தும்,
8. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவியிடங்களை நிரப்புக என்றும்
9. அப்பாவி மக்களின் உயிர் உடைமைகளைப் பறித்த கலவரங்களுக்கு வித்திட்டவர்களுக்கு இறுதி அறிக்கை வந்தவுடன் கடும் தண்டனை சட்டப்படி வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது – எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்றைய மதுரை மாநகர மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீ.குமரேசன், (இன்றைய கழகப் பொருளாளர்,) ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆங்கில இதழுக்கான நூறு சந்தாக்களைப் பலத்த கரவொலிக்கிடையே எம்மிடம் அளித்தார்.
1000 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான ரூபாய்
5 லட்சம் மாநாட்டில் எம்மிடம் அளிக்கப்பட்டது.
பிறந்த நாள் பரிசாக முதல் தவணையாக 1000 ‘விடுதலை’ சந்தாக்கள் ஆசிரியரிடம் வழங்கப்பட்டன.
மாநாட்டில் நாம் உரையாற்றுகையில், 1944இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1909ஆம் ஆண்டிலேயே கோவில்பட்டியில், ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டுள்ளது. அதன் 18ஆம் ஆண்டில் தந்தை பெரியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் பங்கு கொண்டனர்.
தமிழ்நாட்டில் காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்யப்பட முடிந்தது என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் ஊட்டிய உரம்.
எதுவரை ஆரியம் இருக்குமோ, அதன் ஆதிக்கம் நிலைக்குமோ, அதுவரை திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம், சமரச இயக்கம் இருக்கும் என்று இதே கோவில்பட்டியில் 1927இல் திராவிடர் கழகத்தின் 18ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசினார்களே- அதே கருத்தை மீண்டும் நினைவூட்டுகிறோம் என்றும் மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தோம்.
மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கே. சீவகன் நன்றி கூற, இரவு 10:45 மணிக்கு மாநாடு நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக