தந்தை பெரியார் பிறந்த நாளில் பேரா. சுப. வீரபாண்டியன் எச்சரிக்கை
சென்னை, செப்.21- கருப்புச் சட்டைகள் இங்கே உள்ள வரை காவிச் சட்டைகள் இங்கே உள்ளே வர முடியாது என்றார் திராவிட இயக்கத் தமிழர் பேரவைச் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
17.9.2017 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
ஆசிரியர் அய்யா அவர்களே, கூட்டத்தினுடைய தலைவர் அருமை நண்பர் வில்வநாதன் அவர்களே, உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வருகை தந்து கொண்டிருக்கின்ற எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புக்குரிய அன்புராஜ் அவர்களே,
மேடையில் அமர்ந்திருக்கின்ற அருமைத் தோழர்களே, என்னோடு வருகை தந்திருக்கின்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மண்டலப் பொறுப்பாளர் தோழர் மாறன் அவர்களே, பெரும் திரளாகக் கூடியிருக்கின்ற பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, பத்திரிகை யாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
யார் ஆணவத்தோடு அய்யாவைப்பற்றி பேசினாரோ, அவருக்கு வெறும் 52 வாக்குகள்!
நாம் பெரியார் அவர்களின் பிறந்த நாளை இன்று தான் கொண்டாடுகிறோம். ஆனால், தமிழகம் நேற்றே கொண்டாடி விட்டது. சாரண - சாரணியர் தலைவர் தேர்தல் முடிவில், யார் ஆணவத்தோடு அய்யாவைப்பற்றி பேசினாரோ, அவருக்கு 52 வாக்குகள். அதுவே அதிகம் தான். 52 வாக்குகளை மட்டுமே தந்து, தமிழகம் பெரியார் பிறந்த நாள் விழாவை நேற்றே அல்லவா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது என்று எண்ணி மகிழ்கிறேன்.
ஆணவக்காரன்மீது
மக்கள் கொண்டிருக்கிற வெறுப்பினாலும்...
என் சமூக வலைதளத்திலே கூட நான் இப்படி பதிவிட்டிருந்தேன்.
‘‘அடுத்தவர் தோல்வியில் மகிழ்வது நம்முடைய இயல்பில்லை; அடுத்தவன் சாவைக் கொண்டாடுகிற தீபாவளி அவர்கள் பண்டிகைதானே தவிர, அடுத்த வனுடைய தோல்வியில் மகிழ்வது நம்முடைய இயல்பில்லை - ஆனாலும், இந்த முறை என்னை மன்னித்துவிடுங்கள், இந்தத் தோல்வியில் என்னால் மகிழாமல் இருக்கமுடியவில்லை’’ என்று பதிவிட்டிருந்தேன்.
இதுவரை இல்லாத அளவிற்கு என்னுடைய பதிவிற்கு மிகக்கூடுதலான வரவேற்பு அதற்குத்தான் கிடைத்திருக்கிறது என்பது, அய்யா பெரியார் அவர்கள்மீது பற்றினால் மட்டுமல்ல, அந்த ஆணவக்காரன்மீது மக்கள் கொண்டிருக்கிற வெறுப்பினாலும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
அதற்கு விடை எழுதியிருக்கிற, அவர் கட்சியைச் சார்ந்த ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு எனக்கு விடை சொல்ல நேரமில்லை. இந்த மேடையில் விடை சொல்லிவிடலாம்.
இந்த மண்ணுக்கு உரிமை இருக்கிறது - கொண்டாடவேண்டிய கடமையும் இருக்கிறது
அவர் கேட்டிருக்கின்ற கேள்வி, ‘‘இறந்துபோன பெரியாருக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்களே, இது சரிதானா?" என்று கேட்டிருக்கிறார்.
இல்லாத கடவுள்களுக்கெல்லாம் நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறபோது, ராமநவமிக்கும், கோகுலாஷ்ட மிக்கும் என்ன பொருள்? இல்லாத கடவுள்களுக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகிறபொழுது, இந்த மண்ணில் வாழ்ந்து, இந்த மண்ணின் மக்களுக்காகவே வாழ்ந்து, 95 வயதிலும் நம் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும் என்பதற்காக மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு, ஊர் ஊராகத் தொண்டாற்றிய எங்கள் அய்யாவிற்கு, பிறந்த நாள் விழா அல்ல - ஒவ்வொரு நாளும் விழா கொண்டாடுவதற்கு இந்த மண்ணுக்கு உரிமை இருக்கிறது -
கொண்டாடவேண்டிய கடமையும் இருக்கிறது என்பதை மட்டும் நான் பதிவு செய்கிறேன்.
இன்றைக்கு வந்துகொண்டிருக்கின்ற பல்வேறு விதமான நெருக்கடிகள், நம்முடைய கவிஞர் பூங்குன்றன் அவர்கள் பேசுகிறபொழுது, சிலவற்றைத் தொட்டுக் காட்டினார். நீதிமன்றங்கள் எப்படி இருக்கின்றன என்று சொன்னார். இப்போது வருகிறபொழுது ஒரு செய்தியை, நீங்களும் பார்த்திருக்கலாம். இதோ அருகிலுள்ள சேப்பாக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி - இந்தியாவிற்கும் - ஆஸ்திரேலியாவிற்கும் ஒரு நாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். அதில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் இன்றைக்கு - யாரும் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வரக்கூடாது என்று.
கருப்புச் சட்டை இருக்கின்றவரை காவிச் சட்டைகள் உள்ளே நுழைய முடியாது
ஒருவிதத்தில் நமக்கு வெற்றிதான். கருப்புச் சட்டையைப் பார்த்து இவ்வளவு பயப்படுகிறீர்களா? என்று தோன்றுகிறது. உள்ளே வந்து கருப்புச் சட்டையைக் கழற்றி, கருப்புக் கொடிபோல காட்டி விடுவார்கள் என்று அஞ்சி, கருப்புச் சட்டைப் போடக்கூடாது என்று சொல்கிறார்கள் என்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பது நமக்குத் தெரியும்.
இதே கிரிக்கெட் போட்டி வேறு மாநிலங்களில் நடை பெறுகின்றபொழுது, கருப்புச் சட்டையை அனுமதித்தவர்கள், ஏன் தமிழ்நாட்டில் மட்டும் கருப்புச் சட்டை போடக்கூடாது என்கிறார்கள் என்றால், கருப்புச் சட்டை இருக்கின்றவரை காவிச் சட்டைகள் உள்ளே நுழைய முடியாது என்கிற காரணத்தைப் புரிந்துகொண்டுதான், கருப்புச் சட்டையை கண்டாலே பயப்படுகிறார்கள். கொஞ்சம் பொறுங்கள், நாடு முழுவதும் கருப்புச் சட்டைகளோடு வலம் வருகின்ற நாள் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பெரியாரின் தேவை இப்பொழுது
கூடுதலாகத் தேவைப்படுகிறது
நண்பர்களே! கருப்புச் சட்டைகளை அல்ல - இந்தச் சமூகம், சமூகநீதியில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கின்ற ஒரு நாள் - இன்றைக்கு நீங்கள் பார்க்கலாம், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, அய்யா பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதே, அதற்கு என்ன காரணம் என்றால், முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, பெரியாரின் தேவை இப்பொழுது கூடுதலாகத் தேவைப்படுகிறது என்பதுதான்.
தந்தை பெரியாரின் தாய் மடிக்கு மறுபடியும் திரும்ப ஓடிவந்துகொண்டிருக்கிறார்கள்
சமூக வலைதளத்தில் ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் தாயைவிட்டு, பெற்றோரை விட்டு விலகிப் போய் கொஞ்சதூரம் சென்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். நிலைமை சுமூகமாக இருக்கின்ற வரையில், பிள்ளைகள் பெற்றோரைக்கூட எண்ணாமல் விளையாடிக் கொண்டி ருப்பார்கள். ஆனால், எதிரிலே ஒரு ஆபத்து வருமானால், ஒரு கலவரம் வருமானால், ஓடி வந்து தாயிடத்தில்தான் பிள்ளைகள் சேருவார்கள். அப்படித்தான் தமிழர்கள்கூட, அய்யா பெரியாரைவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காவி என்கிற ஆபத்தைப் பார்த்ததற்குப் பிறகு, தந்தை பெரியாரின் தாய் மடிக்கு மறுபடியும் திரும்ப ஓடிவந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை மிக அழகாக அந்த நண்பர் பதிவிட்டிருந்தார்.
மல்லையாவை எந்த நீதிமன்றமும்
மிரட்டத் தயாராக இல்லை
எல்லா தளங்களிலும், நீதிமன்றம் இன்றைக்கு வெள்ளிக்கிழமை, நல்ல நாள் போய்ச் சேர்ந்துவிடுங்கள் என்று மட்டுமல்ல, ஒரு மணி நேரத்திற்குள் பணிக்குத் திரும்பவேண்டும் என்று ஆசிரியர்களும், அரசு பணியாளர் களும் மிரட்டப்படுகிறார்கள். எண்ணிப் பாருங்கள்,
9 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிப்போன மல்லையாவை எந்த நீதிமன்றமும் மிரட்டத் தயாராக இல்லை; எந்த அரசும் மிரட்டவில்லை. ஏதோ ஒரு நடுத்தட்டு வர்க்கமாக இருக்கின்ற ஆசிரியர்களை, அரசு பணியாளர்களைத்தான் நீதிமன்றங்கள் மிரட்டுகின்றன. திரும்ப உடனே பணிக்குச் செல்லவேண்டும் என்று சொல்கிற நிலையெல்லாம் இன்றைக்கு வந்திருக்கிறது. பல்வேறுவிதமான நெருக்கடிகள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து என்ன வரும்?
ஒரு போராட்டத்தை அறிவித்து நாம் நடத்திக் கொண் டிருக்கும்போதே, இன்னொரு போராட்டத்திற்கான தேவை வந்துவிடுகிறது. தி.மு. கழகத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அன்றைக்கு நான் ஒரு வரியிலேதான் நேரமின்மையால் சொல்லி முடித்தேன்.
எண்ணிப்பாருங்கள், நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்போதே, நவோதயா பள்ளிகளுடைய அச்சுறுத்தல் வருகிறது. நவோதயா எதிர்த்துப் போராடத் தொடங்குகிறபொழுதே, நிதி ஆயோக் சொல்லுகிறது, சரியாக நடைபெறாத அரசுப் பள்ளிகளையெல்லாம் தனியாரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்கிறது.
இவை எல்லாம் வெறும் கல்வித் துறை சார்ந்த அச்சுறுத்தல்களை நான் குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு துறையிலும் இப்படி அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.
இப்பொழுதுதான் மேடையில், அய்யா ஆசிரியர் அவர்கள், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேல் அவர் களுடைய ஒரு சிறிய நூலை எனக்கு அளித்தார்கள். ‘விடுதலை’யில் நெ.து.சு. அவர்களுடைய அந்த உரை யினுடைய சாரத்தை, இரண்டு வரியில், நவேதாயாவைப்பற்றி வெளியிட்டிருந்தபொழுது, எத்தனை அழகாய், எத்தனை ஆழமாய், எத்தனை அழுத்தமாய் நம்முடைய கல்வியாளர் அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இன்றைக்கு மாலையில்கூட, நீங்கள் நவோதயா பள்ளியை இந்திக்காக மட்டும்தான் எதிர்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். இந்திக்காகவும் எதிர்க்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது தமிழகத்திற்கு வருகிற ஒரு மிகப்பெரிய வருவாய் அல்லவா!
நஞ்சு பொருளையும் உள்ளே வைத்து
அனுப்புகிற ஒரு யுக்தி
தமிழகத்திற்கு வருகிற இந்தத் தொகையை, இந்த சலுகையை, இந்த வாய்ப்பை ஏன் நீங்கள் நழுவவிட வேண்டும்; எதற்காக தமிழகம் நழுவவிடவேண்டும் என்று கேட்டார்கள். இதைத்தான் நம்முடைய மத்திய இணை அமைச்சராக இருக்கின்ற பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இது வாய்ப்பைத் தருவதுபோல் தந்து, அந்த வாய்ப் புக்குள் நஞ்சு பொருளையும் உள்ளே வைத்து அனுப்புகிற ஒரு யுக்தி என்பதை நாங்கள் அறிவோம்.
ஆகையினால், ஒரு மாவட்டத்திற்கு 20 கோடி ரூபாய் தருகிறார்களாம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள். 640 கோடி ரூபாயை மத்திய அரசு தருகிறேன் என்கிறதே, ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.
ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால், ஒரு மாவட்டத் தில் ஒரு பள்ளியை உருவாக்கிட, 20 கோடி ரூபாயை செலவு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், ஒரு பள்ளியில் 240 மாணவர்களை மட்டும்தான் சேர்ப்பார்கள். ஒரு மாவட்டத்தில் லட்சக்கணக்கான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் 240 பேரை மட்டும் நுழைவுத் தேர்வை வைத்து இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அந்த நுழைவுத் தேர்வில் யார் வெற்றி பெறுவார்கள்? இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடையவே கிடையாது.
குடிசைகளுக்கு இடையில்
ஏன் அரண்மனை கட்ட முயற்சிக்கிறீர்கள்?
எனவே, ஒரு குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு மட்டும் நீங்கள் இவ்வளவு கோடி ரூபாயை செலவிடவிருப்பது, நம்முடைய அய்யா நெ.து.சு. அவர்கள் சொல்லியிருப்பதுபோல, ‘‘குடிசைகளுக்கு இடையில் ஏன் அரண்மனை கட்ட முயற்சிக்கிறீர்கள்?’’ என்பதுதான்.
வேண்டுமானால், இந்தக் குடிசைகளையெல் லாம் ஓட்டு வீடுகளாக மாற்றுங்கள்; நீங்கள் தருகிற 640 கோடி ரூபாயை, தமிழகத்தினுடைய கல்வி வளர்ச்சிக்காகக் கொடுத்தால், எங்க ளுடைய ஏழைப் பிள்ளைகளும் அதனால் பயனடையமாட்டார்களா?
இன்றைக்குக் கல்விக்காக நாடு ஒதுக்குகின்ற தொகை எவ்வளவு? ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையைப் பாருங்கள் நண்பர்களே, ராணுவத்திற்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது; கல்விக்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது.
ஜிடிபி என்று சொல்கிறார்களே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அதில் .61 சதவிகிதம்தான் கல்விக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதுவே குறைவு. நான் சொல்கின்ற இந்தக் கணக்கு காங்கிரசு ஆட்சி நடந்துகொண்டிருந்த 2012-2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், .61 சதவிகிதம்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை. இன்றைக்கு மோடியினுடைய ஆட்சியில், அது மேலும் குறைக்கப்பட்டு, .49 சதவிகிம்தான் கல்விக்கு ஒதுக்கப்படுகிறது என்றால், நான் கேட்கிறேன், நீங்கள் கொடுக்கிற 640 கோடி ரூபாயை, ஒட்டுமொத்தமாக - கல்விக்காக எங்கள் எல்லாப் பிள்ளைகளுக்குமாகக் கொடுத்தால், இந்த சதவிகிதம் கூடாதா? கல்வி என்பது எல்லோருக்கும் வந்து சேராதா?
நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறவர்களே தவிர, வீக்கத்தை விரும்புகிறவர்கள் அல்ல
நண்பர்களே, உடலினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிதான் வளர்ச்சியே தவிர, கையில் கொஞ்சம் வளர்ச்சி இருக்கிறது, காலில் கொஞ்சம் வளர்ச்சி இருக்கிறது என்றால், அதற்கு வளர்ச்சி என்று பெயரில்லை, வீக்கம் என்று பெயர். இந்த சமூகம் சமத்துவமான சமூகமாக இருக்கவேண்டும். நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறவர்களே தவிர, வீக்கத்தை விரும்புகிறவர்கள் அல்ல.
ஆகையினால்தான், இந்தியிலே மட்டுமல்ல, நீ ஏன் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் இந்தி கட்டாயம் என்று சொல்வது, இவ்வளவு சலுகைகளைத் தருகிறோம், இந்தி படி என்று சொல்கிறாய். இன்னமும் நீ கோடிக்கணக்காய் கொட்டிக் கொடுத்தாலும், தமிழகம் இந்தியை ஒரு நாளும் ஏற்காது; இந்தித் திணிப்பை ஏற்காது - இது எங்களுடைய திராவிட இயக்க மண் என்பதை நீ உணரவேண்டும்.
50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே
வகுத்துக் கொடுத்த மண் தமிழ்நாடு
ஒருநாளும் நாங்கள் உங்களுடைய திணிப்பை, ஆதிக்கத்தை ஏற்கமாட்டோம். அப்படி ஏற்கவேண்டிய தேவையும் இல்லை. மிகத் தெளிவாக, இந்த நாட்டிற்கு மொழிக் கொள்கை என்றால், எப்படி இருக்கவேண்டும்? என்பதை 50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே வகுத்துக் கொடுத்த மண் தமிழ்நாடுதான். ஆகையினால், இப்படி ஒவ்வொரு துறையிலும், கல்வித் துறையில், நிதி ஆயோக் சொல்கிறது, மூன்றாண்டுகால அறிக்கையாக சொல்கிறது, நாட்டில் இருக்கின்ற அரசு பள்ளிகள் பல சரியாக செயல்படவில்லை என்று.
எப்படி செயல்படும்? நீ அதற்காக நிதி ஒதுக்குவதில்லை, நீ அதனைக் கவனிப்பதில்லை. அரசு பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்பதிலே, அரசே கவனமாக இருக்கிறது. இன்றைக்குச் சொல்கிறார்கள், எனவே, அரசு பள்ளிகள் தரமில்லாத பள்ளிகளையெல்லாம் தனியார் வசம் கொடுத்து விடுங்கள் என்று சொல்கின்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.
தனியாரிடம் தாரை வார்த்துவிடுங்கள் என்று சொல்வது கல்விக்கு எதிரானது
அரசு பள்ளிகள், தரத்திலே குறைவாக இருக்கிறது; சுகாதார நிலைகள் குறைவாக இருக்கின்றன என்று சொன்னால், அதற்குக் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டுமே தவிர, அந்தப் பள்ளிகளை அப்படியே தனியாரிடம் தாரை வார்த்துவிடுங்கள் என்று சொல்வது கல்விக்கு எதிரானது.
அடிப்படையில் நண்பர்களே ஒன்றை நான் சொல் லவேண்டும். தந்தை பெரியார் அவர்களுடைய அடிப்படையான கோரிக்கையே, இந்த மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதுதான். திராவிட இயக்கத்தின் வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து பார்த்தால், நான் ஏன் பெரியார் பிறந்த நாளில், கல்விப் பற்றி பேசுகிறேன் என்றால், கல்விக்காகப் பிறந்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம். நீதிக்கட்சிக்கு முன்னால் நான் சொல்கிறேன்.
1912 ஆம் ஆண்டு ‘‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’’ என்கிற பெயரில் தொடங்கப்பட்டு, பிறகு 1913 ஆம் ஆண்டு நடேசனார் அவர்கள் அதனை திராவிடர் சங்கம் என்று மாற்றியபொழுதும், என்ன காரணத்திற்காக மாற்றினார்? இன்றைக்குத் திராவிடத்தைப்பற்றி பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் அதை அறிந்தவர்கள் என்பதினாலே, அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், அன்றைக்கு நடேசனார் அவர்கள், மெட்ராஸ் யுனைடெட் லீக் என்கிற பெயரை, ‘‘திராவிடர் சங்கம்’’ என்று அந்தப் பொதுக்குழு மாற்றியதற்கான அடிப்படை காரணம் என்னவென்றால், இந்த சங்கத்தினுடைய முதன்மையான நோக்கம், எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்பது.
உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்,
நாங்கள் அவர்களுக்குக் கல்வித் தருகிறோம்!
இதோ இந்தத் திருவல்லிக்கேணியில்தான், அந்த திராவிட மாணவர் விடுதி இருந்தது. எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்பதற்காக, நடேசனார் அவர்கள் அன்றைக்குத் தன்னுடைய மகிழுந்தை எடுத்துக்கொண்டு, அன்றைக்கெல்லாம் கார் வைத்துக் கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய செயல். செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சி மாவட்டத்தில் இருக்கிற வயல்வெளிகளில் வேலை பார்க்கிற அந்த உழவர்களை அழைத்து, ‘‘உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள், நாங்கள் அவர்களுக்குக் கல்வி தருகிறோம்’’ என்று சொல்லியபோது, அந்த மக்களே அச்சப்பட்டார்கள். அதுதான் இயற்கை; மக்கள் அச்சப்படத்தான் செய்வார்கள். ஏதோ பிள்ளை பிடிக்கிறவர் வந்திருக்கிறார் என்று கருதினார்கள்.
கல்வி அறியாத, கல்வியின் பயனை பெறாத, கல்விக்கு அருகில்கூட வர முடியாத நிலையில் இருந்த மக்களை, கல்விக் கற்றவர்களாக மாற்றவேண்டும் என்பதற்காக தொடங்கிய இந்த சங்கத்திற்கு, இந்தப் பெயர் எந்தவிதத்திலும் பொருத்தமில்லாமல், ‘‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’’ என்று இருக்கிறது.
யாருடைய கல்விக்காக? மூன்று சதவிகிதம் இருக்கின்ற பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க, 97 சதவிகித மக்கள் படிக்காமல் இருக்கிறார்களே, அப்படி இருக்கிற பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு கல்வி தருவதற்காகத் தொடங்கப்பட்ட சங்கத்திற்கு, நாம் வேறு பெயரை வைக்கவேண்டும் என்று பேசியபொழுது, ‘‘பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’’ என்று முதலில் பெயர் முன்மொழியப்பட்டு இருக்கிறது. ஆனால், எல்லோரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், ஏன் நாம் எதிர்மறையாக பெயர் சொல்லிக் கொள்ளவேண்டும். எதற்காக அவர்களைச் சுட்டிக்காட்டி, பார்ப்பனர் அல்லாதார் என்று குறிப்பிடவேண்டும். வேண் டாம், மிகத் தெளிவாக பார்ப்பனர் அல்லாதார் என்றால், அதற்கு திராவிடர் என்று பொருள். எனவே, திராவிடர் சங்கம் என்றுதான் பெயர் சூட்டப்பட்டது.
திராவிடம் என்பது சமூகநீதிதான்
சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம்
திராவிடர் சங்கத்தினுடைய தொடக்கமே நம்முடைய மக்களுடைய பிள்ளைகளின் படிப்புக்காகத்தான். திராவிடர் என்பதே ஆரியத்திற்கு எதிரான சொல். திராவிடன் என்பதே பார்ப்பனன் அல்லாதவன் என்பதை விளக்குகிற சொல். இன்றைக்கு திராவிடன் என்கிற சொல்லை திரித்தும், மறுத்தும் பல பேர் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒன்றைக் குறித்துக் கொள் ளுங்கள், திராவிடம் என்பது சமூகநீதிதான். சமூகநீதியின் மறுபெயர்தான் திராவிடம். சமூகநீதிக்காகத் தோன்றிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.
எப்படி வந்தது இந்த இட ஒதுக்கீடு? இட ஒதுக்கீட்டையே சமூகநீதி என்று நாம் குறுக்கிச் சொல்லவில்லை.
சமூகநீதி என்கிற ஒரு மிகப்பெரிய பரந்த பரப்புக்குள் இட ஒதுக்கீடு ஒரு பகுதி. சமூகநீதிக்குள் வர்க்கபேதத்தை மாற்றுகிற சமத்துவம் அடங்கும்.
சமூகநீதிக்குள் ஆண் - பெண் என்கிற ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கிற சமத்துவம் அடங்கும். சமூகநீதிக்குள் ஜாதியின் பெயரால் செலுத்தப்படுகிற ஆதிக்கம் நீங்கும்.
எனவே, சமூகநீதி என்பது ஒரு பரந்துபட்ட தளம். அந்த சமூகநீதிக்குள் இட ஒதுக்கீடு ஒரு பிரிவு என்று சொன்னால்,
அந்த இட ஒதுக்கீடு முதல் வழி என்று சொன்னால்,
இட ஒதுக்கீடு ஒரு தற்காலிக மாற்றம் என்று சொன்னால்,
அந்த மாற்றத்தை முதன்முதலாக தனிப்பட்ட முறையில் சமஸ்தானத்தில் கொண்டு வந்தவர், கோல்காப்பூர் சமஸ் தானத்தில் மன்னராக இருந்த சாகுமகராஜ் அவர்கள்தான்.
மிகுந்த நன்றி உணர்ச்சியோடு, அய்யா பெரியார் அவர்களின் பிறந்த நாளில் நாம் இதனை நன்றியோடு பதிவு செய்யவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
150 ஆண்டுகளுக்கு முன்னால்...
ஜோதிராவ் பூலே அவர்களுடைய அந்தத் தாக்கத்தின் காரணமாக, மராத்தியத்தில், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜோதிராவ் பூலே - உண்மையாகச் சொன்னால், அவர்தான் மகாத்மா - அவர்தான் மகாத்மா ஜோதிராவ் பூலே, இன்றைக்கு வரைக்கும் பள்ளிப் பாடத்தில்கூட அதனைச் சொல்லிக் கொடுக்கவில்லையே!
அவர் 1870 ஆம் ஆண்டு சத்ய சோதக் மண்டல் என்கிற ஒன்றை நிறுவி -150 ஆண்டுகளுக்கு முன்னால், அந்த அமைப்பை உருவாக்கி, பிள்ளைகளுக்குக் கல்வி தந்தார். குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பெண்களுக்குக் கல்வித் தந்தது என்பதுதான் அவருடைய தொடக்கம்.
அதற்கு அடுத்த கட்டமாக ஜோதிராவ் பூலே என்ன செய்தார் என்றால், திருமணமாகி கணவனை இழந்த பெண்கள், வேறு மறுமணம் செய்துகொள்வதற்கு அன்றைக்கு உரிமையில்லாத சமூகத்தில், வேறு ஏதேனும் ஒருவிதத்தில் கருவுற்றிருந்தால், ஒன்றும் குற்றமில்லை, இங்கே வாருங்கள்! மனிதர்களுடைய இயற்கையான உணர்வுகளை முறித்துப் போடக்கூடாது. நம்முடைய தமிழ்ப் பண்பாடு மிக உயர்ந்தது என்று சொல்கிறோம். தமிழ்ப் பண்பாட்டில்கூட சிலப்பதிகாரம் கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்கிறது. மனைவியை இழந்தோருக்கு மாற்று இல் என்று சொல்லவில்லையே! கணவனை இழந்த பெண்ணுக்கு மட்டும் வேறு மாற்று இல்லை; மனைவியை இழந்தவர்களுக்கு மாற்று உண்டா? இந்த சமூகம் அப்படித்தானே இருந்தது.
பெண்களே மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி எழுந்த இயக்கம் திராவிட இயக்கம்
சின்னஞ்சிறிய வயதில் தன் கணவனை இழந்தால்கூட, அந்தப் பெண் சாகிற வரையில், அவளுக்கு மூன்றுவிதமான வழிகள்தான் உண்டு.
கணவன் இறந்துபோனால், அந்தச் சிதை நெருப்பில் தானும் எரிய வேண்டும். அல்லது சாகும் வரையில் அவள் கைம்பெண்ணாக இருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட இடங்களிலே அதனையெல்லாம் முறித்துப் போட்டு, பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் உலகத்தில் இருக்கமுடியாது; அது இயற்கைக்கு மாறானது; பெண்களே மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி எழுந்த இயக்கம் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில்.
அதற்கும் முன்னோடியாகத்தான் ஜோதிராவ் பூலே அவர்கள், இயற்கைக்கு மாறாக நாம் அப்படி சொல்ல முடியாது, பெண்களே! நீங்கள் கருவுற்றிருந்தால், சத்ய சோதக் மண்டலுக்கு வாருங்கள்! குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்குப் பிறகு நீங்கள் குழந்தைகளை எடுத்துச் செல்லவில்லை என்றால், இங்கே விட்டுவிட்டுச் போய்விடுங்கள், நாங்கள் வளர்த்துக் கொள்கிறோம் என்று, 150 ஆண்டுகளுக்குமுன்பு ஒருவன் சொன்னான் என்றால், அவனைவிட சமூகநீதிப் புரட்சியாளன் வேறு யார் இருக்க முடியும்?
மறுபடியும் இதையே நாங்கள்
இந்த மண்ணில் செய்வோம்
என்ன நடந்தது? அந்த சத்ய சோதக் மண்டல் கட்டடம் தரைமட்டமாக இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட இடத்தில் நின்றுகொண்டுதான், பூலேவும், அவருடைய மனைவி சாவித்திரி பாய் அவர்களிடம்,
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபொழுது,
மறுபடியும் கட்டுவோம்; மறுபடியும் இதையே நாங்கள் இந்த மண்ணில் செய்வோம் என்று சொன்ன மாவீரர்கள் அல்லவா அவர்கள்.
அவர்களின் தாக்கத்தினால், சாகுமகராஜ் அவர்கள், தன்னுடைய கோல்காப்பூர் அரண்மனையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். வெறும் இட ஒதுக்கீடு இல்லை. அந்த கோல்காப்பூர் அரண்மனையில், சமையலை யார் செய்வார்கள் என்றால், யாரைத் தீண்டத்தகாதவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களோ, அவர்கள்தான் சமையல் செய்வார்கள். விரும்பினால் உண்; விரும்பாவிட்டால், போ என்று சொல்கின்ற துணிச்சல் சாகுமகராஜ் அவர்களுக்கு இருந்தது.
அதே துணிச்சலை நான் பார்க்கிறேன்; 1929 ஆம் ஆண்டு - இங்கே இருக்கிற கருப்புச் சட்டைத் தோழர்கள் அறிவார்கள் - பொதுமக்களுக்காக சொல்கிறேன். பெரியார் திடலில் நாம் பேசினால், நம் சிந்தனைகளை, நாம் நமக்குள் பகிர்ந்துகொள்வோம். இப்படித் தெருவில், பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது, மக்களுக்காக இந்தச் செய்தியை நான் எடுத்துச் சொல்கிறேன்.
செங்கல்பட்டில் நடைபெற்ற
சுயமரியாதை மாநாட்டில்...
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், அது வெறும் மாநாட்டிற்கான அறிவிப்பு அல்ல. ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தைச் சார்ந்த மக்கள்தான் சமையலைச் செய்வார்கள் என்று தந்தை பெரியார் சேர்த்து அறிவித்தாரே, உடையிலும், உணவிலும் ஜாதியிருக்கின்ற தேசத்தில், உடைத்துப் போட்ட பெருமை எங்கள் மண்ணையும், எங்கள் இயக்கத்தையும்தானே சேரும்!
என் பிள்ளைக்கு நான் பெயர் வைத்தால், இவன் யார் கேட்பதற்கு?
எதில் ஜாதியில்லை? பிறப்பில் மட்டுமா ஜாதியிருக்கிறது; உண்ணும் உணவில் ஜாதியிருக்கிறது; உடுத்தும் உடையில் ஜாதியிருக்கிறது; உடுத்தும் முறையில் ஜாதியிருக்கிறது; ஒவ்வொருவரும் சூட்டிக்கொள்ளவேண்டும் என்று சொன்ன பெயர்களில் ஜாதி இருக்கிறது. முத்துக்குட்டி என்று வைகுந்தசாமிகளுக்கு பெயர் வைக்கப்பட்டது ஏன்? அவருடைய இயற்பெயர் என்ன? அவர் முடிசூடும் பெருமாள் என்றுதானே பெயர் வைத்தார்கள் பெற்றவர்கள். ஒரு நாடார் சமுதாயத்தில் பிறந்தவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் வைக்கலாமா? என்று கேட்டார்கள். என் பிள்ளைக்கு நான் பெயர் வைத்தால், இவன் யார் கேட்பதற்கு? இன்றைக்குக் கேட்க முடியுமா எவனாவது என்று எண்ணிப்பாருங்கள் நண்பர்களே!
முடிசூடும் பெருமாள் என்று எப்படி பெயர் வைத்தீர்கள் என்று அந்த ஊரில் இருக்கிறவர்கள் எல்லாம், அந்தக் குடும்பத்தை நெருக்கியபொழுதுதான், வேறு வழியில்லாமல், முத்துக்குட்டி என்று பெயர் வைத்தார்கள். அதுகூட நண்பர்களே, மனிதர்களுக்குப் பிறப்பது குழந்தை; விலங்குகளுக்குப் பிறப்பதுதான் குட்டி. நம்முடைய பெயரில்கூட முத்துக்குட்டி என்று பெயர் வைக்கச் சொன்ன காலம், இன்றைக்கு மறுபடியும் வருமா? வர முடியுமா? எவனாவது அப்படிச் சொல்ல முடியுமா? எச்.இராஜாவாக இருந்தாலும், என் வீட்டுப் பிள்ளைகளுக்கு இப்படி பெயர் வைக்கவேண்டும் என்று சொல்கின்ற துணிச்சல் வருமா?
பெரியாரின் கருத்துகளைப் பின்பற்றுகிற கூட்டம் இன்றைக்கு எண்ணிக்கையில் கூடிக் கொண்ட போகிறது
நேற்றைக்கு முன்தினம் பேசுகிறபொழுது, ஈ.வெ.ரா. அவரால் பெரியார் என்று சொல்ல முடியாது; ஈ.வெ.ரா.வைப் பின்பற்றுகிறவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றார். அவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்றால், தமிழ்நாட்டில் முட்டாள்களின் எண்ணிக்கை கூடுதல் என்று நீ குறித்துக் கொள். உன்னைப் போல் புத்திசாலியாக உயிரோடு இருப்பதைவிட, அடுத்தவனை அழிப்பதற்கு, புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதைவிட, இந்த நாட்டை மக்களை நல்வழிப்படுத்துவதற்கு பெரியாரின் கருத்துகளைப் பின்பற்றுகிற கூட்டம் இன்றைக்கு எண்ணிக்கையில் கூடிக் கொண்ட போகிறது. யாராவது பெயரை இப்படித்தான் வைக்கவேண்டும் என்று சொல்ல முடியுமா?
என்னிடத்தில் ஒரு மாணவர் படித்தார். அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த மாணவர். அவருடைய பெயர் என்ன தெரியுமா நண்பர்களே, ‘கும்பிடறேன் சாமி’ என்பதுதான். நான் ஆசிரியராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும், அவரை அழைக்கின்றபொழுதெல்லாம், ‘கும்பிடறேன் சாமி’ என்றுதான் கூப்பிடவேண்டும். எல்லாப் பயல்களும் கும்பிடுகிறேன் சாமி என்றுதான் கூப்பிடவேண்டும்.
தாழ்த்தப்பட்ட தோழனைப் பார்த்து, மைலார்ட் என்று இன்னும் கொஞ்ச நாளைக்குச் சொல்லட்டும்
எனவே, நண்பர்களே, இந்த இடத்தில் எனக்கு ஒன்று நினைவு வருகிறது. நம்முடைய வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள், வழக்குரைஞர்கள் கூட்டத்தில் ஒருமுறை சொன்ன செய்தி, அதனை பல இடங்களில் நான் சொல்லியிருக்கிறேன்.
‘மை லார்ட்’ என்று இன்றைக்கும் நீதிபதிகளை அழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு மரபு இருக்கிறது. என்னுடைய பிரபுவே! யாருக்கும் யாரும் பிரபு இல்லை. யாருக்கும் யாரும் கடவுள் இல்லை. கடவுளே இல்லை, அது வேறு. மனிதர்களையே மை லார்ட் என்று அழைக்கிறபொழுது, நம்முடைய வழக்குரைஞர்களாக இருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் உணர்ச்சியும், உத்வேகமும் ஏற்பட்டு, இனிமேல் நாம் மைலார்ட் என்று சொல்லவேண்டியதில்லை; மிஸ்டர் ஜஸ்டீஸ் என்று சொன்னால் போதும் என்று சொன்ன நேரத்தில், அதனை அருள்மொழி போன்றவர்கள்தானே கைதட்டி வரவேற்று இருக்கவேண்டும். ஆனால், அருள்மொழி சொன்னார், இல்லை, இல்லை. இன்னும்கொஞ்சம் நாளைக்கு மைலார்ட் என்றே சொல்லுவோம்; பிறகு பார்க்கலாம் என்று சொன்னார்.
திராவிடர் கழகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணா இப்படி சொன்னார் என்பதற்கு, அவர் ஒரு காரணம் சொன்னார். வேறொன்றும் அல்ல, இதுவரையில் அந்த மேடையில் வெள்ளைக்காரர்கள் நீதிபதிகளாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவாள்தான் இருந்தார்கள்; அய்யரும், அய்யங்காரும் இருந்தார்கள். அப்போதெல்லாம், அவர்களை நீங்கள் மை லார்ட் என்று அழைத்தீர்கள். இன்றைக்குத்தானடா, எங்கள் குப்பனும், சுப்பனும் நீதிபதியாக வந்து அமர்ந்திருக்கிறான். இன்றைக்குத்தானே பூணூல் போட்டவன் வக்கீலாக இருக்கிறான்.
எனவே, பூணூல் போட்ட வக்கீல், நீதிபதியாக அமர்ந்திருக்கிற தாழ்த்தப்பட்ட தோழனைப் பார்த்து, மைலார்ட் என்று இன்னும் கொஞ்ச நாளைக்குச் சொல்லட்டும்; அதுதான் சமத்துவம் என்று சொன்னார்.
பெயரில்கூட அரசியல் இருக்கிறது; பெயரில்கூட ஜாதி இருக்கிறது. அப்படி எல்லா ஜாதி அடிப்படைகளையும் உடைத்துப் போட்டு, சமத்துவத்தை முன்னிறுத்துவதற்காக நடைபெற்ற அந்த சுயமரியாதை மாநாட்டை, முதல் மாநாட்டை நான் எண்ணிப்பார்க்கிறேன்.
நாடார் சமுதாயத்தவர்தான்
சமைப்பார்கள் என்றார்!
யார் பேசுவார்கள் என்பதில்லை; யார் சமைப்பார்கள் என்பதைக்கூட முடிவு செய்த மாநாடு அந்த மாநாடு. அவர்கள்தான் சமைப்பார்கள், சம்மதம் இருந்தால் நீ உள்ளே வா!
பாண்டியனார் பேச்சை நான் இங்கே சொல்கிறேன், ‘‘நான் உள்ளே வருகிறபொழுது, சவுந்திரபாண்டிய நாடாராக வந்திருக்கலாம்; வெளியே போகிறபோது, சவுந்திரபாண்டியனாக வெளியேறுவேன்.’’
‘‘நான் உள்ளே வருகிறபொழுது, ராமச்சந்திர சேர்வையாக வந்திருக்கலாம் சிவகங்கையில் இருந்து. வெளியேறுகிறபொழுது, நான் ராமச்சந்திரனாக வெளியேறுவேன்’’ என்று ஜாதிப் பட்டத்தை உதறி எறிய வைத்த நாடு, அந்த இயக்கம் திராவிட இயக்கம். சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கித் தந்த தலைவர் எங்கள் அய்யா பெரியார் அவர்கள்.
ஆகையினாலே, அந்த இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் வந்தது. நம்முடைய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய அருமையான உழைப்பினால்.
அம்பேத்கரின் எழுத்துகளை தமிழில் அல்ல - ஆங்கிலத்தில் படியுங்கள்
எப்படி? வெள்ளைக்காரர்களை உட்கார வைத்து, லண்டனுக்குச் சென்று, இட ஒதுக்கீடுக்கு என்ன நியாயம் இருக்கிறது என்பதை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அங்கே அமர்ந்திருந்த 19 வெள்ளைக்கார அதிகாரிகள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசி, விளக்கினாரே - உண்மையாகச் சொல்கிறேன் நண்பர்களே, ஆங்கிலம் படிக்கின்ற நண்பர்கள், அம்பேத்கரின் எழுத்துகளை தமிழில் அல்ல - ஆங்கிலத்தில் படியுங்கள், அது சேக்ஸ்பியரின் எழுத்தைப்போல, அழகானது, எளிமையானது.
அவருடைய ஆற்றல், அந்த வாதத் திறன், அன்றைக்கு அவர்களையே ஏற்றுக்கொள்ள வைத்து, 1943 ஆகஸ்ட் 11 ஆம் தேதியிலிருந்து, இந்தியா முழுமைக்கும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அட்டவணை ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வந்தது. ஆனால், மற்றவர்களுக்கு அப்படி வரவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான போராட்டத்தை சாகுமகராஜ் தொடங்கி வைத்தாரே - 1909 ஆம் ஆண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு அரசியல் தளத்தில் மட்டும், மிண்டோ -மார்லி சீர்திருத்தத்தில் இட ஒதுக்கீடு வந்தாலும், மைசூர் சாம்ராஜ்ஜியத்தில் 1920 ஆம் ஆண்டுகளில் கொடுத்தாலும், தமிழ்நாட்டில், 1927 ஆம் ஆண்டு கம்யூனல் ஜி.ஓ. என்று சொல்கிற, அந்தச் சட்டத்திற்குப் பிறகு வந்த இட ஒதுக்கீடு, இன்றைக்குவரைக்கும் எந்தப் பயலாலும் கைவைக்க முடியாத, கைவைக்கவேண்டும் என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் விரும்பினாலும், அதனைத் தமிழகம் விட்டுக் கொடுக்காத நிலையில் இருக்கிறதே, நீ நவோதயா பள்ளியைக் கொண்டு வந்து, அந்த இட ஒதுக்கீட்டைக் குலைக்கப் பார்க்கிறாயே, ஏற்க முடியுமா? எங்களால்.
பல வரலாற்றுப் புரட்சிகள்
தமிழகத்திலிருந்துதான் தொடங்கியிருக்கின்றன
நீ நவோதயா பள்ளியைக் கொண்டு வந்து, ஆங்கிலத்தோடு சேர்த்து, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்கிறாயே, ஏற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு?
ஏன் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்கின்றன; தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எப்பொழுதும் தனித்துவம் உண்டு. பல வரலாற்றுப் புரட்சிகள் தமிழகத்திலிருந்துதான் தொடங்கியிருக்கின்றன நண்பர்களே!
அறிஞர் அண்ணா சொல்வார், இந்தியாவின் வரலாற்றை சரியாக எழுதவேண்டும் என்று விரும்புகிறவர்கள், கங்கைக்கரையில் இருந்தல்ல, காவிரிக் கரையில் இருந்து வரலாற்றைத் தொடங்கவேண்டும் என்று சொல்வார். தொடங்கவேண்டிய கட்டம் வந்திருக்கிறது.
நேற்றைக்குக்கூட கீழடியில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை எங்களுடைய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திற்று. தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். இதோ மூடப் போகிறார்கள்; மூன்றாம் கட்ட ஆய்வை மூடப் போகிறார்கள். நாங்கள் ஒரே ஒரு கேள்விதான் கேட்டோம். நீ சரசுவதி நதியைத் தேடுகிறாய்; கீழடி ஆய்வை மூடுகிறாய். நீ யாருக்கான அரசு என்று கேட்டோம்.
5 லட்சம் ரூபாய்கூட
இந்த மத்திய அரசிடம் இல்லையா?
இல்லாத சரசுவதி நதியை இவர்கள் தேடுவார்களாம்; இருக்கிற கீழடி அகழாய்வை மூடுவார்களாம். என்ன காரணம் என்றால், மூன்றாவது கட்ட ஆய்வை நேற்று நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். ஏசு பிறப்பதற்கு 195 ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொன்னால் நண்பர்களே, அந்த ஆண்டுக் கணக்கை நான் என் விருப்பத்தின் அடிப்படையில் சொல்லவில்லை; கார்பன் டெஸ்ட் என்று சொல்கிறார்களே, அந்தச் சோதனையில், அதுகூட என்ன கொடுமை தெரியுமா? அங்கே இருந்து 10 பொருள்களை கார்பன் டெஸ்டுக்கு அனுப்புகிறார்கள். இந்திய அரசு சொல்கிறது, பத்து பொருள்களையும் சோதனை செய்வதற்குப் பணம் செலவிட முடியாது. ஒரு பொருளை சோதனை செய்வதற்கான செலவு 50 ஆயிரம் ரூபாய்; 10 பொருள்களை சோதனை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய்தான் ஆகும். 5 லட்சம் ரூபாய்கூட இந்த மத்திய அரசிடம் இல்லையா? இரண்டே இரண்டு பொருள்களைத்தான் சோதனை செய்வோம் என்று சொல்லி,
எந்த ஒரு சமயச் சார்பும் இல்லை என்பதுதான் அவர்களை உறுத்துகிற செய்தி
ஒன்று கி.மு.195, இன்னொன்று கி.மு.200 என்று காலத்தைக் கணித்திருக்கிறீர்களே, 2200 ஆண்டுகளுக்கு முன்னால், என் தமிழன் உறை கிணறு வைத்திருக்கிறான்; 2200 ஆண்டுகளுக்குமுன்னால், அருமையான செங்கல் கட்டிடத்தால், கட்டடத்தை எழுப்பியிருக்கிறான். கண்கூடாக அதனை நேற்று நாங்கள் பார்த்தோம். அதனைப் பார்க்கின்றபொழுது, தமிழனுடைய கட்டடக் கலை, தமிழனுடைய தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், 2000 ஆண்டுகளுக்கு முன்னால், மற்ற இனங்கள் எல்லாம் உடுத்திக் கொள்ளாமல்கூட திரிந்த காலத்தில், எங்கள் தமிழன் கட்டடம் கட்டி, உடை உடுத்தி நாகரிகமாக வாழ்ந்திருக்கிறானே, அந்த வரலாற்றை ஏன் மறைக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் என்றால், வேறொன்றும் இல்லை பெரியோர்களே, அங்கே அவர்களுக்கு ஒன்று உறுத்துகிறது. 2200 ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற 500-க்கும் மேற்பட்ட பொருள்களில், எந்த ஒன்றிலும், எந்த ஒரு சமயச் சார்பும் இல்லை என்பதுதான் அவர்களை உறுத்துகிற செய்தி.
எங்கள் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் இல்லாமல், அதனைச் செய்துவிட முடியாது
சமயச் சார்பற்றவனாக, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றாதவனாக தமிழன் வாழ்ந்திருக்கிறான். எனவே, இது ஒரே நாடும் இல்லை; ஒரே பண்பாடும் இல்லை. தனி நாடு தமிழ்நாடு. தமிழ்நாட்டிற்கு ஒரு தனி பண்பாடு உண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. வங்கத்தின் பண்பாடு வேறு; கேரளத்தின் பண்பாடு வேறு. ஒருங்கிணைந்த ஒன்றிய ஆட்சியில், பெடரலிசம் சொல்லப்படுகிற கூட்டாட்சியில் இருக்க எங்களுக்கு சம்மதம். ஒருநாளும் அடிமையாக இருக்க தமிழன் சம்மதிக்க மாட்டான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டும்; மீண்டும் மீண்டும் இந்திய அரசுக்குக் காட்டவேண்டும் என்றால், எங்கள் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் இல்லாமல், அதனைச் செய்துவிட முடியாது.
எந்தப் போராட்டத்திற்கும், எந்தத் தியாகத்திற்கும் அணியமாக இருக்கிறோம்
அய்யா ஆசிரியர் அவர்களே, தளபதி அவர்களே, நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்களே உங்களுக்கான வேலைகள் நிரம்ப இருக்கிறது. பின்னால் வருவதற்கு என்றைக்கும் நாங்கள், எப்பொழுதும், எதற்கும் அணியமாக இருக்கிறோம். எந்தப் போராட்டத்திற்கும், எந்தத் தியாகத்திற்கும் அணியமாக இருக்கிறோம். பிறந்த நாள் விழாவில், மகிழ்ச்சி மட்டும் இல்லை. இப்படி உறுதி ஏற்றுக்கொள்ளவேண்டி நிலையிலும் இருக்கிறோம்.
வாய்ப்புக்கு நன்றி, கூறி விடைபெறுகிறேன்.
- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,21.9.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக