திங்கள், 20 மே, 2019

திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம்

அழைக்கிறார் தமிழர் தலைவர்

உயிர் வெல்லமல்ல-வெல்லுவோம், வாரீர்!''




தஞ்சை, மே 19 2019 மே 18 அன்று தான் தஞ்சை வல்லத் தில் பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறையும் (ஒர்க் ஷாப்), திராவிடர் கழக இளைஞரணியின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

இரு நிகழ்வுகளும் கண்களில் ஒத்திக்கொள்ளத் தக்க வைகளாக அமைந்திருந்தன. இந்தக் காலகட்டத்தில் கழகம் பொலிவுடனும், தெளிவுடனும், திட்டவட்டத்துடனும், காலத்துக்கேற்ற வியூகத்துடனும் வீறுநடை போடுகின்றது என்பதற்கான அடையாளமாக இவை அமைந்திருந்தன.

தமிழர் தலைவர் மகிழ்ச்சியில் திளைத்த நாள்களுள் இதுவும் ஒன்றே! காரணம், ‘‘தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நம்மை நம்பி விட்டுச் சென்ற கழகத்தைக் கருத்துடனும், கம்பீரத்துடனும், வலிமை மிக்கதாக உருவாக்கியிருக்கிறோம்'' என்று  பெருமை கொள்ளத்தக்க வகையில் இருந்தமையால் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அது. ஏப்ரல் 27 ஆம் தேதி திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டத்தின் எழுச்சியும், மே 15 ஆம் தேதி மாநில மகளிரணி - மகளிர் பாசறையினரின் மகத்தான சந்திப்பும், கலந்துரையாடலும், மே 6 முதல் 10 வரை வல்லத்தில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமும், தஞ்சை, மதுரை, ஈரோடு, திண்டிவனம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாணவரணியினரின் கலந்துரையாடல்களும், சென்னையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையும் (11, 12.5.2019) என்று அலை அலையாகக் கழக அமைப்புப் பணிகள் கழக வரலாற்றில் மிக அடர்த்தியாக நடைபெற்றமை நினைக்க நினைக்க மலைக்கும் - மணக்கும் நிகழ்ச்சிகளின் நிரல்களாகும்!

நேற்று (18.5.2019) நடைபெற்ற இளைஞரணி கலந்துரை யாடலில் தமிழ்நாடு தழுவிய அளவில் பொறுப்பாளர்கள் என்ற முறையில் 250 பேர் பங்கேற்றனர்.

இதைப்பற்றிக் கருத்துச் சொன்ன கழகத் தலைவர், கழகத்தில் தலைமுறை இடைவெளியில்லாமல் அனைத் துப் பருவத்தினரும் நிறைந்து காணப்படுவதைச் சுட்டிக் காட்டினார்.

கழகத்தில் 90 வயதுடைய இளைஞர்களும் இருக்கின் றனர், 25 வயதுடைய முதிர்ச்சியோடு நடந்துகொள்ளும் காளையர்களும் உள்ளனர்.

எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல், நன்றி பாராட் டாமல், இழிமொழிகளைக் கண்டு எரிச்சல் அடையாமல், அவற்றை ஏற்று, சிறைச்சாலை என்றாலும், இன்முகத்தோடு செல்லும் இலட்சிய வீரர்களின் பாசறையாக அறிவு ஆசான் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரே இயக்கம் திராவிடர் கழகம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

நமது படைக்கலன் என்றால், அணுகுண்டல்ல, அரிவாள், துப்பாக்கிகளும் அல்ல, அல்ல!

நமது ஏடுகளும், இதழ்களும், நூல்களும்தான் அவை!

‘‘ஒரு நாள், ஒரு பொழுதேனும் ‘விடுதலை'யைப் படிக்காமல் இருப்பேனா'' என்ற உணர்வு பெறவேண்டும்.

இளைஞரணி தோழர்கள் டார்பிடோக்களாக செயல்பட வேண்டும். பெரிய பெரிய கப்பல்களை மூழ்கச் செய்யும் சப்மரின்களாக வேண்டும். ‘விடுதலை' அறிக்கைகளை, தலையங்கங்களை, கட்டுரைகளைப் படிக்கவேண்டும். தந்தை பெரியார் நூல்களை வாசிக்கவேண்டும் - ஏன் சுவாசிக்கவும் வேண்டும்.

எதிரிகளே கூட பெரியார் இறந்ததாக நினைக்கவில்லை - கொள்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றுதான் நினைக்கிறார்கள். பெரியார் தென்றலாகவும் வீசுவார், அதேநேரத்தில் புயலாகவும் சுழன்றடிப்பார்.

இளைஞர்களே, உங்களுக்கு வழிகாட்ட இயக்கம் என்றென்றைக்கும் இருக்கிறது, அஞ்சாதீர்கள்!

நமக்குக் கிடைத்த தத்துவ ஆசான் போல் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. நாம் இருக்கும் இயக்கம் போல வேறு இயக்கம் கிடையாது நாட்டில்.

நமது கொள்கைக்கு ஈடான - இணையானது வேறு எங்குமில்லை. நாம் இதற்காகப் பெருமைப்படலாம்.

கிராமப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எங்கெங்கும் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பெரியார் சமுகக் காப்பணி என்னும் தொண்டற அணி யின் பயிற்சி முகாம்கள் திட்டமிட்டபடி நடக்கவேண்டும்.

திராவிடர் கழகம் பிறந்த அதே சேலத்தில் வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி திராவிடர் கழக பவள விழா மாநாடு - பல்வேறு அம்சங்களின் அணிகலனாக நடைபெற உள்ளது. பெரியார் சமுகக் காப்பணியில் ஆயிரம் பேர்கள் அரிமா சேனையென அணிவகுக்க வேண்டும்.

சீருடை அணிந்த இளைஞரணி வீறுநடை போட்டு - கொள்கை முழக்கமிட்டுக் கம்பீரமாக நடந்துவர வேண்டும். அவற்றை எல்லாம் கண்டு நாட்டு மக்கள் திகைக்கவேண்டும்.

புத்துயிர்ப் பெற்று புறப்பட்டது காண் புதிய புறநானூற்றுப் பெரும்படை என்று எவரும் நினைக்கும் வண்ணம் இன எதிரிகள், பிற்போக்குச் சக்திகள் நடுங்கும் வண்ணம் கட்டுப்பாட்டின் இலக்கணமாக அமையவேண்டும் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது, அரங்கமே குலுங்கும் வண்ணம் பலத்த கரவொலி! கரவொலி!!

இளைஞர்களே, சொந்தக்காலில் நிற்கத் துணிவு கொள்ளுங்கள்! கழகம் உங்களுக்கு வழிகாட்டும்!

இங்கு வரும்போது எப்படி வந்தீர்கள் என்பது முக்கியமல்ல; திரும்பிச் செல்லும்போது முறுக்கேறிய தோள்களோடு, நரம்புகளோடு புது ரத்தம் பாய்ச்சிய புது மிடுக்கோடு வீடு செல்லுவீர்!

சேலம் மாநாடு நமது வலிமையைக் காட்டட்டும்! நமது பொலிவை உணர்த்தட்டும்!

முகநூலில் என்னைப்பற்றி வந்ததைக் காட்டினார்கள். ஜட்ஜாகியிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜட்ஜானால் ரிட்டயர்டு ஆகி, ஓய்வு பெற்று மூலையில் முடங்கி இருப்பேன்!

தந்தை பெரியாரை அடையாளம் கண்டு பத்தாம் வயதில் அவர் கரம் பற்றியதால் ஓய்வு என்றால், என்னவென்று தெரியாமல் உழைப்பதில் மகிழ்ச்சியின் எல்லையில் திளைக்கிறேன்.

வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டால் 365 நாள்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் என்னை அழைத்து விருந்து படைக்க எண்ணற்ற இயக்கத் தோழர்கள் இருக்கிறார்கள் - இதைவிட எனக்கு என்ன பேறு வேண்டும்? என்று தமிழர் தலைவர் கூறியபோது, ஓர் உருக்கமான நெகிழ்ச்சியான உணர்வு!

உயிர் வெல்லமல்ல இளைஞர்களே!

அய்யா இலட்சியத்தை ஈடேற்றுவோம்! என்ற தமிழர் தலைவரின் முத்து முத்தான சொற்களின் ஓவியம் நம் நெஞ்சச் சுவர்களில் உயிரோட்டமாக வரையப்பட்டு விட்டது.

புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட ஆரியத்தை வேரோடு சாய்ப்போம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

இளைஞர்களின் குரல்!


கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றிய இளைஞரணி பொறுப்பாளர்களின் குரல்!

*தமிழ்நாட்டில் வடநாட்டவர்களின் படை யெடுப்பு அதிகரித்து வருகிறது. அதற்கொரு முடிவு கட்டப்படவேண்டும்.

*தமிழர் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி களுக்குக் காவல்துறையை எதிர்பார்க்கக் கூடாது. நாமே பாதுகாப்பை அளிப்போம் - நம்மால் முடியும்!

*கிராமங்கள்தோறும் நமது அனைத்து அணி களும் கட்டமைக்கப்படவேண்டும்.

*கல்லூரிகள், விடுதிகளில் கழக அணி அமைக் கப்படவேண்டும்.

*அமைப்புக் கூட்டங்கள் குறிப்பிடப்பட்ட இடைவெளியில் நடத்தப்படவேண்டும்.

*பெரியார் சமுகக் காப்பு அணியில் ஆயிரம் பேர் இடம்பெறவேண்டும் - அதற்கான பயிற்சியை அளிக்கவேண்டும்.

*கல்வி, வேலை வாய்ப்புகளில் கழகம் வழிகாட்ட வேண்டும்.

*நம் குடும்பங்களை முதலில் கொள்கை மயமாக்கவேண்டும்.

- கழக இளைஞரணி தோழர்கள் தெரிவித்த  கருத்துக்களின் திரட்டு!

தந்தை பெரியாரின் அழைப்பு


(16.4.1944 அன்று காலை 11 மணிக்கு ஈரோடு பெரியார் மாளிகையில் திராவிட மாணவர் பிரச்சாரத் திட்டம் வகுக்கும் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்குத் தந்தை பெரியார் அழைப்பு)

அன்புள்ள மாணவர்களே!,

பிற்காலம் உங்களுடையது. நீங்கள் படிப்பதும் படித்ததும் உங்கள் வயிற்றுப்பிழைப்புக்கோ, வாழ் வுக்கோ வகை செய்து கொள்ளுவதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். திராவிடர் (தமிழர்) சூத்திரர்களாக இருந்து வருவதும், திராவிட நாடு மிலேச்ச நாடாக கருதப்பட்டு வருவதும், மனித உரிமை இல்லாதிருப்பதும் நீங்கள் அறியாததா? இதற்கு இதுவரை "தெய்வீக சக்தி பெற்ற" பெரியார்களும் உங்கள் சமீப முன்னோர்களும் என்ன செய்தார்கள்? இன்றுள்ள பிரபுக்கள், புலவர்கள், பெரும் பதவி யாளர்கள் தான் ஆகட்டும் இவர்கள் என்ன செய் தார்கள்? குறைந்த அளவு இந்த இழி நிலைக்கு நம்மை ஆக்கியவர்களையாவது அவர்களது ஆயுதங் களையாவது, வேலை திட்ட நடப்பு முறையையாவது விலக்கினார்களா, வெறுக்கவாவது செய்தார்களா? வெறுக்காதவர்களால் விலக்க முடியுமா? இப்படிப்பட்ட இவர்கள் சந்ததியில் வந்த நமக்கு மான உணர்ச்சி வர இடமில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அப்படி நமக்கு மான உணர்ச்சி ஏற்பட்டாலும் அது இயற்கைக்கு விரோதம் தான்.

ஆனாலும் நாம் செயற்கரிய காரியம் செய்ய முற்பட்டவர்கள்; இயற்கையை மாற்ற முடியும் என்பவர்கள்; இதற்கு இந்தக் காலமே வசதி என்று கண்டவர்கள்; இப்போது நாம் செய்யாவிட்டால் இனி செய்வதற்கு ஆட்களும் சந்தர்ப்பமும் கிடையாது என்றும் கருதுகிறவர்கள். ஏனெனில் இன்று நம் மக்கள் நிலை அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆதலா லேயே இந்த நிலையை மாற்ற நாமே அருகர்கள். வெற்றி பெறினும், தோல்வி உறினும் நாமே உழைத்துப் பார்க்க வேண்டியவர்களாய் விட்டோம். விழியுங்கள், எழுந்திருங்கள், ஆழ்ந்து சிந்தியுங்கள், உங்கள் தனிப்பட்ட வாழ்வைக் காரித் துப்புங்கள். உங்கள் இனத்தை மனிதத் தன்மையதாக்குங்கள். நம் நாட்டை மேன்மையும் வீரமும் பொருந்திய நாடாக்குங்கள். நாடு நகரம் பட்டிதொட்டி எல்லாம் தன்மானக் குரலெழுப்புங்கள்.

கோழைகளையும், தன்னல வீணர்களையும் எள்ளுருவாக்குங்கள், பெண் மக்களை ஆண்மை யுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ் மக்களை, தீண்டப் படாதவர்கள் என்பவர்களை மேன் மக்களாக்குங்கள். இவை உங்களால் முடியும்; கண்டிப்பாக முடியும்; அதுவும் இப்போதே முடியும்; இப்போதுதான் முடியும்.

இவை முடிவதற்கு முன் சுலபத்தில் குடும்பத்தினராக ஆகாதீர்கள், ஆகாதீர்கள். எனவே வாருங்கள்; போர் முனைக்கு வந்து வரிந்து கட்டி நில்லுங்கள்.

- ஈ.வெ.ரா.,

('குடிஅரசு', 15.4.1944)

- தஞ்சையிலிருந்து மின்சாரம்

உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரச முனைப்பு காட்டுவதா?

* கிளை வாரியாக இளைஞரணி அமைப்பு

* பெரியார் சமுகக் காப்பணி பயிற்சி

* பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்

இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்

தஞ்சாவூர், மே 19 திராவிடர் கழக இளைஞரணி அமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது என்றும், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டுவது கண்டனத்துக்குரியது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

18.05.2019 அன்று தஞ்சாவூர் வல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் : 1

27.04.2019 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்ட தலைவர், செயலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்று செயல்படுத் துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் : 2

கிளைவாரியாக இளைஞரணி

அமைப்பை உருவாக்குதல்

திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கிளைக்கழகம், ஒன்றியக்கழகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி வட்டக்கழக அமைப்புகளை உரு வாக்குவது. இவ்வமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை மேலும் சேர்த்து மாநிலமெங் கும் கழக இளைஞரணி அமைப்பை வலுப் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 3

பெரியார் சமுககாப்பு அணி பயிற்சி

பெரியார் சமுக காப்பு அணி பயிற்சி முகாம் களை பரவலாக முக்கிய பகுதிகளிலும் நடத் திடுவது. எந்த நேரத்திலும் எதற்கும் தயாராக வுள்ள , உடல்வலிவும், உள்ள உறுதியும் கொண்ட மாவட்டத்திற்கு 15 இளைஞர்களை தேர்வு செய்து, பெரியார் சமுக காப்பு அணி பயிற்சி முகாமில் பயிற்சி பெறச் செய்வது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுற்றுப் பயணத்தில் பெரியார் சமுக காப்பு அணியில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பங்கேற்க செய்வது மற்றும் பேரிடர் காலங்களில் முன்னின்று மக்களுக்கு உதவும் பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞரணி தோழர்களுக்கு தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே பயிற்சிகளை இணைத்து நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 4

பெரியாரியல் பயிற்சி பட்டறை

மண்டலத்திற்கு ஒரு இடத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் பெரியாரியல் பயிற்சி பட்டறையை தொடர்ச்சியாக நடத்துவது, பெரு வாரியான இளைஞர்களை பங்கேற்கச் செய்வது, கொள்கைத்தெளிவு, இளம் பேச்சாளர்கள் களப் பணியாளர்களை மெருமளவில் உருவாக்குவது என் தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 5

தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள்

கழக இளைஞரணி சார்பில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை ஒட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகளை விளக் கியும் மற்றும் பகுத்தறிவு பிரச்சார தெருமுனைக் கூட்டங்களை நடத்திடுவதையும் தொடர் பணி யாக மேற்கொள்வது எனவும், அவ்வப்போது எழும் பிரச்சினைகளை ஒட்டிய கருத்தரங்கங் களை முக்கிய நகரங்களில் நடத்தி விழிப் புணர்வை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் : 6

ஏழு தமிழர் விடுதலை

மேனாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தீர்ப்பின் படி, 27 ஆண்டுகளாக சிறை யில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த குடும்பத்தினரால் விடுதலையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடியான பிறகும் மேலும் காலம் தாழ்த்தாமல் ஏழு தமிழர்களையும் உட னடியாக விடுதலை செய்யுமாறு மேதகு தமிழ் நாடு ஆளுநரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7

உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடுவதா?

மோடி அரசு சமுக நீதி கொள்கைக்கு விரோதமாக, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக பொருளாதார அடிப் படையில் உயர் ஜாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நாடாளுமன்ற தேர் தல் வரும் சூழலில் அவசர அவசரமாக அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கி, அதை உடனடியாக அர சாங்க பதிவேட்டில் கெசட் செய்யப்பட்டு அவசரமாக மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சமுக நீதிக்கு எதிரான, இந்திய அரசமைப்பு சட்டத் திற்கு எதிரான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன் றத்திலும் திராவிடர் கழகம், தி.மு.க. பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு விசா ரணைக்கு ஏற்கப்பட்டுள் ளது. இந்நிலையில், பொரு ளாதாரத்தில் நலிந்த பிரிவின ருக்கு 10% இடஒதுக்கீடு வழி காட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது. சமுக நீதிக்கு விரோதமானது. தமிழ்நாடு சமுக நீதிமண், பெரியார் மண், சமுக நீதிக்கே இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடியது தமிழ்நாடுதான். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சுற்றறிக் கையை திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இல்லை யேல் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவிக்கும் எந்த விதமான போராட்டத்திற்கும் கழக இளைஞரணி சர்வபரித் தியாகம் செய்ய தயாராக உள்ளது என்பதை இக்கூட் டத்தின் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானம் : 8

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில்

வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம்

தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளிலும், தனியார் துறை வேலை வாய்ப் புகளிலும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. தமிழர்களின் வாழ்வியல், பொருளாதாரம், அரசியல், சமூக வளர்ச்சி என அனைத்திலும் பொறுப்புணர்வோடு இதை அணுகவேண்டிய தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கோடு கண்டுகொள்ளாமல் நடந்து கொள் வது கண்டனத்திற்குரியது. இந்த நிலை தொடர் வதை தடுத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் எடுக்கும் அனைத்து முயற் சிக்கும் கழக இளைஞரணி களத்தில் நின்று போராடி தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர் காலத்தை பாதுகாப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 9

வேளாண் நிலங்களையும் - நீரையும் நாசப்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுக!

தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியிலும், புதுச்சேரி பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது

அமெரிக்க, அய்ரோப்பிய நாட்டு மக்கள் தங்கள் நாடுகளில் இத்திட்டத்தை கொண்டுவர முனைந்தபோது, கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் நடத்தி யிருப்பது கவனிக்கத்தக்கது. இத்திட்டத் தால் நதிகளின் நீரும் - மண்ணின் வளமும் - மக்களின் உயிரும் மிகப்பெரும் பாதிப் புக்குள்ளாகும் என்று வெளிநாடுகளே எதிர்க்கும் இத்திட்டத்தை கடும் எதிர்ப் பிக்குப் பிறகும் மீண்டும் தமிழ் நாடு, புதுச் சேரியில் கொண்டுவர முயலும் மத்திய அரசு, மக்கள் நலனுக்கும் - நாட்டின் வளத் திற்கும் எதிரான அரசு என்று சுட்டிக்காட்டு வதோடு, இத்திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட இளைஞரணி களமிறங்கி போராடும் என் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டில் 55 இடங்களில் ஹைட் ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ள நிலையில் புதுச்சேரி, முதலமைச்சரைப் போல் தமிழக முதலமைச்சரும் இத்திட்டத் திற்கு தனது அரசின் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந் துரையாடல் கூட்டத்தில் மேற்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


-  விடுதலை நாளேடு, 19.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக