நடைபாதைக் கோயில்களையும், அரசு வளாகத்தில் உள்ள கோயில்களையும் அகற்றுக!
• Viduthalaiஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று! நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குத் தேவை!
உயர்நீதிமன்றங்கள் - உச்சநீதிமன்றத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும்
திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சென்னை, மே 21- உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் - இன்று (21.5.2022) முற்பகல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழக வழக்குரைஞர் அணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதே உண்மையான சமூகநீதி
சமூக நீதி என்பது அனைத்துத் துறைகளிலும் அடித்தட்டு மக்கள் பங்குபெறும் வகையில் அமையவேண்டும் என்பது திராவிடர் இயக்கத்தின் இலட்சியம் ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர்கள் நீதிபதிகளாக பதவி வகித்தது ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் காலத்தில் ஆரம்பித்தது என்றாலும், மறைந்த டாக்டர் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக வரமுடிந்தது. டாக்டர் கலைஞர் அவர்களின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் 10 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலினத்தைச் சார்ந்தவர் களாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் அதிக அளவில் நீதிபதிகளாகப் பதவி வகித்ததும் அந்த காலத்தில்தான் என்பதை இந்தக் கூட்டம் சுட்டிக்காட்டு வதோடு, தற்போது மக்கள் தொகையில் 3% உள்ள பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 11 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கிறார்கள். இன்னமும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த திறமையான வழக்குரைஞர்கள் பலர் இருந்தும், அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வருவதற்கான வாய்ப்பிருந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது சமூகநீதியின் குரல்வளையை நெரிப்பதாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வழக்குரைஞர் குடும்பங்களுக்கு நிதி வழங்க வருகை தந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு என்.வி.ரமணா அவர்களிடம் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி வரும் காலங்களில் பார்ப்பனர் தவிர்த்து பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்களையே சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு உரிய பரிந்துரையினை சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியம் (தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள்) தேர்வு செய்து பரிந்துரைக்க வேண்டுமென்று இக்கூட்டம் ஒருமனதாக வலியுறுத்துகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதே உண்மையான சமூகநீதி என்று இக்கூட்டம் கருதுகிறது.
ஒரு காலகட்டத்தில் அப்போதைய தலைமை நீதிபதி முழுக்க முழுக்க பார்ப்பனர்களையே நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்ததும், அதை எதிர்த்து திராவிடர் கழகம் போர்க்கோலம் பூண்டதும், ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு, அந்தப் பட்டியல் தவிர்க்கப்பட்டதும் இக்கூட்டம் நினைவுப்படுத்துவதோடு, இது போன்ற போராட்டங்களை திராவிடர் கழகம் முன்னெடுக்க அவசியமில்லாத வகையில், எதிர்வரும் காலங்களில் ஏற்கெனவே பார்ப்பனர்கள் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு மேல் பல மடங்கு அதிகமாக இருப்பதால் அவர்களைத் தவிர்த்து, வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் வழக்குரைஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்க இக்கூட்டம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2:
ஆளுநர் பதவி தேவையா?
ஆளுநர் பதவி என்பது வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் தேவையான ஒன்றாக இருந்தது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு ஆளுநர் பதவி என்பது தேவையற்றதாக ஆகிவிட்டது. அண்மைக்காலங்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவை முடிவின்படி செயல்பட வேண்டியவரே ஒழிய, தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் Maru Ram Vs Union of India, RamDeo Chouhar Vs Bani kant das & others ஆகிய வழக்குகளிலும் தெளிவுப்படுத்தியிருந்தது. மன நிறைவு (Satisfaction) என்பது ஆளுநரின் தனிப்பட்ட மனநிறைவு அல்ல என்றும், அது அமைச்சரவையின் மனநிறைவைக் குறிப்பிடுவதாகும் என்றும், State of Gujarat & others Vs Mr. Justice R.A Mehta ( Retired) & Others வழக்கிலும் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்திய போதும் தமிழ்நாடு ஆளுநர் பேரறிவாளன் வழக்கில் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்படாமல் அதை மீறி குடியரசு தலைவருக்குக் கோப்புகளை எந்த சட்டப்பிரிவையும் மேற்கோள் காட்டாமல் அனுப்பியதை உச்சநீதிமன்றம் 18.03.2022 அன்று பேரறிவாளன் வழக்கில் வழங்கிய தீர்ப்பில் 'ஆளுநர் மிகப்பெரிய தவறு இழைத்திருப்பதாக' சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் ஆளுநர்கள், அமைச்சரவையின் தீர்மானத்தினை செயல்படுத்த வேண்டும் என்பதனை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஒன்றேயாகும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3:
ஆளுநரைத் திரும்பி அழைத்துக் கொள்க!
தமிழ்நாடுஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தனது பதவிக்கான பொறுப்புகளை உணராமல், பல கூட்டங்களில் தனது ஹிந்துத்துவ நிலைப்பாட்டினை வலியுறுத்தும் வகையில் பேசி வருவதோடு, தமிழ்நாடு அமைச்சரவையில் ஒருமித்த தீர்மானமான "நீட் விலக்கு" கோரும் தீர்மானத்தினை பலமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட பின்பு சட்டமன்ற பேரவைத் தலைவருக்குத் திருப்பியனுப்பினார். பிறகு மீண்டும் சட்டமன்றம் கூடி "நீட் விலக்குத்" தீர்மானத்தினை நிறைவேற்றி அனுப்பியதற்கு பின் மீண்டும் காலதாமதமாக குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார். பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் அவரின் செயல்பாடுகள் தன்னிச்சையாகவும், தமிழ்நாடு அரசுடனான மோதல் போக்கினை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. இப்படித் தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வரும் ஆளுநர் தமிழ்நாட்டுற்குத் தேவையில்லை என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நிலைப்படாக உள்ளது. எனவே தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை ஒன்றிய அரசு திரும்பி அழைத்துக் கொள்ளுமாறு இக்கூட்டம் ஒரு மனதாக கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4:
மதக் கலவரத்தைத் தூண்டுவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படவேண்டும்
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்திய ஒன்றியத்தை ஆளும் பா. ஜ.க. தமிழ்நாட்டின் கிளை மற்றும் அதன் ஆணிவேர்களாக இருக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் தொடர்ந்து மதக் கலவரங்களை உருவாக்கும் நோக்கத்தோடு, உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்த சங்பரிவார் அமைப்பு நிர்வாகிகளின் இறுதி ஊர்வலத்தில் இவர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தும், பொது அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு பல்வேறு ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சில வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலும் நிலுவையில் இருந்து வருகின்றன.
தந்தை பெரியார் சிலைகளை உடைத்துக் கலவரம் தூண்டிய நபர்கள் மீது போடப்பட்ட வழக்குகளிலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலும் (அ) நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறாமலும் இருந்து வருகிறது. மேற்கண்ட நிலை நீடிப்பதால் சங்பரிவார் அமைப்பினர் மிகத் தைரியமாக வெளியில் கலவரத்தைத் தூண்டும் வகையில், திட்டமிட்டு ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பேசும்போது மதக் கலவரங்களைத் தடுக்க அரசு முயற்சி எடுக்கும்; இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என்று சொல்லியுள்ளார். எனவே மதத் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்குகளையும் இந்த நீதிமன்றத்தில் பதிவு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்குகளின் விசாரணையினை முடிவு செய்திட வழி வகுக்க வேண்டுமென்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5:
முதலமைச்சருக்கு நன்றி- பாராட்டு!
வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி ரூ.7,00,000/-ஆக இருந்ததை ரூ.10,00,000/- (பத்து இலட்சமாக) உயர்த்தி ஆணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகச் சட்டத் துறை நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 6:
ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுக!
உச்சநீதிமன்றம், பொது மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள 77,450 கோயில்களையும் வழிபாட்டுத் தலங்களையும் மற்ற வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட்டதோடு, அதனைச் செய்யாத மாநிலத் தலைமைச் செயலாளர்கள் நேரில் வர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.(14.9.2010). இன்றுவரை உச்சநீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் (Contemptuous). இதனை திராவிடர் கழகச் சட்டத்துறை சுட்டிக்காட்டி, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7:
அரசு அலுவலக வளாகங்களில்
கோயில்கள் கட்டுவதா?
அரசு அலுவலக வளாகங்களில் கோயில்கள் கட்டுதல் - மதச்சார்பின்மைக்கும், தமிழ்நாடு அரசின் ஆணைக்கும் எதிரானதால், அத்தகு செயல்கள் நடைபெறும் நிலையில் நமது கழக சட்டத் துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தாக்கீது கொடுப்பது என்றும், அதனை ஏற்காத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தந்தை பெரியார் மீதும், கழகத் தலைவர் மீதும், இயக்கத்தின் மீதும் கொச்சைத்தனமானமாகவும், உண்மைக்கு மாறாகவும், இழிவுபடுத்தும் வகையில் எழுதுவோர், பேசுவோர் மீதும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 8:
பேரறிவாளன் விடுதலைக்கு
ஒத்துழைப்பு நல்கியவர்களுக்குப் பாராட்டு
திரு.பேரறிவாளன் அவர்கள் 31 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து விடுதலையானதற்காக மகிழ்ச்சி அடைவதோடு, இதற்காகப் பாடுபட்ட அத்துணை வழக்குரைஞர்கள், கட்சித் தலைவர்கள், நியாயத்தின்பால் நின்ற மனித உரிமைப் போராளிகள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும தெரிவிப்பதோடு குறிப்பாக இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.நாகேஸ்வரராவ், பி.ஆர்.சவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கும் இக்கூட்டம் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 9:
கருநாடகா பெண் வழக்குரைஞர் சங்கீதா அவர்கள் தன்னுடைய வழக்கில் எதிராளிக்கு தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக இருந்த காரணத்தால் தாக்கப்பட்டதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 10:
'நீட்' தேர்விலிருந்து விலக்குத் தேவை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளித்து, ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று நீட் தேர்விலிருந்து தமிழ்நாடிற்கு விதிவிலக்குப் பெற்றுத் தந்து சமூகநீதியைக் காக்க வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 11:
வன்முறைத் தூண்டும் வகையில் பயிற்சியா?
தமிழ்நாட்டில் பொதுஇடங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வன்முறையைத் தூண்டும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு உடனே தடை விதிக்க வேண்டுமென்றும், இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 12:
உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர், பட்டியலின நீதிபதிகளின் நியமனம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 13:
உச்சநீதிமன்றக் கிளைகள் தேவை!
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிப்பதில் சமூகநீதியைப் பின்பற்ற வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை புதுடில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டுமென்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென்றும், கூட்டாட்சித் தத்துவமே இந்திய அரசமைப்பின் அடித்தளம் என்பதால், நமது அரசமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டுமென்றும் என்றும், உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் நமது நாட்டின் பன்முகத் தன்மையோடு அமைய வேண்டுமென்றும் இந்திய ஒன்றிய அரசுக்கு வலியுறுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுத் தெரிவிக்கிறது.
தீர்மானம் 14:
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றுக!
மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றியுள்ளதுபோல தமிழ்நாட்டிலும் இயற்ற வேண்டுமென்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 15:
சமூகப் புரட்சியாளர்கள் - சீர்திருத்தவாதிகள் குறித்த பாடங்கள் நீக்கத்திற்குக் கண்டனம்
கருநாடக மாநிலத்தில் ஆட்சிபுரியும் பிஜேபி அரசு தந்தை பெரியார், நாராயணகுரு, பகத்சிங் ஆகிய சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் குறித்த பாடங்களை நீக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சமூக சீர்திருத்தவாதிகள் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோர்கள் படுகொலை செய்யப்பட்டதும், மதவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் பிஜேபி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகுதான். குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் சமூக சீர்திருத்தத்துக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த தலைவர்களின் பாடங்களையும் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது - பிஜேபி அரசின் ஒரே மதம், ஒரே கலாச்சாரம், மதச்சார்புத்தன்மை இவற்றின் தொடர்ச்சியாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்தும் நிலையில், சமூக சீர்திருத்தவாதிகள் பற்றிய பாடங்களைக் கல்விக்கூடப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கியது கடும் கண்டனத்துக்குரியது.
கருநாடக மாநில அரசு இந்த முடிவைக் கைவிட்டு, மீண்டும் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் குறித்த பாடங்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
பங்கேற்றோர்
திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் மாநில அளவிலான வழக்குரைஞர்களின் கலந்துரையாடல் கூட்டம் சென்னைப் பெரியார் திடலில் இன்று முற்பகல் 11 மணி அளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. 15 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
வழக்குரைஞர் அணியின் மாநில செயலாளர் மதுரை மு.சித்தார்த்தன் வரவேற்புரையாற்ற, வந்திருந்த வழக்கு ரைஞர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தீர் மானங்கள் மீதும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் கீழ்க்கண்ட வழக்குரைஞர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆ.வீரமர்த்தினி, கரூர் மு.க.இராசசேகரன், இரா.இரத்தினகுமார், மதுரை கணேசன், சென்னை அருட்செல்வன், குடந்தை நிம்மதி, தாம்பரம் உத்தரகுமார், சே.மெ.மதிவதனி, உரத்தநாடு மாரிமுத்து, வாஞ்சிநாதன், மன்னார்குடி சிங்காரவேலு, ஜெ.துரைசாமி அ.அருள் மொழி, சென்னை த.வீரசேகரன், வீ.குமரேசன் (திராவிடர் கழகப் பொருளாளர்) ஆகியோர் கருத்துரை வழங்கினர். வழக்குரைஞர் பா.மணியம்மை இணைப்புரையாற்றினார்.
பயிலரங்கம்
சட்டக்கல்லூரி மாணவர்களுக்குப் பயிலரங்குகள், மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்பது போன்ற கருத்துகளை எடுத்துரைத்தனர். இப்பொழுதெல்லாம் சங்பரி வார்களுக்குப் புகலிடமாக ஆளுநர் மாளிகையும், ஒரு வகையில் நீதிமன்றமும் இருப்பதையும் சுட்டிக்காட்டினர். வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூற பிற்பகல் ஒரு மணி அளவில் கூட்டம் நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக