
பெரியார் மண்ணில் பொதுவுடைமை, மனிதநேயம், மதச் சார்பின்மை பூக்கச் செய்வோம்!

மாமேதை காரல் மார்க்ஸ் சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்திவிட்டு, பத்திரிகை யாளர்களை சந்தித்துப் பேசினார்.
‘‘புதியதோர் உலகு செய்வோம்! கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்! பொதுவுைடமைக் கொள்கைகளை உயிரெனக் காப்போம்’’ என்று அந்த தத்துவத்தைக் தந்த கார்ல்மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாளில், நாம் மதச்சார்பற்ற, மனிதநேயக் கொள்கைகளை உருவாக்குவோம். அதே நேரத்திலே மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தை என்றென்றைக்கும் மனித சமுதாயத்தில் தழைப்பதற்கான பணியை நம்முடைய அன்றாடத் தொண்டறமாகச் செய்வோம். அதற்குரிய மண்தான், இந்த பெரியார் மண்! இந்தக் கொள்கைக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர்தான் கார்ல் மார்க்ஸ். எந்த ஆட்சிகள் மலர்ந்தாலும், அதை ஏற்க வேண்டும் என்று நாம் வற்புறுத்துவோம். அது நமது கடமை’’ என்று தெரிவித்தார்.
முன்னதாகப் பொதுவுடைமை மாமேதை கார்ல்மார்க்ஸின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக வாயிலில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையின் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்குத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி, கழக மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மரகதமணி, கலைமணி, விஜய், சிவகுமார், முரளிகிருஷ்ணன், உடுமலை, பரிதின், புகழேந்தி உள்ளிட்ட தோழர்கள் மரியாதை செலுத்தினர்.
- விடுதலை நாளேடு, 05.05.2026