செவ்வாய், 12 ஜனவரி, 2021

இந்தி எழுத்து அழிப்பு ரயில் மறியல்

மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம், 22.09.1985 அன்று நடைபெற்றது. நான் 18ஆம் தேதி முதல் ரயில் பயணம் மேற்கொண்டு 80க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்களில் கழகத் தோழர்களை சந்தித்து போராட்ட வீரர்கள் பட்டியலைப் பெற்றுக்-கொண்டு 21.09.1985 அன்று சென்னை திரும்பினேன்.

22.09.1985 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் என் தலைமையில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு தார்சட்டி அளித்து பொன்னாடை அணிவித்து பெரியார் திடலிலிருந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் டாக்டர் மா.நன்னன் தலைமையிலும், திருச்சியில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி தலைமையிலும், தஞ்சையில் பிரச்சார செயலாளர் செல்வேந்திரன் தலைமையிலும், கோவையில் இளைஞரணி செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமையிலும், கடலூரில் தொழிலாளர் அணி செயலாளர் வழக்கறிஞர் தி.இராமதாஸ் தலைமையிலும், ஈரோட்டில் அமைப்புச் செயலாளர் நா.சேதுபதி தலைமையிலும், நெல்¬லையில் அமைப்புச் செயலாளர் டி.ஏ.தியாகராசன் தலைமையிலும், திருவாரூரில் விவசாய அணிச் செயலாளர் சு.சாந்தன் தலைமையிலும், மதுரையில் தென் மாவட்டங்கள் பிரச்சார குழு தலைவர் பே.தேவசகாயம் தலைமையிலும், ஜோலார்-பேட்டையில் மகளிர் அணிச் செயலாளர் பார்வதி தலைமையிலும் இந்தி அழிப்புப் போராட்டம் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் நடைபெற்றது. கழக துணைப் பொதுச்செயலாளர் கோ.சாமிதுரை அவர்களும், தலைமை நிலையச் செயலாளர் துரைசாமியும் வெளியில் இருந்து கழகப் பணிகளை ஆற்றினர்.


தொடர்வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்து நான் எழும்பூரில் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். இந்தியை அழிக்கச் சென்ற கழகத் தோழர்கள் மற்றும் தோழியர்கள் 5000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கிளர்ச்சியில் 3 தம்பதிகள் சண்முகநாதன் அவரது துணைவியார் இராமலக்குமி, மதுரை மாவட்டத் தலைவர் தேவசகாயம், அவரது துணைவியார் அன்னத் தாயம்மையார், திருப்பத்தூர் ஏ.டி.கோபால் அவரது துணைவியார் சந்திரா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையேகினர்.

கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆனந்த விகடன்கள் பொறுமியது! ஆத்திரத்திலும் அவசர கோலத்திலும் தலையங்கத்தில் திராவிடர் கழகத்தின் மீது கண்டனக் கணைகளைப் பாய விட்டிருந்தது!

“இந்தியை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இன்று முளைத்திருந்தாலும்கூட இந்த சமயத்தில் அதற்கான கிளர்ச்சிகளுக்குத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு ஒருபோதும் கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக நுழைப்பதற்கே வழி இல்லை’’ என்றும் எழுதியிருக்கிறது! என்று ஆனந்த விகடன் அன்று எழுதியது.

போராட்டத்தில் ஈடுபட்டு போராட் வீரர்கட்கும் வீராங்கனைகட்கும் நன்றி தெரிவித்து 25.09.1985 அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.1.19 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக