புதன், 27 பிப்ரவரி, 2019

தஞ்சை சமுகநீதி மாநாட்டில் சிறப்பான தீர்மானங்கள்

மண்டல் குழுவில் கூறியுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீடு நீதித்துறையில் இடஒதுக்கீடு மற்றும் நலவழ்வுத் திட்டங்களை செயல்படுத்துக


* நீட் மற்றும் கிரீமிலேயரை அறவே நீக்குக!

* தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை

* உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு மோசடியானதே!

* சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்குக



தஞ்சாவூர், பிப். 24 தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு சிறுபான்மையினருக்கும் இடதுக்கீடு, மண்டல் குழு பரிந்துரைகளில் இடம் பெற்ற - நீதித்துறையில் இடஒதுக்கீடு - நல்வாழ்வுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு முதலியவற்றை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும், நீட் தேர்வும், கிரீமிலேயரும் நீக்கப்பட வேண்டும் என்றும், 16 தீர்மானங்கள், தஞ்சையில் இன்று நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

24.2.2019 ஞாயிறு அன்று தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற சமுக நீதி மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

"1947இல் சுதந்திரம்" அடைந்து 72 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்றளவும், ஒடுக்கப்பட்ட மக்கள் - தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான் மையினர் - அரசின் உயர்பதவிகளில் மிகக் குறைந்த அளவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். சமுக நீதி எனும் கோட்பாடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே வலி யுறுத்தப்பட்டுள்ளது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இட ஒதுக்கீடு அளித்திட உரிய பிரிவுகளும், அதன் அடிப்படையில் சட்டங்களும் உள்ளன. ஆனாலும், அரசின் உயர் பதவிகளிலும், பார்ப்பனர் கள் மற்றும் உயர்ஜாதியினர் 70 விழுக்காட்டிற்கு மேல் ஆக்கிரமித்த நிலையில், அரசின் எந்த சட்டங்களும் நடை முறைப்படுத்துவதில் பல முட்டுக்கட்டைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, திராவிடர் கழகத்தின் கருத்தினை ஏற்று,  அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், தமிழக சட்டமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 31-சி-இன் படி, சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டதால், பாதுகாப்பு பெற்றுள்ளது. சமுகப் புரட்சியாளர் தந்தை பெரியார் போராடிப் பெற்ற உரிமைகள், பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழியே தந்த உரிமைகள், இதன் அடிப்படையில், மத்திய அரசின் அனைத்து நிலைகளிலும், ஒடுக்கப்பட்டோர் பெற்ற உரிமைகள் மிகக் குறைவே. பெற வேண்டிய உரிமைகள் மிக அதிகம். இதனைக் கருத்தில் கொண்டு, திராவிடர் கழகம் நடத்தும் இந்த சமுக நீதி மாநாட்டில், நாம் நிறைவேற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளும், ஒருங்கிணைந்து அகில இந்திய அளவில் ஓர் இயக்கமாக, சமுக நீதி உரிமையை பெற வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு - உடன் சட்டத் திருத்தம் தேவை!!


தீர்மானம் எண் 1:

இட ஒதுக்கீட்டிற்கான சட்டம்


தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் அளித்த சட்ட முன் வரைவு அனைத்துக் கட்சிகளாலும் ஏற்கப்பட்டு, சட்டமன்றத்தில் சட்டமாகி, பின்னர் அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, பாதுகாக் கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசில் இத்தகைய சட்டம், குறிப்பாக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அர சின் ஆணைகள் மூலமாகத்தான்  நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நீதிமன்றத்தில் பல தடைகளும் அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

முந்தைய அய்க்கிய முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டில், இட ஒதுக்கீடு சட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப் பினர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான குழு அறிக்கை மூலம் நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத் தும் இன்றளவும் அந்த அறிக்கைமீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் உள்ளதுபோல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

மண்டல் குழு பரிந்துரை அனைத்தையும் நிறைவேற்றிடுக!


அ) அரசியல் அமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்ட மண்டல் தலைமையில் அமைக் கப்பட்ட இரண்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை 31.12.1980 அன்று அரசிடம் அளிக்கப்பட்டு, 38 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் கூட, அதன் இரண்டு பரிந்துரைகள்  கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பரிந்துரைகள்  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, நீதித்துறையில் இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு  இவை இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

ஆ) நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் தற்போது சமுக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. தமிழகம் உள் ளிட்ட சில மாநிலங்களில் உள்ளதுபோல், தனியாக பிற்படுத்தப்பட்டோர்க்கு என அமைச்சகம் மத்திய அரசில் உருவாக்கப்படவில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர்க்குத் தனி அமைச்சகம் இருப்பது போல், பிற்படுத்தப்பட்டோரின் நலன் சார்ந்த திட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெற, தனி அமைச்சகம் அமைத்திட மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

இ) பிற்படுத்தப்பட்டோர்அனைத்துத் துறைகளிலும் உரிய பங்கீடு பெற வேண்டுமாயின், மண்டல் குழு பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3:

"கிரீமிலேயர்" எனும் கிருமி ஒழிக்கப்பட வேண்டும்


அரசமைப்புச் சட்டம், சமுகரீதியாக, கல்விரீதியாகப்  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட உரிமை தந்துள்ளது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்திட எந்த பிரிவும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் உருவானபோதே, பொருளாதார அளவுகோல் தேவையற்றது என நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர். வேலைவாய்ப்பில் பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் (மண்டல் வழக்கு), உச்சநீதிமன்றம் "கிரீமிலேயர்" எனும் முறையை தேவையின்றிப் புகுத்தியது.  இதன் காரணமாக, பிற்படுத்தப்பட்டோரில் தகுதி படைத்த பலரும், இட ஒதுக்கீடு உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற ஏற்பட்ட ஒரு கருவியாகும். இதில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் "கிரீமிலேயர்" முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

தீர்மானம் எண் 4:

தனியார்த் துறைகளிலும் தேவை இடஒதுக்கீடு


தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) என் பதற்கான பொருளாதாரக் கொள்கைகளும், செயல்பாடுகளும் விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமுகநீதியின் அடிப்படையில், தனியார்த் துறை சார்ந்தும் இடஒதுக்கீடு தேவை என்பது முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது.

அரசுத் துறைகள், பொதுத் துறைகளில் உள்ள தாழ்த் தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சட்டப்படி யாகக் கிடைத்திருக்க வேண்டிய இடஒதுக்கீடு விகிதாச்சாரம் இன்னும் தேவையான அளவு எட்டப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் என்பவர் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியிருப்பதன்மூலம் பி.ஜே.பி ஆட்சி எத்தகையவர்களை எல்லாம் மிகப் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களைத் துவங்கும்போது அந்நாட்டு மண்ணுக்குரிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், உள் நாட்டில் மட்டும் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு அளிக்காததும், பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் தனியார்த் துறை இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, வெகு மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிரானது என்பதை இந்த "சமுக நீதி" மாநாடு சுட்டிக்காட்டி, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு - உடன் சட்டத் திருத்தம் தேவை!!


மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் கிடைத்துள்ள இடங்கள் வெறும் 62தான். விழுக்காட்டில் பதினொன்றே!

அதேபோல இந்தியா முழுதும் உள்ள 4030 சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்கள் பெற்றுள்ள இடங்கள் வெறும் 311 மட்டுமே. விழுக்காட்டில் எட்டு மட்டுமே!

இது மக்கள் பிரதிநிதித்துவம் என்ற முறையில் சமுகநீதிக்கு மிகவும் எதிரானதே! இந்த நிலையில் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கு 33.3 விழுக்காட்டுக்கான மசோதா (108ஆம் திருத்தம்) 1996 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு மேலும் காலந்தாழ்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது - அநீதியானது என்பதால் பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்குத் தனித்தனி ஒதுக்கீடு) சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசையும், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  "சமுக நீதி" மாநாடு கேட்டுக் கொள்கிறது. உள் ஒதுக்கீடு இல்லாவிடின், உயர் ஜாதியினரே இந்த இடங்களை பறித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்பதையும் எச்சரிக்கையுடன் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 6:

நீதித்துறையில் இட ஒதுக்கீடு


இந்திய நாட்டு உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் தான் உண்மையாக இன்றைய அரசியல் சட்ட ஜனநாயக முறையில் ஆளுகின்ற அமைப்புகள். மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றும் சட்டம்கூட சரியா - தவறா என்று தீர்ப்பளிப் பவையாகும். எனவே, அந்த மன்றங்களில் சமுகநீதிக் கொடி பறந்தாகவேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள். அதில் சில இடங்கள் காலியாகவும் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நமது தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களைச் சேர்ந்த நீதிபதிகள் (உயர்நீதிமன்றங்களில் சிறந்த மூத்த வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்களாக இருந்தும்கூட) மருந்துக்குக்கூட ஒருவர் இல்லை. இது மாபெரும் சமுக அநீதியாகும்.

அதேபோல், மக்கள் தொகையில் 70 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுகங்களிலிருந்து நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் எத்தனைப் பேர்? ஒரே ஒருவர். இந்த நிலையில், மாவட்ட நீதிபதிகள் நியமனத்திலும், அகில இந்திய தேர்வைப் புகுத்தி, சமுக நீதியைக் குழி தோண்டிப் புதைத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது அரசின் முதன்மைத் துறைகளுள் நிர்வாகம், சட்டமன்றம் ஆகிய இரண்டிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை உள்ள நிலையில், மூன்றாவது துறையான நீதித்துறையில், உச்ச நீதிமன்றம் வரை, இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சரியானது. இதனை மத்திய அரசு உணர்ந்து உரிய சட்டம் இயற்றிட இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

"நீட்" தேர்வை நிரந்தரமாக நீக்குக!


மருத்துவம், பல் மருத்துவக் கல்வி ஆகியவற்றிற்கு அகில இந்திய அளவில் "நீட்" எனும் நுழைவுத் தேர்வுமுறை சமுகநீதிக்கு எதிரானது என்றும், தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கும், கிராமப் புறத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் திராவிடர் கழகமும், முக்கிய அரசியல் கட்சிகளும், சமுகநீதி அமைப்பு களும் எச்சரித்தபடியே, தொடர்ந்து நடைபெற்ற 2017-2018, 2018-19ஆம் ஆண்டுக்கான "நீட் தேர்வின் முடிவுகள்" அமைந்துவிட்டன.

இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி முறைகள் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகமே "நீட்" தேர்வை நடத்துவது என்பது மிகப் பெரிய சதியும் மோசடியுமாகையால் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் "நீட்" தேர்வுக்கான விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் மத்திய அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது. நீட் தேர்வு என்பது தொடக்கம் முதலே பல்வேறு மோசடிகளையும், குழப்பங்களையும், குறைபாடுகளையும் கொண்டுள்ளது என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

சமுகநீதியில் அக்கறை உள்ள அத்தனைக் கட்சிகளும் அமைப்புகளும், தலைவர்களும் ஓரணியில் எழுந்து நின்று மிகப் பெரிய அளவுக்கு மக்கள் வெள்ளம் கரைபுரண்டு எரிமலையாகக் கிளர்ந்தெழுந்து களம் அமைத்துப் போராடி வெற்றி பெற இம்மாநாடு அழைப்பு விடுக்கின்றது.

உயிரனைய இப்பிரச்சினைக்காக தொடக்கம் முதல் தொய்வின்றிக் குரல் கொடுப்பது - டில்லி வரை சென்று போராடுவது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள திராவிடர் கழகம் இதற்கு முதலிடம் கொடுக்கிறது என்பதையும் இம்மாநாடு அறிவித்துக்கொள்கிறது.

இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு - மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவருவதே. அதற்கான அரிய முயற்சி முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.

தீர்மானம் எண் 8:

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் மோசடி


100 ஆண்டு கால நடைமுறையையும், பல்வேறு போராட்டங்களையும் வரலாறாகக் கொண்ட இட ஒதுக்கீடு என்ற பெயரால் உள்ள சமுகநீதியின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில், பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினரில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்புகளில் அளிக்கப்படும் என்ற அரசியல் சட்டத் திருத்தத்தை, இரண்டே நாட்களில் மக்களவை, மாநிலங்களவைகளில் மத்திய அரசு நிறைவேற்றி விட்டது. அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய கெசட்டிலும் வெளியிட்டு, 14.1.2019 முதல் அமலாக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப் புக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சில சமுக அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இட ஒதுக்கீடு என்பது சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கானது என்ற அளவு கோலில் பொருளாதார அளவுகோலையும் இப்பொழுது உள்ளே திணித்தால், அடுத்து, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டிலும் 15(4) 16(4) பொருளாதாரத்தை மட்டுமே அளவுகோலாக்கி சட்டம் இயற்றும் ஆபத்து இருக்கிறது என்பதையும் இந்த சமுக நீதி மாநாடு  தொலைநோக்குடனும், எச்சரிக்கையுடனும் தெரிவித்துக் கொள்கிறது. ஏற்கெனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு, "கிரீமிலேயர்" என்ற பெயரில், பொருளாதார அளவுகோல், மறைமுகமாக திணிக்கப் பட்டுள்ளது.

உயர் ஜாதிக்காரர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக அவர்களை வீக்கர் செக்சன் என்று குறிப்பிடுவது அப்பட்ட மான மோசடியாகும். கல்வி, வேலை வாய்ப்புகளில் உயர் ஜாதியினர் ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி பெரும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை. தகவல் அறியும் உரிமையின்கீழ் பெறப்பட்ட தகவலும் அதனை உறுதிப்படுத்துகிறது. ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் (மாதம் 65 ஆயிரம் ரூபாய்) வருமானம் உள்ள உயர்ஜாதியினரை ஏழைகள் என்று அடையாளப்படுத்துவது கேலிக்குரியது.

சமுகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் - உயர் ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்திட அனைத்து சமுக அமைப்புகளும் ஓரணியில் நின்று போராட வேண்டும் என இந்த சமுக நீதி மாநாடு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

தீர்மானம் எண் 9:

இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு


"தூர்தர்ஷன்" - "பொதிகை" மற்றும் "வானொலி"களில் மாநிலச் செய்திகளில்கூட மாநிலச் செய்திகளுக்கு உரிய இடம் கொடுக்காமல், முற்றிலும் மோடி புராணம் பாடுவதும், மத சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை, இந்தி மொழித் திணிப்பு  என்னும் வகையில் செயல்படுவது சட்ட விரோதமும், நியாய விரோதமும், மாநில உரிமை விரோதமுமாகும். வானொலியில் ஒழிக்கப்பட்டிருந்த ஆகாஷ்வாணி மறுபடியும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அண்மைக் காலமாக, எஃப்.எம் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளில், தேவையின்றி இடையிடையேயும், இதே போன்று, திரையரங்குகளிலும், இந்தியில் விளம்பரங்கள் செய்வதும் நடைபெற்று வருகிறது.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணம் செலுத்தும் படிவங்களில் இடம் பெற்ற தமிழ் நீக்கப்பட்டு, அந்த இடங்களில் எல்லாம் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல வகைகளிலும் இந்தி கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு மொழி வெறியோடு செயல்பட்டால் விபரீத விளைவு ஏற்படும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 10:

மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்


தற்போது, மத்திய அரசின் பணிகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான குடிமைப் பணி தேர்வு (சிவில் சர்வீஸ்), மத்திய பணியாளர் ஆணையம் (எஸ்.எஸ்.சி.), நடத்தும் தேர்வு, ரயில்வே, வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்வித்தாள் வழங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, வட மாநிலங்களில் இருந்து, குறிப்பாக, பீகார், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து பெரும் அளவில் தேர்ச்சி பெற்று, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக, இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும், குரூப் "சி" மற்றும் "டி" பதவிகள், வங்கிகளில் கிளார்க் பதவிகளுக்கு, அந்தந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியையும் மாற்றி, முன்னுரிமை என்று மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மொழி தெரியாத வட மாநிலத்தவர், இந்த பதவிகளிலும் வரக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில்  இந்த நிலை  அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் படித்து, பட்டம் பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறி வருகிறது.

இது மிக மோசமான சமுகக் கொந்தளிப்பை தென் மாநிலங்களில் உருவாக்கி வருகிறது. "சமுக நீதி" என்பது வெறும் இட ஒதுக்கீடு மட்டுமல்ல. மாநில உரிமையையும் உள்ளடக்கியதே. இந்த அடிப்படையில், 1. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பதவிகளுக்கான தேர்வு அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும்  நடத்தப்பட வேண்டும். 2. அதிகாரி பதவிகளுக்கான தேர்வுகள், அகில இந்திய அளவில் என்றில்லாமல், மண்டல வாரியாக (தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தென் மண்டலம்) என்ற வகையில் தேர்வுகள் இருப்பதுதான் அந்தந்த மாநிலத்தில் உள்ள கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும். ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அனைவரும் அந்த மாநில அரசின் அலுவல் மொழியைத் தெரிந்திருப்பது கட்டாயம் என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில் உரிய சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என இந்த சமுக நீதி மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு


சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006-ல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதனையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றிட இந்த மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 12:

பள்ளிகளை மூடுவது தவறானஅணுகுமுறை


போதிய அளவு மாணவர்கள் வருவதில்லை என்று காரணம் காட்டி, அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி நடத்தும் பள்ளிகள் மூடப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும். மாணவர்களின் வருகைக் குறைவுக்கான காரணங்களைக் கண்டாய்ந்து, அந்தக் குறைகளை நீக்கவேண்டுமேயன்றி, அதற்காகப் பள்ளிகளை இழுத்து மூடுவது தவறான அணுகுமுறையாகும். இதனால் கிராமப்புறங்களில் மாண வர்கள் கல்விக் கூடங்களுக்குச் செல்லுவது இடையில் நிற்கும் (Drop outs) அபாயம் ஏற்படும் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 13:

பல்கலைக் கழக ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு தேவை!


பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு தொடர்பான விளம்பரத்தில் இடஒதுக்கீடு பற்றிய விவரம் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இம்மாநாடு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பல்கலைக் கழகங்கள் உள்பட அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் எல்லா வகையிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

தொடர் பொதுத் தேர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்


அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற கருத்து முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

ஏற்கெனவே 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு என்று தொடர்ந்து மூன்றாண்டுகள் பொதுத் தேர்வு, அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு போன்றவற்றிற்கு பொதுத்தேர்வு என்பது, மாணவர்களை வடிகட்டித் திருப்பியனுப்பும் முறையாகும். இதனால் ஒடுக்கப்பட்ட, முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சியையே நிறுத்தக் கூடாது என்ற கல்வியாளர்கள் வலியுறுத்தி, அது நடைமுறையிலும் உள்ள நிலையில், பா.ஜ.க.வால் நிறுவப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை 2016இன் பரிந்துரையை தனித்தனியாக இப்படி அமலுக்குக் கொண்டுவரும் மறைமுக குறுக்கு வழிகள் அடைக்கப்பட வேண்டும்.  மாணவர்களிடம் மன அழுத்தத்தைக்  கொடுக்கக் கூடியதாக தொடர் தேர்வுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

தனியார் பள்ளிகள் மேல்நிலைக் கல்வியின் அடிப்படையான 11ஆம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல், நேரடியாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துகிறார்கள் என்ற நிலை இருக்குமானால், அதை மாற்றிட வேறு வழிகள் யோசிக்கப்படலாம். எனவே, பொதுத்தேர்வுகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 15:

தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 திட்டத்தைக் கைவிடுக!


இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956-ன் படி அமைக்கப்பட்ட  மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவர்களை ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி பெற்ற இந்திய மருத்துவர் கவுன்சிலில் சில குறைபாடுகள் ஏற்பட்டதாகக் கூறி, அதற்குப் பதிலாக திருத்தப்பட்ட "தேசிய மருத்துவ ஆணைய மசோதா (NMC) 2017" என்ற ஒன்றைக் கொண்டு வந்திருப்பது பல வகைகளிலும் கேடானது என்பதை இம்மாநாடு திட்டவட்ட மாகத் தெரிவித்துக் கொள்கிறது.

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கவுன்சிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால், புதிய ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களுள் 20 உறுப்பினர்களை மத்திய அரசே நியமிக்கும். இவர்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் அல்லர். மாநிலங்கள் சார்பாக 5 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். இதனால் பெரும்பாலான மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழும் போய்விடும்.

சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது இந்தப் புதிய ஆணையம் என்பது வெளிப்படை.

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கவுன்சிலின் சட்டப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 அரசு ஒதுக்கீட்டுக்கும், 35 நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டு வந்தன.

புதிய ஆணையத்தின் விதிப்படி அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 40 நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 60 என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் பண வசதி பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நுழையவும், குறைந்த கட்டணத்தில் படிக்கக் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் குறைவதால் பொருளாதார வசதியற்றவர் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன.

புதிய ஆணையத்தின் விதிப்படி மருத்துவப் பட்டப் படிப்புப் பெற்று வெளியேறக் கூடியவர்கள், தரம் மேம் படுத்துதல் என்ற முறையில் நெக்ஸ்ட் நேஷனல் எக்ஸிட் தேர்வு என்ற மற்றொரு புதிய நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயமாகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராகவே முடியும். இத்தேர்வில் தோல்வியுற்றால் ஆறு மாதங்கள் காத்திருக்கவேண்டும் என்பதெல்லாம் அய்ந்தாண்டுகளுக்குமேல் படித்து பல்கலைக் கழகத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை சிறுமைப்படுத்தும், எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ஏற்பாடாகும். முதல் தலைமுறையாக டாக்டர்கள் ஆவோருக்குப் போடும் தடைக்கற்கள் இவை என்பதால், இந்தப் புதிய தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2017 என்பதை விலக்கிக்கொண்டு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மருத்துவக் கவுன்சிலின் குறைகளை நீக்கி செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 16:

மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகநீதி


உடலியல் மற்றும் மனநிலை பாதிப்பு, இயற்கை பன்முகத் தன்மையின் ஒரு முகமேயன்றி, அது ஒரு குறைபாடில்லை (Disability is not a Deficit. But part of Natural’s diversity) என்பதை பகுத்தறிவு மற்றும் சமூகநீதியின் பார்வையின் வழிநின்று இம்மாநாடு தெளிவுபடுத்துகிறது. அனைத்துவிதமானமாற்றுத்திறனுடையோரும் சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும் பாத்திரமானவர்களே என்பதால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமத்துவத்தை வலியுறுத்தும் சட்ட சரத்தில் திருத்தம் செய்து, சட்டத்தின் முன் மாற்றுத்திறனுடையோர் மற்றவர்களுக்கு இணையானவர்களே என்ற தத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கடைக்கோடி மனிதர்கள் என்ற வகையிலும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அவசியத்தின் பேரிலும் 5% விழுக்காட்டிற்கு மேல் இருக்கும் மாற்றுத்திறனுடையோருக்கும் உள்ளடங்கிய அரசியல் பிரநிதித்துவம் (Inclusive representation) தேவை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

-  விடுதலை நாளேடு, 24.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக