வடசென்னை பாலு முதலித் தெருவில் 27.04.1985 அன்று நடைபெற்ற சர்.பிட்டி.தியாகராயர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிவிட்டு நான் வேனில் திரும்பும்போது இரவு 11.35 மணியளவில் ஜி.ஏ.ரோடு, ரெய்னி மருத்துவமனை அருகில் உள்ள கனரா வங்கியை ஒட்டியுள்ள சந்திலிந்து சுமார் 5 நபர்கள், நான் உட்காந்திருந்த வேனின் இடது பக்கத்தில் சுவரை நோக்கி இரும்பாலும் கல்லாலும் தாக்கினர். வேனின் வெளிப்புறத்தில் இருந்த கம்பி வலைகள் அறுந்து, உட்பக்கம் இருந்த கண்ணாடியும் தூள் தூளாக நொறுங்கியும் சிதறியது. “வீரமணியைக் கொல்லுங்கள்! கொலை செய்யுங்கடா?’’ என்று கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு திடீரெனத் தாக்கினார்கள். வேன் டிரைவர் பாலு வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்று-விட்டார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சே.ஏழுமலை, சென்னை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி அமைப்பாளர் அ.குணசீலன், வழக்கறிஞர் வீரசேகரன், மு.தாந்தோணி முதலியோர் அப்போது என்னுடன் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.
ராயபுரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் த.வீரசேகரன் இரவு 11:30 மணிக்கு எழுத்து மூலமாக இதுபற்றி புகார் கொடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த 11.4.1985 அன்று வடசென்னையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கிட்டத்தட்ட இதேபோன்று இதே பகுதியில் என்னைத் தாக்க சோடாபுட்டி வீசியதும், இதே காவல் நிலையத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.இ.அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், அடுத்தடுத்த கொலை முயற்சிகள்!
இதனைக் கேள்வியுற்று தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள், புதுவை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காலை சென்னை திரும்பிய கலைஞர் நேராக எங்கள் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். காலிகளால் சேதம் அடைந்த வேனை பார்வையிட்டுச் சென்றார். பின்னர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தக் கொலை முயற்சிக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். தங்கள் சமுதாய நலனுக்கும் பிழைப்புக்கும் ஏமாற்று மோசடி-களுக்கும் பகையாக இருந்து தமிழ் இனத்துக்காக ஓய்வறியாது பணியாற்றும் வீரமணியையும் அவரைப் போன்ற மற்றவர்களையும் குறிபார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப் பயங்கர வன்முறை செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் கண்டிப்பதோடு, காவல்துறை கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென கேட்டுக்-கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக