திங்கள், 16 ஜனவரி, 2023

சைதை எம்.பி. பாலு பேசுகிறேன்!

1948 ஆம் ஆண்டு ஆலந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை முதல் முதலாக கேட்டேன். அன்று முதல் நான் பெரியாரின் தொண்டனாக மாறினேன்.

1949 ஆம் ஆண்டு அய்யா அன்னை மணியம்மையார் திருமணம் செய்த மறுநாள் சைதை - சடையப்ப (முதலி) தெருவில் அப்பாவு சகோதரர் வீட்டில் பிரியாணி விருந்து நடைபெற்றது, நானும் அந்த விருந்தில் கலந்து கொண்டேன்.

அன்று இரவு மாந்தோப்பு பள்ளி (தற்போது சென்னை ஆண்கள் உயர்நிலைப்பள்ளி) சைதாப்பேட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் தந்தை பெரியார் சொற்பொழிவு.

அன்று முதல் நான் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று முழுமையாக வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றேன். திராவிடர் கழகத்தில் கட்டுப்பாடு மிக்க தொண்டனாக இருந்து வருகின்றேன். தந்தை பெரியாரின் சொற்பொழிவை கேட்பதற்கு முன் நான் தீவிர பக்தனாக இருந்தேன். திருப்புகழ் தேவார சபையில் சேர்ந்து பாடி வந்தேன். என்னோடு இணைந்து திருப்புகழ் தேவார சபையில் இருந்த அனைவரும் திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.

1950 இல் திருச்சியில் கம்யூனல் ஜி.ஓ மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுடன் ஏற்பாடு செய்தேன். ஆனால் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்துவிட்டது. ஒன்றரை மாதம் படுத்த படுக்கையாக இருக்க வேண்டியதாகி விட்டது.

1952 ஆம் ஆண்டு சேலம் மாநாடு 1953 ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் எதிர்த்து மறியல் செய்த போது கலந்து கொண்டு கைதாகி சிறை சென்றேன்.
நான் சிறை சென்றது, இரண்டு நாள் கழிந்த பிறகு தான் என் வீட்டிற்கு தெரிந்தது.

1957 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் எடைக்கு எடை வெள்ளி ரூபாய் தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்டது, அதில் கலந்து கொண்டேன்.

தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு கேட்பதற்காக சைதையில் பலமுறை பொதுக்கூட்டம் நடத்தியுள்ளோம். அப்பொழுது எஸ்.பி.தட்சிணாமூர்த்தி நானும் இணைந்து செயல்படுவோம்.

அய்யா மறைவுற்றார், பிறகு அன்னை மணியம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுதும் தொடர்ந்து கட்டுப்பாடு மிக்க தொண்டனாகவே செயல்பட்டு வந்துள்ளேன். மிசா சட்டம் வந்தது 15 நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது.

நெருக்கடி நிலை காலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது; பின்னர் அனுமதி கிடைத்தது. பெரியார் திடலில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அன்னை மணியம்மையார் வடசென்னை வி.எம். நாராயணன் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினோம்.

1978 ஆம் ஆண்டு முதல் சென்னை மாவட்ட பொருளாளர்.

1979 ஆம் ஆண்டு என் மகள் செந்தாமரை - பழனி திருமணம் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

1981 ஆம் ஆண்டு முதல் சென்னை மாவட்ட செயலாளர்.

1982 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் மாநாடு சைதையில் நடைபெற்றது. தியாகராயர் நகரில் இருந்து எனது தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் கலந்து கொண்டார். மாநாட்டில் நாடகம் சிறப்பாக நடந்தது. ஆசிரியர் கலந்து கொண்டார். மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவராக நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 23 ஆண்டுகள் பணியாற்றி வந்தேன்.

1983 ஆம் ஆண்டு சைதையில் ஆசிரியர் எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.

15.12.2001 ஆம் ஆண்டு பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதை கண்டித்து சைதை தேரடியில் சிறப்பு வாய்ந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. வி.பி. சிங் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினோம். 15.12.2001 அன்று காலை திராவிடர் கழக மத்திய குழு கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் வந்தனர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய பேச்சு திராவிடர் கழகத்தவர் பேச்சு போல் இருந்தது. அகில இந்திய தலைவர்களை அழைத்து அரசியல் கட்சிகள் கூட சைதையில் பொதுக்கூட்டம் நடத்தியது இல்லை என்றும், கூட்ட ஏற்பாடு சிறப்பாக இருந்தது என்றும் கழகத் தோழர்கள் அத்தனை பேரும் என்னை சந்தித்துப் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியான நாளாகும்.

1988 ஆம் ஆண்டு டில்லியில் ஒடுக்கப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. அதில் எனது குடும்பம் மனைவி, மகள், மாப்பிள்ளை, பேத்தி, பேரன் ஆகியோர் சென்று கலந்து கொண்டோம்.

உ.பி லக்னோவில் 1995இல் செல்வி மாயாவதி, கன்சிராம் தலைமையில் பெரியார் மேளா நடைபெற்றது.

சென்னையில் இருந்து சிறப்பு இரயில் விடப்பட்டது. 1500 பேர் சென்றனர். கழக பொதுச்செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கழக குடும்பத்துடன் நானும், துணைவியாரும் சென்று வந்தோம்.

பெரியார் மய்யம் திறப்பு விழாவிற்கு நானும் எனது துணைவியாரும் கலந்து கொண்டோம்.

புதுக்கோட்டையில் ஆசிரியருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கிய விழா, தஞ்சையில் ஆசிரியரின் எடைக்கு எடை தங்கம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டேன். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 15 முறை சிறை சென்றுள்ளேன்.

69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஜீவன் ரெட்டி கொடும்பாவி எரித்த வழக்கில் 15 நாள் வேலூர் சிறையில் இருந்துள்ளேன்.

மண்டல் கமிஷன் ஆதரவு கூட்டத்தில் பேசிய பேச்சுக்கு என் மீது 4 பிரிவுகளில் கொலை முயற்சி உள்பட வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நான்கரை ஆண்டுகள் நடந்தது. பிறகு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா குழுவில் முக்கிய பொறுப்பாளராக செயல்பட்டேன்.

கழகத்தில் எந்த பிளவு ஏற்பட்டாலும் சஞ்சலத்துக்கு ஆளாகாமல் பணியாற்றி வருகிறேன். கழகம் -  தலைமை, கொள்கை இவை என் மூச்சு அடங்கினால் தான் என்னை விட்டுப் பிரியும். இவ்வாறு பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு தம்மை பற்றி கூறினார்.



நேர்காணல்: கலி.பூங்குன்றன்
                            நாள் 10.12.2010
விடுதலை ஞாயிறு மலர், சனி
25.12.2010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக