ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 


விடுதலை நாளேடு

பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றோரை ஒருங்கிணைப்போம்!
 கழகக் களப் பணிகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவோம்!
 2024 ஆகஸ்டு திராவிடர் கழக எண்பதாம் ஆண்டு – 2025 சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாக்களைக் கொள்கை ரீதியாகக் கொண்டாடுவோம்!
சமூகநீதி – மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமைகளுக்கு எதிரான
பாசிச மதவெறி பா.ஜ.க.வை வரும் தேர்தலில் வீழ்த்துவோம்!
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னை,பிப்.24 திராவிடர் கழக இளைஞரணி செயல் பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் செயல் திட்டங் களும், மக்களாட்சிக்கு மாறான மதவெறி பா.ஜ.க. ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்டன.
24-02-2024 அன்று முற்பகல் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வரு மாறு:

முன்மொழிதல்: மு.சண்முகப்பிரியன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்

புதுக்கோட்டை மாவட்ட கழகக் காப்பாளர் பெ.இராவ ணன் வயது 90 (மறைவு 11-2-2024), கோவை மாவட்ட மேனாள் செயலாளர் பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி வயது 67 (மறைவு 04-2-2024), விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பெரியார் பெருந்தொண்டர் கு.தாமோதரன் (மறைவு 06-2-2024) திராவிட இயக்க உணர்வாளர் கயல் தினகரன் வயது 88 (மறைவு 14-2-2024), ஆந்திர மாநிலம் – பாரத நாத்திக சமாஜ நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் வயது 80 (மறைவு 07-2-2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கல்லக்குறிச்சி பெரியார் நேசன் வயது 94 (மறைவு 22-2-2024), தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார்முத்தூர் சா.பெருமாள்சாமி வயது 94 (22-2-2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக் கும் இக்கூட்டம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிதல்: இரா.வெற்றிக்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 2:
பா.ஜ.க.அரசின் மக்கள் விரோதப் போக்கை
முறியடிக்க வேண்டும்

நாடு எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் வாழ்வா சாவா பிரச்சினையாகும். இந்தியாவின் சமூகநீதி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை, பன்மைத்துவம் ஆகியவற்றுக்குப் பெரும் ஆபத்தாகக் கடந்த பத்தாண்டு களாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். மதவாத ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்திய இறையாண்மைக்குரியோரான மக்களின் அடிப்படை உரிமைகள் பல வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந் நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் வளர்ச்சியை யும், ஒருங்கிணைந்த தன்மையையும் முன்னிறுத்திக் களம் காண்பது காங்கிரஸ் – திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி தான் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி, அக் கூட்டணி வெல்லுவதற்கும், இந்தியா காக்கப்படவும் பரப்புரையில் ஈடுபடுவது என இக் கூட்டம் உறுதி ஏற்கிறது.
தமிழ்நாடெங்கும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, தெருமுனைப் பிரச்சாரத்திலும், துண்டறிக்கை விநியோகித்தல் உள்ளிட்ட பிரச்சார முறைகளிலும் தீவிரமாக ஈடுபடுமாறு கழக இளைஞ ரணித் தோழர்களையும், பொறுப்பாளர்களையும் இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
முன்மொழிதல்: எ.சிற்றரசு,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 3(அ):
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையும் – ஒருங்கிணைப்பும்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, முறையாக நெறிப்படுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவற்றில் களப்பணிக்கு உட்படுத்தி, தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் பணி முடிக்க இக் கூட்டம் உறுதியேற்கிறது.
முன்மொழிதல்: தா.தம்பிபிரபாகரன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 3(ஆ):
கலை தொடர்பான பயிற்சிப் பட்டறை

வழக்கமாக நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருபக்கம் நடைபெற்றாலும், இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட நடிப்புத் துறைகளில் ஆர்வமுள்ள இருபால் இளைஞர்களுக்காக வென்றே தனிப் பயிற்சிப் பட்டறைகளைத் தக்கவர்களைச் கொண்டு நடத்துவது என்றும், பயிற்சிப் பட்டறை மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட அளவில் கழகத் தோழர்களிடமிருந்து தகவல் பெற்று, தக்கவர்களைத் தேர்ந்தெடுத்து இத்தகைய பயிற்சிகளை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: ம.செல்லதுரை,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 4:
திராவிடர் கழகத்தின் 80ஆம் ஆண்டு – மாநாடு

திராவிடர் கழகத்தின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை இவ் வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் திராவிடர் கழக இளைஞரணியின் சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடாக நடத்திட ஆணையிடுமாறு திராவிடர் கழகத் தலைவரை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: கோ.வேலு,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 5:
‘திராவிட மாடல்’ அரசுக்குப் பாராட்டு

‘‘வேலை கேட்டு, விண்ணப்பம் போட்டு அலுத்துப் போக மாட்டேன்; வேலை கொடுக்கும் நிலைக்கு என்னை உருவாக்கிக் கொள்வேன்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழங்கிய உறுதிமொழியை இன்றைய இளைஞர்களுக்கு மீண்டும் இக்கூட்டம் நினைவூட்டுகிறது.
சமூகநீதியையும், சீரான வளர்ச்சியையும் உருவாக்கும் வகையில், நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் தொடர்ந்து நல்ல திட்டங்களை மாணவர்களுக்கும், இருபால் இளைஞர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செயல்படுத்திவரும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக் கூட்டம் தனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி, தொழில் முனைவோராகவும், உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளில் சிறந்தோராகவும் தமிழர்கள் உருவாக அத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பிறருக்கு வழிகாட்டவும் நமது இளைஞரணித் தோழர்கள் முன் கை நீட்ட வேண்டும் என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது.
முன்மொழிதல்: மு.அருண்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 6:
சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

கடந்த பத்தாண்டுகளில் பல வகையிலும் சமூகநீதிக்கு ஆபத்துகளை உருவாக்கியுள்ளதோடு, பல கண்ணி வெடிகளையும் பாஜக அரசு புதைத்து வைத்துள்ளது. பாசிச பாஜக ஆட்சி ஒழிந்து, புதிய அரசு பதவியேற்றாலும், இந்த ஆபத்துகளிலிருந்து சமூகநீதியைக் காத்து, அதற்கு சட்டப் பாதுகாப்புகளை வழங்கி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டியது பெரும் சவாலான பணியாகும். இந்தச் சவாலை எதிர்கொள்ள, சமூகநீதி குறித்த புரிதலை இளைஞர்களிடமும், பல்வேறு அமைப்புகளிடமும் உருவாக்குதல் அவசியமாகும். மக்களைத் தயார்படுத்தினால்தான், அதன் பின் அரசுகள் செயலாற்ற ஏதுவாக இருக்கும். அரசியல் சூழல் எப்படியாயினும், சமூகநீதிக்கு ஆபத்து வருவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்குத் தேவையான பரப்புரைகள், விழிப்பூட்டும் வகுப்புகள், ஒருங்கிணைப்புகள், போராட்டங்களை நடத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலை ஏற்றுச் செயல்படுவது என இக் கூட்டம் முடிவு செய்கிறது.
முன்மொழிதல்: நா.கமல்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 7:
ஜாதி-மதவாதத்தை எதிர்த்துக்
கிராமப் பிரச்சாரம்!

ஜாதி, மதவாதத்தைப் பரப்பி, தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழலைச் சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் தூண்டுதலில் பல ஜாதிய, மதவாத அமைப்புகளும் செயல்பட்டுவருவதை இக் கூட்டம் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்கிறது. சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பொது ஊடகங்கள் வாயிலாகவும் பொய்ச் செய்தி பரப்புதல், செய்திகளைத் திரித்து வெளியிடுதல் என நயவஞ்சக நோக்கில் மேற்கண்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களிடம் இந்த நச்சுச் செடிகள் பரவிடா வண்ணம் தடுப்பது அனைத்து இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், கல்வியாளர்களின் கடமை என்பதை இக் கூட்டம் கவனத்துடன் சுட்டிக் காட்டுகிறது. அதற்கு முன்னோடியாக கிராமப்புறங்களில் தொடர் பரப்புரைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: ச.குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 8:
சுயமரியாதை இயக்கத்தின்
நூற்றாண்டு விழா (2025)

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நூறாம் ஆண்டு ஆகும். இது வெறும் வரலாற்றுக் குறிப்பு அல்ல – நாம் செல்ல வேண்டிய பாதையை நினைவூட்டும், வழிகாட்டும், விரைவுபடுத்தும் பாடக் குறிப்பும் ஆகும். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி ஆகியவற்றைத் தமிழர்களிடமும், பிற மாநிலத்தவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை ஆகும். நமது இளைஞர்கள் எழுதவும், உரையாற்றவும், ‘மந்திரமா – தந்திரமா?’ உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வாயிலாகப் பரப்புரை செய்யவும் தயாராக வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, பிற மொழிகளிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும் தங்கள் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் செல்ல வேண்டிய இலக்குகளை மனதில் கொண்டு அவற்றில் தீவிரமாகச் செயல்படும் வகையில் அதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: த.ஜெகநாதன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 9:
அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவின் அடிப்படையில் பாடத்திட்டம்

மானுட வளர்ச்சியில் இன்றைய அறிவியலின் பங்கு மகத்தானது. உலக நாடுகள் அனைத்தும் அறிவியல் துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்து வருகின்றன. பன்னெடுங்காலமாக விடைதெரியா கேள்விகளுக்கு அறிவியல் விடையளித்து வருவதுடன், புதிய புதிய கேள்விகளையும் எழுப்பிவருகிறது. இத் துறையில் வளர்ச்சியடையும் சமூகமே, நாளைய உலகின் பகுத்தறிவும், ஆளுமையும் மிக்க சமூகமாக உயரும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51 ஏ(எச்)சும் அதை வலியுறுத்துகிறது. அறிவியல் மனப்பான்மையும், அறிவியல் புத்தாக்கங்களும் பெருகும் வகையில் மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் தனித்தன்மையான விழாக்களை, கண்காட்சிகளை, பயிற்சிகளை, கல்விக் கூடங்களைத் தாண்டியும் பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அரசு திட்டமிட வேண்டும் என்றும், அறிவியல் சார் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் திராவிடர் கழக இளைஞரணி கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: இர.சிவசாமி,
தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்

தீர்மானம் எண் 10:
அரசமைப்புச் சட்டத்தின்
முகப்புரை பற்றி பாடத்திட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வலியுறுத்தும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் தத்துவங்களும், சமூக, அரசியல், பொருளாதார நீதியும், அடிப்படை உரிமைகளும் இந்தியாவின் அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேர வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் முதலே கொண்டு வருதல் அவசியமாகும். பள்ளிப் பாடத்திட்டங்களிலேயே அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் குறித்தும், அவற்றைக் காக்க குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் குறித்தும் விளக்கப்பட வேண்டும்; அதற்கேற்ற பாடங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: ரெ.சுப்ரமணியன்,
தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர்

தீர்மானம் எண் 11:
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் வெளிமாநிலத்தவர்களுக்கா?

இந்திய ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு, அந்தந்த பகுதிகளில் வேலையை உறுதி செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல அலுவலகங்களிலும், அலுவலகம் சாராத பணிகளிலும் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்படுவது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடம் உரசல், மக்களின் தேவைகள் அறியாமல் புறக்கணிக்கப்படுதல் என்று தொடர் பிரச்சினைகள் எழுவதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைப் பறிப்பு என்னும் கொடுமை நடந்து கொண்டுள்ளது. இந்நிலை ஏற்கத்தக்கதல்ல. இளைஞர்கள் மத்தியில் பதற்றமான மனநிலை உருவாகி வருகிறது. இதற்கான முடிவுரை ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக