13.04.1985 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “இடஒதுக்கீடு பாதுகாப்பு’’ மாநாட்டில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். டாக்டர் இராமதாஸ், டாக்டர் வீ.கிருட்டிணன், டி.ஏ.பிரகாசம் அய்.ஏ.எஸ். (ஓய்வு), திரு.சுப.சீதாராமன், டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு, எஸ்.டி.சோமசுந்தரம், பேராசிரியர் க.அன்பழகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்), வழக்கறிஞர் த.வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து-கொண்டனர்.
மாநாட்டில், இடஒதுக்கீடு சார்பான முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநாட்டில் உரையாற்றும்போது, தாழ்த்தப்பட்டோரின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எம்.சிவராஜ் 1957 ஏப்ரல் 27இல் கான்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்பொழுது, அவர் கூறியதை சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.
“நாட்டில் நாம் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது. அந்த மாற்றம் இந்தியாவின் 90 சதவீதம் மக்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் கையில் உண்மையான சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும். நமது நாட்டில் பத்துகோடிப் பேர்கள் பல நூற்றாண்டுகளாக பலவிதமான கொடுமை களுக்கு ஆளானாவர்கள். இன்று தாழ்த்தப் பட்டோர் என்ற பெயரால் மோசமான நிலையிலே உழன்று கொண்டிருக்கின்றனர். துன்பமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களைத் தவிர, 12 கோடி மக்கள் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற பெயரில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வாக்குரிமை இருந்து இவ்வளவு பெரும் எண்ணிக்கையுள்ளவர்கள் அவர்களின் தொகையின்படி அரசாங்கப் பதவிகளில் ஏன் அமர்த்தப்படவில்லை.
எல்லாத் துறைகளிலும் இவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று கேள்வியை எழுப்பி உரையாற்றினேன்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தலித் சங்கர்ஷ் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவும், மாபெரும் பொதுக்-கூட்டமும் 14.04.1985 அன்று பிற்பகல் 3 மணிக்கு (விதான் சவுதா) பெங்களூர் சட்டசபை வாயில்படியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்-கூட்டத்திற்கு பி.கிருஷ்ணப்பா அவர்கள் தலைமை தாங்கினர்கள்.
கர்நாடக மாநில தலித் அமைப்பாளர் தேவனூர் மகாதேவ, பெங்களுர் யுனிவர்-சிட்டியின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் நரசிம்மய்யா, வழக்கறிஞர் போஜ்ஜதாரக்கம், தலித் கவிஞர் சித்தலிங்கய்யா, புத்தபிக்கு மகாபோதி ஆகியோர் ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்கான கருத்துகளை எடுத்துக் கூறினார்.
நான் சிறப்புரை ஆற்றுவதற்கு முன்பாக மேடையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குரியப்பா, முனியம்மா என்ற மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை மாலையில் நடத்தி உரையாற்றினேன். இந்தத் திருமணம் பொதுக்கூட்ட மேடையில் நடத்தப்படுகிறது என்று சொன்னவுடன் ஏராளமான மக்கள் முண்டியடித்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடையை நோக்கி வந்து மிகவும் ஆச்சரியத்துடன் இத்திருமணத்தைப் பார்வையிட்டனர்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காந்தியார் அவர்கள் இடஒதுக்கீடு என்பது கூடாது என்று ஒருமுறை சொன்னார்கள்.
தனித் தொகுதி முறையை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தபோது அந்த மிரட்டலுக்குப் பணிந்துவிடக் கூடாது என்று தந்தை பெரியார் அம்பேத்கர் அவர்களுக்கு தந்தி கொடுத்தார்கள். ஒரு காந்தியாரின் உயிரைவிட கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைதான் முக்கியம் என்று தந்தை பெரியார் அந்தத் தந்தியிலே குறிப்பிட்டிருந்தார்.
நாம் போராடித்தான் நம்முடைய உரிமைகளைப் பெற்றுத் தீரவேண்டும் என்பதற்காகத்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றோம் என்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைக் கோடிட்டு விளக்கினேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில்…
இயக்க வரலாறான தன்வரலாறு(214)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக