நமது கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்கள்
தஞ்சை கழக மாநில மாநாட்டிற்கு மட்டுமல்ல;
எனக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவரும் அவரே!
தமிழர் தலைவர் ஆசிரியர் மாநாட்டில் பிரகடனம்
தஞ்சை, பிப்.23 இந்த மாநாட்டுத் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய கழக துணைத் தலைவர் அருமை சகோதரர் கவிஞர் அவர்கள், இந்த மாநாட்டிற்கு மட்டுமல்ல, திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராகவும் அவர்தான் இருப்பார் என்பதை பிரகடனப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
தஞ்சையில் இன்று (23.2.2019) தொடங்கப்பட்ட திராவிடர் கழக மாநில மாநாட்டின் நோக்கம்பற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
வெற்றிகரமான ஏவுகணையாக...
இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு காலகட்டமான இந்த காலகட்டத்தில், அறிவு ஆசான் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம், இன்றைக்கு தமிழ்நாட்டிலே பிறந்தாலும், அந்த சமூக விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட சுயமரியாதை மாமருந்து என்பது உலகம் முழுவதும் எங்கெங் கெல்லாம் நோய்கள் இருக்கின்றனவோ, எங்கெங்கெல்லாம் பிறவி நோய்கள் இருக்கின்றனவோ, எங்கெங்கெல்லாம் மனித குல பேதம் இருக்கின்றனவோ, எங்கெங்கெல்லாம் மனிதகுல சமத்துவத்திற்கு கேள்வி எழும்பியிருக்கின்றதோ, எங்கெங் கெல்லாம் பெண்ணடிமை நிலைக்கப்பட வேண்டும் என்று மதங்கள் ஆனாலும், அமைப்புகளானாலும் போராடுகின்ற நேரத்தில், அதனை எதிர்த்து, அதைத் தாக்குவதற்குரிய வெற்றிகரமான ஏவுகணையாக, இங்கே கருவியாக அமைத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் - இந்தத் தஞ்சை தரணியில், இரண்டு நாள் மாநாட்டினை தொடங்கியிருக்கின்ற நேரத்தில், குடும்பம் குடும்பமாய் வந்திருக்கின்ற, வந்துகொண்டிருக்கக்கூடிய அருமைக் கருஞ்சட்டைத் தோழர்களே, இயக்கப் பகுத்தறிவாளர்களே, நம்முடைய அன்பான கொள்கைக் குடும்பத்தினரே, ஆதரவாளர்களே, சான்றோர்களே, மாநாட்டின் தலைவர் மகத்தான செயல்வீரர், இந்த இயக்கத்தினுடைய தொடர்ச்சிக்கு அவர்தான் அடுத்த தலைவர் என்று நாங்கள் பிரகடனப்படுத்துவதைப்போல, இன்றைக்கு இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்த மாநாட்டினைத் திறந்து வைத்திருக்கக்கூடிய செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களே,
கழகக் கொடியேற்றி வைத்த கழகப் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களே,
இந்நிகழ்வில் பங்கேற்கக்கூடிய பெரியோர்களே, தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர், அன்பிற்குரிய லட்சிய கொள்கையாளர், நெறியாளர் அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
மேடையில் இருக்கக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் இராசகிரி கோ.தங்கராசு அவர்களே, பொத்தனூர் க.சண்முகம் அவர்களே மற்றும் இயக்கத் தோழர்களே, பொறுப்பாளர்களே, நண்பர்களே, ஊடகவியலாளர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களையெல்லாம் வாட்டிக் கொண்டிருக்கிறது; வதைத்துக் கொண்டிருக்கிறது!
என்னுடைய உரைக்கு முன் ஒரு செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மாநில மாநாட்டிற்கும், இன் றைக்குத் தஞ்சையில் நடைபெறக்கூடிய மாநில மாநாட்டிற்கும் இடையில், எத்தனையோ சோகமான, சொல்லொணாத ஈடுசெய்ய முடியாத இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த இழப்புகளில், நாம் யாரை அழைத்தால், இந்த மாநாட்டிற்கு வந்து பெருமைப்பட தன்னுடைய முழக்கத்தினால், நம்மையெல்லாம் உற்சாகப்படுத்துவாரோ, அந்தத் தலைவர், வழிகாட்டக் கூடிய தலைவர், ஆட்சியை அமைக்கும்பொழுதெல்லாம் அண்ணா அவர்கள் வழியில், தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்று அழைக்கப்பட்ட அந்த வழியில், மிகத் தெளிவாக, ஆட்சியையே அய்யாவிற்குக் காணிக்கை என்றாலும், அய்யா எங்களுடைய ஆட்சியில் போராடக் கூடாது என்று சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு, தந்தை பெரியார் விரும்பிய ஜாதி ஒழிப்பினுடைய ஒரு கட்டத்தினை அண்ணா நிறைவேற்றினார். சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்; சூத்திரனுக்குத் திருமண உரிமை இல்லை என்பதை அகற்றுவோம் என்பதை அண்ணா செய்தார். அதனுடைய இன்னொரு பாகத்தை, சூத்திர இழிவு, பஞ்சம இழிவு போகவேண்டும் என்று அதனுடைய தொடர்ச்சியை செய்தவர்; மானமிகு சுயமரியாதைக்காரராக, என்றைக்கும் நம்முடைய நெஞ்சங்களில் நிலைத்திருக்கக் கூடியவரும், முதல்வராக பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இதே கொள்கையை முழங்கிய, மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இன்றைக்கு நம் நெஞ்சில் நிறைந்தவராக இருக்கிறார். அவர் இந்த மேடையில் இல்லையே என்கிற கலக்கம் எங்களையெல்லாம் வாட்டிக் கொண்டிருக்கிறது; வதைத்துக் கொண்டிருக்கிறது.
அதுபோலவே நண்பர்களே, ஏராளமான தந்தை பெரியார் அவர்களின் பாசறையில் இருந்த இயக்க மூத்த தோழர்கள், பணியாளர்கள் எண்ணற்றவர்களை நாம் இந்த இடைவெளியில் இழந்திருக்கின்றோம். அவர்களுக்கும் சரி, மானமிகு சுயமரியாதைக்காரராக, பாராட்டிப் போற்றி வந்த பழைமை ஸ்லோகம், ஈரோட்டு பூகம்பத்தால்
இடியுது பார்!
என்று கவிதை எழுதி தொடங்கிய அவர், முதலமைச்சரான பிறகும், தன்னை ஆளாக்கிய தலைவர், ஈரோட்டு ஆசான், தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்தில், அவருக்கு அரசு மரியாதை கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அதனால், என்னுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை செய்வதுதான் முக்கியம் என்றார். மரியாதை செய்த பிறகும், நான் அரசு மரியாதை கொடுத்து அவருடைய உடலடக்கத்தை செய்தேனே தவிர, அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவில்லையே என்று ஆதங்கப்பட்டார். பிறகு மறுபடியும் ஆட்சிக்கு வந்து, அந்த முள்ளை அகற்றிய மாபெரும் தலைவர்தான், புரட்சியாளர்தான் நம்முடைய பெருமைக்குரிய கலைஞர் அவர்களாவார்கள்.
தலைவணங்கி வீர வணக்கம்!
கலைஞர் அவர்களுடைய மறைவு, நம்முடைய எண்ணற்ற சுயமரியாதைச் சுடரொளிகள், கருப்பு மெழுகுவர்த்திகளின் மறைவு, அண்மையில் மதவெறியினால் ஏற்பட்ட தீவிரவாதத்திற்குப் பலியான, நம் நாட்டு எல்லையில் கடமையாற்றக் கூடிய இராணுவ வீரர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட அவர்களின் தியாகத்திற்கு இந்த மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது.
வீர வணக்கம் செலுத்துகின்ற வகையில், கலைஞருக்கு, நம்மோடு இருந்து உழைத்த கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு, நம்முடைய மறைந்த இராணுவ வீரர்களுக்கு அனைவரும் எழுந்து வீர வணக்கம் செலுத்துகிறது, தலை வணங்குகிறது.
(அனைவரும் எழுந்து நின்று வீர வணக்கம் செலுத்தினர்)
இந்த மாநாட்டிற்குக் கழகத் தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாய் சங்கமமாகி இருக்கிறார்கள். மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
விதை நெல்லைக் கொண்டு சமையல் செய்வதைப்போல...
எல்லாவற்றையும்விட, ஜனநாயகம் இந்த நாட்டில் தொடரவேண்டுமா? அல்லது பாசிசம் நிலைக்கவேண்டுமா? இந்த நாட்டில் மக்களாட்சி தேவையா? அல்லது ஒரு பாசிச ஆட்சி தேவையா?
பசுவுக்கு இருக்கின்ற பாதுகாப்பு, இந்த நாட்டில் உழைக்கின்ற என்னுடைய சகேதாரனுக்கு, மக்களுக்குக் கிடையாது;, பெண்களுக்குக் கிடையாது; அறிவார்ந்த மக்களுக்குக்கூட கிடையாது, அவர்களுக்கெல்லாம் புதுப்பெயர் வைத்து அர்பன் நக்சலைட் என்று பெயரிட்டு, அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதப் படையினால் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். அல்லது குற்றவாளிகளாக நிறுத்தப்படுகிறார்கள் என்ற இந்தக் கொடுமையான, கருத்துரிமை இழந்த, பேச்சுரிமை பறிக்கப்பட்ட பல்வேறு கட்டங்களில், ஏழை, எளியவர்கள், விவசாயிகள், பாட்டாளி மக்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், அத்துணைத் தரப்பினரும் இந்த ஆட்சிக்கு விரோதமாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட ரிசர்வ் வங்கி ஆளுநர்கூட இந்த ஆட்சியில், மோடி ஆட்சியில் இருக்க முடியாது என்று இரண்டு பேர் ஓடிப் போகிறார்கள். விதை நெல்லைக் கொண்டு சமையல் செய்வதைப்போல, இன்றைக்கு மூலதனத்திலிருந்து பணம் வாங்கக்கூடிய கட்டம் இருக்கிறது. இவைகளையெல்லாம் கொண்ட பாசிச ஆட்சி மத்தியில்.
நகைச்சுவையோடு பேசியவரே, நகைச்சுவையானார்!
இங்கே ஒரு அடிமை ஆட்சி; திடீரென்று ஓடிப்போனவர் சொன்னார், திராவிடக் கட்சிகளை, கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும், பார்'க்குக்கூடிய புதிய விளக்கம் எல்லாம் சொல்லி நகைச்சுவையோடு பேசினார்; இன்றைக்கு அவரே நகைச்சுவைக்கு ஆளாகிவிட்ட பரிதாபகரமான வெட்க கரமான இந்தக் காலகட்டத்தில், ஒன்று மிக முக்கியம்.
திராவிட இயக்கங்களோடு கூட்டு சேர மாட்டோம் என்று சொன்னார்; இன்றைக்கு அ.தி.முக..வோடு கூட்டு சேர்ந்ததின் மூலமாக, ஒரு நல்ல பிரகடனத்தை நாட்டிற்குச் சொல்லியிருக்கிறார். கேட்டிலும்கூட, தீமையிலும்கூட ஒரு நன்மை தெளிவாகத் தெரிகிறது. அதுதான், எது உண்மையான திராவிடர் இயக்கம் என்பதை நாட்டு மக்களுக்கு அதிகாரப் பூர்வமாக மோடியோடு, அங்கு தோடி ராகம் பாடிய காரணத்தினால், ஓடிய காரணத்தினால், மிகத் தெளிவாக இங்கே பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் கூட்டணிக்கு என்ன பெயர் என்று முடிவெடுங்கள்!
இன்று காலையில் வெளிவந்த இந்து ஏட்டில் ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தார்; அய்ந்து இடங்கள்தான் என்பதற்கு ஆதங்கப்பட்டார். இரண்டு பேரையும் அழைத்து உத்தரவு போட்டிருக்கிறார். இவர்கள் கைகட்டிக் கொண்டு மதுரை விமான நிலையத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.
உங்களுடைய கூட்டணியை, மோடி தலைமையில் இருக் கின்ற கூட்டணி அல்ல என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, அ.தி.மு.க. கூட்டணி அல்ல என்று உத்தரவுப் போட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குள் முதலில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை, குறைந்தபட்சம் கூட்டணிக்கு என்ன பெயர் என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
எனவே, கொள்கைக் கூட்டணி இந்த மேடையில் இருக்கிறது; நாளைக்கும் வரவிருக்கிறது. கொள்கையற்றவர்கள் வேறு பக்கத்தில் இருக்கிறார்கள்.
திராவிடர் கழகம் யாரை அடையாளம் காட்டுகிறதோ...
தமிழர்களே, தமிழர்களே! இந்த மாநாடு உங்களுக்குச் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், எது பலமான, எது வெற்றிகரமான கூட்டணி என்றால், திராவிடர் கழகம் யாரை அடையாளம் காட்டுகிறதோ, எந்த அணியை அடையாளம் காட்டுகிறதோ, அந்த அணிதான் பிணி தீர்க்கும். அந்த அணிதான் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
காரணம், எங்களுக்கென்று எதுவும் கிடையாது; எங்களுக்கென்று ஆசாபாசங்கள் கிடையாது. திராவிடர் கழகத்தினுடைய பார்வை ஒரு விஞ்ஞானப் பார்வை; பெரியாரின் பார்வை. ஆகவே, அந்த விஞ்ஞானப் பார்வையோடுதான் இந்த மாநாடு தொடங்கியிருக்கிறது.
ஒரு விரல் புரட்சி!
எனவே, இந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்கள் அத்துணை பேருக்கும் முக்கியமான கடமை என்னவென்றால், நாம் புரட்சி செய்யவேண்டும். அந்தப் புரட்சிக்கு ஆயுதம் தூக்கவேண்டிய அவசியமில்லை. பொத்தான் இருந்தால் பொத்தான், அல்லது வேறு முறை என்றால், அந்த முறையில், ஒரு விரல் புரட்சி என்பதன்மூலமாக, ஒரு அமைதிப் புரட்சியை செய்து, மதவெறி யையும், பாசிச வெறியையும் வெளியே அனுப்பவேண்டும்.
அவரே சொல்லியிருக்கிறார், எங்களுடைய கூட்டணியினுடைய பலன் லஞ்சத்தையும், அதேபோல, ஊழலையும் ஒழிக்கக்கூடிய கூட்டணி என்று சொல்கிறார்கள்.
ஒரு பக்கத்தில் கூட்டணி வைத்துக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் நேற்றுகூட வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுகின்றன.
இதுபோன்ற ஒரு அதிசயத்தை இந்திய நாடு எந்தக் கால கட்டத்திலும் பார்த்ததே கிடையாது. எனவேதான், கோலெடுத் தால், குரங்கு ஆடும் என்பதைப் போல, ஆட்டிப் படைக்கிறார்கள். இதை எச்சரிக்கையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை விளக்கி,
மாநாட்டிற்கு மட்டுமல்ல; கழகத்தின் அடுத்த தலைவராக...
சமூகநீதியைக் காப்பாற்ற
ஜாதியை ஒழிக்க
பெண்ணடிமையை நீக்க
உலகக் குடையின் கீழ் அனைவரையும் ஒன்றாக்க
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்ற கருத்தைக் கொண்ட கொள்கை விளக்கத்தை பின்பு சொல்லவிருக்கின்றோம். ஆகவே, அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு, இந்த மாநாட்டுத் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய கழக துணைத் தலைவர் அருமை சகோதரர் கவிஞர் அவர்கள், இந்த மாநாட்டிற்கு மட்டுமல்ல, அடுத்த தலைவராகவும் அவர்தான் இருப்பார் என்பதை பிரகடனப்படுத்தி அமைகிறேன், நன்றி வணக்கம்.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 23.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக