செவ்வாய், 12 ஜனவரி, 2021

ஈழ விடுதலை தலைவர்களை நாடு கடத்தியதற்காக ரயில் மறியல்

தமிழ் ஈழ விடுதலை ஆதரவு அமைப்பின் (‘டெசோ’)வின் அவசரக் கூட்டம் 25.08.1985 அன்று கலைஞர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் என்னுடன், பேராசிரியர் அன்பழகன், ‘முரசொலி’ மாறன் எம்.பி., சி.டி.தண்டபாணி, வை.கோபால்சாமி எம்.பி., செ.கந்தப்பன், டி.ஆர்.பாலு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தமிழர் அய்க்கிய முன்னணி பொதுச் செயலாளர் அமிர்தலிங்கமும் இதில் பார்வையாளராகக் கலந்துகொண்டனர். கூட்டத்தின் பின்பு,    இலங்கையிலிருந்து வந்து தமிழ்நாட்டில் புகலிடம் தேடி, தமிழ்ப் போராளிகட்கும், தமிழ்ப் பிரதிநிதிகட்கும் தோன்றாத் துணையாக இருந்த டாக்டர் பாலசிங்கத்தையும் தந்தை செல்வாவின் அருமைச் செல்வமும் ஈழத்தின் மனித உரிமை அமைப்பின் தலைவருமான தோழர் சந்திரகாசனையும் டில்லி அரசு, தமிழக அரசின் ஒப்புதலோடு நாடு கடத்தியது கொடுமையிலும் கொடுமையாகும்!

இந்து ஏட்டில் புதுடெல்லி நிருபர் திரு.ஜி.கே.ரெட்டி இந்த நாடு கடத்தல் என்பது மனிதாபிமான முற்றிலும் விரோதமான செயல். இப்படி ஒரு யோசனையைப் பிரதமர் திரு.ராஜீவ்காந்திக்கு எந்த ‘பிரகஸ்பதி’ சொல்லிக் கொடுத்தாரோ? அதன் விளைவு, “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாகிவிட்டதே’’ என்று  எழுதினார். இதனைக் சுட்டிக்காட்டி “நாடு கடத்தியது கொடுமை!’’ என்ற தலைப்பில் 28.08.1985 அன்று ‘விடுதலை’யில் வேதனையை வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்த அறிக்கையை எழுதி முடிக்கும்போது, திரு.சந்திரகாசன் பம்பாய் வந்து விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார் (Detained) என்று செய்தி வந்துவிட்டது. நாடுகடத்தப்பட்ட நாள்முதல் அந்நாள் வரை உணவு உட்கொல்லாமல் உள்ள அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாகுமோ என்ற கவலை ஏற்பட்டது! இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 30ஆம் தேதி ரயில் ஓடவில்லை என்பதை அமைதி வழியில் டில்லிக்கு உணர்த்திக் கட்டுப்பாட்டுடன் காரியமாற்றுவோம் என்று அந்த அறிக்கையின் மூலமாக கேட்டுக்கொண்டேன்.

30.08.1985 அன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் உணர்ச்சிபூர்வமாக கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறை சென்றனர். வட சென்னை மாவட்டச் செயலாளர் சே.ஏழுமலை தமது மகன் திருமணம் அடுத்த 15 நாட்கள் உள்ள நிலையில் கைதாகி சிறை சென்றனர்.

பேரணியின் இறுதியில் தேனாம்பேட்டை “அன்பகத்திற்-கு’’ எதிரே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன எழுச்சி முழக்கமிட்டு உரையாற்றினேன். ஈழத்தில் எங்கள் தமிழினம் வெட்டிச் சாய்க்கப்படும் போது, எங்கள் சகோதரிகள் கற்பழிக்கப்படும் போது, சொத்துகள் சூறையாடப்படும்போது மான உணர்ச்சியுள்ள தமிழர்கள் எல்லாம் புலிகளாக மாறினார்கள். அவர்களின் தாகம்தாம் ‘தமிழ் ஈழம்’ என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தமிழ் ஈழப் போராளிகளின் தலைவர்களை மத்திய அரசு நாடு கடத்தியிருப்பதன் மூலம் மகத்தான ‘கறை’யை ஏற்படுத்திவிட்டது. இந்தக் ‘கறை’ அடுத்த சில நாட்களிலேயே துடைக்கப்பட்டாக வேண்டும் என்பதை இங்கே திரண்டிருக்கும் கூட்டத்தின் சார்பாக மட்டுமல்ல. இங்கே வருவதற்கு இயலாத நிலையில் உணர்ச்சி கொந்தளிப்போடு இருக்கும் லட்சோபலட்சம் தமிழர்களின் சார்பில் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் பகுதி

- உண்மை இதழ், 1-15.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக