செவ்வாய், 12 ஜனவரி, 2021

கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு - 1985

கலைஞர் கழக மாநாட்டுக்கு வருகை தந்தபோது, பெரியார் தற்காப்பு இளைஞர் அணியினர் அணிவகுப்பு மரியாதையுடன் மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த படம்; பொதுச்செயலாளர் அவர்களும் உடன் வருகிறார். (13.7.1985)


மாநாட்டில் நடந்த படத்திறப்புகள் (1) புரட்சிக்கவிஞர் படத்தை பேராசிரியர் ராமநாதனும் (2) நடிகவேல் எம்.ஆர்.ராதா படத்தை கவிஞர் முகவை ராஜமாணிக்கமும் (3) ஜாதி ஒழிப்பு வீரர்கள் படத்தை பிரச்சார அணி செயலாளர் செல்வேந்திரனும் (4) தமிழ் ஈழம், படத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தனும் (5) ஆஞ்சா நெஞ்சன் அழகிரி படத்தை - எம்.கே.டி. சுப்பிரமணியமும் (காமராசர் காங்கிரஸ் கட்சி செயலாளர்) திறந்து வைத்தபோது எடுத்த படம்

05.07.1985 அன்று சைதாப்-பேட்டை தேரடி திடலில் நடந்த மாநாட்டு விளக்க பொதுக்-கூட்டத்தில் கலந்து-கொண்டு,  குஜராத் முதல்வர் சோலங்கி சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக நின்றதை உணர்ச்சியோடு சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.

 

 

 

“குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் சோலங்கி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ‘வீக்’ (Week) வாரப் பத்திரிகை சோலங்கியைப் பற்றி எழுதும்போது ‘Solanki was following foot steps of Periyar’  என்று எழுதியது. (சோலங்கி பெரியார் பாதையை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்) குஜராத் காந்தியார் பிறந்த மாநிலம். அங்கே இப்போது காந்தியார் வெளியே போய்விட்டார், பெரியார் புகுந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் செய்ததைப் போல பார்ப்பனரே இல்லாத ஓர் அமைச்சரவை அமைத்துக் காட்டியிருப்பவர் சோலங்கி. அது மட்டுமல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே அந்த மாநிலத்தின் போலீஸ் அமைச்சராக அவர் நியமித்திருக்கிறார்.

 

அவரைப் பணியை விட்டு, பதவியை விட்டு அனுப்ப வேண்டும் என்று சொல்லக்கூடிய உரிமை ஓட்டுப் போட்ட மக்களுக்குத்தான் உண்டு! ஆனால், பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் அவரை விரட்டப் பார்க்கிறார்கள். இதேபோன்று அநியாயங்கள் பார்ப்பன _ பனியா ஆளும் வர்க்கம் நினைத்ததைச் செய்கிறது என்று கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.

13, 14.07.1985 ஆகிய தேதிகளில் கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு துவங்குவதற்கு முதல் நாளே இதன் வெற்றிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து-விட்டன. நமது கழகக் குடும்பங்கள் தமிழ் மான உணர்வு படைத்தோர் அனைவரும் கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு வந்து திரள வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்-கிணங்க, சென்னைக் கருங்கடல் என்று கண்டோர் வியக்கத்தக்க வண்ணமும் தமிழுணர்வு உள்ள அத்துணைப் பேர்களது சங்கமக் கடல். அந்தக் கருங்கடல் பெரியார் திடல் முழுவதும் நிரம்பி வழிந்ததால் பொதுவானவர்கள் பலரும் பாராட்டினார்கள், வியந்தனர், நம்பிக்கை கொண்டனர்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் சீருடை அணிந்த தற்காப்புப் படை அணிவகுத்து இருந்தது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர், பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கருநாடக மாநில தி.க. மகளிர் அணி அமைப்பாளர் சொர்ணாம்மாள் எம்.ஏ. அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் வருகை தந்து மாநாட்டில் கலந்து-கொண்டார். மாநாட்டில் அன்னை நாகம்மையார் உருவப் படத்தை ஈரோடு சுப்பையாவும், அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்தை காமராஜ் காங்கிரஸ் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியமும், புரட்சிக்கவிஞர் படத்தை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் இராமநாதனும், நடிகவேள் எம்.ஆர்.இராதா படத்தை கவிஞர் முகவை இராசமாணிக்கமும், அன்னை மணியம்மையார் படத்தை வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதனும், சுதந்திர தமிழ் ஈழ படத்தை கவிஞர் காசி.ஆனந்தனும், பேரறிஞர் அண்ணா படத்தை மதுரை ஆதீனகர்த்தரும் திறந்து வைத்து உரையாற்றினர்.

மாநாட்டில் தாலி அகற்றுதல் நிகழ்ச்சியும், வேம்பையன் அவர்கள் தமது துணைவியார்  சுசிலா அணிந்திருந்த பவுன் தாலியை கழற்றி, தமிழன் குரலாக ஒலிக்கும் விடுதலையின் வளர்ச்சிக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்கள். அதுபோல மு.கங்காதரன் அவர்களின் துணைவியார் அவர்களும் தமது தாலியை அகற்றிக் கொண்டார்.

தொடர்ந்து நான் மேடையில் ஒரு குழந்தைக்கு ‘விடுதலை மணி’ என்று பெயர் சூட்டினேன். தொடர்ந்து லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழினத் தொண்டருமான வீரசிங்கம், தோழர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு பயனாடை அணிவித்துப் பாராட்டினோம்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் அவர்களும், மேடையில் மூத்த உறுப்பினர்களுக்கு இயக்கத்தின் மத்திய நிர்வாகக் குழு மூத்த உறுப்பினர்களாக இருப்பவர்களும், வழிகாட்டியாக இருப்பவர்களுமான இயக்க வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் தூக்குமேடை நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் மாநாட்டில் தலைமை உரையை நிகழ்த்தினேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு ஆரியர் கூத்தாடி மகிழ்ந்து, சிற்சில இடங்களில் பாயாசம் சாப்பிட்டவர்கள் உண்டு. பெரியார் என்ற மாமலை சாய்ந்துவிட்டது. இனிமேல் நாம் அச்சமின்றி நாம் ஆதிக்கபுரியில் அமர்ந்து ஆட்சி செலுத்தலாம் என்று அவசரக் கணக்கு போட்டது. அந்தக் கணக்கு ஒரு தப்புக் கணக்கு என்பதை இன்று நாடே கண்டு ஒப்புக்-கொள்ளும் நிலை ஏற்பட்டது. தான் வாழ்ந்த காலத்தில் தமிழகத்திலும், ஒரு சில தென்னாட்டு மாநிலங்களில் மட்டுமே தந்தை பெரியார் வாழ்ந்தார் என்ற நிலைமை மாறி இப்போது தந்தை பெரியார் வடமாநிலங்களுக்கும் சென்றுவிட்டார்.

“தந்தை பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்’’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்கள் மறைந்த உண்மை அகிலத்திற்கெல்லாம் புலனாகிறது.

தந்தை பெரியார் அவர்களுடைய வருமுன்னர் சொல்லும் அறிவும், வருமுன்னர்க் காக்கும் செயலும் அவரை உலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் சிந்தனையாளராக உயர்த்திக் காட்டுகிறது. இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ்-காரர்கள் இந்த நாட்டில் இருக்கும்போதே ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் இனி எதிர்காலத்தில் ஜனநாயகம் (Democracy) இந்த நாட்டில் மலராது, பார்ப்பன நாயகம் (Brahminocracy) தான் வரும் என்றார். அதைத்தானே கடந்த காலத்திலும் இன்றும் நாம் கண்டு வருகிறோம் என்று எடுத்துக்காட்டி உரையாற்றினேன்.

முதல் நாள் மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தில் இதுவரையிலே அய்ம்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் வந்திருக்கின்றன என்றாலும்கூட, முதல் திருத்தம் தந்தை பெரியாரால், அண்ணாவால், நாம் நடத்திய போராட்டத்தால்தான் உருவாக்கப்பட்டது என்கிற வரலாற்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் சமுதாயத்திலே இடஒதுக்கீடு தேவை. அது எந்த அடிப்படையிலே என்றால் பொருளாதார அடிப்படையிலே அல்ல, சமூக அடிப்படையில் கல்வி அடிப்படையில் Socially and Educationally என்ற சொற்றொடரோடு அந்த அரசியல் சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சட்டத்திலே முதன்முதலாக ஏறியதை மறந்துவிடக் கூடாது’’ என்று கூறினார்கள்.

தூக்குமேடை நாடகத்தில் எம்.ஆர்.ராதாரவி தோன்றும்

ஒரு காட்சி (13.7.1985 மாநாட்டில்)

முதல் நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அரசு பணிகளில் மகளிர்க்கு 50 சதவீத இடஒதுக்கீடு, இளைய சமுதாயமே! ஆபாச போதைகளிலிருந்து விடுபட மாற்று ஏற்பாடுகள், காலில் விழும் பழக்கத்தை ஒழித்திடுக, தீக்குளிப்பை கைவிடுக, ஜாதி மதக் கலவரங்களை ஒடுக்க நடவடிக்கை, ஜாதி ஒழிய கலப்பு மணம், இந்தி திணிப்பை ஒழிக்கப் போராட்டம், மாநிலப் பட்டியலில் கல்வி உள்ளிட்ட தீர்மானங்கள் அவற்றுள் அடங்கும்.

இரண்டாவது நாள் நடைபெற்ற இடஒதுக்கீடு காப்பு மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு 18 சதவீதத்திற்கும் அதிகமாக தருக, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் குறையாது காப்பீர், மண்டல் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்-படுத்தும். இடஒதுக்கீடு சட்டத்தை மேலும் விரிவுபடுத்துவீர் உள்ளிட்ட தீர்மானங்-களிலும் ஜாதி சான்றிதழ், மாணவருக்கு உதவித் தொகை, மாணவர் வருகைப் பதிவு, உள்ளிட்டவைகளில் தமிழக அரசு மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் இம்மாநாடு மிகுந்த பலன் தந்த மாநாடாகும்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் சில பகுதிகள்

உண்மை இதழ், 16-31.12.18


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக