வெள்ளி, 4 அக்டோபர், 2024

பட்டம்மாள் பாலசுந்தரம் மறைவு (4.1.1993)

 

                                                                பட்டம்மாள் பாலசுந்தரம்

4.1.1993 அன்று தமது 85 வயதிலும் போராட்டக் குணத்தோடு, கொள்கை நெறியோடும் நம்மோடு வாழ்ந்து உற்சாகமூட்டி வந்த அம்மா பட்டம்மாள் பாலசுந்தரம் (பாவலரின் வாழ்விணையர்) மறைவுற்றார் என்கிற செய்தியை தொலைபேசி வாயிலாக அறிந்து ஆறாத் துயரம் அடைந்தேன்.

அப்போது, தமிழ்நாட்டின் கடைகோடியில் நாகர்கோயிலில் தீவிரப் பிரச்சாரத் திட்டப் பயணத்தில் இருந்ததால், இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

பாவலர் பாலசுந்தரம் அவர்கள் இயக்கத்திலே ஆற்றிய அரும்பணி நாடறிந்தது. அவர் மறைவுக்குப் பிறகு எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் இருந்த நிலையிலும் கழகம்தான் மூச்சு _ கழகம் போராட்டத்தை அறிவிக்கும் என்றால் அதில் ஈடுபடும் முதல் வீராங்கனை என்கிற உணர்வோடு நம்மோடு வாழ்ந்து வந்தார்கள். அவர்களை இயக்கம் பல வகையிலும் பராமரித்துப் போற்றியும் வந்தது என்பது நமக்கு ஒருவகையில் ஆறுதல் என்றாலும் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் தொட்டு, தளரா நடைபோட்டு வந்த மூதாட்டியை, வீராங்கனையை இழப்பது என்பது சாதாரணமானதல்ல! அவர்கள் உயிரோடு இருக்கும்போதே தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் “பட்டம்மாள் பாலசுந்தரம் பூங்காவை’’ அமைத்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளோம்.

மூதாட்டியார் மறைந்தாலும் அவர்களின் தொண்டும் தீரமும் போராட்டக் குணமும் கட்டுப்பாடும் நம் நினைவில் என்றைக்கும் பசுமையாக இருக்கும்: வழிகாட்டியாகவும் இருக்கும் என்றும், மறைந்த அம்மாவின் அரை நூற்றாண்டுத் தூய தொண்டறப் பணிக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

18.2.1993 அன்று தியாகராயர் நகரில் நடந்த மறைந்த “பட்டுப் பாவலர்’’ உருவப் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு படத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, “மறைந்த மூதாட்டியார் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களின் சிறந்த தொண்டினை நினைவுகூர்ந்து அவரது தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை தோழர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அம்மையார் அவர்களின் தொண்டு சாதாரண எளிய தொண்டு அல்ல. 1938லே “ஓடி வந்த இந்திப் பெண்ணே நில்; நீ நாடி வந்த நாடு இதுவல்ல _ செல்’’ என்று பாடி பாவலர் பாலசுந்தரம் அவர்களை வாழ்க்கைத் துணைவராக ஏற்ற அந்தக் கால கட்டத்திலிருந்து தன்னுடைய இந்தக் காலகட்டம் வரை கட்டுப்பாட்டோடு தொண்டு ஆற்றியவர்கள்.

இந்த இயக்கத்தில் பல சரிவுகள் ஏற்பட்டன. நிறைய பேர் சபலங்களுக்கு ஆளாயினர். ஆனால், மறைந்த பட்டம்மாள் அவர்கள் தன்னுடைய இறுதி மூச்சு வரை, 89 வயதானாலும், கட்டுப்பாட்டோடு கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் சிறப்பாக முன்னின்று பங்கேற்றவர். கழகம் எந்தப் போராட்டம் அறிவித்தாலும் அதில் முன்னின்று, மகளிரணியினருக்குத் தலைமையேற்று, ஊர்வலத்தில் முதலில் கழகக் கொடியினை ஏந்தி வருபவர். அப்படிப்பட்ட அவர்களுடைய இழப்பு திராவிடர் கழகத்தாருக்குப் பெரிய இழப்பாகும்.

1938லேயே இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்ற பட்டம்மாள் அவர்கள் _ பாவலரது மறைவுக்குப் பின்னும்கூட தாயும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு போராட்டங்களில் பங்கேற்றவர்கள். அவருடைய மகளின் உடல்நிலை மோசமாகி இறந்த நேரத்திலும்கூட எல்லா போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார். அப்படிப்பட்ட கொள்கைக் குடும்பம்’’ என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துரைத்தேன்.

இயக்க வரலாறான தன் வரலாறு(246) 

உண்மை இதழ்அய்யாவின் அடிச்சுவட்டில் … கட்டுரையின் ஒரு பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக