வியாழன், 13 ஏப்ரல், 2023

சென்னை சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!


 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் ரவி

ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்!

இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; 

மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்!

எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே!

1

சென்னை, ஏப்.13  அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாக நடக்கும் ஆளுநர் ரவி; ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்! இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்! எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மதச்சார்பற்ற கூட்டணி சார்பில்

மாபெரும் கண்டனக் கூட்டம்!

நேற்று (12.4.2023) மாலை சென்னை சைதாப்பேட்டை தேரடித் திடலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.

அவரது கண்டன உரை வருமாறு:

போரை அறிவித்தாலே வெற்றி பெறும் திராவிட மாடல் ஆட்சி!

சிறப்பு வாய்ந்த எழுச்சி நிறைந்த இந்தப் போராட்டக் களத்தில், திராவிட மாடல் ஆட்சி எப்பொழுதும் தோற்காது, என்றைக்கும் வெற்றி பெறும் - எப்படிப்பட்ட வெற்றியைப் பெறும் என்று சொன்னால், போரில்லாமலே வெற்றி பெறும்; போரை அறிவித்தாலே வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு நடைபெறவேண்டிய மிகப்பெரிய ஓர் ஆர்ப்பாட்டம், போராட்டம் பொதுக்கூட்டமாக இந்த சைதைத் தேரடி யில் நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற் றிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகப் பொரு ளாளர் அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று சிறப்பிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் அருமை நண்பர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,

சைதைப் பகுதியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களே,

மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக இங்கே உரையாற்றக்கூடிய அருமைச் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் அன்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,

இளைஞர்களின் குரலாக...

எனக்கு முன்னால், இளைஞர்களின் குரலாக மிக வேகமாக உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் வேல்முருகன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் எனக்கு முன் உரையாற்றி, விடை பெற்று சென்றுகொண்டிருக்கக் கூடிய திராவிட இயக் கத்தின் போர்வாள் 500 டன் அய்சையும்கூட பொருட் படுத்தாமல், மிகப்பெரிய அளவிற்கு தன்னுடைய லட்சியத்தை பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் வைகோ அவர்களே,

வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அனைத்துக் கூட்டணிக் கட்சித் தோழர்களே, திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கக் கூடிய அருமைத் தோழர்களை, நேரத்தின் அருமை கருதி, அனைவரையும் விளித்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று அன் போடு வேண்டிக்கொண்டு என்னுரையைத் தொடங்கு கின்றேன்.

 பொதுக்கூட்டமாக மாற்றுவதற்கு 

என்ன காரணம்?

பெரிய அளவிற்கு இதனைப் பொதுக்கூட்டமாக மாற்றுவதற்கு என்ன காரணம்? என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம், நீங்கள் வாக்களித்துத்தான் இன்றைய ஆட்சி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துத்தான் இந்த ஆட்சி உருவாகி யிருக்கிறது.

அப்படி உருவாகிய ஆட்சி, செயல்படவேண்டுமா? இல்லையா?

சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகத்தானே வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்

எதற்காக நாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து, ஓர் ஆட்சியை நிறுவி, அந்த ஆட்சி, அத னுடைய ஒப்பற்ற முதலமைச்சராக, நம்முடைய முதலமைச்சர் திராவிட சமுதாயத்தினுடைய மானத்தை, உரிமையைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களு டைய தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என்று சொன்னால், சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகத் தானே வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்.

அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து, இதுபோன்று பொதுப் பிரச்சினைகள் என்று சொன்னால், ஒரே வகை யில் சிந்திக்கின்றார்கள் என்பதற்கு அடையாளமாக, ஓரிருவர் தவிர, மிகப்பெரிய அளவிற்கு அடிமைகளாக  ஆகிவிட்டவர்களைத் தவிர, மற்ற அத்துணை பேரும், பெரும்பாலானோர்  நலத்தைப் பயக்கக்கூடிய, அத் துணை பேருக்கும் வாய்ப்புள்ள சட்ட வரைவுகள், மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்து, ஆதரவு தெரிவித்த பின்பு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது.

ஆளுநருடைய கடமை என்ன?

அவர் எதற்காக ஆளுநராக இருக்கிறார்?

திராவிட இயக்கங்களுக்கு கொள்கை எப்பொழுதும் உண்டு; நிரந்தரமாக உண்டு!

அடிப்படையிலே, திராவிட இயக்கங்களுக்கு ஆளுநர் பதவியைப் பொறுத்து தொடக்கத்திலிருந்தே ஒரு கொள்கை உண்டு; அந்தக் கொள்கை எப்பொழுதும் உண்டு; நிரந்தரமாக உண்டு. இருந்தாலும், ஆளுநராக இருக்கிறவர்கள் சரியாகப் பயன்படவேண்டுமல்லவா?

ஆளுநர் பொறுப்பே தேவையில்லை - ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நம்முடைய நிரந்தர நிலைப்பாடு.

சரி, பரவாயில்லை!

ஆளுநர் இருந்தால், அந்த ஆளுநர் தன்னுடைய கடமையை ஒழுங்காக, சிறப்பாக செய்யவேண்டும்.

நம்முடைய கோரிக்கை!

நம்முடைய விருப்பத்திற்கு அவர் செய்யவேண்டும் என்றுகூட நாங்கள் வாதாட  வரவில்லை.  மாறாக, அவர் எந்த  அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத் தாரோ, அந்த உறுதிமொழிக்கேற்ப அவருடைய கடமை யைச் செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

இது ஒரு விசித்திரமான கோரிக்கை.

அவருடைய கடமையை நினைவூட்டுவதற்கு ஓர் அரசாங்கம்; அவருடைய கடமையை நினைவூட்டு வதற்கு ஒரு சட்டமன்றம்.

அதில் மக்கள் பிரதிநிதிகள்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் - இப்படிப்பட்ட தலைவர்கள் ஏன் தேவைப் படுகின்றனர்?

அருமை நண்பர்களே, இதோ என் கையில் இருப்பது அரசமைப்புச் சட்டப் புத்தகம்.

சமூகநீதியில், சமத்துவத்தில் 

உறுதியாக இருந்தார் டாக்டர் அம்பேத்கர்!

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டம். அவர்தான் அதற்கு மிக முக்கியமான தத்துவம் கொடுத்து உயிர் கொடுத்தார், உரு கொடுத்தார். அவருக்கு விருப்பமில்லாத விஷயங் களும் உள்ளே இருந்ததை வெளிப்படையாக சொன் னார். ஆனால், அப்படி இருந்தும்கூட, அவர் தெளிவாக பல செய்திகளில் உறுதியாக இருந்தார். சமூகநீதியில் உறுதியாக இருந்தார். சமத்துவத்தில் உறுதியாக இருந்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவங்களை முதன்மைப்டுத்தி அடிப்படையானவற்றை அடிக்கட்டுமானப் பகுதிகளில் கொண்டு வந்து வைத்தார்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சி; இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆட்சி!

அவற்றையெல்லாம் நிறைவேற்றக் கூடிய ஆட் சிக்குப் பெயர்தான் இங்கு நடைபெறக்கூடிய ‘திராவிட மாடல்' ஆட்சி; இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆட்சி.

அப்படிப்பட்ட நிலையில், இங்கே ஓர் ஆளுநர் டில்லியிலிருந்து அனுப்பப்படுகிறார்.

அந்த ஆளுநர் எடுத்த உறுதிமொழி என்ன?

அவர் எடுத்த உறுதிமொழியைத்தான் இங்கே எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நண்பர்களே, இங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்; அதேபோல, நகராட்சியில் மேயர், துணை மேயர் உள்பட எல்லோரும் இருக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு இருப்பதைவிட, வித்தியாசமான ஒன்று!

பொறுப்புகளை ஏற்கிறவர்கள், குடியரசுத் தலைவரி லிருந்து, நீதிபதிகளிலிருந்து, அமைச்சர்களிலிருந்து எல்லோரும் உறுதிமொழியைச் சொல்லி பிரமாணம் எடுக்கிறார்கள். அமைச்சர்களின் உறுதிமொழியில், காப்புறுதி உண்டு; ரகசிய காப்புறுதி  உண்டு; அதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

அந்த சூழ்நிலையில், ஆளுநராக இருக்கின்றவர் களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்ற அந்த வாக் குறுதியினுடைய வாசகங்கள், அமைச்சர்களுக்கு இருப்பதைவிட, வித்தியாசமான ஒன்று.

இதை சட்டப்பூர்வமாக சொல்லவேண்டும்; வழக் குரைஞர் என்ற முறையில். இங்கே சட்டம் படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அரசியல் உணர்வுள்ளவர்கள் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், இன்னுங்கேட்டால், ஆளுங் கட்சியாக, வடக்கே இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும்கூட, அவர்களும் கவனிக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு சொல்லுவது என்ன?

அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு:

‘‘Oath or affirmation by the Governor.-Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that Court available, an oath or affirmation in the following form, that is to say -

swear in the name of God

“I, A. B., do solemnly affirm that I will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of Tamil nadu (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well-being of the people of  Tamil nadu (name of the State)”

‘‘அரசமைப்புச் சட்டத்தை நான் காப்பாற்றுவேன்; அரசமைப்புச்  சட்டத்திற்காக நான் வாதாடுவேன். அரச மைப்புச்  சட்டத்திற்காக நான் எல்லா சட்டங்களையும் காப்பாற்றுவேன்.''

இதையெல்லாம் செய்துவிட்ட பிறகு, ஆளுநருக்குக் கூடுதலாக ஒரு பொறுப்பு இருக்கிறது. மாநிலத்தில் வரக்கூடியவர்களுக்கு, ஆளுநர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி அது.

‘‘I will devote myself to the service and well-being of the people of State.''

அதாவது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது, அரசமைப்புச் சட்டத்தின்மீது வாதாடுவது, அதனுடைய விழுமியங்களைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய கடமை என்றாலும், அதையும் தாண்டி அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது.

வீட்டிற்கு வீடு இதைச் செய்யவேண்டும்!

அந்தப் பொறுப்பு என்னவென்றால் புரிந்துகொள் ளுங்கள்; இந்தச் செய்திகளை எல்லோருக்கும் சொல்ல வேண்டும். இங்கே வந்திருப்பவர்கள் தெரிந்துகொண் டால் மட்டும் போதாது; தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தெரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகமும், நம்முடைய கூட்டணி யும் செய்யவேண்டும்; வீட்டிற்கு வீடு இதைச் செய்யவேண்டும்.

ஆளுநர்மீது நமக்கென்ன தனிப்பட்ட முறையில் கோபமா? இந்த அரசிற்குக் கோபமா?

இன்னுங்கேட்டால், இங்கே நம்முடைய அருமைச் சகோதரர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் சொன்னதைப்போல, வேக மாகப் பாயவேண்டிய நேரத்தில்கூட நிதானமாக இருக்கிறார், நம்முடைய முதலமைச்சர் என்று வேண்டு மானாலும் சொல்லலாமே தவிர, அவர் வேகமாகப் பாய்கிறார் என்று சொல்ல முடியாது.

பாதுகாக்க வேண்டிய பொறுப்பு 

ஆளுநருக்கு உண்டு!

அரசமைப்புச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

To the service and well-being of the people.

2
மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும்; மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும்; அதைக் காப்பாற்றவேண்டிய,  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உண்டு.

இந்த வாசகம், அமைச்சர்களுடைய உறுதிமொழியில் கூட கிடையாது. ஆகவே, ஓர் ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

தற்கொலைகளுக்கெல்லாம் இடமில்லாமல், உயிர்களைக் காப்பாற்றவேண்டும்

அப்படிப்பட்டவர், ஆன்-லைன் சூதாட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து,  ஏற்கெனவே பழைய அரசில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இருந்த ஓட்டைகளை எல்லாம் இல்லாமல் செய்யவேண்டும்; அதன்மூலம், அன்றாடம் தற்கொலைகள் மிகுந்துகொண்டிருக்கின்ற இடத்தில், அந்தத் தற்கொலைகளுக்கெல்லாம் இடமில் லாமல், உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற முறையில், இன்றைய தி.மு.க. அரசு, முதலமைச்சரால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா!

யாருடைய உயிராக இருந்தாலும், மனித உயிர்கள். அந்த மனித உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்கான மனித நேய சட்டம் இது.

ஆனால், அந்தச் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பு கின்ற நேரத்தில், ஆளுநர் என்ன செய்தார் என்பதை இங்கே நம்முடைய வேல்முருகன் அவர்கள் சொன் னாரே!

ஆளுநர், சூதாட்டக் கம்பெனிக்காரர்களின் 

பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்!

ஆளுநர் யாரைச் சந்திக்கிறார்?

சூதாட்டக் கம்பெனிக்காரர்களின் 40 பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். அதேநேரத்தில், அமைச்சர்களைச் சந்திப்பதற்குத் தாமதிக்கிறார்.

இப்படி நடந்துகொள்கிறார் என்றால், அதற்குப் பொருள் என்ன?

இன்னுங்கேட்டால், அவர் ஆர்.எஸ்.எஸ். உணர்வு உள்ளவர். பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியமானவர். அதன் காரணமாக, பாரதத்திலிருந்துதானே சூதாட்டத் தைக் கற்று வந்திருக்கிறார்கள்; பாரதத்தினுடைய கதையே சூதாட்டத்திலிருந்துதானே வருகிறது. அந்தப் பற்று அவருக்கு இருக்கலாம்; அதை அவரோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அது சட்டமன்றத்தில் சட்டப் புத்தகத்தில் எட்டிப் பார்க்கக் கூடாது; தலைநீட்டக் கூடாது.

சூதாட்டத்தினுடைய கொடுமை எப்படிப்பட்டது என்பதற்கு, 

அதுதான் அடையாளம்!

இன்னுங்கேட்டால், இருப்பதிலேயே மிகவும் யோக்கியமானவன் ‘தர்மன்' என்று பஞ்ச பாண்டவ பாத்திரங்களில் சொல்வார்கள்.

அவருக்கென்ன ‘தர்ம ராஜா' என்று சொல்வார்கள்; இங்கேகூட ‘தர்மராஜா' கோவில் உண்டு.

அப்படிப்பட்ட சூழலில், அந்தத் தர்மன்தான் சூதாடு கிறான்; சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழக்கிறான்; கடைசியில், சுற்றும் முற்றும் பார்க்கிறான், பந்தயம் கட்டுவதற்குப் பொருளில்லை. திரவுபதைதான் மிச்சம்.

திரவுபதையையும் வைத்து சூதாடுகிறான்.  சூதாட்டத் தினுடைய கொடுமை எப்படிப்பட்டது என்பதற்கு, அதுதான் அடையாளம்.

மனிதநேயத்தோடு 

அதை செய்கிறோம்!

இன்னுங்கேட்டால், அவனுக்கு முழு உரிமை உண்டா? என்று கேட்டால், கிடையாது; அய்ந்தில் ஒரு பாகம்தான் இவனுக்கு உரிமை உண்டு. நான்கு பேருடைய பாகத்தை அவனே எடுத்துக்கொண்டு சூதாடியிருக்கிறான். சூதாட்டத்தினுடைய கொடுமை அதன்மூலமாகத் தெரிகிறது. ஆனால், அதைப் படித்துவிட்டு, பாரதக் கலாச்சாரம் பேசி, சனாதனம் பேசுகிறீர்களே ஆளுநர் ரவி அவர் களே, இப்பொழுதாவது எங்களுடைய ஆட்சி வந்திருக்கிறது; மனிதநேயத்தோடு அதை செய்கி றோம் என்று சொல்லும்பொழுது, அதை ஏன் நீங்கள் ஊறுகாய் ஜாடியில் போடுகிறீர்கள்? என்பதுதான் கேள்வி.

அந்த மசோதாவை முதலில் ஆளுநர் திருப்பி  அனுப்பியபொழுது, அவர் சொன்ன காரணம் இருக்கிறதே, அதன்படி அரசமைப்புச் சட்டத்தை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறாரா? படித்திருக் கிறாரா? என்கிற சந்தேகம்தான் எழுகிறது.

அறியாமையா? அல்லது ஆணவமா? என்ற கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறது.

அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு உரிய அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்.

7 ஆவது ஷெட்யூலில்...

உடனடியாக அதே அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, அதற்குப் பதில் எழுதினோம்;  நாங்கள் அறிக்கை எழுதினோம்.

7 ஆவது ஷெட்யூலில் மூன்று பட்டியல் இருக்கின்றன.

1. ஒன்றிய அரசினுடைய அதிகாரங்கள்.

2. மாநில அரசிற்குரிய அதிகாரங்கள்.

3. கன்கரண்ட் லிஸ்ட் - தமிழில் இது பொதுப்பட்டியல் என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால், பொதுப் பட்டியல் அல்ல; தவறாகச் சொல்கிறார்கள். அது ஒத்திசைவுப் பட்டியல்.

அந்த ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது என்று சிலர் நீங்களெல்லாம் நினைப்பீர்கள்.

சூதாட்டம் என்பது 

மாநிலப் பட்டியலில் இருக்கிறது

‘‘Betting and Gambling'' என்று சொல்லக்கூடிய இந்த சூதாட்டம் என்பது, அது மாநிலப் பட்டிய லிலேயே இருக்கிறது.

எனவே, இப்பொழுது சொல்லுங்கள், ஆளு நருக்கு அறியாமையா? அரசமைப்புச் சட்டத்தைப் படித்திருக்கிறாரா? இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பதற்கு அவர் தகுதியானவரா? பதவிப் பிராமணம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி நடந்திருக்கின்றாரா? என்று கேட்பது நியாயமான கேள்வி அல்லவா!

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் நாடாளுமன்றத்தில், ‘‘ஆன்லைன் சூதாட் டத் தடைச் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசிற்கு உரிமை இல்லை என்று சொல்லுகிறார்களே, அதற்கு உங்களுடைய பதில் என்ன?'' என்று கேட்டார்.

ஒன்றிய அமைச்சரின் பதில்!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார், ‘‘நிச்சய மாக மாநில அரசினுடைய அதிகாரப் பட்டியலில் இருக்கிறது; 34 ஆவது அயிட்டத்தில் இருக்கிறது'' என்று சொன்னார்.

ஒன்றிய அமைச்சர் இப்படி சொல்லிய பிறகும்கூட, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டிருந்தார்.

இது என்ன நியாயம்? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

பதவிப் பிரமாண உறுதிமொழிப்படி 

ஆளுநர் நடக்கவேண்டாமா?

நமக்காக அல்ல; யாருக்காகவும் அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிராமணம் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி ஆளுநர் நடக்கவேண்டாமா?

அதைத்தான் எங்களுடைய முதலமைச்சர் கேட்டார்.

இதுவரையில், தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொண்ட முறைகளைப்பற்றி, எனக்கு முன்பு உரையாற்றிய நண்பர்கள், தோழர்கள் சொன்னார்கள்.

சட்டமன்றத்தில் இருந்து 

வெளிநடப்பு செய்த ஒரே ஒரு ஆளுநர்!

தயவு செய்து எண்ணிப் பாருங்கள், இதுவரை நூறாண்டை தாண்டிய தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய் வார்கள்; ஆனால், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே ஒரு ஆளுநர், இந்தியாவிலேயே இவர்தான் என்றால், இதைவிடக் கேவலம், இதைவிட அரசமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய, அசிங்கமான, அருவெறுக்கத்தக்க - கடமை தவறுகின்ற நிலை வேறு இருக்க முடியுமா?

எனவேதான் நண்பர்களே, நிதானமாக, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, கடைசியில் இனிமேலும் பொறுக்க முடியாது - பட்டதெல்லாம் போதும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தின் முன்பகுதி மிகவும் முக்கியமானது. 

144 சட்டமன்ற உறுப்பினர்கள் 

ஒப்புதல் கொடுத்தனர்!

ஆளுநரைப்பற்றி பேச முடியாது; விவாதிக்க முடியாது என்று சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய சில விதிமுறைகளையும் திருத்தி - மாற்றி, 144 சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் கொடுத்த பிறகு, முறையாக, அடுத்த கட்டத்திற்கு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்த பிறகு, அதற்காக ஒரு நிரந்தரச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு முதலில் அனுப்பி வைத் தார்கள். அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல், நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டு, பிறகு திருப்பி அனுப்பப்பட்டது.

அதற்குப் பிறகு இரண்டாவது முறை தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த பிறகும், கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர்.

ஒப்புதல் கொடுக்கவில்லை; ஒப்புதல் கொடுக்கும்படியாக செய்யப்பட்டு இருக்கிறார்

சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

எனவே, அவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை; ஒப்புதல் கொடுக்கும்படியாக செய்யப்பட்டு இருக்கிறார். அதுதான் மக்கள் போராட்டம்; மக்களிடத்தில் இருக்கிற அதிகாரம்தான் மிக முக்கியமானது.

அதேபோல, நீட் தேர்வு எதிர்ப்பு மசோதா. அதற்கும் அவர் முறையாக பதில் சொல்லவில்லை. நாடு முழுவதும் நாம் பிரச்சாரம் செய்தோம்.

ஆளுநரின் வேலை ஒரு தபால்காரரின் வேலைதானே தவிர, வேறு கிடையாது! 

இன்னுங்கேட்டால், நீட் தேர்வு மசோதாமீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு ஒன்றுமே கிடையாது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் இவருடைய வேலை அது ஒரு தபால்காரரின் வேலைதானே தவிர, வேறு கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதிலும் அதிகப்பிரசிங்கத்தனமாக நடந்துகொண்டார். பிறகு அந்த மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப் பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாவாக இருந்தாலும், அந்த மசோதாவை ஆளுநர் தவிர்க்க முடியாது; மறுக்க முடியாது; ஒப்புதல் அளித்தே தீரவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தினுடைய காப்பாளராக இருக்கிறவர் - அதற்கு வியாக்கியானம் சொல்லவேண் டியது உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?  ஆளுநர்கள் தன்னுடைய கடமையைத் தவறக் கூடாது என்று சொன்னார்கள்.

பேரறிவாளன் வழக்கில், உச்சநீதிமன்றம் இதே ஆளுநரின் தலையில் குட்டு வைத்தது. மற்ற வழக்கு களிலும் ஆளுநரின் பங்கு என்ன? என்பதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

மக்கள் வரிப் பணத்தை சம்பளமாகப் பெறக்கூடிய ஒருவர் தன்னிச்சையாக நடந்துகொள்வதா?

பொதுவாகவே, ஆளுநர் தேவையில்லை என்கிற ஒரு நிலை இருந்தாலும், இந்த ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், அரசமைப்புச் சட்டம் யாருக்காக இருக்கிறதோ, அந்த மக்களை மதிக்காமல், மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல், இவர் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார். மக்கள் வரிப் பணத்தை சம்பளமாகப் பெற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்.

மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார், ‘‘நான் குடி யரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவன்'' என்று சொல்கிறார்.

குடியரசுத் தலைவருக்குத்தான் நீங்கள் கட்டுப்பட்ட வர் என்பதுபோல சொல்கிறீர்களே, அரசமைப்புச் சட் டத்தை அப்படியாவது ஒழுங்காகப் படித்திருக்கிறீர்களா? 

உங்களுக்குச் சம்பளம் கொடுப்பவர்கள் யார்?

தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாடு அரசு தான் சம்பளம் கொடுக்கிறது!

தமிழ்நாடு அரசு உங்களுக்காக ஒதுக்குகின்ற நிதியைக்கூட யார் யாருக்கோ வாரிக் கொடுக்கிறீர்கள். 

ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் கொடுக்கின்ற பணத்தை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு, அட்சய பாத்திரம் நடத்துகிறீர்கள்; இன்னும் வெவ்வேறு பாத்திரங்களையெல்லாம் நடத்து கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை ஏற்றுக்கொண்டி ருக்கிறீர்கள் என்றால், அதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கூட்டங்கள், பெருந்திரள் ஆர்ப்பாட்டக் கூட்டமாக நடைபெறவேண்டும்!

எனவேதான் நண்பர்களே, மிக முக்கியமாக இந்தக் கூட்டத்தின் மூலமாக, இது முதல் கூட்டமாக இருக்க வேண்டும்; இது முடிவல்ல; இதுதான் தொடக்கம். தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கூட்டங்கள், பெருந் திரள் ஆர்ப்பாட்டக் கூட்டமாக நடைபெறவேண்டும்.

பெருந்திரள் என்ற சொல்லை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான் கொடுத்தார்கள்.

பெருந்திரள் கூட்டம் என்று வள்ளுவர்கோட்டத்தில் நடத்துங்கள் என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.

இருகை நீட்டி வரவேற்கிறோம்!

அந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், பெருந்திரள் கூட்டம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கூட்டத்தை, எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், கூட் டணித் தோழர்களும், இன்னும் ஏனைய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளராக தங்களைக் கருதக்கூடிய வர்களாக யார் வந்தாலும், இருகை நீட்டி வரவேற்று, மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும்.

இது என்னுடைய கருத்து மட்டுமல்ல நண்பர்களே, இது பொதுமக்களுடைய கருத்துமாகும்.

2022 ஆம் ஆண்டு  

‘‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’’ கட்டுரை!

‘‘டைம்ஸ் ஆஃப் இண்டியா'', ஏப்ரல் 18, 2022 ஆம் ஆண்டு வெளிவந்த நாளிதழில், நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து குரல்கள் எழுந்தபொழுது, ‘‘ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்'' என்று கட்டுரை எழுதியிருந்தார் ஒரு கட்டுரையாளர்.

Governor Should not Resign in set the force should be abolished

என்று Arun Raman Article in ‘‘Times of India'', April 28, 2022  எழுதியிருக்கிறார்.   அந்தக் கட்டுரையில் கடைசியாக, ‘‘ஒரு தனி நபருக்கு ஏன் இத்தனை ஏக்க ராவில் மாளிகை. அந்த இடம் காட்சியகமாக மாற்றப் படட்டும்; எதற்காக தனி மனிதருக்கு ஆடம்பரமான மாளிகை. வெள்ளைக்காரன் ஆடம்பரம் செய்தான் என்றால், அன்றைக்கு இருந்தது அந்நிய ஆட்சி - இன்றைக்கு இருப்பது சுதந்திர ஆட்சி!'' என்கிறார்.

இதை நாங்கள் கேட்கவில்லை. கட்டுரையாளர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இன்றைக்கு ஆளுநர் பதவி 

தேவையில்லை!

ஆகவேதான் நண்பர்களே, பொதுமக்களிடம் நாம் எடுத்துச் சொல்லவேண்டிய விஷயம் - இன்றைக்கு ஆளுநர் பதவி தேவையில்லை; அது ஒழிக்கப்படுகின்ற வரையில்.

பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் வேந்தர்; அங்கங்கே இணைவேந்தர் உண்டு. அந்தந்தத் துறையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநரைப் பொறுத்தவரையில், அந்த அதிகாரங்களில், ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிப்பதற்காகத்தான் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

பல்கலைக் கழகங்களில் 

பட்டமளிப்பு விழாக்களே நடைபெறாத அளவிற்குச் செய்கிறார்

ஆனால், அதேநேரத்தில், பல்கலைக் கழகங்களுக்கு நான்தான் (ஆளுநர்) வரவேண்டும்; நான்தான் (ஆளுநர்) பேசவேண்டும் என்று சொல்லி, பட்டமளிப்பு விழாக்களே நடைபெறாத அளவிற்குச் செய்கிறார். பல பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறவில்லை. பட்டமளித்தால்தான், மாணவர்கள் பட்டதாரிகளாகி வேலைக்குப் போகவேண்டும்; அது அங்கே சுணக்கப்படுகிறது. அதைக் கண்டித்து நாங்கள் எல்லோரும் வற்புறுத்தினோம். பிறகு, தமிழ்நாடு அரசு, அந்த அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து எடுத்து, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் சார்பாகத்தான் வேந்தர் இருக்க வேண்டும்; ஆளுநர், வேந்தராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.

அந்த வேந்தர் பொறுப்பு, ஆளுநருக்கு எப்படி கிடைக்கிறது என்று சொன்னால் நண்பர்களே,  ex-officio  - ஆளுநராக இருக்கின்ற காரணத்தினால், அவர் வேந்தராக ஆகிறார் என்கிற நிலை இருக்கிறது; அதை யும் எடுத்து மாற்றியிருக்கிறார்கள், மக்கள் நலன் கருதி.

அந்த மசோதாவும், இங்கே இருக்கக்கூடிய மசோதாவில் ஒன்றாக இருக்கிறது.

கிடப்பில் உள்ள சட்டவரைவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்

எனவேதான், அந்த சட்ட வரைவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி அவர்கள்,  தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 20 மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது என்று சொன்னார்கள்.

அடுத்த நாள் அண்ணாமலை சொல்கிறார், 20 மசோதாக்கள் அல்ல; 19 மசோதாக்கள்தான் என்று. 

இது புத்திசாலித்தனமான பதிலா? ஏன் ஆளுநர் மாளிகையில் ஊறுகாய் ஜாடியில் அவை  இருக்க வேண்டும்?

எதற்காக?

இவர்கள் இதை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?

மக்கள் தயாராக இருக்கவேண்டும்

எனவேதான், உச்சநீதிமன்றத்தையும் அவமதித்து, சட்டமன்றத்தையும் அவமதித்து, எல்லாவற்றையும்விட, மக்கள் மன்றத்தையும் அவமதித்துள்ள இவர்கள் இங்கே வேலையில்லை - இவர்களை வீட்டிற்கு அனுப்புவோம். அதற்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும்.

அரசாங்கம் ஒருபக்கத்தில் இருந்தாலும்,  மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; அந்த மக்கள் கிளர்ச்சிக்கு இந்தக்  கூட்டணி பொறுப்பேற்கும். அரசு அதனுடைய கடமையைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் வேலையை செய்துகொண்டிருப்போம். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்குத் நாங்கள் தயார்! தயார்!! தயார்!!! என்று மக்களைத் தயார்படுத்துகின்ற கூட்டம்தான் இது - மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ற கூட்டமல்ல. 

வேகமாக நாடு முழுவதும் பரவும்!

ஏனென்றால், இன்னமும் நடக்கவேண்டிய பணி களும், இன்னமும் ஒப்புதல் கையெழுத்துப் போட வேண்டிய மசோதாக்களும் ஏராளமாக இருக்கின்றன. இன்னும் சில நாள்களில், அந்த மசோதாக்களில் எல்லாம் கையெழுத்துப் போடவேண்டும்; இல்லையானால், இந்தக் கிளர்ச்சி என்பது தொடக்கம்தான்; இது வேகமாக நாடு முழுவதும் பரவும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்றால், குடியரசுத் தலைவருக்கோ, பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ, மற்றவர்களுக்கோ அல்ல; மக்களிடம்தான் இருக்கிறது.

அதுதான் அரசமைப்புச் சட்டம்.

மக்களைத் தயாரிக்கின்ற கூட்டம்தான் 

இந்தக் கூட்டம்!

ஆகவே, அதற்காக மக்களைத் தயாரிக்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!

நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று, நம்முடைய ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மக்க ளுடைய உறுதிமொழியைக் காப்பாற்ற ஆயத்தமாவோம், ஆயத்தமாவோம்!

‘திராவிட மாடல் ஆட்சிக்குத் 

துணை நிற்போம்!

தமிழ்நாட்டைக் காப்பாற்றவேண்டும், அது ‘திராவிட மாடல்' ஆட்சியால்தான்  முடியும். ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய செயல்திறனாலும், மதி வியூகத்தாலும், சிறப்பான ராஜ தந்திரத்தாலும், சாதுரியத் தாலும், அது ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றாலும், அதற்குத் துணை இருப்போம் இந்தக் கூட்டணித் தோழர்கள் என்பதை எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு,13.04.2023கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக