நமது எழுத்தை அறிவுப் போர்க்கருவியாக ஆக்க வேண்டும்
• Viduthalaiபகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் , மதுரையில் உள்ள ஆர்த்தி விடுதி அரங்கத்தில் 27. 01. 2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்றார். திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பகுத் தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக அமைப்புச்செயலாளர் வே. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் வரவேற்றும் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், இன்றைய காலகட்டம் பகுத்தறிவு எழுத்தாளர்கள் விரைந்து பணியாற்றி, படைப்புகளைக் கொடுக்கவேண்டிய காலம், மதுரையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் நடத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் வந்துள்ளீர்கள். அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து வந்துள்ள தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த 2023-ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட உறுதி எடுத்துக்கொள்வோம் என்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா. நேரு உரையாற்றினார்.
பயிற்சிப் பட்டறைகள்
தொடர்ந்து கோ.ஒளிவண்ணன் "ஆண்டுதோறும் எனது தந்தையார் நினைவாக சிறுகதை போட்டியை நடத்தி வருவதை தொடர்ந்து செய்வோம். புத்தகம் போடுவதில் எழுத் தாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். என் தந்தை போட்ட அடித்தளம்தான் எங்கள் பதிப்பகம். ஆனால் அவர் காலத்தில் ஆண்டிற்கு 30 புத்தகங்கள் பதிப்பித்தால், நாங்கள் இன்று ஆண்டிற்கு 300 புத்தகம் பதிப்பிக்கிறோம். புதிய தொழில் நுட்பங்கள் விரைவாக அச்சிட வழிவகுக்கிறது. முதலில் நாம் செய்ய வேண்டியது எழுத்தாளர்களுக்கு அங்கீ காரம் கொடுக்கவேண்டும், குறிக்கோளோடுதான் எழுதவேண் டும். ஆனால் பிரச்சாரம் என்பது தெரியாமல் எழுத்து அமைய வேண்டும். அதற்குப் பயிற்சி மிக முக்கியம். பயிற்சிப்பட்ட றைகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். 'வாருங்கள் படிப்போம் ' குழு போல அந்தந்த பகுதியில் நடத்த வேண்டும். ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளில், வெளி அமைப்புகளில் இருப்பது நம்மை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும். அது நமக்குப் பயன்படும் "என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
அருப்புக்கோட்டை ஆனந்தம், "பகுத்தறிவு எழுத்தாளர் நடத்துகின்ற போட்டிகளுக்கான செலவுகளில் ஒரு பரிசுத் தொகையை எனது தந்தையார் பெயரில் நானும் கொடுக்கிறேன் "என்று அறிவித்து, "ஆங்கிலத்தில் தான் தி மாடர்ன் ரேசனலிஸ்டு இதழில் எழுதுவதையும் ஆங்கிலத்தில் எழுத இளைஞர்கள் முன்வரவேண்டும்"என்று குறிப்பிட்டார்.
எழுத்தாளர் மன்றத்துக்கு...
மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் தனபாலன் "தலைவர் கட்டளைக்கு இணங்க இந்த எழுத்தாளர் மன்றத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன்" என்று குறிப்பிட்டார்.
பழனி தமிழ் ஓவியா "பெரியார் அய்யா உடைய கொள்கைகளை தமிழர் தலைவர் அவர்கள் சொல்கின்ற வழியில் எழுதுவதும் பேசுவதும், அதை செய்வது ஒன்றே தனது வாழ்நாள் பணி. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ் வியல் சிந்தனைகள் அடிப்படையில்தான் என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன்"என்று உரையாற்றினார்.
சுப. முருகானந்தம் "மாநிலம் முழுவதும் உள்ள நமது இயக்க எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் அறிமுகப் படுத்துவது, அவர்கள் மூலமாக கழகக் கொள்கைகளைத் தமிழர் தலைவர் அவருடைய வழிகாட்டுதலில் கொண்டு சேர்ப்பது, புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதற்காக கதை எழுதுவது எப்படி?, கவிதை எழுதுவது எப்படி? என்பது போன்ற பயிற்சிப் பட்டறைகளை மாநிலம் முழுவதும் நடத்துவோம்"என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
அடுத்த தலைமுறைக்கு...
செல்வ.மீனாட்சிசுந்தரம் "இன இழிவு போக்கும் இன உரிமை மீட்கும் பகுத்தறிவுக் கருத்துக்களை, தந்தை பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பொறுப்பு பகுத்தறிவு எழுத் தாளர்களுக்கு உள்ளது, அதனைச்செய்வோம்" என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
குடந்தை பேரா. சேதுராமன், "இங்கு மைக் சத்தம் போட்டது. மற்றவர்களால் சரி செய்ய இயலவில்லை. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அந்த வயரை கழட்டி மறுபடியும் மாட்டுங்கள் என்றார். சரியாகி விட்டது. அதைப்போல சங்கி கள் எழுப்பும் சத்தத்தை நிறுத்தும்விதம் ஆசிரியர் அவர்க ளுக்குத் தெரியும். அவரின் பரந்த அனுபவம் அப்படிப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை ஆசிரியராக இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நமக்கு வழிகாட்டிக்கொண்டு இருக்கிறார். எழுத்துகள் பகுத்தறிவோடு இருக்கவேண்டும். எழுத்தாளர்கள் ஏனோ தானோ என்று எழுதாமல் ஆய்வு நோக்கோடு தரவுகளை சேர்த்து நூல்களைப் படைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி வி. இளவரசிசங்கர் "வாழ்வியல் சிந்தனை குறள் வெண்பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது பற்றியும், ஆங்கில மொழி பெயர்ப்பில் நமது நூலாக்கம் அமைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.
"சீதை தீக்குளித்து வெளியில் வந்தாள்... நிரூபிக்கப்பட்டது இராவணின் கற்பு" என்று விநாயகமூர்த்தி என்னும் கவிஞர் எழுதினார். இராமாயணத்தையே மாற்றி இரண்டு வரிகளில் சொன்ன கவிதை இது. தொடர்ச்சியான வாசிப்பு வேண்டும். எழுத்தாளர்கள் ஆக வேண்டும் என்றால் நிறைய வாசிக்க வேண்டும்" என இராஜபாளையம் சிவக்குமார் குறிப்பிட்டார். மற்றும் மதுரை நாகமலை இராமச்சந்திரன், மாணவர் கழக யுகேசு, மதுரை புறநகர் பால்ராசு ஆகியோரும் தங்கள் கருத்து களைத் தெரிவித்தனர்.
ஊக்கம் அளிக்க வேண்டும்
முன்னிலை வகித்த பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் தனது உரையில் "ஆங்கிலத்தில் கட்டுரைகள் அதிகம் வரவேண்டும். நமது செயல்களை உலக அளவில் எடுத்துச்செல்வதற்கு ஆங்கிலத்தில் நாம் எழுதுவது என்பது மிகவும் அவசியம். பஞ்சாப் மாநாட்டிற்கு சென்று வந்தபின்பு முக நூலில் கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்தபின்புதான் எனக்கும் எழுத வரும் என்று தெரிந்தது. தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நான் இனித் தொடர்ந்து எழுதுவேன் என்று உறுதி எடுத்துக்கொள்கிறேன். தொடர்ச்சியாக எழுதவேண்டும், எழுதுபவர்களுக்கு நாம் ஊக்கம் அளிக்கவேண்டும். நாம் தொடர்ச்சியாக செய்யவில்லை என்பது நம்மிடம் இருக்கும் குறை. ஒளிவண்ணன் குறிப்பிட்டது போல நிறையக் குழுக்கள் கலை, இலக்கியக் குழுக்கள் தமிழ் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மிக சிறப்பாக செயல்படத் திட்டமிட்டு நாம் செயல்பட வேண்டும். அதற்கு நான் என்னுடைய முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்"என்றார். மேலும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்த இருக்கும் போட்டிகளில் வழங்கப்படும் பரிசுகளில் ஒரு பரிசினைத் தான் வழங்குவதாக தெரிவித்தார்.
கவிஞர் கலி.பூங்குன்றன்
வங்கிப் பணியிலே இருந்த பல தோழர்கள் நம் இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். கழகப்பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச்செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் அந்தப் பணியிலே இருந்தவர்கள். இன்றைக்கு செல்வ. மீனாட்சிசுந்தரம் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்திற்கு வந்திருக்கின்றார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சிறப்பாக செயல்பட முடியும். முதலில் நமது இயக்க நூல்களை நன்றாகப் படிக்கவேண்டும். எழுதுவதற்கு அவ்வளவு கருத்துகள் அதன் வாயிலாக உங்களுக்குக் கிடைக்கும். திராவிடர் இயக்க இதழ்கள் பற்றிய குறிப்புகளோடு ஒரு நூல் வெளிவந்துள்ளது. அந்த நூலிலே 200க்கும் மேற்பட்ட திராவிடர் இயக்க இதழ்கள் வெளிவந்துள்ள உண்மையை அந்த நூல் பதிவு செய்துள்ளது. ஆனால் அத்தனை இதழ்களும் இன்றுவரை தொடர்ந்து நடத்தப்படவில்லை. சில இதழ்கள் இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சில இதழ்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட விடுதலை நாளிதழ் இன்றளவும் இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது. நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்று நமது ‘விடுதலை' நாளிதழ் மேலும் பொலிவுடன் வளர்ந்து வரப் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். ஆசிரியர் அவர்கள் அவசர நிலைக் காலத்திலே சிறையில் அடைக்கப்பட்ட பொழுது அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க அந்தக் காலகட்டத்தில் விடுதலை நாளிதழில் ஒரு எழுத்தாளராக எனது பயணம் தொடங்கியது.
பொய்ப் பரப்புரைக்கு...
திராவிடர் இயக்கம் என்பது பேச்சாலும் எழுத்தாலும் கருத்துகளை மக்களிடம் பரப்பி எழுச்சியை உண்டாக்கிய இயக்கம். எழுதுகிற எழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எதை எழுதுவது எப்படி எழுதுவது, எப்போது எழுதுவது என்பதுதான் மிக முக்கியம். நமது இன எதிரிகள் செய்யும் பொய்ப் பரப்புரைக்கு எதிராக நமது தோழர்கள் ஆதாரங்களுடன் அதற்கு மறுப்புரையை சிறிய கட்டுரைகளாக வடித்து வெளியிட வேண்டும். அந்த வகையிலே இந்த பகுத்தறிவுப் எழுத்தாளர் மன்றம் மிகப்பெரும் கடமையினைத் தன் முன்னே கொண்டுள்ளது. அந்தப் பணியிலே வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். "என்று குறிப்பிட்டு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
நிறைவாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழி காட்டுதல் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் "பகுத் தறிவு எழுத்தாளர் மன்றம் தனது நிதி ஆதாரங்களைப் பெருக் கிக் கொள்வது அதன் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும். எனது பங்களிப்பாக ரூபாய் ஆயிரம் நன் கொடையை இப்பொழுது வழங்குகிறேன். : என்று வழங்கினார். தொடர்ந்து "பகுத்தறிவாளர்கள் துணிச்சலாக எழுதவேண்டும். நீங்கள் எழுத்தாளராக வேண்டும் என்றால் ஒரு தலைப்பை எடுத்துக்கொள்ளுங்கள். 'நான் பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்ந்தது ஏன்?நான் பகுத்தறிவாளனாக மாறியது எப்படி? என்ன காரணம், என்ன சந்தர்ப்பம் என்பதைச். சுருக்கமாக எழுதுங்கள். அதற்கு பரிசு வையுங்கள். ஒரு பக்கம் மட்டும் எழுதச்சொல்லுங்கள். பக்கம் பக்கமாக எழுதக் கூடாது. கருத்தாக (பாயிண்டாக) இருக்கவேண்டும். அழகாக இருக்கத் தேவையில்லை. கருத்து இருந்தால் பிறகு அலங்காரம் அழகு எல்லாம் வந்து விடும். போகப்போக வார்த்தைகள் தானாக வரும். அதனால்தான் 'சித்தரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்"அதுமாதிரிதான் எழுத்தும், பேனாவும். அதுவும் எழுத எழுத வந்துவிடும். அதனால் தைரியமாக எழுதுங்கள். கவிதா அவர்கள் எழுதிய எழுத்தை எல்லாம் பார்த்தேன். மிக நன்றாக எழுதுகிறார். தோழர் நேரு எழுதுவது, புதுப்புது செய்திகளை எழுதுகிறார். ஒவ்வொரு உண்மை இதழிலும் வருகிறது. பாராட்டப்படவேண்டிய செயல். நான் எல்லாவற்றை யும் படிக்கிறேன். கவிஞர் அவர்கள் எழுதுகிற ஒற்றைப்பத்திக்கு ஈடானது வேறு எதுவுமே கிடையாது.
சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்
தமிழ் மொழியில் மட்டும் அல்லாது ஆங்கில மொழி வழியாகவும் நூல்கள் படைக்கப்பட வேண்டும். கருத்தரங் கங்கள் நடத்தப்பட வேண்டும். அப்படி"செய்தால் தான் நமது கருத்துகள் தமிழர் அல்லாத மற்றவர்களுக்கும் சென்றடையும். தந்தை பெரியாரின் கருத்துகள் உலகம் எங்கும் பரவும். வடநாட்டு சுற்றுப்பயணத்தின் போது தந்தை பெரியார் தமிழிலே ஆற்றும் உரையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூட்டங்களில் நான் பேசி வந்தேன். பின்னர் நான் ஆங்கிலத்தில் பேசியதை இன்னொரு தோழர் இந்தியிலே மொழிபெயர்த்து அந்த கூட்டங்களில் பேசுவார். இரண்டு மூன்று கூட்டங்களுக்கு பிறகு தந்தை பெரியார் அவர்கள் ஆங்கிலத்தில் தானே உரையாற்றத் தொடங்கி விட்டார். ஆகவே ஆங்கிலத்தில் நூல்களை எழுதுவதற்கும் பேசுவ தற்கும் தோழர்கள் கூச்சப்படத் தேவை இல்லை. ஆரம்பத்தில் பிழைகள் இருந்தாலும் அது தவறு இல்லை. போகப் போக எல்லாம் சரியாகிவிடும். பகுத்தறிவு எழுத்தாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதில் இந்த மன்றம் பெரும்பணி ஆற்ற வேண்டும். எழுத்தாளர்களுக்குப் பயிற்சிப்பட்டறைகள் போட்டிகள் கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்திப் பெரும் பங்களிப்பை எழுத்தாளர் மன்றம் நல்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்கள். தொடர்ந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் புதிய பொறுப்பாளர்களைத் தமிழர் தலைவர் அறிவித்தார்.
மாநிலத்தலைவர்: முனைவர் வா. நேரு
துணைத்தலைவர்கள்:
பேரா. முனைவர். நம். சீனிவாசன், தஞ்சை
பாவலர் சுப. முருகானந்தம், மதுரை,
கவிஞர் ம. கவிதா, திருப்பத்தூர்
எழுத்தாளர் ந. ஆனந்தம் , அருப்புக்கோட்டை
எழுத்தாளர் ஞான. வள்ளுவன் , மயிலாடுதுறை
மாநிலச்செயலாளர்கள்:
எழுத்தாளர் கோ. ஒளிவண்ணன், சென்னை
பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம், சென்னை
மாநிலத்துணைச்செயலாளர்கள் :
பேரா. ந. எழிலரசன்-கரந்தை, தமிழ் ஓவியா-பழனி
வீ. இளவரசி சங்கர்-புதுச்சேரி பேரா. சேதுராமன்-குடந்தை, கு.வெ.கி.செந்தில்-கோயம்புத்தூர்
எழுத்து ஆய்வாளர்கள் குழு
(செயற்குழு) உறுப்பினர்கள்:
குருசாமி கும்பகோணம், ஏ. எம். இராஜா கோயம்புத்தூர்,
அழகிரிதாசன் குடியாத்தம்,
நயினார் திருநெல்வேலி,
தமிழ்ச் சுடர் திருச்சி,
சிவக்குமார் இராஜபாளையம்,
இராமச்சந்திரன் மதுரை,
செல்ல. கிருட்டிணன் மதுரை,
அழகுபாண்டி மதுரை,
சரவணக்குமார் தஞ்சை,
பூவைபுலிகேசி,
தளபதி மயிலாடுதுறை,
க. வருண்பிரபு நாகப்பட்டினம்,
உடுமலை வடிவேல் சென்னை,
முத்துகணேசு கோவில்பட்டி,
நாகப்பட்டினம் ஜீவன்,
பாலு மணிவண்ணன் சென்னை,
அஜீதன் நாமக்கல்,
அருள்பிரகாசம் காஞ்சிபுரம்,
காஞ்சி கதிரவன்,
குமரன் தாஸ் காரைக்குடி,
தகடூர் தமிழ்ச்செல்வி.
தீர்மானங்கள்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் 27. 01. 2023 வெள்ளிக்கிழமை காலையில் மதுரை ஆர்த்தி உணவகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் எமரால்டு கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டியை நடத்துவது என்றும், அதில் பரிசு பெற்ற சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி பரிசளிப்பு விழா அன்று வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
2. பகுத்தறிவுக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவது குறித்து பயிற்சி பட்டறை நடத்துவது.
3. சென்னை மதுரை திருச்சி போன்ற பெரிய நகரங்களில் நேரடியாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக புத்தக அறிமுகக் கூட்டங்கள் நடத்துவது. அதில் புத்தக அறிமுகத் தோடு பங்கேற்பாளர்கள் தங்கள் கதை கவிதை போன்ற படைப்பு சார்ந்த ஆக்கங்களை அறிமுகப்படுத்துவது, புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
4. வேங்கை வயலில் நடைபெற்ற குடிநீரில் மலம் கலந்த கொடுமையினை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறது. ஒரே தண்ணீர் தொட்டி மூலமே அனைத்து மக்களுக்கும் குழாய் மூலம் குடி நீர் கிடைக்க அமைக்கவேண்டும். மூளைக்கு போடப்பட்ட விலங் கான ஜாதி உணர்வை, ஜாதியைஒழிப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் நடைபெறும் என்னும் தமிழர் தலைவர் அறிவிப்பிற்கு இணங்க இணைந்து பணியாற்றுவது, இலக்கிய வழியாக இன்னும் தீவிரமாக பணியாற்றுவது என்று தீர்மானிக்கிறது.
5. சென்ற ஆண்டு வெளிவந்த சிறந்த சிறுகதை நூல், சிறந்த கவிதை நூல், சிறந்த நாவல், சிறந்த சிறுவர் நூல், சிறந்த கட்டுரை நூல் போன்றவற்றுக்கு பரிசு அளிப்பது... பரிசுத் தொகையை அளிப்பவரின் பெயரில் நன்கொடையாக பெறுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
6. நூலாக்கம் குறித்து பயிற்சியளிப்பது, விடுதலை, உண்மை, Tha Modern Rotionalist, தமிழ், ஆங்கிலக் கட்டுரை வாசகர்களை கட்டுரை எழுதி அனுப்புமாறு ஊக்கப்படுத்தலாம்.
நிறைவாக 'தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளும் அவரது உரையுமே என்னை இயக்கத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. நான் எழுதுவதற்கு அடிப்படை ஆசிரியர் அவர்களின் எழுத்துகளே. தந்தை பெரியார் கொள்கை வழி நின்று நானும் என் இணையர் இளங் கோவும் குடும்பத்தினரும் வாழ்கிறோம். பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம் மேலும் சிறப்பாக நடைபெற எனது பங்களிப் பைத் தொடர்ந்து அளிப்பேன் "என்று கூறி திருப்பத்தூர் ம. கவிதா வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். மதிய உணவு எல்லாத்தோழர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக ஆக்கபூர்வமான, அடுத்த வேலையை உடனே செய்ய வேண்டும் என்னும் உந்துதலை, உணர்ச்சியை அளிக்கும் கலந்துரையாடலாக இக்கூட்டம் அமைந்தது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நன்கொடை அளித்தவர்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் ரூ. 1000
அருப்புக்கோட்டை ந. ஆனந்தம் ரூ. 1000
போட்டோ இராதா மதுரை ரூ. 1000
சன் பாலசுப்பிரமணியம் ரூ. 500
வாடிப்பட்டி தனபாலன் ரூ. 1500
இரா. தமிழ்செல்வன் ரூ. 1000
கோ. ஒளிவண்ணன் ரூ. 1000
விருது நகர் நல்லதம்பி ரூ. 1000
குடந்தை சேதுராமன் ரூ. 500
மாணிக்கம் சென்னை ரூ. 500
ம. கவிதா ரூ. 1000
இசை இன்பன் ரூ. 1000
செல்ல கிருட்டிணன் ரூ. 1000
சுப. முருகானந்தம் ரூ. 1000
வா. நேரு ரூ. 1000
செல்வம், திண்டுக்கல் ரூ. 500
மொத்தம் ரூ. 14,500
தொகுப்பு: வா.நேரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக