சனி, 18 மார்ச், 2023

சென்னை புத்தகக்காட்சியில் தமிழர் தலைவர் வாசகப்பார்வையாளர்கள் உற்சாகம்

 


சென்னை, ஜன. 19- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டு 6.1.2023 முதல் 22.1.2023 முடிய நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக தமிழ்நாடு அரசின் சார்பில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எஃப் 18 அரங்கில் இயக்க வெளியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரங்கில் தந்தை பெரியார் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு அனைவரின் கவனத்தையும், கருத்தையும் கவர்ந்துகொண்டிருக்கிறது. வாசகப்பார்வையாளர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் தந்தைபெரியார் உருவச்சிலை அருகில் செல்ஃபி படம் எடுத்து மகிழ்கின்றனர்.

தந்தை பெரியார் பேச்சுகள், எழுத்தாக்கங்கள் தொகுப்புகளாக பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இயக்க வெளியீடுகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. அழகிய முறையில் அச்சிடப்பட்டு முற்றிலும் மலிவுப்பதிப்புகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. தந்தை பெரியார் கருத்துகளின் கருவூலங்களாக கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி, பகுத்தறிவு, கடவுள் - புராணங்கள், திருக்குறள்-வள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியங்களாக தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தந்தைபெரியார் குடிஅரசு ஏட்டில் எழுதிய கட்டுரைகள் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளவேண்டிய கொள்கை விளக்கங்களாக உள்ளன.  பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் 1925 ஆம் ஆண்டு தொடக்கம் 1949 வரையிலான தொகுப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

 தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் இரா.நெடுஞ்செழியன், இனமான பேராசிரியர் க.அன்பழகன், ம.சிங்காரவேலர், பேராசிரியர் இராமநாதன், கவிஞர் கலி.பூங்குன்றன், மஞ்சை வசந்தன்,கு.வெ.கி.ஆசான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், பகுத்தறிவாளர்களின் புத்தகங்கள் இயக்க வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. 

அண்ணல் அம்பேத்கர், சாக்ரட்டீஸ், இங்கர்சால், வால்டேர்,, பெட்ரன்ட் ரசல் உள்ளிட்ட பன்னாட்டு அறிஞர்கள், பகுத்தறிவாளர்களின் புத்தகங்கள், ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய தி காட் டில்யூஷன் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்க நூலாக கடவுள் ஒரு பொய் நம்பிக்கை மற்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளில் தமிழர் தலைவர் ஆற்றிய சிறப்பு சொற் பொழிவுகள், பேட்டிகள், அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் மலிவுப்பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

கீதையின் மறுபக்கம் (ஆய்வு நூல்), வாழ்வியல் சிந்தனைகள் (16 தொகுதிகள்),  பெண் ஏன் அடிமையானாள்?, மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி, இனிவரும் உலகம், சித்திரபுத்திரன் கட்டுரைகள், அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துகள், பெரியாரியல், சமூகநீதி, வகுபபுரிமை வரலாறு, திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிட இயக்க வரலாறு என அள்ள அள்ளக் குறையாத கருத்துக் கரு வூலங்களாக இயக்க வெளியீடுகள் எஃப் 18 அரங்கில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவன அரங்கில் தமிழர் தலைவர்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 16.1.2023 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கில் வாசகப்பார்வையாளர்களை சந்தித்தார். பலரும் பெரியார் பிஞ்சுகளுடன் குடும்பம் குடும்பமாக இயக்க வெளியீடுகளை வாங்கியதுடன், தமிழர்தலைவரிடம் கையொப்பம் பெற்று மகிழ்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரிடமும் நலனை விசாரித்து, பிள்ளைகளிடம் நன்கு படிக்குமாறு வாழ்த்து தெரிவித் தார்.

தமிழர் தலைவர் வருகையின் போது தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவருடன் அமைச்சர் உரையாடினார்.

புத்தகக்காட்சியில் தமிழர் தலைவர் வருகை அறிந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகப் பார்வையாளர்கள் அவருடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக