சனி, 5 அக்டோபர், 2024

இயக்க மகளிர் சந்திப்பு (33) பெரியார் உருவாக்கிய பெண்கள் உலகம்!-வி.சி.வில்வம் (வடசென்னை அமுதவள்ளி)



Published October 5, 2024

திராவிடர் கழகத்தில் மகளிரின் பங்கு மிக, மிக முக்கியமானது. அதனைப் பதிவு செய்யும் பொருட்டு, கடந்த 8 மாதங்களாக இயக்க மகளிரை சந்தித்து வருகிறோம்! அந்த வகையில் இது 33 ஆவது நேர்காணல் ஆகும்! இந்த வாரம் செய்யாறு அருகிலுள்ள மரக்கோணத்தில் பிறந்து, இயக்கத்தில் தொண்டாற்றி, தம் ஒரே மகள் மரகதமணி அவர்களையும் பெரியார் திடலில் பணியாற்றச் செய்து, மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாழும் அம்மா அமுதவள்ளி அவர்களைச் சந்தித்தோம்!

உங்களைக் குறித்து முதலில்
அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?

நான் பிறந்தது 1945ஆம் ஆண்டு. தற்போது 79 வயதாகிறது. பெற்றோர்கள் பெயர் அன்னலட்சுமி – துரைசாமி. உடன் பிறந்தோர் ஆறு பேர். ஜாதிக் கட்டுமானம் நிறைந்த ஊரில் பிறந்தேன். எல்லா இடங்களிலும் தாகத்திற்குத் தண்ணீர் குடித்துவிட முடியாது.‌ ஒரு சிலர் தண்ணீர் தருவார்கள். பாத்திரத்தின் வழியாக ஊற்ற, அதைக் கைகளில் ஏந்திக் குடிக்க வேண்டும். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஜாதியப் படிநிலைகளில் இருந்த பலரும் பாதிக்கப்பட்டார்கள். இதுகுறித்தெல்லாம் அம்மாவிடம் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், பதிலே கிடைத்ததில்லை.

எங்கள் வீட்டில் பெரிய அளவிற்குப் பக்தி இருந்ததில்லை. ஆனால், சில மதப் விழாக்களைக் கொண்டாடுவார்கள். அன்று விதவிதமான உணவுகள் இருக்கும்.‌ மற்ற நாட்களில் அந்த வாய்ப்புகள் கிடைக்காது. எங்கள் வீட்டில் மாடுகள் இருந்ததால், பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறும்.

இயக்க அறிமுகம் எப்போது கிடைத்தது?

திருமணத்திற்குப் பிறகுதான் அறிமுகம் கிடைத்தது. எனது இணையர் பெயர் ஏ.தணிகாசலம். திருமணத்திற்குப் பிறகு இரண்டே செய்திகள்தான் சொன்னார். “நான் பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவன். இரண்டாவது நமது வருமானத்திற்கு ஏற்றவாறு நாம் வாழ்ந்து கொள்ள வேண்டும்”. இதுதான் அந்தச் செய்திகள். வெளிப்படையாக அவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது.
அதேநேரம் கொள்கைத் தொடர்பாய் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என எண்ணி, அதுதொடர்பாய் நான் சிந்திக்கவில்லை. நாளடைவில்தான் பெரியாரை உள்வாங்க ஆரம்பித்தேன். தாலியை அகற்றிக் கொள்ளும் அளவிற்குத் தெளிவும், துணிவும் பெற்றேன். அதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கணவரை மாற்றிவிடுவாய் என்று பார்த்தால், நீயே தீவிரமாக மாறி விட்டாயே என்று சொல்வார்கள். குடும்ப விழாக்களுக்கு வரும்போது, ஒரு மஞ்சள் கயிறாவது அணிந்து வாயேன் என்கிற அளவிற்கு இறங்கிப் பேசினார்கள்.

உங்கள் இணையர் குறித்துச் சொல்லுங்களேன்?

தான் ஏற்ற கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர். இயக்கத்தின் மீதும், ஆசிரியர் மீதும் பெரு நம்பிக்கைக் கொண்டவர். திருமணமான புதிதில், “நான் பெரியாரிஸ்ட், எனினும் உங்கள் கருத்து உங்களுக்கு!”, எனப் பேசியது எனக்கு மதிப்பளிப்பதாக இருந்தது. அதேபோல ஒருமையில் பேசுவதோ, வாடி போடி என்பதோ எதுவுமே நிகழ்ந்ததில்லை! என் சுயமரியாதைக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டதில்லை என்பதே எனக்கு நிறைவுதானே! அப்படி இருக்கும் போது கடவுள் எதற்கு? தாலி எதற்கு?
எனது இணையர் வீட்டில் 12 பிள்ளைகள். இவர்தான் மூத்தவர். அனைத்துக் குடும்ப நிகழ்வுகளுக்கும் நான்தான் முதலில் நிற்க வேண்டும். எனினும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதையும் நாங்கள் செய்ததில்லை. இதனால் எதிர் கேள்விகள் நிறைய வரும். ஆனால் நாங்கள் கவலைப்பட மாட்டோம். அதேநேரம் மற்ற அனைத்து வேலைகளையும் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பேன். இணையரின் 92 வயதுவரை நாங்கள் அன்போடும், புரிதலோடும் வாழ்ந்தோம்!

இயக்கப் போராட்டங்களில் நீங்கள் கலந்து கொண்ட அனுபவங்கள் என்ன?

1977இல் சென்னையில் திருமணம் நடைபெற்றது. ‌அப்போது முதலே தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் கலந்து கொள்வேன். நிகழ்ச்சிகளில் புத்தகங்களும் விற்பனை செய்வேன். வீடுகள், கடைகளுக்கு எனது இணையர் ‘விடுதலை’ நாளிதழ் போடுவார். அவரால் முடியாத சூழலில் நான் எல்லா இடங்களிலும் போட்டு வருவேன்.
போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்று கைதாகி இருக்கிறேன். குறிப்பாகச் சங்கராச்சாரியார் “விதவைப் பெண்களைக் களர் நிலம்” என இழிவு செய்ததைக் கண்டித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

மேலும் 2000ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைக்காக, நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம், 2001ஆம் ஆண்டு சங்கரமடத்தின் சார்பில், ஏனாத்தூரில் நடத்தப்பட்ட விடுதியில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான மறியல் போராட்டம், மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, தூய்மைப் பணியாளர்களை அவர்களது விதிப்‌ பயன் என எழுதிய ‘காம்யோக்’ எனும் புத்தகத்தை எரிக்கும் போராட்டம், காஞ்சி சங்கராச்சாரியார் மீதான பாலியல் புகார்களை விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனும் திராவிடர் கழக மகளிரணி நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன்.
தமிழ்நாட்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகளை இழிவாகப் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியைக் கண்டித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நடைபெற்ற மறியல் போராட்டம், சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி நடந்த இரயில் மறியல் போராட்டம்,
அய்.நா. சபையில் இராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டத்தில் இருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி நடைபெற்ற ஊர்வலம், மனுதர்மத்தை எரித்த போராட்டங்கள் எனப் பலவற்றிலும் பங்கேற்றுள்ளேன். அதேபோல எண்ணற்ற மாநாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன்.

எனது இணையரின் உடல் மோசமான கடைசி அய்ந்தாறு ஆண்டுகள் நான் எதிலும் கலந்துக் கொண்டதில்லை. எனினும் எங்கள் மகள் மரகதமணி இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்து கொள்கிறார். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சி!
போராட்டங்களில் நீங்கள் பங்கேற்ற பட்டியல் வியப்பாக இருக்கிறது. பெரியார் குறித்து, குறிப்பாக ஏதாவது சொல்லுங்களேன்?
அவரின் கொள்கைகள் அனைத்துமே சிறப்புதான்! அதேநேரம் எனது சிறு வயதில் பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. நான் பார்த்த பெண்களுக்குக் கல்வி கற்க வழியில்லை; வேலை செய்ய வாய்ப்பில்லை; சிறு வயதிலேயே திருமணம் எனச் சொல்லொணா கொடுமைகள். ஆனால், கல்வியில் இன்று பெண்கள்தான் முதலிடம்! பெண்கள் இல்லாத துறையே கிடையாது. பெண்களைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சமூகமே இயங்காது என்கிற அளவிற்கு உயர்ந்துவிட்டது. இவை அனைத்திற்கும் பெரியார்தான் காரணம்.

அவர் இல்லாவிட்டால் இந்தளவு ஜாதியும் ஒழிந்திருக்காது; பெண் விடுதலையும் கிடைத்திருக்காது! இதை நான் முழு மனதுடன், ஒரு பெண்ணாக இருந்து பெரியாருக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் வீட்டில் எனக்கு இருந்த சூழல், சமூகத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை, எல்லாவற்றையும் கடந்து இவ்வளவு தைரியமாக நான் இருப்பதற்கு இந்தக் கொள்கைகள்தான் காரணம்! எனது இணையரை 92 வயது வரை பாதுகாத்தேன் என்றால் அதற்குப் பெரியாருடைய வழிகாட்டுதல்கள், ஆசிரியரின் துணை, இந்த இயக்கத்தின் மனோபலம் ஆகியவைகளே காரணம்!

ஆசிரியர் அவர்களை அறிமுகம் உண்டா?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மிக, மிக நன்றாகத் தெரியும். பலமுறை ஆசிரியரைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்துள்ளேன். 1990 சமயத்தில் அறுவைச் சிகிச்சைக்காக ஆசிரியர் வெளிநாடு சென்று திரும்பியது முதல், இப்போது வரை அவர் உடல்நிலையைப் பற்றி கவலைப்படுவேன்.
கூட்டங்களில் பார்த்தால், “வணக்கம் கூறி நலமாக இருக்கிறீர்களா?”, என்று கேட்பேன். ஆசிரியரும் நலம் விசாரிப்பார். அந்த மகிழ்ச்சி எல்லையற்றது! எங்கள் வியாசர்பாடி பகுதியில் கல்வெட்டுத் திறப்பு, கொடியேற்றம், கூட்டங்கள் என ஆசிரியரை வைத்து நிறைய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம்.

ஒரு குடும்பத்தில் மகளிரைக் கொள்கை ரீதியாக உருவாக்க வேண்டும் என எனது இணையர் உறுதியாக இருந்தார். அந்த வகையில் எனக்கும், மகளுக்கும் பெரியார், ஆசிரியர், இயக்கம் குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். எங்கள் வீட்டில் பிரேம் போட்டு ஆசிரியரின் படம் ஒன்று இருக்கும். அதில் “தமிழர் தளபதி கி.வீரமணி” என இருக்கும்.‌
பெரியார் திடலில் 2000ஆம் ஆண்டில் புத்தாயிரம் நிகழ்வில் பங்கேற்று, ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, நாங்கள் செய்த முதல் வேலை, எங்கள் வீட்டு வாசலில் ஒரு கரும்பலகை வைத்தது தான்! இன்றுவரை அதில் பெரியார் கருத்துகள் எழுதி வருகிறோம்!

உங்கள் மகள் என்ன செய்கிறார்?

எங்களுக்கு ஒரே பிள்ளைதான்! எனது மாமியார் பெயரில் இருந்து மரகதம், மணியம்மையார் பெயரில் இருந்து மணி, இவை இரண்டையும் எடுத்து “மரகதமணி” எனப் பெயர் சூட்டினோம். என்னைப் போலவே மகளும் கொள்கையில் உறுதியானவர். வடசென்னை மாவட்டத் தலைவராக இருந்த பலராமன் அய்யா, எங்களை அழைத்துத் துணி எடுத்துக் கொடுப்பார். இணையரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று கூறுவார்.

தங்கமணி – குணசீலன், பா.தட்சிணாமூர்த்தி, தியாகராஜன் – சுசீலா, சொக்கலிங்கம் – இராதா, பொன்.இரத்தினாவதி, சபாபதி – இந்திராணி, அய்யா பிச்சையன், டாக்டர் இளங்கோவன் – தமிழ்ச்செல்வி, ஜோதி – ஏழுமலை, ஜீவா, பெரியார் திடலுக்குச் சென்றால் பார்வதி, திருமகள், மனோரஞ்சிதம் ஆகியோர் ஒரே குடும்பமாகப் பழகுவார்கள்.

இறுதி காலத்தில் 10 ஆண்டுகள் எனது இணையர் பார்வை இல்லாமல் இருந்தார். அந்தச் சமயத்தில் தோழர்கள் யாருமே வந்து பார்க்கவில்லை என்கிற சிறு வருத்தம் எனக்குண்டு. மற்றபடி இந்தக் கொள்கைதான், இந்த இயக்கம்தான் எங்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது”, என நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் அமுதவள்ளி அம்மா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக