ஞாயிறு, 5 மார்ச், 2023

திராவிடர் கழக இளைஞரணியின் அடுக்கடுக்கான வேலைத் திட்டங்கள்!

 

 * ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள்

*சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள்!

திருச்சி, ஜன.23  ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் களப் பணிகள்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு - குருதிக்கொடை, உடற்கொடை உள்ளிட்ட தொண்டறப் பணிகள் உள்பட திராவிடர் கழக இளைஞரணியின் அடுக்கடுக்கான வேலைத் திட்டங்கள் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.

திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று (22.1.2023) மாநிலம் தழுவிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கழக இளைஞரணியின் வேலைத் திட்டங்கள் வருமாறு:

1.  ஜாதி - தீண்டாமை ஒழிப்பு 

தீண்டாமை ஒழிப்பும் ஜாதி - ஒழிப்பும் நமது கண்ணான கொள்கையாகும். நாட்டின் எந்த மூலையில் ஜாதி -தீண்டாமை கொடுமைகள் நடைபெற்றாலும் கழக இளைஞரணி தோழர்கள் அங்கு விரைந்து சென்று தகவல்களை திரட்டி, தலைமை கழகத்திற்கு அளிப்பது.  தீண்டாமை - ஜாதி கொடுமைகளை விளக்கி, அதனை ஒழித்திடும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழக இளைஞரணி தோழர்கள் சுவர் விளம்பரம் எழுதுதல், துண்டறிக்கை வழங்குதல், போன்ற களப்பணிகளில் ஈடுபடுவது. ஒத்தக் கருத்து உடையவர்களை அழைத்து பிரச்சாரக் கூட்டங்களை நடத்துதல்.

2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு 

சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் சுற்றுச்சூழல் தொடர்பான நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளை கழக இளைஞர் அணி சார்பில் நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

3. குருதிக் கொடை, விழிக்கொடை, உடற்கொடை 

கழக இளைஞரணி சார்பில் குருதிக்கொடை, விழிக்கொடை, உடற்கொடை வழங்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். இதன் தொடக்கமாக கழக இளைஞரணி தோழர்கள் உடற்கொடை வழங்குவதற்கான விண்ணப்பத்தினை அளித்தல்.

4. மாலை நேர வகுப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் படிப்பகங்களை கழக இளைஞரணி சார்பில் பராமரித்து, பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் வகுப்புகளை நடத்துதல்.

5. உடற்பயிற்சி கழகம் 

கழக இளைஞரணி சார்பில் வாய்ப்புள்ள இடங்களில் பெரியார் உடற்பயிற்சி கழகம் ஏற்படுத்துதல். அதன் மூலம் கழகத்திற்கு புதிய இளைஞர்களை இணைத்தல்.

6. மருத்துவ - சட்ட முகாம்கள் 

கழக இளைஞரணி சார்பில் மருத்துவர் அணி மற்றும் வழக்குரைஞரணி பொறுப்பாளர்களை அழைத்து இலவச மருத்துவ முகாம், சட்ட ஆலோசனை முகாம்களை நடத்துதல்.

7. போலிச் சாமியர்களின் முகத்திரை கிழித்தல்

போலி சாமியார்கள் மக்களை மூடர்களாக்கும் பணி களை தொடர்ந்து செய்து வரும் நிலையில், அதனை அடையாளம் கண்டு அங்கெல்லாம் மூடநம்பிக்கை பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக  மந்திரமா -தந்திரமா போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.

8. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்வுகள்

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க கூடிய வகையில் இளைஞர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

9. குடும்ப விழாக்களை நடத்துதல்

கழக குடும்ப விழாக்களை நடத்துதல். இளைஞரணி தோழர்கள் கழக நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது குடும்பத்தில் இருக்கக் கூடியவர்களை அழைத்து வர வேண்டும்.

10. சமூகவலைதள பெரியாரிய செயல்பாட்டாளர்களை உறுப்பினராக்குதல் - தொண்டு நிறுவனமாக செயல்படுதல்

சமூகவலைதளங்களில் பெரியார் கொள்கை பற்றா ளர்களாக செயல்படும்  இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை கழக உறுப்பினராக்குதல்.

உள்ளூர் முக்கிய பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு மக்களுக்குத் தொண்டு நிறுவனமாக செயல்படுதல்.

பொங்கல் விழாவை ஊர்ப்பொது விழாவாக மாற்றி, பல போட்டிகளை நடத்தி ஊர்மக்களைப் பங்கேற்க செய்து, கழக முத்திரையைப் பொறித்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக