சனி, 18 மார்ச், 2023

சென்னைப் பெரியார் திடலில் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்!

       சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் பங்கேற்றோர் தமிழர்              தலைவருடன்...

சென்னை. ஜன. 20- சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமான இயக்க குடும்பங்களின் தோழர்கள் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டை முன்னிட்டு, ”திராவிடர் திருநாள்” சென்னை பெரியார் திடலில் 17-01-2023 அன்று நடைபெற்றது. அத்துடன் கடந்த ஆண்டுகளைப் போலவே சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலையை ஒட்டியுள்ள வெளியரங்கில் பகல் 11 மணியளவில் ”சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்” எனும் பெயரிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பெரியவர்கள் இருபாலருக்கும் வேக நடைப் போட்டி, செங்கல் தூக்குதல், சைக்கிள் டயர் உருட்டுதல், இசை நாற்காலி, சிறுவர்களிலும் இருபாலருக்கும் ஓட்டப் பந்தயம், வேக நடைப்போட்டி, சாக்குப் போட்டி, சைக்கிள் டயர் உருட்டுதல், பலூன் ரயில், ஸ்பூன் - எலுமிச்சம் பழம், குறிபார்த்து எறிதல் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன. 

இயக்கக் குடும்பத் தோழர்கள் மிகுந்த குதூகலத்துடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மாலை நடைபெற்ற ”திராவிடர் திருநாள்” நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், குடும்ப விழாவில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்தார்.

காலை முதல் குடும்ப விழா விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற பா.சு.ஓவியச் செல்வன் தலைமையில் மு.க.பகலவன், நா.பார்த்திபன், உடுமலை வடிவேல், மாட்சி, மு.கலைவாணன், பொன்னேரி செல்வி, பவானி, கி.மணிமேகலை, த. மரகதமணி, வை.கலையரசன், அன்பரசன்,  மு.க.முத்தரசன், மங்களபுரம் பா. பார்த்திபன், அரவிந்த், பெரியார், சமரசம், எருக்கஞ்சேரி கலைச் செல்வன், சிற்றரசு, கிஷோர், மணிவண்ணன், கணேசன், தமிழரசன், கலைமணி, சுரேஷ், அண்ணா.மாதவன், மகிழ் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். குடும்ப விழா ஒருங்கிணைப்புப் பணிகளை துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், சீர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பூவை செல்வி, ஆதிலெட்சுமி உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

சென்னைப் பெரியார் திடலில் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்!

 

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் - ருசிய கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்

பெரியார் விருது அளிக்கப்பட்ட பெருமக்கள்

ஒரே குதூகலம் - திராவிடர் திருநாள் விழா வெகு சிறப்பு

சென்னை, ஜன. 18- சென்னைப் பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டு திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமமாக நேற்று (17.1.2023) நடைபெற்றது. ருசிய கலைஞர்களின் ஆடல் பாடல், பெருமைப்படத்தக்க தமிழினப் பெருமக்களுக்குப் பெரியார் விருது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் சங்கமமாக நடைபெற்றது. விழா சிறப்புரையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றினார். விழா விவரம்  வருமாறு:

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29ஆம் ஆண்டு விழா , திராவிடர் திருநாள் பொங்கல் விழா ஆகியவை 17.01.2023 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம்!

காலையில் தொடங்கிய சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் பெரியார் பிஞ்சுகள் தொடங்கி இளையோர், முதியோர் என்று வயது வேறுபாடின்றி விளையாட்டு போட்டி கள், உற்சாகமூட்டும் நடனம், சிலம்பம், பறை என்று மாலை வரை திராவிடர் திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

தமிழர் கலையும்- ரஷ்ய நடன நிகழ்ச்சியும்!மாலை நிகழ்ச்சி அலங்காநல்லூர் வேலுஆசான் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அரங்கம் அதிரும் பறையுடன் தொடங்கியது. அதுவரை அரங்கில் இருந்த யாரும் கண்டு களித்திடாத ரஷ்யா நாட்டினரின் நடன நிகழ்ச்சி, அதிலும் நிகழ்ச்சியின் ஊடே தந்தை பெரியாரின் சோவியத் பயணம் குறித்தும், இந்திய-ரஷிய நட்புறவு தெற்கிலிருந்து தான் ஆரம்பித்தது, இன்றும் ஆசிரியர் அந்த நட்புறவை வலுப்படுத்தும் முதல் நபராக இருக்கிறார் போன்ற செய்திகளை எல்லாம் இந்திய-ரஷ்ய நட்புறவு கழக ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் விவரித்தார். நிகழ்வின் முத்தாய்ப்பாக "சங்கே முழங்கு" எனும் பாரதிதாசன் பாடலை ரஷ்யர்கள் நடனத்தின் மூலம் முழங்கினர்.

வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!

நிகழ்வில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார. வாழ்க பெரியார்! வெல்க திராவிடம் என்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரை நிகழ்த்த நிகழ்வு தொடங்கியது.

தமிழறிஞர். அவ்வை நடராசன் அவர்களுடைய படத் தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.

பாராட்டு!

பெரியார் பெருந்தொண்டர் சைதை.பாலு பற்றிய குறிப்பு களை தென் சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி வாசித்தார். குறிப்பாக, 91 வயதை நெருங்கக் கூடிய அவரின் வாழ்க்கை குறிப்பு, அவருடைய சிந்தனை, கண்ட போர்க் களங்கள், திராவிடர் கழகத்தில் அவர் கண்ட களங்கள், சிறை ஆகியவற்றை தெரிவித்தார். அவரை பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார். இன்றைக்கும் தனது  தெருக்குரலின் மூலம் ஜாதிய கட்டமைப்புகளுக்கு எதிராக பாடல் வரிகளை எழுதி, இசைக்கும் தெருக்குரல் அறிவு அவர்களுக்கு தமிழர் தலைவரால் பாராட்டு செய்யப்பட்டது. அவரைப் பற்றிய அறிமுக குறிப்பினை பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் வாசித்தார்.

பெரியார் விருதுகள் 2023!

பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுண ராஜன், குழலிசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான அருண்மொழி (எ)நெப்போலியன் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.

தமிழ் சமூகத்திற்கு நடைபெற்ற பெரு வெடிப்பு தந்தை பெரியார்!

பெரியார் விருதினை பெற்ற எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுண ராஜன் அவர்கள் தனது ஏற்புறையில் ; 

இது ஏற்புரை அல்ல; நன்றி உரையே! பெரியார் பெயரில் விருது பெற்றிருப்பதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கி றேன் என்றும், காரணம் பெரியார் இல்லை என்றால், அவரது சிந்தனை இல்லை என்றால், உங்கள் முன்னாடி நிற்கும் நான் ஒருபோதும் தோன்றியிருக்க முடியாது என்றார்.இது எப்படி பெரியார் மண் என்று நிறைய பேர் கேள்வி கேட்பார்கள். உலகம் தோன்றியதற்கு காரணம், பெருவெடிப்பு (ஙிவீரீ ஙிணீஸீரீ) என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி, தமிழ் சமூகத்திற்கு நடைபெற்ற பெருவெடிப்பு பெரியார் தான் என்றார்.  கேரளம், மராட்டியம், மைசூர் போன்ற பகுதிகளில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. சில பகுதிகளில் தமிழ்நாட்டிற்கு முன்பே பல சமூக நீதி கருத்துகள் தோன்றியது. ஆனால் , அங்கு நடைபெறாத மாற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் என்பதை பல செய்திகளுடன் விளக்கினார். பார்ப்பனியம் எங்கு இருந்தாலும் அதை அழித்து விட வேண்டும் என்பதில் பெரியார் எப்படி முனைப்பாக இருந்தார் என்பதை விளக்கி, பகுத்தறிவு , சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றை தமிழ் சமூகத்திற்கு கொடுத்து நம்மையெல்லாம் வழிநடத்த பெரியார் இருக்கிறார் என்பதை பதிவு செய்து, இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது தெரியவில்லை; ஆனால் நன்றி சொல்வதற்கு தகுதியானவன் என்று ஆசிரியருக்கும், இந்த நிகழ்விற்காக உழைத்த தோழர்களுக்கும் நன்றி கூறினார்.

முதல் விருதே பெரியார் விருதுதான்!

பெரியார் விருதை பெற்று ஏற்புரை வழங்கிய அருண் மொழி (எ)என்ற நெப்போலியன் அவர்கள் தனது ஏற்புரையில்;

குக்கிராமத்தில், இசை என்றால் என்ன என்று தெரியாத ஒரு ஊரில் பிறந்த அவர் புல்லாங்குழலை தேர்ந்தெடுக்க வில்லை என்றும், புல்லாங்குழல் தான் தன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது என்றார். ஆறு, ஏழு வருடமாக மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த தனக்கு இருந்த ஒற்றை நோக்கம், ஒரே ஒரு  முறை ,தான் வாசிக்கும் குழல் ஒளிப்பதிவில் வரவேண்டும் என்பதே. ஆனால் இயற்கை தன்னை விட்டு வைக்காமல் இசையோடு பயணிக்க வைத்தது என்றும், 32 ஆண்டு காலமாக இசை மேதை இளையராஜா அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் வாய்ப்பை பெற்றதாகவும், ஏறத்தாழ 43 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்தும் இதுவரை ஒரு விருது கூட பெறவில்லை, தான் பெரும் முதல் விருதே பெரியார் விருதுதான் என்றார். இந்த விருதை பெறுவதற்காக தான் மற்ற விருதுகள் இத்தனை ஆண்டு காலம் தன்னை தேடி வராமல் இருந்தது என்றும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விருது வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று, இதனால் அவர் அடையும் மட்டற்ற மகிழ்ச்சியை, ஆனந்தத்தை பதிவு செய்தார்.

ஆசிரியரை சந்தித்தது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!

நிகழ்வில், தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பாராட்டினை பெற்ற தெருக்குரல் அறிவு அவர்கள் தனது ஏற்புரையில்;

இந்த நாள் இவ்வளவு சிறப்பாக அமையும் என்று, தான் திட்டமிடவில்லை என்றும், தனது பாடல் காட்சியை பார்த்த உடனே தன்னை பாராட்ட வேண்டும் என்று ஆசிரியர் நினைத்ததை கூறி, இங்கு வந்து ஆசிரியரை சந்தித்தது தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பதாகவும், தான் பள்ளிக்கூடத்தில் பயின்றபோது அரக்கோணம் பகுதியில் திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருக்கும், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு கூட புரியும் வண்ணம் எப்படி அரசியல் பேசுவார்கள் என்றும், பகுத்தறிவு கருத்துகளை வீதியெங்கும் கொண்டு போய் சேர்த்த ஆணிவேரான மேடையில் நிற்பது பெருமையாக இருக்கிறது என்றார். இன்றைய தலைமுறை பெரியாருக்கும், அம்பேத் கருக்கும், திராவிட இயக்கத்திற்கும் நன்றி காட்ட கடமைப்பட்டுள்ளது என்றார். வாழ்வில் நம்முடைய எல்லா அம்சங்களும் சூறையாடப்படுகிறது. அதை எதிர்த்து, அதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு முறையேனும் பெரியார் திடலுக்கு வர வேண்டும் என்றார். சமூகம் பற்றிய புரிதலை, அந்த உணர்வை தனக்கு ஏற்படுத்தியதில் இப்படிப் பட்ட செய்திகளுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாகவும்,  உணர்வெழுச்சி மட்டும் இப்போது தேவையில்லை,  சமத்துவம் சார்ந்த புரிதலுடன் கூடிய ஒரு பயணம் நமக்கு தேவைப்படுகிறது என்றும், இந்த சமயத்தில் தன்னை பாராட்டிய ஆசிரியருக்கும், அனைவருக்கும் தான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று பதிவு செய்தார்.

தமிழறிஞர் அவ்வை நடராசனும் - ஆசிரியரும்!

அவ்வை அருள்மணி அவர்கள் ,தனது தந்தையார் அவரது மறைவுக்கு  முன்னாள் ஆசிரியருடன் இறுதியாக பகிர்ந்த மேடையை பற்றி கூறி, தனது தாயாரின் பெயர் இங்கர்சால் என்றும், அதே பெயரை தலைப்பாக வைத்து இதே மேடையில் அவரது தாயார் பேசியதை நினைவு கூர்ந்து, ஆசிரியருக்கும் அவர்கள் குடும்பத்திற்குமான உறவைப் பற்றி விளக்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.

எங்கள் தோள்கள் உங்களை தூக்கிச்

சுமக்க தயாராக இருக்கிறது!

சிறப்புரை நிகழ்த்திய ஆசிரியர் அவர்கள் தனது உரையில்; எல்லையற்ற மகிழ்ச்சி அடையும்போது பேச முடியாமல் போகும் அப்படி ஒரு தருணத்தில் தான் இருப்பதாகவும் , தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளும், ரஷ்ய கலை நிகழ்ச்சிகளும் எவ்வளவு இனிமையாக அமைந்தது என்பதை விவரித்து, அதில் முத்தாய்ப்பாக "சங்கே முழங்கு"  எப்படி அனைவரையும் ஈர்த்தது என்பதை பதிவு செய்தார். திருக்குறள்  கேட்டு பழகியவர்கள் எல்லாம் இப்போது தெருக்குரல் கேட்கிறார்கள் என்றார். கலை ஒரு சாரர் கையில் மட்டும் இருந்ததை மீட்டதே பெரியார் தான் என்றார். அந்த மீட்பு வேலையை தற்போது பெரியார் முத்தமிழ் மன்றம் பார்க்கிறது என்றும், அதற்கு மிக நேர்த்தியாக இது அனைத்தையும் செய்து முடித்த கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் , மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் இதற்காக உழைத்த அனைவரையும் நெகிழ்ந்து பாராட்டினார். இது ஒரு ஏணி; தமிழரை ஏற்றி விட வேண்டும் , ஏற்றம் பெற வேண்டிய தமிழர்களை ஏற்றி விட வேண்டும் என்று நினைக்கும் மேடை இது என்றார். திராவிடர்களுக்கு அறிவு பஞ்சமில்லை ; அவர்களை அடையாளம் காட்டும் வேலையை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம். இருட்டில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே திடலின் வேலை என்றார். பெரியார் அனைவருக்கும் உரியார்; ஒருவரைத் தவிர அவர்தான் நரியார் என்றும் அப்படிப்பட்ட நரியார்களை பார்த்து சிங்கங்கள் பயப்படத் தேவையில்லை. அந்த சிங்கங்களை அழைத்து தான் இன்றைக்கு பெருமைப்படுத்தி இருக்கிறோம். இவர்கள் அடையும் பெருமை, நமக்கான பெருமை என்றார். அனைவரும் உணர்ச்சி அடையும் வகையில் , எங்கள் தோள்கள் உங்களை தூக்கி சுமக்க தயாராக இருக்கிறது என்றார். தொடர்ந்து, மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களைப் பற்றி பல செய்திகளை குறிப்பிட்டு, இறந்தும் இருப்பாராக எப்படி அவர் வாழ்கிறார் என்பதை எல்லாம் நினைவு கூர்ந்து, அவரின் குடும்பத்திற்கு நாங்கள் இருக்கிறோம் ; இது எங்கள் குடும்பம் என்று அவரின் நினைவு போற்றி மிகுந்த மனநிறைவுடன் உரை நிகழ்த்தி,

வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு என்று நிறைவு செய்தார்.

நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும், சிறப்பாக அமைய உழைத்த அனைவருக்கும் பெரியார் திடல் மேலாளர்  ப.சீதாராமன் நன்றியுரை கூறினார்.


சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் 

போட்டி உற்சாகத்துடன் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள்

ஆண்டுதோறும் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தைபெரியார் முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் திராவிடர் திருநாள் பொங்கல் பெருவிழா சுயமரியாதை குடும்பங்களின் சங்கமமாக மழலைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறைகளில் சாதனையாளர்களான தமிழர்களை அடையாளம் கண்டு தந்தைபெரியார் பெய ரில் விருது அளித்து பாராட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (17.1.2023) காலையிலிருந்தே  சென்னை பெரியார் திடலில் குடும்பம் குடும்பமாக கழகத்தினர் பெரியார் பிஞ்சுகளான மழலைகளுடன் குவிந்தனர். 

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் அனை வருக்கும் இனிப்புப் பொங்கல், வடையுடன் வழங்கப்பட் டது. பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

பகல் உணவு இடைவேளைக்குப்பின்னர்  பிற்பகல் நிகழ்வாக பெரியார் திடலில் அமைக்கப்பெற்றுள்ள தந்தை பெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலை முன்பாக அனைவரும் கூடினர்.  பெரியார் பிஞ்சுகளை உள்ளடக்கிய பெரியார் வீர விளையாட்டுக் குழுவினர்  பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். இளைஞர்கள், பெண்கள் அனைவரையும் கரவொலி எழுப்பி உற்சாகமூட்டினர்.

நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாலையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழா மேடையில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சான்றிதழ், இயக்க வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக