செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு சிங்காரமா - ஆரிய ஆட்சியின் அகங்காரமா?


செத்த மொழி சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா?



சென்னை, டிச.7 செத்த மொழியாம் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்புவதைக் கண்டித்து சென்னை தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலையம் முன்பு இன்று (7.12.2020) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்ட கழகத் தோழர்கள் அண்ணா சாலை, பெரியார் பாலம் சிம்சன் அருகே  தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


‘‘அனைத்து மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் தூர்தர்ஷன் என்ற அரசு தொலைக்காட்சியில், கேட்பாரற்ற, கேட்டாலும் புரிவார் இல்லாத, நடைமுறையில் தேவை சிறிதுமற்ற செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்தை தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி - திட்டமிட்டே திணிப்பது ஜனநாயகம் ஆகாது; பச்சைப் பாசிச முறையாகும்!


22 மொழிகளில் இது வெகுமக்களுக்குச் சம்பந்தமில்லாத ‘‘தேவ பாஷை'' என்ற மகுடம் சூட்டிக்கொண்ட ஒரு மொழி.


இந்தித் திணிப்பைவிட மிக மோசமான திணிப்பு. மற்ற 21 மொழிகளை ஆட்சி மொழியாக்கி அந்தந்த வட்டங்கள், மாநிலங்களில் அந்தந்த மொழிகளில், ஆட்சிப் பணியில் - மத்திய அரசு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுவதே அனை வருக்கும் மனநிறைவளிக்கும் முறை!


தேவையின்றித் திணிக்கும் சமஸ்கிருத திணிப்பைத் திரும்பப் பெற வேண்டும் - நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டி மத்திய அரசு இதுபோன்ற திணிப்புகளால் அதற்கு வெடி வைத்துத் தகர்த்திடும் முயற்சிக்கு முன்னுரை எழுதுகிறது!


வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு முன்பு திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்'' என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 30.11.2020 அன்று அறிக்கை விடுத்தார்.


அதன்படி இன்று (7.12.2020) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் மாலை அணிவித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற் றினர்.


கழகத் தோழர்கள் எழுப்பிய ஒலி முழக்கங்கள்


‘‘மத்திய அரசே, பி.ஜே.பி. அரசே!


திணிக்காதே... திணிக்காதே,


சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!


செத்த மொழிக்குச் சிங்காரமா?


ஆரிய ஆட்சியின் அகங்காரமா?


அனுமதியோம், அனுமதியோம்


பொதிகைத் தொலைக்காட்சியில்


சமஸ்கிருதத்தில் செய்தியா?


அனுமதியோம், அனுமதியோம்!


செம்மொழித் தமிழ் என்றால் இளக்காரமா?


செத்த மொழிக்குச் சிங்காரமா?


அரசுத் தொலைக்காட்சியா?


ஆர்.எஸ்.எஸ்.சின் தொலைக்காட்சியா?


போராடுவோம், போராடுவோம்


மொழியுரிமைக்குப் போராடுவோம்!


கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்


மொழித் திணிப்பைக் கண்டிக்கிறோம்!


எட்டாம் அட்டவணையில் 22 மொழிகள்


ஆதிக்கம் செலுத்துவது இரண்டே


மொழிகளா?


சமஸ்கிருதம் தேவ பாஷையா?


தமிழ் உங்களுக்கு நீச பாஷையா?


எங்கள் நாடு தமிழ்நாடு!


மொழித் திணிப்பைப் பொறுக்காது!


இந்தியையும், சமஸ்கிருதத்தையும்


எங்கள் நாடு ஏற்காது!


எச்சரிக்கை, எச்சரிக்கை


மத்திய அரசுக்கு எச்சரிக்கை!


போராடுவோம், வெற்றி பெறுவோம்!


வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!


நிதியில்லை, நிதியில்லை


செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு


நிதியில்லை, நிதியில்லை!


பல்லாயிரம் கோடி ரூபாய்களை


செத்த மொழிக்குக் கொட்டி அழுவதா?


அனுமதியோம், அனுமதியோம்'' போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


பின்னர் ஊர்வலமாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு பெரியார் பாலம்  அருகே தோழர்களை காவல்துறையினர் கைது செய்து புதுப்பேட்டை வீரபத்திரன் தெருவிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் வைத்துள்ளனர்.


திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்புரையாற்றினார்.


திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்  வழக்குரைஞர் பா.மணியம்மை, திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதினி, மண்டல மாணவர் கழக செயலாளர் வேலவன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத் திற்கு முன்னிலை வகித்தனர்.


மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன் நன்றி கூறினார்.