வெள்ளி, 20 மே, 2022

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் (CUET) தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

 

திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


சென்னை, ஏப். 12,- மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வை (CUET)  நுழைத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (12.4.2022) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

"ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக் கழக மானிய குழு 2022-2023ஆம் கல்வியாண்டு முதல், அம்மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (National Testing Agency - NTA)   நடத்தும் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு  (Common University Entrance Examination - CUET) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 

+2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக் கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மாநில  அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக் கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வினை நடத்த கூடாது என்றும், இதை புகுத்தியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி 31.3.2022 அன்று திருவாரூரில் அமைந்திருக்கும் மத்திய பல்கலைக் கழகம் முன்பும், 11.4.2022 அன்று புதுச்சேரி அண்ணாசாலையில் அண்ணாசிலை அருகிலும், இன்று (12.4.2022) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன.  

சென்னை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகில்  இன்று (12.4.2022) காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த அறவழி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று திராவிட மாணவர் கழக பொறியியல் கல்லூரி மாநில  அமைப்பாளர் வி. தங்கமணி உரையாற்றினார்.திராவிட மாணவர் கழகத்தின் சட்டக் கல்லூரி மாநில துணை அமைப்பாளர் சு. தமிழ்ச்செல்வன், பொறியியல் கல்லூரி மாநில துணை அமைப்பாளர் இ.ப. இனநலம், சென்னை மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் வ.ம. வேலவன், வடசென்னை மாவட்ட மாணவர் கழக தலைவர் த.பர்தின், செயலாளர் இரா. பாலாஜி, ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.பெ. தொண்டறம், செயலாளர் சி. அறிவுமதி, தென் சென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வி.விஸ்வாஸ், செயலாளர் பா. அறிவுச்செல்வன்,  தாம்பரம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அனகை பிரபாகரன், செயலாளர் மோ. பிரபாகரன், கும்மிடிப்பூண்டி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நீ. குணசேகரன், செயலாளர் இரா. ஜெகன், சோழிங்நல்லூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ஜெ.குமார், செயலாளர் சரவணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்ட கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகியோர்  நிகழ்த்தினர்.

முன்னதாக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரப் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில துணை அமைப்பாளர் செ. பிரவீன்குமார் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, அமைப்புச் செயலாளர்கள் ம.துரை வே. செல்வம், வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா. ரத்தினசாமி, செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு. மோகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, கோ.வீ. இராகவன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த. ஆனந்தன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை அன்புச்செல்வன்,

சென்னை உயர்நீதிமன்ற கழக வழக்குரைஞர் ஆம்பூர் ஜெ.துரைசாமி, பெரியார் களம் இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, மு.பவானி, த. மரகதமணி, அருணா வெண்ணிலா, அரும்பாக்கம் சா. தாமோதரன், நெய்வேலி வெ.ஞானசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், திராவிட தொழிலாளர் கழக தோழர்கள் பாலு, ராமலிங்கம், ராஜீ மற்றும் க. அன்புமணி, க. தமிழ்ச்செல்வன், அமைந்தகரை மோகன்,  க.கலைமணி, பிரபாகரன், ஆனந்தன், உள்ளிட்ட கழக தோழர் - தோழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

ஒலி முழக்கங்கள்

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி  முழக்கங்கள் வருமாறு:

— ஒன்றிய அரசே பா.ஜ.க. அரசே கல்வித்துறையை அழிக்காதே!

— புகுத்தாதே புகுத்தாதே! தேசிய கல்விக் கொள்கையை புகுத்தாதே!

— திணிக்காதே! திணிக்காதே! மத்தியப் பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வைத் திணிக்காதே!

— அழிக்காதே அழிக்காதே பள்ளிக் கல்வியை அழிக் காதே!

— கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிக்க நுழைவுத் தேர்வா? நுழைவுத் தேர்வா?

— மேற்படிப்புக்கு GATE அய்ப் போட்டான், IIT  க்கு JEE   ன்னான், மருத்துவத்துக்கும் NEET  அய்ப் போட்டான், மிச்சமிருக்கும் படிப்புக்கெல்லாம் CUET ன்னு தடை யைப் போட்டா மாணவர் நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து உடைத்து எறிவோம் தடைகள் அனைத்தையும்!

— அனுமதியோம் அனுமதியோம் நுழைவுத் தேர்வுகளை அனுமதியோம்! 

என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக