வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கருப்புச் சட்டைகள் இருக்கும் வரை காவிச் சட்டைகள் உள்ளே நுழைய முடியாது

தந்தை பெரியார் பிறந்த நாளில் பேரா. சுப. வீரபாண்டியன் எச்சரிக்கை

சென்னை, செப்.21-  கருப்புச் சட்டைகள் இங்கே உள்ள வரை காவிச் சட்டைகள் இங்கே உள்ளே வர முடியாது என்றார் திராவிட இயக்கத் தமிழர் பேரவைச் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

17.9.2017 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஆசிரியர் அய்யா அவர்களே, கூட்டத்தினுடைய தலைவர் அருமை நண்பர் வில்வநாதன் அவர்களே, உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வருகை தந்து கொண்டிருக்கின்ற எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புக்குரிய அன்புராஜ் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கின்ற அருமைத் தோழர்களே, என்னோடு வருகை தந்திருக்கின்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மண்டலப் பொறுப்பாளர் தோழர் மாறன் அவர்களே, பெரும் திரளாகக் கூடியிருக்கின்ற பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, பத்திரிகை யாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

யார் ஆணவத்தோடு அய்யாவைப்பற்றி பேசினாரோ, அவருக்கு வெறும் 52 வாக்குகள்!

நாம் பெரியார் அவர்களின் பிறந்த நாளை இன்று தான் கொண்டாடுகிறோம். ஆனால், தமிழகம் நேற்றே கொண்டாடி விட்டது. சாரண - சாரணியர்  தலைவர் தேர்தல் முடிவில், யார் ஆணவத்தோடு அய்யாவைப்பற்றி பேசினாரோ, அவருக்கு 52 வாக்குகள். அதுவே அதிகம் தான். 52 வாக்குகளை மட்டுமே தந்து, தமிழகம் பெரியார் பிறந்த நாள் விழாவை நேற்றே அல்லவா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது என்று எண்ணி மகிழ்கிறேன்.

ஆணவக்காரன்மீது

மக்கள் கொண்டிருக்கிற வெறுப்பினாலும்...

என் சமூக வலைதளத்திலே கூட நான் இப்படி பதிவிட்டிருந்தேன்.

‘‘அடுத்தவர் தோல்வியில் மகிழ்வது நம்முடைய இயல்பில்லை; அடுத்தவன் சாவைக் கொண்டாடுகிற தீபாவளி அவர்கள் பண்டிகைதானே தவிர, அடுத்த வனுடைய தோல்வியில் மகிழ்வது நம்முடைய இயல்பில்லை - ஆனாலும், இந்த முறை என்னை மன்னித்துவிடுங்கள், இந்தத் தோல்வியில் என்னால் மகிழாமல் இருக்கமுடியவில்லை’’ என்று பதிவிட்டிருந்தேன்.

இதுவரை இல்லாத அளவிற்கு என்னுடைய பதிவிற்கு மிகக்கூடுதலான வரவேற்பு அதற்குத்தான் கிடைத்திருக்கிறது என்பது, அய்யா பெரியார் அவர்கள்மீது பற்றினால் மட்டுமல்ல, அந்த ஆணவக்காரன்மீது மக்கள் கொண்டிருக்கிற வெறுப்பினாலும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

அதற்கு விடை எழுதியிருக்கிற, அவர் கட்சியைச் சார்ந்த ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு  எனக்கு விடை சொல்ல நேரமில்லை. இந்த மேடையில் விடை சொல்லிவிடலாம்.

இந்த மண்ணுக்கு உரிமை இருக்கிறது - கொண்டாடவேண்டிய கடமையும் இருக்கிறது

அவர் கேட்டிருக்கின்ற கேள்வி, ‘‘இறந்துபோன பெரியாருக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்களே, இது சரிதானா?" என்று கேட்டிருக்கிறார்.

இல்லாத கடவுள்களுக்கெல்லாம் நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறபோது, ராமநவமிக்கும், கோகுலாஷ்ட மிக்கும் என்ன பொருள்? இல்லாத கடவுள்களுக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகிறபொழுது, இந்த மண்ணில் வாழ்ந்து, இந்த மண்ணின் மக்களுக்காகவே வாழ்ந்து, 95 வயதிலும் நம் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும் என்பதற்காக மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு, ஊர் ஊராகத் தொண்டாற்றிய எங்கள் அய்யாவிற்கு, பிறந்த நாள் விழா அல்ல - ஒவ்வொரு நாளும் விழா கொண்டாடுவதற்கு இந்த மண்ணுக்கு உரிமை இருக்கிறது -

கொண்டாடவேண்டிய கடமையும் இருக்கிறது என்பதை மட்டும் நான் பதிவு செய்கிறேன்.

இன்றைக்கு வந்துகொண்டிருக்கின்ற பல்வேறு விதமான நெருக்கடிகள், நம்முடைய கவிஞர் பூங்குன்றன் அவர்கள் பேசுகிறபொழுது, சிலவற்றைத் தொட்டுக் காட்டினார். நீதிமன்றங்கள் எப்படி இருக்கின்றன என்று சொன்னார். இப்போது வருகிறபொழுது ஒரு செய்தியை, நீங்களும் பார்த்திருக்கலாம். இதோ அருகிலுள்ள சேப்பாக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி - இந்தியாவிற்கும் - ஆஸ்திரேலியாவிற்கும் ஒரு நாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். அதில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் இன்றைக்கு - யாரும் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வரக்கூடாது என்று.

கருப்புச் சட்டை இருக்கின்றவரை காவிச் சட்டைகள் உள்ளே நுழைய முடியாது

ஒருவிதத்தில் நமக்கு வெற்றிதான். கருப்புச் சட்டையைப் பார்த்து இவ்வளவு பயப்படுகிறீர்களா? என்று தோன்றுகிறது. உள்ளே வந்து கருப்புச் சட்டையைக் கழற்றி, கருப்புக் கொடிபோல காட்டி விடுவார்கள் என்று அஞ்சி, கருப்புச் சட்டைப் போடக்கூடாது என்று சொல்கிறார்கள் என்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பது நமக்குத் தெரியும்.

இதே கிரிக்கெட் போட்டி வேறு மாநிலங்களில் நடை பெறுகின்றபொழுது, கருப்புச் சட்டையை அனுமதித்தவர்கள், ஏன் தமிழ்நாட்டில் மட்டும் கருப்புச் சட்டை போடக்கூடாது என்கிறார்கள் என்றால், கருப்புச் சட்டை இருக்கின்றவரை காவிச் சட்டைகள் உள்ளே நுழைய முடியாது என்கிற காரணத்தைப் புரிந்துகொண்டுதான், கருப்புச் சட்டையை கண்டாலே பயப்படுகிறார்கள். கொஞ்சம் பொறுங்கள், நாடு முழுவதும் கருப்புச் சட்டைகளோடு வலம் வருகின்ற நாள் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பெரியாரின் தேவை இப்பொழுது 
கூடுதலாகத் தேவைப்படுகிறது

நண்பர்களே! கருப்புச் சட்டைகளை அல்ல - இந்தச் சமூகம், சமூகநீதியில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கின்ற ஒரு நாள் - இன்றைக்கு நீங்கள் பார்க்கலாம், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, அய்யா பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதே, அதற்கு என்ன காரணம் என்றால், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, பெரியாரின் தேவை இப்பொழுது கூடுதலாகத் தேவைப்படுகிறது என்பதுதான்.

தந்தை பெரியாரின் தாய் மடிக்கு மறுபடியும் திரும்ப ஓடிவந்துகொண்டிருக்கிறார்கள்

சமூக வலைதளத்தில் ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் தாயைவிட்டு, பெற்றோரை விட்டு விலகிப் போய் கொஞ்சதூரம் சென்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். நிலைமை சுமூகமாக இருக்கின்ற வரையில், பிள்ளைகள் பெற்றோரைக்கூட எண்ணாமல் விளையாடிக் கொண்டி ருப்பார்கள். ஆனால், எதிரிலே ஒரு ஆபத்து வருமானால், ஒரு கலவரம் வருமானால், ஓடி வந்து தாயிடத்தில்தான் பிள்ளைகள் சேருவார்கள். அப்படித்தான் தமிழர்கள்கூட, அய்யா பெரியாரைவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காவி என்கிற ஆபத்தைப் பார்த்ததற்குப் பிறகு, தந்தை பெரியாரின் தாய் மடிக்கு மறுபடியும் திரும்ப ஓடிவந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை மிக அழகாக அந்த நண்பர் பதிவிட்டிருந்தார்.

மல்லையாவை எந்த நீதிமன்றமும் 
மிரட்டத் தயாராக இல்லை

எல்லா தளங்களிலும், நீதிமன்றம் இன்றைக்கு வெள்ளிக்கிழமை, நல்ல நாள் போய்ச் சேர்ந்துவிடுங்கள் என்று மட்டுமல்ல, ஒரு மணி நேரத்திற்குள் பணிக்குத் திரும்பவேண்டும் என்று ஆசிரியர்களும், அரசு பணியாளர் களும் மிரட்டப்படுகிறார்கள். எண்ணிப் பாருங்கள்,

9 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிப்போன மல்லையாவை எந்த நீதிமன்றமும் மிரட்டத் தயாராக இல்லை; எந்த அரசும் மிரட்டவில்லை. ஏதோ ஒரு நடுத்தட்டு வர்க்கமாக இருக்கின்ற ஆசிரியர்களை, அரசு பணியாளர்களைத்தான் நீதிமன்றங்கள் மிரட்டுகின்றன. திரும்ப உடனே பணிக்குச் செல்லவேண்டும் என்று சொல்கிற நிலையெல்லாம் இன்றைக்கு வந்திருக்கிறது. பல்வேறுவிதமான நெருக்கடிகள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து என்ன வரும்?

ஒரு போராட்டத்தை அறிவித்து நாம் நடத்திக் கொண் டிருக்கும்போதே, இன்னொரு போராட்டத்திற்கான தேவை வந்துவிடுகிறது. தி.மு. கழகத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அன்றைக்கு நான் ஒரு வரியிலேதான் நேரமின்மையால் சொல்லி முடித்தேன்.

எண்ணிப்பாருங்கள், நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்போதே, நவோதயா பள்ளிகளுடைய அச்சுறுத்தல் வருகிறது. நவோதயா எதிர்த்துப் போராடத் தொடங்குகிறபொழுதே, நிதி ஆயோக் சொல்லுகிறது, சரியாக நடைபெறாத அரசுப் பள்ளிகளையெல்லாம் தனியாரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்கிறது.
இவை எல்லாம் வெறும் கல்வித் துறை சார்ந்த அச்சுறுத்தல்களை நான் குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு துறையிலும் இப்படி அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

இப்பொழுதுதான் மேடையில், அய்யா ஆசிரியர் அவர்கள், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேல் அவர் களுடைய ஒரு சிறிய நூலை எனக்கு அளித்தார்கள். ‘விடுதலை’யில் நெ.து.சு. அவர்களுடைய அந்த உரை யினுடைய சாரத்தை, இரண்டு வரியில், நவேதாயாவைப்பற்றி வெளியிட்டிருந்தபொழுது, எத்தனை அழகாய், எத்தனை ஆழமாய், எத்தனை அழுத்தமாய் நம்முடைய கல்வியாளர் அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இன்றைக்கு மாலையில்கூட, நீங்கள் நவோதயா பள்ளியை இந்திக்காக மட்டும்தான் எதிர்க்கிறீர்களா? என்று கேட்டார்கள்.  இந்திக்காகவும் எதிர்க்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  இது தமிழகத்திற்கு வருகிற ஒரு மிகப்பெரிய வருவாய் அல்லவா!

நஞ்சு பொருளையும் உள்ளே வைத்து 
அனுப்புகிற ஒரு யுக்தி

தமிழகத்திற்கு வருகிற இந்தத் தொகையை, இந்த சலுகையை, இந்த வாய்ப்பை ஏன் நீங்கள் நழுவவிட வேண்டும்; எதற்காக தமிழகம் நழுவவிடவேண்டும் என்று கேட்டார்கள். இதைத்தான் நம்முடைய மத்திய இணை அமைச்சராக இருக்கின்ற பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இது வாய்ப்பைத் தருவதுபோல் தந்து, அந்த வாய்ப் புக்குள் நஞ்சு பொருளையும் உள்ளே வைத்து அனுப்புகிற ஒரு யுக்தி என்பதை நாங்கள் அறிவோம்.

ஆகையினால், ஒரு மாவட்டத்திற்கு 20 கோடி ரூபாய் தருகிறார்களாம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள். 640 கோடி ரூபாயை மத்திய அரசு தருகிறேன் என்கிறதே, ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.

ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால், ஒரு மாவட்டத் தில் ஒரு பள்ளியை உருவாக்கிட, 20 கோடி ரூபாயை செலவு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், ஒரு பள்ளியில் 240 மாணவர்களை மட்டும்தான் சேர்ப்பார்கள். ஒரு மாவட்டத்தில் லட்சக்கணக்கான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் 240 பேரை மட்டும் நுழைவுத் தேர்வை வைத்து இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அந்த நுழைவுத் தேர்வில் யார் வெற்றி பெறுவார்கள்? இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடையவே கிடையாது.

குடிசைகளுக்கு இடையில் 
ஏன் அரண்மனை கட்ட முயற்சிக்கிறீர்கள்?

எனவே, ஒரு குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு மட்டும் நீங்கள் இவ்வளவு கோடி ரூபாயை செலவிடவிருப்பது, நம்முடைய அய்யா நெ.து.சு. அவர்கள் சொல்லியிருப்பதுபோல, ‘‘குடிசைகளுக்கு இடையில் ஏன் அரண்மனை கட்ட முயற்சிக்கிறீர்கள்?’’ என்பதுதான்.

வேண்டுமானால், இந்தக் குடிசைகளையெல் லாம் ஓட்டு வீடுகளாக மாற்றுங்கள்; நீங்கள் தருகிற 640 கோடி ரூபாயை, தமிழகத்தினுடைய கல்வி வளர்ச்சிக்காகக் கொடுத்தால், எங்க ளுடைய ஏழைப் பிள்ளைகளும் அதனால் பயனடையமாட்டார்களா?

இன்றைக்குக் கல்விக்காக நாடு ஒதுக்குகின்ற தொகை எவ்வளவு? ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையைப் பாருங்கள் நண்பர்களே, ராணுவத்திற்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது; கல்விக்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது.

ஜிடிபி என்று சொல்கிறார்களே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அதில் .61 சதவிகிதம்தான் கல்விக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதுவே குறைவு. நான் சொல்கின்ற இந்தக் கணக்கு காங்கிரசு ஆட்சி நடந்துகொண்டிருந்த 2012-2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், .61 சதவிகிதம்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை. இன்றைக்கு மோடியினுடைய ஆட்சியில், அது மேலும் குறைக்கப்பட்டு, .49 சதவிகிம்தான் கல்விக்கு ஒதுக்கப்படுகிறது என்றால், நான் கேட்கிறேன், நீங்கள் கொடுக்கிற 640 கோடி ரூபாயை, ஒட்டுமொத்தமாக - கல்விக்காக எங்கள் எல்லாப் பிள்ளைகளுக்குமாகக் கொடுத்தால், இந்த சதவிகிதம் கூடாதா? கல்வி என்பது எல்லோருக்கும் வந்து சேராதா?

நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறவர்களே தவிர, வீக்கத்தை விரும்புகிறவர்கள் அல்ல

நண்பர்களே, உடலினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிதான் வளர்ச்சியே தவிர, கையில் கொஞ்சம் வளர்ச்சி இருக்கிறது, காலில் கொஞ்சம் வளர்ச்சி இருக்கிறது என்றால், அதற்கு வளர்ச்சி என்று பெயரில்லை, வீக்கம் என்று பெயர். இந்த சமூகம் சமத்துவமான சமூகமாக இருக்கவேண்டும். நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறவர்களே தவிர, வீக்கத்தை விரும்புகிறவர்கள் அல்ல.

ஆகையினால்தான், இந்தியிலே மட்டுமல்ல, நீ ஏன் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் இந்தி கட்டாயம் என்று சொல்வது, இவ்வளவு சலுகைகளைத் தருகிறோம், இந்தி படி என்று சொல்கிறாய். இன்னமும் நீ கோடிக்கணக்காய் கொட்டிக் கொடுத்தாலும், தமிழகம் இந்தியை ஒரு நாளும் ஏற்காது; இந்தித் திணிப்பை ஏற்காது - இது எங்களுடைய திராவிட இயக்க மண் என்பதை நீ உணரவேண்டும்.

50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே 
வகுத்துக் கொடுத்த மண் தமிழ்நாடு

ஒருநாளும் நாங்கள் உங்களுடைய திணிப்பை, ஆதிக்கத்தை ஏற்கமாட்டோம். அப்படி ஏற்கவேண்டிய தேவையும் இல்லை. மிகத் தெளிவாக, இந்த நாட்டிற்கு மொழிக் கொள்கை என்றால், எப்படி இருக்கவேண்டும்? என்பதை 50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே வகுத்துக் கொடுத்த மண் தமிழ்நாடுதான். ஆகையினால், இப்படி ஒவ்வொரு துறையிலும், கல்வித் துறையில், நிதி ஆயோக் சொல்கிறது, மூன்றாண்டுகால அறிக்கையாக சொல்கிறது, நாட்டில் இருக்கின்ற அரசு பள்ளிகள் பல சரியாக செயல்படவில்லை என்று.

எப்படி செயல்படும்? நீ அதற்காக நிதி ஒதுக்குவதில்லை, நீ அதனைக் கவனிப்பதில்லை. அரசு பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்பதிலே, அரசே கவனமாக இருக்கிறது. இன்றைக்குச் சொல்கிறார்கள், எனவே, அரசு பள்ளிகள் தரமில்லாத பள்ளிகளையெல்லாம் தனியார் வசம் கொடுத்து விடுங்கள் என்று சொல்கின்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

தனியாரிடம் தாரை வார்த்துவிடுங்கள் என்று சொல்வது கல்விக்கு எதிரானது

அரசு பள்ளிகள், தரத்திலே குறைவாக இருக்கிறது; சுகாதார நிலைகள் குறைவாக இருக்கின்றன என்று சொன்னால், அதற்குக் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டுமே தவிர, அந்தப் பள்ளிகளை அப்படியே தனியாரிடம் தாரை வார்த்துவிடுங்கள் என்று சொல்வது கல்விக்கு எதிரானது.

அடிப்படையில் நண்பர்களே ஒன்றை நான் சொல் லவேண்டும். தந்தை பெரியார் அவர்களுடைய அடிப்படையான கோரிக்கையே, இந்த மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதுதான். திராவிட இயக்கத்தின் வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து  பார்த்தால், நான் ஏன் பெரியார் பிறந்த நாளில், கல்விப் பற்றி பேசுகிறேன் என்றால், கல்விக்காகப் பிறந்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம். நீதிக்கட்சிக்கு முன்னால் நான் சொல்கிறேன்.

1912 ஆம் ஆண்டு ‘‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’’ என்கிற பெயரில் தொடங்கப்பட்டு, பிறகு 1913 ஆம் ஆண்டு நடேசனார் அவர்கள் அதனை திராவிடர் சங்கம் என்று மாற்றியபொழுதும், என்ன காரணத்திற்காக மாற்றினார்? இன்றைக்குத் திராவிடத்தைப்பற்றி பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் அதை அறிந்தவர்கள் என்பதினாலே, அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், அன்றைக்கு நடேசனார் அவர்கள், மெட்ராஸ் யுனைடெட் லீக் என்கிற பெயரை, ‘‘திராவிடர் சங்கம்’’ என்று அந்தப் பொதுக்குழு மாற்றியதற்கான அடிப்படை காரணம் என்னவென்றால், இந்த சங்கத்தினுடைய முதன்மையான நோக்கம், எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்பது.

உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள், 
நாங்கள் அவர்களுக்குக் கல்வித் தருகிறோம்!

இதோ இந்தத் திருவல்லிக்கேணியில்தான், அந்த திராவிட மாணவர் விடுதி இருந்தது. எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்பதற்காக, நடேசனார் அவர்கள் அன்றைக்குத் தன்னுடைய மகிழுந்தை எடுத்துக்கொண்டு, அன்றைக்கெல்லாம் கார் வைத்துக் கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய செயல். செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சி மாவட்டத்தில் இருக்கிற வயல்வெளிகளில் வேலை பார்க்கிற அந்த உழவர்களை அழைத்து, ‘‘உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள், நாங்கள் அவர்களுக்குக் கல்வி தருகிறோம்’’ என்று சொல்லியபோது, அந்த மக்களே அச்சப்பட்டார்கள். அதுதான் இயற்கை; மக்கள் அச்சப்படத்தான் செய்வார்கள். ஏதோ பிள்ளை பிடிக்கிறவர் வந்திருக்கிறார் என்று கருதினார்கள்.

கல்வி அறியாத, கல்வியின் பயனை பெறாத, கல்விக்கு அருகில்கூட வர முடியாத நிலையில் இருந்த மக்களை, கல்விக் கற்றவர்களாக மாற்றவேண்டும் என்பதற்காக தொடங்கிய இந்த சங்கத்திற்கு, இந்தப் பெயர் எந்தவிதத்திலும் பொருத்தமில்லாமல், ‘‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’’ என்று இருக்கிறது.

யாருடைய கல்விக்காக? மூன்று சதவிகிதம் இருக்கின்ற பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க, 97 சதவிகித மக்கள் படிக்காமல் இருக்கிறார்களே, அப்படி இருக்கிற பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு கல்வி தருவதற்காகத் தொடங்கப்பட்ட சங்கத்திற்கு, நாம் வேறு பெயரை வைக்கவேண்டும் என்று பேசியபொழுது, ‘‘பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’’ என்று முதலில் பெயர் முன்மொழியப்பட்டு இருக்கிறது. ஆனால், எல்லோரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், ஏன் நாம் எதிர்மறையாக பெயர் சொல்லிக் கொள்ளவேண்டும். எதற்காக அவர்களைச் சுட்டிக்காட்டி, பார்ப்பனர் அல்லாதார் என்று குறிப்பிடவேண்டும். வேண் டாம், மிகத் தெளிவாக பார்ப்பனர் அல்லாதார் என்றால், அதற்கு திராவிடர் என்று பொருள். எனவே, திராவிடர் சங்கம் என்றுதான் பெயர் சூட்டப்பட்டது.

திராவிடம் என்பது சமூகநீதிதான்
சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம்

திராவிடர் சங்கத்தினுடைய தொடக்கமே நம்முடைய மக்களுடைய பிள்ளைகளின் படிப்புக்காகத்தான். திராவிடர் என்பதே ஆரியத்திற்கு எதிரான சொல். திராவிடன் என்பதே பார்ப்பனன் அல்லாதவன் என்பதை விளக்குகிற சொல். இன்றைக்கு திராவிடன் என்கிற சொல்லை திரித்தும், மறுத்தும் பல பேர் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒன்றைக் குறித்துக் கொள் ளுங்கள், திராவிடம் என்பது சமூகநீதிதான். சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம். சமூகநீதிக்காகத் தோன்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

எப்படி வந்தது இந்த இட ஒதுக்கீடு? இட ஒதுக்கீட்டையே சமூகநீதி என்று நாம் குறுக்கிச் சொல்லவில்லை.

சமூகநீதி என்கிற ஒரு மிகப்பெரிய பரந்த பரப்புக்குள் இட ஒதுக்கீடு ஒரு பகுதி.  சமூகநீதிக்குள் வர்க்கபேதத்தை மாற்றுகிற சமத்துவம் அடங்கும்.

சமூகநீதிக்குள் ஆண் - பெண் என்கிற ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கிற சமத்துவம் அடங்கும்.  சமூகநீதிக்குள் ஜாதியின் பெயரால் செலுத்தப்படுகிற ஆதிக்கம் நீங்கும்.

எனவே, சமூகநீதி என்பது ஒரு பரந்துபட்ட தளம். அந்த சமூகநீதிக்குள் இட ஒதுக்கீடு ஒரு பிரிவு என்று சொன்னால், 
அந்த இட ஒதுக்கீடு முதல் வழி என்று சொன்னால்,

இட ஒதுக்கீடு ஒரு தற்காலிக மாற்றம் என்று சொன்னால்,

அந்த மாற்றத்தை முதன்முதலாக தனிப்பட்ட முறையில் சமஸ்தானத்தில் கொண்டு வந்தவர், கோல்காப்பூர் சமஸ் தானத்தில் மன்னராக இருந்த சாகுமகராஜ் அவர்கள்தான்.

மிகுந்த நன்றி உணர்ச்சியோடு, அய்யா பெரியார் அவர்களின் பிறந்த நாளில் நாம் இதனை நன்றியோடு பதிவு செய்யவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

150 ஆண்டுகளுக்கு முன்னால்...

ஜோதிராவ் பூலே அவர்களுடைய அந்தத் தாக்கத்தின் காரணமாக, மராத்தியத்தில், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜோதிராவ் பூலே - உண்மையாகச் சொன்னால், அவர்தான் மகாத்மா - அவர்தான் மகாத்மா ஜோதிராவ் பூலே, இன்றைக்கு வரைக்கும் பள்ளிப் பாடத்தில்கூட அதனைச் சொல்லிக் கொடுக்கவில்லையே!

அவர் 1870 ஆம் ஆண்டு சத்ய சோதக் மண்டல் என்கிற ஒன்றை நிறுவி -150 ஆண்டுகளுக்கு முன்னால், அந்த அமைப்பை உருவாக்கி, பிள்ளைகளுக்குக் கல்வி தந்தார். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பெண்களுக்குக் கல்வித் தந்தது என்பதுதான் அவருடைய தொடக்கம்.

அதற்கு அடுத்த கட்டமாக ஜோதிராவ் பூலே என்ன செய்தார் என்றால், திருமணமாகி கணவனை இழந்த பெண்கள், வேறு மறுமணம் செய்துகொள்வதற்கு அன்றைக்கு உரிமையில்லாத சமூகத்தில், வேறு ஏதேனும் ஒருவிதத்தில் கருவுற்றிருந்தால், ஒன்றும் குற்றமில்லை, இங்கே வாருங்கள்! மனிதர்களுடைய இயற்கையான உணர்வுகளை முறித்துப் போடக்கூடாது. நம்முடைய தமிழ்ப் பண்பாடு மிக உயர்ந்தது என்று சொல்கிறோம். தமிழ்ப் பண்பாட்டில்கூட சிலப்பதிகாரம் கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்கிறது. மனைவியை இழந்தோருக்கு மாற்று இல் என்று சொல்லவில்லையே! கணவனை இழந்த பெண்ணுக்கு மட்டும் வேறு மாற்று இல்லை; மனைவியை இழந்தவர்களுக்கு மாற்று உண்டா? இந்த சமூகம் அப்படித்தானே இருந்தது.

பெண்களே மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி எழுந்த இயக்கம் திராவிட இயக்கம்

சின்னஞ்சிறிய வயதில் தன் கணவனை இழந்தால்கூட, அந்தப் பெண் சாகிற வரையில், அவளுக்கு மூன்றுவிதமான வழிகள்தான் உண்டு.

கணவன் இறந்துபோனால், அந்தச் சிதை நெருப்பில் தானும் எரிய வேண்டும். அல்லது சாகும் வரையில் அவள் கைம்பெண்ணாக இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட இடங்களிலே அதனையெல்லாம் முறித்துப் போட்டு, பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் உலகத்தில் இருக்கமுடியாது; அது இயற்கைக்கு மாறானது; பெண்களே மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி எழுந்த இயக்கம் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில்.

அதற்கும் முன்னோடியாகத்தான் ஜோதிராவ் பூலே அவர்கள், இயற்கைக்கு மாறாக நாம் அப்படி சொல்ல முடியாது, பெண்களே! நீங்கள் கருவுற்றிருந்தால், சத்ய சோதக் மண்டலுக்கு வாருங்கள்! குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்குப் பிறகு நீங்கள் குழந்தைகளை எடுத்துச் செல்லவில்லை என்றால், இங்கே விட்டுவிட்டுச் போய்விடுங்கள், நாங்கள் வளர்த்துக் கொள்கிறோம் என்று, 150 ஆண்டுகளுக்குமுன்பு ஒருவன் சொன்னான் என்றால், அவனைவிட சமூகநீதிப் புரட்சியாளன் வேறு யார் இருக்க முடியும்?

மறுபடியும் இதையே நாங்கள் 
இந்த மண்ணில் செய்வோம்

என்ன நடந்தது? அந்த சத்ய சோதக் மண்டல் கட்டடம் தரைமட்டமாக இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட இடத்தில் நின்றுகொண்டுதான், பூலேவும், அவருடைய மனைவி சாவித்திரி பாய் அவர்களிடம்,

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபொழுது,

மறுபடியும் கட்டுவோம்; மறுபடியும் இதையே நாங்கள் இந்த மண்ணில் செய்வோம் என்று சொன்ன மாவீரர்கள் அல்லவா அவர்கள்.

அவர்களின் தாக்கத்தினால், சாகுமகராஜ் அவர்கள், தன்னுடைய கோல்காப்பூர் அரண்மனையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். வெறும் இட ஒதுக்கீடு இல்லை. அந்த கோல்காப்பூர் அரண்மனையில், சமையலை யார் செய்வார்கள் என்றால், யாரைத் தீண்டத்தகாதவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களோ, அவர்கள்தான் சமையல் செய்வார்கள். விரும்பினால் உண்; விரும்பாவிட்டால், போ என்று சொல்கின்ற துணிச்சல் சாகுமகராஜ் அவர்களுக்கு இருந்தது.

அதே துணிச்சலை நான் பார்க்கிறேன்; 1929 ஆம் ஆண்டு - இங்கே இருக்கிற கருப்புச் சட்டைத் தோழர்கள் அறிவார்கள் - பொதுமக்களுக்காக சொல்கிறேன். பெரியார் திடலில் நாம் பேசினால், நம் சிந்தனைகளை, நாம் நமக்குள் பகிர்ந்துகொள்வோம். இப்படித் தெருவில், பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது, மக்களுக்காக இந்தச் செய்தியை நான் எடுத்துச் சொல்கிறேன்.

செங்கல்பட்டில் நடைபெற்ற 
சுயமரியாதை மாநாட்டில்...

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், அது வெறும் மாநாட்டிற்கான அறிவிப்பு அல்ல. ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தைச் சார்ந்த மக்கள்தான் சமையலைச் செய்வார்கள் என்று தந்தை பெரியார் சேர்த்து அறிவித்தாரே, உடையிலும், உணவிலும் ஜாதியிருக்கின்ற தேசத்தில், உடைத்துப் போட்ட பெருமை எங்கள் மண்ணையும், எங்கள் இயக்கத்தையும்தானே சேரும்!

என் பிள்ளைக்கு நான்  பெயர் வைத்தால், இவன் யார் கேட்பதற்கு?

எதில் ஜாதியில்லை? பிறப்பில் மட்டுமா ஜாதியிருக்கிறது; உண்ணும் உணவில் ஜாதியிருக்கிறது; உடுத்தும் உடையில் ஜாதியிருக்கிறது; உடுத்தும் முறையில் ஜாதியிருக்கிறது; ஒவ்வொருவரும் சூட்டிக்கொள்ளவேண்டும் என்று சொன்ன பெயர்களில் ஜாதி இருக்கிறது. முத்துக்குட்டி என்று வைகுந்தசாமிகளுக்கு பெயர் வைக்கப்பட்டது ஏன்? அவருடைய இயற்பெயர் என்ன? அவர் முடிசூடும் பெருமாள் என்றுதானே பெயர் வைத்தார்கள் பெற்றவர்கள். ஒரு நாடார் சமுதாயத்தில் பிறந்தவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் வைக்கலாமா? என்று கேட்டார்கள். என் பிள்ளைக்கு நான்  பெயர் வைத்தால், இவன் யார் கேட்பதற்கு? இன்றைக்குக் கேட்க முடியுமா எவனாவது என்று எண்ணிப்பாருங்கள் நண்பர்களே!

முடிசூடும் பெருமாள் என்று எப்படி பெயர் வைத்தீர்கள் என்று அந்த ஊரில் இருக்கிறவர்கள் எல்லாம், அந்தக் குடும்பத்தை நெருக்கியபொழுதுதான், வேறு வழியில்லாமல், முத்துக்குட்டி என்று பெயர் வைத்தார்கள். அதுகூட நண்பர்களே, மனிதர்களுக்குப் பிறப்பது குழந்தை; விலங்குகளுக்குப் பிறப்பதுதான் குட்டி. நம்முடைய பெயரில்கூட முத்துக்குட்டி என்று பெயர் வைக்கச் சொன்ன காலம், இன்றைக்கு மறுபடியும் வருமா? வர முடியுமா? எவனாவது அப்படிச் சொல்ல முடியுமா? எச்.இராஜாவாக இருந்தாலும், என் வீட்டுப் பிள்ளைகளுக்கு இப்படி பெயர் வைக்கவேண்டும் என்று சொல்கின்ற துணிச்சல் வருமா?

பெரியாரின் கருத்துகளைப் பின்பற்றுகிற கூட்டம் இன்றைக்கு எண்ணிக்கையில் கூடிக் கொண்ட போகிறது

நேற்றைக்கு முன்தினம் பேசுகிறபொழுது, ஈ.வெ.ரா. அவரால் பெரியார் என்று சொல்ல முடியாது; ஈ.வெ.ரா.வைப் பின்பற்றுகிறவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றார். அவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்றால், தமிழ்நாட்டில் முட்டாள்களின் எண்ணிக்கை கூடுதல் என்று நீ குறித்துக் கொள். உன்னைப் போல் புத்திசாலியாக உயிரோடு இருப்பதைவிட, அடுத்தவனை அழிப்பதற்கு, புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதைவிட, இந்த நாட்டை மக்களை நல்வழிப்படுத்துவதற்கு பெரியாரின் கருத்துகளைப் பின்பற்றுகிற கூட்டம் இன்றைக்கு எண்ணிக்கையில் கூடிக் கொண்ட போகிறது. யாராவது பெயரை இப்படித்தான் வைக்கவேண்டும் என்று சொல்ல முடியுமா?

என்னிடத்தில் ஒரு மாணவர் படித்தார். அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த மாணவர். அவருடைய பெயர் என்ன தெரியுமா நண்பர்களே, ‘கும்பிடறேன் சாமி’ என்பதுதான். நான் ஆசிரியராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும், அவரை அழைக்கின்றபொழுதெல்லாம், ‘கும்பிடறேன்  சாமி’ என்றுதான் கூப்பிடவேண்டும். எல்லாப் பயல்களும் கும்பிடுகிறேன் சாமி என்றுதான் கூப்பிடவேண்டும்.

தாழ்த்தப்பட்ட தோழனைப் பார்த்து, மைலார்ட் என்று இன்னும் கொஞ்ச நாளைக்குச் சொல்லட்டும்

எனவே, நண்பர்களே, இந்த இடத்தில் எனக்கு ஒன்று நினைவு வருகிறது. நம்முடைய வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள், வழக்குரைஞர்கள் கூட்டத்தில் ஒருமுறை சொன்ன செய்தி, அதனை பல இடங்களில் நான் சொல்லியிருக்கிறேன்.

‘மை லார்ட்’ என்று இன்றைக்கும் நீதிபதிகளை அழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு மரபு இருக்கிறது. என்னுடைய பிரபுவே! யாருக்கும் யாரும் பிரபு இல்லை. யாருக்கும் யாரும் கடவுள் இல்லை. கடவுளே இல்லை, அது வேறு. மனிதர்களையே மை லார்ட் என்று அழைக்கிறபொழுது, நம்முடைய வழக்குரைஞர்களாக இருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் உணர்ச்சியும், உத்வேகமும் ஏற்பட்டு, இனிமேல் நாம் மைலார்ட் என்று சொல்லவேண்டியதில்லை; மிஸ்டர் ஜஸ்டீஸ் என்று சொன்னால் போதும் என்று சொன்ன நேரத்தில், அதனை அருள்மொழி போன்றவர்கள்தானே கைதட்டி வரவேற்று இருக்கவேண்டும். ஆனால், அருள்மொழி சொன்னார், இல்லை, இல்லை. இன்னும்கொஞ்சம் நாளைக்கு மைலார்ட் என்றே சொல்லுவோம்; பிறகு பார்க்கலாம் என்று சொன்னார்.

திராவிடர் கழகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணா இப்படி சொன்னார் என்பதற்கு, அவர் ஒரு காரணம் சொன்னார். வேறொன்றும் அல்ல, இதுவரையில் அந்த மேடையில் வெள்ளைக்காரர்கள் நீதிபதிகளாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவாள்தான் இருந்தார்கள்; அய்யரும், அய்யங்காரும் இருந்தார்கள். அப்போதெல்லாம், அவர்களை நீங்கள் மை லார்ட் என்று அழைத்தீர்கள். இன்றைக்குத்தானடா, எங்கள் குப்பனும், சுப்பனும் நீதிபதியாக வந்து அமர்ந்திருக்கிறான். இன்றைக்குத்தானே பூணூல் போட்டவன் வக்கீலாக இருக்கிறான்.
எனவே, பூணூல் போட்ட வக்கீல், நீதிபதியாக அமர்ந்திருக்கிற தாழ்த்தப்பட்ட தோழனைப் பார்த்து, மைலார்ட் என்று இன்னும் கொஞ்ச நாளைக்குச் சொல்லட்டும்; அதுதான் சமத்துவம் என்று சொன்னார்.

பெயரில்கூட அரசியல் இருக்கிறது; பெயரில்கூட ஜாதி இருக்கிறது. அப்படி எல்லா ஜாதி அடிப்படைகளையும் உடைத்துப் போட்டு, சமத்துவத்தை முன்னிறுத்துவதற்காக நடைபெற்ற அந்த சுயமரியாதை மாநாட்டை, முதல் மாநாட்டை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

நாடார் சமுதாயத்தவர்தான் 
சமைப்பார்கள் என்றார்!

யார் பேசுவார்கள் என்பதில்லை; யார் சமைப்பார்கள் என்பதைக்கூட முடிவு செய்த மாநாடு அந்த மாநாடு. அவர்கள்தான் சமைப்பார்கள், சம்மதம் இருந்தால் நீ உள்ளே வா!

பாண்டியனார் பேச்சை நான் இங்கே சொல்கிறேன், ‘‘நான் உள்ளே வருகிறபொழுது, சவுந்திரபாண்டிய நாடாராக வந்திருக்கலாம்; வெளியே போகிறபோது, சவுந்திரபாண்டியனாக வெளியேறுவேன்.’’

‘‘நான் உள்ளே வருகிறபொழுது, ராமச்சந்திர சேர்வையாக வந்திருக்கலாம் சிவகங்கையில் இருந்து. வெளியேறுகிறபொழுது, நான் ராமச்சந்திரனாக வெளியேறுவேன்’’ என்று ஜாதிப் பட்டத்தை உதறி எறிய வைத்த நாடு, அந்த இயக்கம் திராவிட இயக்கம். சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கித் தந்த தலைவர் எங்கள் அய்யா பெரியார் அவர்கள்.

ஆகையினாலே, அந்த இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் வந்தது. நம்முடைய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய அருமையான உழைப்பினால்.

அம்பேத்கரின் எழுத்துகளை தமிழில் அல்ல - ஆங்கிலத்தில் படியுங்கள்

எப்படி? வெள்ளைக்காரர்களை உட்கார வைத்து, லண்டனுக்குச் சென்று, இட ஒதுக்கீடுக்கு என்ன நியாயம் இருக்கிறது என்பதை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அங்கே அமர்ந்திருந்த 19 வெள்ளைக்கார அதிகாரிகள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசி, விளக்கினாரே - உண்மையாகச் சொல்கிறேன் நண்பர்களே, ஆங்கிலம் படிக்கின்ற நண்பர்கள், அம்பேத்கரின் எழுத்துகளை தமிழில் அல்ல - ஆங்கிலத்தில் படியுங்கள், அது சேக்ஸ்பியரின் எழுத்தைப்போல, அழகானது, எளிமையானது.

அவருடைய ஆற்றல், அந்த வாதத் திறன், அன்றைக்கு  அவர்களையே ஏற்றுக்கொள்ள வைத்து, 1943 ஆகஸ்ட் 11 ஆம் தேதியிலிருந்து, இந்தியா முழுமைக்கும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அட்டவணை ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வந்தது. ஆனால், மற்றவர்களுக்கு அப்படி வரவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான போராட்டத்தை சாகுமகராஜ் தொடங்கி வைத்தாரே - 1909 ஆம் ஆண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு அரசியல் தளத்தில் மட்டும், மிண்டோ -மார்லி சீர்திருத்தத்தில் இட ஒதுக்கீடு வந்தாலும், மைசூர் சாம்ராஜ்ஜியத்தில் 1920 ஆம் ஆண்டுகளில் கொடுத்தாலும், தமிழ்நாட்டில், 1927 ஆம் ஆண்டு கம்யூனல் ஜி.ஓ. என்று சொல்கிற, அந்தச் சட்டத்திற்குப் பிறகு வந்த இட ஒதுக்கீடு, இன்றைக்குவரைக்கும் எந்தப் பயலாலும் கைவைக்க முடியாத, கைவைக்கவேண்டும் என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் விரும்பினாலும், அதனைத் தமிழகம் விட்டுக் கொடுக்காத நிலையில் இருக்கிறதே, நீ நவோதயா பள்ளியைக் கொண்டு வந்து, அந்த இட ஒதுக்கீட்டைக் குலைக்கப் பார்க்கிறாயே, ஏற்க முடியுமா? எங்களால்.

பல வரலாற்றுப் புரட்சிகள் 
தமிழகத்திலிருந்துதான் தொடங்கியிருக்கின்றன

நீ நவோதயா பள்ளியைக் கொண்டு வந்து, ஆங்கிலத்தோடு சேர்த்து, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்கிறாயே, ஏற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு?

ஏன் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்கின்றன; தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எப்பொழுதும் தனித்துவம் உண்டு. பல வரலாற்றுப் புரட்சிகள் தமிழகத்திலிருந்துதான் தொடங்கியிருக்கின்றன நண்பர்களே!

அறிஞர் அண்ணா சொல்வார், இந்தியாவின் வரலாற்றை சரியாக எழுதவேண்டும் என்று விரும்புகிறவர்கள், கங்கைக்கரையில் இருந்தல்ல, காவிரிக் கரையில் இருந்து வரலாற்றைத் தொடங்கவேண்டும் என்று சொல்வார். தொடங்கவேண்டிய கட்டம் வந்திருக்கிறது.

நேற்றைக்குக்கூட கீழடியில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை எங்களுடைய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திற்று. தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இதோ மூடப் போகிறார்கள்; மூன்றாம் கட்ட ஆய்வை மூடப் போகிறார்கள். நாங்கள் ஒரே ஒரு கேள்விதான் கேட்டோம். நீ சரசுவதி நதியைத் தேடுகிறாய்; கீழடி ஆய்வை மூடுகிறாய். நீ யாருக்கான அரசு என்று கேட்டோம்.

5 லட்சம் ரூபாய்கூட 
இந்த மத்திய அரசிடம் இல்லையா?

இல்லாத சரசுவதி நதியை இவர்கள் தேடுவார்களாம்; இருக்கிற கீழடி அகழாய்வை மூடுவார்களாம். என்ன காரணம் என்றால், மூன்றாவது கட்ட ஆய்வை நேற்று நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். ஏசு பிறப்பதற்கு 195 ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொன்னால் நண்பர்களே, அந்த ஆண்டுக் கணக்கை நான் என் விருப்பத்தின் அடிப்படையில் சொல்லவில்லை; கார்பன் டெஸ்ட் என்று சொல்கிறார்களே, அந்தச் சோதனையில், அதுகூட என்ன கொடுமை தெரியுமா? அங்கே இருந்து 10 பொருள்களை கார்பன் டெஸ்டுக்கு அனுப்புகிறார்கள். இந்திய அரசு சொல்கிறது, பத்து பொருள்களையும் சோதனை செய்வதற்குப் பணம் செலவிட முடியாது. ஒரு பொருளை சோதனை செய்வதற்கான செலவு 50 ஆயிரம் ரூபாய்; 10 பொருள்களை சோதனை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய்தான் ஆகும். 5 லட்சம் ரூபாய்கூட இந்த மத்திய அரசிடம் இல்லையா? இரண்டே இரண்டு பொருள்களைத்தான் சோதனை செய்வோம் என்று சொல்லி,

எந்த ஒரு சமயச் சார்பும் இல்லை என்பதுதான் அவர்களை உறுத்துகிற செய்தி

ஒன்று கி.மு.195, இன்னொன்று கி.மு.200 என்று காலத்தைக் கணித்திருக்கிறீர்களே, 2200 ஆண்டுகளுக்கு முன்னால், என் தமிழன் உறை கிணறு வைத்திருக்கிறான்; 2200 ஆண்டுகளுக்குமுன்னால், அருமையான செங்கல் கட்டிடத்தால், கட்டடத்தை எழுப்பியிருக்கிறான். கண்கூடாக  அதனை நேற்று நாங்கள் பார்த்தோம். அதனைப் பார்க்கின்றபொழுது, தமிழனுடைய கட்டடக் கலை, தமிழனுடைய தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், 2000 ஆண்டுகளுக்கு முன்னால், மற்ற இனங்கள் எல்லாம் உடுத்திக் கொள்ளாமல்கூட திரிந்த காலத்தில், எங்கள் தமிழன் கட்டடம் கட்டி, உடை உடுத்தி நாகரிகமாக வாழ்ந்திருக்கிறானே, அந்த வரலாற்றை ஏன் மறைக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் என்றால், வேறொன்றும் இல்லை பெரியோர்களே, அங்கே அவர்களுக்கு ஒன்று உறுத்துகிறது. 2200 ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற 500-க்கும் மேற்பட்ட பொருள்களில், எந்த ஒன்றிலும், எந்த ஒரு சமயச் சார்பும் இல்லை என்பதுதான் அவர்களை உறுத்துகிற செய்தி.
எங்கள் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் இல்லாமல், அதனைச் செய்துவிட முடியாது

சமயச் சார்பற்றவனாக, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றாதவனாக தமிழன் வாழ்ந்திருக்கிறான். எனவே, இது ஒரே நாடும் இல்லை; ஒரே பண்பாடும் இல்லை. தனி நாடு தமிழ்நாடு. தமிழ்நாட்டிற்கு ஒரு தனி பண்பாடு உண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. வங்கத்தின் பண்பாடு வேறு; கேரளத்தின் பண்பாடு வேறு. ஒருங்கிணைந்த  ஒன்றிய ஆட்சியில், பெடரலிசம் சொல்லப்படுகிற கூட்டாட்சியில் இருக்க எங்களுக்கு சம்மதம். ஒருநாளும் அடிமையாக இருக்க தமிழன் சம்மதிக்க மாட்டான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டும்; மீண்டும் மீண்டும் இந்திய அரசுக்குக் காட்டவேண்டும் என்றால், எங்கள் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் இல்லாமல், அதனைச் செய்துவிட முடியாது.

எந்தப் போராட்டத்திற்கும், எந்தத் தியாகத்திற்கும் அணியமாக இருக்கிறோம்

அய்யா ஆசிரியர் அவர்களே, தளபதி அவர்களே, நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்களே உங்களுக்கான வேலைகள் நிரம்ப இருக்கிறது. பின்னால் வருவதற்கு என்றைக்கும் நாங்கள், எப்பொழுதும், எதற்கும் அணியமாக இருக்கிறோம். எந்தப் போராட்டத்திற்கும், எந்தத் தியாகத்திற்கும் அணியமாக இருக்கிறோம். பிறந்த நாள் விழாவில், மகிழ்ச்சி மட்டும் இல்லை. இப்படி உறுதி ஏற்றுக்கொள்ளவேண்டி நிலையிலும் இருக்கிறோம்.

வாய்ப்புக்கு நன்றி, கூறி விடைபெறுகிறேன்.

- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,21.9.17

யுகத்துக்கு ஒரு தலைவர்தான் தோன்றுவார் அவர்தான் தந்தை பெரியார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முழக்கம்



சென்னை, செப். 20- யுகத்துக்கு ஒரு தலைவர் தோன்றுவார், அவர்தான் தந்தை பெரியார் என்று முழக்கமிட்டார்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
17.9.2017 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக் கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் பெருமதிப் பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண் ணன் அன்புராஜ் அவர்களே, எனக்கு முன்னர், தந்தை பெரியார் அவர்களின் அருமை பெருமைகளை மிக எளிய தமிழில் நம்மிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றி அமர்ந் திருக்கின்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் சுப.வீ.அவர்களே,
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருக் கின்ற திராவிடர் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர்களே, திரளாகக் கூடியிருக்கின்ற அய்யா பெரியார் அவர்களின் பெருந்தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உங்களிடையே உரையாற்றக் கூடிய ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் காணிக்கையாக்குகிறேன்.
இன்னும் நான்கு நாள்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கின்ற மாநில சுயாட்சி மாநாடு தொடர்பான பணிகளில் நான் ஈடுபடவேண்டிய ஒரு நெருக்கடி.
பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், தமிழர் தலைவர் அவர்களோடு நான் பேசவேண்டும்
இன்றைக்கு கட்சியின் மிக முக்கியமான முன்னணி பொறுப்பாளர் மதுரையைச் சார்ந்த தோழர் கண்ணதாசன் அவர்களின் தாயார் இறந்துவிட்டார். நான் வந்தே தீர வேண்டும் மதுரைக்கு என்று தோழர்கள் எல்லாம் வற் புறுத்தியும்கூட, இன்றைக்குப் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில், தமிழர் தலைவர் அவர்களோடு நான் பேசவேண்டும்; தயைகூர்ந்து பொறுத்துக் கொள்ளுங் கள், படத் திறப்பு நிகழ்விற்கு வருகிறேன் என்று அந்தத் தோழரை சமாதானப்படுத்திவிட்டு, நான் இந்த நிகழ்வில் இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள், இன் றைக்கு உலகத் தலைவராகப் பரிணமித்திருக்கிறார்; நம் கைகளில் தவழும் பிறந்த நாள் மலர், அதைக் கட்டியம் கூறுகிறது.
அண்மையில், தமிழர் தலைவர் அவர்களும், மேடையில் அமர்ந்திருக்கின்ற அத்துணைத் தோழர்களும் ஜெர்மனிக்குப் போய்விட்டு வந்தார்கள்.
பகுத்தறிவு சிந்தனையாளர்களும், சுயமரியாதைச் சுடர்களும் பங்கேற்ற ஒருங்கிணைத்த மாநாடு
அய்ரோப்பாவில் இருக்கின்ற ஒரு முக்கியமான நாடு ஜெர்மன். தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை மாநாடு அங்கே நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து நாம் ஆட் களைக் கொண்டு போய் அங்கே அமர வைத்து அந்த மாநாட்டை நடத்தவில்லை. ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர் களும், ஜெர்மன் நாட்டின் தாய்மொழியான டோச் மொழி யைப் பேசக்கூடியவர்களும், உலக நாடுகளில் வாழுகின்ற பகுத்தறிவு சிந்தனையாளர்களும், சுயமரியாதைச் சுடர்களும் பங்கேற்று ஒருங்கிணைத்த மாநாடு, அந்த மாநாடு.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை  உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
என்றார் பாரதிதாசன்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று அவர் சொன்னது, எவ்வளவுப் பொருத்தமாக, சரியாக இன்றைக்கு இருக்கிறது என்பதை, ஜெர்மனியில் நடைபெற்ற அந்த மாநாடு உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்றவர்கள் மட்டும்தான், பெரியா ரைப் பின்பற்றுவார்கள்; பெரியாரின் கொள்கைகளைப் பேசுவார்கள்; பெரியாரைப் போற்றுவார்கள் என்றில்லாமல், உலகமெங்கும் யாரெல்லாம் பகுத்தறிவு நம்பிக்கைக் கொண் டிருக்கிறார்களோ, சுயமரியாதையில் நம்பிக்கைக் கொண்டி ருக்கிறார்களோ, அறிவியல் பூர்வமாக சிந்திக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் தலைவர் தந்தை பெரியார் என் பதுதான் இன்றைக்கு நடைமுறையில் நாம் கண்டுவருகிற எதார்த்தமான உண்மை.
தந்தை பெரியாரை இன்றைக்கு 
உலகு தொழுகிறது
ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்தால், அந்தக் கட்சித் தொண்டர்கள் மட்டும்தான் போற்றுவார்கள். ஆனால், ஒரு கோட்பாட்டுக்குத் தலைவராக இருந்தால், உலகமே போற்றும். அதுதான் கட்சித் தலைவருக்கும், கோட்பாட்டுத் தலைவருக் கும் உள்ள வேறுபாடு.
திருமாவளவன் ஒரு கட்சித் தலைவர். ஆனால், தந்தை பெரியார் ஒரு கோட்பாட்டுத் தலைவர் - ஒரு தத்துவத்தின் தலைவர். ஆகவே, கோட்பாடு என்பது மானுடத்திற்குப் பொதுவானது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு என்று அதை சுருக்க முடியாது. அதனால்தான், தந்தை பெரியாரை இன்றைக்கு உலகு தொழுகிறது.
மனக்குகையில் சிறுத்தை எழும்
எனக்கு இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பாரதிதாசனுடைய வரிகளில், மனக்குகையில் சிறுத்தை எழும் என்று சொல்லியிருக்கிறார். பெரும்பாலும், உயரத்தைப்பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம், சிங்கம், புலி என்றுதான் சொல்வார் கள். நம்முடைய அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்கூட, புலிகள் என்றுதான் இயக்கத்திற்குப் பெயர் சூட்டினார். இங்கு பெரும்பாலான ஜாதியவாதிகள் எல்லாம் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்துவதற்கு, சிங்கத்தைத்தான் அடையா ளப்படுத்துகிறார்கள். சிங்கத்தைப்பற்றியும், புலியைப்பற்றியும் சிந்திக்காமல், பாரதிதாசன் அவர்கள், மனக்குகையில் சிறுத்தை எழும் என்று சொல்லியிருக்கிறார். சிறுத்தைக்கு உள்ள வீரியம், சிறுத்தைக்கு உள்ள வேகம், சிறுத்தைக்கு உள்ள அந்தப் பாய்ச்சல், தந்தை பெரியாரிடம் இருப்பதை, பாரதிதாசன் அவர்கள் பார்த்திருக்கிறார். 94 வயது வரையில், அவருடைய கடைசி மூச்சு வரையில், சோர்வின்றி, சலிப் பின்றி இந்த மக்களுக்காக உழைத்திருக்கிறார்.
மனிதன் என்றால், ஏமாற்றங்களால், தோல்விகளால், அடிக்கடி விரக்தி அடைவது உண்டு. சோர்வடைவது உண்டு, சலிப்படைவது உண்டு. இவன்தான் சராசரி மனிதன். ஒரு நாளைக்கு ஒன்றை எதிர்பார்க்கிறான், அந்த எதிர்பார்ப்பு நடைபெறவில்லையென்றால், அவன் முகம் வாடிவிடுகிறது; சுருங்கி விடுகிறது.
புரட்சியாளர் அம்பேத்கருக்கு நிகரான அவமதிப்புகளை சந்தித்தவர் தந்தை பெரியார்.
அம்பேத்கர் அவர்கள், ஜாதியின்பெயரால் இழிவுபடுத்தப் பட்டார் என்பதை நாம் அறிவோம். எவ்வளவு படித்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவிக்குப் போனாலும், எத்தகைய ஆற்றல் வாய்ந்த சிந்தனையாளராக உலக அரங்கில் அவர் மிளிர்ந்தாலும், இந்த ஜாதீய சமூக கட்டமைப்பில், அவருக்கு அவமதிப்பும், அவமானமும் மிஞ்சியது. அவை ஜாதியின் பெயரால் நிகழ்ந்தன.
தந்தை பெரியார் தீண்டப்படாத சமூகத்திலிருந்து பிறந்த வர் அல்ல. அப்படி ஒரு பிறப்பின் அடிப்படையில் அவருக்கு அவமதிப்பு நிகழ - சேரியிலே பிறந்து, சேரியிலே வளர்ந்து, சேரியிலே வாழ்ந்து - செல்லுமிடமெல்லாம் தலைகுனியக் கூடிய அளவுக்கு ஆன ஒரு இழிவு, பிறப்பின் அடிப்படையில் அவருக்கு இல்லை. ஆனாலும், புரட்சியாளர் அம்பேத்கருக்கு நிகரான அவமதிப்புகளை சந்தித்தவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரை நாம் 
நெஞ்சிலே சுமக்கவேண்டும்
மிகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தவர் தந்தை பெரியார். யாருக்காக இவர் மூச்சைப் பிடித்துக்கொண்டு பாடாற்றினாரோ - யாருக்காக அவர் அல்லும் பகலும் உழைத் தாரோ - யாருக்காக அப்படி அடிவயிறு வலிக்கப் பேசினாரோ - அவர்களே இவரை அவமதித்திருக்கிறார்கள் - செருப்பை எடுத்து வீசியிருக்கிறார்கள் - நரகலை அள்ளி வீசியிருக் கிறார்கள் என்றெல்லாம் நாம் படிக்கின்றபொழுது, கேள்விப் படுகின்றபொழுது நெஞ்சிப் பதைக்கிறது. அப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது, நாம் சந்திக்கின்ற இந்த அவமதிப்புகள் எல்லாம் மிகமிக மிகச் சொற்பம்; மிகமிகக் குறைவு. கல்லெடுத்து வீசுகிறார்கள், அது வேறு; ஆனால், நரகல் எடுத்து தந்தை பெரியார்மீது வீசுகிறார்கள்; அவர் அணிந்திருந்த சட்டையில் அந்த மலம் பட்ட நிலையி லும்கூட, ஆத்திரப்படாமல், உரையை பாதியிலேயே நிறுத்தி விடாமல், எதிர்த்து வசைபாடாமல், எவன் இப்படி செய்தவன் என்று ஒலிபெருக்கியில், அதட்டாமல், தன்னுடைய தொண் டர்களை வன்முறைக்குத் தூண்டாமல், அந்த நரகலை சகித் துக்கொண்டு, அந்த வாடையை, நாற்றத்தைச் சகித்துக் கொண்டு, சால்வையால் அதனை மறைத்துக்கொண்டு, தன்னுடைய கருத்தைப் பேசுகிற வரையில் அதில் உறுதியாக நின்று, மூன்று மணிநேரம் கருத்தைப் பேசிவிட்டு வந்தவர் தான் தந்தை பெரியார். இப்படியெல்லாம் ஒரு சகிப்புத் தன்மை தலைவர்களுக்கு வேண்டும் என்றால், தந்தை பெரியாரை நாம் நெஞ்சிலே சுமக்கவேண்டும்.
எண்ணிப்பாருங்கள், ஒரு செருப்பை வீசுகிறான், நாம் பேசிய கருத்துக்கு எதிராக எவனோ ஒருவன் செருப்பை வீசுகிறான். அந்த மூடன் யார்? அவனைப் பிடியுங்கள் என்று பெரியார் அவர்கள் சத்தம் போடவில்லை. நான் இந்த மண்ணில் எவ்வளவு மதிப்பிற்குரியவனாக இருக்கிறேன், நான் எப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன், நான் எப்படிப்பட்ட பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவன், எனக்கு எதிராக ஒருவன் செருப்பை எடுத்து வீசுகிறான், அவனைப் பிடியுங்கள் என்று தன் தொண்டர்களை, நண்பர்களை அவர் ஏவிவிடவில்லை, தூண்டிவிடவில்லை.
வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார்; ஏனய்யா, என்று தோழர்கள் கேட்டிருக்கிறார்கள்; ஒரு செருப்பு இங்கே போட்டுவிட்டான், அது நம் கையில் கிடைத்துவிட்டது. இன்னொரு செருப்பு எங்கே இருக்கிறது, அதைத் தேடிப் பாருங்கள், தனித்தனியே கிடந்தால், யாருக்கும் பயன்படாது, இரண்டையும் சேர்த்து நாம் எடுத்தால், யாருக்காவது கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
பெரியார் நமக்கு சொல்லுகிற செய்தி
எவ்வளவுப் பக்குவம், எவ்வளவு முதிர்ச்சி, யார்மீது கோபப்படவேண்டும் என்பதுகூட ஒரு தலைவருக்குத்தான் தெரியும். சாதாரண மக்களின்மீது ஒருவன் கோபப்படுகிறான், அறியாமையில் உழலுகிறவன்மீது ஒருவன் கோபப்படுகிறான், எளியவர்கள்மீது ஒருவன் கோபப்படுகிறான், அவமதிக்கின்ற வன்மீது ஒருவன் கோபப்படுகிறான் என்றால், அவன் தலைவன் இல்லை. அது தலைமைப் பண்பு அல்ல. அதுதான் பெரியார் நமக்கு சொல்லுகிற செய்தி.
நம் கொள்கைப் பகைவர்களிடம்தான் கோபப்படவேண் டும்; நம்முடைய கொள்கை எதிரிகளிடம்தான் நாம் கோபப் படவேண்டும். யாரோ ஒருவன், விவரம் இல்லாமல் நடந்து கொள்கிறான் என்கிறபொழுது, அதற்காக நாம் கோபப் பட்டால், நாம் ஒரு தலைவனாக இருந்து மக்களை வழிநடத்த முடியாது. ஒரு கோட்பாட்டை மக்களுக்கு வழங்கிவிட முடியாது.
யுகத்திற்கு ஒரு தலைவர்தான் தோன்றுவார், அவர்தான் தந்தை பெரியார்
ஆகவே, தந்தை பெரியார் அவர்கள், பொதுவாழ்க்கைக்கு வந்தார் என்றால், பதவிக்காகவோ, பவுசுக்காகவோ, சுகத்திற் காகவோ அல்ல. அதனை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதெல்லாம் எப்பொழுதே நிகழ்கின்ற ஒன்று. பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்களில், 99.99 சதவிகிதம் பதவிக்காக, பவுசுக்காக, அதிலே கிடைக்கின்ற சுகத்திற்காக - எந்தக் கட்சிக்குப் போனால், பெரிய பதவியை வாங்கலாம்; எந்தப் பதவியை வாங்கினால், அதன்மூலம் பொருளை ஈட்டலாம். எந்தக் கட்சியில் சேர்ந்தால், சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ செல்லலாம், மந்திரியாகலாம் என் றெல்லாம் கணக்குப் போட்டுத்தான் பொதுவாழ்வுக்கு வருகிறார்களே தவிர, இந்த அப்பாவி மக்களுக்கு, அறியாத மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, அடிமைத்தனத்தில் உழல்கின்ற மக்களுக்கு வழிகாட்டவேண்டும், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கவேண்டும், அவர்களை சுரண்டுகிற வர்களை எதிர்த்துப் போரிடவேண்டும், அதற்கான யுத்த களத்தை அமைத்திடவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தாடு பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள், லட்சத்தில் ஒன்று, கோடியில் ஒன்று. அந்தக் கோடியில் ஒருவர்தான் தந்தை பெரியார். எப்பொழுதாவது யுகத்திற்கு ஒரு தலைவர் தோன் றுவார், அப்படி தோன்றிய தலைவர்களில் ஒருவர்தான் தந்தை பெரியார்.
பதவிதான் முக்கியம், பவுசுதான் முக்கியம், புகழ்தான் முக்கியம், சொத்து சுகம்தான் முக்கியம் என்று கருதியிருந்தால், காங்கிரசு கட்சியிலேயே அவர் இளித்துக்கொண்டே, சிரித்துக் கொண்டே எப்படியோ நத்திப் பிழைத்திருப்பார். என்ன அவருக்கு சங்கடம் இருந்தது? காங்கிரசு கட்சியில் அவருக்கு என்ன மதிப்பில்லாமல் இருந்தது? அவர் நினைத்திருந்தால், எந்தப் பதவியையும் காங்கிரசு கட்சியில் பெற்றிருக்க முடியும். அவர் நினைத்திருந்தால், அன்றைய நிலையில், தமிழ்நாட்டில் உயர்ந்த பதவியை அவரால் பெற்றிருக்க முடியும். காங்கிரசு கட்சியிலேயே தொடர்ந்திருந்தால், காங்கிரசு கட்சியிலேயே நீடித்திருந்தால், அந்தப் பதவிகளையெல்லாம்விட உயர்ந்தப் பதவிகளை தேசிய அளவிலான பதவிகளைக்கூட அவரால் பெற்றிருக்க முடியும். ஆனால், தனக்கு நேர்ந்த அவமதிப்பால் அல்ல, காங்கிரசு கட்சியில் ஒடுக்கப்பட்டு இருக்கின்ற, உழைக்கின்ற மக்களுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், காங்கிரசு கட்சி மாநாட்டில், பார்ப்பன சமூகத்திற்குத் தனி தண்ணீர் குவளை - மற்றவர்களுக்குத் தனி தண்ணீர் குவளை என்கிறபொழுது,
வ.வே.சு. அய்யருடைய குருகுலத்தில், பார்ப்பன சமூகத் தைச் சார்ந்த குழந்தைகளுக்கு ஒரு தண்ணீர் பானை - மற்ற குழந்தைகளுக்கு வேறு தண்ணீர் பானை என்கிற தகவல் களையெல்லாம் அறிந்த பிறகு,
இப்படி ஒரு இழிவு ஜாதியின் பெயரால், பிறப்பின் அடிப் படையில் இந்த மண்ணில் நிகழ்கிறது என்கிறபோது, இதை யெல்லாம் சகித்துக்கொண்டு, இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்தக் கட்சியில், இந்த அரசியலில் நாம் நீடிக்க வேண்டுமா? என்று சிந்தித்தாரே, அதுதான் சுயமரியாதை.
சகிப்புத் தன்மை என்பதற்கும்
ஒரு வரையறை உண்டு
யாரோ ஒருவன் நரகலை அள்ளி வீசியபொழுது சகித்துக்கொண்ட அந்த சகிப்புத்தன்மை,
யாரோ ஒருவன் செருப்பை எடுத்து வீசியபொழுது, அதனை சகித்துக்கொண்ட அந்த சகிப்புத்தன்மை,
ஜாதியின் பெயரால், இந்தப் பேதத்தைக் கடைபிடிக்கிறார் களே என்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சகிப்புத் தன்மை என்பதற்கும் ஒரு வரையறை உண்டு. எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள முடியாது. சகிப்புத் தன்மை என்பதை இப்படிப் பொதுமைப்படுத்தி விட முடி யாது. பதவிக்காக, பவுசுக்காக எதையாவது சகித்துக் கொண் டிருக்க முடியாது.
சகிப்புத்தன்மைக்கான அளவுகோல் என்பது தன்மானம்
சகிப்புத்தன்மைக்கான அளவுகோல் என்பது சுயமரி யாதை.
பொங்கி எழுந்தார் பெரியார்;
குமுறி எழுந்தார் பெரியார்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் தன்மானம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறான். சுயமரி யாதை என்றால் என்னவென்று தெரியவில்லை. நெடுங் காலத்து அடிமைச் சமூகத்தில் பிறந்து, வளர்ந்து பழக்கப்பட்டு விட்டதால், அடிமைத்தனத்தைக்கூட உணர முடியாத வாழ்க்கை - சுதந்திரம் என்றால், என்னவென்று உணர முடியாத ஒரு வாழ்க்கை - சுயமரியாதை என்றால், என்ன வென்று உணர முடியாத வாழ்க்கை. அப்படிப்பட்ட நிலையில் கிடக்கிறவன் தன்னை அவமதித்தபொழுது அதனை சகித்துக் கொண்டார் தந்தை பெரியார். ஆனால், ஒரு கட்சி மாநாட்டி லேயே ஜாதி அடிப்படையில் அணுகிறார்கள் என்பதைப் பார்க்கிறபொழுது பொங்கி எழுந்தார் பெரியார்; குமுறி எழுந்தார் பெரியார்.
அதிலிருந்துதான் அவர் அரசியல் கட்சி என்கிற அந்தக் களத்திலிருந்து வெளியேறி, தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நாள்கூட மீண்டும் அரசியலுக்குப் போகலாம் என்று எண் ணாமல், பதவியைக் கண்டு சலனப்படாமல், ஊசலாடாமல், எடுத்த முடிவில், நிலைப்பாட்டில் உறுதியாக நின்று இறுதி மூச்சு வரையில் பாடுபட்டார்.
இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றபொழுது, இன் றைக்குத் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிற அரசியலாக இருந்தாலும், சமூகக் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற முரண்பாடுகளாக இருந்தாலும், மோதல்களாக இருந்தாலும், உரையாடல்களாக இருந்தாலும், அனைத்திற்கும் அடித்தளம் தந்தை பெரியார் என்பதை மறந்துவிடக்கூடாது.
அகில உலக அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
தந்தை பெரியாரை மய்யப்படுத்தித்தான், அவர் காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து, இன்றைக்கு 2017 ஆம் ஆண்டு திருமாவளவன் இந்த மேடையில் நின்று பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நொடிப்பொழுது வரையில், தமிழ்நாட்டின் சமூகமும், தமிழ்நாட்டின் அரசியலும், தமிழ் நாட்டின் பண்பாடும் தந்தை பெரியாரை மய்யப்படுத்தியே சுழன்று வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அது அகில இந்திய அளவில் பரவி, இன்றைக்கு அகில உலக அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
எல்லா காலத்திலும் மனிதர்களை நாம் ஏமாற்றிவிட முடியாது. காலப்போக்கில், நாளடைவில், அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவுபூர்வமாக சிந்திக்கத் தொடங்குகிறபொழுது, எது உண்மையோ, அதைத்தான் ஏற்பார்கள். நேற்று முன்தினம் நான் மருத்துவர் சேப்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ் வில் பேசுகின்றபொழுது ஒன்றைக் குறிப்பிட்டேன், இன் றைக்கு விடுதலையில் அதனைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்  மிகவேகமாக முன்னெடுத்துச் செல்கிறார்
தந்தை பெரியார் அவர்கள் மறைந்து, இத்தனை ஆண்டு கள் கடந்த நிலையிலும்கூட, நம்மிடையே அவர் இல்லை என்ற நிலையிலும்கூட, தந்தை பெரியார் அவர்கள் இருந்தால், எந்த அளவிற்கு வீரியம் குன்றாமல், இந்தக் கருத்தியல் பணியை, பரப்புகிற பணியை எடுத்துச் செல்வாரோ, அதைப் போல, அதைவிடப் பன்மடங்கு இன்றைக்கு நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்  மிகவேகமாக முன் னெடுத்துச் செல்கிறார்.
அவரைவிட என்று நான் சொல்வதற்குக் காரணம், அவர் காலத்தில், இன்றைக்கு இருந்த நவீன தொழில்நுட்பம் இல்லை. இன்றைக்குப் புதிய புதிய நவீன தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, பெரியாரி யலைக் கொண்டு செல்லுகிற ஆற்றல் பெற்றவராக தமிழர் தலைவர் அவர்கள் விளங்குகிறார்.
ஆகவே, அது இன்றைக்கு அதைவிட வேகமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அவருடைய கருத்தியலை அடைகாத்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திராவிடர் கழகத்திற்குப் பிறகு தமிழக அரசியல் என்பது, 50 ஆண்டுகாலம் திராவிட கருத்தியலை அடிப்படையாகக் கொண்டவர்கள்தான், பெரியாரின் அரசியலை அடிப்படையாகக் கொண்டவர்கள்தான் தமிழ்நாட்டை ஆள முடியும் என்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அது தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. அதனால்தான், அண்ணா அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும், இந்த ஆட்சியை, இந்த அரசை பெரியாரின் காலடியில், நான் காணிக்கையாக வைக்கிறேன் என்று நன்றி உணர்ச்சியோடு, நன்றிப் பெருக்கோடு, பெரியாரைப் பார்த்து ஆடை போர்த்தி தன்னுடைய நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் மாணவர் பேரறிஞர் அண்ணா என்பது உறுதிப்படுகிறது
கருத்தியல் முரண்பாடுகள் வரும்; அதனால், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு அரசியல் இயக்கம் உருவானது. தன்னுடைய தொண்டர்கள், தன்னுடைய சீடர்கள், தன்னுடைய மாணவர்கள், தன்னுடைய தம்பிகள் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிவிட்டார்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார்கள் என்று அந்த நேரத்திலும்கூட, ஆட்சியைப்பற்றியோ, பதவியைப் பற்றியோ கவலைப்படாதவர் தந்தை பெரியார்.
பொதுவாக மனித இயல்பு என்னவென்றால், நம்மகூட இருந்தான், அவன் அரசியலுக்குப் போய் முதலமைச்சராகி விட்டான். என்னிடம்தான் உதவியாளராக இருந்தான்; இன்றைக்கு நான் இப்படி இருக்கிறேன், அவன் அப்படி இருக்கிறான் என்று சொல்வது மனித இயல்பு.
ஆனால், அப்படி எண்ணாதவர் தந்தை பெரியார்; அதைவிட, பெரியாரால்தான் இந்த நிலைக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் பேரறிஞர் அண்ணா என்பதுதான். உண்மையிலேயே தந்தை பெரியாரின் மாணவர் பேரறிஞர் அண்ணா என்பது உறுதிப்படுகிறது.
இல்லையென்றால், அந்த இடைவெளியை அப்படியே அவர் வைத்திருக்க முடியும். பெரியாரைப் போய் பார்க்காமல் இருந்திருக்கமுடியும். பெரியாரை சந்தித்து, அவருடைய ஆட்சியைக் காணிக்கையாக்காமல் இருந்திருக்க முடியும். உலகமே வியந்து பார்த்திருக்கும். ராஜாஜி அவர்களையே அதிர வைத்தவர் பேரறிஞர் அண்ணா.
ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை என்று அண்ணா சொன்னார்
ராஜாஜியும், அண்ணாவும் சந்தித்துக் கொண்டபொழுது, ஏராளமான விமர்சனங்கள் வந்தன; ராஜாஜியும், அண்ணாவும் கூட்டணி வைத்தபொழுது கடுமையான விமர்சனங்கள் வந்தன. ராஜாஜியோடு கூட்டணி வைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை என்று அண்ணா சொன்னார்.
எல்லோரும் கேட்டார்கள் அண்ணாவைப் பார்த்து, இது சரியா? ராஜாஜி அவர்களோடு சேர்ந்தல்லவா வெற்றி பெற்றீர்கள்; இப்பொழுது பெரியாருக்குக் காணிக்கை என்று சொல்கிறீர்களே என்று கேட்டபொழுது,
இத்தனை ஆண்டுகாலம் எங்களை ஏமாற்றியது ராஜாஜி வாரிசுகளின் குணம்; ஒருமுறைதானே நாங்கள் ஏமாற்றியிருக்கிறோம், அதனால் என்ன? என்று அண்ணா சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆக, இதுதான் பெரியாரின் பண்பு. அண்ணாவிடமிருந்து வெளிப்பட்டது பெரியாரின் பண்பு. அது ஒரு யுக்தி; அது ஒரு ராஜதந்திரம். அதிகாரத்தைக் கைப்பற்றுவது நம்முடைய இலக்கு. அந்த அதிகாரம் யாருக்கானது என்றால், பெரியாரின் கொள்கைக்கானது, பெரியாரின் கோட்பாட்டுக்கானது.
பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் அவர்கள் சொன்னார்,
அண்ணா சாதித்துக் காட்டியது - பெரியாரின் வழியில் அவர் சாதித்துக் காட்டியது - சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டவடிவமாக்கியது; தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது; இருமொழிக் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள், அண்ணாவே சொன்ன சாதனைகள் என்று அந்த அரங்கிலே நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் நினைவூட்டினார்.
பெரியாருக்குக் கிடைத்த வெற்றி
சுயமரியாதைத் திருமணம் என்பது சட்டப்பூர்வமான ஒன்று என்பதை அண்ணாவால் நிலைநாட்ட முடிந்தது என்றால், அது பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. பெரியாரியம் எப்படியெல்லாம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்காக சொல்கிறேன்.
அண்ணா, பெரியாரின் மாணவனாக இல்லாதிருந்தால், மும்மொழித் திட்டத்தை அனுமதித்திருப்பார்.
அண்ணா, பெரியாரின் மாணவனாக இல்லாதிருந்தால், தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும்; இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்திருப்பார்.
அண்ணா, பெரியாரின் மாணவனாக இருந்ததினால்தான், இந்த சிந்தனைகள் அவருக்கு மேலோங்கி இருந்தது. அதே வழியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் அதனைக் கட்டிக் காத்தார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
தமிழர்களுக்கு ஏன் நீ தலைமை தாங்கவேண்டும்?
தந்தை பெரியார் அவர்களின் மொழி உணர்வு, இன உணர்வு என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. சிலர் அதைக் கொச்சைப்படுத்துகிறார்கள். அவரையே கேட்டிருக்கிறார்கள், தமிழர்களுக்கு ஏன் நீ தலைமை தாங்கவேண்டும்? என்று.
அந்த யோக்கியதை அவர்களுக்கு இல்லாமல் இருப்பதால், நான் தலைமை தாங்குகிறேன் என்றார்.
ஏன் அதை அவர் சொல்லவேண்டும்; அவர்களுக்கு அந்த அக்கறை இல்லாத காரணத்தினால், நான் அக்கறையோடு இருக்கிறேன் என்பதுதான் அதன் பொருள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் பேசவில்லை என்றால், திருமாவளவன்தான் பேசவேண்டும் என்பதல்ல, இதோ நான் பேசுகிறேன் என்று தமிழர் தலைவர் பேசினால், அதில் என்ன தவறு? பேசிக்கொண்டிருக்கிறார்கள், உதாரணத்திற்குச் சொல்கிறேன்.
ஆகவே, யாரும் பேசவில்லை என்கிறபொழுது, யாரும் கவலை கொள்ளவில்லை என்கிறபொழுது, யாரும் அக்கறை கொள்ளவில்லை என்கிறபொழுது, இந்த மக்களுக்காக அக்கறை கொண்டு, கவலை கொண்டு இந்தக் களத்திலே தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
தமிழ்மொழி சீர்திருத்தத்தைப்பற்றி நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் அங்கே எடுத்துச் சொன்னார், அதே அரங்கில்.
எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், பெரியாருடைய கருத்தியலுக்கும் முரண்பாடு உண்டு. ஆனாலும், பெரியாரின்மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்புண்டு. ஏனென்றால், அண்ணாவிற்குப் பெரியாரின்மீது மிகு மதிப்புண்டு. அண்ணாவை ஏற்றுக்கொண்டவர் எம்.ஜி.ஆர். எனவே, அண்ணா மதித்த பெரியாரை மதிப்பது எம்.ஜி.ஆரின் கடமை.
எழுத்தில் ஒரு சீர்திருத்தத்தைப் புகுத்தியவர் தந்தை பெரியார்
எனவே, பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை, உடனடியாக அரசுபூர்வமாக அங்கீகரித்தார் எம்.ஜி.ஆர்.
இன்றைக்கு நாமெல்லாம் பயன்படுத்தக்கூடிய தமிழ் எழுத்துகள் பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பட்டவை. யானைத் தும்பிக்கை மாதிரி எழுத்தை எழுதிக் கொண்டிருந்தோம். இன்றைக்கு இரட்டைக் கொம்புள்ள கை, லை போடுகிறோம்; யானைத் தும்பிக்கைப் போன்ற அந்த வடிவத்தை நீக்கி, இந்த வடிவத்தைக் கொண்டு, எழுத்தில் ஒரு சீர்திருத்தத்தைப் புகுத்தியவர் தந்தை பெரியார், அதனை அங்கீகரித்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னால், தமிழ்மீது அவருக்கு வெறுப்பு இருக்கிறது என்று சொன்னால், தமிழ் மொழியை மேம்படுத்தவேண்டும் என்று அவர் ஏன் சிந்திக்கவேண்டும்? தமிழ் மொழியில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். அதனால்தான், இன்றைக்குக் கணினி மொழியாக தமிழ் மாறியிருக்கிறது; உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரு அறிவியல் மொழியாக, கணினி மொழியாக தமிழ் உள்வாங்கப்பட்டதற்குத் தந்தை பெரியார்தான் காரணம் என்பதை, போலித் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்தி - இந்து - இந்தியா;  இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் பெரியாரியம்
தமிழ்த் தேசியம் என்பது வெறும் தமிழ் வாழ்கிற என்கிற ஒரு முழக்கத்தில் இல்லை. தமிழ்த் தேசியம் என்றால் என்னவென்று மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், தமிழ்த் தேசியம் என்பது - இந்திய தேசியத்திற்கு எதிரானது. அதிலிருந்து நீங்கள் தமிழ்த் தேசியத்தைப் புரிந்துகொண்டால்தான், அதிலுள்ள உள்ளடக்கத்தை உணர முடியும். வெறும் மொழி உணர்விலிருந்தும், இன உணர்விலிருந்தும் வெளிப்படுவதல்ல தமிழ்த் தேசியம். பெரியாரியம் என்றால், அது இந்திய தேசியத்திற்கு எதிரானது - பெரியாரியம் என்றால், அது இந்து தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேசியமும், இந்து தேசியமும் வேறு வேறல்ல. இந்தி தேசியமும் வேறல்ல.
இந்தி - இந்து - இந்தியா;  இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் பெரியாரியம் - இந்த மூன்றையும் எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம்.
எனவே, பெரியாரியம் = தமிழ்த் தேசியம்.
ஏனென்றால், பெரியாரியம்தான் ஜாதியை எதிர்க்கிறது-
பெரியாரியம்தான் ஜாதியைக் கட்டிக் காப்பாற்றி அதனைப் பரப்பிக் கொண்டிருக்கின்ற இந்துத்துவத்தை எதிர்க்கிறது -
பெரியாரியம்தான் இந்துத்துவத்தை எதிர்ப்பதன்மூலம், இந்திய தேசியத்தை எதிர்க்கிறது -
இதே பெரியார்தான், தமிழ்நாட்டை தனிநாடாக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாங்கள் தனி நாடு கோரிக்கையை எழுப்புவோம் என்று சொன்னவரும் பெரியார்தான்.
வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது என்றார் அண்ணா
வடவர் ஆதிக்கம் மேலொங்குகிறபொழுதெல்லாம் அவர் கொதித்திருக்கிறார். அவருடைய சிந்தனையிலிருந்துதான், வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது என்று அண்ணா பேசினார்.
அந்த சிந்தனையிலிருந்து தென்னாடு - திராவிட நாடு என்கிற கோரிக்கையை அண்ணா முன்வைத்தார்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஒன்று. ஒன்றிலிருந்துதான் மற்றொன்று. பெரியாரியத்திலிருந்துதான் இவை அனைத்தும் கிளைத்தன.
அண்ணாவின் சிந்தனைகளும், கலைஞரின் செயல்பாடுகளும் சரி அவையெல்லாம் பெரியாரியத்திலிருந்துதான், பெரியார் சிந்தனையிலிருந்துதான் கிளைத்தன.
ஆகவே, தமிழ்த் தேசியம் என்பதை வெறும் மொழி உணர்வாகவோ, இன உணர்வாகவோ மட்டுமே புரிந்துகொண்டால், அது வெறும் இனவாதமாக மாறும். அப்படி இனவாதமாக மாறுகிறபொழுதுதான், பெரியாரை வேற்று மொழிக்காரர் என்றும், புரட்சியாளர் அம்பேத்கரை மராத்தி மொழிக்காரர் என்று சொல்கிற அருவெறுப்பான அரசியல் வெளிப்படுகிறது.
அரசியல் அறியாமை 
பெரியாரையும், அம்பேத்கரையும் மொழியின் அடிப்படையில் ஒருவர் அந்நியப்படுத்த முயற்சிக்கிறார் என்றால், அதைவிட அறியாமை வேறு எதுவுமே இருக்க முடியாது - அரசியல் அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.
நான் தொடக்கத்தில் சொல்லியதைப்போல,
கட்சித் தலைவர்கள் ஒரு குறுகிய பகுதியினருக்குத் தலைவர்களாக இருக்கமுடியும் -
மதத் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மதத் தலைவர்களாக இருப்பார்கள் -
இனவாதிகள் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு இனவாதிகளாக இருப்பார்கள் -
ஜாதியவாதிகள் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குத் தலைவர்களாக இருப்பார்கள் -
மானுடத்தையும், மானுட நேயத்தையும் செழுமைப்படுத்துவதற்கான கோட்பாட்டை வழங்குகிற தலைவர்கள் உலகம் முழுவதும், அனைத்து வரம்புகளையும் தாண்டி தலைவர்களாக மிளிர்வார்கள்.
அந்த வரிசையில் வந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆக, தமிழ்த் தேசியம் என்பது, இந்திய தேசியத்தை எதிர்ப்பது என்பதை உணரத் தொடங்கினால், பெரியாரியத்தின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ள  முடியும்.
பெரியாரியத்தை ஆழமாகப் படிக்கத் தொடங்கினால்தான்....
பெரியார் அவர்கள் பிள்ளையார் சிலையை உடைத்தார்; அவர் இந்துக்களுக்கு எதிரி; அவர் கடவுள் இல்லை என்று சொன்னார். கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு எதிரி பெரியார் என்று, பெரியாரின் சிந்தனைகளைச் சுருக்கிப் பார்க்க சிலர் முயற்சிக்கிறார்கள்.
பெரியாரியத்தை ஆழமாகப் படிக்கத் தொடங்கினால்தான், ஏன் கடவுளை அவர் எதிர்க்கத் தொடங்கினார் என்று தெரியும்.
கடவுளைப் பயன்படுத்திக் கொண்டு, கடவுளின் பெயரால், இங்கு அனைத்துவிதமான ஆதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள், சுரண்டிக் கொண்டிருக்கிறார், மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள், தொடர்ந்து அவர்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கெல்லாம் பாதுகாப்பாக இருப்பது இந்தக் கடவுள் கோட்பாடு என்பதுதான், கடவுள் சிலைகள் என்பதுதான் - அதனைக் கொண்டிருக்கின்ற கோவில்கள் என்கிற அந்த இல்லங்கள்தான் என்பதை உணர்ந்ததினால், எதன்மீது இவன் அறியாமை கட்டி வைக்கப்பட்டிருக்கிறதோ, பிணைக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த அடையாளத்தையே நொறுக்குவது என்று தந்தை பெரியார் அவர்கள் சம்மட்டியைத் தூக்கினார்.
அந்தக் கடவுளை நான் காலால் மிதிக்கிறேன், என்னை என்ன செய்கிறது என்று பார்!
நீ கடவுளைக் கண்டுதானே பயப்படுகிறாய்; கடவுள் உன்னை இப்படி செய்துவிடுவார்; அப்படி செய்துவிடுவார் என்றுதானே உன்னை மிரட்டி வைத்திருக்கிறார்கள்; கடவுளைக் கண்டுதானே உனக்கு இவ்வளவு அச்சம்; மேற்கொண்டு எதையும் சிந்திக்காமல் இருக்கிறாய். அவர்களுடைய ஏய்ப்பு நடவடிக்கையை, மோசடி நடவடிக்கையை புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்; உன்னை ஏமாற்றுவதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். எந்தக் கடவுளைக் கண்டு நீ அச்சப்படுகிறாயோ, அந்தக் கடவுளை நான் காலால் மிதிக்கிறேன், என்னை என்ன செய்கிறது என்று பார்! என்னை ஒன்றும் செய்யவில்லையே!
கடவுள் இல்லை என்று நான் சொல்கிறேன்,
என்னை என்ன செய்துவிடுவார் கடவுள் என்று பார்.
கடவுள் என்னை எதுவும் செய்யமாட்டார் - நான் துணிந்து செய்கிறேன், நீயும் துணிந்து வா!
இதுதான் தந்தை பெரியார் விட்ட சவால்! ஒடுக்கப்பட்டவர்களுக்கு, உழைக்கின்றவர்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு, பாமர மக்களுக்கு விடுத்த அழைப்பு - அறைகூவல்!
எதைக் கண்டு நீ அச்சப்படுகிறாயோ, அந்த அச்சம் போலியானது. திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. உன்மீது திணிக்கப்பட்டது - அச்சப்படாதே! கடவுளைக் கண்டு அச்சப்படாதே! பேய், பில்லி, சூனியம் கண்டு அச்சப்படாதே! நரகம் - சொர்க்கம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள். இவற்றையெல்லாம் நீ நம்பவேண்டும் என்பதற்காக, அவர்கள் உருவாக்கி வைத்துள்ள கட்டுக்கதைகள்தான் புராணக்கதைகள். எனவே, இவற்றையெல்லாம் நீ நம்பாதே!
பெரியாரியம் உலகம் முழுவதும் பரவியினால்,
இதுதான் தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் இந்தக் களத்திலே செய்த துணிச்சலான போராட்ட நடவடிக்கைகள்.
பேசிக்கொண்ட போகலாம், தந்தை பெரியாரின் சிந்தனைகள் மிக ஆழமானவை - மிகப்பரந்தவை. உலகம் முழுவதும் பரவவேண்டியவை. பெரியாரியம் உலகம் முழுவதும் பரவியினால், மனிதநேயம் தழைக்கும் - சுயமரியாதை தழைக்கும் - ஜனநாயகம் தழைக்கும் - சமத்துவம் தழைக்கும் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.
அனைத்துத் தளங்களுக்கும் வழிகாட்டக்கூடிய
ஒரு ஆளுமைதான் தந்தை பெரியார்
பழகுகிறவர்கள் நம்மிடத்திலே நன்றாகப் பழகவில்லை என்றால், மனம் திறந்து பேசவில்லை என்றால், அன்பொழுக நம்மிடத்திலே அணுக வில்லை என்றால், மனம் வாடிவிடுகிறது; முகம் வாடிவிடுகிறது. ஆகவே, வெறுப்பும், சலிப்பும் மனித னுடைய இயற்கை; சராசரி மனிதனுடைய இயற்கை. பொதுவாழ்க்கையில் இது மிகமிக அதிகம். நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாது. பொதுவாழ்க்கையில் நாம் நினைப்பதைப்போல், எல்லோரும் நடந்து கொள்வதில்லை. நாம் நினைப்பதுபோல், எல்லோரும் நம்முடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வருவ தில்லை. அதனால், பொதுவாழ்க்கையில் வெறுப்பும், சலிப்பும் மிக அதிகமாக ஏற்படும். அதிலும், அரசியல் என்பதில் இன்னும் கடினமானது. சமூகம், அரசியல், பண்பாடு இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். அரசியல் இயக்கத் தலைவர்கள் அரசியல் தளத்தில் மட்டும்தான் பணியாற்றுவோம். தந்தை பெரியார் போன்ற கோட்பாட்டுத் தலைவர்கள், சமூகத் தளத்திலும் பாடாற்றவேண்டும்; அரசியல் தளத்திலும் பாடாற்றவேண்டும்; பண்பாட்டுத் தளத் திலும் பாடாற்றவேண்டும் என்று அனைத்துத் தளங் களுக்கும் தலைமை கொடுப்பது.
அதுதான் பெரியார் என்கிற தலைவருக்கும், ஒரு கட்சித் தலைவருக்கும் உள்ள வேறுபாடு. ஆக, சமூகத் தளத்திலும் அவர் தலைவராக நிற்கவேண்டும்; மக்களை வழிநடத்தவேண்டும். அரசியல் தளத்திலும், அரசியல் இயக்கங்களை வழிநடத்தவேண்டும், வழி காட்டவேண்டும். இந்தப் பண்டிகைகளை ஏன் கொண்டாடுகிறீர்கள், இவை எல்லாம் மூடத்தன மானது என்று பண்பாட்டுத் தளத்திலும், மாற்று வழியை மக்களுக்குச் சொல்லவேண்டும். இந்த மூன் றோடும் பின்னிப் பிணைந்ததுதான் பொருளாதாரத் தளமும்கூட. அதிலும் வழிகாட்டவேண்டும். இப்படி அனைத்துத் தளங்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு ஆளுமைதான் தந்தை பெரியார் அவர்கள்.
ஆகவே, இதில் இன்னும் அதிகமான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும், சோர்வும் ஏற்படுவது இயற்கை. ஆனால், கடைசி மூச்சுவரையில், தான் எடுத்துக் கொண்ட லட்சியத்திலிருந்து வழுவாமல், தான் அடையவேண்டிய இலக்கை நோக்கி, வீரியம் குன்றாமல், வேகம் குறையாமல் பணியாற்றிய பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.
சோர்வடைகிற பொழுதெல்லாம் நாம் மீண்டும் அதிலிருந்து மீளவேண்டும்; வீரியத்தோடு பணியாற்ற வேண்டும் என்றால், தந்தை பெரியார் அவர்களையும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் நாம் நெஞ்சிலே நினைத்துக் கொள்ளவேண்டும்.
-விடுதலை,20.9.17

வியாழன், 21 செப்டம்பர், 2017

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நன்றி அறிவிப்பு!

    

                        தென் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற 
                      தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
                                                                நன்றி அறிவிப்பு  


       







17.9.17 மாலை திருவல்லிக்கேணி சேக்தாவூத் தெருவில்  நடைபெற்ற தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மாநாடுபோல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய  உழைத்த; இன்னிசை நிகழ்ச்சி நடத்திய அறிவாணன் இசைக் குழுவினருக்கும், வீர விளையாட்டுகளை நிகழ்த்திக்காட்டிய பெரியார் வீர விளையாட்டுக் கலைக் குழுவை சேர்ந்த அமைப்பாளர் சி.பரசுராமன் மற்றும் ஆர்.ரஜினி, வி.விஜயகாந், எஸ்.சந்துரு, எம்.எழில் அரசன், அறிவரசு,அன்பரசு, அழகுராசு, அறிவு,தி.திலீபன், தி,தீபக், மு.நவீன்ராஜ், மு.தேவதர்ஷினி, பா.சித்தார்த் கோவந் மற்றும் கடை வசூல், துண்டறிக்கை வழங்கல், விளம்பர பிரச்சாரம் செய்த கோ.வீ.ராகவன், தரமணி கோ.மஞ்சநாதன், மு.திருமலை, மு.பவானி, கு.பா.அறிவழகன், மு.முகிலன், ந.மணித்துரை மற்றும் நெகிழித்திரைகளை வடிவமைத்த சா.மகேந்திரன், ஒலி-ஒளி மேடை அமைப்பை கவனித்துக் கொண்ட அலெக்ஸ் ஒலி-ஒளி அமைப்பகம், பெரியார் சேகர் மற்றும் சுவர் எழுத்து விளம்பரம் ஓவியர் சுந்தரபிரதாபன் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.





                                      செயலாளர்                                     தலைவர்
                                      செ.ர.பார்த்தசாரதி                               இரா.வில்வநாதன்

திங்கள், 18 செப்டம்பர், 2017

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா


மாநாடுபோல் எழுச்சியுடன் நடைபெற்ற

பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்



சென்னை, செப். 18- உலகத் தலைவர் தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள்விழாவை யொட்டி சென்னை திருவல் லிக்கேணி (அய்ஸ் அவுஸ்) சேக்தாவூத் தெருவில் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் நேற்று (17.9.2017) மாலை மாபெரும் பொதுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை யில் நடைபெற்றது.

சென்னை இராயப்பேட்டை அய்ஸ் அவுஸ் பகுதியை இணைக்கின்ற பெசன்ட் சாலையின் இருமருங்கிலும்  கழகக் கொடிகள், மின்விளக் குத் தோரணங்கள் அமைக்கப் பெற்று அறிவுலக ஆசானின் பிறந்த நாள் விழா கொண் டாட்டத்தை பறை சாற்றின. தந்தை பெரியார் முழு உரு வத்தில் வண்ண மின்விளக் குகள் அமைக்கப்பெற்று அனை வரின் கவனத்தை ஈர்த்தன. தந்தை பெரியார் பிறந்த நாள்விழா மாநாட்டுக்குரிய ஏற்பாடுகளுடன் எழுச்சியாக நடைபெற்றது.

தென்சென்னை, வட சென்னை, ஆவடி, கும்மிடிப் பூண்டி, தாம்பரம் உள்ளிட்ட கழக மாவட்டங்களின் பொறுப் பாளர்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா எனும் திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவில் பெருமளவில் திரண்ட பொதுமக்கள் தமிழர் தலைவர் உரையை கடைசி வரையிலும் இருந்து கேட்டு பயன்பெற்றனர்.

வீரவிளையாட்டுகள்

தொடக்க நிகழ்வாக கழக மாணவரணி, இளைஞரணியினருடன் பெரியார் பிஞ்சு களும்  இணைந்து நிகழ்த்திக் காட்டிய தற்காப்புக்கலை,   வீர விளையாட்டுகள், சிலம் பாட்ட வீரர்களின் தீப்பந்தங் களுடன் கூடிய சிலம்பாட்ட சாகசங்கள் நடைபெற்றன.

மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி வரவேற்றார்.

சென்னை மண்டல செய லாளர் வி.பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பொன்னேரி செல்வி உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர் கள்.

இறுதியாக தந்தை பெரியார் உருவப்படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  எழுச்சியுரையாற் றினார்.

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் பயனாடை அணிவித்தார்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்கு ரைஞரணித் தலைவர் த.வீர சேகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங் கரை ஆர்.டி.வீரபத்திரன், ஆவடி மாவட்டச் செயலாளர் சிவக்குமார், வடசென்னை மாவட்டச் செயலாளர் தே. ஒளிவண்ணன், துணைசெய லாளர் கி.இராமலிங்கம், தென்சென்னை இளைஞரணித் தலைவர் செ.தமிழ்சாக்ரட் டீஸ், மகளிரணி வி.வளர்மதி,  சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, பி.அஜந்தா, பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில்குமாரி, சீர்த்தி, பூவை செல்வி, கலைமதி, மு.பவானி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஜெயந்தி,  சைதை மதியழகன், கோவீ.ராகவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், செந்துறை இராசேந்திரன், கு.செல்வேந் திரன், சண்முகப்ரியன், திரு மலை, பொறியாளர் ஈ.குமார், பிரபாகரன்,  சேகர், பெரி யார்மாணாக்கன்,    இராமலிங் கம், புழல் ஏழுமலை, தாம் பரம்  சீ.இலட்சுமிபதி, மோகன் ராஜ், செயராமன், குணசேக ரன், தரமணி மஞ்சுநாதன், இ.ப.இனநலம் உள்பட ஏரா ளமானோர் விழாவில் பங் கேற்றனர். இளைஞரணி செய லாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

-விடுதலை,18.9.17

சென்னை-திருவல்லிக்கேணியில் தமிழர் தலைவர் ஆசிரியர்

ஏன் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார் - நாளைக்கும் தேவைப்படுகிறார்? ஜாதி இல்லா நாடு - சாமியார்கள் இல்லாத நாடு - நோயில்லாத வீடு இவைகளை உருவாக்குவோம்!

சென்னை-திருவல்லிக்கேணியில் தமிழர் தலைவர் ஆசிரியர்



சென்னை, செப்.18  ஜாதி இல்லா நாடு - சாமியார்கள் இல்லாத நாடு - நோயில்லாத வீடு போன்றது. - இவைகளை உருவாக்குவோம். இளைஞர்களே, நீங்கள் இந்தப் பக்கம் வாருங்கள் - பெரியார் பக்கம் இப்பொழுது வந்திருக்கிறீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
17.9.2017 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நீண்ட இடைவெளிக்குப் பின்



நம் விழிகளைத் திறந்த வித்தகர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்ற இந்தப் பெருவிழாவில் ஒரு அற்புதமான சிந்தனை விருந்தை, கொள்கைப் பரப்புதலை நடத்துதலுக்கு ஏற்ப சிறப்பான திட்டத்தை நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கே அமைத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதற்குக் காரணமான தென்சென்னை மாவட்டத் தலைவர் அருமைத் தோழர் இரா.வில்வநாதன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் தோழர் செ.ர.பார்த்தசாரதி அவர்களே,
முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மண்டலத் தலைவர் ரத்தினசாமி அவர்களே, மண்டலத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எம்.பி.பாலு அவர்களே, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் அவர்களே, ஆவடி மாவட்டத் தலைவர் தென்னரசு அவர்களே, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அவர்களே, தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் மதியழகன் அவர்களே, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் அவர்களே, தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் செங்குட்டுவன் அவர்களே, துணை செயலாளர் கோ.வீ.ராகவன் அவர்களே, துணை செயலாளர் சா.தாமோதரன் அவர்களே, தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ் சாக்ரட்டீஸ் அவர்களே, மண்டல இளைஞரணி செயலாளர் இரா.சிவசாமி அவர்களே,
கொள்கைபூர்வமான ஒரு சிறப்பான ஆய்வுரை
எனக்குமுன்னாலே மிகப்பெரியதொரு கொள்கைபூர்வ மான ஒரு சிறப்பான ஆய்வுரை போல, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய மிகச் சிறப்பான கொள்கை வாழ்க்கை - தொண்டு வாழ்க்கை - மிகப்பெரிய அளவிற்கு எதிர்நீச்சல் வாழ்க்கை - இவைகள் எல்லாம் எப்படிப்பட்ட தனித்தன்மையானது- அவை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதையெல்லாம் மிக அற்புதமாக இங்கே எடுத்துச் சொன்ன, என்னருஞ் சகோதரர் நம்மிடையே என்றென் றைக்கும் இணை பிரியாது இருக்கக்கூடிய கொள்கை பரப்புகின்ற பணியின் தளபதிகளில் ஒருவராக இருக்கக் கூடிய தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
அதேபோல, இன்னொரு பக்கத்தில் எப்பொழுதும் இந்தக் கொள்கையில் மாறாது தமிழகத்தில் மிகப்பெரியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்பிற் குரிய மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் எனக்குமுன் உரையாற்றிய கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,
அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, பொதுமக்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிறப்பான நிகழ்ச்சி வழமைபோல், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழா என்று சொன்னால், ஒவ்வொரு ஆண்டும் அய்யா அவர்களுக்கு, இதுபோல் விழா என்று சொல்லக்கூடிய நிலையில், இன எதிரிகள் எப்படி எல்லாம் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை நம் முடைய அருமைச் சகோதரர் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்.
இறந்துபோன பெரியாருக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா? என்று கேட்டார்கள்
அவர்கள் ஏராளமான செய்திகளை அவருடைய முகநூலில் பதிவு செய்து ஒவ்வொரு நாளும் சொல்கிறபொழுது, ஒரு எதிர்ப்புக் குரல் வந்தது - இறந்துபோன பெரியாருக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா? என்று கேட்டார்கள் என்றும், அதற்கு அவர்கள் பதிலும் சொன்னார்கள் - அதில், கடவுள்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்களே என்று!
அதைவிட மிகச் சிறப்பானது என்னவென்றால், கடவுள் களை அவர்கள் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் வாழவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் கடவுளை உருவாக்குவது, பிறகு அவைகளைக் கொண்டு வந்து கடலில் கரைப்பது என்பது இந்தப் பகுதிக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை - இங்குதான் அடிக்கடி பிரச்சினை வரக்கூடிய ஒரு பகுதி.
பக்தி வந்தால் புத்தி போய்விடும்; 
புத்தி வந்தால் பக்தி போய்விடும்
ஒவ்வொரு ஆண்டும் களிமண்ணால் கடவுள்களை உருவாக்குகிறார்கள். விநாயகனுக்கு - விநாயகர் சதுர்த்தி; ராமனுக்கு - ராம நவமி; கந்தனுக்கு - சஷ்டி; கிருஷ்ணனுக்கு - கோகுலாஷ்டமி என்று சொல்வார்கள்.
ஆனால், அதேநேரத்தில் எவ்வளவு பெரிய முரண்பாடு. பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று தந்தை பெரியார் அவர்கள் எளிமையாக சொல்வார்.
அதற்கு ஒரு உதாரணம் என்னவென்றால், ராமன் பிறந்ததாக அவர்கள் குறிப்பிடுவது நவமியில்,
கற்பனைதான் என்றாலும், கிருஷ்ணன் பிறந்ததாக அவர்கள் குறிப்பிடுவது அஷ்டமியில்,
ஆனால், அஷ்டமி, நவமியில், நல்ல காரியம் எதையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். திராவிடர் கழகத்துக் காரர்கள் இதை சொன்னால், நியாயம். ஏனென்றால், இந்த இரண்டு கடவுள்களும் பிறந்துதான் ஜாதியைக் காப்பாற்றி னார்கள்.
மனுதர்மத்திற்கும், 
மனித தர்மத்திற்கும்தான் போராட்டம்!
சம்பூகனுக்கு தலையை வெட்டினார்கள் - ஏன் தலையை வெட்டினார்கள். இதோ என் கையில் இருப்பது அசல் மனுதர்ம நூல்.
இப்பொழுது நடக்கின்ற போராட்டமே மனுதர்மத்திற்கும், மனித தர்மத்திற்கும்தான். பெரியார் ஏன் இன்னமும் தேவைப் படுகிறார்? ஏன் நாங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறோம்? வெளித் தோற்றத்தில் அரசியல் போன்று தெரியும். ஏன் எச்.ராஜாக்களால் வெற்றி பெற முடியவில்லை தமிழ்நாட்டில்? எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தினாலும், ஏன் எச்.ராஜாக் களால் வெற்றி பெற முடியாமல் போனது?
எச்.இராஜாக்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் - ராஜாக்கள் வெறும் எச்.இராஜாக்களாக இருக்கவேண்டுமே தவிர, மந்திரிகளாக வர முடியாது என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மனுதர்மத்தை நிலை நாட்டவேண்டும் என்று நினைத்தார்கள். அந்த மனுதர்மத்தின் அடிப்படை என்னவென்றால்,
அசல் மனுதர்மத்தில்...
317, 9 ஆவது அத்தியாயத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்றால்,
‘‘வைதீகமாக இருந்தாலும், லவுகீகமாக இருந்தாலும், அக்னியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம்.’’
இதைத்தான் மறுபடியும் ஆட்சி முறையாகக் கொண்டு வரவேண்டும் என்று துடிப்பதுதான் பா.ஜ.க. அதுதான் ஆர்.எஸ்.எஸ்.
அதனை எதிர்ப்பவர்கள் நாங்கள் எல்லாம், முட்டாள் பயலை முட்டாளாகவே பாரு; அவனை கடவுளாக்காதே என்று சொல்பவர்கள்.
இப்பொழுது மூடர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? அதனுடைய அடிப்படை என்ன? என்பதை நீங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
‘‘ராமா, உன்னுடைய ஆட்சியில் 
அதர்மம் இருக்கிறது’’
இராமாயணத்தில், உத்தரகாண்டம் என்கிற பகுதியில், வால்மீகி இராமாயணத்தில் பிறகு, இதனை அகற்றி விட்டார்கள்; கம்பராமாயணத்தில் அந்தப் பகுதி கிடையாது.
கடைசியாக, ராம ராஜ்ஜியம் நடக்கிறது. அந்த ராம ராஜ்ஜியத்தினுடைய தத்துவம் என்ன என்று சொன்னால், ராமன் எல்லாவற்றையும் பிடித்து ஆள்கிறார். அப்பொழுது, அவரு டைய சபைக்குமுன், பார்ப்பனர்கள் ஒரு இறந்த பையனின் உடலைப் போட்டுவிட்டு, ‘‘ராமா, உன்னுடைய ஆட்சியில் அதர்மம் இருக்கிறது’’ என்கிறார்கள்.
ஏன் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்? நாளைக்கும் தேவைப்படுகிறார்; இப்பொழுதும் தேவைப்படுகிறார்; எப்பொ ழுதும் தேவைப்படுவார் என்பதற்கு அடையாளம் என்ன வென்று கேட்டால், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி,
இறந்த பையனின் உடலைப் போட்டுவிட்டு, ராமா உன்னுடைய ஆட்சியில் அதர்மம் இருக்கிறது; அதனால்தான் இந்தப் பையன் இறந்துவிட்டான் என்கிறார்கள்.
இதனை நாங்கள் எழுதவில்லை; ஈரோட்டில் அச்சடித்த தில்லை; முரசொலி அலுவலகத்தில் அச்சடித்ததில்லை; கோபால புரத்தில் அச்சடித்ததில்லை; பெரியார் திடலில் அச்சடித்ததில்லை.
உடனே ராமன் கேட்கிறான், என்னவென்று?
உன்னுடைய ஆட்சியில் தர்மம் கெட்டுப் போய்விட்டது என்கின்றனர் பார்ப்பனர்கள்.
என்ன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று ராமன் கேட்கிறான்.
சூத்திரன், கடவுளாக வணங்கவேண்டியது பிராமணர்களைத் தான். அதைவிட்டு, சம்பூகன் என்கிற சூத்திரன், கடவுளை நேராகப் பார்க்கவேண்டும் என்று கண்களை மூடிக்கொண்டு தவம் செய்கிறான். அதனால் தர்மம் கெட்டுப் போய்விட்டது. அவன் யாரைத் தொழவேண்டும் - பிராமணர்களைத்தான் தொழவேண்டும். ஆகவே, நீ உன் தர்மத்தை நிலைநாட்டவில்லை என்று சொல்கிறார்கள்.
அப்படியா?
விசாரணையே கிடையாது - விசாரணையே செய்யாமல், அங்கே சென்று, வாளை எடுத்து சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறான்.
எனவே, சூத்திரன் கடவுளை நேரடியாக வணங்கக்கூடாது என்கிற தத்துவம் இருக்கிறதே, அந்தத் தத்துவம்தான் என் றைக்கும் நிலைநாட்டப்படவேண்டிய தத்துவம் என்பதினுடைய அடிப்படையில்தான்,
நீட்டாக இருந்தாலும் சரி, நவோதயா பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி அவை அத்தனைக்கும் இந்த அடிப்படைதான். எனவே, மீண்டும் மனுதர்மம் வரவேண்டும் என்று வெளிப் படையாகவே அவர்கள் சொல்கிறார்கள். இதனை நம்மாட்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். நம்முடைய கையைக் கொண்டே, நம்முடைய கண்களைக் குத்துகிறார்கள். அதற்கும், ராமாயணத்தைத்தான் உதாரணமாகச் சொல்கிறான்.
அனுமாருக்கு என்ன வேலை என்றால், இராவணனுக்குத் தீ வைத்துவிட்டு, கடைசியாக வந்தான் என்றால், அவனுக்குப் பக்கத்தில்கூட ராமன் இடம் கொடுக்கமாட்டான், கீழேதான் அனுமார் உட்கார்ந்திருப்பான்.
விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டம் - இவை அத்தனையும் கொடுக்கக்கூடிய அளவில் இருந்ததினால், இதை அத்தனையும் சொல்லிப் பார்த்து, ராமாயணமா? அதனுடைய அடிப்படை என்ன? என்று அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஏன் இந்து மதத்தை மட்டும் 
தாக்கிப் பேசுகிறீர்கள்?
தந்தை பெரியார் அவர்கள், ஏன் ராமனைப்பற்றியும், கிருஷ்ணனைப்பற்றியும் சொன்னார். சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், ஏன் இந்து மதத்தை மட்டும் தாக்கிப் பேசுகிறீர்கள் என்று. எங்கே புண் இருக்கிறதோ, அங்கேதானே மருந்து போடவேண்டும். எங்கே எனக்கு வேதனை இருக்கிறதோ, அங்கேதானே நான் ஆபரேட் செய்வேன்.
அந்த மதத்தில் ஊழல் இருக்கிறது, நீ ஏன் பேசவில்லை என்றால், நீ அதைப்பற்றி பேசு - நான் இதைப் பேசுகிறேன். எங்கே குப்பை இருக்கிறதோ - என்னுடைய வீட்டில் இருக்கும் குப்பையைத்தானே நான் எடுப்பேன், அதுதானே முக்கியம்.
பெரியாருடைய சிந்தனைகளைப்பற்றி நம்முடைய சுப.வீ. அவர்களும், நம்முடைய தொல்.திருமாவளவன் அவர்களும் சொன்னார்கள்.
பெரியாருக்கும், கடவுளுக்கும் 
சண்டையா என்ன?
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார்; பெரியார் பார்ப்பானை வைதார் என்று இரண்டே வார்த்தையில் சிலர் புரியாமல் சொல்கிறார்கள்.
கடவுள் இல்லை என்று பெரியார் அவர்கள் சொல்ல வேண் டிய அவசியம் ஏன் வந்தது? கடவுளுக்கும், அவருக்கும் சண் டையா? பாகப் பிரிவினையா? இன்னுங்கேட்டால், பெரியார் அவர் கள், கடவுள் இருக்கிறார் என்று சொல்லியிருக்கவேண்டாம்.
அய்யா அவர்களே சொல்லியிருக்கிறார், இருக்கிறாரோ, இல்லையோ என்று தெரியாது என்று கொஞ்சம் நகர்ந்திருந்தார் என்றால், தந்தை பெரியார் படத்தை இங்கேயா திறந்திருப்போம் - பார்த்தசாரதி கோவிலின் உள்ளே அல்லவா வைத்திருப்பார்கள்.
என்னுடைய படம் ஒவ்வொரு பார்ப்பான் வீட்டிலும் தொங்குமே!
அவரே சொன்னார், ‘‘நான் மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தேன் என்றால், பார்ப்பான் சும்மா இருப்பானா? உங்களிடம் இவ்வளவு கெட்ட பெயர் வாங்குவேனா? இவ்வளவு செருப்படிபடுவேனா? மலத்தை அள்ளி வீசியிருப்பார்களா? என்னை ‘‘ஆழ்வாராக’’ ஆக்கியிருப்பார்களே - ‘‘பதினோராவது அவதாரமாக்கி இருப்பார்களே என்னை  - என்னுடைய படம் ஒவ்வொரு பார்ப்பான் வீட்டிலும் தொங்குமே - ஒவ்வொரு பாப்பாத்தியும் அதற்கு முத்தமும் கொடுப்பாளே!’’ என்றார்.
எதற்காக இதனை சொல்கிறேன் என்றால், ஏன் பெரியார் அந்த அளவிற்குக் கெட்டப் பெயர் எடுக்கவேண்டும்? இன்ன மும் அந்தக் கெட்ட பெயர் எங்களுக்கு இருக்கிறது.
திருமா அவர்கள் மிக அழகாக இங்கே சொன்னார்- தந்தை பெரியார் அவர்கள் ஆசாபாசம் இல்லாதவர். எல்லோரும் அரசியல் வேண்டும் என்று பதவிக்குப் போவார்கள் - பதவிக்குப் போகவேண்டும் என்பதற்காக அரசியல்.
அரசியலில் என்ன பெருமை இப்பொழுது? சரியானவர்கள் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுக்கு ஆசை. ஏனென் றால், வேறொருவன் அந்த இடத்தில் வந்து அமர்ந்துவிடக்கூடாது என்பதுதானே தவிர, இவர்கள் போய்விட்டால், எல்லாமே முடிந்துவிடும் என்று அர்த்தமல்ல.
அண்ணா அவர்களே சொன்னார், ‘‘ஏதோ அரசியலுக்கு வந்து பதவியில் அமர்ந்துவிட்டேன். நீங்கள் நினைத்தை எல்லாவற்றையும் செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டேன்.  உங்கள் பின்னாலேயே வரவா? இங்கேயே இருந்துகொண்டு செய்யவா?’’ என்று அய்யாவை வைத்துக்கொண்டு சொன்னார்.
பெரியார் சொன்னார், ‘‘அய்ந்தாண்டுகளில் ஒரு நாள், ஒரு மணிநேரம், ஒரு நொடிகூட நீங்கள் சலிக்கக்கூடாது’’ என்றார்.
அந்தப் பணியை கலைஞர் அவர்கள் தொடர்ந்து செய்தார்
ஆனால், அண்ணா அவர்கள் இல்லாவிட்டாலும், அந்தப் பணியை நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து செய்தார். இன்றைக்கும் அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது - நாளைக்கும் அது நடக்கவேண்டும்.
எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வேலை? நாங்கள் எல்லாம் துப்புரவுத் தொழிலாளர்கள். துப்புரவு தொழிலாளர் களைவிட உயர்ந்த பணியாளன் யாரும் கிடையாது.
அமெரிக்காவில் மட்டும் 10 இடங்களில் பெரியார் பிறந்த நாள் விழா!
பெரியார் ஏன் தேவைப்படுகிறார்? ஒவ்வொருவரும் மிகப்பெரிய அளவில் உணருகிறார்கள். எந்த ஆண்டுகளிலும் இல்லாமல், இந்த ஆண்டு பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவினை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். ஆஸ் திரேலியாவில், சிங்கப்பூரில், மலேசியாவில், அமெரிக்காவில் மட்டும் 10 இடங்களில் கொண்டாடி இருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
நோய் நிறைய பரவ ஆரம்பித்தால், டாக்டர்களுக்கும், மருந்துகளுக்கும் இங்கே வேலை அதிகம் என்று அர்த்தம்.
எல்லா பல்கலைக் கழகங்களிலும் இரண்டு தலைவர்களு டைய அமைப்புதான், காலத்தைத் தாண்டி நின்று கொண்டி ருக்கிறது. இளைஞர்களுக்கு கலங்கரை வெளிச்சம்போல - அறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றால்,
ஒன்று தந்தை பெரியார் -
இன்னொன்று பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்.
எங்கே பார்த்தாலும், மாணவர்கள் மத்தியில் பெரியார் - அம்பேத்கர் என்று காஷ்மீரிலிருந்து ஆரம்பிக்கிறது.
அம்பேத்கர் என்றால்கூட கொஞ்சம் விட்டுவிடுவான்; பெரியார் என்று சொன்னவுடன், அலறுகிறான். அம்பேத்கரை மட்டும் விட்டு விடுகிறார்கள் - ஏனென்றால், அம்பேத்கரை சாயமடித்துக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், திருமா வளவன் அவர்கள் இருக்கும்வரை அது ஒருபோதும் நடக்காது; வீரமணிகள் இருக்கிறார்கள் மறந்துவிடாதீர்கள்; சுப.வீரபாண்டியன் இருக்கிறார்கள் மறந்துவிடாதீர்கள். எங் களுக்கு இதுதான் வேலை.
ஆவிகள் ஒருபக்கம் - பாவிகள் ஒரு பக்கம்
இன்றைய அரசியலைப் பார்த்தால் மிகவும் அசிங்கமாக இருக்கிறதே - நாங்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக் கிறோம் தெரியுமா? அவர்கள் எல்லாம் கொஞ்சம் கவலையாக இருப்பார்கள். நாங்கள், திராவிடர் கழகத்துக்காரர்கள் மகிழ்ச்சி யாக இருக்கிறோம்.
அதற்குமுன் ஆளோடு அரசியல் செய்தார்கள்; இப்பொழுது ஆவியல்லவா இருக்கிறது. ஆவிகள் ஒருபக்கம் - பாவிகள் ஒரு பக்கம்.
ஆவிகள் என்ன செய்யும் என்று, பாவிகள் எல்லாம் ஜோசியம் பார்க்கிறார்கள். ஆவி வந்து தண்டிக்கும் என்கிறார்கள்.
அதற்குமுன் ஆத்மாவே கற்பனை என்று அய்யா சொன்னார். கீதையின் மறுபக்கம் என்று புத்தகம் எழுதினேன் பாருங்கள் - அய்யா அவர்களும், அம்பேத்கர் அவர்களும்  கீதையை கண்டித்த அளவிற்கு வேறு யாரும் கண்டிக்கவில்லை. கீதையைக் கண்டிப்பது என்பது இருக்கிறதே, அது யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல.
கடவுளை நம்புகிறவரையிலும், 
ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்?
‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’ - நான்கு ஜாதிகளையும் நான் தான் உருவாக்கினேன். அந்தக் கடவுளை நம்புகிறவரையிலும், ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்? என்று பெரியார் கேட்டார்.
கொசுக்களை அழிக்கவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? கொசு வராமல் இருக்க மருந்து வைத்தால் போதுமா? கொசுக்கள் சாக புதிது புதிதாக கொசுவர்த்தி மருந்தை கண்டு பிடித்திருக்கிறான்; அது பெரிய தொழிலாக இருக்கிறது. யாருக்கு லாபம்? கொசு வர்த்தி செய்கின்ற தொழிற்சாலைகளுக்குத்தான் லாபம்.
நிறைய பேர் ஜாதி சங்கம் வைத்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் கொசுவர்த்தி வியாபாரிகள். அவர்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள் அல்ல - ஜாதி ஒழிப்புக்காரர்கள் எங்களைப் போன்றவர்கள்தான். ஏனென்றால், நாங்கள் ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காக - சாக்கடை எங்கே இருக்கிறது? கொசு எங்கே முட்டையிடுகிறது? அங்கே சென்று மருந்தடிக்கவேண்டும் என்று சொல்கிறோம்.
ஆனால், அவர்கள் என்ன சொல்கிறார்கள், ‘‘கொசு நிறைய இருக்கிறதா? இந்த மருந்தை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்; இந்த மருந்தை வீட்டில் கொளுத்தி வையுங்கள்’’ என்கிறார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் கொசு ஒழிக்கும் நோக்கம்தான் என்று உங்களுக்குத் தோன்றும்.
எவ்வளவு நாளைக்கு கொசு இருக்கிறதோ...
கொசுவை ஒழிக்கவேண்டும் என்று நாங்களும்  சொல்கி றோம்; கொசுவர்த்தி வியாபாரிகளும் கொசுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மனப் பூர்வமாக என்ன நினைப்பார்கள், எவ்வளவு நாளைக்கு கொசு இருக்கிறதோ, அவ்வளவு நாளைக்குத்தான் அவர்களுடைய தொழிற்சாலை இருக்கும். அப்பொழுதுதான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். அதுபோன்று நிறைய பேர் அரசியலில் கொசு வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள், அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல. எங்கள் ஊரில், 1938 ஆம் ஆண்டு - அய்யாவின்மேல் முட்டையில் மலத்தை நிரப்பி அடிக்கிறார்கள். அது அய்யாவின்மேல் விழுகிறது. பெருமாள் நாயுடு என்பவர், சிங்கப்பூருக்குப் போய் விட்டு வந்தவர்; அவர் பெரியார் கொள்கையைத் தெரிந்து கொண்டு வந்தவர். அந்த ஊரிலே பெரிய கடை வைத்திருந்தார். நான் அய்ந்து வயது சிறுவன். அவருடைய பேரப் பிள்ளைகள்  என்னுடைய வகுப்பு நண்பர்கள். ஒரு பையனுக்குப் பெயர் லெனின்; இன்னொரு பையனுக்குப் பெயர் ஸ்டாலின் என்று அந்தக் காலத்திலேயே வைத்தார்.
உலக நாடுகளிலேயே தந்தை பெரியாருக்கு நிகர் வேறு எவரும் கிடையாது
அவருடைய வீட்டுத் திருமணத்திற்கு அய்யாவை அழைத் திருந்தார். இந்தத் தகவல்களை நான் குடிஅரசு ஏட்டைப் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். அப்பொழுது கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில், மலத்தை எறிந்தார்கள் அய்யாவின் மீது. அதனை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் -  அசுத்தியான ஒரு வாடை வந்தால், உடனே மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். பெரியாரின்மேல், முட்டையில் மலத்தை நிரப்பி அடிக்கிறார்கள்; அது மேலே பட்டுத் தெரிக்கிறது; உடனே பெரியார் அவர்கள் சால்வையால் மூடிக்கொண்டு, அதற்குப்பிறகு 3 மணிநேரம் உரையாற்றினார். இப்படிப்பட்ட ஒரே தலைவர் உலக நாடுகளி லேயே தந்தை பெரியாருக்கு நிகர் வேறு எவரும் கிடையாது.
எனக்கு 11 வயது அப்பொழுது, நன்றாக நினைவிருக்கிறது  - கடலூரில்மழையின் காரணமாக பொதுக்கூட்டத்தைத் தொடர முடியவில்லை. அடுத்த நாள் சென்னையில் மாநாடு - 9.30 மணிக்கு ரயில். அய்யாவும், அன்னை மணியம்மையார் அவர்களும் கடலூருக்கு வந்திருக்கிறார்கள். கடலூரிலிருந்து சென்னைக்கு ரயிலில்தான் பயணம். அதுவும் மூன்றாவது வகுப்புதான். அய்யாவிடம் ஏன் மூன்றாவது வகுப்பில் பயணம் செய்கிறீர்கள் என்று கேட்டால்,  நான்காவது வகுப்பு என்று ஒன்று இல்லை என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வார்.
ரயில் நிலையம் செல்வதற்காக கை ரிக்ஷாவில் அய்யா  வருகிறார். கொஞ்சம் தூரம் வந்ததும் ரிக்ஷாவை திருப்பு என்கிறார்; எதற்கோ அய்யா சொல்கிறார் என்று, ரிக்ஷாவை திருப்பினார்கள்; மறுபடியும் திருப்பு என்றார்; திரும்பி வந்தாயிற்று ரயில் நிலையத்திற்கு. அப்பொழுது அய்யா அவர்கள் கைப்பெட்டியில் இருந்து இரண்டு செருப்புகளை எடுத்துக் காட்டினார்.
‘செருப்பொன்று போட்டால், 
சிலை ஒன்று முளைக்கும்!’
கெடிலம் நதி அருகே அய்யாவிற்கு சிலையை 1970 ஆம் ஆண்டு வைத்துவிட்டு, ‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்’ என்று கவிஞர் கருணானந்தம் கவிதை எழுதினார்!
செருப்பு என்று தலைப்பிலேயே நிறைய நேரம் பேசலாம் நம்முடைய நாட்டில். தலைவர் மேல் செருப்பு எறிந்தால், தொண்டர்கள் சும்மா விட்டிருப்போமா? அந்தக் காலத்தில் ஊருக்குப் பத்து பேர் இருந்தாலும், அடியாள்கள் போல இருப் பார்கள். நாங்கள் பகுத்தறிவு பேசிப், பேசி இப்பொழுது நிறைய பேரை மென்மையாக்கிவிட்டோம். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எதிரி நினைக்கிறான்.
ஆயுதத்தை அவன் எடுத்துக்கொண்டான் - அறிவை நாம் எடுத்துக்கொண்டோம்
அறிவுக்கு வேலை கொடு, அறிவுக்கு வேலை கொடு என்று சொல்லி, அறிவாயுதத்தை எடு என்றான். ஆயுதத்தை அவன் எடுத்துக்கொண்டான் - அறிவை நாம் எடுத்துக்கொண்டோம். இறுதியில் நாம்தான் வெற்றி பெறுவோம்.
எவ்வளவு பெரிய கொடுமை என்றால், நோட்டீஸ் அச்சடித்து கொடுக்கிறார்கள், பெரியார் கூட்டத்திற்குப் போகாதே என்று - தமுக்கடித்து கிராமத்திற்குள் சொல்கிறார்கள். அதை எப்படி சொல்கிறார்கள் தெரியுமா? ஜாதியை சொல்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம் - நடைமுறையில் எப்படி இருந்தது என்பதைப்பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.
திராவிடர் கழகம் துப்புரவு இயக்கம்
‘‘கருப்புச் சட்டைக்காரன்கள் தி.க. பயல்கள் கூட்டம் நடக்கிறது; அந்த தி.க. கட்சி என்றால் என்ன தெரியுமா? பள்ளன் கட்சி, பறையன் கட்சி’’ என்று.
இதைவிட எங்களுக்குப் ‘‘பெரிய சர்டிபிகேட்’’ வேறு என்ன வேண்டும்?
நாங்கள் சாக்கடை அள்ளினால்தான் நீங்கள் நிம்மதியாக சுவசிக்க முடியும். நாங்கள் சாக்கடையை அள்ளவில்லை யென்றால், நீ தூய சுவாசக் காற்றை சுவாசிக்க முடியாதே! திராவிடர் கழகம் துப்புரவு இயக்கம்.
ஆகவே, அய்யா அவர்கள் அந்த நோட்டீசை வைத்துக் கொண்டு பேசினார். ஆமாம், என்னுடைய கட்சியைப்பற்றி நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்; அதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி! என்னுடைய கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், இவ்வளவு பெரிய நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தவில்லை. அந்த விளம்பரத்திற்குப் பதிலாக நீங்கள் அதைச் செய்தி ருக்கிறீர்கள் மிகவும் நன்றி என்றார்.
எதிர்ப்பு இருந்தால்தானே நல்லது 
1973 ஆம் ஆண்டு கடைசி மாநாடு நடத்தினார் அய்யா. அந்த மாநாட்டிற்காக நாங்கள் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டோம். மாநாட்டில் அய்யா பேசுகிறார் என்று. அதைப் பார்த்தவுடன் அய்யா அவர்கள், எங்களைக் கண்டித்தார்.
என்ன அக்கிரமம் பண்ணியிருக்கிறீர்கள். ஏன் இதுபோன்ற போஸ்டர் அடித்து ரூபாயை வீணடித்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாள் ஆனால், நம்முடைய எதிரியே நம்மை விளம் பரப்படுத்தப் போகிறான்; நீங்கள் ஏன் அதற்குள் அவசரப்படு கிறீர்கள். அவன் விளம்பரம் செய்தால்தானே நமக்கு நல்லது. எதிர்ப்பு இருந்தால்தானே நல்லது என்று சொல்வார்.
தந்தை பெரியார் போன்று எதிர்நீச்சல் போட்ட தலைவர் உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது.
அந்தத் துணிச்சல்தான், அந்த ஈரோட்டு குருகுலத்தில் பயிற்சி பெற்றவர்தான் அண்ணா அவர்கள்.
அண்ணாவின் ‘‘அந்த வசந்தம்!’’
‘‘அந்த வசந்தம்’’ என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் சொல்வார்,
‘‘விடுதலை’’ பத்திரிகையினுடைய துணை ஆசிரியராக அண்ணா அவர்கள் இருக்கும்பொழுது, பெரியார் அவர்களை ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஈம்பூர் என்கிற ஊரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு அழைத்தார்கள். அந்தக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில், ஒரு மூட்டை நிறைய சாம்பலைக் கொண்டு வந்து, மக்கள் பெரியாரின் உரையைக் கேட்க முடியாத அளவிற்கு, சாம்பலை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா அவர்களும் உரையை நிறுத்தவில்லை. பெரியார் மேடையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். மக்களும் எழுந்து போகவில்லை. அய்யா அவர்கள் கண்களைத் துடைத்துக்கொண்டே, யாரும் கலையாதீர்கள் என்றார். அண்ணா அவர்களும் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். அப்பொழுது அண்ணா சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாம்பலைக் கொட்டினாலும், தந்தை பெரியார் கூட்டத்தை விட்டு நகர மாட்டார். நீங்கள் நிறைய சாம்பல் கொட்டுங்கள்; ஏற்கெனவே அவருடைய தாடியில் கொஞ்சம்தான் நரைத்து இருக்கிறது; மீதி கருப்பு, கருப்பாக இருக்கிறது. தாடி முழுவதும் வெந்நிற  தாடியாகத் தெரிய, இந்த சாம்பல் அதற்கு உதவி புரியும்’’ என்று சொன்னார். ஆகவே, அப் படிப்பட்ட எதிர்நீச்சல் போட்ட இயக்கம்தான் இது.
தூத்துக்குடிக்கு அய்யா போகிறார்; அங்கே ‘‘ராமசாமி கழுதை நாளை வருகிறது’’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
அதற்கடுத்ததாக, ரஷ்யாவிற்குச் சென்று வந்து பொதுவு டைமை தத்துவத்தைப்பற்றி அய்யா பிரச்சாரம் செய்கிறார்.
‘‘ராமசாமி, அவருடைய மனைவி நாகம்மாளைப் பொதுவு டைமை ஆக்குவானா?’’ என்று கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்ற கேள்வியைக் கேட்டால், எவ்வளவுதான் பொறுமைசாலியாக இருந்தாலும், கோபம் வராதா?
இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்; இதுபோன்ற கேள்வி கேட்டு, கடிதங்கள் இன்றைக்கும் எங் களுக்கு வருகிறது.
ஆனால், ஏன் அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை? தன்மானத்தைப்பற்றி சொல்லிக் கொடுத்த இயக்கம் - ஆனால், தன்மானமா? இனமானமா? என்று சொன்னால், இனமானம்தான் வெற்றி பெறவேண்டுமே தவிர, தன்மானத்திற்கு இடம் கொடுக்காதே என்று மிகப்பெரிய அளவில் சொல்லிக் கொடுத்த இயக்கம்தான் இந்த இயக்கம்.
ஆகவே, இந்த அடிப்படையில் பெரியார் அவர்கள் பதில் சொன்னார். நீ என்ன ராமசாமி கழுதை செத்துப் போச்சு என்று எழுதினாலும், நான் கவலைப்படமாட்டேன். மக்களிடம் தொடர்ந்து பேசுவேன்.
பெண்களை உடைமையாக ஆக்கக்கூடாது என்று சொல்கிற இயக்கம்
‘நாகம்மையாரை பொதுவுடைமையாக்குவாயா’ என்று கேட்டிருக்கிறாய். அதை நாகம்மையாரிடம் கேள். பெண்களை உடைமையாக ஆக்கக்கூடாது என்று சொல்கிற இயக்கம் இந்த இயக்கம். என்னுடைய முக்கிய கொள்கையே அதுதான். நீ தவறாக நினைத்தால், நாகம்மையாரிடம் சென்று கேள், அவர் என்ன சொல்கிறார், அதனுடைய பலனை நீ பார் என்று சொல்கிறார்.
திராவிடர் கழகத்தை, பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று சொல்கிறவர்களுக்குப் பதில் சொன்னார் அய்யா,
‘‘அவன் தான் என்னுடைய சகோதரன்; அவன்தான் எனக்கு வேண்டியவன்; கீழே இருக்கின்றவனை மேலே தூக்கிவிடத்தான் இந்த இயக்கமே பிறந்திருக்கிறது என்பதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறேன். இன்னுங்கேட்டால், உன்னைவிட அவன் கவுரமான பெயரில்தான் இருக்கிறான். அந்தப் பெயரையே நான் மாற்றவேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்று அய்யா பதில் கூறினார்.
சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்?
சூத்திரன் என்றுதானே நம்மை பார்ப்பான் மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறான்.
சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? அய்யா சொல்கிறார், பார்ப்பானுக்குத் தேவடியாள் மகன் என்று என்று எழுதி வைத்திருக்கிறான்.
அசல் மனுதர்மத்தில், 412 சுலோகம்; 8 ஆவது அத்தியாயம் - ஆதாரத்தோடு சொல்கிறோம்.
தாசி புத்திரன் என்று அதில் எழுதி வைத்திருக்கிறான். அய்ந்தாம் ஜாதிக்காரன் பஞ்சமனுக்கு இல்லாத அவமானம் - நாலாம் ஜாதிக்காரனாகிய உனக்கு இருக்கிற அவமானத்தைப்பற்றி உனக்குப் புரியவேண்டாமா? அவனையும், உன்னையும் ஒப் பிட்டுப் பார்த்தால், உன்னைவிட அவன் ஆயிரம் மடங்கு மேலானவனே தவிர, மனித பிறப்பில் உயர்ந்தவன் என்று அழைக்கப்படுபவனே தவிர, வேறு கிடையாது என்று சொன்னார்.
ஆகவே, அய்யா அவர்களைப் பொறுத்தவரையில், இந்தக் கருத்தியலை முன்னிறுத்தியக் காரணத்தினால்தான், அந்தக் கருத்தியல் இன்றைக்கும் தேவைப்படுகிறது.
ஜாதி, தீண்டாமை இல்லாத நாடாக...
எனவே, நம்முடைய மிகப்பெரிய இலக்கு - பெரியாருடைய 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், மூன்று, நான்கு உறுதிமொழிகளை நாம் எடுத்தாகவேண்டும்.
ஜாதி, தீண்டாமை இல்லாத நாடாக இந்த நாடு உருவாக வேண்டும். சுதந்திரம் அடைந்து இன்னமும் தீண்டாமை இருக்கிறதே!
பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பேசியதை நேற்றுகூட நான் படித்தேன், அதுபற்றியும் எழுதினேன்.
‘‘அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று போட்டிருக்கிறோம். சட்டத்தில் போட்டிருப்பதால், அது அமலாகும் என்று சொல்ல முடியாது. எனவே, நடைமுறையில் அதனை எவ்வளவு ஒழிக்கிறோமோ, அதுதான் நடைமுறை. எனவே, அதற்காகத் தொடர்ந்து போராடவேண்டும்’’ என்று சொன்னார்.
அய்யா அவர்கள் அதற்கென தொடர்ந்து இறுதி மூச்சடங்கும் வரையில் போராடினாரே! ஆதிதிராவிடர் அர்ச்சகராகவேண்டும் என்று சொன்னாரே, எதற்கு? அந்தப் பதவி பெரிய பதவி என்பதாலேயா? பெரிய அந்தஸ்துள்ள பதவி என்றா?
அதே தாழ்த்தப்பட்ட சகோதரன், அய்க்கோர்ட் ஜட்ஜாக ஆகிவிட்டார், ஆக்கியிருக்கிறோம். அய்.ஏ.எஸ்., அதிகாரியாக, அய்.பி.எஸ். அதிகாரியாக ஆகியிருக்கிறார். ஆனால், இன்னமும் அர்ச்சகராக முடியவில்லையே! ஏன் பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு என்ன?
அர்ச்சகர் பதவி என்ன, அய்.ஏ.எஸ்., அதிகாரியைவிட பெரிய பதவியா? அய்க்கோர்ட் ஜட்ஜைவிட அறிவு தேவையா அந்தப் பதவிக்கு?
செவ்வாய்க் கிரகத்தில்கூட போய் இறங்கிவிட்டான்; கர்ப்பக் கிரகத்திற்குள் போக முடியவில்லையே!
பெரியார் என்றால்  ஒரு சமூக விஞ்ஞானம்
ஏன் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்? ஏன் நாளைக்கும் தேவைப்படுகிறார்? பெரியார் என்றால் ஒரு சமூக விஞ்ஞானம் - அந்த விஞ்ஞானத்தை யாரும் மறுக்கமுடியாது. மூடநம்பிக்கை நோய்களைப் போக்குவதற்குப் பெரியார் தேவைப்படுகிறார்.
இன்றைக்கு மனுதர்மத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறார்களே, அதுதானே நீட் தேர்வு.
நீட் தேர்வுபற்றி எல்லோரும் கருத்துகளை சொல்கிறார்களே, நாம், தமிழர்கள், அதாவது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்பதற்கு பல காரணங்கள் உண்டு.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது, தமிழ்நாடு பிரா மணர் சங்க மாநில அமைப்புத் தீர்மானங்களில் ஒன்று மகளிர் அமைப்புத் தீர்மானம் - சென்னை குரோம்பேட்டையில், 30.7.2017 அன்று நீட் தேர்வுபற்றி தீர்மானம் போட்டிருக்கிறார்கள் -
‘‘மத்திய அரசு அறிவித்துள்ள நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கை நடத்தப்படவேண் டும் என்று தமிழக அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.’’
பார்ப்பானும், பாப்பாத்தியும் எதை விரும்புகிறார்களோ, அதற்கு நேர் எதிரானது நம்முடைய நலன்.
1962 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்கள் என்னை அழைத்து ‘‘விடுதலை’’ நாளிதழின் ஆசிரியர் பதவியை ஏற்கவேண்டும் என்று பேசினார். இன்றைக்கு 55 ஆண்டுகளாக அந்தப் பணியை தொடர்ந்து நான் செய்கிறேன். இதுதான் எனக்கு மனநிறைவான பணியும்கூட.
அப்பொழுது நான் வக்கீலுக்குப் படித்திருந்தேன்; கழக்கத்தில் உறுப்பினர். நான் பெரியார் அய்யாவிடம் கேட்டேன், குருசாமி போன்றவர்கள் ஆசிரியராக இருந்த இடத்தில், என்னை அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களே, விடுதலை கொள்கை ஏடாயிற்றே - அதற்குத் தலையங்கம் எழுதவேண்டும் அல்லவா! நான் எப்படி எழுதுவேன், கொஞ்சம் சிக்கலாக இருக்குமே என்று நான் கொஞ்சம் தயங்கியபொழுது,
அய்யா பட்டென்று சொன்னார், ‘‘இது என்ன பெரிய விஷயம்; நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்; உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும்; ‘‘இந்து’’ பத்திரிகையை எடுத்துக்கொள்ளுங்கள் - அதில் என்ன தலையங்கம் எழுதியிருக்கிறார்களோ, அதற்கு நேர் எதிராக எழுதுங்கள்’’ என்றார்.
வார்த்தை எவ்வளவு சுலபமனதாக இருக்கிறது பாருங்கள் - இதுதான் திராவிடம்.
ஆரியத்திற்கு எதிரானது எதுவோ, 
அதுதான் திராவிடம்
திராவிடம் என்கிற வார்த்தையை ஏன் பெரியார் அவர்கள் கண்டுபிடித்து, அதனை வற்புறுத்தினார் என்றால்,
திராவிடம் என்பது பேதமில்லாதது
திராவிடம் என்பது ஜாதி ஒழிப்பு
திராவிடம் என்பது பிறவியினால் பேதமில்லை
யாதும் ஊரே; யாவரும் கேளீர் - இதுதான் திராவிடம்.
பிறவியினால் பேதம் - இதுதான் ஆரியம்.
எனவே, ஆரியத்திற்கு எதிரானது எதுவோ, அதுதான் திராவிடம் என்பதை எடுத்துச் சொன்னார். அந்த வகையில், நாம் எல்லோரும் திராவிடன்தான். இதில் ஆதிதிராவிடன், மீதி திராவிடன், பாதி திராவிடன் என்பதெல்லாம் கிடையாது. ஒரே திராவிடன்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
இந்த வாய்ப்புகளே நீண்ட வரலாற்று ரீதியாக வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமாக எடுத்துச் சொல்லலாம். மனுதர்மத்திலேயே அது இருக்கிறது. அவர்களே அதனை எழுதியிருக்கிறார்கள்.
எனவே, இந்த அடிப்படையைப் பார்க்கும்பொழுது நண் பர்களே, நீங்கள் சிந்திக்கவேண்டும்.
இன்றைக்கும் அந்த அடிப்படையிலேதான் நம்முடைய அடிப்படையைக் கோளாறுகள் செய்கிறார்கள். எனவே, அதனை மாற்றவேண்டும்.
இந்த ஜாதியைப் பாதுகாக்கின்ற போராட்டம்தான், இன் றைக்கு அரசியல் ரீதியாக இருக்கக்கூடிய போராட்டமாக இருந்து கொண்டிருக்கிறது.
Economic & Political
இன்னொரு செய்தியை உங்களுக்கு சுருக்கமாக சொல் கிறேன்.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது,
Economic & Political என்கிற தலைப்பில் வரக்கூடிய வார ஏடு. செப்டம்பர் 2 ஆம் தேதி வெளிவந்த ஏட்டில்,Neo-liberal Political Economy and social Tension Simmering Dalit Unrest and Competing Castes in Gujarat என்ற தலைப்பில் Ghanshyam Shah என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார்.
குஜராத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. குஜராத் மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அது எவ்வளவு பெரிய மோசடி என்பதை அந்தக் கட்டுரையில், ஆதாரப்பூர்வமாக, புள்ளிவிவரத்தோடு, அங்கே எப்படி தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், உரிமை கள் பறிக்கப்படுகின்றன என்பதைப்பற்றி எழுதுகின்றபொழுது ஒன்றைச் சொல்கிறார்.
‘‘The BJP the Sangh Parivar believe that the varna system is a unique contribution of the ‘‘Indian civilisation’’ to the world. For them, the concept of equality was ‘‘Western’’, though they do not endorse caste - based discrimination. They believe in an organic unity among the castes in which each performs swadharma, Hindu unity, they hoped, would wipe out caste differentiations. The ideologues believe that the upper castes are not responsible for the degraded condition of the OBCs and Dalits. For that the Muslims and the British, as well as the Congress government, are responsible.’’இதன் தமிழாக்கம் வருமாறு:
உலக அளவில் "இந்திய நாகரிகத்தில்" தனித்துவமான பங்களிப்பாக வருண அமைப்பு உள்ளது என்று பாஜக, சங் பரி வாரங்கள் கூறுகின்றன. ஜாதி அடிப்படையிலான பாகுபாடு களுக்கு மாறாக மேற்கத்திய முறையிலான சமத்துவ சிந்தனை புகுந்துவிட்டது என்றும், சுதர்மா எனும் மத வழக்கத்தின்படி ஜாதி ஒன்றுபடுத்துகின்றது. இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படும்போது, ஜாதி வேறுபாடுகள் களையப்படும். பிற்படுத்தப் பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இழிநிலைகளுக்கு உயர்ஜாதியினர் காரணம் அல்ல. அந்நிலைகளுக்கு காரணம் முசுலீம்கள், ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் காங்கிரசு அரசும் காரணமாக இருந்துள்ளன என்று பாஜக, சங் பரிவாரங்கள் கூறிவருகின்றன.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக 
ஒரு தனிப் பிரிவு உண்டாக்கப்படவேண்டும்
ஆகவே நண்பர்களே, இன்றைக்கு ஜாதி மறுப்புத் திரு மணங்களை இளைஞர்கள் செய்துகொள்கிறார்கள். ஆனால், இந்த ஜாதி மறுப்புத் திருமணங்களில் ஜாதியினுடைய சாயத்தை மூளையில் ஏற்றியிருக்கிறார்கள். சொந்த மகளை கொலை செய்கிறார்களே, சொந்த சகோதரியை கொலை செய்கிறார்களே, ஜாதி வெறிதானே! அந்த ஜாதிவெறிக்கு எத்தனை பேர் பலியாகிறார்கள். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள்கூட சொல்லியிருக்கிறது- காவல்துறையில், பல பிரிவுகள் இருப் பதுபோல, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக ஒரு தனிப் பிரிவு உண்டாக்கப்படவேண்டும். அதற்காக நாங்கள் போராடு வோம். நீதிமன்றங்கள் காவல்துறைக்கு, தமிழக அரசுக்கு உத்தர விட்டு இருக்கிறது.
கொலையே அசிங்கமானது, அதிலும் கவுரவக் கொலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நாங்கள்தான் அதற்கு ஆணவக் கொலை என்று பெயர் வைத்தோம்.
அசுரன் என்றால் 
என்ன அர்த்தம் தெரியுமா? 
அடுத்தபடியாக, அசுரர்கள் - நம்முடைய பண்பாட்டுப் படையெடுப்பில், நம்மையெல்லாம் அசுரன் என்றார்கள்; நரகாசுரனை அழித்தார்கள்; மகிஷாசுரனை அழித்தார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே, அசுரன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? இன்றைய இளைஞர்கள் இதனை தெரிந்துகொண்டு, உங்களுடைய முகநூலில் பயன்படுத்துங்கள்; டுவிட்டரில் பயன்படுத்துங்கள்.
சுரா பானத்தைக் குடித்தவன் சுரன் - அவன்தான் ஆரியன்.
சுரா பானத்தைக் குடிக்காதவன் அசுரன் - அவன்தான் திராவிடன்.
நம்மை அசுரன் என்றால், பயப்படாதீர்கள்; நான் ஒரு அசுரன்தான் என்று துணிச்சலோடு சொல்லக்கூடிய அந்த உணர்வைப் பெரியார் பிறந்த நாளில் பெறவேண்டும்.
அம்பேத்கர் சிந்தனைக்கு ஆளாகியதினால், குஜராத்தில் என்ன திருவிழா கொண்டாடினார்கள் தெரியுமா? மகிஷாசுரன் திருவிழா என்று கொண்டாடினார்கள். நாங்கள் எல்லாம் மகிஷாசுரன் பரம்பரை என்று சொன்னார்கள்.
அதுபோல, நண்பர்களே, பண்பாட்டுப் படையெடுப்பை, பண்பாட்டுப் படையெடுப்பாலேயே முறியடிக்கவேண்டும். அந்த அடிப்படையில், தீபாவளியைப்பற்றி பல கதைகளை சொல்லியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; ஆனால், அதை எல்லாவற்றையும்விட, நரகாசுரனே வேண்டிக்கொண்டானாம் - என்னுடைய இறப்பை விழாவாகக் கொண்டாடவேண்டும் என்று. அதுதான் தீபாவளியாம்!
திராவிடர் கழகம் நரகாசுரன் விழாவை கொண்டாடும்!
அதற்கு ஈடாக, நரகாசுரன் திருவிழா என்ற பெயரில், திராவிடர் கழகமும், ஒத்த கருத்துள்ளவர்களும் ஒரு விருந்து வைத்து - நரகாசுரன் விருந்து வைத்து கொண்டாடவேண்டும்.
ஓணம் பண்டிகை என்பது - மாபலி சக்கரவர்த்தி திரும்ப வந்தான் என்பதுதான். வாமன அவதாரம் எடுத்து, தலையில் காலை வைத்து அழித்துவிட்டான் என்பதுதான். ஆரிய - திராவிட போராட்டம்தான் அது. ஆரியம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது -
திராவிடம் என்பது சமத்துவத்தை, சமவாய்ப்பை வெளிப் படுத்துவது.
ஆரியம் என்பது பெண்ணடிமையை வலியுறுத்துவது -
திராவிடம் என்பது பெண்களும், ஆண்களைப் போலவே உரிமைகளைப் பெறவேண்டும் என்பது.
சம வாய்ப்பு, சமத்துவம், சுயமரியாதை, சுதந்திரம், சகோத ரத்துவம் இவை அத்தனையும் செய்வதுதான் திராவிடம். இது தான் சிந்துவெளி நாகரிகம் - இதுதான் கீழடியிலும் நீண்ட காலத்திற்குமுன்னால் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள். எனவேதான், அதனை மூடவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இல்லாத சரசுவதியை நதியை தேடுகிறார்கள் - கண் எதிரே இருக்கிற கீழடியை விடுகிறான்.
மிகப்பெரிய போராட்டம் தேவையானாலும், அதனை செய்வோம்
அதற்கு நாம் பண்பாட்டு அடிப்படையில் ஒரு திராவிட நாகரிகம் என்பது இருக்கிறதே, மிகத் தெளிந்த நாகரிகம் என்பதை வைத்துக்கொண்டு, அந்தக் கீழடி போன்ற இடத்தில் ஆய்வுகளை செய்யவேண்டும். அதற்கும் எங்களைப் போன்றவர்களின் கூட்டணிகள்  - தெளிவாக நாங்கள் ஒன்று பட்டு இருப்போம் - மிகப்பெரிய போராட்டம் தேவையானாலும், அதனை செய்வோம் என்பதை இந்தப் பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழியாக ஏற்று, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ஜாதி இல்லா நாடு -
சாமியார்கள் இல்லாத நாடு - என்பது
நோயில்லாத வீடு - என்பதைப்போல!
இவைகளை உருவாக்குவோம்.
கருப்புச் சட்டை ஒன்றுதான் சரியானது
எல்லாவற்றையும்விட மூளைக்காய்ச்சல் மிக ஆபத்தானது - அதிலிருந்து பாதுகாக்க கருப்புச் சட்டை ஒன்றுதான் சரியானது. எனவேதான், இளைஞர்களே, நீங்கள் இந்தப் பக்கம் வாருங்கள் - பெரியார் பக்கம் இப்பொழுது வந்திருக்கிறீர்கள்.
இங்கே ஒன்றை சொன்னார்கள், கிரிக்கெட் மைதானத்தில் கருப்புச் சட்டை இருக்கக் கூடாது என்று - அதுபற்றி எனக்குத் தெரியாது. அதையே நீதிமன்றத்திற்கும் கொஞ்சம் சேர்த்து உத்தரவு போட முடியுமா? என்று தெரிந்துகொள்வது நல்லது என்று கேட்டு என்னுடைய உரையை முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,18.9.17

திங்கள், 11 செப்டம்பர், 2017

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழாவை திருவல்லிக்கேணியில் சிறப்பாக கொண்டாட தென் சென்னை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

செவ்வாய், 05 செப்டம்பர் 2017 16:21
சென்னை, செப்.5 26.8.2017 அன்று பிற்பகல் 6.30 மணி யளவில் திராவிடர் கழக தலைமை நிலைய கட்டிட துரை.சக்ரவர்த்தி அறையில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையிலும், மண்டல செயலாளர வி.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்  மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையிலும் தென் சென்னை மாவட்ட  கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செய லாளர் கோ.வீ.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார். தந்தை பெரி யாரின் 139ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டா டுவது குறித்து கலந்துரையாடப் பட்டது. மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், இளைஞரணி தலைவர் செ.தமிழ்ச்சாக்ரடீசு, இளைஞரணி  செயலாளர் ச.மகேந்திரன், ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.
பிறகு கீழ்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) இரங்கல் தீர்மானம்: 
கழக பொதுக்குழு உறுப் பினரும் தென் சென்னை மாவட்ட முன்னால் செயலாளருமான பெரியார் பெருந் தொண்டர் எம்.கே. காளத்தி அவர்களின் மறைவிற்கு இரங் கல் தெரிவிக்கப்பட்டது.. (மறைவு- 2.7.2017)
2) தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா
17.9.17 அன்று கிளைக் கழகங்கள் தோறும் கொடி ஏற்றி ஒலிபெருக்கிவைத்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுவதெனவும், 24.9.2017 அன்று தென் சென்னை முழுக்க இரு சக்கர வண்டியில் பேரணியாக சென்று பரப்புரை செய்வதெனவும், 
3) திறந்தவெளி விழா
17.9.2017 மாலை திருவல் லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை - இருசப்பன் தெரு இணைவில்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும்  தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் வி.ழாவை அனைத்து கட்சி பங்கேற்புடன் சிறப்பாக  நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
4) பகுதி தோறும் தெரு முனைக்  கூட்டங்களை  நடத் துவதெனவும் தீர்மானிக்கப்பட் டது.
தரமணி கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச்செல்வன், ஈ.குமார், அ.பாபு, பா.மணியம்மை, தே.ஒளிவண்ணன், த.லலிதா,  த.அண்ணாதுரை, ஆகியோர் கலந்துகொண்டனர்.
மு.திருமலை கலந்துரை யாடலின் முடிவில் நன்றி கூறினார்.
-விடுதலை,5.9.17