வியாழன், 27 ஜூன், 2024

தந்தை பெரியார் இறுதி முழக்கமும்… நமது உறுதி முழக்கமும்…

 

தந்தை பெரியார் இறுதி முழக்கமும்… நமது உறுதி முழக்கமும்…


 ஜனவரி 1-15, 2024

— தொகுப்பு: வை.கலையரசன் —

தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் தந்தை பெரியாரே சமூகநீதிப் போராட்டங்களின் இயங்கு சக்தியாக விளங்குகிறார். சமத்துவம் விரும்பும் போராளிகள் ஏந்தும் ஆயுதமாகவும், ஆதிக்க சக்திகளைத் தூங்கவிடாதவராய் விளங்கிவருகிறார்.

அத்தகைய தந்தை பெரியார் அவர்களை நேரில் கண்ட தலைமுறை, நேரில் காணாத கொள்கை வழியில் ஏற்றுக்கொண்ட தலைமுறை, பெரியாரால் வாழ்கிறோம் என்ற உணர்வு படைத்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக ‘தந்தை பெரியார் இறுதி முழக்கமும் நமது உறுதி முழக்கமும்’ என்னும் தலைப்பில்

18.12.2023 அன்று மாலை தந்தை பெரியார் இறுதிப் பேருரை ஆற்றிய 50ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை உரையாற்றினார்.
நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரையாற்றினார். அவரது உரையில், “சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு மட்டும்தான். மிருகங்களுக்கோ, அய்ந்தறிவு படைத்தவைகளுக்கோ உண்டா? கிடையாது.

ஆனால், நமக்கு அந்த சுயமரியாதை உணர்வூட்டி உந்து, உந்து என்று உந்தி உயர்த்தவேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய உழைப்பு எந்த அளவிற்குப் பயன்பட்டது _ பயன்படவேண்டும் _ எது பாக்கி இருக்கிறது என்பதையெல்லாம் ஒரு கணக்குப் போட்டு, ஒரு காலக்கணக்கீடு சொல்லி, ஒரு வரவு- –_ செலவு திட்டம் போன்று ———_ அரிமா நோக்கு மாதிரி – திரும்பிப் பார்ப்பது என்று சொல்வார்களே அதுபோன்று இயற்கையிலேயே அமைந்த ஓர் உரைதான் 50 ஆண்டுகளுக்கு முன்னால், இதே பகுதியிலே அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பேசிய பேச்சாகும்.

இயற்கை அமைத்த நல்வாய்ப்பாகவே, அன்றைக்குப் பேசியவன், இன்றைக்கும் பேசக்கூடிய அந்த வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதற்குப் பல காரணங்கள்.
அறிவியல் காரணம் _ சமூகவியல் காரணம் _ இயக்கவியல் காரணம் _ வாழ்வியல் காரணம். வாழ்வியலில், அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடியவர்கள்; சமூகவியலில், நம்முடைய அமைப்பு, எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் உற்சாகம் கொடுப்பது. அதையும் தாண்டி, இயக்கவியலில் _ தோழர்கள் என்னைத் தோளின்மீது தூக்கி, உற்சாகத்தோடு, அய்யா அவர்களுடைய பணி நடந்தாகவேண்டும் என்று எனக்குச் சொல்வது.

தந்தை பெரியார் அவர்களுடைய இறுதி உரையின் தொடக்கத்தில் மிகக் கோபத்தோடு சொல்லுவார். கடுமையான கோபம்! இதுவரையில், அய்யாவின் உரையை நான் எழுதியிருக்கிறேன். நானும், புலவர் அவர்களோ, மற்றவர்களும் எழுதினாலும் _ இந்த உரையில் கொப்பளிக்கின்ற கோபாவேசம் இருக்கிறதே _ அது சாதாரணம் அல்ல! அவ்வளவு வேகமாகப் பேசுவார். அப்படி வேகமாகப் பேசும்பொழுது, ‘‘அம்மா, அம்மா” என்று அவர்கள் வலி தாள முடியாமல், அந்த வேனிலேயே புரண்டு எழுந்து பேசிய காட்சி.

மக்கள் எல்லாம் அதைப் பார்த்து, ‘‘அய்யா, நிறுத்திக் கொள்ளுங்கள், நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று சத்தம் போடுகிறார்கள்.
ஆனால், அய்யா நிறுத்தவில்லை. உரையைத் தொடருகிறார்.

அப்படிப் பேசும்பொழுது, தொடக்கத்திலிருந்து எங்கள் கொள்கை என்ன என்று ஆரம்பித்தார்.
நான் மனிதனாக இருக்கவேண்டும் என்று வாதாடுவது தவறா? அது என்னுடைய உரிமை அல்லவா! பிறப்புரிமை அல்லவா! அதையல்லவா தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய இறுதி முழக்கமாக ஆக்கினார்.

மாநாடு கூட்டியது டிசம்பர் 8 ஆம் தேதி இரவு. தொண்டர்களை அறப்போராட்டத்திற்கு அழைத்தார்.
அடுத்தகட்டமாக எச்சரிக்கை செய்தார்!

நாங்கள் ஏதோ கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம். அதனால், அவன் இன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறான்.
சில பேர் புரியாமல் கேட்பார்கள், ‘‘ஏங்க, மனுதர்மத்தைப் படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொன்னார்களே, இப்பொழுதும் ஊற்றிக் கொண்டிருக்கிறார்களா?” என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பது போன்று கேட்பார்கள். அதற்கு நான் பல மேடைகளில் பதில் சொல்லியிருக்கிறேன். ‘‘இப்பொழுது இல்லை.!”

ஏன் இல்லை?
நாங்கள் இருக்கிறோம், அதனால் இல்லை!
தந்தை பெரியார் கேட்கிறார்,

‘‘அய்ம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும் எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான் _ இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும். ஏதோ சட்டம், சமத்துவம், கடவுள் என்று சொன்னால், ஏதோ அதை உதைக்கிறோம், கடவுளை நாளைக்குச் செருப்பாலே அடிக்கச் சொல்கிறோம்; பல தடவை அடிச்சாச்சு. நாளைக்கும் அடிக்கச் சொல்கிறோம். நம் தாய்மார்களையும் நல்லா சாப்பிட்டு விளக்குமாற்றலே போடச் சொல்கிறோம். சட்டத்திலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம்; இன்றைக்கு அவன் வாயை மூடிக்கிட்டு இருக்கிறான். நாளைக்கு பார்ப்பான் வந்துவிட்டான் என்றால், என்ன ஆகும்? எங்களைத் தவிர நாதி இல்லையே இந்த நாட்டில். எத்தனை நாளைக்கு நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்!

எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போ, எனக்கு ஒன்றும் கவலையில்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள் _ நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான். பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே, நம்முடைய நிலைமை உலகத்திலேயே பெரிய மானக்கேடான நிலைமையாகும்.” என்றார் தந்தை பெரியார்.

பெரியார் சொன்னது இன்றைக்கு நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறதா, இல்லையா?
இன்றைக்கு ஏன் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஏன் சொல்கிறோம்?
பார்ப்பனியம் _ பிராமிணோகிரசி _பார்ப்பன நாயகம் முழுக்க முழுக்க இருக்கிறது என்பதுதானே அதன் காரணம்?
பெரியாருடைய நுண்ணறிவு, அனுபவ அறிவைப் பாருங்கள்.
இன்று நாம் காணும் காட்சி _ ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி.

நம்முடைய இயக்கம், நம்முடைய கொள்கை, நம்முடைய ஆட்சி மாறவேண்டும் என்றுதானே அவர்கள் துடிக்கிறார்கள்?
அவர்கள் என்னதான் செய்தாலும், தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னாடு முழுவதும் தெளிவாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி நிரூபித்தது.

வடபுலத்தைக் கைகளில் வைத்திருக்கிறார்கள். அங்கேயும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு சதவிகிதம் அல்லது மூன்று சதவிகிதம்தான் வாக்குகள் வித்தியாசம்!

அன்றைக்குப் பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினாரோ, அந்த நிலைமை காங்கிரசில் இன்றைக்கு மாறிவிட்டதே!

பெரியாருடைய சமூகநீதிக் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை நிருவாகம் செய்யக்கூடிய வர்கள்கூட இன்னின்னார் இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெரியார் வெற்றி பெற்றுவிட்டாரே!

ராகுல் காந்தி அவர்கள் சமூகநீதியைப் பேசுகிறாரே!
இந்த 50 ஆண்டு காலத்தில் ‘‘ஜெயித்தே ஆகணும்” என்று சொன்னார் பெரியார்.
ஜெயித்துக் கொண்டிருப்போம்;

ஜெயிப்போம், வெற்றி பெறுவோம், நிச்சயமாக! என்று தெரிவித்தார். ♦

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக