ஏன் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார் - நாளைக்கும் தேவைப்படுகிறார்? ஜாதி இல்லா நாடு - சாமியார்கள் இல்லாத நாடு - நோயில்லாத வீடு இவைகளை உருவாக்குவோம்!
சென்னை-திருவல்லிக்கேணியில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, செப்.18 ஜாதி இல்லா நாடு - சாமியார்கள் இல்லாத நாடு - நோயில்லாத வீடு போன்றது. - இவைகளை உருவாக்குவோம். இளைஞர்களே, நீங்கள் இந்தப் பக்கம் வாருங்கள் - பெரியார் பக்கம் இப்பொழுது வந்திருக்கிறீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
17.9.2017 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நீண்ட இடைவெளிக்குப் பின்
நம் விழிகளைத் திறந்த வித்தகர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்ற இந்தப் பெருவிழாவில் ஒரு அற்புதமான சிந்தனை விருந்தை, கொள்கைப் பரப்புதலை நடத்துதலுக்கு ஏற்ப சிறப்பான திட்டத்தை நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கே அமைத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதற்குக் காரணமான தென்சென்னை மாவட்டத் தலைவர் அருமைத் தோழர் இரா.வில்வநாதன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் தோழர் செ.ர.பார்த்தசாரதி அவர்களே,
முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மண்டலத் தலைவர் ரத்தினசாமி அவர்களே, மண்டலத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எம்.பி.பாலு அவர்களே, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் அவர்களே, ஆவடி மாவட்டத் தலைவர் தென்னரசு அவர்களே, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அவர்களே, தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் மதியழகன் அவர்களே, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் அவர்களே, தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் செங்குட்டுவன் அவர்களே, துணை செயலாளர் கோ.வீ.ராகவன் அவர்களே, துணை செயலாளர் சா.தாமோதரன் அவர்களே, தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ் சாக்ரட்டீஸ் அவர்களே, மண்டல இளைஞரணி செயலாளர் இரா.சிவசாமி அவர்களே,
கொள்கைபூர்வமான ஒரு சிறப்பான ஆய்வுரை
எனக்குமுன்னாலே மிகப்பெரியதொரு கொள்கைபூர்வ மான ஒரு சிறப்பான ஆய்வுரை போல, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய மிகச் சிறப்பான கொள்கை வாழ்க்கை - தொண்டு வாழ்க்கை - மிகப்பெரிய அளவிற்கு எதிர்நீச்சல் வாழ்க்கை - இவைகள் எல்லாம் எப்படிப்பட்ட தனித்தன்மையானது- அவை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதையெல்லாம் மிக அற்புதமாக இங்கே எடுத்துச் சொன்ன, என்னருஞ் சகோதரர் நம்மிடையே என்றென் றைக்கும் இணை பிரியாது இருக்கக்கூடிய கொள்கை பரப்புகின்ற பணியின் தளபதிகளில் ஒருவராக இருக்கக் கூடிய தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
அதேபோல, இன்னொரு பக்கத்தில் எப்பொழுதும் இந்தக் கொள்கையில் மாறாது தமிழகத்தில் மிகப்பெரியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்பிற் குரிய மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் எனக்குமுன் உரையாற்றிய கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,
அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, பொதுமக்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிறப்பான நிகழ்ச்சி வழமைபோல், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழா என்று சொன்னால், ஒவ்வொரு ஆண்டும் அய்யா அவர்களுக்கு, இதுபோல் விழா என்று சொல்லக்கூடிய நிலையில், இன எதிரிகள் எப்படி எல்லாம் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை நம் முடைய அருமைச் சகோதரர் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்.
இறந்துபோன பெரியாருக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா? என்று கேட்டார்கள்
அவர்கள் ஏராளமான செய்திகளை அவருடைய முகநூலில் பதிவு செய்து ஒவ்வொரு நாளும் சொல்கிறபொழுது, ஒரு எதிர்ப்புக் குரல் வந்தது - இறந்துபோன பெரியாருக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா? என்று கேட்டார்கள் என்றும், அதற்கு அவர்கள் பதிலும் சொன்னார்கள் - அதில், கடவுள்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்களே என்று!
அதைவிட மிகச் சிறப்பானது என்னவென்றால், கடவுள் களை அவர்கள் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் வாழவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் கடவுளை உருவாக்குவது, பிறகு அவைகளைக் கொண்டு வந்து கடலில் கரைப்பது என்பது இந்தப் பகுதிக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை - இங்குதான் அடிக்கடி பிரச்சினை வரக்கூடிய ஒரு பகுதி.
பக்தி வந்தால் புத்தி போய்விடும்;
புத்தி வந்தால் பக்தி போய்விடும்
புத்தி வந்தால் பக்தி போய்விடும்
ஒவ்வொரு ஆண்டும் களிமண்ணால் கடவுள்களை உருவாக்குகிறார்கள். விநாயகனுக்கு - விநாயகர் சதுர்த்தி; ராமனுக்கு - ராம நவமி; கந்தனுக்கு - சஷ்டி; கிருஷ்ணனுக்கு - கோகுலாஷ்டமி என்று சொல்வார்கள்.
ஆனால், அதேநேரத்தில் எவ்வளவு பெரிய முரண்பாடு. பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று தந்தை பெரியார் அவர்கள் எளிமையாக சொல்வார்.
அதற்கு ஒரு உதாரணம் என்னவென்றால், ராமன் பிறந்ததாக அவர்கள் குறிப்பிடுவது நவமியில்,
கற்பனைதான் என்றாலும், கிருஷ்ணன் பிறந்ததாக அவர்கள் குறிப்பிடுவது அஷ்டமியில்,
ஆனால், அஷ்டமி, நவமியில், நல்ல காரியம் எதையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். திராவிடர் கழகத்துக் காரர்கள் இதை சொன்னால், நியாயம். ஏனென்றால், இந்த இரண்டு கடவுள்களும் பிறந்துதான் ஜாதியைக் காப்பாற்றி னார்கள்.
மனுதர்மத்திற்கும்,
மனித தர்மத்திற்கும்தான் போராட்டம்!
மனித தர்மத்திற்கும்தான் போராட்டம்!
சம்பூகனுக்கு தலையை வெட்டினார்கள் - ஏன் தலையை வெட்டினார்கள். இதோ என் கையில் இருப்பது அசல் மனுதர்ம நூல்.
இப்பொழுது நடக்கின்ற போராட்டமே மனுதர்மத்திற்கும், மனித தர்மத்திற்கும்தான். பெரியார் ஏன் இன்னமும் தேவைப் படுகிறார்? ஏன் நாங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறோம்? வெளித் தோற்றத்தில் அரசியல் போன்று தெரியும். ஏன் எச்.ராஜாக்களால் வெற்றி பெற முடியவில்லை தமிழ்நாட்டில்? எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தினாலும், ஏன் எச்.ராஜாக் களால் வெற்றி பெற முடியாமல் போனது?
எச்.இராஜாக்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் - ராஜாக்கள் வெறும் எச்.இராஜாக்களாக இருக்கவேண்டுமே தவிர, மந்திரிகளாக வர முடியாது என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மனுதர்மத்தை நிலை நாட்டவேண்டும் என்று நினைத்தார்கள். அந்த மனுதர்மத்தின் அடிப்படை என்னவென்றால்,
அசல் மனுதர்மத்தில்...
317, 9 ஆவது அத்தியாயத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்றால்,
‘‘வைதீகமாக இருந்தாலும், லவுகீகமாக இருந்தாலும், அக்னியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம்.’’
இதைத்தான் மறுபடியும் ஆட்சி முறையாகக் கொண்டு வரவேண்டும் என்று துடிப்பதுதான் பா.ஜ.க. அதுதான் ஆர்.எஸ்.எஸ்.
அதனை எதிர்ப்பவர்கள் நாங்கள் எல்லாம், முட்டாள் பயலை முட்டாளாகவே பாரு; அவனை கடவுளாக்காதே என்று சொல்பவர்கள்.
இப்பொழுது மூடர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? அதனுடைய அடிப்படை என்ன? என்பதை நீங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
‘‘ராமா, உன்னுடைய ஆட்சியில்
அதர்மம் இருக்கிறது’’
அதர்மம் இருக்கிறது’’
இராமாயணத்தில், உத்தரகாண்டம் என்கிற பகுதியில், வால்மீகி இராமாயணத்தில் பிறகு, இதனை அகற்றி விட்டார்கள்; கம்பராமாயணத்தில் அந்தப் பகுதி கிடையாது.
கடைசியாக, ராம ராஜ்ஜியம் நடக்கிறது. அந்த ராம ராஜ்ஜியத்தினுடைய தத்துவம் என்ன என்று சொன்னால், ராமன் எல்லாவற்றையும் பிடித்து ஆள்கிறார். அப்பொழுது, அவரு டைய சபைக்குமுன், பார்ப்பனர்கள் ஒரு இறந்த பையனின் உடலைப் போட்டுவிட்டு, ‘‘ராமா, உன்னுடைய ஆட்சியில் அதர்மம் இருக்கிறது’’ என்கிறார்கள்.
ஏன் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்? நாளைக்கும் தேவைப்படுகிறார்; இப்பொழுதும் தேவைப்படுகிறார்; எப்பொ ழுதும் தேவைப்படுவார் என்பதற்கு அடையாளம் என்ன வென்று கேட்டால், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி,
இறந்த பையனின் உடலைப் போட்டுவிட்டு, ராமா உன்னுடைய ஆட்சியில் அதர்மம் இருக்கிறது; அதனால்தான் இந்தப் பையன் இறந்துவிட்டான் என்கிறார்கள்.
இதனை நாங்கள் எழுதவில்லை; ஈரோட்டில் அச்சடித்த தில்லை; முரசொலி அலுவலகத்தில் அச்சடித்ததில்லை; கோபால புரத்தில் அச்சடித்ததில்லை; பெரியார் திடலில் அச்சடித்ததில்லை.
உடனே ராமன் கேட்கிறான், என்னவென்று?
உன்னுடைய ஆட்சியில் தர்மம் கெட்டுப் போய்விட்டது என்கின்றனர் பார்ப்பனர்கள்.
என்ன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று ராமன் கேட்கிறான்.
சூத்திரன், கடவுளாக வணங்கவேண்டியது பிராமணர்களைத் தான். அதைவிட்டு, சம்பூகன் என்கிற சூத்திரன், கடவுளை நேராகப் பார்க்கவேண்டும் என்று கண்களை மூடிக்கொண்டு தவம் செய்கிறான். அதனால் தர்மம் கெட்டுப் போய்விட்டது. அவன் யாரைத் தொழவேண்டும் - பிராமணர்களைத்தான் தொழவேண்டும். ஆகவே, நீ உன் தர்மத்தை நிலைநாட்டவில்லை என்று சொல்கிறார்கள்.
அப்படியா?
விசாரணையே கிடையாது - விசாரணையே செய்யாமல், அங்கே சென்று, வாளை எடுத்து சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறான்.
எனவே, சூத்திரன் கடவுளை நேரடியாக வணங்கக்கூடாது என்கிற தத்துவம் இருக்கிறதே, அந்தத் தத்துவம்தான் என் றைக்கும் நிலைநாட்டப்படவேண்டிய தத்துவம் என்பதினுடைய அடிப்படையில்தான்,
நீட்டாக இருந்தாலும் சரி, நவோதயா பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி அவை அத்தனைக்கும் இந்த அடிப்படைதான். எனவே, மீண்டும் மனுதர்மம் வரவேண்டும் என்று வெளிப் படையாகவே அவர்கள் சொல்கிறார்கள். இதனை நம்மாட்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். நம்முடைய கையைக் கொண்டே, நம்முடைய கண்களைக் குத்துகிறார்கள். அதற்கும், ராமாயணத்தைத்தான் உதாரணமாகச் சொல்கிறான்.
அனுமாருக்கு என்ன வேலை என்றால், இராவணனுக்குத் தீ வைத்துவிட்டு, கடைசியாக வந்தான் என்றால், அவனுக்குப் பக்கத்தில்கூட ராமன் இடம் கொடுக்கமாட்டான், கீழேதான் அனுமார் உட்கார்ந்திருப்பான்.
விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டம் - இவை அத்தனையும் கொடுக்கக்கூடிய அளவில் இருந்ததினால், இதை அத்தனையும் சொல்லிப் பார்த்து, ராமாயணமா? அதனுடைய அடிப்படை என்ன? என்று அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஏன் இந்து மதத்தை மட்டும்
தாக்கிப் பேசுகிறீர்கள்?
தாக்கிப் பேசுகிறீர்கள்?
தந்தை பெரியார் அவர்கள், ஏன் ராமனைப்பற்றியும், கிருஷ்ணனைப்பற்றியும் சொன்னார். சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், ஏன் இந்து மதத்தை மட்டும் தாக்கிப் பேசுகிறீர்கள் என்று. எங்கே புண் இருக்கிறதோ, அங்கேதானே மருந்து போடவேண்டும். எங்கே எனக்கு வேதனை இருக்கிறதோ, அங்கேதானே நான் ஆபரேட் செய்வேன்.
அந்த மதத்தில் ஊழல் இருக்கிறது, நீ ஏன் பேசவில்லை என்றால், நீ அதைப்பற்றி பேசு - நான் இதைப் பேசுகிறேன். எங்கே குப்பை இருக்கிறதோ - என்னுடைய வீட்டில் இருக்கும் குப்பையைத்தானே நான் எடுப்பேன், அதுதானே முக்கியம்.
பெரியாருடைய சிந்தனைகளைப்பற்றி நம்முடைய சுப.வீ. அவர்களும், நம்முடைய தொல்.திருமாவளவன் அவர்களும் சொன்னார்கள்.
பெரியாருக்கும், கடவுளுக்கும்
சண்டையா என்ன?
சண்டையா என்ன?
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார்; பெரியார் பார்ப்பானை வைதார் என்று இரண்டே வார்த்தையில் சிலர் புரியாமல் சொல்கிறார்கள்.
கடவுள் இல்லை என்று பெரியார் அவர்கள் சொல்ல வேண் டிய அவசியம் ஏன் வந்தது? கடவுளுக்கும், அவருக்கும் சண் டையா? பாகப் பிரிவினையா? இன்னுங்கேட்டால், பெரியார் அவர் கள், கடவுள் இருக்கிறார் என்று சொல்லியிருக்கவேண்டாம்.
அய்யா அவர்களே சொல்லியிருக்கிறார், இருக்கிறாரோ, இல்லையோ என்று தெரியாது என்று கொஞ்சம் நகர்ந்திருந்தார் என்றால், தந்தை பெரியார் படத்தை இங்கேயா திறந்திருப்போம் - பார்த்தசாரதி கோவிலின் உள்ளே அல்லவா வைத்திருப்பார்கள்.
என்னுடைய படம் ஒவ்வொரு பார்ப்பான் வீட்டிலும் தொங்குமே!
அவரே சொன்னார், ‘‘நான் மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தேன் என்றால், பார்ப்பான் சும்மா இருப்பானா? உங்களிடம் இவ்வளவு கெட்ட பெயர் வாங்குவேனா? இவ்வளவு செருப்படிபடுவேனா? மலத்தை அள்ளி வீசியிருப்பார்களா? என்னை ‘‘ஆழ்வாராக’’ ஆக்கியிருப்பார்களே - ‘‘பதினோராவது அவதாரமாக்கி இருப்பார்களே என்னை - என்னுடைய படம் ஒவ்வொரு பார்ப்பான் வீட்டிலும் தொங்குமே - ஒவ்வொரு பாப்பாத்தியும் அதற்கு முத்தமும் கொடுப்பாளே!’’ என்றார்.
எதற்காக இதனை சொல்கிறேன் என்றால், ஏன் பெரியார் அந்த அளவிற்குக் கெட்டப் பெயர் எடுக்கவேண்டும்? இன்ன மும் அந்தக் கெட்ட பெயர் எங்களுக்கு இருக்கிறது.
திருமா அவர்கள் மிக அழகாக இங்கே சொன்னார்- தந்தை பெரியார் அவர்கள் ஆசாபாசம் இல்லாதவர். எல்லோரும் அரசியல் வேண்டும் என்று பதவிக்குப் போவார்கள் - பதவிக்குப் போகவேண்டும் என்பதற்காக அரசியல்.
அரசியலில் என்ன பெருமை இப்பொழுது? சரியானவர்கள் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுக்கு ஆசை. ஏனென் றால், வேறொருவன் அந்த இடத்தில் வந்து அமர்ந்துவிடக்கூடாது என்பதுதானே தவிர, இவர்கள் போய்விட்டால், எல்லாமே முடிந்துவிடும் என்று அர்த்தமல்ல.
அண்ணா அவர்களே சொன்னார், ‘‘ஏதோ அரசியலுக்கு வந்து பதவியில் அமர்ந்துவிட்டேன். நீங்கள் நினைத்தை எல்லாவற்றையும் செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டேன். உங்கள் பின்னாலேயே வரவா? இங்கேயே இருந்துகொண்டு செய்யவா?’’ என்று அய்யாவை வைத்துக்கொண்டு சொன்னார்.
பெரியார் சொன்னார், ‘‘அய்ந்தாண்டுகளில் ஒரு நாள், ஒரு மணிநேரம், ஒரு நொடிகூட நீங்கள் சலிக்கக்கூடாது’’ என்றார்.
அந்தப் பணியை கலைஞர் அவர்கள் தொடர்ந்து செய்தார்
ஆனால், அண்ணா அவர்கள் இல்லாவிட்டாலும், அந்தப் பணியை நம்முடைய ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து செய்தார். இன்றைக்கும் அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது - நாளைக்கும் அது நடக்கவேண்டும்.
எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வேலை? நாங்கள் எல்லாம் துப்புரவுத் தொழிலாளர்கள். துப்புரவு தொழிலாளர் களைவிட உயர்ந்த பணியாளன் யாரும் கிடையாது.
அமெரிக்காவில் மட்டும் 10 இடங்களில் பெரியார் பிறந்த நாள் விழா!
பெரியார் ஏன் தேவைப்படுகிறார்? ஒவ்வொருவரும் மிகப்பெரிய அளவில் உணருகிறார்கள். எந்த ஆண்டுகளிலும் இல்லாமல், இந்த ஆண்டு பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவினை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். ஆஸ் திரேலியாவில், சிங்கப்பூரில், மலேசியாவில், அமெரிக்காவில் மட்டும் 10 இடங்களில் கொண்டாடி இருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
நோய் நிறைய பரவ ஆரம்பித்தால், டாக்டர்களுக்கும், மருந்துகளுக்கும் இங்கே வேலை அதிகம் என்று அர்த்தம்.
எல்லா பல்கலைக் கழகங்களிலும் இரண்டு தலைவர்களு டைய அமைப்புதான், காலத்தைத் தாண்டி நின்று கொண்டி ருக்கிறது. இளைஞர்களுக்கு கலங்கரை வெளிச்சம்போல - அறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றால்,
ஒன்று தந்தை பெரியார் -
எல்லா பல்கலைக் கழகங்களிலும் இரண்டு தலைவர்களு டைய அமைப்புதான், காலத்தைத் தாண்டி நின்று கொண்டி ருக்கிறது. இளைஞர்களுக்கு கலங்கரை வெளிச்சம்போல - அறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றால்,
ஒன்று தந்தை பெரியார் -
இன்னொன்று பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்.
எங்கே பார்த்தாலும், மாணவர்கள் மத்தியில் பெரியார் - அம்பேத்கர் என்று காஷ்மீரிலிருந்து ஆரம்பிக்கிறது.
அம்பேத்கர் என்றால்கூட கொஞ்சம் விட்டுவிடுவான்; பெரியார் என்று சொன்னவுடன், அலறுகிறான். அம்பேத்கரை மட்டும் விட்டு விடுகிறார்கள் - ஏனென்றால், அம்பேத்கரை சாயமடித்துக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், திருமா வளவன் அவர்கள் இருக்கும்வரை அது ஒருபோதும் நடக்காது; வீரமணிகள் இருக்கிறார்கள் மறந்துவிடாதீர்கள்; சுப.வீரபாண்டியன் இருக்கிறார்கள் மறந்துவிடாதீர்கள். எங் களுக்கு இதுதான் வேலை.
ஆவிகள் ஒருபக்கம் - பாவிகள் ஒரு பக்கம்
இன்றைய அரசியலைப் பார்த்தால் மிகவும் அசிங்கமாக இருக்கிறதே - நாங்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக் கிறோம் தெரியுமா? அவர்கள் எல்லாம் கொஞ்சம் கவலையாக இருப்பார்கள். நாங்கள், திராவிடர் கழகத்துக்காரர்கள் மகிழ்ச்சி யாக இருக்கிறோம்.
அதற்குமுன் ஆளோடு அரசியல் செய்தார்கள்; இப்பொழுது ஆவியல்லவா இருக்கிறது. ஆவிகள் ஒருபக்கம் - பாவிகள் ஒரு பக்கம்.
ஆவிகள் என்ன செய்யும் என்று, பாவிகள் எல்லாம் ஜோசியம் பார்க்கிறார்கள். ஆவி வந்து தண்டிக்கும் என்கிறார்கள்.
அதற்குமுன் ஆத்மாவே கற்பனை என்று அய்யா சொன்னார். கீதையின் மறுபக்கம் என்று புத்தகம் எழுதினேன் பாருங்கள் - அய்யா அவர்களும், அம்பேத்கர் அவர்களும் கீதையை கண்டித்த அளவிற்கு வேறு யாரும் கண்டிக்கவில்லை. கீதையைக் கண்டிப்பது என்பது இருக்கிறதே, அது யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல.
கடவுளை நம்புகிறவரையிலும்,
ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்?
ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்?
‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’ - நான்கு ஜாதிகளையும் நான் தான் உருவாக்கினேன். அந்தக் கடவுளை நம்புகிறவரையிலும், ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்? என்று பெரியார் கேட்டார்.
கொசுக்களை அழிக்கவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? கொசு வராமல் இருக்க மருந்து வைத்தால் போதுமா? கொசுக்கள் சாக புதிது புதிதாக கொசுவர்த்தி மருந்தை கண்டு பிடித்திருக்கிறான்; அது பெரிய தொழிலாக இருக்கிறது. யாருக்கு லாபம்? கொசு வர்த்தி செய்கின்ற தொழிற்சாலைகளுக்குத்தான் லாபம்.
நிறைய பேர் ஜாதி சங்கம் வைத்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் கொசுவர்த்தி வியாபாரிகள். அவர்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள் அல்ல - ஜாதி ஒழிப்புக்காரர்கள் எங்களைப் போன்றவர்கள்தான். ஏனென்றால், நாங்கள் ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காக - சாக்கடை எங்கே இருக்கிறது? கொசு எங்கே முட்டையிடுகிறது? அங்கே சென்று மருந்தடிக்கவேண்டும் என்று சொல்கிறோம்.
ஆனால், அவர்கள் என்ன சொல்கிறார்கள், ‘‘கொசு நிறைய இருக்கிறதா? இந்த மருந்தை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்; இந்த மருந்தை வீட்டில் கொளுத்தி வையுங்கள்’’ என்கிறார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் கொசு ஒழிக்கும் நோக்கம்தான் என்று உங்களுக்குத் தோன்றும்.
எவ்வளவு நாளைக்கு கொசு இருக்கிறதோ...
கொசுவை ஒழிக்கவேண்டும் என்று நாங்களும் சொல்கி றோம்; கொசுவர்த்தி வியாபாரிகளும் கொசுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மனப் பூர்வமாக என்ன நினைப்பார்கள், எவ்வளவு நாளைக்கு கொசு இருக்கிறதோ, அவ்வளவு நாளைக்குத்தான் அவர்களுடைய தொழிற்சாலை இருக்கும். அப்பொழுதுதான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். அதுபோன்று நிறைய பேர் அரசியலில் கொசு வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள், அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல. எங்கள் ஊரில், 1938 ஆம் ஆண்டு - அய்யாவின்மேல் முட்டையில் மலத்தை நிரப்பி அடிக்கிறார்கள். அது அய்யாவின்மேல் விழுகிறது. பெருமாள் நாயுடு என்பவர், சிங்கப்பூருக்குப் போய் விட்டு வந்தவர்; அவர் பெரியார் கொள்கையைத் தெரிந்து கொண்டு வந்தவர். அந்த ஊரிலே பெரிய கடை வைத்திருந்தார். நான் அய்ந்து வயது சிறுவன். அவருடைய பேரப் பிள்ளைகள் என்னுடைய வகுப்பு நண்பர்கள். ஒரு பையனுக்குப் பெயர் லெனின்; இன்னொரு பையனுக்குப் பெயர் ஸ்டாலின் என்று அந்தக் காலத்திலேயே வைத்தார்.
உலக நாடுகளிலேயே தந்தை பெரியாருக்கு நிகர் வேறு எவரும் கிடையாது
அவருடைய வீட்டுத் திருமணத்திற்கு அய்யாவை அழைத் திருந்தார். இந்தத் தகவல்களை நான் குடிஅரசு ஏட்டைப் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். அப்பொழுது கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில், மலத்தை எறிந்தார்கள் அய்யாவின் மீது. அதனை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் - அசுத்தியான ஒரு வாடை வந்தால், உடனே மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். பெரியாரின்மேல், முட்டையில் மலத்தை நிரப்பி அடிக்கிறார்கள்; அது மேலே பட்டுத் தெரிக்கிறது; உடனே பெரியார் அவர்கள் சால்வையால் மூடிக்கொண்டு, அதற்குப்பிறகு 3 மணிநேரம் உரையாற்றினார். இப்படிப்பட்ட ஒரே தலைவர் உலக நாடுகளி லேயே தந்தை பெரியாருக்கு நிகர் வேறு எவரும் கிடையாது.
எனக்கு 11 வயது அப்பொழுது, நன்றாக நினைவிருக்கிறது - கடலூரில்மழையின் காரணமாக பொதுக்கூட்டத்தைத் தொடர முடியவில்லை. அடுத்த நாள் சென்னையில் மாநாடு - 9.30 மணிக்கு ரயில். அய்யாவும், அன்னை மணியம்மையார் அவர்களும் கடலூருக்கு வந்திருக்கிறார்கள். கடலூரிலிருந்து சென்னைக்கு ரயிலில்தான் பயணம். அதுவும் மூன்றாவது வகுப்புதான். அய்யாவிடம் ஏன் மூன்றாவது வகுப்பில் பயணம் செய்கிறீர்கள் என்று கேட்டால், நான்காவது வகுப்பு என்று ஒன்று இல்லை என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வார்.
ரயில் நிலையம் செல்வதற்காக கை ரிக்ஷாவில் அய்யா வருகிறார். கொஞ்சம் தூரம் வந்ததும் ரிக்ஷாவை திருப்பு என்கிறார்; எதற்கோ அய்யா சொல்கிறார் என்று, ரிக்ஷாவை திருப்பினார்கள்; மறுபடியும் திருப்பு என்றார்; திரும்பி வந்தாயிற்று ரயில் நிலையத்திற்கு. அப்பொழுது அய்யா அவர்கள் கைப்பெட்டியில் இருந்து இரண்டு செருப்புகளை எடுத்துக் காட்டினார்.
‘செருப்பொன்று போட்டால்,
சிலை ஒன்று முளைக்கும்!’
சிலை ஒன்று முளைக்கும்!’
கெடிலம் நதி அருகே அய்யாவிற்கு சிலையை 1970 ஆம் ஆண்டு வைத்துவிட்டு, ‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்’ என்று கவிஞர் கருணானந்தம் கவிதை எழுதினார்!
செருப்பு என்று தலைப்பிலேயே நிறைய நேரம் பேசலாம் நம்முடைய நாட்டில். தலைவர் மேல் செருப்பு எறிந்தால், தொண்டர்கள் சும்மா விட்டிருப்போமா? அந்தக் காலத்தில் ஊருக்குப் பத்து பேர் இருந்தாலும், அடியாள்கள் போல இருப் பார்கள். நாங்கள் பகுத்தறிவு பேசிப், பேசி இப்பொழுது நிறைய பேரை மென்மையாக்கிவிட்டோம். அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எதிரி நினைக்கிறான்.
ஆயுதத்தை அவன் எடுத்துக்கொண்டான் - அறிவை நாம் எடுத்துக்கொண்டோம்
அறிவுக்கு வேலை கொடு, அறிவுக்கு வேலை கொடு என்று சொல்லி, அறிவாயுதத்தை எடு என்றான். ஆயுதத்தை அவன் எடுத்துக்கொண்டான் - அறிவை நாம் எடுத்துக்கொண்டோம். இறுதியில் நாம்தான் வெற்றி பெறுவோம்.
எவ்வளவு பெரிய கொடுமை என்றால், நோட்டீஸ் அச்சடித்து கொடுக்கிறார்கள், பெரியார் கூட்டத்திற்குப் போகாதே என்று - தமுக்கடித்து கிராமத்திற்குள் சொல்கிறார்கள். அதை எப்படி சொல்கிறார்கள் தெரியுமா? ஜாதியை சொல்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம் - நடைமுறையில் எப்படி இருந்தது என்பதைப்பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.
திராவிடர் கழகம் துப்புரவு இயக்கம்
‘‘கருப்புச் சட்டைக்காரன்கள் தி.க. பயல்கள் கூட்டம் நடக்கிறது; அந்த தி.க. கட்சி என்றால் என்ன தெரியுமா? பள்ளன் கட்சி, பறையன் கட்சி’’ என்று.
இதைவிட எங்களுக்குப் ‘‘பெரிய சர்டிபிகேட்’’ வேறு என்ன வேண்டும்?
நாங்கள் சாக்கடை அள்ளினால்தான் நீங்கள் நிம்மதியாக சுவசிக்க முடியும். நாங்கள் சாக்கடையை அள்ளவில்லை யென்றால், நீ தூய சுவாசக் காற்றை சுவாசிக்க முடியாதே! திராவிடர் கழகம் துப்புரவு இயக்கம்.
ஆகவே, அய்யா அவர்கள் அந்த நோட்டீசை வைத்துக் கொண்டு பேசினார். ஆமாம், என்னுடைய கட்சியைப்பற்றி நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்; அதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி! என்னுடைய கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், இவ்வளவு பெரிய நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தவில்லை. அந்த விளம்பரத்திற்குப் பதிலாக நீங்கள் அதைச் செய்தி ருக்கிறீர்கள் மிகவும் நன்றி என்றார்.
எதிர்ப்பு இருந்தால்தானே நல்லது
1973 ஆம் ஆண்டு கடைசி மாநாடு நடத்தினார் அய்யா. அந்த மாநாட்டிற்காக நாங்கள் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டோம். மாநாட்டில் அய்யா பேசுகிறார் என்று. அதைப் பார்த்தவுடன் அய்யா அவர்கள், எங்களைக் கண்டித்தார்.
என்ன அக்கிரமம் பண்ணியிருக்கிறீர்கள். ஏன் இதுபோன்ற போஸ்டர் அடித்து ரூபாயை வீணடித்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாள் ஆனால், நம்முடைய எதிரியே நம்மை விளம் பரப்படுத்தப் போகிறான்; நீங்கள் ஏன் அதற்குள் அவசரப்படு கிறீர்கள். அவன் விளம்பரம் செய்தால்தானே நமக்கு நல்லது. எதிர்ப்பு இருந்தால்தானே நல்லது என்று சொல்வார்.
தந்தை பெரியார் போன்று எதிர்நீச்சல் போட்ட தலைவர் உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது.
அந்தத் துணிச்சல்தான், அந்த ஈரோட்டு குருகுலத்தில் பயிற்சி பெற்றவர்தான் அண்ணா அவர்கள்.
அண்ணாவின் ‘‘அந்த வசந்தம்!’’
அண்ணாவின் ‘‘அந்த வசந்தம்!’’
‘‘அந்த வசந்தம்’’ என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் சொல்வார்,
‘‘விடுதலை’’ பத்திரிகையினுடைய துணை ஆசிரியராக அண்ணா அவர்கள் இருக்கும்பொழுது, பெரியார் அவர்களை ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஈம்பூர் என்கிற ஊரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு அழைத்தார்கள். அந்தக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில், ஒரு மூட்டை நிறைய சாம்பலைக் கொண்டு வந்து, மக்கள் பெரியாரின் உரையைக் கேட்க முடியாத அளவிற்கு, சாம்பலை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா அவர்களும் உரையை நிறுத்தவில்லை. பெரியார் மேடையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். மக்களும் எழுந்து போகவில்லை. அய்யா அவர்கள் கண்களைத் துடைத்துக்கொண்டே, யாரும் கலையாதீர்கள் என்றார். அண்ணா அவர்களும் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். அப்பொழுது அண்ணா சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாம்பலைக் கொட்டினாலும், தந்தை பெரியார் கூட்டத்தை விட்டு நகர மாட்டார். நீங்கள் நிறைய சாம்பல் கொட்டுங்கள்; ஏற்கெனவே அவருடைய தாடியில் கொஞ்சம்தான் நரைத்து இருக்கிறது; மீதி கருப்பு, கருப்பாக இருக்கிறது. தாடி முழுவதும் வெந்நிற தாடியாகத் தெரிய, இந்த சாம்பல் அதற்கு உதவி புரியும்’’ என்று சொன்னார். ஆகவே, அப் படிப்பட்ட எதிர்நீச்சல் போட்ட இயக்கம்தான் இது.
தூத்துக்குடிக்கு அய்யா போகிறார்; அங்கே ‘‘ராமசாமி கழுதை நாளை வருகிறது’’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
அதற்கடுத்ததாக, ரஷ்யாவிற்குச் சென்று வந்து பொதுவு டைமை தத்துவத்தைப்பற்றி அய்யா பிரச்சாரம் செய்கிறார்.
அதற்கடுத்ததாக, ரஷ்யாவிற்குச் சென்று வந்து பொதுவு டைமை தத்துவத்தைப்பற்றி அய்யா பிரச்சாரம் செய்கிறார்.
‘‘ராமசாமி, அவருடைய மனைவி நாகம்மாளைப் பொதுவு டைமை ஆக்குவானா?’’ என்று கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்ற கேள்வியைக் கேட்டால், எவ்வளவுதான் பொறுமைசாலியாக இருந்தாலும், கோபம் வராதா?
இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்; இதுபோன்ற கேள்வி கேட்டு, கடிதங்கள் இன்றைக்கும் எங் களுக்கு வருகிறது.
ஆனால், ஏன் அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை? தன்மானத்தைப்பற்றி சொல்லிக் கொடுத்த இயக்கம் - ஆனால், தன்மானமா? இனமானமா? என்று சொன்னால், இனமானம்தான் வெற்றி பெறவேண்டுமே தவிர, தன்மானத்திற்கு இடம் கொடுக்காதே என்று மிகப்பெரிய அளவில் சொல்லிக் கொடுத்த இயக்கம்தான் இந்த இயக்கம்.
ஆகவே, இந்த அடிப்படையில் பெரியார் அவர்கள் பதில் சொன்னார். நீ என்ன ராமசாமி கழுதை செத்துப் போச்சு என்று எழுதினாலும், நான் கவலைப்படமாட்டேன். மக்களிடம் தொடர்ந்து பேசுவேன்.
பெண்களை உடைமையாக ஆக்கக்கூடாது என்று சொல்கிற இயக்கம்
‘நாகம்மையாரை பொதுவுடைமையாக்குவாயா’ என்று கேட்டிருக்கிறாய். அதை நாகம்மையாரிடம் கேள். பெண்களை உடைமையாக ஆக்கக்கூடாது என்று சொல்கிற இயக்கம் இந்த இயக்கம். என்னுடைய முக்கிய கொள்கையே அதுதான். நீ தவறாக நினைத்தால், நாகம்மையாரிடம் சென்று கேள், அவர் என்ன சொல்கிறார், அதனுடைய பலனை நீ பார் என்று சொல்கிறார்.
திராவிடர் கழகத்தை, பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று சொல்கிறவர்களுக்குப் பதில் சொன்னார் அய்யா,
‘‘அவன் தான் என்னுடைய சகோதரன்; அவன்தான் எனக்கு வேண்டியவன்; கீழே இருக்கின்றவனை மேலே தூக்கிவிடத்தான் இந்த இயக்கமே பிறந்திருக்கிறது என்பதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறேன். இன்னுங்கேட்டால், உன்னைவிட அவன் கவுரமான பெயரில்தான் இருக்கிறான். அந்தப் பெயரையே நான் மாற்றவேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்று அய்யா பதில் கூறினார்.
சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்?
சூத்திரன் என்றுதானே நம்மை பார்ப்பான் மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறான்.
சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? அய்யா சொல்கிறார், பார்ப்பானுக்குத் தேவடியாள் மகன் என்று என்று எழுதி வைத்திருக்கிறான்.
அசல் மனுதர்மத்தில், 412 சுலோகம்; 8 ஆவது அத்தியாயம் - ஆதாரத்தோடு சொல்கிறோம்.
தாசி புத்திரன் என்று அதில் எழுதி வைத்திருக்கிறான். அய்ந்தாம் ஜாதிக்காரன் பஞ்சமனுக்கு இல்லாத அவமானம் - நாலாம் ஜாதிக்காரனாகிய உனக்கு இருக்கிற அவமானத்தைப்பற்றி உனக்குப் புரியவேண்டாமா? அவனையும், உன்னையும் ஒப் பிட்டுப் பார்த்தால், உன்னைவிட அவன் ஆயிரம் மடங்கு மேலானவனே தவிர, மனித பிறப்பில் உயர்ந்தவன் என்று அழைக்கப்படுபவனே தவிர, வேறு கிடையாது என்று சொன்னார்.
ஆகவே, அய்யா அவர்களைப் பொறுத்தவரையில், இந்தக் கருத்தியலை முன்னிறுத்தியக் காரணத்தினால்தான், அந்தக் கருத்தியல் இன்றைக்கும் தேவைப்படுகிறது.
ஜாதி, தீண்டாமை இல்லாத நாடாக...
எனவே, நம்முடைய மிகப்பெரிய இலக்கு - பெரியாருடைய 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், மூன்று, நான்கு உறுதிமொழிகளை நாம் எடுத்தாகவேண்டும்.
ஜாதி, தீண்டாமை இல்லாத நாடாக இந்த நாடு உருவாக வேண்டும். சுதந்திரம் அடைந்து இன்னமும் தீண்டாமை இருக்கிறதே!
பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பேசியதை நேற்றுகூட நான் படித்தேன், அதுபற்றியும் எழுதினேன்.
‘‘அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று போட்டிருக்கிறோம். சட்டத்தில் போட்டிருப்பதால், அது அமலாகும் என்று சொல்ல முடியாது. எனவே, நடைமுறையில் அதனை எவ்வளவு ஒழிக்கிறோமோ, அதுதான் நடைமுறை. எனவே, அதற்காகத் தொடர்ந்து போராடவேண்டும்’’ என்று சொன்னார்.
‘‘அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று போட்டிருக்கிறோம். சட்டத்தில் போட்டிருப்பதால், அது அமலாகும் என்று சொல்ல முடியாது. எனவே, நடைமுறையில் அதனை எவ்வளவு ஒழிக்கிறோமோ, அதுதான் நடைமுறை. எனவே, அதற்காகத் தொடர்ந்து போராடவேண்டும்’’ என்று சொன்னார்.
அய்யா அவர்கள் அதற்கென தொடர்ந்து இறுதி மூச்சடங்கும் வரையில் போராடினாரே! ஆதிதிராவிடர் அர்ச்சகராகவேண்டும் என்று சொன்னாரே, எதற்கு? அந்தப் பதவி பெரிய பதவி என்பதாலேயா? பெரிய அந்தஸ்துள்ள பதவி என்றா?
அதே தாழ்த்தப்பட்ட சகோதரன், அய்க்கோர்ட் ஜட்ஜாக ஆகிவிட்டார், ஆக்கியிருக்கிறோம். அய்.ஏ.எஸ்., அதிகாரியாக, அய்.பி.எஸ். அதிகாரியாக ஆகியிருக்கிறார். ஆனால், இன்னமும் அர்ச்சகராக முடியவில்லையே! ஏன் பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு என்ன?
அர்ச்சகர் பதவி என்ன, அய்.ஏ.எஸ்., அதிகாரியைவிட பெரிய பதவியா? அய்க்கோர்ட் ஜட்ஜைவிட அறிவு தேவையா அந்தப் பதவிக்கு?
செவ்வாய்க் கிரகத்தில்கூட போய் இறங்கிவிட்டான்; கர்ப்பக் கிரகத்திற்குள் போக முடியவில்லையே!
பெரியார் என்றால் ஒரு சமூக விஞ்ஞானம்
பெரியார் என்றால் ஒரு சமூக விஞ்ஞானம்
ஏன் பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார்? ஏன் நாளைக்கும் தேவைப்படுகிறார்? பெரியார் என்றால் ஒரு சமூக விஞ்ஞானம் - அந்த விஞ்ஞானத்தை யாரும் மறுக்கமுடியாது. மூடநம்பிக்கை நோய்களைப் போக்குவதற்குப் பெரியார் தேவைப்படுகிறார்.
இன்றைக்கு மனுதர்மத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறார்களே, அதுதானே நீட் தேர்வு.
நீட் தேர்வுபற்றி எல்லோரும் கருத்துகளை சொல்கிறார்களே, நாம், தமிழர்கள், அதாவது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்பதற்கு பல காரணங்கள் உண்டு.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது, தமிழ்நாடு பிரா மணர் சங்க மாநில அமைப்புத் தீர்மானங்களில் ஒன்று மகளிர் அமைப்புத் தீர்மானம் - சென்னை குரோம்பேட்டையில், 30.7.2017 அன்று நீட் தேர்வுபற்றி தீர்மானம் போட்டிருக்கிறார்கள் -
‘‘மத்திய அரசு அறிவித்துள்ள நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கை நடத்தப்படவேண் டும் என்று தமிழக அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.’’
பார்ப்பானும், பாப்பாத்தியும் எதை விரும்புகிறார்களோ, அதற்கு நேர் எதிரானது நம்முடைய நலன்.
1962 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்கள் என்னை அழைத்து ‘‘விடுதலை’’ நாளிதழின் ஆசிரியர் பதவியை ஏற்கவேண்டும் என்று பேசினார். இன்றைக்கு 55 ஆண்டுகளாக அந்தப் பணியை தொடர்ந்து நான் செய்கிறேன். இதுதான் எனக்கு மனநிறைவான பணியும்கூட.
அப்பொழுது நான் வக்கீலுக்குப் படித்திருந்தேன்; கழக்கத்தில் உறுப்பினர். நான் பெரியார் அய்யாவிடம் கேட்டேன், குருசாமி போன்றவர்கள் ஆசிரியராக இருந்த இடத்தில், என்னை அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களே, விடுதலை கொள்கை ஏடாயிற்றே - அதற்குத் தலையங்கம் எழுதவேண்டும் அல்லவா! நான் எப்படி எழுதுவேன், கொஞ்சம் சிக்கலாக இருக்குமே என்று நான் கொஞ்சம் தயங்கியபொழுது,
அய்யா பட்டென்று சொன்னார், ‘‘இது என்ன பெரிய விஷயம்; நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்; உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும்; ‘‘இந்து’’ பத்திரிகையை எடுத்துக்கொள்ளுங்கள் - அதில் என்ன தலையங்கம் எழுதியிருக்கிறார்களோ, அதற்கு நேர் எதிராக எழுதுங்கள்’’ என்றார்.
வார்த்தை எவ்வளவு சுலபமனதாக இருக்கிறது பாருங்கள் - இதுதான் திராவிடம்.
ஆரியத்திற்கு எதிரானது எதுவோ,
அதுதான் திராவிடம்
திராவிடம் என்கிற வார்த்தையை ஏன் பெரியார் அவர்கள் கண்டுபிடித்து, அதனை வற்புறுத்தினார் என்றால்,
திராவிடம் என்பது பேதமில்லாதது
திராவிடம் என்பது பேதமில்லாதது
திராவிடம் என்பது ஜாதி ஒழிப்பு
திராவிடம் என்பது பிறவியினால் பேதமில்லை
யாதும் ஊரே; யாவரும் கேளீர் - இதுதான் திராவிடம்.
பிறவியினால் பேதம் - இதுதான் ஆரியம்.
எனவே, ஆரியத்திற்கு எதிரானது எதுவோ, அதுதான் திராவிடம் என்பதை எடுத்துச் சொன்னார். அந்த வகையில், நாம் எல்லோரும் திராவிடன்தான். இதில் ஆதிதிராவிடன், மீதி திராவிடன், பாதி திராவிடன் என்பதெல்லாம் கிடையாது. ஒரே திராவிடன்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
இந்த வாய்ப்புகளே நீண்ட வரலாற்று ரீதியாக வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமாக எடுத்துச் சொல்லலாம். மனுதர்மத்திலேயே அது இருக்கிறது. அவர்களே அதனை எழுதியிருக்கிறார்கள்.
எனவே, இந்த அடிப்படையைப் பார்க்கும்பொழுது நண் பர்களே, நீங்கள் சிந்திக்கவேண்டும்.
இன்றைக்கும் அந்த அடிப்படையிலேதான் நம்முடைய அடிப்படையைக் கோளாறுகள் செய்கிறார்கள். எனவே, அதனை மாற்றவேண்டும்.
இந்த ஜாதியைப் பாதுகாக்கின்ற போராட்டம்தான், இன் றைக்கு அரசியல் ரீதியாக இருக்கக்கூடிய போராட்டமாக இருந்து கொண்டிருக்கிறது.
Economic & Political
இன்னொரு செய்தியை உங்களுக்கு சுருக்கமாக சொல் கிறேன்.
இதோ என்னுடைய கைகளில் இருப்பது,
இதோ என்னுடைய கைகளில் இருப்பது,
Economic & Political என்கிற தலைப்பில் வரக்கூடிய வார ஏடு. செப்டம்பர் 2 ஆம் தேதி வெளிவந்த ஏட்டில்,Neo-liberal Political Economy and social Tension Simmering Dalit Unrest and Competing Castes in Gujarat என்ற தலைப்பில் Ghanshyam Shah என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார்.
குஜராத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. குஜராத் மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அது எவ்வளவு பெரிய மோசடி என்பதை அந்தக் கட்டுரையில், ஆதாரப்பூர்வமாக, புள்ளிவிவரத்தோடு, அங்கே எப்படி தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், உரிமை கள் பறிக்கப்படுகின்றன என்பதைப்பற்றி எழுதுகின்றபொழுது ஒன்றைச் சொல்கிறார்.
‘‘The BJP the Sangh Parivar believe that the varna system is a unique contribution of the ‘‘Indian civilisation’’ to the world. For them, the concept of equality was ‘‘Western’’, though they do not endorse caste - based discrimination. They believe in an organic unity among the castes in which each performs swadharma, Hindu unity, they hoped, would wipe out caste differentiations. The ideologues believe that the upper castes are not responsible for the degraded condition of the OBCs and Dalits. For that the Muslims and the British, as well as the Congress government, are responsible.’’இதன் தமிழாக்கம் வருமாறு:
உலக அளவில் "இந்திய நாகரிகத்தில்" தனித்துவமான பங்களிப்பாக வருண அமைப்பு உள்ளது என்று பாஜக, சங் பரி வாரங்கள் கூறுகின்றன. ஜாதி அடிப்படையிலான பாகுபாடு களுக்கு மாறாக மேற்கத்திய முறையிலான சமத்துவ சிந்தனை புகுந்துவிட்டது என்றும், சுதர்மா எனும் மத வழக்கத்தின்படி ஜாதி ஒன்றுபடுத்துகின்றது. இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படும்போது, ஜாதி வேறுபாடுகள் களையப்படும். பிற்படுத்தப் பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இழிநிலைகளுக்கு உயர்ஜாதியினர் காரணம் அல்ல. அந்நிலைகளுக்கு காரணம் முசுலீம்கள், ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் காங்கிரசு அரசும் காரணமாக இருந்துள்ளன என்று பாஜக, சங் பரிவாரங்கள் கூறிவருகின்றன.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக
ஒரு தனிப் பிரிவு உண்டாக்கப்படவேண்டும்
ஒரு தனிப் பிரிவு உண்டாக்கப்படவேண்டும்
ஆகவே நண்பர்களே, இன்றைக்கு ஜாதி மறுப்புத் திரு மணங்களை இளைஞர்கள் செய்துகொள்கிறார்கள். ஆனால், இந்த ஜாதி மறுப்புத் திருமணங்களில் ஜாதியினுடைய சாயத்தை மூளையில் ஏற்றியிருக்கிறார்கள். சொந்த மகளை கொலை செய்கிறார்களே, சொந்த சகோதரியை கொலை செய்கிறார்களே, ஜாதி வெறிதானே! அந்த ஜாதிவெறிக்கு எத்தனை பேர் பலியாகிறார்கள். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள்கூட சொல்லியிருக்கிறது- காவல்துறையில், பல பிரிவுகள் இருப் பதுபோல, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக ஒரு தனிப் பிரிவு உண்டாக்கப்படவேண்டும். அதற்காக நாங்கள் போராடு வோம். நீதிமன்றங்கள் காவல்துறைக்கு, தமிழக அரசுக்கு உத்தர விட்டு இருக்கிறது.
கொலையே அசிங்கமானது, அதிலும் கவுரவக் கொலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நாங்கள்தான் அதற்கு ஆணவக் கொலை என்று பெயர் வைத்தோம்.
அசுரன் என்றால்
என்ன அர்த்தம் தெரியுமா?
என்ன அர்த்தம் தெரியுமா?
அடுத்தபடியாக, அசுரர்கள் - நம்முடைய பண்பாட்டுப் படையெடுப்பில், நம்மையெல்லாம் அசுரன் என்றார்கள்; நரகாசுரனை அழித்தார்கள்; மகிஷாசுரனை அழித்தார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே, அசுரன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? இன்றைய இளைஞர்கள் இதனை தெரிந்துகொண்டு, உங்களுடைய முகநூலில் பயன்படுத்துங்கள்; டுவிட்டரில் பயன்படுத்துங்கள்.
சுரா பானத்தைக் குடித்தவன் சுரன் - அவன்தான் ஆரியன்.
சுரா பானத்தைக் குடிக்காதவன் அசுரன் - அவன்தான் திராவிடன்.
நம்மை அசுரன் என்றால், பயப்படாதீர்கள்; நான் ஒரு அசுரன்தான் என்று துணிச்சலோடு சொல்லக்கூடிய அந்த உணர்வைப் பெரியார் பிறந்த நாளில் பெறவேண்டும்.
அம்பேத்கர் சிந்தனைக்கு ஆளாகியதினால், குஜராத்தில் என்ன திருவிழா கொண்டாடினார்கள் தெரியுமா? மகிஷாசுரன் திருவிழா என்று கொண்டாடினார்கள். நாங்கள் எல்லாம் மகிஷாசுரன் பரம்பரை என்று சொன்னார்கள்.
அதுபோல, நண்பர்களே, பண்பாட்டுப் படையெடுப்பை, பண்பாட்டுப் படையெடுப்பாலேயே முறியடிக்கவேண்டும். அந்த அடிப்படையில், தீபாவளியைப்பற்றி பல கதைகளை சொல்லியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; ஆனால், அதை எல்லாவற்றையும்விட, நரகாசுரனே வேண்டிக்கொண்டானாம் - என்னுடைய இறப்பை விழாவாகக் கொண்டாடவேண்டும் என்று. அதுதான் தீபாவளியாம்!
அதுபோல, நண்பர்களே, பண்பாட்டுப் படையெடுப்பை, பண்பாட்டுப் படையெடுப்பாலேயே முறியடிக்கவேண்டும். அந்த அடிப்படையில், தீபாவளியைப்பற்றி பல கதைகளை சொல்லியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; ஆனால், அதை எல்லாவற்றையும்விட, நரகாசுரனே வேண்டிக்கொண்டானாம் - என்னுடைய இறப்பை விழாவாகக் கொண்டாடவேண்டும் என்று. அதுதான் தீபாவளியாம்!
திராவிடர் கழகம் நரகாசுரன் விழாவை கொண்டாடும்!
அதற்கு ஈடாக, நரகாசுரன் திருவிழா என்ற பெயரில், திராவிடர் கழகமும், ஒத்த கருத்துள்ளவர்களும் ஒரு விருந்து வைத்து - நரகாசுரன் விருந்து வைத்து கொண்டாடவேண்டும்.
ஓணம் பண்டிகை என்பது - மாபலி சக்கரவர்த்தி திரும்ப வந்தான் என்பதுதான். வாமன அவதாரம் எடுத்து, தலையில் காலை வைத்து அழித்துவிட்டான் என்பதுதான். ஆரிய - திராவிட போராட்டம்தான் அது. ஆரியம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது -
திராவிடம் என்பது சமத்துவத்தை, சமவாய்ப்பை வெளிப் படுத்துவது.
ஆரியம் என்பது பெண்ணடிமையை வலியுறுத்துவது -
திராவிடம் என்பது பெண்களும், ஆண்களைப் போலவே உரிமைகளைப் பெறவேண்டும் என்பது.
சம வாய்ப்பு, சமத்துவம், சுயமரியாதை, சுதந்திரம், சகோத ரத்துவம் இவை அத்தனையும் செய்வதுதான் திராவிடம். இது தான் சிந்துவெளி நாகரிகம் - இதுதான் கீழடியிலும் நீண்ட காலத்திற்குமுன்னால் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள். எனவேதான், அதனை மூடவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இல்லாத சரசுவதியை நதியை தேடுகிறார்கள் - கண் எதிரே இருக்கிற கீழடியை விடுகிறான்.
மிகப்பெரிய போராட்டம் தேவையானாலும், அதனை செய்வோம்
அதற்கு நாம் பண்பாட்டு அடிப்படையில் ஒரு திராவிட நாகரிகம் என்பது இருக்கிறதே, மிகத் தெளிந்த நாகரிகம் என்பதை வைத்துக்கொண்டு, அந்தக் கீழடி போன்ற இடத்தில் ஆய்வுகளை செய்யவேண்டும். அதற்கும் எங்களைப் போன்றவர்களின் கூட்டணிகள் - தெளிவாக நாங்கள் ஒன்று பட்டு இருப்போம் - மிகப்பெரிய போராட்டம் தேவையானாலும், அதனை செய்வோம் என்பதை இந்தப் பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழியாக ஏற்று, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ஜாதி இல்லா நாடு -
சாமியார்கள் இல்லாத நாடு - என்பது
நோயில்லாத வீடு - என்பதைப்போல!
இவைகளை உருவாக்குவோம்.
கருப்புச் சட்டை ஒன்றுதான் சரியானது
எல்லாவற்றையும்விட மூளைக்காய்ச்சல் மிக ஆபத்தானது - அதிலிருந்து பாதுகாக்க கருப்புச் சட்டை ஒன்றுதான் சரியானது. எனவேதான், இளைஞர்களே, நீங்கள் இந்தப் பக்கம் வாருங்கள் - பெரியார் பக்கம் இப்பொழுது வந்திருக்கிறீர்கள்.
இங்கே ஒன்றை சொன்னார்கள், கிரிக்கெட் மைதானத்தில் கருப்புச் சட்டை இருக்கக் கூடாது என்று - அதுபற்றி எனக்குத் தெரியாது. அதையே நீதிமன்றத்திற்கும் கொஞ்சம் சேர்த்து உத்தரவு போட முடியுமா? என்று தெரிந்துகொள்வது நல்லது என்று கேட்டு என்னுடைய உரையை முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,18.9.17
-விடுதலை,18.9.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக