ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் நிரந்தர சட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்?
அறவழிக் குரலுக்கு அனுமதி மறுத்தால் - ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் நிலை ஏற்படும்!
சென்னை, டிச.2 ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத் துக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்தால், அறவழியில் கருப்புக்கொடி காட்டும் நிலை உருவாகும் என்று எச் சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
நேற்று (1.12.2022) முற்பகல் 11 மணியளவில் ஆன் லைன் ரம்மி சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே (கலைஞர் பொன்விழா வளைவு) நடைபெற்ற அறவழி ஆர்ப்பாட் டத்திற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்
இரா.வில்வநாதன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டப் பொறுப்பாளர்களே, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே-ஆளுநரு டைய அடாத செயலுக்குக் கண்டனம் தெரி விக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அறப் போராளிகளாக நின்று கொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, ஊடகவியலாளர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போராட்டத்தினுடைய முக்கியத்துவம் என்பது முழுக்க முழுக்க நாளும் ஆன்லைன் சூதாட் டம் நாட்டில் பெருகி, அதன்மூலமாக தற்கொலைகள் ஏராளம் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தால் 32 பேர் மரணம்
தமிழ்நாட்டின் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதுவும் ஒரு மாதத்திற்குப் பிறகு காலாவதியாகிவிட்டது. நிரந்தர சட்டத்தை, சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அம்மசோதா ஆளுநருடைய ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தக் குறுகிய காலத்தில்கூட 32 பேர் பணம் இழந்த காரணத்திற்காக தற்கொலை செய்துகொண் டிருக்கிறார்கள்.
நேற்றுமுன்தினம்கூட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின; நேற்றுகூட ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீண்ட காலமாக இதனைத் தடை செய்திட ஒரு கோரிக்கை வைக்கப் படுகிறது; இந்த ஆன்லைன் சூதாட்டம் என்பது சட்டப்படி அனுமதிக்கப்படக் கூடாதது. அதனால், பல குடும்பங்கள் சீரழிக்கப்படுகின்றன. பல உயிர்கள் தற்கொலைக்கு ஆளாகின்றன.
அ.தி.மு.க. - தி.மு.க. ஆட்சிக்காலத்தில்...
மனிதநேயமற்ற இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - சட்டப்படி என்கிற கோரிக்கை - அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே இந்தக் கோரிக்கை பலமாக வந்தபொழுது, திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள், ஏனைய பல்வேறு அரசியல் கட்சிகள், தி.மு.க. உள்பட எதிர்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தின.
ஆனால், அன்றைக்கு இருந்த ஆட்சி, ‘‘அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல்'' என்று சொல்வதுபோல, அவர்கள் நிறைவேற்றிய சட்டம் இருக்கிறதே, அந்த சட்டம் முழுக்க முழுக்க அவ சரத்திற்காக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தினாலே, உச்சநீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது.
அதற்குப் பிறகு, நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - திராவிடர் இயக்க நீதிக்கட்சியி னுடைய நீட்சியாக இருக்கக் கூடிய இன்றைய ஆட்சி,திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி -அதனுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர் களுடைய தலைமையில், கடந்த ஒன்றரை ஆண்டு களாக நடந்துகொண்டிருக்கின்றபோது, இந்தக் கோரிக்கை, மீண்டும் சரியானபடி, சட்டத்தினுடைய சந்து பொந்துகள் எல்லாம் அடைக்கப்பட்டு,முழுமை யாக ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் நிறை வேற்றப்படவேண்டும் என்று எல்லா தரப்புகளும் வலியுறுத்தியதற்கு ஏற்ப, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களுடைய தலைமையில், அய்ந்து பேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவும் மக்களையெல்லாம் விசாரித்து, அந்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சட்டப்படியாகவும், சமூகநீதிப்படியும் சொன்னார்களே, அவற்றையெல்லாம் களைந்து, ஒரு புதிய மசோதாவை உருவாக்கி, வேகமாக செய்துகொண்டிருந்த வேளையில்கூட, இடையில், பல உயிர்கள் பறிபோவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுதான், (அன்றைக்குச் சட்டமன்றம் நடைமுறையில் இல்லை) சட்டமன்றத்தைக் கூட்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக - ஒரு அவசரச் சட்டத்தின் (ஆர்டினன்ஸ்)மூலமாக இதை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான், அந்த அவசர சட்டத்திற்கு முறைப்படி ஆளுநருடைய அனுமதியைப் பெற்றுத்தான் தி.மு.க. அரசு செய்தது.
நீதிபதி சந்துரு தலைமையில் குழு
ஆளுநர் அதற்கு அனுமதி கொடுத்த பிறகு, அந்தஅவசரசட்டம்சிலவாரங்கள்தான் அதுநடை முறையில்இருக்கும்.சட்டமன்றத்தில்அந்தச்சட் டம் மசோதாவாக நிறைவேற்றப்பட்டாக வேண் டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு குறுகிய கால சட்டமன்றக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நீதிபதி சந்துரு அவர்களின் குழு அளித்த பரிந்துரை களை ஏற்று, ஏற்கெனவே இருந்த சட்டத்தில் இருந்த தவறுகளையெல்லாம் களைந்து, சந்து பொந்துகளை அடைத்து, மிகப்பெரிய அளவிற்கு ஒரு சரியான மசோதாவை உருவாக்கி, அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, முறைப்படி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்கள்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஏறத்தாழ ஒன்றரை மாத காலம் ஆகிறது. அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர்.
ஏற்கெனவே ஜனநாயகப்படி மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு இருக்கின்ற ஓர் ஆட்சி - மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பல சட்டங் களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 20 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல நடந்துகொள்ளலாமா ஆளுநர்?
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர் முழுக்க முழுக்க ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல, சனாதனத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு, சம்பந்தமில் லாமல், திராவிடம்பற்றி தேவையில்லாத ஆராய்ச்சி செய்துகொண்டு, தம்முடைய கடமையிலிருந்து அவர் தவறி - அரசமைப்புச் சட்ட கடமையாக இருக்கக்கூடிய தன்னுடைய அன்றாடப் பணிகளை மறந்து - இந்த மசோதாக்களாலே - எங்கே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ - மக்கள் மத்தியில் சொன்ன வாக்குறுதிகளையெல்லாம் சட்டமாக ஆக்குகின்றார்களே, அதன்மூலமாக அவர் களுக்குப் பெருமை வந்துவிடுமோ என்பதற்காகத்தான் - அதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகத்தான், மற்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் எல்லாம், ஆளுநர்களை வைத்துக் கொண்டு எப்படி முட்டுக்கட்டை போடுகிறார்களோ - அதே பாணியை, இங்கே தமிழ்நாட்டில் ஆர்.என்.இரவி என்று சொல்லக்கூடிய ஓர் அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று, ஆளுநராக இருக்கக்கூடியவர் முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாக, அவர் எடுத்த உறுதிமொழிகளுக்கு விரோதமாக, இதுபோன்ற மசோதாக்களை கீழே போட்டு அழுத்தி வைத்திருக்கிறார்கள்.
அவசர சட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஆளுநர் - நிரந்தரச் சட்டத்துக்கு அனுமதியளிக்க மறுப்பது ஏன்?
இன்னுங்கேட்டால், இதோ தமிழ்நாடு அரசாங்கத் தைப் பொறுத்தவரை கெசட் செய்து விட்டார்கள். அடுத்தபடியாக நடைமுறை வருவதற்கு முன்பே வழக்குப் போட ஆரம்பித்தார்கள் - சூதாட்டக் கம் பெனிக்காரர்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆளுநர் அவர்கள் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித் திருக்கலாம். விவரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், அவசரச் சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதனுடைய கருத்தாக்கம்தான் சட்டமாக வரும் எப்பொழுதுமே! அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்திருக்கின்ற ஆளுநர், இந்த நிரந்தரச் சட்டத்திற்கு ஏன் குறுக்கே நந்திபோன்று படுத்திருக்கவேண்டும்? ஏனென்றால், இந்த ஆட்சிக்குப் பெருமை வந்துவிடும் என்பதினால்தான்!
ஆட்சிக்குப் பெருமையா? இல்லையா? என்று அரசியல் போராட்டமா நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது நாட்டிலே? அதுவல்ல. பல உயிர்கள் பறி போவதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகத்தான். அந்தச் சட்டம் நிறைவேறாத காரணத்தினால், அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு ஆன் லைன் சூதாட்டத்தின்மூலமாக, நேற்று முன்தினமும், நேற்றும்- உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்கவேண்டும்.
‘நீட்' சட்டத்திலும் ஆளுநர் முட்டுக்கட்டை
மனித உயிர்களை இவர்கள் காப்பாற்றாவிட்டாலும், தற்கொலைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கிறபொழுது, இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - அதை செய்வதில் அக்கறை காட்டும்பொழுது, அதற்குக் குறுக்கே தடுப்புப் போட்டுக் கொண்டிருக்கலாமா? என்பதுதான் நம்முடைய கேள்வி.
எனவேதான், இதுமட்டுமல்ல, இங்கே ஆதாரப் பூர்வமாக சொல்லிக் கொண்டே போகலாம்; ஆனால், இது ஒரு தனிப் பொதுக்கூட்டமல்ல.
ஆகவே, எங்களுடைய வேண்டுகோள் இங்கே சொன்னதைப்போல, முழுக்க முழுக்க தமிழ்நாடு ஆளுநர், இந்தப் பிரச்சினையில் மட்டுமல்ல, ‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண் டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை, தமிழ்நாடு ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.
எப்படி ஒரு தபால்காரர், ஒரு கடிதத்தை உரியவரிடம் கொண்டு போய் கொடுக்கவேண்டுமோ, அதுபோல செய்யவேண்டிய நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் இருக்கிறார்.
22 மசோதாக்களைக் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர்
அப்படிப்பட்ட சூழ்நிலையில், 22 மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நிலுவையில் இருக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:
1. 2020 ஜனவரி 13, 18 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.
2. 2022 ஜனவரி 12 இல் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது.
3. ஏப்ரல் 28 இல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல் கலைக் கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக் கழ கத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா.
4. மே 5 இல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா.
5. மே 12 இல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன.
6. மே 16 இல் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.
7. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா.
8. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதைத் தடுக்கும் சட்டத்தை திருத்துதல்.
9. தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம்.
10. மே 16 இல் நிறைவேற்றப்பட்ட, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.
11. டாஸ்மாக் நிறுவன விற்று - முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா,
12. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம்.
13. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் 3 ஆவது சட்டத்திருத்தம்.
14. 4 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பான மசோ தாக்கள்.
15. தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் - சட்டத் திருத்த மசோதா.
16. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்டத் திருத்த மசோதா.
17. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந் தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.
18. பழைய சட்டங்களை நீக்க வழிசெய்யும் மசோதா.
19. மே 24 இல் நிறைவேற்றப்பட்ட, போதைப் பொருள் மற்றும் -
20. வனம், சைபர் சட்டம், குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான திருத்த மசோதா.
21. தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது தொடர் பான மசோதா என மொத்தம் 21 சட்ட மசோதக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.
22. அக்.28 இல் ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா.
அதுமட்டுமல்ல, இன்னொரு கொடுமை என்ன வென்றால், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், அரசியல்வாதி போன்று நடந்துகொள்கிறார்.
பேரறிவாளன் விடுதலை வழக்கில் நடந்தது என்ன? ஓர் ஆளுநருக்கு இருக்கின்ற அடையாளம் என்பது எல்லையற்ற அடையாளமெல்லாம் கிடையாது.
ஆளுநருக்குத் தனி அதிகாரம் கிடையாது
ஆளுநர் என்பது ஓர் அடையாளம். தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய ஒரு பகுதி. தமிழ்நாடு அமைச் சரவை என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு மாறாக முடிவெடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆளுநருடைய அதிகாரம் என்பது தனி அதிகாரம் கிடையாது. இதை வரையறுத்து உச்சநீதிமன்றம் சொல் லிற்று. அந்த அதிகாரத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி, வைத்திருக்கின்ற காரணத்தினால்தான், பேரறிவாளன் உள்ளிட்டோர் நீண்ட காலத்திற்கு முன்பாகவே விடு தலையாகி இருக்கவேண்டியவர்கள். அப்படி விடு தலையாகாமல் சிறையில் இருப்பது எப்படி என்று ஓங்கித் தலையில் அடிப்பது போன்று உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இருந்தும்கூட, அதையெல்லாம் ஆளுநர் அவர்கள் பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் இந்த விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கின்றார்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு செய்தியை செய்தியாளர்களின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.
எதிர்க்கட்சிக்காரர்கள் சந்திப்புக்குத்தான்
ஆளுநர் உடன் நேரம் அளிப்பாரா?
இந்தச் சட்டத்தில் ஆளுநருக்குச் சந்தேகம் இருந்தால், உடனே கண்ணைமூடிக் கொண்டு அதை அனுப்ப முடியுமா? என்று அரைவேக்காடு அண்ணாமலைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம், அந்தச் சட்டத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? அதை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் - ஆளுநரின் கடிதத்திற்கு, தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள், 24 மணிநேரத்தில் அந்தக் கடிதத்திற்குப் பதில் அளித் திருக்கிறார். ஆளுநர் மாளிகைக்கும் அந்தத் தகவலை அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆளுநருக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் சுமூகமான உறவு இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, முதலமைச்சர் அவர்களுடைய ஆணைப்படி, சட்ட அமைச்சர், ஆளுநரைப் பார்க்க நேரம் கேட்கிறார்.
ஆனால், சட்ட அமைச்சரை சந்திக்க, ஆளுநர் நேரம் ஒதுக்க மறுக்கிறார்.
இதற்கிடையில், அண்ணாமலை, ஆளுநர் மாளி கைக்குச் சென்று ஆளுநரைச் சந்திக்கிறார், ஏதோ ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்று வருவதைப் போல.
எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் ஆளுநர்.
சட்ட ஒப்புதல் - நடைமுறைகள் என்ன?
சட்ட அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்க மறுக்கிறார் ஆளுநர் என்கிற விமர்சனங்கள் எழுந்தவுடன், இன்று ஒரு தகவல் வருகிறது - நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரும்பொழுது, சட்ட அமைச்சரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள்.
ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்கள் போன்றவற்றை அறிவித்த பிறகுதான், கொஞ்சம் கதவு திறக்கிறது. அந்தக் கதவு முழுவதும் திறக்கவேண்டும். அப்படி கதவு திறப்ப தோடு மட்டுமல்ல, ஆளுநர்கள் என்பவர்கள் நம்முடைய வரிப் பணத்தைத்தான் சம்பளமாக வாங்குகிறார்கள். சம்பளம் கொடுப்பவர்கள் அத்துணை பேரும் எஜ மானர்கள். சம்பளம் வாங்கக்கூடிய அவர் ஓர் அரசு ஊழியர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், தனிக்காட்டுராஜா போன்று, நானே ராஜா என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார் அவர்.
எனவே நண்பர்களே, இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம் என்பது, ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதே!.
அவர் கேட்ட விளக்கத்திற்கும், விளக்கம் சொல்லியாகி விட்டது.
அப்படி ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அந்த மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பவேண்டும்.
அப்படி அவர் அனுப்பினால், சட்டமன்றம் மீண்டும் கூடி, மீண்டும் அந்த சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, இவருக்கு வேறு வழியே கிடையாது; ‘‘சுவர் கீரையை வழிச்சுப் போடுடி'' என்ற நிலைதான் ஆளுநருக்கு ஏற்படும்.
கருப்புக்கொடி காட்டும் நிலை வரும்!
அதையும் மீறி இவர் குறுக்குச்சால் விட்டால், இந்த போராட்டங்களுடைய வடிவங்கள் மாறும். ஆனால், ஒருபோதும் நாங்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம். இந்த இயக்கம் வன்முறை இயக்கமல்ல. ஜனநாயக ரீதியாகயாகவே அவரை வெளியே அனுப்பக் கூடிய அத்துணை முயற்சியையும் கடைசி வரையில் செய் வதற்குத் தயங்கமாட்டோம், மக்களுடைய ஆதரவோடு!
இதை செய்துவிட்டு, அவர் அங்கே போகலாம், இங்கே போகலாம் என்று நினைக்க முடியாது. அடுத்த கட்டம், ஆளுநர் போகின்ற இடங்களிலெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம். ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்படுவதற்கே யோசிக்க வேண்டி இருக்கும் அவர்.
மக்களின் கொதிநிலையை
உணரவேண்டும் ஆளுநர்
அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டை, அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று ஆளுநர் விரும்புகிறாரா?
அறவழியைத் தாண்ட வேண்டாம் என்று பொறு மையாக இருக்கிறோம்; மக்களுடைய கொதி நிலை உணர்வை ஆளுநர் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்து கொண்டு அவர் செயல்படவேண்டும்.
இனிமேலும் தாமதிக்கக் கூடாது. எங்களுக்காக அல்ல; தி.மு.க.விற்காக அல்ல. காப்பாற்றப்பட வேண்டிய உயிர்களுக்காக - மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
கழகத் தலைவரின் முழக்கம்!
இந்தக் குறுகிய காலத்தில், நம்முடைய திராவிட இயக் கத்தின் போர்வாள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் மானமிகு வைகோ இப்போராட்டத்தில் மதிமுக கலந்துகொள்ளும் என்று அறிக்கை விடுத்திருந்தார். அதேபோல, மற்ற மற்ற சில அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள் - அவர்களுக்கும் என்னுடைய நன்றி தெரிவித்து, வந்திருக்கின்ற தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து, நாம் தொடர் முழக்கம் எழுப்புவோம்!
காப்போம், காப்போம்!
மாநில உரிமைகளைக் காப்போம்!
காப்போம், காப்போம்!
மாநில உரிமைகளைக் காப்போம்!
தேவை, தேவை!
மாநில சுயாட்சி தேவை!
போன்ற முழக்கங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் எழுப்ப, தோழர்கள் முழக்கமிட்டனர்.
- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக